மோ - சினிமா விமர்சனம்

01-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வருடக் கடைசியில் ஒரு முத்தான பேய்ப் படம். ‘டார்லிங்’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ வரிசையில் நகைச்சுவையும், திரில்லரும் கலந்து கட்டி அடித்திருக்கும் படம் இது.
‘மோகனவதனி’ என்னும் பேயின் உண்மையான பெயரை சுருக்கித்தான் ‘மோ’ என்று வைத்திருக்கின்றனர்.

சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா மூவரும் பணம் சம்பாதிப்பதற்காக போலீஸிடம் சிக்காத அளவுக்கு ஏமாற்று வேலைகள் செய்து பிழைத்து வருகின்றனர்.
கிறித்துவ அல்லேலூயா கோஷ்டியை உருவாக்கி அமெரிக்காவில் இருந்து பாஸ்டரை வரவழைத்து ‘சுகமளிக்கிறேன்’ பாணியில் நிகழ்ச்சியை நடத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள். அதுவும் ஒரு கட்டத்தில் போணியாகாமல் போக.. இப்போது அவர்கள் கையில் எடுத்திருப்பது பேய் விரட்டுவது.
ஒரு அபார்ட்மெண்ட்டில் பேய் இருப்பதாக இவர்களே புரளியை கிளப்பிவிடுவது. பின்பு அந்த அபார்ட்மெண்ட்வாசிகளிடத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு பேயை விரட்டும் வேலையைச் செய்கிறார்கள். இதில் இவர்களுக்குக் கூட்டு சினிமாவில் மேக்கப்மேனாக இருக்கும் முனீஸ்காந்த். பேயாக வந்து பயமுறுத்துவது துணை நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் செல்வா, பாண்டிச்சேரியில் ஒரு பழங்காலத்து பள்ளிக் கட்டிடத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார். அதே நேரம் அந்தப் பள்ளியை முன்னாள் எம்.எல்.ஏ.வான செந்தில்நாதனும் வாங்க முயற்சிக்கிறார்.
இந்த நேரத்தில்தான் ஏற்கெனவே இந்த பேய் விரட்டும் பிரச்சினையால் ஏமாற்றப்பட்டிருக்கும் செல்வா… ரமேஷ் திலக், ரவி கும்பலை பொறி வைத்துப் பிடிக்கிறார். அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கும்போது அந்த பாண்டிச்சேரி பள்ளி மேட்டர் அவரது கவனத்துக்கு வருகிறது.
செந்தில்நாதன் பேய், பிசாசு, மாந்தரீகம், ஜாதகம், ஆகியவற்றில் நம்பிக்கையுள்ளவன் என்பது செல்வாவுக்கு தெரிய வருகிறது. உடனேயே அந்த பழைய பள்ளிக்கூட கட்டிடத்தில் பேய் இருப்பது போல் செட்டப் செய்து செந்தில்நாதனை பயமுறுத்திவிட்டால், அதன் பின்பு செந்தில்நாதன் ஓடிவிடுவான். நாம் அந்த பில்டிங்கை விலைக்கு வாங்கிவிடலாம் என்று திட்டம் தீட்டுகிறார் செல்வா.
இதற்காக ரவி, ஐஸ்வர்யா, திலக் கோஷ்டியிடம் அந்த பழைய பள்ளிக் கட்டிடத்தில் அவர்களுடைய பேய் நாடகத்தை போடும்படி சொல்கிறார். இதற்காக இந்தக் கோஷ்டியினர் அனைவரும் பாண்டிச்சேரிக்கு வந்து கெஸ்ட் ஹவுஸில் தங்குகின்றனர்.
செந்தில்நாதனும், அவருடைய அடியாட்களும், சர்வேயரை அழைத்துக் கொண்டு அந்தக் கட்டிடத்தை சோதனையிட வருகிறார்கள். இந்த நேரத்தில் இந்த பேய் கோஷ்டி இல்லாத வேலைகளையெல்லாம் செய்து பயமுறுத்தி அவர்களை ஓட, ஓட விரட்டுகிறது.
இதையடுத்து செந்தில்நாதன் தனது ஆஸ்தான சாமியாரை துணைக்கு அழைத்து வருகிறான். அவர்களையும் விதவிதமான டெக்னிக்குகளை பயன்படுத்தி விரட்டுகிறார்கள் இந்த பேய் கோஷ்டியினர். செந்தில்நாதன் இந்தக் கட்டிடம் தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட.. அது செல்வாவுக்கே என்பது உறுதியாகிறது.
இந்த நேரத்தில் செல்வா அவர்களைச் சந்திக்க அங்கே வருகிறார். அதற்கு முன்பாகவே அந்தக் கட்டிடத்தில் அந்த பேய் கோஷ்டியையே பயமுறுத்தும் சில சம்பவங்கள் நடக்கின்றன. அந்தக் கட்டிடத்தில் உண்மையிலேயே ஒரு பேய் இருப்பதை அவர்கள் அனைவருமே பார்க்கிறார்கள். பயந்துபோய் தப்பித்து ஓடுகிறார்கள்.
இந்த நேரத்தில் அங்கே வரும் செல்வாவும் அந்த பேயிடம் சிக்கிக் கொண்டு அல்லல்படுகிறார். எப்படியாவது அந்தப் பேயை அங்கேயிருந்து விரட்ட வேண்டும் என்று யோசிக்கிறார்கள். அந்த இரவு நேரத்தில் எந்தச் சாமியாரும் சிக்க மாட்டார்களே என்பதால் பக்கத்தில் இருக்கும் சர்ச்சுக்கு சென்று பாதரிடம் ஆலோசனை கேட்கிறார்கள்.
பாதர் தீர்த்த தண்ணீரை கொடுத்து “இதனை பேயின் உடல் மீது மூன்று முறை தெளித்துவிடுங்கள்…” என்கிறார். இதைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் கட்டிடத்திற்கு மறுபடியும் வருகிறார்கள்.
அங்கே வகுப்பறையின் பிளாக்போர்டில் கணக்கு எழுதிப் போட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பேயின் உடலில் தண்ணீரை தெளிக்கிறார்கள். ஆனாலும் பேயின் ஆக்ரோஷம் குறையாமல் அவர்களை விரட்டியடிக்க ஊருக்கே போய்விடலாம் என்று நினைத்து கெஸ்ட் ஹவுஸுக்கு ஓடி வருகிறார்கள்.
ஆனால் அதற்குள்ளாக அன்றைக்கு காய்ச்சலினால் அவதிப்பட்டு வராமல் இருந்த ஐஸ்வர்யா, அவர்களைப் பார்க்க அந்தக் கட்டிடத்திற்கு போயிருப்பது தெரிய வர.. வேறு வழியில்லாமல் மீண்டும் அங்கே வருகிறார்கள்.
இந்த முறை அந்தப் பேய் ஐஸ்வர்யாவின் உடம்பில் ஏறி உக்கிரமாக ஆடிக் கொண்டிருக்கிறது. பிளாக்போர்டில் கணித சூத்திரங்களை எழுதிப் போட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பேயிடம் “உனக்கு என்ன வேண்டும்..? நீ எதுக்கு எங்களை பிடிச்சு ஆட்டுற?” என்றெல்லாம் கேள்வி கேட்டு பஞ்சாயத்து செய்கிறார்கள் இவர்கள். கணிதப் பாடத்தில் ஆசிரியை ஆக வேண்டும் என்று நினைத்து அது முடியாமல் இறந்து போனதால், இந்த மோகனவதனி என்னும் பேய், இன்னும் இந்தப் பள்ளியைவிட்டு வெளியே போக முடியாமல் தவிப்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது.
கூட்டமாக மாட்டிக் கொண்ட இவர்கள், இந்த உண்மையான பேயிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்த சுவாரஸ்யமான பேய்ப் படத்தின் கதை.
பேய்ப் படங்களுக்கு என்ன வேண்டும்..? சீரியஸான பயமுறுத்தல்.. கூடவே சிரிக்க வைக்கும் நகைச்சுவை.. பதற வைக்கும் பின்னணி இசை.. எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் இயக்கம். இவைதானே..? இவை அனைத்துமே இந்தப் படத்தில் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கின்றன. இதையே படத்தின் வெற்றிக்கு அச்சாரமாக சொல்லலாம்.
முனீஸ்காந்தின் பேய் வடிவம், ஐஸ்வர்யா ராஜேஷின் பேய் பயமுறுத்தல்.. இவற்றுடன் தர்புகா சிவா மற்றும் மைம் கோபியின் நடிப்பு, ரமேஷ் திலக்கின் ஆரவாரமில்லாத ஆக்சன் இவற்றோடு படம் முழுவதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை எல்லாமே சேர்ந்து இந்தப் பேய்ப் படத்தை பேயோடு சேர்ந்து ரசிக்க வைத்திருக்கிறது.
முனீஸ்காந்த் விதம் விதமாக ஆக்சன்களை செய்து காட்ட தயாராக இருந்தும் ஒவ்வொரு முறையும் மைம் கோஷ்டியினர் தப்பித்துச் செல்வதும். இதனால் தனது கோஷ்டியினரிடம் இவர் வாங்கிக் கட்டுவதும்.. கடைசியில் உண்மையாகவே அவர்களை நேருக்கு நேராக பார்த்து பயமுறுத்தும் அந்தக் கிளைமாக்ஸ் காட்சியும் அபாரம்.. தியேட்டர்களில் ஒலிக்கும் உச்சபட்ச கைதட்டல் இந்தக் காட்சிக்குத்தான் என்று நினைக்கிறோம்.
இந்தக் கோஷ்டி முதலில் பேய்களை விரட்டும் காட்சியில் அப்படியொரு உண்மைத்தன்மையோடு படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதைத் தொடர்ந்து போலீஸ் முனீஸை விரட்ட.. பணப் பையைத் தூக்கிக் கொண்டு ஓடும் ஐஸ்வர்யா ராஜேஷை சிவா, ரவி கோஷ்டி விரட்ட.. கடைசியாக அனைவருமே ஒருவருக்கொருவர் விரட்டிச் செல்லும் காட்சியில் காமெடி கிளாப்ஸ் தியேட்டரில் அள்ளுகிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை படத்திற்கு இன்னொரு பெரிய பலம். பேய் காட்சிகளில் அதிகப்பட்ச பயமுறுத்தலை இவர்தான் கொடுத்திருக்கிறார். இதேபோல் ஒளிப்பதிவாளர் விஷ்ணுஸ்ரீயின் ஒளிப்பதிவும் அபாரம். பள்ளிக்குள் நடக்கும் காட்சிகள் அனைத்தையும் இருட்டு, மற்றும் வெளிச்சக் காட்சிகளை மாறி, மாறி காண்பித்து பயமறுத்தியிருக்கிறார்.
பேய் கிளாஸ் எடுக்கும் காட்சியில் கலர் டோனை கண்ணை உறுத்தாக அளவுக்கு வைத்து பார்க்க வைத்திருக்கிறார். படம் பார்த்து முடிந்த பின்பும் அந்தக் காட்சி நினைவில் நிழலாடுகிறது ஒளிப்பதிவாளரே..! வெல்டன்.
ஒலிக் கலவை செய்தவருக்கும் ஒரு பெரிய பொக்கேயை தருகிறோம். சாதாரண சருகுகள் கால்களில் சிக்கி மருகுவதில் இருந்து… கண்ணாடிச் சிதறல்கள் உடைவது.. பல்பு உடைவது.. டியூப்லைட் வெடிப்பது.. கதவு சன்னல்கள் அடித்துக் கொள்வது.. காற்று வீசுவது.. பிளாக்போர்டில் சாக்பீஸால் எழுதும் சப்தம்.. டெஸ்க்கில் அடிக்கும் சப்தம்.. என்று அனைத்துக்கும் சேர்த்து வைத்து பயமுறுத்தியிருக்கிறார்கள்.
மேக்கப் கலைஞருக்கும் ஒரு பெரிய பாராட்டு. முதல் முறையாக ஐஸ்வர்யாவை பேய் மேக்கப்பில் பார்த்தபோது நிஜமாகவே குரூர பேயாக இருக்குமோ என்று நினைக்க வைத்து பின்பு அது டூபாக்கூர் பேயாக காட்டிவிட்டு.. அதே பேய் பூஜா தேவரியாவின் உடலில் புகுந்திருக்கும்போது இருக்கும் மேக்கப்பும் அதிகபட்சம் பயமறுத்துகிறது.
இது போன்ற படங்களில் தனது திறமையை வெளிக்காட்டும் திறன் நல்ல படத் தொகுப்பாளருக்கு மட்டுமே உண்டு. எடிட்டர் கோபிநாத்தின் கைவண்ணத்தில் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் இத்தனை ரகளைபுரமாக இருப்பதற்கு எடிட்டரின் உதவியும் ஒரு காரணமாக இருக்கிறது. அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
மோ பேயை இந்தக் கூட்டணியினர் முதலில் பார்க்கும் காட்சியில் பேயின் உருவம் காட்டவேயில்லை. அது எப்படியிருக்கும் என்றே தெரியவில்லை. உண்மையில் அந்தக் காட்சியை எடுத்தும் இணைக்க மறந்துவிட்டார்களோ என்று சந்தேகம் வருகிறது.
ஏனெனில் பேய் இருப்பதை பார்த்தவர்கள் அது என்ன வடிவத்தில் இருக்கிறது என்பதையும் கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டும்.. அதைக் காட்டாமல்.. பேய் இருப்பதாகவே சொல்லிச் சொல்லி தப்பித்து ஓடப் பார்க்கிறார்கள்.
அதேபோல மைம் கோபி தனது சாமியாருடன் அந்த பில்டிங் வாசலுக்கு வந்து, “இந்த பில்டிங்கை நான் விலைக்கு வாங்கப் போகிறேன். வாங்கலாமான்னு பார்த்து சொல்லுங்க சாமி..” என்று கேட்கிறார். சாமியும் எலுமிச்சம்பழத்தை வைத்து ஆசீர்வதித்துவிட்டு மைம் கோபியின் அடியாளிடம். “ஆறடி குழி தோண்டி இந்த எலுமிச்சம் பழத்தை புதைத்துவிடும்படி” சொல்லி ஆசீர்வாதம் வழங்குகிறார். இந்தக் காட்சி பின்னாடி வர வேண்டியது. முன்பாகவே இணைத்துவிட்டது போல தோன்றுகிறது.
ஏனெனில் இதே செந்தில்நாதன் அந்தக் கட்டிடத்தில் பேய் இருப்பதை நினைத்து அந்தச் சாமியாருக்கு போன் செய்து “ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்கப் போறேன். பேய் இருக்கு. அதை ஓட்டணும். உடனே வாங்க…” என்று அழைக்கிறார். இதன் பின்புதான் அந்தச் சாமியாரும் அங்கே வருகிறார்.. ஆக.. ஏதோ ஒரு காட்சியின் இடைச்செருகலினால் அது குழப்பமாகியிருக்கிறது என்று நினைக்கிறோம்.
எத்தனை பேய்ப் படங்கள் வந்தாலும் புத்தம் புதிய திரைக்கதையினாலும், சிறந்த இயக்கத்தினாலும் அதனை புதிய திரைப்படமாகவே மாற்றிவிடலாம் என்பது திரையுலக நியதி. அதனை இந்தப் படமும் செய்து காண்பித்திருக்கிறது.
பேய்ப் பித்தவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது..! பாருங்கள்..!

0 comments: