Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

மெர்சல் - சினிமா விமர்சனம்

20-10-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் இளைய தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா மூவரும் நடித்துள்ளனர்.
மேலும், நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யன், நடிகைகள் கோவை சரளா, தேவதர்ஷினி, சுரேகா வாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  
ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு, படத் தொகுப்பு – ரூபன், கலை – முத்துராஜ், கதை – கே.வி.விஜயேந்திர பிரசாத், வசனம் – ரமணகிரிவாசன், இசை – ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் – விவேக், வேல்முருகன், சண்டை பயிற்சி – அனல் அரசு, ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், நடனம் – ஷோபி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமத், கிளாமர் சத்யா, நிர்வாகத் தயாரிப்பு – ஹெச்.முரளி, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஆர்.மகேந்திரன், தயாரிப்பு – என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, எழுத்து, இயக்கம் – அட்லி.
இத்திரைப்படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் என்பதால் மிக பிரம்மாண்டமான முறையில் 140 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
மருத்துவத் துறையில் நடைபெறும் மோசடிகளையும், கல் இதயம் படைத்த மருத்துவர்களையும் வெளிக்காட்டுவதற்கு கொஞ்சம் ‘மூன்று முகம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ கேரக்டர் ஸ்கெட்ச்சில் மூன்று விஜய்களை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அட்லி.

மதுரை அருகேயிருக்கும் மானூர் கிராமத்தில் வசிக்கும் வெற்றிமாறன் விவசாயி. ஆனால் பலசாலி. பஞ்சாப்புக்கே போய் அங்கேயிருக்கும் மல்யுத்த குஸ்தி பயில்வான்களுடன் போட்டியிட்டு ஜெயித்தவர். இவரது மனைவி நித்யா மேனன். இவருக்கு ஒரு மகன் வெற்றி.
அந்த ஊரில் புதிதாக கோவில் கட்ட பூஜை நடந்த தினத்தன்று நடந்த சதி வேலையில் தீ விபத்து ஏற்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் வெறும் 10 நிமிட தாமத்த்தினால் சில உயிர்களை இழக்க வேண்டி வருகிறது.
வெற்றிமாறன் யோசித்து “நமது ஊருக்கு இப்போது கோவில் வேண்டாம். அதே இடத்தில் ஆஸ்பத்திரி கட்டுவோம்…” என்று சொல்லி அந்தக் கிராம மக்களிடையே பணம் வசூல் செய்து ஒரு மக்கள் நல மருத்துவ மையத்தை கட்டுகிறார். இந்த மருத்துவமனைக்கு மருத்துவராக வேலைக்கு வரும் எஸ்.ஜே.சூர்யா, விஜய்யிடம் பிரமாதமாக நடித்து அந்த மருத்துவமனையை தன் பெயருக்கு மாற்றிக் கொள்கிறார்.
பின்பு கொஞ்சம், கொஞ்சமாக அதனை கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனையாக மாற்றியமைக்க திட்டமிடுகிறார். இந்த நேரத்தில்தான் தனது இரண்டாவது பிரசவத்திற்காக அதே மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார் வெற்றிமாறனின் மனைவியான ஐஸ்வர்யா என்னும் நித்யா மேனன்.
குழந்தை இயற்கையாக பிறக்க வாய்ப்பிருந்தும், நித்யாவுக்கு சிசேரியன் செய்யச் சொல்கிறார் சூர்யா. மயக்க மருத்துவ நிபுணர் மருத்துவமனையில் இல்லையென்றாலும் அறுவை சிகிச்சை நிபுணரே இதையும் செய்ய… அப்போது ஏற்படும் கோளாறில் குழந்தை பேச்சுமூச்சில்லாமல் பிறக்கிறது. நித்யாவுக்கும் திடீரென்று பிக்ஸ் வர.. இந்தக் குழப்பத்தில் வெற்றிமாறனுக்கு அனைத்து உண்மைகளும் நிதயா மூலமாகவே தெரிகிறது.
சூர்யா தனது அடியாட்களுடன் சேர்ந்து வெற்றி மாறனை கொலை செய்கிறார். வெற்றி மாறன் தன் கொலைக்கு முன்பாகவே சின்னப் பையனான மாறனை ஒரு லாரியில் ஏற்றி தப்பிக்க வைக்கிறார். இறந்து போய்விட்டது என்று சொல்லி குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட தம்பி வெற்றிக்கு திடீரென்று உயிர் கிடைக்கிறது.
வெற்றிமாறனின் உடன் பிறந்த தம்பியாய் அந்த வீட்டில் வளைய வந்த வடிவேலுவின் துணையோடு, இப்போதைய மாறன் புகழ் பெற்ற மருத்துவராய் அதே ஊரில் மருத்துவமனை கட்டி பெயர், புகழோடு இருக்கிறார்.
இன்னொரு மகனான வெற்றியும் அதே ஊரில்தான் புகழ் பெற்ற மேஜிக்சியனாக இருக்கிறார். அண்ணனைவிட தம்பியான வெற்றிதான் தனது அப்பாவின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க துடிக்கிறார். இது நடந்த்தா, இல்லையா என்பதுதான் கதை.
தலையைச் சுற்றி மூக்கைத் தொடும்விதமாக ஒரு விஜய்யின் கதைக்குள் இன்னொரு விஜய்யை வரவழைத்து அதன் பின்பு இவர்கள் இருவரும் சேர்ந்து பெரிய விஜய்யின் கதையைச் சொல்வது போல திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அதுவும் இரண்டாவது பாதியில்தான் முழுக் கதையும் தெரிய வருகிறது.
விஜய் மூன்று வேடங்களிலும் பெரிய மாற்றம் இல்லாமல் நடித்திருக்கிறார். மதுரைக்கார மைந்தர் கேரக்டர்தான் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறது. முறுக்கு மீசை, முரட்டு தாடியுடன் பார்க்கவே தெக்கத்தி ஆள் போலவே தெரிகிறார். அந்தப் பக்க பாஷையையும் குதறாமல் பேசியிருக்கிறார்.
பாட்டியுடன் பாசம், மனைவியுடன் கொஞ்சல், எம்.எல்.ஏ.விடம் கோபம்.. தனது குழந்தையிடம் அன்பு, நட்புகளுடன் அரவணைப்பு என்று கிடைத்த இடங்களிலெல்லாம் தன்னால் முடிந்த நடிப்பைக் காட்டியிருக்கிறார். சூர்யா அண்ட் டீமுடன் போடும் சண்டையில் பெரிதாக ஹீரோயிஸம் வைக்காததால், சாகும் தருவாயில் அவருடைய நடிப்பை ரசிக்க முடிந்து அவர் மீதான அனுதாபமும் கூடுகிறது.
இன்னொரு பக்கம் மாறன் என்ற 5 ரூபாய் மருத்துவர் பிரான்சில் சிறந்த மருத்துவருக்கான விருதைப் பெறுவதற்காக சென்று அங்கே இன்னொரு சென்னையின் தாதா மருத்துவரின் உதவியாளரான காஜல் அகர்வாலின் நட்பை சம்பாதித்துவிட்டு அவருடன் டூயட்டும் பாடுகிறார்.
இந்த கேரக்டருக்கும் வெற்றி என்னும் மேஜிக் ஹீரோவுக்கும் பெரிதாக எந்த வித்தியாசத்தையும் காட்டவில்லை என்பதால் கடைசி கட்ட காட்சிகளில் ரசிகர்களுக்கே குழப்பமே வந்துவிட்டது. அதனை கால் மணி நேரம் கழித்து வசனம் மூலமாகவே சொல்வதுகூட திரைக்கதையில் கூடுதல் டிவிஸ்ட்டுதான்.
கையில் செல்போன் வைத்துக் கொள்ளாதது.. எளிமையாக மக்களோடு மக்களாக இருப்பது.. வெளிநாட்டிற்குச் சென்றால்கூட வேஷ்டி, சட்டையிலேயே செல்வது என்று மாறனின் கேரக்டர் ஸ்கெட்ச், விஜய்யின் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.
சமந்தாவுடனான இவரது காதல் போர்ஷன் கொஞ்சம் சுவாரஸ்யமானது.. ‘டே தம்பி’ என்று சமந்தா ‘டேய்’ போட்டு கூப்பிடும் காதல் காட்சி சுவையானது. அட்லீயின் மிகச் சிறந்த இயக்கம் இந்தக் காட்சியில்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
வெற்றிக்கென்று பிரத்யேக கேரக்டர் குணாதிசயங்கள் இல்லையென்றாலும் மேஜிக்ஸியனாக இருந்து கொண்டே திடீரென்று அந்த பொல்லாத மருத்துவரை போட்டுத் தள்ளும் காட்சியில் திகிலை ஊட்டியிருக்கிறார். கடைசியில் தண்டனையை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்குப் போகும்போது தனது ரசிகர்களுக்கு ஸ்டைலாக கை ஆட்டும் அந்த ஒரு காட்சியே அவர்களுக்குப் போதுமானது..!
காஜல் அகர்வாலுக்கு பெரிதாக ரோல் இல்லை. ஆனால் நடனக் காட்சிக்கும், கதைக்கும் அவர் அவசியம் தேவைப்பட்டிருக்கிறார். சமந்தா க்யூட்.. இந்தப் படத்தில் இவரது நடிப்பைப் பார்த்தால், இவர் இவ்வளவு சீக்கிரம் ரிட்டையர்மெண்ட் ஆவக் கூடாது என்று கடைசி பெஞ்ச் ரசிகனும் நிச்சமாக நினைப்பான். ரொமான்ஸ் காட்சியில் குழந்தைத்தனமான முகத்துடன் ஒரு அமுல் பேபி முகத்தைக் காட்டியிருக்கிறார்.
இந்த இருவரைத் தவிர நித்யா மேனனுக்கு கூடுதல் நேரம் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். தன்னுடைய சொந்தக் குரலில் பேசியிருப்பதால் கூடுதலாக அழகில் தெரிகிறார்.  ஐஸ்வர்யா என்னும் கேரக்டரில் நித்யாவின் நடிப்பும், அழகும்தான் படத்தின் பிற்பாதியில் யாரும் தூங்கி வழியாமல் இருக்க உதவியிருக்கிறது.
தான் கர்ப்பமாக இருப்பதை சூசகமாகச் சொல்லும் காட்சியிலும், சாகும் தருவாயில் உண்மையை உரக்கச் சொல்லிவிட்டு போகும் காட்சியிலும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார் நித்யா மேனன்.
நீண்ட நாட்கள் கழித்து திரைக்கு வந்திருக்கும் வடிவேலுக்கு ஊறுகாய் வேடம். ஆனால் இவர் பேசும் ஒரேயொரு வசனத்திற்கு காது கிழியும் அளவுக்கு தியேட்டரில் கை தட்டல். பிரான்ஸ் ஹோட்டலில் திருடர்களிடத்தில் காலியாய் இருக்கும் தன் பர்ஸை காட்டி ‘New India. Only Digital Money.. அங்கே யார்கிட்டேயும் பணம் கிடையாது. பூராவுமே கியூதான். அங்கே எல்லாருமே..” என்று சொல்லிவிட்டு தன் புறங்கையை நாக்கால் வழித்துக் காட்டும் வடிவேலு, இன்றைய இந்தியாவின் ஒரு சாதாரண பிரஜையின் மறு வடிவம்.
எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் நடிப்பு விஜய்க்கு ஈடு கொடுத்திருக்கிறது. கோவை சரளாவின் அம்மா செண்டிமெண்ட் நடிப்பும், தளபதி விஜய்யின் பாட்டி கேரக்டர் நடித்தவரின் நடிப்பும் குற்றிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
காளி வெங்கட்டின் பாசமான அப்பா கேரக்டரும், செந்தியின் அம்மா கேரக்டரும் இந்தியாவில் இப்போது நடக்கும் மருத்துவக் கொள்ளைகளை ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறார்கள்.
அறிமுக ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவில் மிக அழகாக இருக்கிறார் விஜய். அவரது ரசிகர்களுக்கு எப்படியெல்லாம் விஜய் இருந்தால் பிடிக்குமோ அந்தக் கோணத்திலேயே படம் பிடித்திருக்கிறார். ஒரு சின்ன காட்சியில்கூட அழகு குறையவில்லை. பாடல் காட்சிகளில் வெளிநாடுகளின் அழகையும் சேர்த்தே படம் பிடித்திருக்கிறார்.
2 மணி 50 நிமிட மிக நீண்ட படமான இதில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். ஆனால் கதை சொன்னவிதம், விஜய் என்னும் ஹீரோவை அடுத்தத் தலைவராக்கும் முயற்சிதான் இந்தப் படம் என்பதால், இயக்குநரால் இதனைத் தவிர்க்க முடியவில்லை போலும்.
படத் தொகுப்பாளர் ரூபனின் உழைப்பையும் பாராட்டியே ஆக வேண்டும். நடனக் கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் என்று அனைவருமே விஜய்க்காக உருகி, உருகி உழைத்திருக்கிறார்கள். நன்று..!
இசைப் புயலின் இசையில் பாடல்கள் ஒலித்தன. ஆனால் எதுவுமே நினைவில் இல்லை. அந்த அளவுக்கு இசைக் கருவிகளின் ஆதிக்கம். ‘ஆளப் போறான் தமிழன்’ என்கிற முதல் வரியில் சில வார்த்தைகள் மட்டுமே காதில் விழுந்தன. மீதியெல்லாம் ரசிகர்களுக்கு தேவையில்லை என்று நினைத்துவிட்டார்கள் போலும். பின்னணி இசையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு தனது இசைத் திறமையைக் காட்டியிருக்கிறார் இசைப் புயல்.
இப்போதைய இந்தியாவில் மருத்துவமனைகளில் நடைபெறும் கொள்ளைகள் நிறையவே. ஆனால் அதனை நோயாளிகளாலும், அவர்களது குடும்பத்தாராலும் உணரவே முடியாது.
விபத்து ஏற்பட்டால் அருகில் இருக்கும் எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்று விதிமுறைகள் இருந்தாலும், சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கமிஷன் கிடைக்குமே என்கிற எண்ணத்தால் மிக அதிக கட்டணத் தொகை கொண்ட மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு வந்து சேர்ப்பதும், அங்கே நோயாளியின் மொத்தச் சொத்துக்களையும் பறித்துக் கொண்டு வெளியில் அனுப்புவதும் இப்போது அமோகமாக நடைபெறுகிறது.
இப்படியொரு கொள்ளை சம்பவத்தைத்தான் காளி வெங்கட்டின் கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்த விழிப்புணர்வை காட்டியமைக்காக இயக்குநருக்கு நமது நன்றி.
இப்போது பிரசவ மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிசேரியன்தான் செய்கிறார்கள். நார்மல் டெலிவரி செய்தால் பணம் கிடைக்காது என்பதால் சிசேரியனை வேண்டுமென்றே சில மருத்துவர்கள் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. இதற்கான காரணங்களாக எஸ்.ஜே.சூர்யா சொல்லும் விஷயங்கள் அப்பட்டமான உண்மைதான்.
படத்தின் பல வசனங்கள் இன்றைய இந்தியாவின் எதார்த்த நிலைமையை பிரதிபலிப்பதால் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகின்றன. 
பேக்டரி கட்டப் போகிறோம் என்று எம்.எல்.ஏ. சொன்னவுடன் அது பற்றி ஆலோசிக்கக் கூடியிருக்கும் கிராமத்து மக்கள் கூட்டத்தில் விஜய் பேசும்பேச்சு இன்றைய பல கிராமங்களின் நிலைமையை வெளிப்படுத்தியிருக்கிறது.
“படிக்காத நம்ம பாட்டனும், பூட்டனும் கண்மாய் வெட்டுனாங்க. குளத்தை கட்டுனாங்க. மரத்தை நட்டாங்க. அதை அம்புட்டையும் மூடணும்ன்னு நினைக்கிறது முட்டாள்தனம். கண்மாயையும், குளத்தையும் வளைச்சிட்டு அதுல வீடுகள் கட்டினா மழை தண்ணீர் எங்கே போகும்? நடுவீட்டில்தானே வந்து நிக்கும்..? ரெண்டு வருஷமா மழையும் பெய்யலை. ஒரு சொட்டுத் தண்ணிீரையும் சேர்த்து வைக்கலைன்னா அப்ப தண்ணீருக்கு எங்க போறது..? பக்கத்து ஊர்ல போயி பிச்சையா எடுப்பீங்க..? அப்படியொரு நிலைமை யாருக்குமே வரக் கூடாது. காசு கொடுத்து தண்ணீர் வாங்குற ஊரு உருப்படாது..” என்று பொரிந்து தள்ளுகிறார் விஜய்.
பாரீஸ் நகரில் மருத்துவ சேவைக்காக விருது பெறும்போது விஜய் மருத்துவத்தை சேவையாக பாவிக்க வேண்டும் என்கிறார். “சேவை செய்வதற்காக துவக்கப்பட்டது மருத்துவம். ஆனால் இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் வியாபாரமாக ஆகிட்டிருக்கு மருத்துவத் துறை. உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். ஒரு நாட்டில் ரிச்சஸ்ட்மேனுக்கு கிடைக்கிற மருத்துவ வசதி அதே நாட்டு புவரஸ்ட் மேனுக்கும் கிடைக்கணும். அப்படிப்பட்ட நாடுதான் உலகின் சிறந்த நாடு. உலகில் உள்ள ஒவ்வொரு மனுசனுக்கும் இலவச மருத்துவம் கிடைக்கும்வரை நான் போராடுவே்ன்..” என்கிறார் விஜய்.
கிளைமாக்ஸ் காட்சியிலோ அனைத்துக்கும் சேர்த்து பொங்கல் வைத்திருக்கிறார் இயக்குநர்.
“7 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வாங்குற சிங்கப்பூரில் மக்களுக்கு இலவசமா மருத்துவம் தர்றப்போ.. 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வாங்குற நம்ம அரசாங்கத்தால் ஏன் மருத்துவத்தை இலவசமாக தர முடியவில்லை..?
மருந்துகளுக்கு 12 சதவிகிதம். ஆனால் தாய்மார்கள் தாலியை அறுக்குற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி.யே கிடையாதாம். நம்ம நாட்டில் நம்பர் ஒன் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்ஸிஞன் சிலிண்டர்கள் இல்லை. என்ன காரணம் என்றால், அதை சப்ளை செய்ய 2 வருஷமா கவர்ன்மெண்ட்கிட்ட பணம் இல்லையாம்.
ஜனங்க இப்பவெல்லாம் நோயைப் பார்த்து பயப்படுவதில்லை. ஆனால் கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டலை பார்த்துதான் பயப்படுறாங்க..” என்று பொறுமித் தள்ளியிருக்கிறார்கள் இயக்குநரும், விஜய்யும்..!
இது போதாமல் மோடி அரசு எடுத்த பண மதிப்பு நீக்கத்தையும் கிண்டல் செய்திருக்கிறார்கள். மாறனின் ஆஸ்பத்திரிக்கு வரும் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தை உண்டியலில் போட அதைப் பார்த்துவிட்டு யோகிபாபு, “என்னடா இது..? புது 500 நோட்டையும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களா..?” என்கிறார். இதற்கும் தனி கைதட்டல் கிடைக்கிறது.
ஆக.. வெளியில் சொல்ல முடியாமல் முனங்கிக் கொண்டிருக்கும் சாதாரண பொதுஜனத்தின் எண்ணவோட்டத்தை இந்தப் படத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் பரவலாக பேச வைத்திருக்கும் தைரியத்திற்காக இயக்குநருக்கும், விஜய்க்கும் நமது பாராட்டுக்கள்.
இதே நேரத்தில் மருத்துவ துறையின் முறைகேடுகளை தட்டிக் கேட்கிறார்கள் என்கிற ஒற்றை விஷயத்துக்காக படத்தை ஒட்டு மொத்தமாய் தலையில் தூக்கி கொண்டாட முடியவில்லை. கருத்தாக்கத்தில் படம் நன்று என்று சொல்லலாம். ஆனால் படைப்பாக்கத்தில் குற்றம், குறைகள் நிறையவே உண்டு.
விஜய் என்ற ஒற்றை மனிதனின் ஹீரோயிஸத்திற்காக பலவித லாஜிக் எல்லைகளையும் தாண்டி சர்க்கஸ் சாதனை செய்திருக்கிறார் இயக்குநர் அட்லீ.
சாதாரண வேஷ்டிக்காக பிரான்ஸ் குடியுரிமை அதிகாரிகள் விஜய்யை சோதனையிட முயல்கிறார்கள் என்பதும், அப்போது அவர்கள் தகாத முறையில் நடந்து கொள்கிறார்கள் என்பது போலவும் காட்டியிருப்பது தவறு. இது போன்று அநாகரிகமாக நடந்து கொள்பவர்கள் இந்தியாவில் இருக்கும் இந்திய அதிகாரிகள்தான் என்பதை அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் பயணிகளைக் கேட்டால் தெளிவாகச் சொல்லிவிடுவார்கள்.
அதேபோல் ஒரு பயணிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவுக்காக பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்று காப்பாற்றுவதெல்லாம் ஓவரான ஹீரோயிஸம்.. இதேபோல் மேஜிக்ஸியன் வெற்றி மருத்துவரைக் கொலை செய்துவிட்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து சப்தமேயில்லாமல் தப்பித்து இந்தியா வருகிறார் என்பதெல்லாம் எம்.ஜி.ஆர். காலத்து திரைக்கதை. இந்தக் கொலைக்காக சட்டென்று இந்தியாவில் இருந்து பறந்து வரும் விசாரணை அதிகாரி சத்யராஜின் திணிப்பு ‘அட’ போட வைக்கும் ஆச்சரியம்..!
வெற்றியும், மாறனும் வடிவேலுவுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். ஆனால் வெற்றிதான் பழி வாங்கும் செயலைச் செய்கிறார். இவருக்கு உதவுகிறார் வடிவேலு. இதே வடிவேலு, மாறனுடன் பிரான்ஸுக்கும் வருகிறார். குடும்ப நட்பாகவும் இருக்கிறார். ஆனால் அவருடைய அப்பாவின் கதையை இவரிடத்தில் சொல்லவேயில்லை. வெற்றி எப்படி கண்டெடுக்கப்பட்டார்..? யாரால் வளர்க்கப்பட்டார்..? எப்படி வடிவேலுவுடன் இணைந்தார்..? அவருக்கு யார் எஸ்.ஜே.சூர்யாவின் பின்னணியைச் சொன்னது..? என்பதெல்லாம் படத்தில் சொல்லப்படாதது ஏன் என்று தெரியவில்லை.
அதே பகுதியில்தான் வெற்றியும் வாழ்ந்து வந்திருக்கிறார் என்றால் இதுநாள்வரையிலும் எப்படி அவர் மாறனின் கண்படாமல் இருந்தார்..? மற்ற மக்களுக்கு இவர்களின் முக ஒற்றுமை எப்படி தெரியாமல் போனது என்றெல்லாம் கேள்விகள் எழாமல் இல்லை. பதில்தான் கிடைக்காது.
1976-ல் வெளிவந்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தின் பின்னணியில் எம்.ஜி.ஆர். போலவே விஜய்யும் அரசியல் களத்தில் குதிக்கிறார் என்பதை விஜய்யின் அனுமதியுடனேயே அவருக்காகவே காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. இப்போதுதான் புரிகிறது அட்லீக்கு பம்பர் பரிசாக இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று..? வாங்கிய பணத்திற்கு உண்மையாகவே உழைத்திருக்கிறார் அட்லீ.
வெறும் 7 சதவிகித ஜி.எஸ்.டி. வரி வாங்கும் சிங்கப்பூரில் அனைத்து மருத்துவ வசதிகளும் இலவசம் என்று போகிறபோக்கில் அடித்துவிட்டு போகிறார் இயக்குநர். விசாரித்தால் இதுவே பொய் என்கிறது சிங்கப்பூர் வட்டாரம்.
சிங்கப்பூர் என்றில்லை.. உலகத்தின் எந்த நாட்டிலும் மருத்துவ வசதிகள் முழுக்க, முழுக்க இலவசமில்லை. மக்கள் மருத்துவக் காப்பீடு பெற்றுக் கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என்று சொல்லி மருத்துவக் காப்பீடை தங்களது சொந்தப் பணத்தின் மூலமாகவும், சட்டத்தின் மூலமாகவும் வாங்க வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
தமிழ்நாட்டிலும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் இலவசமாகவே கிடைக்கின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசம், பணம் கொடுத்து சிகிச்சை என்று இரண்டு பிரிவுகளிலும் சிகிச்சைகள் கிடைக்கின்றன. அரசு மருத்துவமனைகளை அப்பலோ மருத்துவமனைகள் போல தரமானதாக மாற்றவில்லை என்று வேண்டுமானால் சண்டையிடலாம்.
ஆனால் தரம் சிகிச்சையிலா..? தோற்றத்திலா என்று யோசித்து தரத்தில்தான் என்று பார்த்தால், அரசு மருத்துவமனைகளின் சிகிச்சையே தரமானது என்பதை நாம் ஒப்புக் கொள்ளலாம்.
சமயம் கிடைத்த இடத்தில் ஜி.எஸ்.டி.யையும் போட்டுத் தாக்கியிருக்கிறார் விஜய். அரசியலுக்கு வரும் முன்னாட்டமாக தற்போதைய இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளைத் தொட்டுப் பேசி தான் அரசியலுக்குத் தயார் என்பதை இந்தப் படத்தின் மூலமாகக் காட்டிவிட்டார் விஜய்.
இந்தப் படத்தின் கதையாடல் காரணமாக விஜய் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தின் ரிலீஸ், சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அப்பன் முருகனை இப்போதே வேண்டிக் கொள்வோம்..!
இந்த ‘மெர்சல்’ திரைப்படம் அரசியல்வியாதிகளை நிச்சயம் மெர்சலாக்கும்..!

பைரவா - சினிமா விமர்சனம்

13-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த ‘பைரவா’ படத்தை விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரித்திருக்கிறார்.
விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில்,  ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோகிதாஸ்வா, சதிஷ், அபர்னா  வினோத், சிஜு ரோசலின், பாப்ரிகோஷ்,  மைம்கோபி, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சுகுமார், படத் தொகுப்பு – பிரவீண், இசை – சந்தோஷ் நாராயணன், பாடல்கள் – வைரமுத்து, கலை இயக்கம் – பிரபாகரன், சண்டை பயிற்சி   –  அனல் அரசு, நடனம்  _  தினேஷ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹமது. தயாரிப்பு மேற்பார்வை – தாண்டவ கிருஷ்ணன் & உதயகுமார், முதன்மை தயாரிப்பு நிர்வாகி – குமரன், தலைமை நிர்வாகி – ரவிச்சந்திரன்.

அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், சொந்த ஊர் என்று எந்த பின்னணியும் இல்லாமல் சென்னையில் ஒரு மேன்ஷனில் சதீஷுடன் குடியிருக்கிறார் விஜய்.
ICIC என்னும் வங்கியில் வாராக் கடனை வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார். வங்கியின் மேனேஜரான ஒய்.ஜி.மகேந்திரன், தொகுதி எம்.எல்.ஏ.வின் சிபாரிசில் தண்ணீர் லாரி வாங்க மைம் கோபிக்கு 24 லட்சம் ரூபாயை கடனாக தந்திருக்கிறார். ஆனால் அந்தக் கடனுக்கு இன்றுவரையிலும் மைம் கோபி வட்டிகூட கட்டவில்லை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பிரச்சினையாகிறது.
ஒய்.ஜி.மகேந்திரன் மைம் கோபியை நச்சரிக்க.. அவரோ தான் கடன் தொகைக்கு பிணையாக கொடுத்த இடத்தின் பத்திரங்களோடு வந்தால் கடன் தொகையை மொத்தமாக செட்டில் செய்வதாகச் சொல்கிறார். அதை நம்பி செல்லும் ஒய்.ஜி.மகேந்திராவை ஏமாற்றி பத்திரங்களை பிடுங்கிக் கொண்டு அடித்து, அவமானப்படுத்தி அனுப்புகிறார் மைம் கோபி.
இதனை விஜய்யிடம் சொல்லும் ஒய்.ஜி.மகேந்திரன் அந்தத் தொகையை வசூலித்து தரும்படி கேட்கிறார். விஜய்யு மைம் கோபி அண்ட் கோ-விடம் அவர்கள் ஒய்.ஜி.மகேந்திரனிடம் விளையாடியதுபோலவே விளையாடி பணத்தை மொத்தமாகப் பெற்று வந்து கொடுக்கிறார்.
அடுத்த மாதமே ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுக்குத் திருமணம் நடக்கிறது. அத்திருமணத்திற்கு மணமகளின் நண்பியான மலர்விழி என்னும் கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து வருகிறார். அவருக்கு திடீரென்று ஏற்பட்ட ஒரு இடையூறில் இருந்து காப்பாற்றி மண்டபத்திற்கு அழைத்து வருகிறார் விஜய்.
கீர்த்தியைப் பார்த்தவுடன் காதலாகி டூயட்டும் பாடுகிறார் விஜய். ஊர் திரும்ப நினைக்கும் கீர்த்தியை, மத்திய அமைச்சரின் மகன் பார்க்க வரும்போது ஒரு மர்ம கும்பல் அவனை வெட்டுகிறது. இதனை விஜய் பார்த்துவிடுகிறார்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து தப்பித்து கோயம்பேட்டுக்கு பஸ் ஏற செல்கிறார் கீர்த்தி சுரேஷ். கும்பலும் அவரைத் துரத்த.. விஜய்யும் பின் தொடர்கிறார். அங்கே மத்திய அமைச்சரே நேரில் வந்து கீர்த்தியை மிரட்டி அவரை கொலை செய்ய முயலும்போது ஒரு போன் கால் வருகிறது.
அந்த போனில் பேசியவுடன் மத்திய அமைச்சரே பயந்து போய் பேசாமல் போய்விட விஜய் கீர்த்தியைப் பற்றி விசாரிக்கிறார். இப்போது கீர்த்தி தனது வாழ்க்கைக் கதையை பிளாஷ்பேக்கில் சொல்கிறார்.
பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் கிடைத்தும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத்தால் கன்னியாகுமரி அருகேயிருக்கும் பி.கே. மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார் கீர்த்தி. அதே கல்லூரியில் கேரளாவைச் சேர்ந்த அபர்ணா வினோத்தும் சேர்கிறார். நன்கொடையாக 24 லட்சங்களை கொட்டித்தான் இருவரும் சேர்க்கப்படுகிறார்கள்.
கல்லூரியில் அடிப்படை வசதியே இல்லாமல் இருப்பதும், நோயாளிகள் வராமல் இருப்பதும், ஒரு மருத்துவக் கல்லூரிக்கான தகுதியே இல்லாமல் இந்தக் கல்லூரி இருப்பதும் கல்லூரியில் சேர்ந்த பிறகே அனைவருக்கும் தெரிய வருகிறது.
இது குறித்து மீடியாக்களில் செய்தி பரவ.. இந்திய மருத்துவ கவுன்சிலில் இருந்து சோதனைக்காக வந்து கல்லூரியின் வண்டவாளங்களை தெரிந்து கொள்கின்றனர் கவுன்சிலின் உறுப்பினர்கள். ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரு வீக்னெஸ்ஸை பயன்படுத்தி கல்லூரிக்கு அனுமதி பெற முயல்கிறார் கல்லூரியின் நிறுவனரான ஜெகபதி பாபு.
இதற்காக பொய் சொல்லி அபர்ணா வினோத்தை கல்லூரி ஹாஸ்டலில் இருந்து நடு இரவில் அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையே ஆற்றங்கரையோரம் அபர்ணா வினோத் கொலையாகிக் கிடக்கிறார். ஆனால் இதனை தற்கொலை என்று சொல்லி மூடி மறைக்க முயல்கிறார் ஜெகபதி பாபு.
அபர்ணா வினோத்தின் பெற்றோர் துணையுடன் இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த வழக்கில் கூடிய சீக்கிரம் ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அந்த ரவுடிகள்தான் இப்போது என்னை எங்கே போனாலும் பாலோ செய்து வருவதாகச் விஜய்யிடம் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இதைக் கேட்டு கோபப்படும் விஜய் திருநெல்வேலிக்கே நேரில் வந்து ஜெகபதிபாபுவுக்கு தண்ணி காட்டுவதாக அவரிடமே சொல்லிவிட்டு திருநெல்வேலிக்கு புறப்புடுகிறார். சொன்னதை செய்து காண்பித்தாரா..? இல்லையா..? ஜெகபதிபாபு என்ன ஆனார் என்பதெல்லாம் இடைவேளைக்கு பின்னான கதை..!
விஜய் தன் ரசிகர்களுக்கு குறை வைக்காமல் தனது பணியை நிறைவு செய்திருக்கிறார். பன்ச் வசனங்கள் பேசுவதைக்கூட கொஞ்சம் அடக்கிக் கொண்டு படத்துக்கான முத்திரை வசனங்களைத்தான் அதிகம் பேசியிருக்கிறார். “சிறப்பு.. மிகவும் சிறப்பு..”, “என்கிட்ட ஒரு கெட்டப் பழக்கம் இருக்கு. சொன்ன வார்த்தையை காப்பாத்துவேன்னு..”, “நான் மட்டும் வரேன்.. தனியா..” போன்ற வசனங்கள் சிச்சுவேஷனுக்கு ஏற்றதுதான் என்றாலும் அவருடைய ரசிகர்களுக்கு இதன் அர்த்தம் நன்கு புரியும்..!
புதிய ஹேர்ஸ்டைல் பழைய விஜய்யின் அழகை குறைப்பதுபோல இருந்தாலும், நடனம், சண்டை காட்சிகளில் குறைவில்லாமல் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். முதல் சண்டை காட்சியை வித்தியாசமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்திருப்பதால் பெரிதும் ரசிக்க முடிகிறது.
கீர்த்தி சுரேஷிடம் ரொமான்ஸுக்கான காட்சிகள் குறைவு என்றாலும், நிறைவாக வீட்டு வாசலில் மெளத் மெளனிங்கில் பேசும் காட்சிகள் கலகலப்பு.. சதீஷுடன் வார்த்தை விளையாட்டு  காமெடியில் கலகலப்பூட்டியிருக்கிறார். நடன காட்சிகளில் இன்னமும் இளமை துள்ளல் விஜய்க்கு மட்டுமே இருக்கிறது.
கீர்த்தி சுரேஷுக்கு இந்தப் படத்தில் நடிக்கவும் மிகப் பெரிய அளவில் ஸ்கோப் உள்ளது. ஆனாலும் அடிக்கடி இந்தப் படம் விஜய் படம் என்பது ஞாபகப்படுத்தப்பட்டு வருவதால் இவரது நடிப்பின் மீதான ஆர்வம் போய், விஜய்யின் ரியாக்ஷன் மேலேயே கண்ணாக இருப்பதால் ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பில்லை போலும். ஆனாலும், கீர்த்தி பெஸ்ட்டாகவே நடித்திருக்கிறார்.
வில்லன் ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் விஜய்க்கு சவாலே விடுகிறார். செய்த கொடுமைகளை “நான் செய்த மாதிரியும்…” என்று இழுத்து, இழுத்து பேசுவதும்.. ஒவ்வொரு முறையும் விஜய் அண்ட் கோ-வை ஏமாற்றும் வேலை செய்தும் இறுதியில் திரைப்படத்தின் கதைப்படி தோற்பதுமாக இவருடைய நடிப்பில் குறையில்லை. சரியான வில்லன் என்று சொல்ல வைத்திருக்கிறார்.
இவருக்கே வில்லனாகியிருக்கிறார் டேனியல் பாலாஜி. தனது மனைவி மீதிருக்கும் பாசத்திற்கு மட்டும் குறுக்கே யார் வராமலும் பார்த்துக் கொள்பவர்.. இவரது மனைவி இறந்தபோது ஜெகபதி பாபு நைட்ரஸ் ஆக்சைடின் பயனாய் சிரித்துக் கொண்டே வருவதும்.. தொடர்ந்து விஜய்யின் அன்புப் பிடியில் சிக்கி கடைசியாய் பரிதாபமாய் உயிரைவிடுவதுமாக தனது நடிப்பை நிறைவு செய்திருக்கிறார்.
புளிப்பாகாத நகைச்சுவைக்கு சதீஷ், ஒரேயொரு காட்சியில் மட்டுமே தன்னை நிரூபித்திருக்கும் தம்பி ராமையா, சில காட்சிகளுக்கு மட்டும் ஸ்ரீமன், நகைச்சுவை என்கிற பெயரில் ஏதும் இல்லாமல் நடித்திருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என சிலவைகள் அல்லவையாகவே இருக்கின்றன.
ஒய்.ஜி.மகேந்திரன், ஹரீஷ் உத்தமன், அபர்ணா வினோத், சிஜா ரோஸ் ஆகியோர்தான் திரைக்கதை நகர்வதற்கு பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கிறார்கள். சிஜா ரோஸே ஒரு கதாநாயகிதான். இவர் ஏன் இப்படி சைடு கேரக்டரில் நடிக்க வருகிறார் என்று தெரியவில்லை.
மைனா சுகுமாரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. விஜய், கீர்த்தி, சிஜா ரோஸ் என்று மூன்று அழகர்களையுமே இன்னும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் நடன அமைப்பு மற்றும் உடை வடிவமைப்பின் மூலம் கீர்த்திக்கு மேலும் புதிய ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது இந்தப் படம்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘வரலாம் வா பைரவா’ பாடலும், ‘பப்பரப்பா’ பாடலும் ஓகே ரகம்.. ‘வரலாம் வா’ பாடல் தீம் மியூஸிக்காக பல இடங்களில் சிதறி, சிதறி ஒளிபரப்பாகி விஜய் ரசிகர்களை மட்டுமே சந்தோஷப்படுத்தியிருக்கிறது. இறுதி பாடலில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் செம்ம ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். இவர்களை சிறப்பாக ஆட வைத்த நடன இயக்குநர் தினேஷுக்கு ஒரு ஷொட்டு.
‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலமாக விஜய்யுடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் பரதன். சமூக நோக்கத்தை அடிப்படையாக வைத்துதான் தனது அடுத்தடுத்த படங்கள் வெளியாக வேண்டும் என்கிற கொள்கையை ‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கையில் எடுத்திருக்கிறார் விஜய்.
அதன்படியே இந்தப் படமும் உருவாகியிருக்கிறது. மருத்துவக் கல்வியை கூறு போட்டு விற்கும் வியாபார முதலைகளை அம்பலப்படுத்தும் திரைக்கதையை அழுத்தமாகவும், அதே சமயம் அதற்கு உறுதுணையாக வீரியமிக்க வசனங்களின் மூலமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குர் பரதன். குறிப்பாக விஜய் பேசும் வசனங்கள், கோர்ட் காட்சிகள் ஆகியவை ரசிக்க வைக்கிறது.
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவம், கள்ளக்குறிச்சியில் சித்த மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முறைகேடுகளால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள்.. டி.டி.நாயுடுவின் மருத்துவக் கல்லூரியில் நடந்த முறைகேடுகள்.. என்று இதுவரையிலும் நடைபெற்ற பல அநியாயங்களையும் வசனங்களின் மூலமாக வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இப்போதெல்லாம் ‘கல்வித் தந்தை’ என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்பவர்களெல்லாம் முன்னாளில் பெரிய ரவுடியாகவும், திருடனாகவும்தான் இருந்திருக்கிறார்கள். முன்பு முகமூடி போட்டு கொள்ளையடித்தவர்கள்.. இப்போது முகமூடி போடாமலேயே கல்வி நிறுவனங்களை வைத்து நடத்தி கொள்ளையடித்து வருகிறார்கள்.
‘ஒன்றாம் வகுப்பில் பிள்ளைகளை சேர்க்கும்போதே அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் சிறந்தவர்கள்தானா என்று தேடிப் பார்க்கும் நாம், மருத்துவம் சொல்லிக் கொடுக்கும் கல்லூரிகளை நடத்தக் கூடியவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தானா என்பதை ஏன் பார்ப்பதில்லை?’ என்ற மில்லியன் டாலர் கேள்வியை கேட்டிருக்கிறார் இயக்குநர் பரதன். பாராட்டுக்கள்ண்ணே..!
ஆனால் திரைக்கதைதான் ‘கத்தி’ படத்திற்கு முந்தைய விஜய் படங்களை ஞாபகப்படுத்துகிறது. பழைய டெம்ப்ளேட் திரைக்கதையில் இருந்து மாறுபட்டு தொடர்ச்சியாக 4 படங்களை கொடுத்திருக்கும் விஜய்.. மீண்டும் பழைய திரைக்கதைக்கே போயிருப்பது பெரிய வருத்தமான விஷயம்..!
அப்படியிருந்தும் சில திரைக்கதை டிவிஸ்ட்டுகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. நான் கடவுள் ராஜேந்திரனிடமிருந்து தப்பிக்க பக்கத்து மொட்டை மாடியில் இருந்து வீடியோ எடுப்பதாகச் சொல்லி மாட்டிவிடுவது.. ஜெகபதி பாபுவின் வீட்டில் வருமான வரித்துறை என்கிற பெயரில் சோதனையிட்டு பணம், நகைகளை கொள்ளையடிப்பது.. ஜெகபதி பாபுவை பாராட்டி போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டி அவரை குழப்பமாக்குவது.. சிஜா ரோஸி, ஹரீஷ் உத்தமன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. டேனியல் பாலாஜியின் கேரக்டர் ஸ்கெட்ச்.. நீதிமன்றத்தில் இருந்த தன்னை பெட்ரோல் ஊற்றி எரிக்க திட்டம் தீட்டும் ஜெகபதி பாபுவின் ஆட்களுக்கு விஜய் தண்ணி காட்டுவது.. பிரதமரை கொலை செய்யப் போவதாக ஜெகபதி பாபு மீது பழியைப் போட்டு விஜய் செய்யும் டிராமா.. இப்படி சில காட்சிகளில் லாஜிக்கையும் மீறி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஆனால் முற்பாதியில் தேவையில்லாத பல காட்சிகள் ஆங்காங்கே வருவது படத்தின் வேகத்திற்கு பெரும் தடையாக உள்ளது. முதல் பாதியில் வரும் அந்த நீண்ட பிளாஸ்பேக் காட்சிகளை இன்னமும் அதிகமாக நறுக்கியிருக்கலாம்.
கீர்த்தி பிளாஷ்பேக் சொல்லும் காட்சிகளை கோயம்பேடு பேருந்து நிலையம் இல்லாமல், வேறு எங்காவது வைத்திருந்தால் கொஞ்சம் நம்பகத் தன்மையுடன் இருந்திருக்கும். இவ்வளவு நேரமாக அந்த ஒரே இடத்துல இருந்தே கதை சொன்னால் எப்படிங்கோ இயக்குநரே..?
படத்தில் 25 நிமிட காட்சிகளை நீக்கினால்தான் இந்தப் படம் கிரிப்பாக ஒரு பரபரப்புத் தன்மையுடன் இருக்கும்.
‘பைரவா’ விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..!

தேவி - சினிமா விமர்சனம்

08-10-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேய்ப் படங்களை என்னதான் கொத்து புரோட்டா போட்டாலும் புதிய வகையான திரைக்கதையில் காட்டப்படும் பேய்களெல்லாம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த தேவி எனப்படும் ரூபி பேயின் கதை.

மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் பிரபு தேவா. கோவை மாவட்டத்தில் குக்கிராமத்தில் பிறந்த இவருக்கு இப்போது ஒரேயொரு குறிக்கோள்தான். ஒரு அல்ட்ரா மாடர்ன் கேர்ளை கல்யாணம் செய்ய வேண்டும் என்பதுதான்.
அதற்காக அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேரும் இளம் பெண்களுக்கு முதல் நாளே தனது பயோடேட்டாவை காட்டி லவ் அப்ளிகேஷன் போடுவது இவரது வாடிக்கை. அப்படியும் எதுவும் செட்டாகவில்லை என்பது அவருடைய சோகம்.
திடீரென்று அவருடைய பாட்டி சீரியஸ் என்று தகவல் வர.. பதறியடித்துக் கொண்டு ஊருக்கு வருகிறார் பிரபுதேவா. அங்கே பாட்டி ‘இப்பவோ.. அப்பவோ..’ என்று இழுத்தடித்துக் கொண்டிருக்க.. அவர் கண் மூடுவதற்குள்ளாக அவர் கண் முன்பாகவே பிரபுதேவாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது அப்பா முடிவெடுக்கிறார். அப்பாவை எதிர்த்து பேச தைரியமில்லாத பிரபுதேவா மனமில்லாமல், தைரியமில்லாமல் இதனை எதிர்க்க வழி தெரியாமல் தவிக்கிறார்.
ஊரிலேயே மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தமன்னாவை பாட்டி கை காட்ட.. வேறு வழியே இல்லாமல் பிரபுதேவா திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் பாட்டி பிழைத்துக் கொள்கிறார். தனக்கேற்பட்ட சோகத்தைத் தாங்கிக் கொண்டு புதிய மனைவியுடன் மும்பை வருகிறார் பிரபுதேவா.
ஒரு பாழடைந்த குடியிருப்பின் முதல் மாடியில் அவருக்கு வீடு கிடைக்கிறது. ஆனால் அந்த வீட்டில் ஏற்கெனவே குடியிருந்த ரூபி என்னும் திரைப்பட நடிகை தான் நடித்த முதல் படம் ரிலீஸாகாத சோகத்தில் தற்கொலை செய்து இறந்து போயிருந்ததை வீட்டு புரோக்கர், பிரபுதேவாவிடம் சொல்லாமலேயே மறைத்துவிடுகிறார்.
தனது ஆசை நிறைவேறாத காரணத்தினால்.. ஆன்மா சாந்தியாகாமல்.. அந்த வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்த ரூபி, தேவியைப் பிடித்துக் கொள்கிறாள். முதல்முறையாக வீட்டை விட்டு வெளியே வரும் தேவியை ஆட்கொள்ளும் ரூபி, அவளை ஸ்டார் ஹோட்டலில் நடனமாடவும் வைக்கிறாள்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ராஜ் கண்ணா தேவியின் அழகிலும், ஆட்டத்திலும் மயங்கி அவளை தனது அடுத்தப் படத்தில் ஹீரோயினாக புக் செய்ய ஆள் அனுப்புகிறார். ஊரில் எருமை மாடு மேய்த்துக் கொண்டிருந்த தேவி, திடீரென்று வீட்டில் ரூபி வடிவத்தில் உருவெடுத்து தான் சினிமாவில் நடிப்பதாகச் சொல்ல.. வெலவெலத்துப் போகிறார் பிரபுதேவா.
தேவியை தடுக்க முடியாமல் படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் ரூபி என்னும் பேயின் வேலைதான் இது என்பதை தெரிந்து கொள்கிறார். ரூபியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரபுதேவா.
ரூபி தனது கண்ணீர்க் கதையைச் சொல்லி “இந்த ஒரேயொரு படத்தில் இப்போதைய சூப்பர் ஸ்டாரான ராஜ் கண்ணாவுடன் சேர்ந்து நடித்துவிடுகிறேன். அதன் பின்பு உன் தேவியை விட்டுவிடுகிறேன்…” என்கிறாள். பிரபுதேவாவும் இதற்கு சம்மதிக்க இது தொடர்பாக பேயுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.
ஒப்பந்தப்படி பேயான ரூபி நடந்து கொண்டாளா..? தேவியின் கதி என்ன ஆனது..? பிரபுதேவா தனது திருமதியை மீட்டெடுத்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
முதல் பாராட்டு கதையையும், திரைக்கதையையும் எழுதிய பால் ஆரோன் மற்றும் இயக்குநர் விஜய்க்கு. அடிப்படையான கதை என்னும் அடித்தளம் நன்றாக இருந்தால்தான் சிறந்த நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களை கொண்டு மேலே எழுப்பப்படும் கட்டிடமும் சிறப்பானதாகவே இருக்கும். இதிலும் அந்த மேஜிக்தான் நிகழ்ந்திருக்கிறது.
பேய்க் கதை என்பதாலோ மற்ற பேய் படங்களை போல தலையை விரித்துப் போட்டு நடப்பது.. வெள்ளை சேலையில் வந்து பயமுறுத்துவது.. பின்னணியில் ஸ்மோக்கை போட்டு சாவடிப்பது என்கிற கண்றாவியெல்லாம் இல்லாமல் மிகவும் சிம்பிளாக பேய் தேவியின் உடலுக்கும் நுழையும்.. பின் வெளியேறும் என்பதைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை தேவி மற்றும் ரூபியாக வரும் தமன்னா தனது அபாரமான நடிப்புத் திறமையில் காட்டியிருக்கிறார். சாந்த சொரூபியான தேவியாகவும், அடங்காத ரூபியாகவும் மாறி, மாறி வரும் அவருடைய நடிப்பும், உடல் மொழியும் இந்தப் படத்திற்குக் கிடைத்த பெரும் லாபம். தமன்னாவை தேர்வு செய்த காஸ்டிங் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
பிரபுதேவா படம் என்றாலே பாடல்களும், நடனமும் தனித்து பேசப்படும். இதிலும் அப்படியே.. தமன்னாவின் கை, கால்களெல்லாம் சுளுக்கெடுக்கும்வகையில் நடன அசைவுகளை வைத்து அசத்தியிருக்கிறார். நடனத் தாரகையாக இந்தப் படத்தில்தான் ஜொலித்திருக்கிறார் தமன்னா. வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
பிரபுதேவா மாடர்ன் கேர்ளின் ஹஸ்பெண்ட்டாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தவர் ஒரு அருக்காணியின் கணவனாக மாற வேண்டியதை நினைத்து புலம்புவதில் துவங்கி.. படம் முழுக்க கடைசிவரையிலும் புலம்பிக் கொண்டேதான் இருக்கிறார்.
அதிலும் தேவி, ரூபியாக மாறி சினிமா ஹீரோயினாக நடிக்கத் துவங்கியவுடன் செட்டுக்களிலும், ராஜ் கண்ணாவின் மேனேஜரிடமும் மாட்டிக் கொண்டு முழிப்பதிலும் ஒரு எளிய நகைச்சுவையை படம் முழுக்க காண்பித்திருக்கிறார் பிரபுதேவா. அதிலும் இருவரின் குடும்பத்தினரும் வந்து காத்திருக்கும்வேளையில் பிரபுதேவா அவர்களைச் சமாளிக்கும் காட்சி அமர்க்களம்..!
கிளைமாக்ஸில் பெண் மருத்துவருடன் பிரபுதேவா கை குலுக்கும் காட்சிக்கு, தியேட்டரே அதிர்கிறது. அத்தனை கால பொறுமைக்குக் கிடைத்த பாராட்டு என்று அதனை எடுத்துக் கொள்ளலாம்.
பிரபுதேவாவின் ஸ்பெஷலாட்டியே நடனம்தானே.. இதிலும் அதற்குக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். பாட்டும், நடனமும் இந்தப் படத்தின் தனி ஸ்பெஷல் என்றே சொல்ல வேண்டும். இத்தனை ஸ்டெப்புகளை வைத்து.. ரப்பர் போல உடம்பை வளைத்து ஆடும் நடிகர் இந்தியாவிலேயே பிரபுதேவா மட்டும்தான் என்பதால் இந்திய சினிமாவில் இவருக்கான இடம் அப்படியேதான் உள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஹிந்தி நடிகர் சோனுசூட் சூப்பர் ஸ்டார் ராஜ் கண்ணாவாக நடித்திருக்கிறார். இவரைவிடவும் இவரது மேனேஜராக நடித்திருக்கும் முர்லி சர்மா, தான் வரும் காட்சிகளிலெல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் அப்படி..!
ஒரு நடிகரின் மேனேஜராக இருப்பவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்..? என்னவெல்லாம் செய்ய வேண்டும்..? என்பதற்கு இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சையை உதாரணமாக சொல்லலாம்..!
நடிகர்களின் உள்ளமறிந்து செயல்பட்டு, அவசரத்தனத்தில் மாற்றி பேசிவிட்டாலும், பின்பு அதைச் சமாளித்து முதலாளியை குஷிப்படுத்தும் மேனேஜர்கள்தான் இன்றைக்கு அநேக நட்சத்திரங்களிடம் பணியாற்றுகிறார்கள். அதில் ஒருவர்தான் இந்த முர்லி சர்மா. கிளைமாக்ஸில் தமன்னா கர்ப்பம் என்று தெரிந்தவுடன் ஆர்வமாக ராஜ்கண்ணாவின் கையைப் பிடித்திழுத்து “கங்கிராட்ஸ்” சொல்லி கன்னத்தில் அறை வாங்கிக் கொண்டு ‘தேமே’ என்று நிற்கும் முர்லிதான் கிளைமாக்ஸிலும் சிரிக்க வைத்துவிட்டார். வெல்டன் ஸார்.
ஆர்.ஜே.பாலாஜி பிரபுதேவாவின் நண்பராக வந்து சில இடங்களை சமாளித்திருக்கிறார். ரூபியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவரிடம் அடுத்த நிமிடமே, “ராத்திரி சாப்பிட சப்பாத்தி செய்யட்டுமா அண்ணா..” என்று தேவி பவ்யமாக கேட்கும்போது, அவர் காட்டும் ரியாக்ஷனே போதும்..!
ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலம். பாடல் காட்சிகளில் உடை வடிவமைப்பாளர் மற்றும் பிரபு தேவாவின் உதவியோடு பட்டையைக் கிளப்பியிருக்கிறது கேமிரா. அதிலும் முதல் பாடல் காட்சியில் பிரபுதேவா மட்டும் தரையில் அமர்ந்து தனித்து ஆடும் ஷாட்டுகளின் அழகு, பிரபுவையும் தாண்டி ரசிக்க வைத்திருக்கிறது.
கிராமம், மும்பை, அந்த வீடு, பட லொகேஷன் என்று பல இடங்களில் பயணித்தாலும் படத்தின் கலர் டோன் மாறாமல் டல்லடிக்காமல் கடைசிவரையிலும் அதன் ரிச்னெஸை அப்படியே தொடர்ந்திருக்கிறார் மனுஷ் நந்தன். சிறந்த கலைஞர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இது சாத்தியம்..!
சாஜித்-வாஜித், விஷால் மிஷ்ராவின் இசையில் நான்கு பாடல்களுமே கேட்கும் ரகம். ‘பச்சையப்பா காலேஜ்’ பாடலும், ‘ரங்.. ரங்.. ரங்கோலி’ பாடலும் இளசுகளை ஆட வைத்திருக்கும் பாடல். ‘கொக்கா மக்கா கொக்கா’ படல் கதையை நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது. திரில்லர் டைப் படம் என்பதால் பயமுறுத்தலான பின்னணி இசையெல்லாம் போட்டு படுத்தாமல் இசையை உறுத்தாத அளவுக்கு அமைத்திருக்கிறார் ஒலி வடிவமைப்பாளர்.
நடனம், ஆடை வடிவமைப்பு, செட்டிங்குகள் என்று அனைத்துத் துறையிலுமே வல்லுநர்களாக சேர்ந்து உழைத்திருப்பதால் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான ஒரு படமாக இந்தப் படம் வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இயக்குநர் விஜய்யின் அழுத்தமான இயக்கமும், நடித்த நடிகர்களின் பண்பட்ட நடிப்பும், உயிர்ப்புடன் இருந்த கதையும், சுவாரஸ்யமான திரைக்கதையும்.. போரடிக்காமல் இருக்க படம் முழுவதும் தெளிக்கப்பட்டிருக்கும் நகைச்சுவையும் படம் இப்போது ஹிட்டடிக்க பெரிதும் உதவியிருக்கின்றன.
என்ன இன்னொரு பேய்ப் படமா என்று அலட்சியமாக கடந்து போக முடியாதவகையில், இப்படியும் ஒரு பேய்ப் படமா என்று கேட்க வைத்து படம் பார்க்க அழைத்திருக்கிறது இந்தக் குழு.
படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!