திருட்டுப் பயலே-2 - சினிமா விமர்சனம்

02-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2006-ம் ஆண்டு A.G.S. Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளரான கல்பாத்தி எஸ். அகோரத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுசி கணேசனின் இயக்கத்தில், வெளிவந்து வெற்றி பெற்ற படமான ‘திருட்டுப் பயலே’ படத்தின் 2-ம் பாகத்தை சரியாக பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், ‘பைவ் ஸ்டார்’ படத்தில் சுசி கணேசனால் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள்.  அமலா பால் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
மேலும் பிரதீப் கே.விஜயன், ‘வழக்கு எண்’ முத்துராமன், எம்.எஸ்.பாஸ்கர், சுசி கணேசன், நாயனா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – செல்லத்துரை, கலை இயக்கம் – ஆர்.கே.நாகுராஜ், படத் தொகுப்பு – ராஜா முகமது, இசை – வித்யாசாகர், மக்கள் தொடர்பு – நிகில், முகமது, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம், தயாரிப்பு – கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ். இயக்கம் – சுசி கணேசன்.

பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த ‘திருட்டுப் பயல்’களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கூடுகிறதே தவிர, குறைகிற வழியைக் காணோம். சாதாரணமாக சுற்றித் திரிந்த ‘திருட்டுப் பயல்’களெல்லாம் இப்போது தொழில் நுட்ப திருடர்களாக பதவி உயர்வு பெற்று, அவர்கள் செய்த சிறு சிறு குற்றங்களெல்லாம்… இப்போது பெரிய, பெரிய, தொழில் நுட்ப குற்றங்களாக வளர்ந்திருக்கும் நேரத்தில், தற்போதைய சமூக சூழலை இந்த இரண்டாம் பாகம் அட்சரசுத்தமாக பிரதிபலிக்கிறது.
செல்லம் என்னும் பாபி சிம்ஹா காவல்துறையின் உளவுத் துறையில் இன்ஸ்பெக்டராக பணி புரிகிறார். ஆட்சி மேலிடத்தின் உத்தரவுப்படி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஒரு சில அரசியல்வாதிகளின் டெலிபோன்களை ஒட்டுக் கேட்கும் உத்தரவு மாநில அரசின் உள்துறையிடமிருந்து உளவுத் துறைக்கு வருகிறது.
உளவுத் துறை ஐ.ஜி.யான முத்துராமன், இந்த உளவு கேட்கும் வேலையை இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் ஒப்படைக்கிறார்.
செல்வம் டிபார்ட்மெண்ட்டில் சேர்ந்த புதிதில், நீதி, நியாயம், நேர்மையெல்லாம் பேசியவர்தான். இப்படி பேசிய காரணங்களுக்காகவே வருடத்திற்கு குறைந்தபட்சம் ஆறு இடங்களுக்கு பந்தாடப்பட்டவர். ஒரு நிலைமைக்கு மேல் இனிமேல் நேர்மையாளனாக இருந்தால் பொழைக்க முடியாது என்பதை உணர்ந்து, தற்போது வழக்கமான ஊழல் போலீஸ்காரனாக இருக்கிறார். அதிலும் ஹானஸ்ட் ஊழல்வாதியாக வாழ்கிறார்.
காரைக்குடியில் வேலை பார்த்தபோது கீழ் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த அமலா பாலை பார்த்தவுடன் காதலாகி ஏழு வருட காதலுக்குப் பின்னர் கல்யாணம் செய்திருக்கிறார். இப்போது அரசு காவலர் குடியிருப்பில் ஒரு சின்ன வீட்டில் தனது அம்மா, அப்பா, மனைவியுடன் ஒண்டுக்குடித்தனம் போல வாழ்ந்து வருகிறார்.
ஐ.ஜி. சொன்னதுபோலவே அமைச்சரின் போனை ஒட்டுக் கேட்கும் வேலையைச் செய்கிறார் பாபி. அமைச்சர் 10 கோடி ரூபாயை லஞ்சமாக வாங்குவது போன் மூலமாக பாபிக்கு தெரிகிறது. இது பற்றி தனது மேலதிகாரிகளுக்குத் தகவல் சொல்லாமல், இடையில் நுழையும் பாபி, தனது ஆட்களை வைத்து லஞ்சப் பணம் இருக்கும் காரை லவட்டிக் கொண்டு வந்து அந்த பத்து கோடியையும் அபேஸ் செய்கிறார்.
தொடர்ந்து அதே அமைச்சர் சில எம்.எல்.ஏ.க்களுடன் கூடி பேசுவதையும், ஆட்சிக்கு எதிரான மன நிலையில் இருப்பதையும் சுட்டிக் காட்டி மேலிடத்திற்கு ரிப்போர்ட் செய்கிறார் பாபி. இதனால் அந்த அமைச்சர் எம்.எஸ்.பாஸ்கர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.
தனது மனைவியின் பிறந்த நாளில் தனது போலீஸ்கார நண்பர்களை சந்தித்து பேசும் பாபி, குடிபோதையில் தான் போனை ஒட்டுக் கேட்கும் உளவு வேலையை பார்ப்பதாக ஒத்துக் கொள்கிறார். அதே குடிகாரப் பேச்சில் அடுத்தவர்களின் போனை ஒட்டுக் கேட்டால் பலவித அசிங்கங்கள் வெளிவரும் என்பதை அனைவருமே எடுத்துச் சொல்ல.. இது பாபியின் மனதில் ஆழமாகப் பதிகிறது.
ஒரு சாம்பிளுக்கு கேட்டுப் பார்ப்போமே என்பதற்காக தனது நண்பர்கள் சிலரது போன்களை ஒட்டுக் கேட்கத் துவங்க அது அவரது வீட்டிலேயே வில்லங்கத்தைத் துவக்குகிறது. அமலா பால் யாரோ ஒரு ஆணுடன் ஹிஸ்கி வாய்ஸில் பேசுவது தெரிய வர அதிர்ச்சியாகிறார் பாபி.
உடனேயே அமலா பால் பேசும் அந்த ஆணை அடையாளம் காண்கிறார். அது பிரசன்னா. தனது சொந்த அப்பாவையே வீட்டைவிட்டு வெளியில் அனுப்பிவிட்டு, மிகப் பெரிய வீட்டில் பணக்கார தோரணையுடன் மைனர் போல  வாழ்க்கை வாழ்கிறார் பிரசன்னா.
அவருடைய பார்வையே முகநூலில் இருக்கும் பெண்கள்தான். முதலில் அந்தப் பெண்களின் பக்கங்களுக்குப் போய் நோட்டமிட்டு அவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் அவர்களுடன் பேசி, பழகி கடைசியாக அவர்களை தனது படுக்கைக்கு அழைத்து வருவது பிரசன்னாவின் ஹாபி.
இந்தப் பிரச்சினையில் யூஸ் அண்ட் த்ரோவாக பிரசன்னா செயல்பட்டுவருவதால் அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அவர் கண் எதிரிலேயே முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் பிரசன்னா இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்.
இந்த நேரத்தில்தான் அமலாபாலின் வாழ்க்கையில் நுழையும் பிரசன்னா, அமலா பாலையும் மடக்க நினைக்கிறார். அமலா பாலோ முதலில் நட்புடன் பழகியவர் பின்பு எல்லை மீறுகிறாரே என்ற எண்ணத்தில் பிரசன்னாவைத் தவிர்க்கிறார். ஆனால் பிரசன்னா, அமலா பாலின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு பிளாக் மெயில் செய்கிறார்.
போனை ஒட்டுக் கேட்பதன் மூலமாக இதனையறியும் பாபி சிம்ஹா, பிரசன்னாவை ஆள் வைத்து அடித்து எச்சரிக்கிறார். இதனால் கோபமடையும் பிரசன்னா, பாபி அமைச்சரிடம் அடித்த 10 கோடி ரூபாய் டீடெயில்கள் அனைத்தையும் அமலா பால் பயன்படுத்தும் லேப்டாப்பில் இருந்து உருவி அதை வைத்து பாபியையும் மிரட்டுகிறார்.
இப்போது பாபியும் பிரசன்னாவுக்கு பயப்பட வேண்டியதாகிறது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தன் வேலை போய், தானும் ஜெயிலுக்கு போக வேண்டி வரும் என்று பயப்படுகிறார் பாபி. இதைப் பயன்படுத்தி அமலா பாலை தன்வசப்படுத்திவிட நினைக்கிறார் பிரசன்னா.. அமலா பாலோ இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படியாவது தப்பித்துவிட நினைக்கிறார். இந்த முக்கோண பரிதவிப்பு எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் சுவையான திரைக்கதை.
முதல் பாகத்தை போல, படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் ஏதோ ஒருவித திருட்டுத்தனத்தின் சாயல் படர்ந்திருப்பது இதிலும் தொடர்கிறது.
பாபி சிம்ஹாவின் திருட்டுத்தனம், அமலா பாலின் அடுத்த ஆடவனிடம் சிக்கிக் கொண்ட பாவம், பாபி சிம்ஹாவின் அம்மாவிடம் உண்மையைச் சொல்ல முடியாத தவிப்பு, அமைச்சரோ பணத்தைத் தொலைத்துவிட்ட குற்றவுணர்வு, ஐ.ஜி.க்கோ இதில் சிக்கல் வராமல் தான் டி.ஜி.பி.யாகிவிட வேண்டுமே என்கிற குற்றவுணர்வு, பிரசன்னாவுக்கோ செய்கின்ற திருட்டுச் செயல்களிலெல்லாம் வெற்றி பெற வேண்டும் என்கிற குற்றவுணர்வு, பாபி சிம்ஹாவின் பினாமியாக நடித்தவருக்கோ பினாமியாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் குற்றவுணர்வு, தனியார் டிடெக்டிவ் ஏஜெண்ட்டாக வரும் இயக்குநர் சுசி கணேசனுக்கோ புகார் கொடுத்தவர் மீதே சந்தேகப்பட்டு விசாரிக்கும் குற்றவுணர்வு.. இப்படி படத்தில் இடம் பெற்ற அத்தனை கேரக்டர்களுக்குள்ளும் ஒருவித குற்றவுணர்ச்சி இருப்பது போன்று திரைக்கதை அமைத்து ஒட்டு மொத்த படத்தையும் கடைசிவரையிலும் டென்ஷனாகவே பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுசி கணேசன்.
செல்வம் என்கிற உளவுத் துறையின் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் பாபி சிம்ஹாவுக்கு இந்த வேடம் கச்சிதமாக பொருந்துகிறது. காதலனாக அமலா பாலிடம் பேசும்போதும், கல்யாணத்திற்கு பின்பு காதலில் உருகும்போதும் சரசாரி கணவரை போலவே நடித்திருக்கிறார்.
திருட்டுத்தனத்துக்குள் ஒரு திருட்டுத்தனம் என்பதை போல போனை ஒட்டுக் கேட்டு அதன் மூலமாகவே கோடிகளை திருடிவிட்டு, அதன் மூலம் சொகுசு வாழ்க்கைக்கு அடிக்கல் நாட்டும் அசால்ட்டு சீனி கேரக்டரில் இன்னொரு பக்கம் வாழ்ந்திருக்கிறார். ‘ஐ ஆம் ஹானஸ்ட் கரப்ட் காப்’ என்று அடிக்கடி அவர் உச்சரிக்கும்விதமே தனி ஸ்டைலாக இருக்கிறது.
அமலா பால், பிரசன்னா விவகாரத்தைத் தொடர்ந்து இதனால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு பெரும் பிரச்சினைக்குள்ளாவதும், இதன் தொடர்ச்சியான திரைக்கதைகளில் இவர் படும்பாடும், எந்தவொரு கணவனுக்கும் இந்த நிலைமை வரக் கூடாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
கடைசிவரையிலும் அமலா பால் பாபியிடம் பிரசன்னா பற்றி ஏதும் சொல்லாததும், எல்லாம் தனக்குத் தெரியும் என்பது அமலா பாலுக்குத் தெரியாமலேயே இருக்கட்டும் என்பது போல மனைவியை நேசிக்கும் கணவனாக பாபியின் இந்தக் கேரக்டர், நிச்சயமாக பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
‘உன் ரகசியம் என் கையில் இருக்கும்வரை உன் சிண்டு என் கையில்’ என்று மிரட்டும் வித்தியாச வில்லனாக படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் பிரசன்னா. முதல் காட்சியிலிருந்து கடைசிவரையிலும் தனது வில்லத்தனத்தால் படத்தின் ஹிப்பை ஏகத்திற்கும் ஏற்றியிருக்கிறார்.
கொஞ்சமும் சளைக்காத வில்லத்தனத்தோடு ரெஸ்ட்டாரெண்ட்டில் பாபி சிம்ஹாவுடன் மோதிவிட்டு காரில் செல்கையில் தனது பிளாக்மெயில் திட்டத்தை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி பாபியிடம் இருந்து தப்பிப்பதும், பின்பு அமலா பாலை வார்த்தையாலேயே டார்ச்சர் மேல் டார்ச்சர் செய்வதுமாக ஒரிஜினல் வில்லனாகவே வாழ்ந்திருக்கிறார் பிரசன்னா.
இந்தப் படத்தைப் பார்க்கும் பெண்கள் நிச்சயமாக பிரசன்னா போன்றவர்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புவார்கள். அந்த அளவுக்கு தனது தனித்திறமையை வெளிக்காட்டியிருக்கிறார் பிரசன்னா. வெல்டன் ஸார்.
அமலா பாலின் அழகை ஒரு பக்கம் காட்டிக் கொண்டே இன்னொரு பக்கம் அவரை நடிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர். ‘கொஞ்சம் சிரிங்க’ என்று சொல்லி காதலைத் துவக்கும் அமலா பால், ‘நீங்க சிரிக்கவே மாட்டேங்குறீங்க. உங்களை கல்யாணம் பண்ணி நான் என்ன செய்ய?’ என்று கேட்க வைத்து காதலை வளர்க்கும்விதமும் அமலா பாலை ரசிக்க வைத்திருக்கிறது.
‘அகல்’ என்கிற பெயருக்கேற்றாற்போல் கல்யாணத்திற்கு பின்னான ஊடல், கூடல் காட்சிகளில் ரகளை செய்திருக்கிறார் அமலா. பிரசன்னாவிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதும், தனது தோழியிடம் நடந்ததை சொல்லும்விதமும் அவர் மீதான பரிதாபத்தை ஏகத்திற்குக் கூட்டுகிறது.
இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அமலா பாலை எப்படியெல்லாம் படம் பிடித்தால் அழகாக தெரிவாரோ, அந்தக் கோணங்களிலெல்லாம் படமாக்கி காட்சிகளையும் அழகாக்கியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும்.
படத்தின் இயக்குநரான சுசி கணேசனும் தனியார் டிடெக்டிவ்வாக நடித்திருக்கிறார். உடன் ஒரு அழகுப் பதுமையும் உண்டு. இவருடைய கேரக்டரில்கூட வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். தானும் அழகாக இருப்பதால்.. அனைத்து இயக்குநர்களும் நடிப்பதால் நானும் நடிக்கிறனே என்றெண்ணி சுசி கணேசனும் நடிக்க வந்துவிட்டார் போலும்..!
அடிமுட்டாள் மந்திரியான எம்.எஸ்.பாஸ்கரும், புத்திசாலி ஐ.ஜி.யான முத்துராமனும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். ஜொள்ளுவிட்டு மாட்டிக் கொள்ளும் இன்னொரு ஐ.ஜி.யும், கடைசிவரையிலும் வெளியில் பேச முடியாமல் தத்தளிக்கும் பாபியின் அம்மாவாக நடித்தவரும்கூட கிடைத்த வாய்ப்பில் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் செல்லத்துரை காட்சிகள் அனைத்தையும் அழகுபடவே படமாக்கியிருக்கிறார். அதிலும் பாடல் காட்சிகளில் பாபியும், அமலா பாலும் காட்டும் நெருக்கமும், ‘திருட்டுப் பயலே’ பாடலில் வரும் காட்சியமைப்புகளையும், கிளைமாக்ஸ் காட்சியில் அந்த தீவின் அத்தனை அழகையும் காட்டியிருப்பதில் ஒளிப்பதிவாளரின் திறமை தனியாகவே தெரிகிறது. வெல்டன் ஸார்.
படத் தொகுப்பாளர் ராஜா முகமதுவை தனியே பாராட்ட வேண்டும். ரெஸ்ட்டாரெண்ட் மற்றும் பிரசன்னாவின் வீட்டில், மற்றும் கிளைமாக்ஸில்.. பிரசன்னா, பாபி இடையே நடைபெறும் கை கலப்பு காட்சிகளை அத்தனை அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார். கர்ண கொடூர மிரட்டல் என்கிற வகையில்தான் இந்தச் சண்டை காட்சிகளை சொல்ல வேண்டியிருக்கிறது.
இடையிடையே வேகமாக திரைக்கதை ஓடும்போது இடையிடையே காட்சிகளை நறுக்குத் தெரித்தாற்போன்று வெட்டி, வெட்டி ரசிகர்களின் லப்-டப்பையும் கொஞ்சம் ஏற்றியிருக்கிறார் படத் தொகுப்பாளர்.
வித்யாசாகரின் இசையில் முதல் பாகம் போன்று மனதில் நின்ற பாடல்கள் இல்லாமல் போனாலும் ‘நீ பார்க்கும்’, ‘அச்சுக்கு பிச்சுக்கு’ பாடல்கள் இரண்டும் கேட்கும் ரகம்தான். ‘திருட்டுப் பயலே தீம்’ பாடல்கூட படத்திற்கு ஒரு கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கிறது. பின்னணி இசையில் காதைக் கிழிக்கும் சப்தம்தான் அதிகம். ஆனால் அனைத்தையும் தனது அருமையான இயக்கத்தினால் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் செய்திருக்கிறார் இயக்குநர் சுசி கணேசன்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது. அதைத் தூண்டிவிட்டால் அவனும் மிருகமாகிவிடுவான் என்பதற்கு பாபி கேரக்டரும் ஒரு உதாரணம். அத்தனை அதிகாரிகள் முன்னிலையில் தனது நேர்மையாளன் குணத்தை கிண்டல் செய்யும் உயரதிகாரியும், நேர்மையான செயலுக்காக சஸ்பெண்ட் செய்து அதனை நீக்கவும் பத்து லட்சம் லஞ்சம் கேட்கும் உயரதிகாரியும் சேர்ந்துதான் செல்வம் என்ற இன்ஸ்பெக்டரை ஊழல்வாதியாக்குகிறார்கள். இதை படத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
7 ஆண்டுகளுக்கு முன்பாக தி.மு.க. ஆட்சியில் டெலிபோன் ஓட்டுக் கேட்பு விவகாரம் மீடியாக்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு மிகப் பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியது இந்தப் பிரச்சினை.
உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கோட்டையில் கோலோச்சும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கிடையேயான டெலிபோன் பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்டு அது மீடியாவில் கசிந்த்து. இந்தப் பிரச்சினையால் சங்கர் என்ற லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையைச் சேர்ந்த சீருடைய அல்லாத பணியாளர் மாட்டிவிடப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.
இந்த ஒரு சம்பவமே சாதாரண சங்கராக இருந்த இவரை ‘சவுக்கு சங்கராக’ மாற்றி இன்றுவரையிலும் ‘தமிழகத்தின் புலனாய்வு புலி’ என்ற பெயரையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இன்றுவரையிலும் போலீஸ் அதிகாரிகள் பயப்படும் ஒரே பத்திரிகையாளர் ‘சவுக்கு சங்கர்’ என்றாகிவிட்டது. இதற்கு அடிப்படையான காரணம் போலீஸ் உயரதிகாரிகளுக்கிடையே இருந்த போட்டி, பொறாமை, ஈகோ.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உயர் பதவிகளுக்கு சீனியாரிட்டிபடி அதிகாரிகளை நியமிக்காமல், ‘தனக்கு விசுவாசமாக இருப்பார்களா..? கால் பிடித்துவிடுவார்களா..? கை பிடித்துவிடுவார்களா..? தங்களது குடும்பத்திற்கு பணம் சம்பாதித்துக் கொடுப்பார்களா?’ என்றெல்லாம் எண்ணி தகுதியில்லாதவர்களையெல்லாம் உட்கார வைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
இதுதான் ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கிடையே போட்டியையும், பொறமையையும் ஏற்படுத்துகிறது. இது போன்ற ஒரு சம்பவத்தின் துவக்கம்தான் இந்தப் படத்தின் கதையின் துவக்கம்.
அடுத்த டி.ஜி.பி. பிரமோஷன் பட்டியலில் தான் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே தனது சக பேட்ச் அதிகாரிகளின் போனை ஒட்டுக் கேட்க வைத்து அதையும் வெளியிட்டு அதன் மூலமாக அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, அந்தப் பதவியில் அமர திட்டம் போடும் ஐ.ஜி.முத்துராமனை போல நிறைய முத்துராமன்கள் இப்போதும் காவல்துறையில் இருக்கிறார்கள்.
கடந்த வருடம் சென்னையில் காதர்பாட்சா என்ற துணை ஆணையர் ஒரு பெண் காவலரிடம் வரம்பு மீறி பேசிய ஆடியோவை உளவுத்துறை போலீஸார் வேண்டுமென்றே வெளியிட்டுவிட.. கடைசியில் அந்த துணை ஆணையர் காதர் பாட்சா, மிக மிக அவமானப்பட்டு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த உண்மைச் சம்பவத்தையும் இந்தப் படத்தில் மிகச் சரியான இடத்தில் பொருத்தியிருக்கிறார் இயக்குநர்.
என்னதான் சாமர்த்தியமாக திருடி சம்பாதித்து, சட்டத்தில் இருந்து தப்பித்தாலும் இறைவன், அல்லது காலத்தின் கண்களில் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது என்பதும், பினாமி சொத்துக்களை வாங்கிக் குவித்தால் அதுவும் ஒரு நாள் நமது கண் முன்பாகவே நம் கையைவிட்டுப் போகும் என்பதையும் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் அந்த சேட்டின் இறப்பின் மூலம் மிக அழகாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
இன்றைய சூழலில் பல பெண்கள் முகநூலில் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு அதற்கு லைக்ஸ் வருகிறதா..? கருத்துக்கள் வருகிறதா..? என்பதை பார்க்கும் ஒருவித போதையில் சிக்கியிருக்கிறார்கள். இதில் திருமணம் ஆன, திருமணமாகாத பெண்களும் அடக்கம்.
இந்தப் பெண்களை குறி வைத்து மடக்கும் சில ‘சில்லறைகள்’ அவர்களுக்கு ஆபாச லின்க்குகளை அனுப்பியும், ஆபாச செய்திகளை அனுப்பியும் தொல்லை கொடுப்பதும், அவர்களை மடக்க முயல்வதுமாக செய்வது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
முகநூலில் பழக்கமான, இதுவரையிலும் முகம்கூட தெரியாதவனை நம்பி சென்னைக்கு கல்யாணத்துக்காக ஓடி வந்த பல இளம் பெண்களை சென்னை போலீஸார் காப்பாற்றி அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இது போன்ற சூழலில் எந்த இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள்.. கெட்டவர்களும் இருப்பார்கள். ரகம் பார்த்து, தரம் பார்த்து பிரித்து பேசி பழகத் தெரிந்தவர்கள் மட்டுமே இது போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாம். தெரியாதவர்கள் ஒதுங்கியிருப்பது அவர்களுக்கு நல்லது என்பதைத்தான் அகல் என்னும் அமலா பாலின் கேரக்டர் மூலமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இன்றைய நிலையில் இந்த அறிவுரை தமிழ்ச் சமூகத்துக்கு மிக, மிக தேவையானதுதான்..! இதற்காக இயக்குநருக்கு நமது நன்றிகள்..!
திருட்டுப் பயலே.. பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வைத் தரும் படம்..!

0 comments: