Showing posts with label நீரா ராடியா. Show all posts
Showing posts with label நீரா ராடியா. Show all posts

கனிமொழியுடன் ஏற்பட்ட பழக்கம்! - நீரா ராடியா வாக்குமூலம்-3

17-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


நீரா ராடியா கடந்த ஜனவரி 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2-ஜி வழக்கில் சி.பி.ஐ-யிடம் (சி.ஆர்.பி.சி.161-ன்படி) வாக்குமூலம் கொடுத்து உள்ளார். இரண்டாவது நாள் விசாரணை இங்கே... 

நாள்: 27.1.2011

இடம்: நீரா ராடியாவின் ஆகாஷ் கங்கா ஃபார்ம்ஸ்.

விசாரணை அதிகாரி: எஸ்.பி. விவேக் ப்ரியதர்ஷி, சி.பி.ஐ.

கால் எண்: 7 (செப்.8 2008)

ஆ.ராசாவின் தனி உதவியாளர் சந்தோலியாவுடன் பேசியது...

''2008 நவம்பர் 3-ம் தேதி கலைஞர் டி.வி-க்கு, டாடா லெட்டர் கொண்டுவருவது குறித்துப் பேசினேன். இந்த சமயத்தில் டாடாவை தொலைத் தொடர்புத் துறை தொடர்ந்து வஞ்சித்து வருவது குறித்து சந்தோலியாவிடம் பேசினேன். சந்தோலியா நான்கு மாநிலங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரிலீஸ் செய்யப் போவதாகக் கூறினார். ஆனால், அதில் டாடா டெலிசர்வீஸ் இடம்  பெறவில்லை என்றார். இப்படிச் செய்யாதீர்கள். மற்ற நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கும் போது, டாடாவுக்கு வேறுபாடு காட்டுவது சரியல்ல என்றேன்.

அந்தச் சமயத்தில் நடந்தது முழுமையாக நினைவுக்கு வரவில்லை என்றாலும், அமைச்சர் அலுவலகத்தில் இருந்து, கலைஞர் டி.வி. ஒளிப்பரப்புக்கு டாடா ஸ்கையில் பிளாட்ஃபார்ம் கொடுக்கும் விவகாரம் நிலுவையில் இருந்தது. இந்த விஷயத்தை மனதில் வைத்துப் பேசியதால், சந்தோலியாவிடம் நான் மும்பைக்குப் போகிறேன். உடன்படிக்கையை அவர்கள் உடனடியாக அனுப்புவார்கள் என்றேன்.''

கால் எண்: 8 (செப்.18, 2008)

யுனிடெக் சி.இ.ஒ. ரோகித் சந்திராவிடம் பேசியது...

''அமைச்சர் ஆ.ராசா அலுவலகத்தில் இருந்து வந்த சிபாரிசு காரணமாக, நான் பேசியது. மொபைல் தொலைபேசிகளில் கூடுதல் சர்வீஸ்களுக்கு, ஓசியன் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் கொடுக்க யுனிடெக் டாடாவுக்கு சிபாரிசு செய்ய அமைச்சர் அலுவலகத்தில் கேட்டுக் கொண்டனர். இதன்படி, நான் ரோகித் சந்திராவிடம் பேசினேன். டெண்டர் கோரப்பட்டு உள்ளதால், ஓசியன் நிறுவனமும் விண்ணப்பித்து இருந்தால் அது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் கூறினார். இந்த ஓசியன் நிறுவனம், மகேஷ் ஜெயின் என்பவர் சம்பந்தப்பட்டது. மகேஷ் ஜெயினை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. அவரை அமைச்சர் ஆ.ராசா வீட்டில் பார்த்துள்ளேன்.''

கால் எண்: 9 (டிச.10, 2008)

கே.ஆர்.ராஜா என்பவரோடு பேசியது...

''இந்த கே.ஆர்.ராஜா என்பவர் முகேஷ் அம்பானியின் கார்ப்பரேட் அலுவலக இயக்குநர். இவர் ஸ்வான் டெலிகாம் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறத் தகுதி இல்லாதது என்பது குறித்து என்னிடம் பேசினார். 'இந்த விவகாரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமியிடம் கொண்டு சென்றால், அவர் இதை சரியானபடி எடுத்துச் சென்று பொது நலன் வழக்குத் தொடருவார். இது பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்...’ என்று சொன்னார். மேலும் அவர், தனக்கு சுப்பிரமணியன் சுவாமியை தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும் இந்த உரையாடலின்போது குறிப்பிட்டார்.''

கால் எண்: 10 (டிசம்பர் 11, 2008)

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுடன் பேசியது...

''அமைச்சர் ஆ.ராசா நேரடியாக என்னிடம் பேசியது. அவரைப் பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பயோனியர் பத்திரிகையில் வந்த செய்தி குறித்துப் பேசினார். கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மற்றும் டைனமிக்ஸ் பால்வா நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து வெளியாகி இருந்தது. அவர் இந்த செய்தியின் மூலம் மிகவும் கதிகலங்கிப்போய் இருப்பது தெரிந்தது.

நான், 'இந்த பத்திரிகை பி.ஜே.பி-யைச் சேர்ந்த சந்தன் மித்ராவுடையது. அதனால் அவரிடமோ அல்லது பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களிடமோ நேரடியாகப் பேசுங்கள்’ என்று கூறினேன். பின்னர் சந்தோலியாவிடம் இருந்தும் போன் வந்தது. அந்த சமயத்தில் அவர், அமைச்சர் ஆ.ராசா, சந்தன்மித்ரா மீது கோபம் கொண்டு கத்திக் கொண்டிருப்பதாகக் கூறினார். நானும் அமைச்சர் வீட்டுக்குச் சென்றபோது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து சந்தோலியாவிடம் பேசினேன்.

நாள்: 29.1.2011,

இடம்: டெல்லி பாராகம்பா ரோடு, கோபால்தாஸ் பவன்,

ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன் அலுவலகம்.

அதிகாரி: டெப்டி சூப்பரின்டென்ட் ராஜேஷ் ஷகால், சி.பி.ஐ.

கால் எண்: 11 (மே 14, 2009)

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன மூத்த நிர்வாகி மனோஜ் மோடியுடன் பேசியது...

''தொலைத் தொடர்பு தீர்ப்பு ஆணையத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டுப் போடப்பட்ட மனு டிஸ்மிஸ் ஆகிவிட, அது குறித்துக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு குறித்துப் பேசினோம்.

இதே தீர்ப்பு ஆணையத்தில் ஜே.எஸ்.சர்மா உறுப்பினர். இவர்தான் முன்பு தொலைத் தொடர்புச் செயலாளராகவும், பின்னர் உரத் துறை செயலாளராகவும், பின்னர் தீர்ப்பு ஆணையத்தில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், ஜே.எஸ்.சர்மா, அனில் அம்பானிக்கு எதிரானவர். அனிலின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட இரட்டைத் தொழில்நுட்ப விவகாரத்துக்குள் ஆழமாகப் போகவில்லை என்றார்.

தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த சமயத்தில், இவர் உரத் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இதற்குக் காரணம் தயாநிதி மாறன், டாடா நிறுவனத்தை தண்டிக்க நினைத்தார். டாடா டெலி சர்வீஸில் ஐடியா செல்லுலாரின் பங்குகள் 10 சதவிகிதம்வரை இருக்க... இது டெலிகாம் உரிம விதிமுறைகளுக்கு எதிராக இருந்தது. இதைவைத்து மாறன், விதிமுறைகளை டாடா மீறி விட்டதாக அறிவிக்க இருந்தார்.

ஆனால் சர்மா, டாடா மீது பரிவு கொண்டு, பிரச்னையை சுமுகமாக முடிக்க முயற்சித்தார். அமைச்சராக இருந்த ஆ.ராசா, ஜே.எஸ்.சர்மாவை 'டிராய்’க்குத் தலைவராக நியமித்தார். இது குறித்துத்தான் மனோஜ் மோடியும் நானும் பேசினோம். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் கொடுக்கவே ஆ.ராசா, சர்மாவை டிராய்க்குச் சேர்மனாக ஆக்கினார்’ என்பது போன்ற தகவல்களை மனோஜ் மோடியோடு பரிமாறிக் கொண்டேன்.''

கால் எண்: 12 (மே 21, 2009)

2009 பொதுத் தேர்தல் முடிந்து அமைச்சரவை அமைக்கப்படும் நேரத்தில் ஆ.ராசாவின் உதவியாளராக இருந்த சந்தோலியா, கனிமொழி மற்றும் சில பத்திரிகையாளர்களுடன் பேசிய உரையாடல்கள்...

''கனிமொழியை எனக்குத் தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்ட சமயத்தில்... அதாவது 2005-ம் ஆண்டு முதலே தெரியும். சுனாமியின்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் என்னுடைய நிறுவனமும் டிரஸ்ட் மூலமாக நிறைய உதவிகளைச் செய்தன. இப்படி ஏற்பட்ட பழக்கம்தான் அவர் டெல்லிக்கு வந்தபோதும் தொடர்ந்தது.

2009-ல் புதிய அமைச்சரவை ஏற்பட இருந்த சமயத்தில், யார் யார் அமைச்சர்களாக வருவார்கள் என்கிற ஆர்வத்தில் சந்தோலியா மற்றும் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொண்டேன். கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், டி.ஆர். பாலு போன்றவர்கள் அமைச்சர்களாக வருவார்கள் என்று சொல்லப்பட்டது. இதை ஒட்டி கனிமொழியுடனும் பேசினேன்.

என் நினைவின்படி... ஆ.ராசா அந்த சமயத்தில் தொலைத் தொடர்புத் துறையைப் பெறுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தார். ஆ..ராசாவுக்குத் தொலைத் தொடர்பு அமைச்சகம் கிடைப்பதற்கு நான் முயற்சித்ததாகச் சொல்லப்படுவதும் தவறு. என்னைப் பொறுத்தமட்டில் யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி கிடைக்கிறது என்பதை அறிய நான் பலரைத் தொடர்பு கொண்டது உண்மைதான்.

காரணம், என்னுடைய கிளையன்ட் டாடாவுக்கும், தயாநிதி மாறனுக்கும் உறவு சரியில்லாமல் இருந்ததால், மாறனுக்கு என்ன இலாகா கிடைக்கும் என்பதை அறியும் ஆர்வத்தில் இருந்தேன். இந்த உரையாடலில் ரிலையன்ஸ் மற்றும் சுனில் மித்தல் ஆகியோரைப் பற்றியும் பேசியுள்ளேன்.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆ.ராசா ஆதரவாக இருந்து இரட்டை தொழில் நுட்ப உரிமத்தைப் பெற்றுத் தந்தார். இதே மாதிரி, பாரதி ஏர்டெல் சுனில் மித்தல் தனித்தன்மையோடு பெருமளவில் வளர்ச்சி அடைந்து இருந்தார்.

செல்லுலார் ஆபரேட்டர் அசோஸியேஷனை சேர்ந்தவர்கள் மொபைல் டெலிபோன் வர்த்தகத்தில் ஏகபோகமாக இருக்கத் திட்டமிட்டு செயல்பட்டனர். அந்த ஏகபோக வியாபாரக் கூட்டணியை ஆ.ராசா தகர்க்க முயற்சித்தார்.  அவர் மீண்டும் அமைச்சரானால், நாங்கள் எல்லாம் ஒத்துழைப்போம் என்று பல தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் என்னிடம் கூறினர்.

இதனால் நானும் அவர்களுடன் பேசும்போது, 'ஆ.ராசாவால் தொலைத் தொடர்புத் துறை வளர்ச்சி ஏற்படும் என்பதோடு டெலிகாம் நிறுவனங்களுக்குள் சமநிலை - சமவாய்ப்பு கிடைக்கும்’ என்றும் இந்த உரையாடலில் பேசினேன்.''

நன்றி : ஜூனியர்விகடன்-19-06-2011

தயாநிதி மாறனைப் பற்றி பேசியது ஏன்...? - நீரா ராடியாவின் வாக்குமூலம்

16-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நீரா ராடியா கடந்த 2010 டிசம்பர் மாதம் சி.பி.ஐ-க்குக் கொடுத்துள்ள வாக்குமூலங்களைத் தவிர, ஜனவரி 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் (சி.ஆர்.பி.சி. 161 படி) வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

ராடியாவின் பேச்சு, தொலைபேசி ஒட்டுக்​கேட்பில் பதிவாகி இருப்பதால், சி.பி.ஐ. விளக்கமாக விசாரித்து வாக்குமூலம் பெற்றுத்தான்  குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது.

நீரா ராடியா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரின்  உதவியாளர்கள், அதிகாரிகள், டெலிகாம் நிறுவனத்தினர், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இவை.

நாள்: 25.1.2011

இடம்: டெல்லி பாராகம்பா ரோடு, கோபால்தாஸ் பவன், ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன் அலு​வலகம்.

விசாரணை அதிகாரி: டி.எஸ்.பி. ராஜேஷ் ஷகால், சி.பி.ஐ.

ராடியாவின் மொபைல் (எண் 9810723015), அவருடைய நிறுவனத்தின் லேண்ட்லைன் (எண் 42393500), ஃபார்ம் ஹவுஸ் லேண்ட்லைன் (எண் 26806188 - சகோதரி கருணா மேனன் பெயரில் உள்ளவை) ஆகிய தொலைபேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது.

வருவாய் புலனாய்வுத் துறையினர் ரகசியமாகப் பதிவு செய்த தொலைபேசி உரையாடல்களை, ஒவ்வொன்றாக சி.பி.ஐ. அதிகாரி ராஜேஷ், லேப்டாப்பில் போட்டுக்காட்ட, ராடியா எதற்காக... யாரிடம்... என்ன பேசினார் என்பதை விளக்குகிறார்.

ஆயிரக்கணக்கான உரையாடல்களில் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து சி.பி.ஐ. கேள்வி கேட்டது. இதில் நாம் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்!

கால் எண்: 1 (நவ.3, 2008)

ஸ்பெக்ட்ரம் ரேட்: யுனிடெக் டெலினார்

ராடியா மற்றும் யுனிடெக் நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திரா.

யுனிடெக் நிறுவனத்தில் நார்வேயைச் சேர்ந்த டெலினார் நிறுவனம் முதலீடு செய்து இருந்தது. இந்த முதலீட்டை வைத்தே ஸ்பெக்ட்ரம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு வந்தது. இதையட்டி ராடியா, யுனிடெக் தலைவரை அழைத்து அவர்கள் பெற்றுள்ள முதலீடுகள் குறித்து பத்திரிகைகளுக்கும் மத்திய அரசுக்கும் விளக்கம் கொடுக்கச் சொல்கிறார். இது பற்றி சி.பி.ஐ-யிடம் ராடியா விளக்குகிறார்.

''பிரதமரும், நிதி அமைச்சரும் யுனிடெக்கில் டெலினார் முதலீடு செய்தது குறித்து விளக்கம் கேட்டிருந்தனர். இதை நான் பத்திரிகைகள் மூலமாகவே தெரிந்து கொண்டேன்.  யுனிடெக் நிறுவனத்துக்கு நாங்கள் 2005 முதல் ஆலோசகராக இருக்கிறோம். அதனால், யுனிடெக் நிறுவனத்துக்கு வந்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தொலைத் தொடர்புத் துறைக்கு விளக்கமாகக் கடிதம் எழுதுமாறு யோசனை கூறினேன்.

ரமேஷ் சந்திரா ஏற்கெனவே என்னை அழைத்து இது குறித்து, 'வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்தவர்கள், நிறுவனத்தின் பங்குகளை வாங்கி உள்ளனர். இது கம்பெனிக்கு வந்த நேரடி வெளிநாட்டு முதலீடு தவிர வேறொன்றும் இல்லை. இதில் நானோ... என் குடும்பமோ பயன் அடையவில்லை’ என்று கூறி இருந்தார். பத்திரிகைச் செய்திகளுக்கு விளக்கம் கொடுக்கவும் தொலைத் தொடர்புத் துறைக்கு இந்த பணப் பரிமாற்றம் குறித்து தகவல் கொடுக்கவும் யோசனை கூறினேன்.

தொடர்ந்து நான் தயாநிதி மாறனைப் பற்றிப் பேசியதற்கு காரணம், அந்த சமயத்தில் அவருடைய சன் டி.வி-யும் ஜெயா டி.வி-யும்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து ஆ.ராசா பயன் அடைந்ததாகச் சொல்லிக்​ கொண்டிருந்தனர். ஜெயா டி.வி-யாவது அ.தி.மு.க-வைச் சேர்ந்தது. ஆனால், சன் டி.வி., மாறன் குரூப்பைச் சேர்ந்தது என்பதால் அது குறித்தும் பேசினோம்.''

கால் எண்: 2 (நவ.3, 2008)

எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையாளர் கணபதி சுப்பிர​மணியத்துடன்...

''ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுக்க 14,000 பெட்ரோல் பங்க்குகளைத் திறப்பதாகச் செய்தி வந்தது. இது குறித்து கணுவோடு(கணபதி சுப்பிரமணியம்) பொதுவாகப் பேசினேன். இந்த செய்தியினால் என்ன அபிப்ராயம் ஏற்படும்? என்பது குறித்துப் பேசினேன். அடுத்து யுனிடெக் எஃப்.டி.ஐ. பெற்றது குறித்து தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது பற்றி கணு என்னிடம் சொன்னார்.
இந்தியாவிலுள்ள போட்டி டெலிகாம் கம்பெனிகள் (ஏர்டெல்?) வெளிநாடுகளில் இருந்து பெரிய கம்பெனிகள் இந்தியாவுக்கு வருவதைத் தடுக்க முயற்சித்து வருவதைப் பற்றியும் என்னோடு பேசினார்...''

கால் எண்: 3 (நவ.3, 2008)

ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலி​யாவுடன்...

''கலைஞர் டி.வி. ஒளிபரப்பை டாடா ஸ்கை பிளாட்​பாரத்துக்குள் கொண்டு வருவதற்கும், அவர்களுடைய மனு டாடா கம்யூனிகேஷனில் டிரான்ஸ்பாண்டர் பேண்ட்வித் ஒதுக்கீடு செய்வதில் நிலுவையில் இருப்பது குறித்தும் பேசினோம்.

நான் சந்தோலியாவுடன் 'பாஸ்’ என்று குறிப்பிட்டது, அமைச்சராக இருந்த ஆ.ராசாவைத்தான். நான் இது குறித்து ஆ.ராசாவுடன் பேசி இருந்தேன். ஆ.ராசா, டாடா ஸ்கையையும் டாடா கம்யூனிகேஷனையும் இது சம்பந்தமான நடவடிக்கையில் விரைவுபடுத்துமாறு கூறி இருந்தார்.

நானும் இது சம்பந்தமான நடவடிக்கை எடுத்து, டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்திடம் இருந்து டிரான்ஸ்பாண்டர் பேண்ட்வித் கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்டது சம்பந்தமாக லெட்டர் வர, அதை அமைச்சரின் வீட்டுக்கு அனுப்பி உள்ளதைத்தான் சந்தோலியாவிடம் தெரிவித்தேன். அமைச்சர் வீட்டில் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது என்று நான் தொலைபேசியில் சொன்னது இந்த 'லெட்டரை’த்தானே தவிர 'வேறு’ ஒன்றும் இல்லை''

கால் எண்: 4 பி (நவ.25, 2008)

ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோ​லியாவுடன்...

ஆ.ராசாவின் தனி உதவியாளரான அவரிடம், மீடியாக்​களிடம் எச்சரிக்கையாகப் பேசும்படி சொன்னேன்.  மறுநாள் ஆ.ராசா வீட்டில் நடக்க இருந்த மீட்டிங் குறித்தும் பேசினோம்.

டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தில் அரசின் பங்கு 26 சதவிகிதம் இருக்கிறது. டாடா கம்யூனிகேஷன், டாடா டெலிசர்வீஸிலும் பங்குகளைப் பெற்றுள்ளது. இந்த டெலி சர்வீஸ் நிறுவனத்தின் சில பங்குகளை டொகோமோ நிறுவனத்துக்கு கொடுக்க இருப்பது சம்பந்தமான மீட்டிங், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா வீட்டில் நடக்க இருந்தது.

இது சம்பந்தமாக சந்தோலியா, ரத்தன் டாடா உதவியாளர் ஆர்.வெங்கட் ஆகியோரிடம் பேசினேன். அப்போது வெங்கட் சி.என்.என். ஐ.பி.என். டி.வி-யில் ஆ.ராசா மற்றும் டி.ஆர்.பாலு மீது பிரதமர் கோபமாக இருக்கிறார் என்றும் இவர்கள் மீதான ஊழல் புகார்தான் கோபத்துக்குக் காரணம் என்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.

இது குறித்தும் மறுநாள் 26-ம் தேதி சந்தோலியா என்னிடம் பேசினார். 'பிரதமர் அலுவலகம் இந்த செய்தி குறித்து சி.என்.என்., ஐ.பி.என். வசம் விளக்கம் கேட்டுள்ளது என்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட விதம் குறித்து பிரதமருக்கு அமைச்சர் ஆ.ராசா தகவல் கொடுத்து ஒப்புதலும் பெற்று உள்ளார் என்பதை பத்திரிகைகளிடம் அமைச்சர் விளக்கி உள்ளார்’ என்றும் சந்தோலியா தெரிவித்தார்.

கால் எண்: 5 (நவ.18, 2008)

பிசினஸ் ஜீரோ பத்திரிகை ஆசிரியர் சதீஷ் ஓரியுடன் பேசியது...

''அப்போதைய அரசியல் நிலவரம்... நாடாளுமன்ற நிலைமை போன்ற பொது விஷயங்கள் குறித்துத்தான் நான் சதீஷ§டன் பேசினேன். 

என்னுடைய முதல் பேச்சில், விஜய மல்லையாவின் வெளிநாட்டு முதலீடு குறித்தும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் வெளிநாட்டு விமான கம்பெனிகள் பங்கெடுக்காதது குறித்தும் பேசினேன்.

இரண்டாவது பேச்சில் சதீஷ் என்னிடம், அனில் அம்பானி மற்றும் ஆ.ராசாவைப் பற்றி சில தகவல்களைச் சொன்னார். ஸ்வான் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் குறித்த புகார்கள் மத்திய விஜிலென்ஸ் கமிஷனரிடம் நிலுவையில் இருப்பது மற்றும் பொது நலன் வழக்குகளாக தொடரப்பட்டு உள்ளதைக் குறிப்பிட்டார்.

ஸ்வான் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளுக்காக ஆ.ராசாவுக்கு லண்டனில் வைத்து பணம் கொடுக்கப்பட்டது... கருணாநிதிக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஆனால் இவை எல்லாம் அவர் சொன்ன தகவல்கள். இந்த பணப் பரிவர்த்தனை குறித்து எனக்கு எதுவும் தெரியாது!''

கால் எண்: 6 (நவ.19, 2008)

டைம்ஸ் நவ் டி.வி-யின் மூத்த பொலிடிகல் எடிட்டர் நவிகா குமாருடன்...

''நவிகா பொதுவாக அரசியல் விவகாரங்களை கவனிப்பவர். நான் அவரோடு பேசும்போது தெரிந்து கொண்டது சரத்பவார், ஆ.ராசாவை தொடர்பு கொண்டு பேசியதின் மூலமே ஸ்வானுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கிடைத்து உள்ளது என்றும் இதில் அனில் அம்பானியின் இன்வால்வ்மென்ட் இருப்பதால் பவார் தலையிட்டு உள்ளார் என்பது குறித்தும் பேசப்பட்டது.

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தில் பால்வா மற்றும் கோயங்கா முக்கியப் பிரமுகர்கள். ஆனால், மும்பையில் பொதுவாக சொல்லிக் கொள்வது, டி.பி. ரியாலிட்டியை நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கன்ட்ரோல் செய்வது சரத்பவாரும் அவரது குடும்பதினரும்தான் என்று. இதனால்தான் சரத்பவார், ஸ்வானுக்கும் அனில் அம்பானிக்கும் முறையே ஸ்பெக்ட்ரம் உரிமமும் இரட்டை தொழில் நுட்ப ஸ்பெக்ட்ரம் உரிமமும் பெற்றுத் தருவதில் உதவி புரிந்துள்ளார் என்று தொலைபேசியில் குறிப்பிட்டேன்.''

வாக்குமூலம் தொடரும்..

நன்றி : ஜூனியர்விகடன்-15-06-2011

நீரா ராடியாவின் ஒப்புதல் வாக்குமூலம்-1

12-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்தான் எத்தனைவிதமான  திருப்பு முனைகள்!

நீரா ராடியா தொலைபேசி டேப் லீக்-அவுட்டும், சி.ஏ.ஜி. அறிக்கையும் முதல் முக்கியத் திருப்பு முனைகள். சி.ஏ.ஜி. அறிக்கையில் உள்ள கணக்கு வழக்குகள், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எந்த அளவுக்குப் பயன்பட்டதோ, அதே அளவு நீரா ராடியா டேப் விவகாரங்களையும் பயன்படுத்தியது சி.பி.ஐ... ஆனால், நீரா ராடியா இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சி.பி.ஐ. முன்பு, ராடியா நான்கு தடவை ஆஜராகிக் கொடுத்துள்ள வாக்குமூலங்கள் இப்போது வெளியில் கசிந்துள்ளது.

அதன் முழு விவரம்...


நாள்: 21.12.2010

இடம்: சத்ரபூர் பண்ணை வீடு

விசாரணை அதிகாரி:  சி.பி.ஐ. எஸ்.பி. விவேக் ப்ரியதர்ஷி

நீரா ராடியா சொல்கிறார் :

''நான் வசித்து வந்தது இங்கிலாந்தில். என் தந்தை, க்ரவுன் மார்ட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நடத்திவந்தார். அவரிடம் நிறைய வியாபார உத்திகளைக் கற்றுக் கொண்டேன். என் குழந்தைகள் இந்திய கலாசாரத்தையும் பழக்க, வழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், 1994-ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். என் மாமனார் லண்டனில், ஏர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நடத்தினார். அவர் மூலமாக விமானப் போக்குவரத்துத் தொழில் ​பற்றி அறிந்துகொண்டேன். அதன்படி, இந்தியாவுக்கு வந்து சஹாரா நிறுவனத்துக்கு விமானத் தொழில் தொடங்குவதற்கு உதவி​னேன்.

டாடாவுக்கு சிக்கல்

பின்னர், வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன் நிறுவனத்தைத் தொடங்​கினேன். 2001-ம் ஆண்டு முதல், டாடா நிறுவனத்துக்கும், 2005-ம் ஆண்டு முதல், யுனிடெக் நிறுவனத்​துக்கும்  பொதுத் தொடர்புப் பணிகளை மேற்கொண்டேன். டாடா நிறுவனத்தில், டாடா டெலி சர்வீஸ் விவகாரங்​களுக்கு உதவினேன். 2005-ம் ஆண்டு, டாடா நிறுவனத்துக்கு, அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், பல்வேறு பிரச்னைகளை உருவாக்கிக்​ கொண்டு இருந்தார். இதனால், டாடா குரூப் நிறுவனம் இது போன்ற விவகாரங்களுக்கு ஆலோ​சனை கூறவும்... உதவி புரியவும் என்னைக் கேட்டுக் கொண்டனர்.

இப்போது 'டிராய்’ அமைப்பின் (தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) தலைவராக இருக்கும் டாக்டர் ஜெ.எஸ்.சர்மா, அப்போது, தொலைத் தொடர்புத் துறை செயலாளராக இருந்தார். அவரை சந்தித்துப் பேசுவேன். அப்போது தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருந்த பிரதீப் பைஜாலையும் சந்திப்பேன்.

2007-ல் நான் நோசிஸ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டன்ஸி நிறுவனத்தைத் தொடங்கினேன். இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் கே.நரூலா. பின்னர் இதே நிறுவனத்தில் பிரதீப் பைஜாலும் பணியாற்ற வந்தார். இவருக்கு என்னுடைய நிறுவனத்தில் 10 சதவிகிதப் பங்குகளைக் கொடுத்தேன்.

2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் கொடுக்கப்பட்ட இரட்டைத் தொழில் ​நுட்ப ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கு விண்ணப்பித்து இருந்தது. இந்த உரிமம் கிடைப்பதற்காக என் உதவியைக் கேட்டனர். இந்த உரிமம் டாடாவுக்குக் கொடுக்கப்​​படவில்லை.

தொலைத் தொடர்புத் துறையில் அணுகியபோது, விண்ணப்பம் முதலில் வரவில்லை என்றனர். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இந்த இரட்டைத் தொழில் நுட்ப உரிமம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால், தொலைத் தொடர்புத் துறையில் இருந்த சர்மா போன்ற​வர்கள், டாடா​வுக்கு உரிமம் கொடுக்கப்​படாதது  குறித்து வருத்தம் தெரிவித்​தார்கள்.

இது தொடர்பாக, செல்லு​லர் ஆபரேட்டர்ஸ் அசோஸி​யேசனை சேர்ந்தவர்​கள் தொலைத் தொடர்புத் தாவா தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், டாடா டெலி சர்வீஸ் நிறுவனமும் இருந்தது. இரட்டைத் தொழில் நுட்ப ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வரவேற்றது டாடா. ஆனால், தொலைத் தொடர்புத் துறை, இந்தக் கொள்கை முடிவை அறிவிப்பதற்கு முன்பேயே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு இரட்டைத் தொழில் நுட்ப உரிமம் வழங்கிவிட்டதை எதிர்த்தது.

அதன் பிறகு, தொலைத் தொடர்புத் துறை, 10.1.2008 அன்று டாடா டெலி சர்வீஸ் நிறுவனத்துக்கு இந்த உரிமத்தைக் கொடுக்க கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. ஆனால், ஸ்பெக்ட்ரம் கொடுப்பதில், சீனியாரிட்டி வரிசையில் இருந்த கம்பெனிகளில் டாடா நிறுவனத்தைக் கீழே வைத்திருந்தனர். முறைப்​படி, மற்ற நிறுவனங்களுக்கு முன்பாகவே டாடா டெலி சர்வீஸ் நிறுவனத்துக்குத்தான் முதலில் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இரட்டைத் தொழில் நுட்பத்துக்கான உரிமக் கட்டணத்தையும் டாடா நிறுவனம் ஏற்கெனவே செலுத்தி இருந்தது.

அப்போது கொடுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளில், ஸ்வான் நிறுவனத்துக்கு மட்டுமே டெல்லி சர்க்கிள் உரிமம் கிடைத்தது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் இருந்த பங்குகளின் அடிப்படையில், இந்த நிறுவனத்துக்கு எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. எனக்குக் கிடைத்த தகவலின்படி, ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

வட கிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற டெலிகாம் சர்க்கிள்களுக்கு, 2006-ம் ஆண்டு சி.டி.எம்.ஏ. சர்வீஸுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமத்துக்கு டாடா டெலி சர்வீஸ் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. ஆனால், அப்போதைய அமைச்சர் தயாநிதி மாறன், இந்த ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்க மறுத்தார். இதற்குக் காரணமாக, பைசெல் என்ற நிறுவனம் டாடாவுக்கு முன்பே விண்ணப்பித்து இருந்ததாகச் சொல்லப்பட்டது. அதற்கு வழங்கிவிட்டுத்தான், டாடாவுக்குக் கொடுக்க முடியும் என்று கூறினர்.

ஆனால், பைசெல் நிறுவனத்தின் மனு, உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விவகாரங்களில் கிளியரன்ஸ் ஆகாமல் இருந்தது. முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்கிற கொள்கையின்படி, பைசெல் நிறுவனத்துக்குக் கொடுக்காமல் டாடாவுக்குக் கொடுக்க முடியாது என்று கூறினார். ஆனால், ஆ.ராசா அமைச்சரான பின்னர், 10.1.2008 அன்று, 25.9.2007-வரை விண்ணப்பித்தவர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன.

ரியல் எஸ்டேட் விவகாரம்

என்னுடைய வைஷ்ணவி நிறுவனத்தின் மூலம் 2005 முதல் யுனிடெக் நிறுவனத்துக்கு ரியல் எஸ்டேட் விவகாரங்களில் உதவி புரிந்தேன். டாடா டெலி சர்வீஸ் நிறுவனம், யுனிடெக் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தனர்.

டாடா ரியாலிட்டி நிறுவனம், தலைநகர் பகுதிகளில் நிலங்​களைத் தேடிக் கொண்டு இருந்தது. இந்த சமயத்தில், குஸேகான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களிடம் நிலங்கள் இருந்தன. அதனால், இந்த இரு நிறுவனங்களையும் நான் அறிமுகம் செய்துவைத்தேன். இதற்காக டாடா சுமார் 1,700 கோடியை யுனிடெக் நிறுவனத்துக்குக் கொடுத்தது. ஆனால், ரியல் எஸ்டேட் மார்க்கெட் நிலைமை சரியாக அமையாது போகவே, இந்த கூட்டு நடவடிக்கை கைவிடப்பட்டது. அதன் பின், டாடா தனியாக ரியல் எஸ்டேட் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. டாடா நிறுவனம் கொடுத்த பணத்தை, யுனிடெக் திருப்பிக் கொடுத்துவிட்டது.

அடுத்து, யுனிடெக் நிறுவனத்தில் யுனிநார் நிறுவனம் முதலீடு செய்தது. யுனிடெக் டெலிகாம் விவகாரங்களை, டி.டி. அசோசியேட்ஸைச் சேர்ந்த தீபக் தல்வாரும், யுனிநார் விவகாரங்களை பெர்ஃபெக்ட் ரிலேஷனைச் சேர்ந்த தீபக் செரியனும் கவனித்தனர். எங்களுடைய நிறுவனம் அதிகாரபூர்வமற்ற வகையிலேயே, சில ஆலோசனைகளை யுனிடெக் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சந்திராவுக்கு வழங்கியது.

டாடா.காம் நிறுவனத்தோடு எனக்கு எந்த விதமான வியாபாரத் தொடர்பும் கிடையாது. ஆனால், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நஹாடாவை தொடர்பு கொள்வேன். ஒரு முறை அவர், தங்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்கப் போவதாகவும், அதற்கான முதலீட்டாளர்களைத் தேடிக் கொண்டு இருப்பதாகவும் கூறினார். இப்படியான பேச்சுவார்த்தைகள் தவிர, வேறு எந்தத் தலையீடும் எனக்கு இல்லை.

ஆனால்...

படம்: என்.விவேக்

வாக்குமூலம் தொடரும்..

நன்றி : ஜூனியர்விகடன்-12-06-2011

ஆ.ராசா அமைச்சராகக் காரணமே கனிமொழிதான்..!

30-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனையோ திருப்புமுனைகளைக் கடந்து வந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இப்போது  கனிமொழி அத்தி​யாயத்தில் நிற்கிறது. இனி, வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்புகள் குறித்து அமலாக்கப் பிரிவு தகவல்களை வெளிக்கொண்டு வர வேண்டியதுதான் பாக்கி.

  

சி.ஏ.ஜி. அறிக்கையையும் 2-ஜி ஊழலையும் ஆளும் கட்சியைத் தவிர்த்து சில எதிர்க்கட்சிகளும் இணைந்து மிகைப்படுத்திப் பேசினாலும், இந்த ஊழலை இதயமே இல்லாதவர்களின் செயல் என்றுதான் வர்ணிக்க வேண்டும்.

2008-ன் நடுவிலேயே பத்திரிகைகளும், எதிர்க் கட்சிகளும், போட்டித் தனியார் நிறுவனங்களும், '2-ஜி விவகாரத்தில் அரசுக்கு என்னென்ன நஷ்டம்? ஆ.ராசா என்னென்ன தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்..? அவரும் தி.மு.க. குடும்பமும் என்ன பலன் அடைந்தனர்...? அரசு இந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டாமா..?’ என்று கண்டனங்களும் கேள்விகளும் எழுப்பின.

இத்தனை எதிர்ப்புகள் இருந்த நேரத்தில்தான், அதாவது 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டி.வி. 200 கோடியைப் பெற்று உள்ளது. இதைத்தான் ஆதாரபூர்வமாகக் கண்டறிந்து, கடந்த 25-ம் தேதி கூடுதல் குற்றப் பத்திரிகையில் வெளியிட்டது சி.பி.ஐ.!

இந்தக் குற்றப் பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுகள், ஏற்கெனவே வெளியான தகவல்கள்தான் என்றாலும், சி.பி.ஐ. இப்போதுதான் ஆதாரப்பூர்வமான சாட்சியங்களோடு உறுதி செய்துள்ளது.

'கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்ட​மன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. அதனால், கனிமொழியைப் பற்றியும் கலைஞர் டி.வி-யைப் ​பற்றியும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றால், தேர்தல் பிரசாரத்தில் வீணான சர்ச்சைகள் கிளம்பும் என்று தி.மு.க-வினர் காங்கிரஸிடம் மன்றாடினர். அவர்​கள் கோரிக்கைக்கு, மத்தியில் உள்ளவர்களும் அப்போது செவிசாய்த்தார்கள். அதனால்தான், குற்றப் பத்திரிகையை இரண்டு கட்டங்களாகப் பிரித்து தாக்கல் செய்ய வேண்டிய சூழலுக்கு சி.பி.ஐ. ஆளானது’ என்கிறார்கள். 

முதல் குற்றப் பத்திரிகையில், தனியார் கம்பெனி​களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், ஆ.ராசா மேற்கொண்ட தில்லுமுல்லுகளை சி.பி.ஐ. வெளியே கொண்டுவந்தது. ஆனால், இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் 2-ஜி ஊழலின் முக்கியக் கருவை எடுத்து ​வைத்திருக்கிறது.  இதில்தான் கனிமொழியை சி.பி.ஐ. இறக்கியுள்ளது.

இதில், ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா, ஷாகித் பால்வா​வின் சகோதரரும் குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநருமான ஆசிப் பால்வா, இதே நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் ராஜீவ் பி.அகர்வால், சினியுக் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவன இயக்குநர் கரீம் முரானி, கலைஞர் டி.வி. இயக்குநர் சரத்குமார் ஆகியோரோடு கனிமொழியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில், கனிமொழி, சரத்குமார், கரீம் முரானி ஆகியோர்தான் இன்னும் கைது செய்யப்படவில்லை. மற்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர்.

சம்மன் அனுப்பப்பட்ட மேற்கண்ட மூவரும் வரும் மே 6-ம் தேதி டெல்லியில் ஆஜராகும்போது, சிறைக்கு அனுப்பப்படலாம். இதில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் முடிவே இறுதியானது. மற்ற நிறுவனங்களின் இயக்குநர்கள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், கனிமொழிக்கும் இதே நிலை வரலாம்.

2007-ல் சன் டி.வி. நிறுவனத்துக்கும், தி.மு.க-வுக்கும், பிரச்னை ஏற்படவே, கலைஞர் டி.வி. தொடங்கும் ஆயத்தப் பணிகளில் மற்றவர்களுடன் சேர்ந்து கனிமொழி தீவிரமாக இருந்ததாகச் சொல்லும் சி.பி.ஐ., 'இந்த விவகாரங்களில் ஆ.ராசாவை அவ்வப்போது தொடர்பு கொண்டு தொலைக்காட்சிக்கான அனுமதி பெற முயற்சி செய்தார்’ என்கிறது.

'மத்தியத் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் பதிவு பெற முயற்சித்தது, டாடா ஸ்கை பிளாட்ஃபாரத்தின் மூலம் கலைஞர் டி.வி-யை ஒளிபரப்ப அனுமதி கேட்டது  போன்ற விவகாரங்களில், எந்தவிதமான தாமதமும் ஏற்படாமல் இருக்க ஆ.ராசா உதவியுள்ளார். இதற்காக, கனிமொழி அடிக்கடி ஆ.ராசாவைத் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்’ என்கிற சி.பி.ஐ., ''கனிமொழி, கலைஞர் டி.வி. பங்குதாரர் மட்டும் அல்ல... அவர் ஓர் இயக்குநராகவும் இருந்தார். ஆனால், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுப்பதில் தாமதம் ஆனது. அதனால், கலைஞர் டி.வி. தொடங்குவதில் கால தாமதம் ஆகக் கூடாது என்கிற காரணத்தால் கனிமொழி பதவியில் இருந்து விலகினார். ஆனால், அந்த டி.வி-யின் மூளையே கனிமொழிதான். அதன் செய்திகளில்கூட இவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது!'' என்கிறது சி.பி.ஐ. 

''ஆ.ராசா மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆவதற்குக் காரணமாக இருந்ததே கனிமொழிதான். ஆ.ராசாவுக்காக தி.மு.க-வின் தலைமை​யகத்தில் இவரே பேசினார்'' என்றும் குற்றம் சாட்டி, 2-ஜி ஊழல் வழக்கில் 17-வது குற்றவாளியாக  கனிமொழியை சேர்த்துள்ளது.

கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்​களாக இருப்பவை, இரண்டு சாட்சியங்கள். ஒன்று, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலம். இது குறித்து ஜூனியர் விகடன் 20.4.11 இதழில் விரிவாக வெளியிட்டு இருக்கிறோம். மற்றொருவர், நீரா ராடியா.


ஆ.ராசாவை சந்தித்து கலைஞர் டி.வி. தொடங்க முயற்சி செய்தது, நீரா ராடியாவுடன் நேரடியாகவும் தொலைபேசியிலும் பேசி லீக் ஆன விவகாரங்கள் எல்லாம் கனிமொழிக்கு எதிரான சாட்சியங்களாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. வைக்கும் முக்கியத் தகவலே, கலைஞர் டி.வி-க்கு 200 கோடி வந்த விவகாரம்தான். இது ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பெற்ற நிறுவனங்கள் லஞ்சமாகக் கொடுத்த பணம் என்கிறார்கள்.

'ஒரிஜினலாக, ஸ்வான் நிறுவனத்தைத் தொடங்கியது ரிலையன்ஸ் நிறுவனம். மறைமுகமாக இந்த நிறுவனத்தின் மூலம் ஜி.எஸ்.எம். மொபைல் உரிமங்களைப் பெற ரிலையன்ஸ் முயற்சி செய்தது. பின்னர் இரட்டை உரிமத்தின் அடிப்படையில் ரிலையன்ஸுக்கு நேரடியாகவே முறைப்படி ஜி.எஸ்.எம் உரிமங்கள் கிடைத்தன. இப்படிக் கிடைத்தும், ஸ்வான் நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை ரிலையன்ஸ் வாபஸ் வாங்கவில்லை.

ஸ்வான் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டிபி ரியாலிட்டி குரூப் நிறுவனத்தினர் ஷாகித் உஸ்மான் பால்வாவும் வினோத் கோயங்காவும் திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர்’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'ஸ்வானுக்கும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துக்கும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறும் தகுதி இல்லை. 2005-ம் ஆண்டு ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிம வழிகாட்டி விதிமுறைகளின்படி ஸ்வான் மற்றும் யுனிடெக் விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

தகுதி இல்லாத சான்றிதழ்களை வைத்துக் ​கொண்டு உரிமங்களைப் பெற முயற்சித்த இவர்களிடம், ஊழல் பணத்தைப் பெற்றுக் கொண்டு தொலைத் தொடர்புத் துறை உரிமங்களைக் கொடுக்க முயற்சிக்கப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. சொல்கிறது.  இதன்படி, வந்த ஊழல் பணம் கறுப்புப் பணமாக இருக்க... இதை வெள்ளையாக மாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சிகளையும் இரண்டாவது குற்றப் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.

'இதன் முதல் சுற்று, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ளது. 2004-ல் சுற்றுச்சூழல் அமைச்சரானவுடன் ஆ.ராசா தொடங்கிய பினாமி நிறுவனம் இது.  சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சாதிக் பட்சாவின் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாள் மற்றும் சாதிக் பாட்சாவின் மனைவி போன்ற வேறு சிலரை இயக்குநர்களாக ஆக்கினார். இந்த நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக ஆரம்பத்தில் இருந்து, பின்னர் விலகினார்.

2-ஜி கறுப்புப் பணத்தை இந்த நிறுவனத்தின் மூலம் கொண்டுவரும் முயற்சியில் ஆரம்பத்தில் ஈடுபட்டு, பின்னர் அது கைவிடப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. கூறுகிறது. 'ஆனால், இந்த நிறுவனத்துக்கு சில கோடிகள் பணம் வந்துள்ளது. ரியல் எஸ்டேட்டுக்கு நிலங்களை வாங்க டிபி ரியாலிட்டி சில கோடிகளை க்ரீன் ஹவுஸுக்கு கொடுத்துள்ளது. பின்னர் இதே பணத்தை க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்தது...’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்குப் பணம் எப்படி வந்தது? ஏன் வந்தது? எப்படி எல்லாம் பணம் புழங்கியது..?’ என்பதற்கு சில ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சொல்கிறது.

'ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிய ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட டி.பி. ரியாலிட்டி, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மூலம் தமிழ்நாட்டில் பெரும் அளவில் நிலங்களை வாங்கிக் குவிக்கத் திட்டமிட்டது. ஆனால், அது வெற்றிகரமாக நடக்கவில்லை. இதனால் கொடுக்கப்பட்ட பணத்தையும் க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், 'இதற்குக் காரணம் க்ரீன் ஹவுஸ் விவகாரங்கள் பத்திரிகைகளில் வெளியானதுதான்’ என்று, சி.பி.ஐ. கருதுகிறது.

ஆனால், 2-ஜி கறுப்புப் பணத்தை கலைஞர் டி.வி. மூலமாக வெள்ளையாக்கும் முயற்சிகள் பின்னர் நடந்துள்ளன. சுமார் 200 கோடி ஸ்வான் டெலிகாம் பணம், கலைஞர் டி.வி-க்கு வந்துள்ளது. அதிலும், இந்த ஊழல் விவகாரம் உச்சக்கட்டமாக வெடித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான், பணப் பரிவர்த்தனைகள் எந்தவிதத் தயக்கமும் இன்றி நடந்துள்ளது. இதில்தான் கருணாநிதி குடும்பத்தினரின் மனோதைரியம் குறித்து ஆச்சர்யத்தோடுதான் பேசிக்  கொள்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!

லாபம் 1.36 கோடி... கடன் 214  கோடி... எப்படி?!

ஸ்பெக்ட்ரம் ஊழலில், ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாக கனிமொழி பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டதும், முதல்வர் கருணாநிதி ஆலிவர் சாலையில் ஆலோசனை நடத்தினார்.

நீண்ட நேர ஆலோசனைக்குப் பின், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில்,  '2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில், கலைஞர் டி.வி. வாங்கிய கடன்  214 கோடி திருப்பித் தரப்பட்டுவிட்டது.  அதற்கான ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்த பிறகும், குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயரை சேர்த்து உள்ளது சி.பி.ஐ. இதைப் பற்றி விவாதிக்க தி.மு.க-வின் உயர் நிலைக் குழு கூடுகிறது’  என்று ஓர் அறிக்கை வெளியானது. ஆனால், உண்மை நிலையோ வேடிக்கையானது! 

கலைஞர் டி.வி-யின் 20 சதவிகிதப் பங்குகள் கனிமொழிக்கும், 20 சதவிகிதப் பங்குகள் சரத் குமார் ரெட்டிக்கும், 60 சதவிகிதப் பங்குகள் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும் உள்ளது.  'டிபி ரியாலிட்டி மூலம் ஊழல் பணம் 214.8 கோடி கை மாறியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் இருந்து, தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்’ என்று 27.7.07-ல் கலைஞர் டி.வி. போர்டு மீட்டிங் நடந்ததுபோல மினிட்ஸ் ரெடியானது என்கிறது சி.பி.ஐ. தரப்பு.


'தயாளு அம்மாளுக்கு, தமிழ் தவிர வேறு மொழி தெரியாது, மேலும் வயதாகிவிட்டது. எனவே, அவருடைய பங்குக்கு உள்ள அதிகாரத்தைக் கவனிக்கும் பொறுப்பு சரத்குமார் ரெட்டிக்குக் கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டது’ என்று உள்ள அந்த மினிட்ஸ் நகலை, டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் நடந்த விசாரணையின்போது, சரத்குமார் ரெட்டி கொடுத்தாராம். அந்த மினிட்ஸின் அடிப்படையில்தான் 60 சதவிகிதப் பங்குகள் இருந்தும், குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாளைச் சேர்க்கவில்லை என்கிறார்கள்.

கலைஞர் டி.வி. ஒப்படைத்த வரவு - செலவுக் கணக்கில், 'டிபி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் பெறப்பட்ட 214.8 கோடி, எந்த ஆவணமும் இல்லாமல் பெறப்பட்ட கடன்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தகவல்படி, கலைஞர் டி.வி-யின் ஆண்டு வரவு  63.12 கோடி. செலவு  61.47 கோடி.

நிகர லாபம் வரி செலுத்தும் முன்பு 1.65 கோடி. வரி செலுத்திய பின் லாபம் 1.36 கோடி மட்டும்தான். ஆனால், இப்படி இருக்கும் நிறுவனத்துக்கு ஆவணம் இல்லாமல், 214.8 கோடியை எப்படிக் கடனாகக் கொடுக்க முன் வந்தது டி.பி. ரியாலிட்டி நிறுவனம்?

கடன் கொடுத்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வட்டியுடன் ஏழு மாதங்களில் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ-யிடம் கூறப்பட்டு உள்ளது. ஏழு மாதங்களில்  214.8 கோடியை வட்டியுடன் கொடுக்க, கலைஞர் டி.வி-க்கு பணம் எப்படி வந்தது? மீண்டும் யார் கடன் கொடுத்தார்கள்? 

மேலும், கலைஞர் டி.வி-யின் வரவு - செலவுக் கணக்கில், 'கண்ணுக்குப் புலப்படாத சொத்துக் கணக்கில் 2008-09-ல் 123.25 கோடி என்றும் அது 2009-10-ல் 159.16 கோடி’ என்றும் காட்டப்பட்டு உள்ளது. ''கண்ணுக்குத் தெரியாத சொத்தின் மதிப்பு மட்டும் எப்படி ஆண்டுக்கு ஆண்டு உயரும்? அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'' என்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், கலைஞர் டி.வி-யின் சரத்குமார் ரெட்டியிடம் கேட்டு வருகிறார்கள்.

என்ன பதில் சொல்லப் போகிறார் சார்..?

நன்றி : ஜூனியர்விகடன்-04-05-2011

ராசாவுக்கு எதிராக செவன் ஸ்டார்ஸ்களின் வாக்குமூலம்...!

22-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2-ஜி அலைவரிசை ஊழலில், ஆ.ராசாவிடம் 1999-ம் ஆண்டு முதல் 2008வரை கூடுதல் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி​யின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, மேலும் ஆறு நபர்களின் வாக்குமூலங்கள் அடுத்த முக்கியத்​துவத்தைப் பெற்று உள்ளதாக டெல்லி​யில் உள்ள சி.பி.ஐ. கருதுகிறது!

ஆர்.பி.அகர்வால் (வயர்லெஸ் ஆலோசகர்), அசோக்வதா (தலைமை நிர்வாக அதிகாரி, அம்பித் ஹோல்டிங் நிறுவனம்), அசிஸ் காரயாக்கர் (பொது மேலாளர், ரிலையன்ஸ்), ஏ.கே. ஸ்ரீவஸ்தவா, ராம்ஜிசிங் குஸ்வா (இணை வயர்லெஸ் ஆலோசகர்), தேடாட்டா பண்டிட் (முன்னாள் கம்பெனி செயலாளர், ரிலையன்ஸ்) ஆகிய ஆறு பேர் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 164 பிரிவின்படி வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். ஆசீர்வாதத்தையும் சேர்த்து இந்த ஏழு பேரையும் 'ஸ்டார் சாட்சிகள்’ என்று சி.பி.ஐ. வர்ணிக்கிறது. இவர்களுக்கு இப்போது  பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர மேலும் சில சாட்சிகள் இருப்பதாக, சி.பி.ஐ-யின் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது. இந்த சாட்சிகள், 2-ஜி அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள்.

எஸ் டெல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியாமிக்தாஸ், லூப் மொபைல் இந்தியா லிமிடெட் துணைப் பொது மேலாளர் சௌமியா நாராயணன், ஐடியா செல்லு​லார் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகுல் வாட்ஸ், ஸ்பைஸ் குளோபல் துணைத் தலைவர் அகிலேஷ் குமார் சக்ஸேனா, டாடா டெலி சர்வீஸ் லிமிடெட் துணைத் தலைவர் ஆனந்த் தலால் மற்றும் ராகேஷ் மகோத்ரா ஆகியோர் தங்களது நிறுவனத்துக்கும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குமான தொடர்புகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

யுனிடெக் லிமிடெட் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மொகிட் குப்தா மற்றும் முன்னாள் ஆலோசகர் அருண் குமார் டால்மியா, சிஸ்டாமா ஸ்யாம் டெலி சர்வீஸ் லிமிடெட் துணைத் தலைமை அதிகாரி டி.நரசிம்மன், ரிலையன்ஸ் (எடிஎஜி) குரூப் தலைவர் சேதுராமன், ரிலையன்ஸ் கேபிட்டல் லிமிடெட் துணைத் தலைவர் ஆனந்த் சுப்ரமணியன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பொது மேலாளர் (வணிகம்) ராஜேந்தர் சிங்கி, ரிலையன்ஸ் (எடிஎஜி) பொது மேலாளர் அசிஸ் காரையாக்கர், மூத்த துணைத் தலைவர் அசிஸ்தாம்பவாலா, கூடுதல் துணைத் தலைவர் பாரத் அம்பர்க்கர் ஆகியோர் அந்தக் காலகட்டத்தில் நடந்த பரிவர்த்தனைகள், ஆவணங்​களை சமர்ப்பித்து உள்ளனர்.
 
இவை அனைத்துமே திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவுக்கு எதிராக அமையும் என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது.

2-ஜி அலைவரிசையில் முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களைக் காப்பாற்றிக் கொள்ள, ஆ.ராசாவுக்கு  எதிராக, செயல்பாடுகளை வாக்குமூலமாகக் கொடுக்க சி.பி.ஐ-யிடம் எழுத்து மூலம் உறுதி அளித்துள்​ளார்கள்.

ஸ்டார் சாட்சிகளின் வாக்குமூலங்கள்...

ஏ.கே.ஸ்ரீவஸ்தவா : ''ஆ.ராசாவின் பெர்சனல் உதவியாளர் சந்தோலியா 24.9.2007 அன்று என்னை அழைத்தார். 'யுனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பம் இப்போதுதான் என் கைக்கு வந்துள்ளது. உடனே அந்த விண்ணப்பத்தை யு.ஏ.எஸ். லைசென்ஸ் கொடுக்கும் பட்டியலில் சேர்க்கவும், இனி எந்த நிறுவனத்தின் விண்ணப்பம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்’ என்றும் சொன்னார்.

'அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற புதிய கொள்கையைச் செயல்படுத்துங்கள்’ என்றும் சொன்னார். 'சந்தோலியா சொல்வது போல் செயல்படவும்’ என்று ஆ.ராசாவும் அறிவுறுத்தி​னார். தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, 'ஸ்வான் நிறுவனத்தின் விண்ணப்பங்களில் சில மாற்றங்கள் செய்யுங்கள்’ என்று சொன்னார். அவ்வப்போது, அமைச்சர் ஆ.ராசா என் செல்போனில் வந்து சில உத்தரவுகளைப் போட்டார். ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய இரு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் விதிமுறையை மீறி ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டது உண்மைதான்!''

ஆர்.பி.அகர்வால் : ''அமைச்சர் ராசாவும், சந்தோலியாவும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படச் சொல்லி என்னை மிரட்டினார்கள். ஸ்வான் டெலிகாம் நிறுவன விண்ணப்பம் மிகவும் தாமதமாக வந்தது. ஆனால், அந்த விண்ணப்பத்தை முன்னதாகவே வந்ததுபோல், முன்னுரிமைப் பட்டியலில் முதலில் கொண்டுவர, கோப்புகளில் மாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தினார்கள். அதன்படி கோப்புகளில் மாற்றம் செய்யப்பட்டது!''

ராம்ஜி சிங்குஸ்வா :  ''சந்தோலியா, பெஹுரா இருவரின் ஆலோசனைப்படி செயல்​​பட வேண்டும் என்று அமைச்சர் ராசா என்னிடம் கூறினார். ஸ்வான் டெலிகாமை முன்னுரிமைப் பட்டியலில் முதலில் கொண்டுவர அவர்கள் கட்டாயப்படுத்தியபோது, சில அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட அதி​காரிகளை மாற்றினார்கள். அதனால்​தான், நான் சந்தோலியா, பெஹுரா சொன்னதை அப்படியே செய்தேன்!''

அசிஸ் காராயக்கர் : ''ரிலையன்ஸ் நிறுவனத்தின் பினாமி நிறுவனமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் முன் நிறுத்தப்பட்டது. பிப்ரவரி 25, 2007 ரிலையன்ஸ் போர்டு மீட்டிங்கில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதுபோல் போலியான மினிட்ஸ் தயாரிக்கப்​பட்டது. இதன் பின்னணியில் கிராப்பி கன்சல்டன்சி இருந்தது. இந்த கன்சல்டன்சி, டிபி ரியாலிட்டியின் இணை நிறுவனமாகும்!''

தேடாட்டா பண்டிட் :  ''ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்காக போலியான ஆவணங்கள், ரிலையன்ஸில் அக்டோபர் 2007-ல் தயாரிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூன்று போர்டு கூட்டம் நடத்தப்பட்டதாகவும், ஸ்வான் டெலிகாம் தொடர்பாக அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்​டதாகவும் போலியான மினிட்ஸ் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஸ்வான் டெலிகாமுக்கு அலைவரிசை ஒதுக்கீடு கிடைத்தது. போலியான போர்டு மீட்டிங் மினிட்ஸில் என்ன இருக்க வேண்டும் என்பதை சந்தோலியா, பெஹுரா, அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் டிக்டேட் செய்தனர்!''

அசோக்வதா :  ''ஸ்வான் டெலிகாம், டைகர் டிரேடர்ஸ் பிரை​வேட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்​களுக்கு, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு கிடைப்பதற்கான நிதி உதவி செய்தும் அந்த நிறுவனங்களில் முதலீடு இருப்பதுபோல் ஆவணங்கள் தயாரித்தும் கொடுத்தேன்!''

கடந்த இதழில் நாம் குறிப்​பிட்ட ஆசீர்வாதம் ஆச்​சாரி​​​யின் வாக்குமூலத்துடன் இந்த ஆறு வாக்குமூலங்களும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களின் வாக்குமூலங்​களை அடிப்படையாக வைத்தும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சாட்சிகளை அடிப்​படையாகக்கொண்டும்  'ஆ.ராசா... குற்றவாளிதான்’ என்று நீதிமன்றத்தில் உறுதியாகச் சொல்லக் காத்திருக்​கிறது சி.பி.ஐ.!

''லைசென்ஸ் பெறவே நீரா ராடியாவும் ராசாவும் பேசினர்...''

வருமான வரித் துறை இணை இயக்குநர் ஆஷிஷ் அப்ரால், நீரா ராடியா பற்றி டெல்லி போலீஸ் அதிகாரி வினீத் அகர்வாலுக்கு நவம்பர் 20, 2009-ல் எழுதிய கடிதத்தில், 'நீரா ராடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் தொலைபேசி இணைப்புகள் எங்களுக்கு வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நீரா ராடியா வைஷ்ணவி கார்ப்பரேட் கன்சல்டன்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனங்கள் தொலைத் தொடர்பு, மின்சாரம், விமானப் போக்குவரத்து மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளன.

இந்த நிறுவனங்கள் வெறும் ஊடக மேலாண்மை செய்வது மட்டுமல்ல, அவர்கள் உரையாடல் அடிப்படையில், தங்களின் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பக் கொள்கை முடிவுகளில் மாற்றம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்துவது போன்றவற்றை செய்து வருகின்றன.

அவர்களின் உரையாடலைப் பார்க்கையில், நீரா ராடியாவுக்கு தொலைத் தொடர்பு உரிமம் பெற்றுக் கொடுப்பதில் பங்கு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் உரையாடலில், புதிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு நீரா ராடியா ஆலோசனை வழங்குகிறார். இந்த லைசென்ஸ் பெறுவதால் அவர்களுக்கு உடனடி ஆதாயம் எதுவும் வந்துவிடாது என்று அரசாங்கத்தை நம்பும்படி செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து பெறும் பணத்தை காலம் தாழ்த்தி பெறும்படியும் அவர் அறிவுரை கூறுகிறார்.

நீரா ராடியாவுக்கும், தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கும் இடையே நேரடி தொலைபேசி உரையாடல்கள் நிகழ்ந்து உள்ளன. சில உரையாடல்கள், சில தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் லைசென்ஸ் பெற உதவும் வகையில் உள்ளன. நீரா ராடியா சந்தோலியாவுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இவை தேவைப்பட்டால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்...’ என்று கூறப்பட்டு உள்ளது!

(தொடரும்)

நன்றி : ஜூனியர்விகடன்-24-04-2011


ராசாவுக்கு ஆப்பு வைத்திருக்கும் ஆசிர்வாதம் ஆச்சாரி...!

17-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'கவிழ்க்கக் காத்திருக்கும் இருவர்’ என்ற தலைப்பில் கடந்த இதழில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து எழுதி இருந்தோம். சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டு, இப்​போது திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவுக்கு எதிராக, இரண்டு முக்கியமான வாக்குமூலங்கள் வாங்கப்​பட்டுள்ளன என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தோம்.

''சி.பி.ஐ. ரெய்டுக்கு உள்ளான ஏ.கே.ஸ்ரீவத்சவா, சுமார் ஒன்பது வருடங்களாகக் கூடுதல் பிரைவேட் செக்ரெட்டரியாக ஆ.ராசாவுடன் பணியாற்றிய ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவரும் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். இந்த இருவரின் வாக்குமூலங்களை வைத்து ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. வலிமைப்படுத்தி உள்ளது!'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம். இப்போது ஆசீர்வாதம் ஆச்சாரி தொடர்பான பல தகவல்கள் டெல்லியில் இருந்து கசிய ஆரம்பித்து உள்ளன.

''2ஜி அலைக்கற்றை ஊழலில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலம்தான் மிக முக்கியமானது. அவரது வாக்குமூலத்தின் முழு விவரங்கள் வெளியே வரும்போது ஆ.ராசா செய்த பல காரியங்களை எளிதாக உணரலாம். சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில், அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, 164 சட்டப் பிரிவின் கீழ் ஆசீர்வாதம் ஆச்சாரி ஒரு வாக்குமூலம் கொடுத்துள்ளார்!'' என்றும் டெல்லி தகவல்கள் கூறுகின்றன!

யார் இந்த ஆசீர்வாதம் ஆச்சாரி..?

தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவர் வெளி மாநிலங்களில்தான் அதிகம் வசித்தவர். இவரது அப்பா பெயர், ராஜலிங்கம் மனா ஜோசப்!

1992 மார்ச் மாதம் ரயில்வே துறையில் 'ஸ்டெனோ டி’ அந்தஸ்தில் சேர்ந்தவர் ஆசீர்வாதம். 1999-ல் 'ஸ்டெனோ சி’ அந்தஸ்து பெற்று பதவி உயர்வு கிடைத்தது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை 2004-ல் எழுதித் தேர்ச்சி பெற்று, ரயில்வே துறையில் பிரிவு அதிகாரியாகச் சேர்ந்தார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளராக 1999 அக்டோபரில் சேர்ந்து, பிறகு அக்டோபர் 2000-ல் சுகாதாரத் துறை அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளராக மாற்றப்பட்டு, 2004 டிசம்பர் வரை பணிபுரிந்துள்ளார்.

2004 பொதுத் தேர்தல் முடிந்த​வுடன், ஆ.ராசா சுற்றுப்புறச் சூழல் துறை கேபினெட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1.1.2006-ம் தேதி ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாள​ராக நியமிக்கப்பட்டார் ஆசீர்வாதம். அப்போது, ஆர்.கே.சந்​தோலியா​தான், தனிச் செயலாளராக இருந்தார். (இப்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்!) 2007 மே மாதம் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆ.ராசாவின் விருப்பப்படி, சுற்றுச் சூழல் துறையில் இருந்து தொலைத் தொடர்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக ஆக்கப்பட்டார் ஆசீர்வாதம். அதே நேரத்தில், ஆர்.கே.சந்தோலியாவும் மீண்டும் ஆ.ராசாவின் செயலாளராகச் சேர்ந்தார் என்று, ஆசீர்வாதம் வளர்ந்த கதையைச் சொல்கிறார்கள்.

இதனால், ஆ.ராசாவுடன் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு ஆசீர்வாதத்துக்குக் கிடைத்தது. இதை சி.பி.ஐ.யிடம் ஆசீர்வாதம் விரிவாக விளக்கி உள்ளா​ராம்.


''தினமும் அமைச்சர் ஆ.ராசாவின் வீட்டுக்குக் காலை 9 மணிக்குள் போய்விடுவேன், இரவு 7 மணிவரை பணியாற்றிவிட்டு, என் வீட்டுக்குப் புறப்படுவேன். சில நாட்கள் பணி அதிகமாக இருந்தால், இரவு 9 மணிவரை அமைச்சர் வீட்டில் இருப்பேன். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சரைப் பார்க்க அங்கு நிறையத் தொழிலதிபர்கள் வந்து போவார்கள்...

2.11.2007 அன்று எலெக்ட்ரானிக்ஸ் நிகேதான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டேன். இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு இரவு உணவை சாப்பிட்டேன். அப்போது வீட்டில் போன் அடித்தது. அமைச்சர் ஆ.ராசாதான் பேசினார். வீட்டுக்கு வரும்படி கூறினார். உடனடியாக அமைச்சர் வீட்டுக்குப் போனேன். அமைச்சரின் அறையில், ஆர்.கே.சந்தோலியா, மெம்பர் டெக்னாலாஜி ஸ்ரீதரா, அமைச்சர் பி.ஏ-வான ராஜன் ஆகியோர் இருந்தனர்.

சந்தோலியா, அமைச்சரின் லெட்டர் பேப்பரை எடுத்துக் கொடுத்தார். கம்ப்யூட்டரில் நான் உட்கார்ந்து அடிக்க ஆரம்பித்தேன். அமைச்சர் ஆ.ராசாவே என்ன விஷயங்கள் அடிக்க வேண்டும் என்பதை டிக்டேட் செய்தார். பல மாற்றங்கள் செய்யப்பட்டு, இரவு 11 மணிக்கு கடிதம் இறுதி வடிவம் பெற்றது. இரவு 1.30 மணிக்கு அந்தக் கடிதம் சிறப்பு நபர் மூலம் கொண்டுசெல்ல, அமைச்சர் ஆ.ராசா உத்தரவிட்டார். நான் புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

26.12.2007 அன்று சந்தோலியா என்னிடம், '2.11.2007 இரவு தயார் செய்த கடிதம் எங்கு உள்ளது. உடனடியாகப் பிரதமர் கேட்கிறார்’ என்றார். கம்ப்யூட்டரில் இருக்கிறது என்று சொன்னேன். பென் டிரைவ் மூலம் அந்தக் கடிதத்தை காபி செய்துகொண்டு போனார் சந்தோலியா. மீண்டும் வந்து அந்தக் கடிதத்தை பிரின்ட் எடுத்துக்கொண்டு போனார். பிரதமருக்கு அந்தக் கடிதத்தைக் கொடுத்தாகப் பேசிக்கொண்டார்கள்.


ஆ.ராசாவின் வீட்டுக்கு, 2008 ஜனவரி 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயின் அடிக்கடி வந்து சென்றார். ஸ்வான் டெலிகாம் நிர்வாக இயக்குநர் ஷாகித் பால்வா, அமைச்சரைப் பார்க்க அடிக்கடி வருவார். யுனிடெக் சஞ்சய் சந்தோலியாவும் அமைச்சர் வீட்டுக்கு வருவார்.

மே 2007-ல், மொரானி சகோதரர்கள் வந்தார்கள். சரத்குமார் ரெட்டியும் அவர்களை சந்தித்துப் பேசினார். கலைஞர் டி.வி. தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் ஆ.ராசா வீட்டில்தான் நடந்தன. கலைஞர் டி.வி-க்கு அனுமதி பெறுவது தொடர்பாக அமைச்சர் ஆ.ராசா, மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷியிடமும், அவருடைய செயலாளர் மனோஜ்குமாரிடமும் பேசினார். கலைஞர் டி.வி-க்கு அனுமதி கிடைத்தது. 'கலைஞர் செய்தி சேனல்’ தொடங்க வேண்டும் என்று கனிமொழி பல முறை அமைச்சர் வீட்டுக்கும், எலெக்ட்ரானிக்ஸ் நிகேதான் அலுவலகத்துக்கும் வந்தார். பல முறை பல மணி நேரம் பேசிக்கொண்டு இருப்பார்கள்.


கலைஞர் டி.வி. சேனலை, டாடா ஸ்கை டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பப் பேச்சுவார்த்​தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் நீரா ராடியாவும் கலந்துகொண்டார். ஆ.ராசா, கனிமொழி, நீரா ராடியா ஆகியோர் பேசிய பேச்சுகள், 18.9.08 அன்று ரிக்கார்டிங் செய்யப்பட்டது. ஆனால் கலைஞர் டி.வி-யை, டாடா ஸ்கை மூலம் ஒளிபரப்புவதற்குக் கூடுதல் வசதி வேண்டும். அதாவது, அலைக்கற்றையில் கூடுதல் ஒதுக்கீடு வேண்டும் என்று டாடா நிர்வாகம் கோரிக்கை வைத்தது!'' என்று ஆசீர்வாதம் தனது வாக்குமூலத்தில் சொன்னதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.10.2008-ல் ஆசீர்வாதத்தைக் கூடுதல் தனிச் செயலாளர் பதவியில் இருந்து ராசா விடுவித்து இருக்கிறார். 29.10.08-ல் ரயில்​வே துறைப் பணியில் இவர் சேர்ந்து இருக்கிறார்.

இந்த வாக்குமூலத்தை நேரடியான சாட்சியாக சி.பி.ஐ. பார்க்கிறது. இவரது வாக்குமூலத்தை, முக்கியமானதாகப் பயன்படுத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், 2ஜி அலைக்கற்றை ஊழலின் இரண்டாவது குற்றப் பத்திரிகை அமையும். இந்த குற்றப் பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார், தயாளு அம்மாள் ஆகிய மூவரின் பெயர்களும் இடம் பெறும் என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது!

நன்றி : ஜூனியர்விகடன்-20-04-2011

நீரா ராடியாவின் ஒலி நாடாக்கள் கூறும் உண்மையென்ன..?

22-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையாக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி விசாரிக்கப் போக.. அது இந்தியாவின் ஜனநாயக அமைப்பை கேலிக்கூத்தாக நினைக்குமளவுக்குப் போகும் என்று மன்மோகன்சிங்கும் அவருடைய அல்லக்கைகளுமே நினைத்திருக்க மாட்டார்கள்.

நீரா ராடியா என்ற அந்த இந்தியாவின் தலைசிறந்த புரோக்கரின் கைகளுக்குள் சிக்கியிருக்கும் அரசியல்வியாதிகள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என்று பட்டியலிட்டால் பக்கம் போதாது போலிருக்கிறது..


அம்மணியின் திருவாய் ஜம்முதாவி எக்ஸ்பிரஸை போல நிறுத்தாமல் பேசியிருக்கிறது..! இந்தியாவின் அடுத்த அரசை அமர வைக்கும் முழுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காரணத்தால்தான், இந்த அம்மணியின் ரேடியோ ஒலிபரப்பு நான் ஸ்டாப்பாக இருந்திருக்கிறது.

முதலில் இந்த டேப்புகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது..? யார் டேப்புகளை பதிவு செய்தது..? எப்படி இந்த டேப்புகள் வெளியில் லீக் ஆனது என்பதையெல்லாம் விசாரித்தால் பின்னணியில் காங்கிரஸ் கட்சியே இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் நடந்துள்ளது என்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்திய பின்பே சிபிஐ இந்த வழக்கை தானே எடுத்து விசாரிக்கத் துவங்கியிருக்கிறது. அப்போது அமைச்சராகவே இருந்தாலும் இவரைத் தொடர வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்பட்டு ராசாவின் பேச்சை டேப் செய்யும் அனுமதி பிரதமர் அலுவலகத்தில் இருந்துதான் சிபிஐக்கு கிடைத்திருக்கிறது.


ஸோ.. தன்னுடைய கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் முக்கியப் புள்ளியாகத் திகழும் கேபினட் அமைச்சரான ராசாவின் பேச்சுக்கள் அனைத்தும் டேப் செய்யப்படுகின்ற சூழலில்தான் தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது.

ஐந்து கட்டங்களாக நடந்து முடிந்த 15-வது லோக்சபா தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு கடந்தாண்டு மே 13 அன்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 16 அன்று நடந்தது. காங்கிரஸ் கூட்டணி வெற்றியடைந்த செய்தியும் அன்றைக்கே கிடைத்தது.

இந்தக் களேபரத்துக்கிடையில் இலங்கையில் இனவாத சிங்களப் பேரரசின் கொடும் தாக்குதலினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி தமிழ் ஈழ மக்கள் செத்து மடிந்தார்கள். மே 18-ம் தேதியன்று பிரபாகரன் இறந்ததாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டுவிட்டது. அன்றோடு தமிழ் ஈழத்துக்கான நான்காம் கட்டப் போரும் முடிவுக்கு வந்தது.

மே 19-ம் தேதியன்று தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டணி ஆட்சி பற்றி விவாதிக்க டெல்லி செல்கிறார். தனது குடும்பத்தினரை எப்பாடுபட்டாவது அமைச்சரவையில் இடம் பெற வைத்தே தீருவது என்கிற ஒரு அம்சக் கோரிக்கையோடு சோனியாவையும், மன்மோகனையும் சந்தித்துப் பேசுகிறார்.

எத்தனை சீட்டுக்கள் என்பதில்கூட காங்கிரஸுக்கு பிரச்சினையில்லை. ஆனால் யார், யாருக்கு என்பதில்தான் அவர்களுக்கு தலைவலி.. அத்தனை சொந்தங்களையும் கொண்டு போய் நிறுத்தி “இவங்க எல்லாருமே என் குடும்பந்தான்.. ஒருத்தருக்கு கொடுத்து, இன்னொருத்தருக்குக் கொடுக்கலைன்னா கோச்சுக்குவாங்க. என் மனசு தாங்க முடியாது” என்றெல்லாம் சீன் போட்டு அழுதார் கலைஞர்.

மே 20-ம் தேதியன்று மன்மோகன்சிங் டில்லி அரண்மனைக்குச் சென்று தற்போதைய ராணியிடம் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கேட்டு விண்ணப்பத்தினை சமர்ப்பித்தார். அங்கேயே அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதினால் மன்மோகன் வீடு திரும்புவதற்குள், மே 22 அன்று அவர் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

மன்மோகன்சிங் விண்ணப்பம் கொடுத்த 20-ம் தேதியில் இருந்து அரியணை ஏறிய 22-ம் தேதிவரையிலுமான காலக்கட்டத்தில் இந்த நீரா ராடியா என்னும் புரோக்கரின், எண்ணற்ற சித்துவேலைகள் மர்ம தேசமான டெல்லி அரசியலில் புகுந்து விளையாடியிருக்கிறது.

நான் சென்ற பதிவுகளில் ஆங்கிலத்தில் போட்டிருந்த அனைத்து உரையாடல்களும் நேற்று தமிழாக்கம் செய்யப்பட்டு பல்வேறு இணையத்தளங்களில் போடப்பட்டிருந்தன. இந்த ஸ்பெக்டரம் ஊழல் பற்றி தொடர்ச்சியாக நான் பல பதிவுகளைப் போட்டிருப்பதால், இந்தத் தமிழாக்கத்தையும் வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்குண்டு.

அதோடு கூடவே மே 20-ம் தேதியில் துவங்கி, நேரத்தை முன் வைத்து நீரா ராடியாவின் பேச்சுக்களை வரிசைப்படுத்தியுள்ளேன். இப்போது படித்துப் பார்த்தீர்களேயானால் இந்த பெண் புரோக்கர் எப்பேர்ப்பட்ட திறமைசாலி என்பதையும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அரசியல் செய்வதை எவ்வளவு லாவகமாச் செய்யும் திறன் படைத்தவர் என்பதும் புரியும்..! இந்த அம்மணியையும் தாண்டிய ஆண் அரசியல் புரோக்கர் யாரையாவது இந்தியாவில் அடையாளம் காட்டினால் தெரிந்து கொள்வேன். என்னளவில் வேறு யாருமில்லை.

வீர் சங்வி (பத்திரிகையாளர்) - நீரா ராடியா உரையாடல்

20.6.2009 -  மதியம் 12 மணி 09 நிமிடம் 59 விநாடிகள்

நீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.

வீர்: அது சரி.

நீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.

வீர்: ஆம்.

நீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.

வீர்: சரி.

நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப் பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை. அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள். அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. "எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது' என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது, இல்லையா?

நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?

வீர்: ஆம்?

நீரா: அப்படியா?

வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.

நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.

வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரா: இதோ பார் நீரா,  எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேச முடியாது என்கிறார்.

வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீரா: ஆம், ஆம்.

வீர்: கேமரா முன் போவதற்கு முன் ஒத்திகை பார்க்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்..

வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் "கவுன்டர் பாயிண்ட்' பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.

நீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.

வீர்: சரி.

நீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.

வீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில  பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.

நீரா: சரி.

வீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்து விடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் உள்ளது. எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக் கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக் கூடாது. வரைமுறை இல்லாமல் இருக்கக் கூடாது. மன்மோகன்சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும்விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.

நீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.

வீர்: சரி.

நீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.

வீர்: அவற்றை நான் குறிப்பிட்டு  விடுகிறேன்...

நீரா: சரி.

வீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்...

கனிமொழியுடன் - மே 21, 2009, காலை 8:41

கனிமொழி : ஹலோ

ராடியா : பிரதமர் காரியம் இன்னும் உறுதிப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இன்றும் அது பற்றிய விவாதங்களில்தான்  இருக்கிறார்கள்.

கனிமொழி : தொலைத் தொடர்புத் துறை எங்களுக்கு என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இனி அதில் மாற்றங்கள்..?

ராடியா : என்ன?

கனிமொழி : எங்களுக்குத் தொலைத் தொடர்பு என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஆனால் அது ‘அவருக்குப்’ போய்விடக் கூடாது. ஏனென்றால் அவர் ஊடகங்களில் அப்படியான செய்திகளை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்.  (‘அவருக்கு’ என்பது தயாநிதி மாறன் என்பது வெளிப்படை)

ராடியா : நீங்கள் விமானத்திலிருந்தபோது அவர் அதை எல்லா ஊடகங்களிலும் வரவழைத்துக் கொண்டிருந்தார்.

கனிமொழி : ஆமாம். எனக்கு அது தெரியும்.

ராடியா : ஆனால் கனி, பிரதமர் இப்போது ராஜாவுடனும் பாலுவுடனும் எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை, அவர்கள் என் மதிப்பிற்குரிய சகாக்கள் என அறிக்கை வெளியிட்டிருக்காரே.

கனிமொழி : அவர் அறிக்கை விடுவார். ஆனால் இது பற்றி அப்பாவிடம் பேச வருபவர்கள் மாற்றிப் பேசக் கூடாது. ஒருவர் வெளியே பேசுவதற்கும் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதும் வேறுபடும். அரசியலில் உள்ள நம்மனைவருக்குமே அது தெரியும்.

ராடியா : கனி, காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு தகவல். அவர்கள் சொல்வது: ‘திமுகவின் பிரச்சினைகள் அகப் பிரச்சினைகள். குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினைகள். அவர்களுடைய தலைவர்களுக்கிடையிலான பிரச்சினைகள். திமுக 5 அமைச்சரவைகளுக்கான பட்டியலைக் கொடுத்துள்ளது. அதை நாங்கள் ஏற்க முடியாது’

கனிமொழி : ஆமாம்.

ராடியா : ‘அவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைச் சொல்லிவிட்டோம்’.

கனிமொழி : மூன்றும் நான்கும் (அமைச்சரவைகள்)

ராடியா : ‘பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது என்பதை உணர்கிறோம். ஆனால் நாங்கள் அவர்களிடம் போக முடியாது. எங்களைப் பொறுத்தவரை, அரைமணிக்கொருமுறை மாறன் குலாம் நபி ஆசாதை அழைத்து என்னென்னவோ கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். எங்களை அழைப்பதில் பலன் இருக்காது என்று அவரிடம் சொல்லி விட்டார்கள்’.

கனிமொழி : அவருடைய கோரிக்கைகள் என்னவாம்?

ராடியா : எங்களுக்கு ஐந்து இடங்கள் தாருங்கள் என்று கேட்கிறார். அல்லது அமைச்சரவையில் சேர மாட்டோம் என்கிறார். இல்லையென்றால் ரயில்வே வேண்டுமாம். அல்லது நிலக்கரி மற்றும் கனிமவளம் வேண்டுமாம். எனவே அவர்கள் சொல்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இது திமுகவின் அகப் பிரச்சினை. காங்கிரசுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். யார் வேண்டும், வேண்டாம் என்பதைக் கருணா முடிவு செய்யட்டும். அதை அவரிடமே விட்டுவிட்டோம். அவரே முடிவு செய்யட்டும். ஆனால் மாறனைப் போல் பலர் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பர்கா தத் (என்.டி.டி.வி. செய்திக் குழும ஆசிரியர்) - நீரா ராடியா உரையாடல்

22.5.2009  காலை 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்

நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால் - அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித் தொடர்பு இருக்கிறது.

பர்கா: ஆம்.

நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.

பர்கா: ஆம்.

நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய  மிகப் பெரிய பிரச்னை.

பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றி விடுவாரா?

நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.

பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?

நீரா: இல்லை. அது பற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.

பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க. கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.

நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.

பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன் வந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது.  தி.மு.க. ஒப்புக் கொள்ளுமா?

நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக் கொண்டால் மாறனைக் கைவிட வேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.

பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல்கூட மிகக் குறுகிய நேரமே நடந்தது - இரண்டு நிமிடங்கள் - கனிமொழிதான் மொழி பெயர்த்தார்.

பர்கா: சரி.  அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை(பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.

நீரா: அவர்(கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் - அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்...

பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.

நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.

பர்கா: கனியும்கூட இருந்து கலந்து கொண்டால் என்ன?

நீரா: அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்து கொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்.

ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல்

22.5.2009 - 9.49 

நீரா: ஹலோ?

ராசா: ராசா பேசுகிறேன்.

நீரா: ஹாய்! இப்போதுதான் பர்காதத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.

ராசா: ஆ?

நீரா: பர்கா தத்

ராசா: அவர் என்ன சொல்கிறார்?

நீரா: இந்த விஷயம் குறித்து.... அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக.... அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு(மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர்.பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.

ராசா: ... ஆனால் தலைவருடன் இது பற்றி விவாதிக்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்... அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.

ராசா: காலையில் இது பற்றி விவாதிக்கப்படும்... ஏன் காங்கிரஸ் அநாவசியமாக.... (ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.

நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?

ராசா: ஆ?

நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும்போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.

ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்...

ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: தனியாகவா?

ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.

நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?

ராசா: ஆம்.

நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.

ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்...

கனிமொழியுடன் ராடியா பேச்சு

22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்

கனிமொழி: ஹலோ

நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...

கனி: ம்ம்

நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...

கனி: ஆம், ஆனால் யாரும்... யார் சொன்னது?

நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...

கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.  அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?

நீரா: வந்தார்களா இல்லையா..? சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.

கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக் கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.

நீரா: ம்ம்..  ...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.

நீரா: ஓகே.

கனி: தயவு செய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லி விடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.

பர்கா தத்துடன் ராடியா பேச்சு

22.5.2009 காலை 10  மணி 47 நிமிடம் 33 விநாடிகள்

பர்கா: ஆ, நீரா?

நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.

நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத் துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத்துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் தரலாம் என்றார். தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?
 
அ.ராசாவுடன் ராடியா பேச்சு
 
22.5.2009  - மதியம் 2 மணி 29 நிமிடம்  - 41 விநாடிகள்

நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?

ராசா: அவர் என்ன சொல்கிறார் - கனி என்ன சொல்கிறார்?

நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.

ராசா: ம்ம்...

நீரா: .... ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்...  நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.

ராசா: ம்ம்.

நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று....

ராசா: ஆ.... நான் ஏற்கெனவே பேசி விட்டேன், ஏற்கெனவே பேசி விட்டேன்...

நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?

ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற
விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்... எனக்குத் தெரியும்...

நீரா: இல்லை... அது மட்டுமல்ல, அது மட்டுமல்ல... பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்... இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

ராசா: ம்ம்.

நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.

ராசா: ஓஹோ! ஓஹோ!

நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்...

ராசா: ம்ம்.

நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்...

ராசா: ஓ...

நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
 
கனிமொழியுடன் ராடியா பேச்சு

22.5.2009  - மதியம் 2 மணி 46 நிமிடம்  - 15 விநாடிகள்

கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?

நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.

கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பி விடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை)
(0.01:32.4)

நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?

கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.

நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று  மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?

கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.

நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?

கனி: ஆம், ஆம்.

நீரா: இதுதான் அரசியல், மை டியர்.
கனிமொழியுடன் ராடியா பேச்சு
22.5.2009    - இரவு 8 மணி 04 நிமிடம்  - 19 விநாடிகள்

நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...

நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.

கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக் கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்...

நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன். 

 

கனிமொழியுடன் ராடியா பேச்சு

23.5.2009  காலை 9 மணி 59 நிமிடம்  - 2 விநாடிகள்

நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.

கனி: அது சரி.

நீரா: ஆம், இவர்(மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.

கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

நீரா: ஆம், சரிதான்.

கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.

நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப் போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்குகூட விருப்பமில்லை.
 
வீர் சங்வியுடன் ராடியா பேச்சு

23.5.2009    - இரவு 10 மணி 26 நிமிடம்  - 42 விநாடிகள்

நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்...

வீர்: மாறன்.

நீரா: ஆம்... (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)  ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே...

வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?

நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து...

வீர்: சரி.

நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு 600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.

வீர்: 600 கோடி சரியா?

நீரா: 600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.

வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ண முடியாது?

நீரா: இல்லையா?
 
அ.ராசாவுடன் ராடியா பேச்சு..!

மே 24, 2009 காலை: 11:05

ராசா : என் பெயரை ‘கிளியர்’ பண்ணியாச்சா?

ராடியா : நேற்றிரவு உங்கள் பெயரை கிளியர் பண்ணியாச்சு.

ராசா : சரி, தயாநிதி விஷயம் என்னாச்சு? ஜவுளித் துறையா அல்லது ரசாயனம் / உரத்துறையா?

ராடியா : ஆனால் தயாவுக்குக் கிடைக்காது, அழகிரி, தயா இருவரில் ஒருவர்தான் நுழைய முடியும்.

ராசா : இல்லை,  இருவருமே நுழையலாம்.

ராடியா : இருவருமா? பாலு(டி.ஆர்)வால்தான் பிரச்சினை இருக்குமென்று நினைக்கிறேன். தலைவருக்கு மூன்று குடும்ப உறுப்பினர்களை நுழைப்பதில் கஷ்டம்தான்.

ராசா : (சிரிக்கிறார்) ஆமாம். ஆனால் எல்லோருக்கும் தெரியுமே . 

ராடியா : இல்லை, கனி(மொழி) என்னிடம் நேற்றிரவு சொன்னார், அவர் தந்தை அவரிடம் நேற்று கூறியதாக, மூன்று குடும்ப உறுப்பினர்களை உள்ளே நுழைப்பது கஷ்டம், இதிலுள்ள பிரச்சினையை அவரால் உணர முடிகிறது . . .

நீரா: மாறன் தன்னைப் பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?

ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.

நீரா: தெரியும் அல்லவா?

ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில்தான் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.

நீரா:ம்ம்..

ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.

ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்...

நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.  கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ்கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?  நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்... சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?

ராசா: எனக்குத் தெரியாதே.

நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.

ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்... அதனால் எதுவும்...

நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.

ராசா: ஆ, இருக்கலாம் ..

--------------------------
 
இந்த டேப்புகள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. நாங்கள் இப்படி எதையும் பேசவில்லை. சி.பி.ஐ. பொய்யாக இந்த டேப்புகளைத் தயாரித்துள்ளது என்று இந்த டேப்பில் சிக்கியுள்ள அரசியல்வியாதிகள் யாரும் இதுவரையில் முன் வந்து கூறவில்லை.
மாறாக உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டும், பயத்தையும் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்து மழுப்பியபடியே நடமாடி வருகிறார்கள். அ.ராசாவோ, கனிமொழியோ இதுவரையில் இது பற்றி எனக்குத் தெரிந்து எதையும் கூறவில்லை. இது போலியானது என்றால் அவர்கள் தாராளமாக இந்நேரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். போயிருக்கலாம்.

ஆனால் சகல செல்வாக்கும் உடைய அவர்கள் மெளனமாக இருப்பதைப் பார்க்கின்றபோது, நிச்சயம் இந்த பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்கள் அனைத்தும் உண்மையானவைகள்தான் என்று 200 சதவிகிதம் நம்ப வேண்டியிருக்கிறது. நானும் நம்புகிறேன். 

இடையில் நீரா ராடியா லண்டனில் இருந்தபடியே இந்த டேப்புகளை இனியும் வெளியிடக் கூடாது என்று கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அது தள்ளுபடியானதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

ஸோ.. இனிமேல் இந்த டேப்புகளை சம்பந்தப்பட்ட நபர்கள்தான் பேசியிருக்கிறார்கள் என்கிற நம்பகத்தோடு மேலும் சில விஷயங்களைப் பற்றி இங்கே பேசுவோம்..!

முதலில் வீர்சிங்வியிடம் என்ன சொல்கிறார் நீராராடியா? மன்மோகன்சிங்கின் முந்தைய ஆட்சிக் காலத்தில் அனில் அம்பானிக்குக் கிடைத்த சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும். இதனை முகேஷ் அம்பானி டிவி நிகழ்ச்சியில் தான் பேசப் போகும் விஷயத்தில் மறைமுகமாகச் சொல்ல வேண்டும். அது தொடர்பான கேள்விகளைத்தான் வீர் சிங்வி கேட்க வேண்டும்.. இது முகேஷ் அம்பானிக்காக, நீரா ராடியா செய்யும் லாபி..!

ஆனால் இதில் கேலிக்குள்ளாகும் விஷயம் வீர் சிங்வி நடத்திய அந்த விவாதத்தை முகேஷ் அம்பானி உள்ளிட்ட அறிவுஜீவிகளெல்லாம் இந்தியத் திருநாட்டின் வளர்ச்சியைப் பற்றி கவலையுடன் விவாதிக்கிறார்கள் என்று அப்பாவி ரசிகர்கள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைத்தான்..!

மே 21 காலையில் கனிமொழியுடன் பேசும் ராடியா தி.மு.க. கொடுத்திருக்கும் பட்டியலை காங்கிரஸ் ஏற்க மறுத்தது பற்றித் தெளிவாகச் சொல்கிறார். மூன்று கேபினட், நான்கு இணை அமைச்சர்கள் ஓகே. ஆனால் கேபினட் அமைச்சர்கள் யார், யார் என்ற குழப்பத்தை நீங்களே முடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் காங்கிரஸ் சொல்லியிருக்கிறது..!

இதில் எங்கே தமிழ்நாட்டின் நலன் இருக்கிறது.. திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் குடும்பப் பிரச்சினைதானே தெரிகிறது..?

மே 22-ல் பர்கா தத்துடன் பேசும் ராடியா, தி.மு.க. கேட்கும் இலாகாக்களை பட்டியலிடுகிறார். இதில் சாலை போக்குவரத்து, மின்சாரம், நிலக்கரி, சுகாதாரம், ரயில்வே என்று லம்ப்பான மேட்டர்களையே கேட்டிருப்பது தெரிகிறது.. அதிலும் தயாநிதி மாறன் தனக்காக நிலக்கரி, சுரங்கத் துறையைக் கேட்டிருக்கிறார்..


இது மட்டும் கிடைத்திருந்தால், கனிமொழியும், அவரது தாயாரும் இப்போதும் செய்து வரும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் தொழிலில் கை வைத்திருக்கலாம். ஒருவேளை கனிமொழிக்கு இப்படி தங்களது தொழிலில் தலையிட்ட நினைத்ததால்தான் மாறன்மேல் கோபம் வந்ததோ..?

பர்காதத் தான் ஒரு பத்திரிகையாளர் என்பதையும் மறந்து இந்தக் கேடு கெட்ட ஆட்சியாளர்களின் பதவியேற்புக்கு உதவிகளைச் செய்துள்ளார். அதுவும் எப்படி..?

மாறன், கனிமொழி, அ.ராசா, டி.ஆர்.பாலு சகிதமாக வந்ததால் கலைஞரிடம் தனியாக நாலு வார்த்தைகூட பேச முடியவில்லை என்பது பிரதமரின் அங்கலாய்ப்பாம்.. டி.ஆர்.பாலு வேண்டாம் என்பது பிரதமரின் அவா. ஆனால் இதனை அவரால் அப்போது வெளிப்படுத்த முடியவில்லை என்பது பர்கா தத்தின் மில்லியன் டாலர் தகவல்..!

எப்படி பேசுவார்..? டி.ஆர்.பாலு வேண்டாம் என்றோ,. ராசா வேண்டாம் என்றோ அவர்களை வைத்துக் கொண்டே பேச முடியுமா..? அதுதான் தயக்கம். இந்தத் தயக்கத்திற்காக கனிமொழியின் வேண்டுகோளை ஏற்று ராடியா பர்கா தத்திடம் பேச, பர்கா தத் மீண்டும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசி நேரம் வாங்கித் தருகிறேன். அல்லது குலாம் நபி ஆசாத்தைத் தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்கிறார்.

ம்.. இந்தம்மா 24 மணி நேரமும் டிவிலதாம்பா தெரிஞ்சாங்க.. இவங்களுக்கு எப்படி இந்த புரோக்கர் தொழிலுக்கெல்லாம் நேரம் கிடைச்சதோ தெரியலையே..?

அடுத்த போன் ராசாவுக்குப் பறக்கிறது.. “டி.ஆர்.பாலுதான் பிரச்சினை. அதனால்தான் மினிஸ்ட்ரி பெர்த் இன்னமும் பைனல் ஆகாமல் இழுத்தடிக்கிறது..” என்கிறார் ராடியா. பதைபதைக்கிறார் ராசா. “உடனே இதை தலைவரிடம் சொல்ல வேண்டும். நாங்க சொல்ல முடியாது. நீங்களே இதை எப்படியாவது தலைவர் காதுக்கு போன்லயாவது சொல்லிருங்களேன்.. இல்லாட்டி ரகசியக் கடுதாசியையாவது கொண்டுபோய் கொடுங்களேன்” என்கிறார் ராசா. அப்படியேகூட, “அ.ராசாகூட எங்களுக்குப் பிரச்சினையில்லை. டி.ஆர்.பாலுகூடத்தான் பிரச்சினைன்னு சொல்லச் சொல்லுங்க..” என்று கூச்சநாச்சமில்லாமல் பதறுகிறார்.

உஷ்.. அப்பா.. இந்த மொள்ளமாரி, முடிச்சவிக்கியெல்லாம் ஏதோ கூவம் ஆத்துக் கரையோரமெல்லாம் இல்லப்பா. நிசமா அ.ராசா மாதிரியான ஆளுங்கதாம்பா அவங்க..! பாவம் டி.ஆர்.பாலு..! தனக்கு லைன் கிளியர் ஆக வேண்டும் என்பதற்காக ராசா எவ்ளோ துடிக்கிறார் பாருங்க..!

அடுத்த போன் கனிமொழிக்கு.. இடையில் அகமது பட்டேலிடம் ராடியா போனில் பேசியிருக்கிறார். அப்போது அவருக்கு அகமது படேலிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல் சாலை போக்குவரத்து கட்டுமானத் துறை பாலுவுக்கோ, மாறனுக்கோ கிடையாது என்பது..

இதைத்தான் கனியிடம் சொல்கிறார் ராடியா. கனி மறுக்கிறார். “யார் சொன்னது இது? என்னிடமோ அப்பாவிடமோ யாரும் இதைச் சொல்லவில்லை..” என்று மறுக்கிறார். ஆனால் “யாரோ சென்றிருக்கிறார்கள். சொல்லியிருக்கிறார்கள்..” என்கிறார் ராடியா. ஸோ.. தாத்தாவை யார் கண்காணிப்பில் வைத்திருப்பது என்பதிலேயே அங்கே போட்டி நடந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது. இந்த டேப்பிலேயே நமக்குத் தெரிய வந்துள்ள இன்னொரு விஷயம்.. தாத்தாவும் காது கேளாதோர் சங்கத்தில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்துவிட்டார் என்ற சோகச் செய்திதான் அது. வெல்கம் தாத்தா..!

அப்போது டெல்லியில் தங்கியிருந்த ராஜாத்தி அம்மாவை ராடியா நேரில் சென்று சந்திக்கிறார். அங்கேயும் ஏதோ சதித் திட்டம் தீட்டி அதனைச் செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள் என்பதை இவர்களின் அடுத்தடுத்த பேச்சுக்களில் தெரிகிறது.

இந்த இடத்தில் ஒரு தகவல். ராஜாத்தியம்மாளுக்கு நீரா ராடியாவை அறிமுகப்படுத்தி வைத்தது பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனான கெளதமின் மனைவிதான் என்கிறார்கள். இவர்தான் இப்போதைக்கு ராஜாத்தியம்மாளின் பண விவகாரத்தை டீல் செய்து, கூடவே சுற்றுக்கும் விட்டு வருகிறார் என்பது தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களுக்கு முன்பே தெரிந்த விஷயம்தான்..!


கனியிடம் பேசி முடித்துவிட்டு உடனேயே பர்காவுக்கு போன் அடித்து சாலை போக்குவரத்துத் துறை மாறனுக்கோ, பாலுவுக்கோ இல்லை என்று பிரதமர் மறுத்துவிட்டதைச் சொல்கிறார் ராடியா. கூடவே காங்கிரஸ் தரப்பில் இருந்து தி.மு.க.வுடன் யார் பேசுகிறார்கள் என்பதே தெரியவில்லை என்று கனியிடம் பேசியதையே சொல்கிறார் ராடியா..

அன்றைய மதிய நேரத்தில் ராடியாவிடம் இருந்து அ.ராசாவுக்கு போன் பறக்கிறது. அழகிரியைப் பற்றி அவருடைய செல்ல மருமகன் தயாநிதி மாறன் டில்லியில் என்னென்ன வத்தி வைப்புகளை பற்ற வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி ராடியா சொல்கிறார். அஞ்சாங்கிளாஸு தாண்டாதவரு.. இங்கிலீஷ் தெரியாது.. அவர் ஒரு கிரிமினல் அப்படீ, இப்படீன்னு தயாநிதி மாறன் செஞ்சோற்றுக் கடனை அடைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இங்கே ராசாவும் அழகிரியிடம் மாறன் பற்றி தான் ஏற்கெனவே பேசிவிட்டதாகச் சொல்கிறார். ஆக, ராடியாவிடமிருந்து நியூஸை வாங்கி அழகிரியிடம் போட்டுக் கொடுத்துவிட்டு தனக்கான ஆதரவை அழகிரியிடமும் பெற்றுக் கொண்டிருக்கிறார் ராசா என்றே நம்ப முடிகிறது.

அடுத்த பத்து நிமிடத்தில் கனிமொழிக்கு போன்.. கனி கேட்கின்ற முதல் கேள்வியே ங்கொய்யால வகையானது.. “பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தயாநிதி மாறன் போகிறாரா இல்லையா?” என்று கேட்கிறார் கனி. கலைஞர் டெல்லியில் இருந்தபோதெல்லாம் கனிமொழி, ராசா, தயாநிதி, பாலு நால்வரும்தான் கூடவே போய் வந்து கொண்டிருந்தார்கள். ஒரே கட்சிதானே.. ஒரே பேமிலிதானே..? பேசிக்கவே மாட்டாங்களா.. குடும்பப் பிரச்சினைல சண்டைன்னா அதை குடும்பத்துக்குள்ள வைச்சுக்க வேணாமாய்யா..! இப்படியா பப்ளிக்காக்குறது..?


அவங்களுக்காக.. அவங்க தலைமுறைக்காக ஒரு மனுஷன் நடக்க முடியாத காலத்துலேயும் தவழ்ந்தாவது போய் பிச்சை கேட்டு அழுதுகிட்டிருக்காரு.. அவரைப் பார்த்தா பாவமா தெரியலையா இவங்களுக்கு..?

வெறுப்பாகப் பேசுகிறார் கனிமொழி. “அவர் போறாரா இல்லையான்னு தெரியலை. ஆனா போயிட்டு வந்து அப்பாகிட்ட  அகமது படேல் கூப்பி்டடாரு போனேன்னு சொல்வாரு..” என்கிறார் கனி. ஆக மொத்தம், தயாநிதியின் வளர்ச்சி சிஐடி காலனி வீட்டுக்கு என்றைக்குமே உறுத்தலாகத்தான் உள்ளது..

22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மன்மோகன்சிங் தனது 19 சகாக்களுடன் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுவிட்டார். அன்றைய இரவு மீண்டும் கனிமொழியிடம் பேசுகிறார் ராடியா. கனிமொழி இப்போது இன்னொரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார். அது ராசா மீண்டும் மந்திரியாக வேண்டும் என்பதில். “இனிமேல் அப்பாவுடன் யார் பேச வருவதானாலும் அவர்கள் இவரைப்(அ.ராசா) பற்றி எதிராகப் பேசக் கூடாது.” என்று ராடியாவிடம் உறுதியாகக் கூறுகிறார் கனிமொழி.

ஆக.. தயாநிதி மாறனுக்கு எதிராக அழகிரியை டெல்லியில் வளர்க்க முடியாது.. ஆனால் ஆ.ராசாவை வளர்க்கலாம் என்று ராஜாத்தியம்மாளும், கனிமொழியும் நன்கு தி்ட்டமிட்டுத்தான் இதைச் செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்..! இதற்கிடையில் மே 22-ம் தேதியே  கலைஞர் சென்னை திரும்பி விட்டார்.  

23-ம் தேதி காலையில் பத்து மணிக்கு மீண்டும் கனிமொழிக்கு போன்.. இம்முறை ராடியா தெளிவாகச் சொல்கிறார் அழகிரி பற்றியும், ராசா பற்றியும் காங்கிரஸ் மேலிடத்தில் தான் தெளிவாக எடுத்துரைத்துவிட்டதாக..!

அழகிரியின் இந்தி, ஆங்கிலம் தெரியாத நிலையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக அவருக்குக் கீழ் இரண்டு மொழிகளும் தெரிந்த நபரை துணை அமைச்சராகப் போட்டுச் சமாளிக்கச் சொல்லுங்கள் என்று தனது பெரிய அண்ணனை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் கனிமொழி. கூடவே “அந்த ஆளு” என்று தயாநிதி மாறனை விளித்து அவருக்குத் தொலைத் தொடர்புத் துறை கிடைக்கக் கூடாது என்பதையும் மீண்டும் அறிவுறுத்துகிறார். மாறனுக்குப் பதவி கிடைப்பது தி.மு.க.விலேயே யாருக்கும் பிடிக்கவில்லை என்றும் ஒரு பிட்டைப் போடுகிறார் கனி.!

இந்த டேப்பில் பல தொடர்ச்சியானவைகள் இல்லை. நன்கு திட்டமிட்டு தேவையானவற்றை மட்டும்தான் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதே நாள் இரவில் வீர்சிங்வியைத் தொடர்பு கொள்கிறார் ராடியா. தயாநிதி மாறனை எடுத்துக் கொள்ளும்படி பிரதமருக்கே நிர்ப்பந்தம் வந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ராடியா. இப்படி நிர்ப்பந்தம் கொடுப்பது ஸ்டாலினும், அவரது அக்காள் செல்வியும் என்கிறார் ராடியா. இதென்னாங்கடா புது குழப்பம்னு யோசிச்சா.. நமக்குத்தான் தலையே சுத்துது..!

ஸ்டாலினுக்கு அழகிரியின் வளர்ச்சி நிச்சயம் ஆபத்தானதுதான். ஆகவே அவர் பதவியில் இல்லாமல் இருந்தால்தான் தனக்கு நல்லது என்று நினைக்கிறார். செல்விக்கோ தனது மகன் போன்ற தயாநிதி மாறனை விட்டுக்கொடு்க்க முடியாத நிலைமை. அந்த மகன் மட்டும் இல்லாவிடில் தான் இன்னமும் ராயப்பேட்டையில் துணிக்கடையில் பில்தான் போட்டுக் கொண்டிருந்திருக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால்தான் பாசப்பிணைப்பில் செல்வியும், ராஜதந்திரவகையில் ஸ்டாலினும் தயாநிதி மாறனுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.. ம்.. இந்த மாறன்களுக்கு மச்சம் எங்கிட்டுத்தான் இருக்குன்னு தெரியலை சாமிகளா..!

ஆனால் ராடியா சொல்லியிருப்பதுபோல் 600 கோடி ரூபாயை தயாளு அம்மாளுக்கு மாறன்கள் கொடுத்திருந்தால், அது முன்னதாகவே சன் டிவியில் பங்கு பிரிக்கும்போது நடந்தததன் தொடர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்போது தயாளு அம்மாவுக்கு மிகக் குறைவான தொகையைத்தான் பங்காக கொடுத்தார்கள் என்று ஏக கோபத்தில் இருந்தார்கள் கோபாலபுரத்து குடும்பத்தினர்.. ஓகே.. எப்படியோ வந்து சேர்ந்திருந்தால் சரிதான்..!

இதற்கிடையில் 23-ம் தேதி இரவு சென்னை கோபாலபுரத்தில் குடும்பத்தினர்களுக்குள் நடந்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில் பாலுவை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு அழகிரி தனக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கலைஞரிடம் நேருக்கு நேராகக் கேட்டு உறுதிமொழி வாங்கிவிட்டுச் சென்றார்.

வாசலில் நின்று கொண்டிருந்த பாலுவிடம் “ஸாரி பாலு..” என்று ஒரு வார்த்தையில் பாலுவின் பதவி கனவில் ஒரு டன் மண்ணையள்ளிப் போட்டுவிட்டு சிட்டாகப் பறந்தார் அழகிரி.. இதுவெல்லாம் தெரிந்துதான் ராசா மறுநாள் காலை ராடியாவிடம் பேசும்போது உறுதியாகச் சொல்கிறார் கேபினட் பெர்த்தில் அழகிரி உறுதியென்று....!

அந்தச் சமயத்தில் அமைச்சரவை விரிவாக்கம் ஏன் இவ்ளோ லேட்டு என்று பத்திரிகைகள் மாய்ந்து, மாய்ந்து கட்டுரைகள் எழுதித் தள்ளியபோது தி.மு.க.வால்தான் தாமதம் என்ற செய்தி காங்கிரஸால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. அப்படியாவது தி.மு.க. சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வரட்டுமே என்றுதான்..!

இந்த இடைவெளியில் பாலுவுடனும், அ.ராசாவுடனும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல் பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கைகூட வெளியிட்டார். நம்மால் தாமதம் என்று அவர்கள் சொல்லக் கூடாதே என்பதால்தான்..!

அ.ராசாவின் பெர்த் 23-ம் தேதி இரவில் உறுதியாகிவிட்டதாக ராடியாவும் சொல்கிறார். அழகிரியைப் பற்றி மாறன்களின் பற்ற வைப்புகள் அவருக்கே தெரியும் என்பதை ராசா மீண்டும் இங்கே தெளிவாக்குகிறார்.

ராடியா என்னும் அரசியலில் இல்லாத வெறும் புரோக்கர் பெண், இத்தனை அல்லல்பட்டு ஒருவரை மத்திய அமைச்சரவையிலேயே சேர்க்க முடிகிறது என்றால் இவரது செல்வாக்கு என்ன என்பதையும், எதற்காக என்பதையும் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

“நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.  கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறையப் பெற வேண்டியிருக்கிறது.” என்று ராடியா ராசாவிடம் சொல்வதைப் பார்க்கும்போது இதுவெல்லாம் நன்கு திட்டமிட்டுத்தான் நடந்தேறி உள்ளது என்று சந்தேகத்திடமில்லாமல் நான் நம்புகிறேன்..!

கூடவே அமைச்சருக்கு அனைத்து வகையிலும் உறுதியாக இருப்பதைப் போல ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டலிடம் ராசா சார்பில் சமாதானம் பேசியிருப்பதையும் சொல்கிறார் ராடியா. இதற்கு ராசா சொல்கின்ற பதிலைப் பாருங்கள்.. “இன்னும் அஞ்சு வருஷம்கூட என்கூடத்தான் அவர் வேலை பார்த்தாகணும். இதையும் அவர்கிட்ட சொல்லிருங்க” என்கிறார் ராசா.. அசத்தல் சினிமா டயலாக்..! செத்தான்டா வில்லன்..!

எப்படியோ இந்தத் திருடர்கள் இத்தனை உள்ளடி வேலைகளையும் செய்த பின்பு மே 28-ம் தேதியன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..!

இதன் பின்பும் நிச்சயம் சி.பி.ஐ. போன் பேச்சுக்களை பதிவு செய்திருக்கும்.. அதனால்தான் இன்றைக்குக்கூட ஆடிட்டர் ஜெனரலின் குற்றச்சாட்டுக்களை ஒரு ஆதாரமாக தான் எடுத்துக் கொள்ள முடியாது என்றும், தங்களிடம் இப்போது இருக்கும் ஆதாரங்களே போதுமானது என்றும் சிபிஐ கூறியிருக்கிறது.

ஆனால் இந்த டேப்புகளை கோர்ட்டில் தாக்கல் செய்யும் சாக்கில் யார் இதனை வெளியில் விட்டது என்பதை விசாரிக்கவே வேறு ஒரு சி.பி.ஐ. வர வேண்டும் போல் தோன்றுகிறது.

இது தி.மு.க.வுக்கும் தெரியாமலில்லை. அவர்களே இது போன்ற சித்து வேலைகளில் சிறந்தவர்கள். இந்தியாவிலேயே டெலிபோனில் ஒட்டுக் கேட்பது எப்படி என்பதை செய்து காட்டியவர்கள் தி.மு.க.வினர்தான். அவர்களுக்கே ஆப்பு வைப்பது போல ஒரு பக்கம் டேப்புகள் லீக். இன்னொரு பக்கம் கூட்டணி உறுதி.. பதவி விலக நிர்ப்பநதம்.. கோர்ட்டில் மனு தாக்கல்.. ஊழலே நடக்கவில்லை என்று அமைச்சரவையின் சார்பில் மனு தாக்கல். ஆனால் அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ ஊழல் நடந்திருக்கிறது என்று மனு தாக்கல் என்று நாடே கலவர பூமியாக இருக்கிறது..

ம்.. ஒண்ணும் புரியலை.. இதுக்கெல்லாம் தலைமைப் பொறுப்பில் மன்மோகன்சிங் என்னும் பிரதமர் இருக்கிறார்.. இவர் எதுக்காக இந்தப் பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லை. தனக்குக் கீழுள்ள ஒரு துறை ஊழல் நடக்கவில்லை என்கிறது. இன்னொரு துறையோ நடந்துள்ளது என்கிறது.. இந்தச் சூழலில் குற்றவாளிகள் நிச்சயம் தப்ப முடியாது என்று வீர ஆவேசம் காட்டுகிறார். இப்படிச் சொல்லிவிட்டு அடுத்த நாள் தி.மு.க.வுடனான தங்களது கூட்டணி பலமானதாகவும், உறுதியாகவும் இருக்கிறது என்கிறார்..!

ஆக மொத்தம்.. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்.. நீ அழுவுற மாதிரி அழுவு என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொடுக்கிறது காங்கிரஸ்.. தி.மு.க.வும் வேறு வழியில்லாமல் இதனை அப்படியே பாலோ செய்து கிளிசரின் போடாமலேயே பூணூல், பார்ப்பு, பார்ப்பான், தலித், சூத்திரன், மனு தர்மம் என்று புளுத்துப் போன புழுக்கைகளை கை நிறைய அள்ளி தன் மேலேயே வாரி இறைத்துக் கொள்கிறது..!

இந்த நாடகம் எப்போ முடிஞ்சு, அடுத்த நாடகம் எப்போ தொடங்கும் என்று கேள்வியுடன் நாமும் அடுத்த ஊழலுக்காகக் காத்திருக்கிறோம்..! காத்திருப்போம்..!

ஜெய்ஹிந்த்..!