கோடிட்ட இடங்களை நிரப்புக - சினிமா விமர்சனம்

15-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Reel Estate Company LLB மற்றும் Bioscope Film Framers என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்துள்ளார். நடிகர் சிம்ரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இசை – சத்யா, ஒளிப்பதிவு – அர்ஜூன் ஜெனா. படத் தொகுப்பு – ஆர்.சுதர்சன். எழுத்து, இயக்கம் – ஆர்.பார்த்திபன்.
‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் வெற்றி கொடுத்த தைரியத்தில், வித்தியாசமான கதைக்களத்தில் என்ன கொடுத்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்துவிட்டார் பார்த்திபன்.

ஒரு டிராவல்ஸ் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் பார்த்திபன். ரியல் எஸ்டேட் பிஸினஸும் சைடாக நடத்தி வருகிறார். காசு விஷயத்தில் கெட்டி. பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பவர். செல்போனை டாப்அப் செய்யக்கூட நினைக்காமல் டிராவல்ஸ் வண்டி வேண்டுமென்றால் அதற்கான எண்ணாக டிராவல்ஸ் கம்பெனியின் உரிமையாளரின் நம்பரை கொடுக்கும் அளவுக்கு சமர்த்தர். அதே சமயம் படு கஞ்சர் என்று உடன் வேலை செய்பவர்களால் அழைக்கப்படுபவர். விபத்தொன்றில் சிக்கியதால் காலில் ஊனம் ஏற்பட்டதால் சற்று விந்தி, விந்திதான் நடப்பார்.
லண்டனில் இருந்து ஒரு மிகப் பெரிய பார்ட்டியான கெவின் என்பவர் வருகிறார் என்றும், அவரை அழைத்துச் சென்று பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து உபசரிக்க வேண்டும் என்று டிராவல்ஸ் ஓனர் சொல்கிறார். சரியென்று விமான நிலையம் சென்று கெவினை பிக்கப் செய்கிறார் பார்த்திபன்.
கெவின் என்னும் சாந்தனு சென்னையில் ஒரு பெரிய இடத்தை விலைக்கு வாங்கும் முயற்சிக்காக வந்திருக்கிறார். இங்கே சில நாட்கள் தங்கப் போகிறார். தனக்கு ஹோம்லியான இடம் வேண்டும் என்று பீல் செய்கிறார் சாந்தனு. அதற்குத் தகுந்தாற்போல் ஒரு வீடு இருப்பதாகச் சொல்லி ஒரு புத்தம் புதிய பங்களாவுக்கு அவரை அழைத்துச் செல்கிறார் பார்த்திபன்.
அந்த வீட்டைப் பார்க்கும் சாந்தனுவுக்கு வீடு பிடித்துப் போகவே அங்கேயே தங்குவதற்கு ஒத்துக் கொள்கிறார். அதே வீட்டில் வேலை பார்க்கும் பார்வதி நாயரை பார்த்தவுடன் சாந்தனுவுக்குப் பிடிக்கிறது. பார்வதி மீது மோகம் கொள்ளும் அளவுக்கு பார்வதியின் நடவடிக்கைகளும் அமைய, நிஜமாகவே சாந்தனுவுக்கு பார்வதி மீது ஒரு கண் விழுகிறது.
இந்த நேரத்தில்தான் பார்வதி தன் மனைவி என்கிறார் பார்த்திபன். இதனை எதிர்பார்க்காத சாந்தனு அதிர்ச்சியானாலும் சமாளித்துக் கொள்கிறார். ஆனாலும் இலை மறைவு காயாக, பார்வதி மீதான மோகம் சாந்தனுவுக்குள் கூடிக் கொண்டே போகிறது.
பார்த்திபன் ஒரு விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பால் அவரால் இனிமேல் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத நிலைமையில் இருக்கிறார். இதையும் சாந்தனுவிடம் சொல்கிறார்.
தொடர்ந்து பார்வதிக்கு டென்ஷனான நேரங்களிலெல்லாம் வலிப்பு நோய் வரத் துவங்குகிறது. இந்த நோய்க்கான காரணம் பார்வதிக்கு கணவனிடமிருந்து ‘எதுவும்’ கிடைக்காததுதான் என்று மருத்துவர் சொல்கிறார். இதையறியும் சாந்தனுவுக்கு பார்வதி மீது பரிதாபம் ஏற்படுகிறது.
இந்த நேரத்தில் ஒரு நாள் பார்வதியை சாந்தனு கட்டிப் பிடிக்க.. பார்வதி கோபப்பட்டு சாந்தனுவைக் கண்டிக்கிறார். தொடர்ந்து திடீரென்று பார்வதிக்கு வலிப்பு நோய் வந்துவிட.. அந்த நேரத்தில் சாந்தனு பார்வதிக்கு பெரிதும் உதவி செய்கிறார். அந்த உதவியின் தொடர்ச்சி அவர்களிடையே உடல் உறவுவரையிலும் கொண்டு போய்விடுகிறது. இதனை பார்த்திபனுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள் இருவரும். சாந்தனுவும் அந்த வீட்டில் இருந்து வெளியேறி ஹோட்டலுக்கு வந்து குடியேறுகிறார்.
அடுத்து தான் சென்னைக்கு வந்த வேலையான மிகப் பெரிய இடத்தை விலை பேசும் சாந்தனுவுக்கு புரோக்கராக நடுவில் இருந்து அந்தப் பிரச்சினையை முடித்துக் கொடுக்கிறார் பார்த்திபன். இதற்காக பார்த்திபனுக்கு புரோக்கர் கமிஷனாக மிகப் பெரிய தொகை கிடைக்கிறது. “இதனை வைத்து 4, 5 கார்களை வாங்கி வாடகைக்கு விட்டு பிழைத்துக் கொள்வேன்…” என்கிறார் பார்த்திபன். சாந்தனுவோ, லண்டனுக்கு பார்வதியையும் அழைத்துச் செல்ல நினைக்கிறார். அதற்கான சூழல் வருமென்று நம்புகிறார்.
இறுதியில் என்ன ஆனது..? சாந்தனு தான் நினைத்தபடியே பார்வதியை அழைத்துச் சென்றாரா..? பார்த்திபன் கதி என்ன..? என்பதெல்லாம் திரையில் பார்க்க வேண்டிய விஷயங்கள்.
இந்தப் படத்தின் கடைசி 10 நிமிட கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டுக்காக இந்தப் படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிட முடியாமல் இருப்பதுதான் படத்தின் புதுமை. ஆனால் படத்தின் கதை சொல்லக் கூடாத கதை மட்டுமல்ல.. தொடக் கூடாத கதையும்கூடத்தான்.
என்னதான் கதை என்றால்கூட இந்த உறவு முறை காதலை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவருமே முகம் சுழிப்பார்கள். இப்படி முகம் சுழிக்க வைக்கக்கூடிய அளவுக்கான ஒரு கதையை, இப்படி துணிச்சலாக வைத்திருக்கும் பார்த்திபனை பாராட்டவும் மனசில்லை.
நிஜமாகவே அந்த வீட்டில் வேலை செய்யும் ஒரு பணிப்பெண்ணாகவே பார்வதியின் கேரக்டர் ஸ்கெட்ச்சை வைத்திருக்கலாம். அல்லது வேறு யாரோ ஒருவர் என்றாவது சொல்லியிருக்கலாம். பார்த்திபனின் பணம் சம்பாதிக்கும் வெறி அளவிட முடியாதது என்பதற்காக அவருடைய கேரக்டரை இந்த அளவுக்கு கீழேயிறக்கியிருக்க வேண்டுமா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
திரைக்கதையின் போக்கில் போகப் போக.. ஒரு இயல்புத் தன்மையுடன் கதை நகர்வதைப் பார்க்கும்போதே வயிற்றுக்குள் கலவரத்தை உண்டு செய்கிறது. இந்த உணர்வை தோற்றவித்திருப்பது பார்த்திபனின் அழகான இயக்கம்.
ஒவ்வொரு வசனத்திலும் ஒரு அர்த்தம்.. ஏனோதானோவென்று ஒரு வசனம்கூட படத்தில் இடம் பெறவில்லை. அத்தனைக்கும் ஒரு காரணமிருக்கிறது. ச்சும்மாவே மேடைப் பேச்சில் சிலேடையில் பின்னுவார் பார்த்திபன். படத்தில் வாய்ப்பு கிடைத்தால் ச்சும்மா விடுவாரா என்ன…? இங்கே ஒரு கோலாட்டமே ஆடியிருக்கிறார் பார்த்திபன். பாராட்டுக்கள் ஸார்..!
பார்வதி மீதான சாந்தனுவின் மோகம் மெல்ல மெல்ல காமமாக மாறுகின்றவிதமும், அந்தக் காமம் கடைசியில் காதலாக உருமாறும்விதமும் பார்த்திபனின் டச்சோடு சொல்லப்பட்டிருக்கிறது. திரைக்கதை யுக்திகளின் மூலமே முறைகேடான காதலை நியாயப்படுத்த முனைந்திருக்கிறார் பார்த்திபன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
நடிப்பென்று பார்த்தால் சாந்தனுவுக்கு முதல் படம் இதுதான் என்று உறுதியாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு அழுத்தமாக அவரை நடிக்க வைத்திருக்கிறார் பார்த்திபன். அவர் மட்டுமல்ல.. பார்வதி நாயருக்கும்கூடத்தான். இவர் அப்படியொன்றும் அழகியல்ல. குளோஸப் காட்சிகளில் கேமிராவுக்கு ஒத்து வராத முகம்தான்.. ஆனாலும் நடிப்பில் பிழிந்தெடுத்திருக்கிறார். நடிப்பென்றெ தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார் என்றால் இதற்கு முழு முதற் காரணம் இயக்குநர்தான். பார்வதியின் நிஜமான கேரக்டரில்கூட ஒரு உண்மைத்தன்மை தெரிகிறது..
சாந்தனு நன்கு நடனமாடுகிறார். விஜய் அளவுக்கு வேகமான ஸ்டெப்புகள் அனாசயமாக வருகிறது. நடிப்பிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார். பார்வதியை நிஜமான பேயாக நினைத்து அவர் பயப்படும் காட்சிகளில் நிஜமாகவே நம்மையும் சேர்த்தே கலவரப்படுத்தியிருக்கிறார்.
அழுத்தமான வசன உச்சரிப்பு, குளோஸப் காட்சிகளில் தெரியும் முக பாவனைகள்.. செமத்தியான நடனம்.. என பலவித்த்திலும் ஒரு ரியல் ஹீரோவுக்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார் சாந்தனு. இனிமேல் இதைவிட கனமான கதாபாத்திரங்களை இவரால் செய்ய முடியும் என்கிற தன்னம்பிக்கையை இயக்குநர்களுக்குக் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்..!
‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் ராசியினால் தம்பி ராமையாவும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘மறதி’ என்னும் தேசிய வியாதியை தனக்குள் வைத்துக் கொண்டு பல மறதிகளால் வாழ்க்கையைத் தொலைத்து, வேலையையும் தொலைத்து கடைசியாக பார்த்திபனிடம் வடிவேலுக்கு அடுத்து மாத்து வாங்கும் வேலையைச் செய்து உச்சு கொட்ட வைத்திருக்கிறார் தம்பி ராமையா. சிம்ரனுக்கு வயதாகிவிட்டதை உணர்த்தும் கேரக்டர். பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை. 
அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். படத் தொகுப்பாளரும் தனது பணியை பார்த்திபன் பாணியில் செய்திருக்கிறார். சத்யாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். ‘டமுக்காட்டலாம் டமுக்காட்டலாம்’ பாடல் மட்டுமே கேட்க முடிகிறது. பார்க்கவும் முடிந்திருக்கிறது.
படத்தில் மொத்தமே 6 பெரிய கேரக்டர்கள்தான். தன்னுடைய பாணியிலேயே அனைவரையும் நகர்த்திச் சென்று கடைசியில் ‘நச்’சென்று படத்தை முடித்திருக்கிறார் பார்த்திபன். ஆனால் நமக்குத்தான் கடைசியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை.
கோடிட்ட இடங்களை நிரப்புக – நிரப்பலாம்தான். ஆனால் எதனை வைத்து என்றுதான் தெரியவில்லை.

0 comments: