ஏகனாபுரம் - சினிமா விமர்சனம்

01-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

V.R.International Movies சார்பில் வி.ரவி தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் வி.ரவி, ரித்திகா, செவ்வாழை, ராஜசிம்மன், பூவிதா, ஜானகி, ஜோதிஷா, பாவா லட்சுமணன், நெல்லை சிவா, கோவை பாபு, சங்கர், மணிமாறன், சிட்டிசன் மணி, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – டி.எஸ்.மணிமாறன், ஒளிப்பதிவு – ஏ.எஸ்.செந்தில்குமார், படத் தொகுப்பு – உதயஷங்கர், சண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா, நடனம் – நோபல், ஷியாமளா, சந்திரிகா, ஜாய்மதி, கலை – ஜனார்த்தனன், தயாரிப்பு நிர்வாகம் – பி.ரகு, தயாரிப்பு மேற்பார்வை – டி.பி.ராயர், தயாரிப்பு – வி.ரவி, எழுத்து, இயக்கம் – வி.சுரேஷ் நட்சத்திரா.
சின்ன பட்ஜெட் படம்தானே என்கிற அலட்சியத்தோடு போய்விடக் கூடாது என்பதற்கு இந்தப் படமும் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஏகனாபுரத்தில் தப்படிக்கும் தொழில் செய்து வருகிறார் ஹீரோ ரவி. அந்த ஊர் என்றில்லை.. அக்கம்பக்கம் ஊர்களிலும் சாவு வீட்டில் பறை, தப்பு மேளங்களை அடித்து பிழைப்பை நடத்தி வருகிறார். இவருக்கு அம்மா மட்டுமே.
அந்த ஊரில் வாத்து மேய்க்க ஒரு குடும்பம் வருகிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோயின் ரித்திகா ஊரின் கண்மாயில் வாத்துக்களை மேய்த்து வருகிறார். இவரைப் பார்த்தவுடன் காதல் கொள்கிறார் ரவி. அதே நேரம் அந்த ஊரிலேயே பால் ஊற்றி வரும் ஜானகிக்கும் ரவியின் மீது காதல். இது ஒரு தலைக்காதலாக இருக்கிறது.
வாத்து முட்டைகளை மொத்தமாக வாங்கி விற்கும் ராஜசிம்மன், ஹீரோயின் ரித்திகாவை பார்த்தவுடன் காமுற்று அவளை சின்ன வீடாக வைத்துக் கொள்ள விரும்புகிறான். இது பற்றி ரித்திகாவின் சித்தியிடம் கேட்க சித்தி அவனை திட்டியனுப்பி விடுகிறாள்.
ரவியும், ரித்திகாவும் ஒருவரையொருவர் விரும்புவதை அறிந்த ரவியின் அம்மாவும், ரித்திகாவின் பெற்றோரும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். இப்போதுதான் களத்தில் குதிக்கிறார் வில்லியான ஜோதிஷா.
ரவிக்கு திருமணம் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அவரை கொலை செய்ய முயல்கிறாள் ஜோதிஷா. அவள் ஏன் தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறாள் என்பதே தெரியாமல் ரவி முழிக்க.. ரவியின் காதல் வாழ்க்கை கடைசியில் என்னாகிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ரவிக்கு இது முதல் படம் என்பது நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் பல காட்சிகளில் அவருக்கு வந்த இயல்பான நடிப்பையே கொடுத்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும், சென்டிமெண்ட் காட்சிகளிலும் இயக்கம் லிமிட்டாக இருந்ததினால் இவருடைய நடிப்பையும் ரசிக்க முடிந்திருக்கிறது.
நடிப்புக்கு அழகு தேவையில்லையே.. அதை ரவி இந்தப் படத்தின் மூலமாக காண்பித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் என்ன சொல்கிறதோ.. என்ன செய்கிறதோ.. அதையேதான் திரையிலும் காண்பித்திருக்கிறார். நன்று.
நடனமும், சண்டையும் உடனடியாக மின்னல் வேகத்தில் வராது என்பதால் இவருக்கேற்றாற்போல் காட்சிகளை மாற்றியமைத்திருக்கிறார் இயக்குநர். சண்டை காட்சிகளைக்கூடயதார்த்தமாக படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கிறது.
ஹீரோயின் ரித்திகா கொஞ்சம் பேரிளம் பெண்ணாக இருந்தாலும் கிராமத்துப் பெண்ணுக்கே உரிய மேக்கப், நடை, உடை, பாவனையில் ரசிக்க வைத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் எல்லை மீறாமல் கிளாமரை தொட்டிருக்கிறார்.
நடிப்பில் இவரது சித்தியாக வந்திருக்கும் ஜானகியும் பொரிந்து தள்ளுகிறார். அட்சரப்பிசகாத நடிப்பு. ராஜசிம்மனை பார்த்தவுடன் அடங்கிப் போய் பேசுவதும்.. பணம் வேண்டுமே.. தயவு வேண்டுமே என்பதற்காக பொறுப்பாக பேசும்விதத்தில் உண்மைத்தனம் இருக்கிறது. ஹீரோயினை சதா திட்டிக் கொண்டேயும், விளக்குமாற்றால் அடித்துக் கொண்டேயும் இருக்கும் இந்தச் சித்தியை திரையில் பார்க்கும்போதெல்லாம் கோபம் வந்தது.
ரித்திகாவை சின்ன வீடாக வைத்துக் கொள்கிறேன் என்று ராஜசிம்மன் சொன்னவுடன், இதே சித்தியே கோபத்தில் கொந்தளித்து அவரை விரட்டியடிக்கும்போது ‘சபாஷ்’ என்று தனது நடிப்பின் மூலம் சொல்ல வைத்திருக்கிறார்.
ஜோதிஷா வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அளவு மீறாமல் தனது நடிப்பை காட்டியிருக்கிறார். சின்ன வயதில் தனக்கேற்பட்ட தாக்குதலினால் இப்போது தனது வாழ்க்கையே இழந்து நிற்கிறேன் என்று அவர் ஹீரோவின் அம்மாவிடம் பொங்கித் தீர்க்கும் காட்சியில் எள்ளளவும் நடிப்பில் குறையில்லை. நல்ல இயக்குநர்கள் கிடைத்தால் மட்டும்தான் இது போல இதுவரையிலும் நடிக்காதவர்களெல்லாம் நடிப்பார்கள் போலிருக்கிறது.
இரண்டு சிறுவர்கள்.. பேசும் பேச்செல்லாம் பெரிய மனுஷத்தனம். எப்படி இவர்களுக்கு டயலாக் சொல்லிக் கொடுத்து அதை அவர்கள் இவ்வளவு தைரியமாக, ஒரு சின்ன இடறல்கூட இல்லாமல் வசனத்தை மனப்பாடம் செய்து நடித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்தச் சிறுவர்களுக்கும் ஒரு சபாஷ். இயக்குநருக்கும் ஒரு ஷொட்டு.
ஆட்டோ டிரைவரை கடைசிவரையிலும் தவறாகவே நினைத்துக் கொண்டு அவர்தான் தன்னை கொலை செய்ய ஆட்களை அனுப்பியதாக நினைத்து ஹீரோ செய்யும் செயல்களும்.. தான் நல்லவன் என்பதற்காக அந்த ஆட்டோ டிரைவர் எத்தனை தன்மையாக பேசியும் முடியாமல் இவர்களுக்காக அவர் கடைசியில் தன் உயிரை இழப்பதும் மனதை நெகிழ வைக்கும் திரைக்கதை.
இடையிடையே நகைச்சுவைக்காக பாவா லட்சுமணனை வைத்து செய்திருக்கும் அந்த காமெடிகூட நிச்சயமாக புதுமையானதுதான். அதையும்கூட ஒரு நேட்டிவிட்டியுடன்தான் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் இன்னுமொரு மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவு. அற்புதம் என்றே சொல்லலாம். மிக்க் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களில் இது போன்ற கேமிரா வேலையை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறோம். ஒளிப்பதிவாளர் ஏ.எஸ்.செந்தில்குமார் கிடைத்த இடத்தில், கிடைத்த ஒளியைப் பயன்படுத்தி அதிகமாக கலர் கிரேடிங் செய்யாமலேயே இயல்பான ஒளியை கையாண்டிருக்கிறார். படம் முழுவதுமே அழகாக தெரிகிறது..!
இன்னொரு ஆச்சரியம். படத்தின் பாடல்கள். உண்மையாக இசைஞானி இளையராஜாவின் இசையைக் கேட்டது போலவே இருந்த்து. இது போன்ற சிறந்த இசையம்சம் கொண்ட பாடல்களை தனியார் ரேடியோக்கள் ஒளிபரப்ப மறுப்பதால், நல்ல இசையும், பாடல்களும் கொண்ட திறமைசாலிகள் வெளியில் தெரியாமலேயே போய்விடுகிறார்கள்.
இசையமைப்பாளர் டி.எஸ்.மணிமாறனின் இனிமையான இசையில் ‘கண்ணாடி நீரோடை’, ‘முத்தே பவளமே’, ‘செம்பருத்தி பூவ பார்த்தேன்’, ‘வெண்ணிலவே’, ‘மாடி வீடு’ ஆகிய பாடல்கள் அனைத்துமே மிக அருமையான இசையில் உருவாகியிருக்கிறது. அதோடு இந்தப் பாடல் காட்சிகள் அனைத்துமே ரசனையாக படமாக்கப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
‘முத்தே பவளமே’ பாடல் காட்சியில் ஒரு கிராமத்து சாவு வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை மிக யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அந்தப் பாடல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாடப்படும் பாடல். எளிமையாக அனைவருக்கும் புரியும்வகையில் அந்தப் பாடலுக்கான இசையை அமைத்து, கணீர் குரலில் கேட்கும்படி அமைத்து காட்சிகளை மனதைத் தொடும் அளவுக்கு அமைத்திருக்கிறார் இயக்குநர். வெல்டன் இயக்குநரே..!
படத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் அனைவரும் கிராமத்து மக்கள் என்ற போதிலும் எவர் நடிப்பும் செயற்கையாகவோ, வலிந்து வரவழைக்கப்பட்டதாகவோ இல்லை. இயல்பாக அவர்கள் பேசும் பேச்சுக்களும், செய்கைகளுமே நடிப்பாகவே பதிவாகியிருக்கிறது.
எந்தக் காட்சியிலும் நகர வாடையே அடிக்காமல்.. முழுக்க முழுக்க கிராமத்து கதையாகவும், அந்த மண்ணின் மைந்தர்களைப் பற்றிய கதையாகவும் மனதில் பதியும்வண்ணம் அழுத்தமான இயக்கத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வி.சுரேஷ் நட்சத்திரா.
எளிய மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாகவே எந்த மேற்பூச்சும் இல்லாமல் பாய்ந்தோடும் நீரோடை போன்ற திரைக்கதை மூலமாக நம் மனதில் பதியவும் வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் நட்சத்திரா.
எத்தனையோ பெரிய பட்ஜெட் படங்கள் குப்பையாக சுருட்டி எடுக்கப்பட்டு திரையில் காண்பிக்கப்பட்டு மூன்று நாளில் தியேட்டரைவிட்டு சுருண்டோடும்போது.. இது போன்ற உண்மையான, தரமான திரைப்படங்கள் நிறைய தியேட்டர்களில் ஓட்டப்பட்டு இந்தப் படத்தில் நடித்திருக்கும் அத்தனை திறமையான கலைஞர்களும் கொண்டாடப்பட வேண்டும்.
இந்தச் சூழல் என்றைக்கு தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு வருகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான கலைஞர்கள் இங்கே மதிக்கப்படுவார்கள்.
‘ஏகனாபுரம்’ – யதார்த்தமான, அழகான திரைப்படம். காணத் தவறாதீர்கள்..!

0 comments: