28-12-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பிரபல நடிகரான V.T.V.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
சந்தானம் ஹீரோவாக நடிக்க வைபவி சாண்டில்யா என்னும் புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க… இவருடன் சம்பத் ராஜ், ரோபோ சங்கர், சஞ்சனா சிங், V.T.V. கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், மயில்சாமி, சுவாமிநாதன், சுரேகா வாணி, பாரி கோஷ், லக்கி நாராயணன், ஆர்யன், ராஜ்குமார், டேனியல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம், படத் தொகுப்பு – ஆண்டனி, இசை – சிம்பு என்னும் எஸ்.டி.ஆர்., நடனம் – ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி, பாடல் – கவிஞர் வைரமுத்து, விக்னேஷ் சிவன், கார்க்கி, ரோகேஷ், கருணாகரன், பாடகர்கள் – அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், கலை இயக்கம் – ஜெ.உமேஷ்குமார், ஸ்டில்ஸ் – ராஜ், டிஸைன்ஸ் – தண்டோரா, மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, தயாரிப்பு நிறுவனம் – வி.டி.வி. புரொடெக்சன்ஸ், தயாரிப்பு – வி.டி.வி.கணேஷ், எழுத்து, இயக்கம் – ஜி.எல்.சேதுராமன்.
டாப் லிஸ்ட் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று சந்தானம் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. விநியோகஸ்தர்களின் குட்புக்கில் இருந்தால்தான் ஹீரோ ஆனதற்கான அடையாளம் என்று நினைத்து தனது பலமான ‘நகைச்சுவை நடிகர்’ என்கிற அடையாளத்தையும் துறக்க முடிவு செய்து கமர்ஷியல் ஹீரோவாக முடிவெடுத்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
சென்னையில் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்திருக்கும் சந்தானம், தனது உயிர் நண்பனான சேதுவின் காதல் திருமணத்தை நடத்தி வைத்து தம்பதிகளை வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அந்தக் காதலியின் அண்ணனான சம்பத் பெரிய ரவுடி. காதலர்களைவிடவும் சந்தானத்தைத்தான் தீவிரமாகத் தேடுறார்.
தான் இ்பபோதும் சென்னையில் இருந்தால் பிரச்சினை வருமே என்றெண்ணி பெங்களூருக்கு வருகிறார் சந்தானம். சந்தானம் காதலர்களை அழைத்துச் சென்ற காரின் டிரைவரான விவேக்கை முதலில் தூக்கலாம் என்றெண்ணி விவேக் யார் என்று தெரியாமலேயே அவரது காரிலேயே பெங்களூருக்கு வருகிறார் சம்பத்.
இங்கே பெங்களூரில் கல்லூரியில் படித்து வரும் ஹீரோயின் வைபவியை பார்த்தவுடன் லவ்வாகி அவர் பின்னாலேயே அலைகிறார் சந்தானம். வழக்கமான ஹீரோக்கள் போலவே ஹீரோயினை கண்டு கொள்ளாமல் போய் அவரை இம்ப்ரஸ் செய்யும் முயற்சியில் இறங்குகிறார் சந்தானம்.
தேய்க்க தேய்க்க கல்லும் கரையும் என்பார்களே அது போல வைபவியின் மனசும் கரையத் துவங்க காதல் கை கூடுகிறது சந்தானத்திற்கு. இந்த நேரத்தில்தான் தெரிகிறது வைபவியும் சம்பத்தின் தங்கை என்று..!
தனது முதல் தங்கையையும், அவளது காதல் கணவனையும் தேடி வரும் சம்பத்துக்கு இரண்டாவது தங்கையும் காதலில் விழுந்திருப்பது பிடிக்கவில்லை. அதனால் வைபவியை சென்னைக்கு அழைத்து வருகிறார். வேறு ஒருவருடன் வைபவிக்கு திருமணமும் செய்து வைக்க திட்டமிடுகிறார். இதே நேரம் சம்பத்தின் பரம்பரை எதிரியான சரத் லோகிதஸ்வாவும் சம்பத்தை பழி வாங்கத் திட்டமிட்டு வருகிறார்.
தனது காதலியை எப்படியாவது திருமணம் செய்துவிட துடிக்கும் சந்தானம், திட்டமிட்டு சம்பத்தை தனது வீட்டுக்கே வாடகைக்கு குடி பெயர வைக்கிறார். அதே நேரம் விவேக் சந்தானத்தின் முகமூடியைக் கிழித்து அவர்தான் சம்பத்தின் முதல் தங்கையின் திருமணத்திற்கு காரணமானவர் என்பதை சம்பத்திடம் சொல்லிவிடத் துடிக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் சந்தானம் இடையில் புகுந்து கெடுத்துவிடுகிறார்.
கடைசியில் எப்படித்தான் சந்தானம் தனது காதலியை கைப்பிடிக்கிறார் என்பதுதான் இந்த ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்தின் திரைக்கதை.
சந்தானத்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஹீரோயிஸம் இல்லை என்பதை யாராவது அவரிடம் சொன்னால் தேவலை. அவரிடமிருக்கும் நகைச்சுவை கலந்த நடிப்பைத்தான் எதிர்பார்த்து அனைவரும் தியேட்டருக்கு வருகிறார்கள்.
இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக்குகளுடன், கமர்ஷியல் ஹீரோக்களுக்கு உண்டான அனைத்துவகை அல்டாப்புகளுடனும், சண்டை காட்சிகளில் ஹீரோயிஸம் செய்து தனது நேரத்தை வீணாக்கியிருக்கிறார் சந்தானம். சாதாரணமான நகைச்சுவை ஹீரோவாகவே நடித்திருந்தால்கூட படத்தை இன்னும் கொஞ்சம் ரசித்துப் பார்த்திருக்கலாம்.
விவேக்கும், விடிவி கணேஷும் செய்திருக்கும் நகைச்சுவை கலாட்டாவில் பாதிகூட சந்தானம் செய்யவில்லை என்பது சோகம்தான். படத்தின் கிளைமாக்ஸில்தான் நிறையவே சிரிக்க வைத்திருக்கிறார்கள். விவேக் படும்பாடும், விடிவி கணேஷின் கொண்டாட்டமும்தான் படமே..! அதற்காக மனைவிகளை மாற்றிச் சொல்லி சந்தோஷப்படுவதெல்லாம் எந்த வகையான நகைச்சுவை இயக்குநரே..?
நாயகி வைபவி அழகாக இருக்கிறார். டப்பிங் குரல் கொடுத்தவரின் இனிமையான குரலாலும், சிதறலே இல்லாத வசனப் பதிவினாலும் கவர்ந்திழுக்கிறார் வைபவி.
படத்தை அதிகம் தாங்கியிருப்பது விவேக்கும், விடிவி கணேஷும்தான். இவர்களின் உதார் தெரியாமல் சம்பத் வில்லத்தனத்திலேயே அப்பாவியாய் பேசுவதும்தான் காமெடியை வரவழைத்திருக்கிறது. கூடவே துணைக்கு இருக்கும் ரோபா சங்கரும் தன் பங்குக்கு சிரிப்பை வரவழைத்திருக்கிறார்.
பவர் ஸ்டார் சீனிவாசனின் அறிமுகக் காட்சிகள் கலகல. சுரேகா வாணி, சஞ்சனா சிங், சரத் லோகிஸத்வா, சம்பத் அனைவருமே கொடுத்த கேரக்டரில் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
சிம்பு என்னும் மஹாபிரபுவின் இசையில் பாடல்கள் திரையில் ஒலித்தன. ‘காதல் தேவதை’, ‘கலக்கு மச்சான்’ பாடல்கள் மட்டுமே கேட்கும் ரகம். பாடல் காட்சிகளை மட்டுமே ரசனையாக படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் சந்தானம்தான் பெரிய மைனஸாக தெரிகிறார்.
அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவில் குறைவில்லை. வெளிநாட்டு லொகேஷன்களை லட்டு போல பதிவாக்கியிருக்கிறார். காமெடி காட்சிகளில் நகைச்சுவை தேய்ந்து போகாத வண்ணம் படத் தொகுப்பாளர் தொகுத்தளித்திருக்கிறார்.
இத்தனையிருந்தும் ஒட்டு மொத்தமாய் இதுவொரு சிரிக்க வைக்கும் முழு நீள நகைச்சுவை படமாக இல்லை என்பதுதான் சோகம். சந்தானம் இதைப் புரிந்து கொண்டு, தனது அடுத்தடுத்த படங்களை ரசிகர்களுக்கு திருப்தியளிக்கும்விதமாக வழங்கினால் ரசிகர்கள் அதைக் கொண்டாட காத்திருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.
|
Tweet |
0 comments:
Post a Comment