சத்யா - சினிமா விமர்சனம்

11-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நாதாம்பாள் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜின் மனைவியான மகேஸ்வரி சத்யராஜ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சிபிராஜ் ஹீரோவாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும்,  வரலட்சுமி, ஆனந்த்ராஜ், சதீஷ், யோகி பாபு, ‘நிழல்கள்’ ரவி, பாலாஜி வேணுகோபால், ரவி வர்மா, வினோதினி வைத்தியநாதன், பேபி ஷெரின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ‘சைத்தான்’ படத்தின் இயக்குநரான பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
இசை – சைமன் கே.கிங், ஒளிப்பதிவு – அருண்மணி பழனி, பாடல்கள் – மதன் கார்க்கி, ரோகேஷ், படத் தொகுப்பு – கெளதம் ரவிச்சந்திரன், வசனம் – சி.எஸ்.கார்த்திக் கிருஷ்ணா, கலை இயக்கம் – ஏபிஆர், சண்டை பயிற்சி – பில்லா ஜெகன், உடை வடிவமைப்பு – கீர்த்திவாசன், உடைகள் – வி.ராதாகிருஷ்ணன், கிராபிக்ஸ், கலர் – வொயிட் லோட்டஸ், சிறப்பு சப்தம் – சி.சேது, பைனல் மிக்ஸிங் – டி.உதயகுமார், ஸ்டில்ஸ் – ஈ.ராஜேந்திரன், போஸ்டர் டிஸைனர் – டிஸைன் பாயிண்ட், இணை தயாரிப்பாளர் – எம்.எல்.நல்லமுத்து, தயாரிப்பு நிர்வாகம் – கே.எஸ்.மயில்வாகனன், தயாரிப்பு மேலாளர் – எம்.மணிகண்டன், தயாரிப்பு – நாதாம்பாள் பிலிம் பேக்டரி, தயாரிப்பாளர் – மகேஸ்வரி சத்யராஜ்.

சென்ற ஆண்டு தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘க்ஷணம்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘சத்யா’ திரைப்படம்.
தமிழுக்கு நிச்சயமாக இது புதுமையான கதைதான்.
சத்யா என்னும் சிபிராஜ் இப்போது ஆஸ்திரேலியாவில் மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வருகிறார். சென்னையில் இருக்கும் அவருடைய பழைய காதலியான ஸ்வேதா என்னும் ரம்யா நம்பீசன் ஒரு நாள் சத்யாவை திடீரென்று போனில் அழைக்கிறார்.
தான் ஒரு ஆபத்தில் சிக்கியிருப்பதாகவும், தனக்கு ஒரு உதவி தேவையாய் இருக்கிறது என்றும் சொல்லி தன்னைக் காப்பாற்ற வரும்படி சத்யாவை அழைக்கிறார். அழைத்தவர் முன்னாள் காதலி, என்பதால் சிபியும் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு ஓடோடி வருகிறார்.
ஸ்வேதாவுக்கு இப்போது கெளதமுடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அந்தப் பெண் குழந்தையான ரியாவை அவளுடைய பள்ளி வாசலிலேயே தன்னை அடித்து தூக்கிப் போட்டுவிட்டு காருடன் கடத்திச் சென்றுவிட்டதாகச் சொல்கிறாள் ஸ்வேதா. போலீஸ், தனது கணவர், குடும்பம் என்று பலரிடமும் சொல்லியும் யாரும் இதனை நம்ப மறுப்பதாகவும் சொல்லி அழுகிறாள் ஸ்வேதா.
சிபி இதன் உண்மைத் தன்மையை அறிய பலரிடமும் பேச முற்பட.. அனைவருமே ஸ்வேதாவுக்கு பெண் குழந்தையே இல்லை என்று சாதிக்கிறார்கள். அந்தச் சம்பவம் நடந்தபோது ஸ்வேதா ஒரு விபத்தில் சிக்கி கோமாவில் ஆழ்ந்திருந்ததாகவும், கண் விழித்த பின்பு இப்படி தனக்கு ஒரு குழந்தை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தொடர்ச்சியாக புகார் செய்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
சிபியும் ஒரு கட்டத்தில் ஸ்வேதாவை நம்பாமல் இருக்கும் நேரத்தில், தொடர்ச்சியான சில சம்பவங்கள் சிபியை இந்த விஷயத்துக்குள் இழுத்து விடுகிறது. அவற்றை நூல் பிடித்துப் போகும் சிபிக்கு உண்மைச் சம்பவங்கள் ஒன்றொன்றாய் தெரிய வர.. உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து பேரதிர்ச்சி ஆகிறார். அவர் மட்டுமல்ல படம் பார்க்கும் ரசிகர்களும்தான்.
சாதாரணமான நடிகர்களை வைத்து தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி முதலுக்கு மேல் 10 மடங்கு பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருந்தது. புதுமையான கதை.. அதைவிட புதுமையான திரைக்கதை.. அழுத்தமான நடிப்பு, அற்புதமான இயக்கம் என்று அந்த தெலுங்கு படம் காட்டிய பிரமிப்பை அப்படியே இதில் கொண்டு வர முடியவில்லையென்றாலும், கடைசிவரையிலும் படத்தை திகைப்போடு பார்க்க வைத்திருக்கிறார்கள்.
‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய சிறப்பான இயக்கத்தினால் படத்தை தொய்வடையாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.
சிபிராஜ் தனக்கு நடிப்பு வராது என்பதை படத்திலேயே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் அனைவரின் நடிப்பும் ஒன்று போலவே வராது என்பதால் அவரால் முடிந்ததை.. அவருக்குள் இருப்பதை.. அந்தக் கேரக்டரான ‘சத்யா’வின் நிஜமான நடிப்பை கச்சிதமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட்டுக்கு போன் செய்து ஸ்வேதாவுடன் முதல்முறையாக சண்டையிட்டு பேசும் முதல் காட்சியிலேயே இந்தக் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சிபிராஜ். இதைத் தொடர்ந்து ‘நிழல்கள்’ ரவியுடன் அவர் பேசும் பேச்சும், ரம்யாவுடனான காதல் பேச்சுக்களும் ஓகே ரகம் என்றாலும், இன்னும் கொஞ்சம் அவருடைய அப்பாவின் தெனாவெட்டையும் சேர்த்துக் கொண்டிருந்தால், நன்றாகவே இருந்திருக்கும்.
பதற்றம், இயலாமை, கோபம், படபடப்பு, துடிப்பு என்று பல்வேறு குணாதிசயங்களையும் அடுத்தடுத்த காட்சிகளில் சரியான விதத்தில் காண்பித்திருக்கிறார் சிபிராஜ். இயல்பாகவே நடிப்பு வரவில்லை என்று சொல்வது வேறு. கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் காட்டுவது வேறு. இதில் சிபி தனக்குத் தெரிந்த இரண்டாவதை சரியாகவே செய்திருக்கிறார்.
படம் முழுவதும் ஸ்வேதாவாகவே வியாபித்திருக்கிறார் ரம்யா நம்பீசன். அவருடைய குளோஸப் காட்சிகள்தான் படத்தை  பெரும்பாலான காட்சிகளில் ஈர்க்கின்றன. குழந்தையைக் காணாமல் அவர் தவிக்கும் தவிப்பும், ‘என்னை யாராவது நம்புங்களேன்’ என்கிற அந்த பரிதவிப்பான நடிப்பையும் சரியாகவே காட்டியிருக்கிறார் ரம்யா. அவருடைய பரிதாபமான முடிவு சோகத்தைக் கொஞ்சம் கூட்டியிருக்கிறது.
வில்லியா, நல்லவரா என்றே தெரியாதவண்ணம் வரலட்சுமியின் கேரக்டரை கொண்டு சென்று, கடைசியாக அவரது செயலை விளக்குவதற்கும் அவர் தரப்பில் ஒரு நியாயம் இருப்பதையும் சொல்லியிருப்பது  எழுத்தாளரின் எழுத்துத் திறமையைக் காட்டுகிறது.
வரலட்சுமியின் சில, பல காட்சி கோணங்கள் இந்தப் படத்திற்கு இதெல்லாம் எதற்கு என்று யோசிக்கவும் வைக்கிறது. இறுதியில் அவர் பேசும் வசனங்களும் அவர் படித்த ஐ.பி.எஸ். படிப்புக்கு ஏற்றதல்ல என்றாலும் குழந்தை பற்றிய பிரச்சினை என்பதால் மனதை உறுத்தாமல் போகிறது.
ஆனந்த்ராஜ் சிரிப்பு போலீஸாக வந்தாலும் வித்தியாசமான போலீஸாக உதார் காட்டியிருக்கிறார். விசாரணையின்போது இவரும் ‘நாயுடு’ என்னும் போலீஸ் கான்ஸ்டபிளும் காட்டும் பாசம் சிரிப்பலையை கிளப்புகிறது.
யோகி பாபு படத்தின் துவக்கத்தில் சில காட்சிகளில் நகைச்சுவையோடு படத்தைத் துவக்க உதவியிருக்கிறார். இதேபோல் சதீஷும் சில காட்சிகளில் படத்தை நகர்த்துவதற்கு இயக்குநருக்கு உதவி செய்திருக்கிறார். நன்று..!
அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு தரமானது. பாடல் காட்சிகளில் மாண்டேஜ் ஷாட்டுகளில் காதலர்களை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். படத் தொகுப்பாளர் சண்டை காட்சிகளை மிக அழகாக கத்திரி போட்டு படத்தின் டென்ஷனை கூட்ட உதவியிருக்கிறார்.
சைமன் கிங்கின் இசையில் ‘யவன்னா’ பாடல் ஏற்கெனவே ஹிட்டடித்துவிட்டது. பாடல் காட்சிகளையும் ரசனையோடு படமாக்கியிருப்பதால் பாடலுடன், காட்சிகளையும் ரசிக்க முடிந்திருக்கிறது. இதேபோல் ‘சங்கு’ என்கிற தீம் பாடல் அந்த நேரத்து டென்ஷனை ஏற்றி ரசிகர்களை படத்துக்குள் ஆழ்த்துகிறது. 
ஒரு போலீஸ் அதிகாரி.. அதிலும் பெண் போலீஸ் அதிகாரி இப்படியெல்லாம் இருப்பாரா என்றெல்லாம் யோசித்தால் கதை நமக்குப் பிடிக்காதுதான். ஆனால் அவருக்கும் ஒரு சோகம் இருக்கிறதல்லவா. அதுவே அவரை சட்டத்தை மீறச் செய்திருக்கிறது என்பதாக நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
தந்தையானவன் இதற்கு ஒப்புக் கொள்வதற்கான காரணமும், ஸ்வேதா, குறிப்பாக சிபியிடம் இது குறித்து பேசி அவனை வரவழைத்ததற்குமான தொடர்பை குறிக்கும் கடைசி காட்சிதான் படத்தின் உயிர் நாடி. இதுவே படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்க வேண்டிய காட்சியமைப்பு. அப்படித்தான் படமாக்கியிருக்கிறார்கள்.
சிபிராஜ் தனக்கான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தக் கதையை அவர் தேர்வு செய்தது நூற்றுக்கு நூறு சரி. இதேபோல் கதை தேர்விலும், இயக்குநர் தேர்விலும் கவனமாகச் செயல்பட்டு செய்தால் ஏதாவது ஒரு ஹிட் நிச்சயமாக கிடைக்கும். அது சிபிராஜுக்கு பிரேக்கிங் பாயிண்ட்டாகவும் இருக்கலாம். தொடரட்டும் அவரது தேடல்..!
சத்யா – ‘சஸ்பென்ஸ், திரில்லர் படம்’ என்கிற வார்த்தைக்கு உதாரணப் படமாகியிருக்கிறது. மிஸ் பண்ணிராதீங்க..!

0 comments: