03-12-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நடிகை ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா, மஹிமா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் ராதாரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ஜீவல் மேரி, ரிந்து ரவி, செந்தில்குமரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
தில்ராஜின் ஒளிப்பதிவில், ஆனந்த மணியின் கலை இயக்கத்தில், ராஜசேகரின் சண்டை பயிற்சியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு அருண் பாரதி பாடல்கள் எழுதியுள்ளார், கவிதா, சாரங்கன் இருவரும் ஆடை வடிவமைப்பை செய்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநரான சீனிவாசன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
திருக்கோவிலூரில் வசிக்கிறார்கள் அண்ணாதுரை, தம்பித்துரை என்ற இரட்டைப் பிறவிகள். இதில் மூத்தவர் அண்ணாதுரை. இளையவர் தம்பித்துரை. இவர்களின் தந்தையான நளினிகாந்த் அந்த ஊரில் 50 வருடங்களாக பாரம்பரியமான ஜவுளிக் கடையை நடத்தி வருகிறார். தம்பித்துரை அதே ஊரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பி.டி. மாஸ்டராக வேலை பார்க்கிறார்.
அண்ணாத்துரை எஸ்தர் என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். திருமணம் முடியப் போகும் நேரத்தில் ஒரு விபத்தில் அண்ணாத்துரையின் கண் எதிரிலேயே இறந்து போகிறார் எஸ்தர். இதையடுத்து அண்ணாத்துரை முழு நேர குடிகாரனாகிறார். எப்போதும் பாட்டிலும், கையுமாக திரிபவர் சுடுகாட்டில் எஸ்தரின் கல்லறையில்தான் வாசம் செய்கிறார்.
அண்ணாத்துரைக்கு தாய் மாமன்கூட பொண்ணு தர மறுக்கிறார். இதனால் தம்பித்துரைக்காச்சும் கல்யாணத்தை முடித்துவிடலாம் என்றெண்ணி நவீன சுயம்வரத்திற்கு அழைத்து வருகிறார் அப்பா நளினிகாந்த். வந்த இடத்தில் தனது தந்தையுடன் அதே சுயம்வரத்திற்கு வந்த ஹீரோயின் டயானா சம்பிகாவை பார்க்கிறார். பார்த்தவுடன் காதலாகி கசிந்துருகி கல்யாணத்திற்குத் தயாராகிறார் தம்பித்துரை. டயானாவின் தந்தை செந்தில்குமரனும், நளினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்தத் திருமணத்தை நடத்த ஆசையோடு காத்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தனது பால்ய நண்பன் காளி வெங்கட்டிற்காக அந்த ஊரின் மிகப் பெரிய ரவுடியான சேரன் ராஜிடம் ஆறு லட்சம் ரூபாயை கடனாகப் பெற்றுத் தருகிறார் அண்ணாத்துரை.
அந்த நேரத்தில் ஊரில் இருக்கும் வணிகர் சங்கத்தின் தலைவராக 7-வது முறையாக நளினிகாந்த் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கு சேரன் ராஜ் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலன் இல்லாமல் போகிறது.
இந்த நேரத்தில் அதே ஊரில் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் மகிமா, அண்ணாத்துரையை ஒன் சைடாக காதலிக்கிறார். ஆனால் காளி வெங்கட் மகிமாவை ஒன் சைடாக காதலிக்கிறார். இந்தக் காதல் புரியாத புதிராக இருக்கும் நேரத்தில், சேரன் ராஜ் நளினிகாந்தை சிக்கலுக்குள்ளாக்கும்விதமாக காளி வெங்கட்டிற்கு கொடுத்த கடனை உடனடியாக நாளை காலை 10 மணிக்குள்ளாக அடைத்தாக வேண்டும் என்று அண்ணாத்துரைக்கு நெருக்கடி கொடுக்கிறார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் அண்ணாத்துரை தவிர்க்க முடியாமல் டயானாவின் அப்பாவிடம் கல்யாணத்திற்காக அவர் சேர்த்து வைத்திருந்த ஆறு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு வந்து அண்ணாத்துரையிடம் கொடுக்கிறார். இதை வைத்து கடனை அடைக்கும் அண்ணாத்துரை தான் கடன் வாங்கும்போது எழுதிக் கொடுத்த பத்திரத்தை மட்டும் திரும்ப வாங்கிக் கொள்ளாமல் போகிறார்.
இதையறியும் தம்பித்துரை தன் பெயரை பயன்படுத்தி அண்ணாத்துரை தன் வருங்கால மாமனார் வீட்டில் பணம் வாங்கியதாகச் சொல்லி அண்ணாத்துரையிடம் சண்டையிட, அது கை கலப்புவரையிலும் போய் முடிகிறது.
இந்த அக்கப்போரினால் மனம் தளரும் அண்ணாத்துரை தன்னைக் காதலிக்கும் மகிமாவை திருமணம் செய்து செட்டிலாக முடிவெடுக்கிறார். கடைசியாக அன்றைக்கு மட்டும் குடித்துவிட்டு, மறுநாளில் இருந்து குடிக்காமல் இருக்கப் போவதாகச் சொல்கிறார்.
ஆனால் அன்றைய இரவில் டாஸ்மாக் பாரில் அவரால் எதேச்சையாக தள்ளிவிடப்பட்ட பார் ஓனர், கண்ணாடி துண்டு தன் கழுத்தில் குத்தி இறந்து போகிறார். போலீஸ் அண்ணாத்துரையை கைது செய்கிறது. அண்ணாத்துரை நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒத்துக் கொள்ள அவருக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கிறது.
இந்தத் தண்டனை காலத்தில் அவரது அம்மா, அப்பா, தம்பித்துரை மூவருமே தன்னை வந்து பார்க்காததால் அண்ணாத்துரை வருத்தத்துடன் இருக்கிறார். தன்னை பார்க்க வரும் மகிமாவிடம் காளி வெங்கட்டை கல்யாணம் செய்து கொண்டு அமைதியாக வாழும்படி அறிவுரை சொல்லியனுப்புகிறார்.
கடைசியாக ஏழு ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வரும் அண்ணாத்துரை, அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு மிகப் பெரிய தாதா வேடத்தில் தனது தம்பி தம்பித்துரையை பார்க்க நேரிடுகிறது.
சாந்த சொரூபியான தம்பி எப்படி ரவுடியானான் என்று அதிர்ச்சியுடன் அண்ணாத்துரை கேட்க.. அவர் ஜெயிலுக்கு போன பின்பு நடந்த கதைகளை காளி வெங்கட் அவரிடத்தில் சொல்கிறார்.
அண்ணாத்துரை சிறையில் இருந்தபோது வெளியில் நடந்தவைகள் என்ன என்பதும், தம்பித்துரை ஏன் ரவுடியானார் என்பதும், அண்ணாத்துரை வெளியில் வந்த பின்பு என்ன செய்தார் என்பதும்தான் இடைவேளைக்கு பின்னான கதை.
தாடி வைத்திருந்தால் அண்ணாத்துரை. வைக்காவிட்டால் தம்பித்துரை. இதுதான் இந்த டபுள் ஆக்ட்டின் ஒரேயொரு வித்தியாசம். மற்றபடி நடிப்பில் ஒன்று போலத்தான். விஜய் ஆண்டனியின் நடிப்பு ஒரே மாதிரியாகவே தொடர்ந்து கொண்டேயிருப்பது, இப்போதே அலுப்பு தட்டத் துவங்கியிருக்கிறது.
நல்ல கதைகளில் தொடர்ந்து நடித்தாலும், அவருடைய நடிப்பில் கொஞ்சமும் வித்தியாசம் காட்டாமல் ஒன்று போலவே இருப்பது அயர்ச்சியை கொடுக்கிறது. காதல் காட்சிகளிலும் ஒரே முகம், கோபமடைந்தாலும் ஒரே முகம், சாதாரணமாக இருந்தாலும் ஒரே முகம் என்றால் எப்படித்தான் பார்ப்பது..?
திரைக்கதையில் இருக்கும் சில டிவிஸ்ட்டுகளால்தான் படத்தை ரசித்து பார்க்க முடிந்திருக்கிறது. இடைவேளை பிளாக்கில் தம்பித்துரை ரவுடி என தெரிவது.. சேரன் ராஜிடம் வந்து கடையைத் திருப்பிக் கொடுக்கும்படி அண்ணாத்துரை கேட்கும் காட்சி.. கிளைமாக்ஸில் தன்னைத் தேடி வந்து காப்பாற்ற நினைக்கும் ஈஸ்வரியிடம் ‘உண்மையைச் சொல்லி விடாதே’ என்று சொல்லி அனுப்பி வைக்கும் காட்சி.. என்று சிலவற்றில் மட்டுமே படத்தில் ஆழ்ந்து ரசித்து பார்க்க முடிந்திருக்கிறது.
எந்தவொரு நடிகர் எவ்வளவு பெரிய திறமைக்காரராக இருந்தாலும் நல்லதொரு இயக்குநர் கிடைத்தால்தான், அவரது திறமை வெளிவரும் என்பார்கள். அதுபோல் இந்தப் படத்தின் இயக்குநர் சீனிவாசனால் தமிழ்ச் சினிமாவுக்கு இன்னொரு அற்புதமான நடிகர் கிடைத்திருக்கிறார்.
அவர் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சு.செந்தில்குமரன். ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் இவரது நடிப்புதான் மிக அதிகமாக பேசப்படும் அளவுக்கு படமாக்கப்பட்டிருக்கிறது. இவர் வரும் காட்சிகள் அனைத்திலும் அடுத்தவர்களையே பார்க்க விடாத அளவுக்கு தன் நடிப்பைக் காண்பித்திருக்கிறார் செந்தில்குமரன். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் நண்பா..!
ஜூவல் மேரி ஈஸ்வரியாக நடித்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் வந்து படத்தைத் துவக்கி வைத்து, கிளைமாக்ஸிலும் வந்து படத்தை முடித்து வைக்கிறார். டயானா சம்பிகா ஒருவித திராவிட அழகில் ஜொலிக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேரும் எந்த நடிகையும் சோடை போனதில்லை. இதற்கு மகிமாவும் ஒரு சான்று. தான் எதற்காக அண்ணாத்துரையை விரும்புகிறேன் என்று சொல்லுமிடத்தில் ஒரு பரிதாப உணர்வை வரவழைத்திருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் அப்பாவாக மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு நளினிகாந்த் நடித்திருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு பல தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்த உதய் ராஜ்குமாரை மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு இந்தப் படத்தில் அதே வில்லனாக பார்க்க முடிகிறது. ராதாரவி இந்தப் படத்திற்கு தேவையே இல்லாத கேரக்டர். ஆனாலும் தனது பாணியிலான வசன உச்சரிப்பாலும், நடிப்பாலும் தனது கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறார்.
வட்டிக்குப் பணம் கொடுக்கும் சேரன் ராஜ், நண்பன் காளி வெங்கட் இருவரும் அவரவர் கேரக்டர்களுக்கேற்ற நடிப்பை நடித்திருக்கிறார்கள். சேரன் ராஜ் ஒரு படி மேலே. வில்லத்தனத்தில் ஊறியிருக்கிறார். இரட்டையர்களின் அம்மாவான ரிந்து ரவி, ஒரு தாயின் உணர்ச்சிகளையும், தவிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தில்ராஜின் ஒளிப்பதிவில் படத்தின் துவக்கக் காட்சிகளில் அழகும், பாடல் காட்சிகளில் இன்னும் அழகும் தெரிகிறது. சண்டை காட்சிகளில் சண்டை இயக்குநருக்கு ஈடாக ஒளிப்பதிவாளர் தனது கடும் உழைப்பைக் கொட்டியிருப்பது தெரிகிறது. இதே சண்டை காட்சிகளுக்காக படத் தொகுப்பாளரான விஜய் ஆண்டனியை பாராட்டியே தீர வேண்டும்.
‘தங்கமா வைரமா என்ன சொல்ல’ பாடலும், ‘ஓடாதே’ பாடலும் கேட்கும் ரகங்கள். பின்னணி இசையில் அசத்தலான பி.ஜி.ம்மை வாசித்து படத்திற்கு கெத்தைக் கூட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
தனது குடிகார நிலைமையை ஈஸ்வரியிடம் விளக்கி அவளை ஊரைவிட்டுப் போகச் சொல்வதும், இதே காரணத்தைச் சொல்லி மகிமாவிடம் தன்னை மறந்துவிட கேட்பதும் அண்ணாத்துரை கேரக்டர் மீது ஒரு ஈர்ப்பையும், மரியாதையையும் உண்டாக்கினாலும் அது தவறு என்று சொல்லாமல் விடுவது தப்பில்லையா இயக்குநரே..?
ஜெயிலில் ஏழு வருடங்கள் இருந்தும் குடும்பத்தினர் அண்ணாத்துரையைப் பார்க்க வராததும், காளி வெங்கட் ஒரு வார்த்தைகூட நடந்தவைகள் பற்றி அவரிடம் சொல்லாததும் திரைக்கதையில் இடிக்கிறது.
அண்ணாத்துரை கடைசியில் தம்பித்துரையை நிச்சயமாக காப்பாற்றப் போகிறார் என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு திரைக்கதையை எழுதியிருப்பது சற்று ஏமாற்றமளிக்கிறது.
அண்ணாத்துரை கிளைமாக்ஸ் காட்சியில் அந்தப் பள்ளிக் கூடத்தில் இருக்கிறார் என்பதை எப்படி ஈஸ்வரியும் மற்ற போலீஸாரும் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை இயக்குநர் பதிவு செய்யவில்லை என்பது மிகப் பெரிய லாஜிக் ஓட்டை.
இடைவேளைக்கு முன்புவரையிலும் குடும்பக் கதையாகவே சென்று பின்பு அடிதடி, அடியாள், வெட்டுக் குத்து, அரசியல் என்று பல பக்கங்களிலும் கதையை இழுத்துச் செல்வதால் படம் ஒரு கட்டுக்குள் நிற்காமல் அலைபாய்ந்துவிட்டது..!
அண்ணாத்துரை என்ற பெயருக்கு எந்த கெட்டப் பெயரையும் இந்தப் படம் பெற்றுத் தரவில்லை என்பது மட்டுமே ஆறுதலான விஷயம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment