சென்னை 2 சிங்கப்பூர் - சினிமா விமர்சனம்

18-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘சிங்கப்பூர் மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி’ துணையோடு, ‘காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
புதுமுகங்களான கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன், ஷிவ் கேஷவ், எம்சீ ஜெஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – செந்தில் ராகவன், தயாரிப்பு – ஜிப்ரான், எழுத்து, இயக்கம் – அப்பாஸ் அக்பர்.

திரைப்பட இயக்குநராக வேண்டும் என்கிற கனவில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை.
ஹீரோவான கோகுல் ஆனந்த் இயக்குநர் கனவில் இருக்கும் ஒரு இளைஞர். ஒரு தயாரிப்பாளரிடம் கடந்த ஆறு மாதங்களாக கதையைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார். அந்தத் தயாரிப்பாளரும், “நாளை வாருங்கள். கண்டிப்பாக அட்வான்ஸ் தொகை தருகிறேன்…” என்று சொல்லியிருக்கிறார்.
அவருடைய தாய் சுமித்ராவுடன் ஒரு ஒண்டு வீட்டில் வசிக்கும் கோகுல், வீட்டு வாடகையை நான்கு மாதங்களாக தரவில்லை என்பதால் வீட்டுக்காரர் வீட்டு வாசலுக்கே வந்து திட்டிவிட்டு போகிறார். எப்படியும் நாளை அட்வான்ஸ் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் அம்மாவை சமாதானப்படுத்துகிறார் கோகுல்.
மறுநாள் அந்த தயாரிப்பாளரின் அலுவலகத்தில் தயாரிப்பாளருக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில், கோகுல் சொன்ன அதே கதையில் வேறொரு இயக்குநரின் இயக்கத்தில் ஒரு புதிய படத்துக்கு இதே தயாரிப்பாளர் பூஜை போட்டிருக்கும் செய்தி கிடைக்கிறது.
இதனால் கோபப்படும் கோகுல் அந்தத் தயாரிப்பாளரை அடித்து உதைத்துவிட்டு விரக்தியுடன் வருகிறார். கோகுலின் நீண்ட நாள் நண்பர் கோகுலை சமாதானப்படுத்தி அவரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கிறார். “அங்கே ஒரு தயாரிப்பாளர் கதை கேட்கும் நிலையில் இருக்கிறார். அவரைப் பார்த்து கதை சொல்…” என்று பிளைட் டிக்கெட் போட்டு கோகுலை அனுப்பி வைக்கிறார்.
கோகுல் சிங்கப்பூர் வந்து சேரும் நேரத்தில் அந்தத் தயாரிப்பாளர் ஒரு சாலை விபத்தில் உயிரை விடுகிறார். அதே நேரம் கோகுல் தனது பாஸ்போர்ட்டையும் தொலைத்துவிடுகிறார். இதனால் விரக்தியின் எல்லைக்கே போய் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில்தான் லோக்கல் சேனல் ஒன்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் ‘வானம்பாடி’ என்னும் ராஜேஷை சந்திக்கிறார் கோகுல். கோகுலை பார்த்தவுடன் இம்ப்ரஸ்ஸாகும் ராஜேஷ், அவரை தன் வீட்டில் தங்க வைக்கிறார்.
தன்னுடைய சேனலின் உரிமையாளர் சினிமா தயாரிக்க தயாராக இருப்பதாகவும், அவருக்கேற்ற கதையைத் தயார் செய்து சொல்லும்படியும் அந்த்த் தயாரிப்பாளரிடத்தில் கோகுலை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைக்கிறார் ராஜேஷ்.
அந்த்த் தயாரிப்பாளரோ தானே ஹீரோவாகவும், தன்னுடைய சின்ன வீடாக இருக்கும் பெண்ணே ஹீரோயின் என்றும் சொல்ல.. கோகுல் வேண்டா வெறுப்பாக கதையை கதையைத் தயார் செய்வதாகச் சொல்லிவிட்டு வருகிறார்.
இந்த நேரத்தில் தன் நிலைமையை எண்ணி அவர் அழுகும் அதே இடத்தில், வேறொரு பகுதியில் ஹீரோயின் அஞ்சுவும் அழுது கொண்டிருக்கிறார். பார்த்தவுடன் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு அழகுடன் இருக்கும் அஞ்சுவின் அழுகையைப் பார்த்தவுடன் கோகுலுக்கு என்னவோ மாதிரியிருக்கிறது.
அவளை பின் தொடர்ந்து சென்று அவளைப் பற்றி தெரிந்து கொள்கிறார். அஞ்சுவுக்கு அம்மா இல்லை. அப்பா மட்டுமே. அவளை இப்போது புற்று நோய் பீடித்திருக்கிறது. அவள் இன்னும் எத்தனை நாட்கள் உயிருடன் இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது. இதுதான் நிலைமை.
ஆனாலும் அஞ்சுவை கோகுலுக்கு மிகவும் பிடித்துப் போக.. சினிமா பாணியிலேயே அவளிடம் பேசி அவளைக் கவர்ந்துவிடுகிறார் கோகுல். இடையில் திடீரென்று அஞ்சுவுக்கு மீண்டும் புற்று நோய் தாக்கிவிட.. மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்படுகிறாள் அஞ்சு. அவளது சிகிச்சைக்கு மேற்கொண்டு பணம் இல்லாமல் தவிக்கிறார் அவளது அப்பா. இதனால் ஏதாவது செய்து அஞ்சுவின் சிகிச்சையைத் தொடர வேண்டும் என்று கோகுலும் நினைக்கிறார்.
இதனால் தயாரிப்பாளரிடம் பணம் கேட்க நினைத்து.. கடைசியாக அவரை மிரட்டி ஐந்து கோடியை ரூபாயை அவரிடத்தில் கொள்ளையடிக்கிறார்கள் கோகுலும், ராஜேஷும், இதை வைத்து மருத்துவமனையில் பணத்தைக் கட்டிவிட்டு, அஞ்சுவின் சிகிச்சையை தொடர வைக்கிறார்கள் நண்பர்கள்.
ஆனால் பணத்தை இழந்த தயாரிப்பாளர் கோகுல் மற்றும் ராஜேஷை விரட்டுகிறார். இழந்த பணத்தை மீட்க ஒரு ரவுடி கும்பலை ஏவி இவர்களிடத்தில் இருந்து பணத்தை மீட்க நினைக்கிறார். அது முடிந்ததா..? இல்லையா..? என்பதுதான் மீதமுள்ள படத்தின் திரைக்கதை.
சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் படம் நெடுகிலும் நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கும் திரைப்படம் இதுதான். எதிர்பாராத புதிய அனுபவத்தை இத்திரைப்படம் கொடுக்கிறது.
நாயகன் கோகுல் ஆனந்த் புத்தம் புதுமுகமாகவே நடித்திருக்கிறார். சிங்கப்பூரில் தனியாளாக மாட்டிக் கொண்டு முழிப்பதும், ராஜேஷும் இவரும் சேர்ந்து செய்யும் நகைச்சுவை தர்பாரில் வெறுமனே ஆக்சனிலேயே பல சிரிப்புக்களை வரவழைத்திருக்கிறார் கோகுல்.
காதலிக்காக எதையும் செய்யும் தியாகத்துடன் ஜிம்மி ஜிப்பில் அமர்ந்தபடியே வீட்டு மாடியில் இருக்கும் நாயகியிடம் பேசும் காட்சியும், தன்னைத் தவறாக புரிந்து கொண்ட நாயகியிடம் உண்மை நிலையை எடுத்துரைக்க முடியாமல் தவிக்கும் காட்சியிலும் நம்மையும் கொஞ்சம் பதட்டமாக்கியிருக்கிறார்.
கோகுல் கோபப்படுவதில் சூரராக இருப்பார் போலிருக்கிறது. கோபக் காட்சிகளில் மட்டுமே அதிரி புதிரி நடிப்பைக் காண்பித்திருக்கிறார் கோகுல். முதலில் தயாரிப்பாளரை வெளுத்து வாங்குவது.. பின்பு ராஜேஷிடம் சண்டையிடுவது.. கடைசியாக வில்லன் கோஷ்டியினரிடம் சண்டையிடுவது என்று இந்தக் காட்சிகளில் உண்மைத்தனத்துடன் கோபத்தைக் கொட்டியிருக்கிறார் கோகுல். நல்வரவாகட்டும்..
இவருக்கு இணையாக ஆச்சரியமூட்டும் நகைச்சுவை நடிகராக கிடைத்திருக்கிறார் ராஜேஷ் பாலச்சந்திரன். சின்னச் சின்ன முகபாவனைகளிலும், டயலாக் டெலிவரியிலும் அசத்தலாக நகைச்சுவையை கொண்டு வந்திருக்கிறார். சிறந்த இயக்குநர்களின் கைகளில் கிடைத்தால் இவரும் தமிழ்ச் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.
ஹீரோயின் அஞ்சு குரியன். வழக்கம்போல மலையாள வரவு. அழகுடன் நடிப்பும் கொஞ்சம் வந்திருக்கிறது. மற்றும் வில்லன் நடிகரான எம்சி ஜெஸ் கிளைமாக்ஸில் சிரிப்பை தெறிக்க விட்டிருக்கிறார். இவரும், இவரது கும்பலும் நடத்தும் கடத்தல் நாடகமும், அதை முறியடிக்க கோகுலும், ராஜேஷும் செய்யும் சண்டை காட்சிகளும் அசத்தலாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் கடைசி 25 நிமிடங்கள் பரபர காட்சிகளுடன் நகரும் நகைச்சுவை தர்பார் என்றே சொல்லலாம்.
சிங்கப்பூரின் அழகை தனது ஒளிப்பதிவில் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து. இசையமைப்பாளர் ஜிப்ரான்தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் பாடல்களை பார்த்து, பார்த்து கொடுத்திருக்கிறார். ஆனாலும் ‘வாடி, வாடி’ பாடல் மட்டுமே கேட்க வைத்திருக்கிறது.
ஒரு திரைப்படத்தை இயக்கம் செய்வது என்கின்ற கனவுடன் வாழும் அனைத்து உதவி இயக்குநர்களும் ஒரு வெறியோடுதான் இருப்பார்கள். அந்த வெறி அணைந்து போகாமல் தடுக்கும் முனைப்பு அவர்களுக்குள் இருந்தால்தான் அவர்களால் தங்களது லட்சியத்தை அடைய முடியும்.
இதைத்தான் “கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் பயணப்படுங்கள். தொடருங்கள்.. முயற்சி செய்யுங்கள்…” என்று இந்தப் படத்தின் இயக்குநர் இந்தப் படம் மூலமாக நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.
சென்னை டூ சிங்கப்பூர் சென்றால் நிச்சயமாக மனம்விட்டு சிரித்துவிட்டு வரலாம்..!

0 comments: