கொடி வீரன் - சினிமா விமர்சனம்

11-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கம்பெனி புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சசிகுமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சசிகுமாருடன் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, பசுபதி, இந்தர் குமார், பால சரவணன், விதார்த், இயக்குநர் விக்ரம் சுகுமாரன், தவசி ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.கதிர், இசை – என்.ஆர்.ரகுநந்தன், படத் தொகுப்பு – வெங்கட்ராஜன், கலை இயக்கம் – சேகர், நடனம் – ராஜூ சுந்தரம், தினேஷ், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம் – முத்துராமலிங்கம், இணை தயாரிப்பு – அசோக்குமார், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – கம்பெனி புரொடெக்சன்ஸ், தயாரிப்பாளர் – சசிகுமார், எழுத்து, இயக்கம் – முத்தையா.

சசிகுமாரின் தங்கை சனுஷா, பசுபதியின் தங்கை பூர்ணா, விதார்த்தின் தங்கை மகிமா நம்பியார் என்ற இந்த மூன்று தங்கச்சிகளுக்கு, அவர்களது அண்ணன்கள் மேல் இருக்கும் பாசப் போராட்டம்தான் இந்தப் படத்தின் சுருக்கமான கதை.
விதார்த் அந்த ஊரின் ஆர்.டி.ஓ. நேர்மையானவர். இந்தர் குமாரின் மைனிங் தொழில் மற்றும் தீப்பெட்டித் தொழில்களெல்லாம் லைசென்ஸ் இல்லாமல் நடைபெற்று வருவதால் அதற்கு சீல் வைப்பது போன்ற வேலைகளையெல்லாம் செய்து வருகிறார்.
இதையடுத்து விதார்த் மீது கோபம் கொள்ளும் இந்தர் குமாரின் ஆட்கள் விதார்த்தை கொலை வெறியோடு துரத்துகிறார்கள். தப்பித்து ஓடும் விதார்த்தை தனது தங்கை சனுஷாவின் வார்த்தைக்காக காப்பாற்றுகிறார் சசிகுமார். இதனால் சசிகுமாருக்கும் இந்தர்குமார் அண்ட் கோ-வுக்கும் இடையில் மோதலும், பகையும் உருவாகிறது.
இதே நேரம் சனுஷா படிக்கும் கல்லூரியில் படித்து வரும் மகிமாவை பார்த்தவுடன் சசிகுமார் லவ்வுகிறார். இந்தக் காதலுக்கு சனுஷாவும் ஒத்து ஊதுகிறார். மகிமாவின் இன்னொரு அண்ணனான விக்ரம் சுகுமார் முரடனாக இருப்பதால் அவருடன் சசிகுமார் சண்டையிட இங்கேயும் ஒரு பகை உருவாகிறது.
சனுஷாவின் ஏற்பாட்டில் சனுஷா மகிமாவின் அண்ணன் விதார்த்தை திருமணம் செய்துகொள்ள.. மகிமா சசிகுமாரை திருமணம் செய்து கொள்வதாக ஏற்பாடாகிறது.
இந்த நேரத்தில் தனது தங்கை பூர்ணாவின் கணவரான இந்தர் குமாருக்காக ஒரு கொலையைச் செய்துவிட்டு ஆயுள் தண்டனை கைதியாக இருந்த பசுபதி, நன்னடத்தையின் பேரில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வருகிறார். வந்தவருக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் தங்கை பூர்ணா.
இந்த நேரத்தில் விதார்த் இந்தர்குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க இதைத் தடுக்கிறார் பசுபதி. பசுபதி விதார்த்தை கொலை செய்ய முயற்சிப்பதால் தனது தங்கை கணவருக்காக சசிகுமார் இடையில் நுழைந்து “என் தங்கையின் வாழ்க்கையில் குறுக்கே வந்தால் எவனா இருந்தாலும் வெட்டுவேன்…” என்று கர்ஜித்துவிட்டு வருகிறார்.
இந்தக் கோப தாபத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட.. இந்த மோதலில் இந்தர்குமார் மரணிக்கிறார். இதனால் வெகுண்டெழும் பூர்ணா “எனது கணவரை கொலை செய்த சசிகுமாரை கொலை செய்துவிட்டு வா….” என்று தனது அண்ணனுக்கு ஆணையிடுகிறார்..
சசிகுமார் மகிமாவை கல்யாணம் செய்து கொள்ளத் தயாராக.. இன்னொரு பக்கம் அவரை கொலை செய்ய பசுபதியும் தயாராகி நிற்க.. என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
சசிகுமாரின் நடிப்பு கேரியரில் இது ‘சுப்ரமணியபுரம் பாகம்-8’-வது திரைப்படமாகும்.
இயக்குநர் முத்தையாவின் கேரியரில் இது அவருடைய ஜாதிப் பற்றோடு வரும் நான்காவது படமாகும். முதல் படமான ‘குட்டிப் புலி’யில் அம்மா செண்டிமெண்ட்.. அடுத்து வந்த ‘கொம்பனில்’ மாமனார் செண்டிமெண்ட்.. அதற்கடுத்த ‘மருது’வில் பாட்டி செண்டிமெண்ட்.. இப்போதைய ‘கொடி வீரனில்’ தங்கச்சி செண்டிமெண்ட்.. இப்படி அனைத்திலுமே பெண்களை மையமாக வைத்தே கதையை எழுதியிருக்கிறார். ஆனால் நான்கு படங்களிலும் சாதிய பெருமையைப் பேச தவறவே இல்லை.
படத்தின் துவக்கக் காட்சியே பகீரென்கிறது. ஊருக்கு வெளியே இருக்கும் ஒற்றை மரத்தில் தூக்கி மாட்டித் தொங்குகிறார் கர்ப்பிணி பெண். அவள் கழுத்தில் கயிறு இறுக்கிய நேரம் அவள் வயிற்றில் இருந்து ஒரு பெண் குழந்தை பிறந்து தரையில் விழுந்து கதறுகிறது.
அப்பன் இரண்டாவது மனைவியைத் தேடிப் போன சோகத்தில் தனது அம்மா செய்த தற்கொலையால் விக்கித்துப் போகும் சிறுவன் சசிகுமார், தனது தங்கச்சியை கண்ணும், கருத்துமாய் வளர்த்தெடுக்கிறார். இதுதான் இவர்களது அதீத பாச உணர்வுக்குக் காரணமாம்.
அனைத்து படங்களை போலவே இதிலும் சசிகுமாரின் நடிப்பு ஒரே மாதிரிதான். சிரிப்பிலும் ஒன்று.. கோபத்திலும் ஒன்று.. காதலிப்பதிலும் ஒன்றுதான். வேட்டி, சட்டையுடன் டூயட்டுக்கு நடனமும் ஆடுவதும் இன்னொரு கொடுமை. அவரைப் போன்ற எளிய மனிதர்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லை. மாண்டேஜ் ஷாட்டுகளாகவே கொண்டு சென்றிருக்கலாம்..!
உண்மையில் படத்தில் நடித்திருப்பவர்கள் மூன்று தங்கைகள்தான். சனுஷா ஆரம்பத்தில் கையைக் கட்டிக் கொண்டு சாந்தமாக தனது அண்ணனின் வருகையை பன்ச் வசனங்கள் மூலமாகச் சொல்லும்போதே பிடித்துப் போகிறார். மகிமா தனது காதலைச் சொல்லி ச்சிகுமாரை வளைக்கும்போது மிகவும் பிடித்துப் போகிறார். பூர்ணா தனது மொட்டைத் தலையுடன் மிரட்டும் கண்களுடன் பசுபதியிடம் தனது கணவரின் கொலைக்கு நீதி கேட்கும்போது நடிப்பில் மிக, மிக பிடித்துப் போகிறார்.
இதில் ஆளாளுக்கு சசிகுமார் பற்றி பன்ச் டயலாக்குள் பேசி உயர்த்திவிடுவதும் இன்னொரு பக்கம் எரிச்சலாகிறது.
‘எங்கண்ணன் ஆடி பார்த்திருப்பே… அடிச்சுப் பார்த்ததில்லையே’, ‘தப்பு பண்ணா தடுக்க கண்ணன் வருவானோ இல்லையோ, எங்க அண்ணன் வரும்’ எனப் படம் முழுக்க சசிகுமார் புகழ் பாடும் பன்ச் வசனங்கள்தான் அதிகம்.
இப்படி தங்கை சனுஷா பேசுவதைக்கூட ஒத்துக்கலாம். ஆனால் எதிரிகளான பசுபதியும், இந்தர்குமாரும், விக்ரம் சுகுமாரனும்கூட பேசுவதுதான் ரொம்பவே ஓவராக இருக்கிறது.
சாதிய பெருமைகளை பேசிய அதே நேரம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் பழக்க வழக்கங்களை, சாமி கும்பிடுகளை, வீட்டு கல்யாண விசேஷக் காட்சிகளை அப்படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் முத்தையா.
இதெல்லாம் வரும் காலங்களில் அந்தச் சாதி பெருமையைச் சொல்லவே பயன்படும். தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு துளியும் பயன்படாது. அந்தக் குறிப்பிட்ட சாதி பற்றிய ஆவணப் படமாக வேண்டுமானால் சொல்லிவிடலாம்.
படம் நெடுகிலும் வெட்டுக் குத்து, கத்தி, அரிவாள் என்று ரத்தம் சிந்த வைப்பதால் படத்தில் ஒன்றவே முடியவில்லை. கதையோடு இல்லாமல் வெட்டிக் கொண்டு சாவதற்காகவே திரைக்கதை அமைத்திருப்பது போல் தோன்றுகிறது.
அதிலும் மூன்று தங்கைகளுமே கிளைமாக்ஸ் காட்சியில் “வெட்டிக்கிட்டு சாகுங்கடா” என்பது போல பேசும் வசனங்களை கேட்டால் “ஐயையோ” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆணாதிக்கத்திற்கு பெண்களின் பின்னணிக் குரல்தான் காரணமாக இருக்கிறது என்பதை இப்படி மறைமுகமாக சொல்கிறார் இயக்குநர். கொடுமையிலும் கொடுமை.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் ஊர் சுற்றுப்புறத்தின் காட்சிகளும், அந்தப் பகுதியின் வெக்கையும் ஒருங்கே படமாகியிருக்கிறது. பாடல் காட்சிகளின் லொகேஷனை தேடிப் பிடித்து காண்பித்திருப்பது இன்னொரு அழகு. ஏழை காத்த காளியம்மன் கோவிலின் திருவிழாவை அழகாகப் படமாக்கியிருக்கிறார் கதிர். அதேபோல் மீன் பிடி திருவிழா காட்சிகளையும் அழகாக படமாக்கிய இயக்குநர் இதன் காரண, காரியத்தையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.
என்.ஆர்.ரகுநந்தனின் காதைக் கிழித்தெடுத்த பின்னணி இசையை என்னவென்று சொல்வது..? பாடல்களிலும் ஜாதிய பெருமை, மற்றும் ஹீரோவின் துதி பாடலையும் தாண்டி டூயட்டுகள் மட்டுமே தியேட்டரில் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரேயொரு ஆறுதல்..!
இயக்குநர் முத்தையாவுக்கும், ஹீரோ சசிகுமாருக்கும் ஒரேயொரு வேண்டுகோள். தயவு செய்து உங்களுடைய சாதிய மனப்பான்மையில் இருந்து வெளியில் வாருங்கள். இங்கே எடுக்கப்பட வேண்டிய கதைகளும், சம்பவங்களும் நிறையவே இருக்கின்றன. அவைகளை படமாக்குங்கள். சாதிய நரகல்களை காட்சிப்படுத்தி தமிழ்ச் சினிமாவை மீண்டும், மீண்டும் இருட்டறைக்குள் தள்ளாதீர்கள்..!

0 comments: