அதே கண்கள் - சினிமா விமர்சனம்

27-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
கலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர், ஷிவதா நாயர் இருவரும் நாயகிகளாகவும் நடிக்க, பால சரவணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ‘ஊமை விழிகள்’ படத்தின் இயக்குநரான அரவிந்தராஜ், இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் அபிஷேக், சஞ்சய், லிங்கா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், கலை – விஜய் ஆதிநாதன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், ஒளிப்பதிவு – ரவிவர்மன் நீலமேகம், இசை – ஜிப்ரான், பாடல்கள் – உமாதேவி, பார்வதி, படத் தொகுப்பு – லியோ ஜான்பால், வசனம் – முகில், கதை, திரைக்கதை, ரோகின் வெங்கடேசன், முகில், தயாரிப்பாளர் – C.V.குமார், இயக்கம் – ரோகின் வெங்கடேசன். இவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தனிடம் இணை இயக்குநராகப் பயின்றவர்.
1967-ம் ஆண்டு ஏவி.எம். தயாரிப்பில் ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் ஜாவர் சீதாராமனின் கதை வசனத்தில் ஏ.சி.திருலோகசந்தரின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘அதே கண்கள்’.
சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படங்கள் அதிகமாக தமிழில் வராத அந்தக் காலத்தில் வெளியான இந்தப் படம், ஏவி.எம்.மிற்கு மிகப் பெரிய லாபத்தையும், தமிழ்ச் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம் என்பதையும் பெற்றுக் கொடுத்த்து.
அதே பெயரில் வெளிவந்திருக்கும் இந்தப் படமும் இந்தாண்டின் துவக்கத்தில் வந்திருக்கும் வெற்றிப் படம் என்பதோடு தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு பெருமைமிக்க படம் என்கிற பெயரையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

ஹீரோ கலையரசன் கண் பார்வையற்றவர். தனது 15-வது வயதில் ஏற்பட்ட திடீர் காய்ச்சலினால் கண் பார்வையை இழந்தவர். அப்படியே சோர்ந்துவிடாமல் மேலும், மேலும் படித்து முன்னேறி இப்போது இரவு நேர ரெஸ்ட்டாரெண்ட்டை சொந்தமாக நடத்தி வருகிறார்.
இவரது நீண்ட நாள் தோழி ஜனனி ஐயர். குடும்ப நண்பி. இவர் கலையரசனை ஒரு தலையாக காதலித்து வருகிறார். ஆனால் இதற்கு மறுப்பும் சொல்லாமல் சம்மதமும் தெரிவிக்காமல் இருக்கிறார் கலை. இவரது அம்மாவிற்கு கலையரசனுக்கும், ஜன்னிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் கலையரசன் சம்மதம் சொல்லாததால் அது இழுபறியில் உள்ளது.
இந்த நேரத்தில் ஒரு நாள் இரவில் கடையைப் பூட்டிவிட்ட நேரத்தில் கலையரசனுக்கு அறிமுகமாகிறார் ஷிவதா. தெருவோரத்தில் ஒரு பெரியவர் பசியினால் வாடுவதாகவும், அவருக்குக் கொடுப்பதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா என்று பரிவோடு கேட்கிறார் ஷிவதா.
ஷிவதாவின் கனிவான பேச்சு.. மரியாதையான நடத்தை கலைக்கு ஒரு புதிய உணர்வை அவருக்குள் தோற்றுவிக்கிறது. இதன் பின்னர் ஷிவதா தினம், தினம் அங்கே வருகிறார். அவருக்காக மிச்சமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொடுக்கிறார் கலை. இருவரும் பழகத் துவங்க.. அது கலைக்கு மட்டும் காதலாக உருவெடுக்கிறது.
தன் காதலை வெளிப்படுத்த கலை காத்திருக்கும் அந்த நாளில் ஷிவதா கண்களில் கண்ணீருடன் அவரைத் தேடி வருகிறார். தனது அக்காவின் திருமணத்திற்காக வாங்கிய கடனைக் கட்டாததால் கடன்காரர்கள் தங்களை மிரட்டுவதாகவும், வீட்டுக்கு வந்து தங்களை கேவலமாகப் பேசுவதாகவும் சொல்லி அழுகிறார்.
இவரது பேச்சில் மனமிறங்கிய கலை, தான் அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுவதாகச் சொல்கிறார். ஷிவதா சந்தோஷமாக திரும்பிச் செல்கிறார். அடுத்த சிறிது நேரத்திலேயே கலையரசன் ஒரு சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
இந்த விபத்தினால் அதிர்ஷ்டவசமாக அவருடைய கண் விழிப் படலம் மீண்டும் செயல்படத் துவங்க இன்னொரு ஆபரேஷனை செய்து கண் பார்வையைப் பெறுகிறார் கலை. இந்த நேரத்தில் ஷிவதாவை நினைத்து ஏங்குகிறார் கலை.
ஷிவதாவும் தன்னைத் தேடி வரவில்லை என்பதால் அவருக்கு என்ன ஆனதோ என்று கவலைப்படுகிறார் கலை. போலீஸிடம் புகார் கொடுக்காமல் தேடுகிறார். ஷிவதா கிடைக்காத வருத்தத்தில் இருக்கும் கலையரசனிடம் அவருடைய அம்மா இதகமாகப் பதமாகப் பேச கலையரசன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். உடனேயே ஜனனிக்கும், கலையரசனுக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து நிச்சயத்தார்த்தமும் முடிகிறது.
இந்த நேரத்தில் ஷிவதாவின் அப்பா கலையைத் தேடி வந்து தனக்குக் கடன் கொடுத்தவர்கள் ஷிவதாவை கடத்தி வைத்திருப்பதாகச் சொல்லி அழுகிறார். இதனால் தன் வீட்டில் இருந்த நகைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஷிவதாவை காப்பாற்ற முனைகிறார் கலை.
அங்கே நடக்கும் களேபரத்தில் ஷிவதாவின் அப்பா குண்ட்டிபட்டு கீழே விழுக.. கலையும் தாக்கப்படுகிறார். இது வெளியில் தெரிந்தால் ஷிவதாவின் அப்பா சாவுக்கு தான் காரணமாகிவிடுவோமே என்றெண்ணி இதனை மூடி மறைக்கிறார் கலை.
இதையறியும் ஜனனி கலையுடனான திருமண நிச்சயத்தார்த்தத்தை முறித்துக் கொண்டு போய்விடுகிறார். ஆனாலும் கலையரசனுக்குள் ஷிவதாவை கண்டறிய வேண்டும் என்கிற ஆசை நெருப்பாய் எரிகிறது. இந்த நேரத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் ஷிவதாவின் அப்பா இறந்து போயிருப்பதை டிவிக்களில் பார்க்கிறார் கலை.
உடனேயே கன்னியாகுமரிக்கு ஓடுகிறார் கலை. அங்கே கான்ஸ்டபிளாக இருக்கும் பால சரவணனின் துணையுடன் அந்த வழக்கைத் துப்புத் துலக்க முயல்கிறார். இறுதியில் அவருடைய ஷிவதாவை அவர் கண்டறிந்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தின் சுவையான திரைக்கதை.
‘தெகிடி’ என்னும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த பாணியிலேயே இந்தப் படத்தையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார். அவருக்கு எங்களது நன்றி.
ஒரு சுவையான சஸ்பென்ஸ், திரில்லருக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாக 2 மணி நேரப் படத்தில் கலவையாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரோஹன் வெங்கடேசன். இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் பாசறையில் இருந்து வெளியில் வந்தவர் என்பதால் நிறைய தொழில் நுட்ப வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை ஹை ஸ்டைலிஷாக கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள் இயக்குநரே..!
கண் பார்வையற்றவராக வரும் நேரங்களில்தான் கலையரசனின் நடிப்பு மிகவும் ரசிக்க வைக்கிறது. மிகக் குறைவான நேரமே அந்த கேரக்டர் என்றாலும் கலையரசனுக்கு இது மிகவும் முக்கியமான படம்தான்.
ஜன்னி ஐயர் வழக்கம் போல ஒரு காதலியாக நடித்திருக்கிறார். நிச்சயத்தார்த்தம் முடிந்த நிலையிலும் ஷிவதாவை தேடி சென்று அடி வாங்கி பரிதாபமாக வந்த கலையரசனிடம் ஆவேசமாகப் பேசி தனது கல்யாணத்தை தானே ரத்து செய்துவிட்டு போகும் வேகத்தில் மனதைத் தொட்டுள்ளார்.
அதேபோல் மனம் கேட்காமல் திரும்பவும் கன்னியாகுமரிக்கு வந்து கலையரசனுடன் இணைந்து துப்பு துலக்கும பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது சுகம். வெல்டன்.
படத்தின் மிக முக்கிய தூண் வில்லியாக நடித்திருக்கும் ஷிவதா நாயர்தான். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் நமக்கு தெரியும் முன்பாக இவரா இப்படி என்று கேட்கும் அளவுக்கு ஒரு சராசரி காதலியாக, மகளாக.. அப்பாவியாய் அப்படியொரு நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.
அதற்கு நேர்மாறாக வில்லி கேரக்டரில் வரும்போது பதைபதைக்க வைக்கிறார். ஹோட்டலில் புதிய ஏமாளியிடத்தில் கண்ணீர் விட்டு அழுது பேசும்போது நொடிக்கொரு முறை தனது குணாதிசயத்தை மாற்றி, மாற்றிக் காட்டி அப்ளாஸ் வாங்குகிறார்.
நகைக் கடை காட்சி சில நிமிடங்களே என்றாலும் அதில் அப்படியொரு நடிப்பு. தன் வாழ்க்கையின் போக்கை மாற்றிய விஷயத்தை கோபத்துடன் சொல்லி தனக்குத்தானே அனுதாபம் தேடிக் கொள்ளும் காட்சியிலும், அப்பனும், மகனும் தனக்குத் தெரியாமல் ஏதோ சதி வேலை செய்திருப்பதை அறிந்து அதனை கண்டறிய காரை ஓட்டிக் கொண்டே அவர் செய்யும் வில்லத்தனத்திலும் சபாஷ் போட வைத்திருக்கிறார்.  
குளோஸப் காட்சிகளில் அப்படியொரு அழகு. தமிழ் இயக்குநர்கள் இவரை இன்னும் நல்லவிதமாக பயன்படுத்தலாமே..? நடிகைகளே இல்லை என்று தமிழே தெரியாதவர்களை வைத்துக் கொண்டு மல்லுக்கட்டுவதைவிடவும், இவர் மாதிரியான நடிகைகளை நடிக்க வைத்தால், இயக்குநர்களுக்கான வேலையை இவர்களே பெரிதும் குறைத்து வைப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
தனக்கு மிகப் பெரிய பெயர் கிடைக்கப் போகிறது.. பாராட்டு கிடைக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பில் வழக்கிற்கு பெரிதும் உதவும் பால சரவணனின் நடிப்பும், டைமிங் காமெடியும் படத்தின் பிற்பாதியை மேலும் சுவாரஸ்யமாக்கியிருக்கின்றன.
ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு பலே ரகம். முதல் காட்சியில் இருந்து முடிவுவரையிலும் இமை கொட்டாமல் ஸ்கிரீனை பார்க்க வைக்கிறது. பாராட்டுக்கள். காதைக் கிழிக்கும் இசையெல்லாம் இல்லாமல் இதமாக, மெல்லியதாக இசையமைத்து தந்திருக்கும் ஜிப்ரானுக்கும் ஒரு நன்றி..! பாடல்கள் தேவைப்படாத படம் என்பதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமில்லை. ஆனாலும் ஷிவதா வரும் காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கும் தீம் மியூஸிக் பரபரக்க வைத்திருக்கிறது எனலாம்.
படத் தொகுப்பாளர் லியோ ஜான் பாலின் உதவியால் படத்தின் வேகம் குறையாமல் பரபரப்பின் வீச்சு குறையாமல் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இறுதிக் காட்சியில் கண் பார்வையற்று இருந்தபோது கலையரசனுக்கு பெரிதும் உதவிய நுண்புலன்களின் உதவியோடு அவர் சண்டையிடுவதும், ஷிவதா நாயரின் சண்டை காட்சிகளும் எதிர்பாராதது. ஆனாலும் ரசிக்க வைத்திருக்கிறது.
சின்ன பட்ஜெட்டில் அனைவரையும் திருப்திபடுத்தும்வண்ணம் சிறந்த கதை, திரைக்கதை, இயக்கத்தோடு வந்திருக்கும் இந்தப் படம் இந்தாண்டின் முதல் வெற்றிப் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த அதே கண்களை காணவும் கண்கள் கோடி வேண்டும். பார்க்கத் தவறாதீர்கள்..! 

0 comments: