உள்குத்து - சினிமா விமர்சனம்

29-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை P.K.Film Factory நிறுவனத்தின் சார்பில் ஜி.விட்டல்குமார் மற்றும் ஜி.சுபாஷினி தேவி இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் தினேஷ் நாயகனாகவும், நந்திதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் பால சரவணன், ஸ்ரீமன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன், செஃப் தாமோதரன், மிப்பு சாமி, கதிர், ஃப்ரின்ஸ், ஜெயவாணி மற்றும் மூணார் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், கலை இயக்கம் – விதேஷ், தயாரிப்பு – ஜி விட்டல்குமார், ஜி.சுபாஷினி தேவி, எழுத்து, இயக்கம் – கார்த்திக் ராஜூ.

கந்து வட்டி பிரச்சினை இப்போது தமிழகத்தில் தறிகெட்டு ஓடிக் கொண்டிருப்பதால் இந்த நேரத்திற்காக காத்திருந்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஏனெனில் இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு பின்புதான் இதற்கு விமோசனம் கிடைத்திருக்கிறது.
கன்னியாகுமரி அருகேயிருக்கும் முட்டம் என்கிற கடலோர ஊரைச் சுற்றி நடக்கிறது கதை.
‘சுறா சங்கர்’ என்னும் பால சரவணன் மீனவக் குப்பத்தைச் சேர்ந்தவர். தன்னுடன் இரண்டு நண்பர்களை சேர்த்துக் கொண்டு, மீன் மார்க்கெட்டில் மீன்களை வெட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்து வருகிறார்.
இவரிடத்தில் ஒரு நாள் ஊர், பேர் தெரியாத நிலையில் சிக்குகிறார் தினேஷ். தன்னுடைய பெயர் ராஜா என்றும் தான் எம்.பி.ஏ. படித்திருப்பதாகவும், தன்னுடைய தந்தை தன் தாய் இறந்தவுடன் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவும், அது பிடிக்காமல் தான் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் சொல்கிறார்.
தினேஷ் மீது பாவப்படும் பால சரவணன் அவரை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். பால சரவணனின் தங்கையான ‘கடலரசி’ என்னும் நந்திதா துணிக்கடையி்ல் வேலை பார்த்து வருகிறார். வேண்டாவெறுப்பாக தினேஷை அவர்களது வீட்டிலேயே தங்க ஒப்புக் கொள்கிறார் நந்திதா.
தான் வேலை செய்யும் அதே மீன் மார்க்கெட்டில் தனது வேலையை தினேஷுக்கு சொல்லிக் கொடுத்து அவரையும் வேலையாள் ஆக்குகிறார் பால சரவணன்.
திடீரென்று ஒரு நாள் பக்கத்து குப்பத்தில் பெரிய ரவுடியாகவும், படகு செய்யும் தொழிலதிபராகவும் இருக்கும் ‘காக்கா முட்டை’ என்னும் சரத் லோகிதஸ்வாவின் அடியாள் பால சரவணனை கடற்கரையில் வைத்து அடித்துவிடுகிறார். நண்பனுக்காக இடையில் புகும் தினேஷ் அந்த அடியாளை அடித்துத் துவைத்து அனுப்பி விடுகிறார்.
இதனால் கோபமடையும் ஷரத்தின் மகனான சரவணன் தனது அடியாள் படையுடன் வந்து தினேஷை தாக்க.. தினேஷ் பதிலுக்குத் தாக்கி சரவணனை அடித்து, அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.
இப்போது குப்பத்தில் தினேஷுக்கும், பால சரவணனுக்கும் மவுசு கூடுகிறது. தனது தங்கை நந்திதாவை தினேஷுக்கு கல்யாணம் செய்து கொடுக்க சம்மதம் சொல்கிறார் பால சரவணன். ஏற்கெனவே காதல் வயப்பட்டிருந்த காதலர்கள் 
இருவரும் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்.
தொடர்ந்து குப்பத்தில் நடக்கும் படகு போட்டியில் கடைசி நிமிடத்தில் போட்டியை விட்டுக் கொடுத்து ஷரத்தின் மகனான சரவணனை ஜெயிக்க வைக்கிறார் தினேஷ்.
இதையறியும் ஷரத் தினேஷை நேரில் வரவழைத்து மிரட்டுகிறார். ஆனால் தினேஷோ கபடி விளையாடுவது போல் விளையாடி ஷரத்தையே அடித்து வீழ்த்திவிடுகிறார்.
இதை அவமானமாக எடுத்துக் கொள்ளாமல் தினேஷை தன்னுடன் சேர்த்துக் கொண்டால், தனக்கு பலம் கிடைக்கும் என்று நினைத்து தினேஷை தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார் ஷரத்.
தினேஷை கல்யாணம் செய்யும் கனவில் இருக்கும் நந்திதாவின் கண்ணில்படும்படியாக ஒரு ரவுடித்தனத்தை செய்கிறார் தினேஷ். இதனால் நந்திதா தினேஷை தன்னை மறந்துவிடும்படியும், உடனே வீட்டைவிட்டு போகும்படியும் சொல்கிறார்.
தினேஷ் இப்போதுதான் தனது உண்மைக் கதையைச் சொல்கிறார். தான் ஷரத் லோகிதஸ்வாவையும், சரவணனையும் பழி வாங்குவதற்காகவே இந்தக் குப்பத்துக்கு வந்திருப்பதாகவும் சொல்லி தன்னுடைய உண்மையான பூர்வாசிரம கதையைச் சொல்கிறார்.
அந்தக் கதை என்ன.. அவர் எதற்கு ஷரத்தையும், அவரது மகன் சரவணனையையும் கொலை செய்ய முயல வேண்டும் என்பதுதான் இடைவேளைக்கு பின்னான சஸ்பென்ஸ் திரைக்கதை.
தினேஷை இதில் கமர்ஷியல் ஹீரோவாக்க முடிவு செய்திருக்கிறார்கள் போலும். அடிதடி, வெட்டுக் குத்து, சண்டை என்று அனல் பறக்கிறது படம்.  வழமையான தமிழ்ச் சினிமாவின் அதே டெம்ப்ளேட் திரைக்கதையில்தான் இந்தப் படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றாலும், அழுத்தமான இயக்கத்தினால் கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார்கள்.
ஹீரோ தினேஷைவிடவும், ஹீரோயின் நந்திதாவைவிடவும் படத்தில் அதிகம் நடித்திருப்பவர்கள் ஷரத் லோகிதஸ்வாவும், அவரது மகன் சரவணனாக நடித்திருக்கும் திலீப் சுப்பராயனும்தான். இவருக்கு அடுத்து அதிகமாக வசனங்களை பேசியிருப்பது பால சரவணன். இவர்களுக்கு பின்புதான் ஹீரோயினும், ஹீரோயினும் வருகிறார்கள்.
ஷரத் லோகிதஸ்வா இந்தப் படத்தில்தான் அதிகக் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று உறுதியாய் சொல்லலாம். அவமானம், கோபம், பொறாமை, மகன் மீதான பாசம்.. என்று காட்சிக்கு காட்சி தனது முரட்டுத்தனமான நடிப்பை முகத்தில் காட்டியிருக்கிறார். இதேபோல் வஞ்சகமில்லாத நட்போடு தினேஷை அரவணைக்கும் போதும், அவரிடத்தில் பாசத்தோடு பேசும்போதும் ஒரு படி மேலேதான் போயிருக்கிறார். வெல்டன் ஸார்..
கோபக்கார இளைஞனாக.. தன்னை ‘சரவணன்’ என்று பெயர் சொல்லி அழைப்பதையே கவுரவக் குறைச்சலாக நினைக்கும் குட்டி ரவுடி இளவரசனாக நடித்திருக்கும் திலீப் சுப்பராயனுக்கு இத்திரைப்படம் மிகப் பெரிய திருப்பு முனை. ஜான் விஜய்யை போட்டுத் தள்ளிவிட்டு ஆற்றாமையால் கொந்தளிக்கும் காட்சியில் ரவுடித்தனத்தின் வெறியைக் காட்டியிருக்கிறார் திலீப்.
படத்தில் சுவையான, சுவாரஸ்யமான போர்ஷன் ஜான் விஜய் மற்றும் சாயா சிங்கின் கதைதான். அதிலும் ஜான் விஜய் சாயாவை கொஞ்சம் காட்சிகளும், அதற்காக அவர் செய்யும் கில்மாக்களும் ஒரு அழகான காதல் ஜோடியை நினைக்க வைத்திருக்கிறது.
பதற்றத்துடன் ஜான் விஜய் செய்யும் அந்த ஒரு செயல் அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடுவதும், அதன் பின்னர் நடப்பதும் மிக கனமான திரைக்கதை. ஆனால் இதை தினேஷ் என்னும் குருவியின் தலையில் பனங்காயை வைத்தது போல வைத்துவிட்டார்கள் என்பதுதான் சோகமான விஷயம்.
நந்திதா அழகாக இருக்கிறார். கொடுத்த வாய்ப்பில் நன்கு நடித்திருக்கிறார். ஹோம்லியான கேரக்டர். அதிகம் வேலையில்லை என்பதால் இவ்வளவுதான் சொல்ல முடியும்.
பால சரவணன் படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் நான் ஸ்டாப்பாக பேசிக் கொண்டேயிருக்கிறார். ‘சுறா சங்கர்ன்னா சும்மாவா’ என்ற அவரது டயலாக் இனிமேல் மீடியாக்களில் ரொம்பவே பேமஸாகும். அவ்வளவு வெத்து அலப்பறை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டு பின்பு புலம்பும்போதும் சிரிக்கவும் வைத்திருக்கிறார்.
செஃப் தாமோதரன், ஜெயவாணி என்று குறிப்பிட்டுச் சொல்லும் நடிகர்களும் இருக்கிறார்கள். அதிலும் ஜெயவாணி தனது மகனை கொலை செய்தவனை கொன்றுவிட்டு வா என்று சொல்லி அக்மார்க் தமிழ்ச் சினிமாவின் அம்மாவாகவே காட்சியளிக்கிறார்.
கடற்கரையோர பிரதேசத்திலேயே முழு படத்தையும் எடுத்திருப்பதால் ஒளிப்பதிவாளருக்கு அதிகம் வேலை வைக்காமல் படத்தை உருவாக்கியருக்கிறார் இயக்குநர். கடற்கரை பிரதேசங்களை அவ்வப்போது அழகாக காட்டியிருப்பதோடு தனது பங்களிப்பை முடித்துக் கொண்டார் ஒளிப்பதிவாளர்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் இரண்டு பாடல்கள் திரையில் ஒலித்தன. அதையும் பிட்டு பிட்டாய் ஓட்டியது ஏன் என்று தெரியவில்லை. படம் இருந்த சீரியஸுக்கு இன்னும் இரண்டு பாடல்கள் இருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். இந்தளவுக்கு கொஞ்சமும் ரிலாக்ஸே இல்லாமல் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
கந்து வட்டிக் கொடுமையைக் காட்டும்படியாக, பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பம் காலையி்ல் இருந்து மாலைவரையிலும் மகளை அடமானம் வைத்துவிட்டு அல்லல்படும் காட்சி ஈரமான பதிவு.
கபடி விளையாடியபடியே தனது தலைவன் என்னும் கெத்தைக் காட்டும் ஷரத்தின் செயல் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. அதிலும் இரண்டு முறை வரும் கபடி காட்சிகளின் நீளமும் அதிகம். குறைத்திருக்கலாம்.
எதற்காக தினேஷ் இப்படி நாடகமாடுகிறார் என்பதற்கான பிளாஷ்பேக் கதை இடைவேளைக்கு பின்புதான் வருகிறது என்றாலும், அதை செய்வதற்கான வழிகளை லாஜிக் மீறல்களோடு அமைத்திருப்பதால் மனதில் ஒட்டவில்லை.
ஜான் விஜய்யின் மரணத்தைப் பார்த்துவிட்டு ஒரு நிமிடத்தில் ஷ்ரிமன் மனம் மாறுவதும், ஷரத்தை கொல்ல அவர் திட்டம் போட்டுத் தருவதும், தினேஷ் அதைச் செயல்படுத்துவதுமாக கதையை நகர்த்தியிருப்பது சரியான டிவிஸ்ட்டுதான் என்றாலும் காட்சி வடிவில் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.
இப்படி பல குறைகளுடன் இருக்கும் திரைக்கதையில், இன்னும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தால் படம் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.

0 comments: