பைரவா - சினிமா விமர்சனம்

13-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த ‘பைரவா’ படத்தை விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரித்திருக்கிறார்.
விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில்,  ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோகிதாஸ்வா, சதிஷ், அபர்னா  வினோத், சிஜு ரோசலின், பாப்ரிகோஷ்,  மைம்கோபி, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சுகுமார், படத் தொகுப்பு – பிரவீண், இசை – சந்தோஷ் நாராயணன், பாடல்கள் – வைரமுத்து, கலை இயக்கம் – பிரபாகரன், சண்டை பயிற்சி   –  அனல் அரசு, நடனம்  _  தினேஷ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹமது. தயாரிப்பு மேற்பார்வை – தாண்டவ கிருஷ்ணன் & உதயகுமார், முதன்மை தயாரிப்பு நிர்வாகி – குமரன், தலைமை நிர்வாகி – ரவிச்சந்திரன்.

அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், சொந்த ஊர் என்று எந்த பின்னணியும் இல்லாமல் சென்னையில் ஒரு மேன்ஷனில் சதீஷுடன் குடியிருக்கிறார் விஜய்.
ICIC என்னும் வங்கியில் வாராக் கடனை வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார். வங்கியின் மேனேஜரான ஒய்.ஜி.மகேந்திரன், தொகுதி எம்.எல்.ஏ.வின் சிபாரிசில் தண்ணீர் லாரி வாங்க மைம் கோபிக்கு 24 லட்சம் ரூபாயை கடனாக தந்திருக்கிறார். ஆனால் அந்தக் கடனுக்கு இன்றுவரையிலும் மைம் கோபி வட்டிகூட கட்டவில்லை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பிரச்சினையாகிறது.
ஒய்.ஜி.மகேந்திரன் மைம் கோபியை நச்சரிக்க.. அவரோ தான் கடன் தொகைக்கு பிணையாக கொடுத்த இடத்தின் பத்திரங்களோடு வந்தால் கடன் தொகையை மொத்தமாக செட்டில் செய்வதாகச் சொல்கிறார். அதை நம்பி செல்லும் ஒய்.ஜி.மகேந்திராவை ஏமாற்றி பத்திரங்களை பிடுங்கிக் கொண்டு அடித்து, அவமானப்படுத்தி அனுப்புகிறார் மைம் கோபி.
இதனை விஜய்யிடம் சொல்லும் ஒய்.ஜி.மகேந்திரன் அந்தத் தொகையை வசூலித்து தரும்படி கேட்கிறார். விஜய்யு மைம் கோபி அண்ட் கோ-விடம் அவர்கள் ஒய்.ஜி.மகேந்திரனிடம் விளையாடியதுபோலவே விளையாடி பணத்தை மொத்தமாகப் பெற்று வந்து கொடுக்கிறார்.
அடுத்த மாதமே ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுக்குத் திருமணம் நடக்கிறது. அத்திருமணத்திற்கு மணமகளின் நண்பியான மலர்விழி என்னும் கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து வருகிறார். அவருக்கு திடீரென்று ஏற்பட்ட ஒரு இடையூறில் இருந்து காப்பாற்றி மண்டபத்திற்கு அழைத்து வருகிறார் விஜய்.
கீர்த்தியைப் பார்த்தவுடன் காதலாகி டூயட்டும் பாடுகிறார் விஜய். ஊர் திரும்ப நினைக்கும் கீர்த்தியை, மத்திய அமைச்சரின் மகன் பார்க்க வரும்போது ஒரு மர்ம கும்பல் அவனை வெட்டுகிறது. இதனை விஜய் பார்த்துவிடுகிறார்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து தப்பித்து கோயம்பேட்டுக்கு பஸ் ஏற செல்கிறார் கீர்த்தி சுரேஷ். கும்பலும் அவரைத் துரத்த.. விஜய்யும் பின் தொடர்கிறார். அங்கே மத்திய அமைச்சரே நேரில் வந்து கீர்த்தியை மிரட்டி அவரை கொலை செய்ய முயலும்போது ஒரு போன் கால் வருகிறது.
அந்த போனில் பேசியவுடன் மத்திய அமைச்சரே பயந்து போய் பேசாமல் போய்விட விஜய் கீர்த்தியைப் பற்றி விசாரிக்கிறார். இப்போது கீர்த்தி தனது வாழ்க்கைக் கதையை பிளாஷ்பேக்கில் சொல்கிறார்.
பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் கிடைத்தும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத்தால் கன்னியாகுமரி அருகேயிருக்கும் பி.கே. மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார் கீர்த்தி. அதே கல்லூரியில் கேரளாவைச் சேர்ந்த அபர்ணா வினோத்தும் சேர்கிறார். நன்கொடையாக 24 லட்சங்களை கொட்டித்தான் இருவரும் சேர்க்கப்படுகிறார்கள்.
கல்லூரியில் அடிப்படை வசதியே இல்லாமல் இருப்பதும், நோயாளிகள் வராமல் இருப்பதும், ஒரு மருத்துவக் கல்லூரிக்கான தகுதியே இல்லாமல் இந்தக் கல்லூரி இருப்பதும் கல்லூரியில் சேர்ந்த பிறகே அனைவருக்கும் தெரிய வருகிறது.
இது குறித்து மீடியாக்களில் செய்தி பரவ.. இந்திய மருத்துவ கவுன்சிலில் இருந்து சோதனைக்காக வந்து கல்லூரியின் வண்டவாளங்களை தெரிந்து கொள்கின்றனர் கவுன்சிலின் உறுப்பினர்கள். ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரு வீக்னெஸ்ஸை பயன்படுத்தி கல்லூரிக்கு அனுமதி பெற முயல்கிறார் கல்லூரியின் நிறுவனரான ஜெகபதி பாபு.
இதற்காக பொய் சொல்லி அபர்ணா வினோத்தை கல்லூரி ஹாஸ்டலில் இருந்து நடு இரவில் அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையே ஆற்றங்கரையோரம் அபர்ணா வினோத் கொலையாகிக் கிடக்கிறார். ஆனால் இதனை தற்கொலை என்று சொல்லி மூடி மறைக்க முயல்கிறார் ஜெகபதி பாபு.
அபர்ணா வினோத்தின் பெற்றோர் துணையுடன் இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த வழக்கில் கூடிய சீக்கிரம் ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அந்த ரவுடிகள்தான் இப்போது என்னை எங்கே போனாலும் பாலோ செய்து வருவதாகச் விஜய்யிடம் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இதைக் கேட்டு கோபப்படும் விஜய் திருநெல்வேலிக்கே நேரில் வந்து ஜெகபதிபாபுவுக்கு தண்ணி காட்டுவதாக அவரிடமே சொல்லிவிட்டு திருநெல்வேலிக்கு புறப்புடுகிறார். சொன்னதை செய்து காண்பித்தாரா..? இல்லையா..? ஜெகபதிபாபு என்ன ஆனார் என்பதெல்லாம் இடைவேளைக்கு பின்னான கதை..!
விஜய் தன் ரசிகர்களுக்கு குறை வைக்காமல் தனது பணியை நிறைவு செய்திருக்கிறார். பன்ச் வசனங்கள் பேசுவதைக்கூட கொஞ்சம் அடக்கிக் கொண்டு படத்துக்கான முத்திரை வசனங்களைத்தான் அதிகம் பேசியிருக்கிறார். “சிறப்பு.. மிகவும் சிறப்பு..”, “என்கிட்ட ஒரு கெட்டப் பழக்கம் இருக்கு. சொன்ன வார்த்தையை காப்பாத்துவேன்னு..”, “நான் மட்டும் வரேன்.. தனியா..” போன்ற வசனங்கள் சிச்சுவேஷனுக்கு ஏற்றதுதான் என்றாலும் அவருடைய ரசிகர்களுக்கு இதன் அர்த்தம் நன்கு புரியும்..!
புதிய ஹேர்ஸ்டைல் பழைய விஜய்யின் அழகை குறைப்பதுபோல இருந்தாலும், நடனம், சண்டை காட்சிகளில் குறைவில்லாமல் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். முதல் சண்டை காட்சியை வித்தியாசமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்திருப்பதால் பெரிதும் ரசிக்க முடிகிறது.
கீர்த்தி சுரேஷிடம் ரொமான்ஸுக்கான காட்சிகள் குறைவு என்றாலும், நிறைவாக வீட்டு வாசலில் மெளத் மெளனிங்கில் பேசும் காட்சிகள் கலகலப்பு.. சதீஷுடன் வார்த்தை விளையாட்டு  காமெடியில் கலகலப்பூட்டியிருக்கிறார். நடன காட்சிகளில் இன்னமும் இளமை துள்ளல் விஜய்க்கு மட்டுமே இருக்கிறது.
கீர்த்தி சுரேஷுக்கு இந்தப் படத்தில் நடிக்கவும் மிகப் பெரிய அளவில் ஸ்கோப் உள்ளது. ஆனாலும் அடிக்கடி இந்தப் படம் விஜய் படம் என்பது ஞாபகப்படுத்தப்பட்டு வருவதால் இவரது நடிப்பின் மீதான ஆர்வம் போய், விஜய்யின் ரியாக்ஷன் மேலேயே கண்ணாக இருப்பதால் ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பில்லை போலும். ஆனாலும், கீர்த்தி பெஸ்ட்டாகவே நடித்திருக்கிறார்.
வில்லன் ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் விஜய்க்கு சவாலே விடுகிறார். செய்த கொடுமைகளை “நான் செய்த மாதிரியும்…” என்று இழுத்து, இழுத்து பேசுவதும்.. ஒவ்வொரு முறையும் விஜய் அண்ட் கோ-வை ஏமாற்றும் வேலை செய்தும் இறுதியில் திரைப்படத்தின் கதைப்படி தோற்பதுமாக இவருடைய நடிப்பில் குறையில்லை. சரியான வில்லன் என்று சொல்ல வைத்திருக்கிறார்.
இவருக்கே வில்லனாகியிருக்கிறார் டேனியல் பாலாஜி. தனது மனைவி மீதிருக்கும் பாசத்திற்கு மட்டும் குறுக்கே யார் வராமலும் பார்த்துக் கொள்பவர்.. இவரது மனைவி இறந்தபோது ஜெகபதி பாபு நைட்ரஸ் ஆக்சைடின் பயனாய் சிரித்துக் கொண்டே வருவதும்.. தொடர்ந்து விஜய்யின் அன்புப் பிடியில் சிக்கி கடைசியாய் பரிதாபமாய் உயிரைவிடுவதுமாக தனது நடிப்பை நிறைவு செய்திருக்கிறார்.
புளிப்பாகாத நகைச்சுவைக்கு சதீஷ், ஒரேயொரு காட்சியில் மட்டுமே தன்னை நிரூபித்திருக்கும் தம்பி ராமையா, சில காட்சிகளுக்கு மட்டும் ஸ்ரீமன், நகைச்சுவை என்கிற பெயரில் ஏதும் இல்லாமல் நடித்திருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என சிலவைகள் அல்லவையாகவே இருக்கின்றன.
ஒய்.ஜி.மகேந்திரன், ஹரீஷ் உத்தமன், அபர்ணா வினோத், சிஜா ரோஸ் ஆகியோர்தான் திரைக்கதை நகர்வதற்கு பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கிறார்கள். சிஜா ரோஸே ஒரு கதாநாயகிதான். இவர் ஏன் இப்படி சைடு கேரக்டரில் நடிக்க வருகிறார் என்று தெரியவில்லை.
மைனா சுகுமாரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. விஜய், கீர்த்தி, சிஜா ரோஸ் என்று மூன்று அழகர்களையுமே இன்னும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் நடன அமைப்பு மற்றும் உடை வடிவமைப்பின் மூலம் கீர்த்திக்கு மேலும் புதிய ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது இந்தப் படம்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘வரலாம் வா பைரவா’ பாடலும், ‘பப்பரப்பா’ பாடலும் ஓகே ரகம்.. ‘வரலாம் வா’ பாடல் தீம் மியூஸிக்காக பல இடங்களில் சிதறி, சிதறி ஒளிபரப்பாகி விஜய் ரசிகர்களை மட்டுமே சந்தோஷப்படுத்தியிருக்கிறது. இறுதி பாடலில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் செம்ம ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். இவர்களை சிறப்பாக ஆட வைத்த நடன இயக்குநர் தினேஷுக்கு ஒரு ஷொட்டு.
‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலமாக விஜய்யுடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் பரதன். சமூக நோக்கத்தை அடிப்படையாக வைத்துதான் தனது அடுத்தடுத்த படங்கள் வெளியாக வேண்டும் என்கிற கொள்கையை ‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கையில் எடுத்திருக்கிறார் விஜய்.
அதன்படியே இந்தப் படமும் உருவாகியிருக்கிறது. மருத்துவக் கல்வியை கூறு போட்டு விற்கும் வியாபார முதலைகளை அம்பலப்படுத்தும் திரைக்கதையை அழுத்தமாகவும், அதே சமயம் அதற்கு உறுதுணையாக வீரியமிக்க வசனங்களின் மூலமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குர் பரதன். குறிப்பாக விஜய் பேசும் வசனங்கள், கோர்ட் காட்சிகள் ஆகியவை ரசிக்க வைக்கிறது.
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவம், கள்ளக்குறிச்சியில் சித்த மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முறைகேடுகளால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள்.. டி.டி.நாயுடுவின் மருத்துவக் கல்லூரியில் நடந்த முறைகேடுகள்.. என்று இதுவரையிலும் நடைபெற்ற பல அநியாயங்களையும் வசனங்களின் மூலமாக வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இப்போதெல்லாம் ‘கல்வித் தந்தை’ என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்பவர்களெல்லாம் முன்னாளில் பெரிய ரவுடியாகவும், திருடனாகவும்தான் இருந்திருக்கிறார்கள். முன்பு முகமூடி போட்டு கொள்ளையடித்தவர்கள்.. இப்போது முகமூடி போடாமலேயே கல்வி நிறுவனங்களை வைத்து நடத்தி கொள்ளையடித்து வருகிறார்கள்.
‘ஒன்றாம் வகுப்பில் பிள்ளைகளை சேர்க்கும்போதே அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் சிறந்தவர்கள்தானா என்று தேடிப் பார்க்கும் நாம், மருத்துவம் சொல்லிக் கொடுக்கும் கல்லூரிகளை நடத்தக் கூடியவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தானா என்பதை ஏன் பார்ப்பதில்லை?’ என்ற மில்லியன் டாலர் கேள்வியை கேட்டிருக்கிறார் இயக்குநர் பரதன். பாராட்டுக்கள்ண்ணே..!
ஆனால் திரைக்கதைதான் ‘கத்தி’ படத்திற்கு முந்தைய விஜய் படங்களை ஞாபகப்படுத்துகிறது. பழைய டெம்ப்ளேட் திரைக்கதையில் இருந்து மாறுபட்டு தொடர்ச்சியாக 4 படங்களை கொடுத்திருக்கும் விஜய்.. மீண்டும் பழைய திரைக்கதைக்கே போயிருப்பது பெரிய வருத்தமான விஷயம்..!
அப்படியிருந்தும் சில திரைக்கதை டிவிஸ்ட்டுகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. நான் கடவுள் ராஜேந்திரனிடமிருந்து தப்பிக்க பக்கத்து மொட்டை மாடியில் இருந்து வீடியோ எடுப்பதாகச் சொல்லி மாட்டிவிடுவது.. ஜெகபதி பாபுவின் வீட்டில் வருமான வரித்துறை என்கிற பெயரில் சோதனையிட்டு பணம், நகைகளை கொள்ளையடிப்பது.. ஜெகபதி பாபுவை பாராட்டி போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டி அவரை குழப்பமாக்குவது.. சிஜா ரோஸி, ஹரீஷ் உத்தமன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. டேனியல் பாலாஜியின் கேரக்டர் ஸ்கெட்ச்.. நீதிமன்றத்தில் இருந்த தன்னை பெட்ரோல் ஊற்றி எரிக்க திட்டம் தீட்டும் ஜெகபதி பாபுவின் ஆட்களுக்கு விஜய் தண்ணி காட்டுவது.. பிரதமரை கொலை செய்யப் போவதாக ஜெகபதி பாபு மீது பழியைப் போட்டு விஜய் செய்யும் டிராமா.. இப்படி சில காட்சிகளில் லாஜிக்கையும் மீறி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஆனால் முற்பாதியில் தேவையில்லாத பல காட்சிகள் ஆங்காங்கே வருவது படத்தின் வேகத்திற்கு பெரும் தடையாக உள்ளது. முதல் பாதியில் வரும் அந்த நீண்ட பிளாஸ்பேக் காட்சிகளை இன்னமும் அதிகமாக நறுக்கியிருக்கலாம்.
கீர்த்தி பிளாஷ்பேக் சொல்லும் காட்சிகளை கோயம்பேடு பேருந்து நிலையம் இல்லாமல், வேறு எங்காவது வைத்திருந்தால் கொஞ்சம் நம்பகத் தன்மையுடன் இருந்திருக்கும். இவ்வளவு நேரமாக அந்த ஒரே இடத்துல இருந்தே கதை சொன்னால் எப்படிங்கோ இயக்குநரே..?
படத்தில் 25 நிமிட காட்சிகளை நீக்கினால்தான் இந்தப் படம் கிரிப்பாக ஒரு பரபரப்புத் தன்மையுடன் இருக்கும்.
‘பைரவா’ விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..!

0 comments: