வேலைக்காரன் - சினிமா விமர்சனம்

27-12-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

24 AM Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ‘ரெமோ’ திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் படம் இது.
இந்த ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என்று பல முன்னணி நடிகர், நடிகையர் நடித்துள்ளனர்.
இசை – அனிருத், ஒளிப்பதிவு – ராம்ஜி, படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், கலை இயக்கம் – முத்துராஜ், சண்டை பயிற்சி – அனல் அரசு, ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், ஸ்டில்ஸ் – மானேக்ஷா, பாடல்கள் – விவேகா, கார்க்கி, விவேக், நடனம் – பிருந்தா, ஷோபி, தங்கநிதி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, தயாரிப்பு நிர்வாகம் – வீரசங்கர், தயாரிப்பு மேற்பார்வை – மதிவாணன், ரவிக்குமார், தயாரிப்பு நிறுவனம் – 24 ஏஎம் ஸ்டூடியோஸ், தயாரிப்பாளர் – ஆர்.டி.ராஜா, எழுத்து, இயக்கம் – மோகன்ராஜா.

சென்னையின் ஒருபுறத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கூலிக்காரக் குப்பம் இப்போது கொலைக்கார குப்பம் என்று அழைக்கப்படுகிறது. அந்தக் குப்பத்தில் சார்லி-ரோகிணி தம்பதியருக்கு மகனாக பிறந்து வளர்ந்திருக்கிறார் ஹீரோவான சிவகார்த்திகேயன். படித்தது பாலிடெக்னிக்கில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன். இப்போது வேலை வெட்டி இல்லாமல்தான் இருக்கிறார்.
அதே கொலைகார குப்பத்தில் வசிக்கும் அனைவருக்குமே பாதுகாவலராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். அடியாள்களை வைத்துக் கொண்டு வெட்டுக் குத்து, கொலைகளை நடத்தி வருபவர். பணத்துக்காக இவர் செய்யும் அடாவடி செயல்களுக்கு அந்தக் குப்பத்து ஆள்களை பலிகடாவாக்கி இவர் தூக்கிப் போடும் சில ஆயிரங்களுக்காக அவர்களில் சிலரை போலீஸில் சரணடைய வைத்து தொழிலை நடத்தி வருகிறார்.
இதை கவனித்து வந்த சிவகார்த்திகேயன், பிரகாஷ்ராஜின் தில்லுமுல்லுகளையும், அவரால் குப்பத்து இளைஞர்கள் தவறான பாதைக்குச் சென்று தங்களது வாழ்க்கையை அழித்துக் கொள்வதை நிறுத்தவும் திட்டமிடுகிறார். இதற்காக குப்பத்திலேயே ரேடியோ ஸ்டேஷனை அமைக்கிறார். முதலில் உண்மை தெரியாமல் பிரகாஷ்ராஜும் இதற்கு அனுமதியளிக்கிறார்.
இன்னொரு பக்கம் ஒரு டிவி நிகழ்ச்சியில் பெண்ணுரிமை பற்றிப் பேசிய மிருணாளினி என்னும் நயன்தாராவை கிண்டலடித்து தனது ரேடியோவில் பேசி அவரிடம் பகையை வளர்த்துக் கொள்கிறார் சிவா. நாளடைவில் மிருணாளினி தனது தாய் ரோகிணி வேலை பார்க்கும் வீட்டில் இருப்பவர் என்பதையறிந்து அவருடன் நட்பாகப் பழக அதுவே காதலாகிவிடுகிறது.
பிரகாஷ்ராஜூக்காக ஒரு நாள் கூலி கொலைகாரனாக போகிறார் சிவாவின் நண்பனான விஜய் வசந்த். அந்தக் கொலை சம்பவத்தை தனது ரேடியோவில் நேரடி ஒலிபரப்பு செய்கிறார் சிவா. ஆனால் திடீரென்று பிரகாஷ்ராஜே நேரில் வந்து அந்த கொலையில் பங்கெடுத்து சில கொலைகளைச் செய்கிறார். தான் செய்த கொலைகளுக்குப் பதிலாக குப்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனை சரணடைய தயார் செய்து அனுப்பி வைக்கிறார் பிரகாஷ்ராஜ்.
இதனை ரேடியோ மூலமாக அறியும் குப்பத்து மக்கள் பிரகாஷ்ராஜிடம் வந்து நியாயம் கேட்க அவர் சிவா மீது ஆத்திரப்படுகிறார். அப்போதைக்கு அவரிடமிருந்து தப்பிக்கும் சிவா, பிரகாஷ்ராஜ் ஊருக்கு போயிருக்கும் நேரத்தில் ஒரு பெரிய உண்மையை குப்பத்து மக்களிடத்தில் ரேடியோ மூலமாகச் சொல்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பாக அரசு அதிகாரிகள் குப்பத்துக்கு வந்து அந்தக் குப்பத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க முயன்றதாகவும், அதனை பிரகாஷ்ராஜ் தடுத்துவிட்டதாகவும் சொல்கிறார். இது குப்பத்து மக்களிடையே பிரகாஷ்ராஜ் மீது கோபத்தைக் கிளப்புகிறது.
இப்போதும் பிரகாஷ்ராஜ் கோபத்தோடு வந்து சிவாவிடம் கேட்க, இப்போதும் சிவா பிரச்சினையை திசை திருப்பி அனுப்பி வைக்கிறார். ஆனால் அப்போதுதான் தனது குடும்பச் சூழலை அறிகிறார் சிவா. தான் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அறியும் சிவா வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார்.
அதன்படி பஹத் பாசில் மார்க்கெட்டிங் மேனேஜராக இருக்கும் Saffro என்னும் ஒரு மிகப் பெரிய உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஏஜெண்ட்டாக வேலைக்கு சேர்கிறார் சிவா.
அங்கே பஹத் பாசிலின் தந்திரமான பேச்சில் கவரும் சிவா, அவரிடம் நெருங்கிப் பழகுகிறார். தனது நண்பர் விஜய் வசந்தையும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார்.
விஜய் வசந்த் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பிரகாஷ்ராஜால் கொல்லப்படுகிறார். அந்தப் படுகொலை சம்பவத்தின்போது இன்னோரு தாதாவான லோகிசரத்தாஸால் பிரகாஷ்ராஜும் தாக்கப்படுகிறார்.
இந்தச் சம்பவத்தின்போது தனது நிறுவனம் மக்களுக்கு மெல்ல, மெல்ல தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது பற்றி அறிகிறார் சிவகார்த்திகேயன். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பிரகாஷ்ராஜை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று காப்பாற்றிவிடுகிறார்.
அவர் மூலமாக உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் போட்டா போட்டியையும், அவைகள் தங்களது சம்பாத்தியத்திற்காக செய்யும் தில்லுமுல்லுகளையும் அறிந்த சிவா, அந்தத் திருட்டுத்தனத்தை முறியடிக்க நினைத்து புத்திசாலித்தனமாக பல திட்டங்களை போடுகிறார்.
இதற்காக பஹத் பாசிலையும் கூட்டணியில் வைத்துக் கொள்கிறார். பஹத் பாசிலோ இவரைவிட மிகப் பெரிய திட்டத்தில் இருக்கிறார். சிவா, பஹத் பாசில் யாரென்று தெரியாமலேயே அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கெதிராகச் செயல்பட இதை முறியடிக்க நினைக்கிறார் பஹத் பாசில்.
உண்மையில் பஹத் பாசில் யார்.. சிவகார்த்திகேயனின் திட்டம் பலித்ததா.. இறுதியில் இவர்களில் யார் வெற்றி பெற்றது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
சிவகார்த்திகேயனுக்கு இது வித்தியாசமான ரோல். இதுவரையிலும் அவர் செய்திராத ஒரு கனமான பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அவருடைய வழக்கமான நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல், அல்டாப்பு என்று அனைத்தையும் ஓரம்கட்டிவைத்துவிட்டு இயக்குநருக்கு ஏற்ற ஹீரோவாக தனது பங்களிப்பை செய்திருக்கிறார்.
படம் நெடுகிலும் வசனமே பிரதானமாக இருப்பதால் சிவாவின் நடிப்புக்கேற்ற திரைக்கதை இல்லாமல் போய்விட்டது. ஒரேயொரு காட்சியில்.. தான் வீட்டு வேலை செய்யும் வீட்டில் ஒரு ஆள் தன்னை தவறாகப் பார்த்ததை சொல்லும் காட்சியில் ரோகிணிக்கு நடிக்க கிடைத்திருக்கும் ஸ்கோப்கூட சிவாவுக்கு இல்லாமல் போயிருப்பது கண்கூடு..!
ஆனாலும் பரவாயில்லை. எந்த ஹீரோவும் நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் படத்தில் காதலியைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள் என்கிற சமூகத்தில் அதிகமாகப் பேசப்படும் பேச்சை இந்தப் படத்தின் மூலமாக துடைத்தெறிந்திருக்கிறார் சிவா.
ஆனாலும் சிவாவுக்கு இந்தக் கதை பொருத்தமில்லாதது என்பதை சொல்லத்தான் வேண்டும். தமிழ்ச் சினிமாவில் அவருடைய இருப்பிடம் வேறு என்பதை சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளோம். அதற்காக திரும்பவும் ‘ரெமோ’ அளவுக்கெல்லாம் சிவா போகக் கூடாது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போல அவருடைய இடத்தை அவர் விட்டுவிடாமல் இருந்தால் நல்லது என்றுதான் சொல்கிறோம்.
‘மலையாள சினிமாவில் ராட்சஷன்’ என்று சமீப காலமாக புகழப்படும் பஹத் பாசில், இந்தக் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார். சின்னச் சின்ன ஏமாற்றங்களுடன், கோபம், தாபம், பொறாமை, சிரிப்பு என்று அனைத்தையும் முக பாவனையிலும், தனது உடல் மொழியிலும் செய்து காண்பித்து கவர்ந்திழுத்திருக்கிறார் பஹத்.
நயன்தாரா துவக்கத்தில் சில காட்சிகளில் ஏதோ பெரிய ரோல் செய்யப் போவது போல காட்சியளித்து பின்பு அமைதியாகிவிட்டார். சிவாவுடன் ஒப்பிட்டால் நயன்ஸ் பொருத்தமே இல்லை என்பதுதான் உண்மை. ‘இதயனே’ பாடல் காட்சியில் சிவாவுக்கு அக்கா போல தெரிவதாக படம் பார்த்த அனைவருமே சூடம் ஏற்றாத குறையாக சத்தியம் செய்து சொல்கிறார்கள். பாடல் காட்சியில் மட்டுமே நயன்ஸ் அழகோ அழகு. மற்றபடி அவருக்கும் நடிப்புக்கு ஸ்கோப் இல்லாததால் தெலுங்கு பட ஹீரோயின் போல வந்து சென்றிருக்கிறார்.
பிரகாஷ்ராஜ்தான் படத்தின் டர்னிங் பாயிண்ட்டை அழுத்தமான நடிப்புடன் டெலிவரி செய்திருக்கிறார். “நான் கூலிக்கார படைன்னா நீ என்னைவிட கேவலமாக கூலிக்காரன்டா…” என்று அழுத்தமாகச் சொல்லி சிவாவை திசை திருப்புகையில் பிரகாஷ்ராஜை ‘வெல்டன்’ என்று பாராட்டலாம்.
இடைவேளைக்கு பின்புதான் ‘புன்னகை இளவரசி’ சினேகா வருகிறார். சின்ன கேரக்டர் என்றாலும் படத்தை தாங்கி நின்றிருக்க வேண்டிய கதாபாத்திரம். ஆனால் இயக்குநரின் அழுத்தமில்லாத காட்சியமைப்பினால் அது சொதப்பலாக அமைந்துவிட்டது. இவருடைய சின்ன வயது மகனின் இறப்புதான் பார்வையாளர்களை ஈர்த்திருக்க வேண்டும். ஆனால் அது சப்பென்று முடிவு பெற்றதால், படத்தின் கதை ரசிகர்களின் இதயத்தைத் தொடவில்லை.
சிவாவின் அப்பாவான சார்லி, அம்மாவான ரோகிணி, அவ்வப்போது காமெடி செய்த ரோபோ சங்கர், ஊமைக்குத்தாய் குத்தியிருக்கும் சதீஷ் என்று பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் சொல்லிக் கொடுத்த அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கு பெயர் பெற்றுக் கொடுக்கும் அளவுக்கான காட்சிகள் இல்லை என்றாலும், சில இடங்களில் மட்டும்.. இரவில் அனைவரின் வீட்டிலும் லைட்டுகளை போடும் காட்சியிலும், ‘இதயனே’ பாடல் காட்சியிலும்தான் இவரது கேமிரா திறமை பளிச்சிடுகிறது. ஸ்கோப் இருந்தால் அண்ணனும் திறமையைக் காட்டியிருப்பார்.
தம்பி அனிருத்தின் இசையில் ‘கருத்துவனெல்லாம் கலீஜா’ பாடல் காட்சியை சிவாவின் ரசிகர்களுக்காகவே வைத்திருக்கிறார்கள். ‘இதயனே’ பாடலும், பாடல் காட்சியும் அருமை. ‘வேலைக்காரன்’ தீம் சாங் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் படமாக்கலில் ரசிப்புதான் இல்லை.
படமாக்கப்பட்டு டேபிளுக்கு கொண்டு வந்து கொட்டப்பட்ட அதிகப்படியான காட்சிகளை கச்சிதமாக நறுக்கிக் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ரூபன். முற்பாதி காட்சிகள் மின்னல் வேகத்தில் நகர்கின்றன. ஆனால் படத்தின் பிற்பாதியில் இருக்கும் மிக நீண்ட வசனங்கள்தான் பொறுமையைச் சோதித்துவிட்டன. அவற்றை கத்தரி போட்டு இன்னும் கொஞ்சம் ஷார்ப்பான காட்சிகளால் செதுக்கியிருக்கலாம்..!
பகத் பாஸில், சிவா மோதலை வேறுவிதமாக இன்னும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கலாம். சென்ற காட்சியில் சிவாவை வெறுத்து ஒதுக்கிய தொழிலாளர்கள், அடுத்த காட்சியிலேயே மனம் மாறி பழைய முறையிலேயே உணவினை தயாரிக்கிறார்கள் என்கிற லாஜிக்கை ஏற்க முடியவில்லை. இதனாலேயே பஹத் பாசிலின் தோல்வியையும் நம்மால் ஏற்க முடியவில்லை.
உண்மையில் இந்தக் கதை வேறு மாதிரிதான் இருந்திருக்க வேண்டும். பஹத் பாசிலின் இடத்தில் நயன்தாரா இருந்திருக்க வேண்டும். பஹத் பாசிலின் நட்போடு நயன்தாராவுக்கும் உண்மையை புரிய வைத்து அவரையும் நல்லவராக்குவதுபோல் படத்தின் திரைக்கதையை வடிவமைத்திருந்தால் படம் நிச்சயமாக இதைவிடவும் நன்றாகத்தான் இருந்திருக்கும்..!
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நூடுல்ஸில் ரசாயனம் கலந்திருப்பதாகவும், அதனால் அதனை தடை செய்வதாகவும் மத்திய அரசின் உணவுப் பொருள் தரக் கட்டுப்பாட்டு வாரியமும், அமைச்சகமும் தெரிவித்தன. பின்பு அந்த உணவுப் பொருளின் சாம்பிள்கள் இந்தியாவின் அனைத்து மருத்துவ பரிசோதனைக் கூடங்களுக்கும் அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குத்தான் ரசாயனங்கள் இருப்பதாக அறிக்கை வர.. மறுபடியும் சத்தமில்லாமல் அதே நூடுல்ஸ்கள் இப்போதும் கடைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
இது போன்று நாம் தெரியாமலேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் விஷம் கலந்த உணவுகள் பற்றிய விழிப்புணர்வைத்தான் இந்தப் படத்தில் இயக்குநர் மோகன்ராஜா சொல்லியிருக்கிறார். ஆனால் இதை அழுத்தமில்லாத திரைக்கதையில் சொல்லியிருப்பதால்தான், படத்தை ‘தனி ஒருவன்’ அளவுக்கு புகழ்ந்து பேச முடியாமல் இருக்கிறது.
உணவுப் பொருள் என்றில்லை.. முகப் பூச்சுக்கள்.. அலங்காரப் பொருட்கள், பெண்களுக்கான காஸ்மெட்டிக் பொருட்கள் என்று அனைத்திலுமே உடலைப் பாதிக்கும் கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன என்றுதான் திடீர், திடீரென்று சொல்கிறார்கள். பின்பு உடனேயே அந்தக் குரல்கள் முடங்கி விடுகின்றன.
சமீபத்தில் மும்பையில் ஒரு பெண்மணி ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு கேன்சர் எற்பட்டுள்ளதாகச் சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். இதனை மருத்துவ அறிக்கையும் ஒத்துக் கொள்வதுதான் நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.
பெப்சி, கோக் ஆகிய குளிர் பானங்களால் உடலுக்கு கெடுதி வரும் என்று இப்போதுதான் அதன் அடையாள அட்டையில் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். இத்தனை நாட்கள் இதனை குடித்தவர்களுக்கு என்னென்ன வியாதிகள் எந்த ரூபத்தில் வந்தன என்று யாருக்குத் தெரியும்.. இதற்கு யார் பொறுப்பு ஏற்பது..
உணவுப் பொருட்களை தயாரித்து வழங்கும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் வானளாவிய செல்வாக்கு மிகுந்தவை. எத்தகையை எதிர்ப்புகள் வந்தாலும் நொடியில் அதனைத் தூக்கித் துடைத்துவிட்டு போய்விடும் சர்வ வல்லமை படைத்தவர்கள். இதனால்தான் இவர்களால் இப்படி அனைத்தையும் செய்துவிட்டு தப்பிக்கவும் முடிகிறது.
அதோடு உணவுப் பொருளில் கலப்படம் என்பதால்தான் மனிதர்களுக்கு நோய் ஏற்படுகிறது என்று எந்த மருத்துவரும் வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறார்கள். மருத்துவ அறிக்கைகளும் தருவதில்லை. ஒரு நோய்க்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால் குறிப்பிட்ட அந்த உணவு வகைதான் இதற்குக் காரணமாக இருக்க முடியாது என்று கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு பெரிய மருத்துவர்களே, நீதிமன்றத்திற்கு வந்து சான்றழிக்கிறார்கள்.
இந்தப் படம் பார்க்கும் ரசிகர்கள் படத்தின் இடைவேளையிலேயே பாப்கார்னையும், சமோசாவையும், கட்லெட்டையும் ஒரு கை பார்க்கிறார்கள். அதில் என்னென்ன இருக்கிறது என்றெல்லாம் பார்க்காமல் தியேட்டருக்கு வந்த கடமையை முடித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பின்பு எப்படி படத்தின் கதை ரசிகர்களின் மனதில் நிற்கும்..
இந்தியா முழுவதிலும் பீடி, சிகரெட், புகையிலை, மது போன்றவைகளுக்கு எதிராக நடத்தப்படும் பிரச்சாரங்களில் நூறில் ஒரு பங்குகூட கலப்பட உணவு வகைகளுக்கு எதிராக செய்யப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால், இது பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்த நேரத்தில் ஒரு வெகுசன நாயகனுடன் இணைந்து அளித்திருக்கும் இயக்குநர் மோகன்ராஜாவுக்கு நமது நன்றிகள். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

0 comments: