ஜல்லிக்கட்டுக்குத் தடை - வழக்கு கடந்து வந்த பாதை..!

20-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



கடந்த 2006-ல் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். 

இந்த வழக்கு கடந்த வந்த பாதையை பார்ப்போம்.

2004-ம் ஆண்டு விலங்குகள் நல வாரியம், ரேக்ளா ரேஸை தடை செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதியரசர் இப்ராஹிம் கலிபுல்லா, "அது பாரம்பரியமான விழா. அதைத் தடை செய்ய முடியாது..." என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தார்.

2005-ல் ஜல்லிக்கட்டில் பலியான ஒருவரின் தந்தை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுத்தார். 

2006-மார்ச் 29-ல் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து துணைத் தலைவரான கே.முனுசாமி தேவர் என்பவர் ரேக்ளா ரேஸ் நடத்த வேண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். 

இந்த இரண்டு ரிட் மனுக்களும் நீதிபதி பானுமதி முன்பு விசாரணைக்கு வந்தன. கோரிக்கையோ ‘ரேக்ளா ரேஸை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்பது. ஆனால் நீதிபதி பானுமதியோ, சம்பந்தமே இல்லாமல் ‘ரேக்ளா ரேஸ் பந்தயங்களை எப்படி அனுமதிக்கலாம்...? இதில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டத்திற்கு எதிரானது இந்தப் போட்டிகள். எனவே ரேக்ளா ரேஸ், எருது ஓட்டப் பந்தயம் மற்றும் ஜல்லிக் கட்டு ஆகியவற்றை தடை செய்வதாக’ திடீரென்று அறிவித்தார்.

இது விலங்குகள் நல ஆர்வலர்களே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி. ஏனென்றால் விலங்கு நல அமைப்புகள் ஏற்கனவே எடுத்த பல்வேறு முயற்சிகள் பலனளிக்காதபோது, இது எதிர்பாராமல் அவர்களுக்கு கிடைத்த பரிசு.

2007-ஜனவரியில் இது தொடர்பாக நடைபெற்ற அப்பீல் மனுவில் நீதிபதிகள் எலிபி தர்மாராவ், ஜனார்த்தன ராஜா அடங்கிய அமர்வு, நீதிபதி பானுமதியின் தீர்ப்புக்கு தடை விதித்து அந்த ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதித்தது. 

இந்த வழக்கின் மேல்முறையீட்டின்போதுதான் விலங்குகள் நல வாரியம்(AWBI ) இந்த வழக்கில் தலையிட்டு உள்ளே நுழைந்தது. 

2007-மார்ச் - இதே உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதி பானுமதியின் தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது. கிராம விளையாட்டுக்களை முழுமையாகத் தடை செய்ய முடியாது. ஆனால் நெறிமுறைப்படுத்தலாம் என்று கூறி இதற்காக ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் இயற்றுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடுகிறது.

2007 - ஜூலை - 9 - இந்தத் தீர்ப்பை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கட்டு பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

2007 - ஜூலை 27-ல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

2007-ல் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. 

2008 - ஜனவரி - காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் மேலும் பல நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

2008-ல் மேனகா காந்தி தொடுத்த இன்னொரு பொது நலன் வழக்கினால் ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது. ‘வேண்டுமானால் ரேக்ளா ரேஸ் நடத்திக் கொள்ளுங்கள்’ என்று பெருந்தன்மையுடன் அனுமதிக்கிறார்கள்.

2009-ல் தி.மு.க. அரசு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை இயற்றுகிறது.

2009-ல் தமிழக அரசு அளித்த உறுதிமொழி மற்றும் தமிழக சட்டசபையில் இயற்றிய ஒழுங்கு முறை சட்டத்தை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தற்காலிகமாக அனுமதியளித்தது.

2010 - நவம்பர் 25-ல் உச்சநீதிமன்றம் மீண்டும் ஒரு இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. இதன்படி, “காளைகள் இந்திய விலங்குகள் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். விலங்குகள் நல வாரியத்தின் இரண்டு பிரதிநிதிகள் ஜல்லிக்கட்டை கண்காணிக்க வேண்டும். கால்நடை மருத்துவர்கள் குழு காளைகளை பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் 2 லட்சம் முதல் 5 லட்சம்வரையிலும் வைப்புத் தொகை செலுத்த வேண்டும்...” என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

2011 ஜனவரியில் கூடுதல் நிபந்தனைகள் மற்றும் புதிய வரைமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2011 ஏப்ரல் மாதம் விலங்குகளை மையமாக வைத்து நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்தது.

2011 - ஜூலை - நடிகை ஹேமமாலினி ‘காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என்று அப்போதைய சுற்றுச் சூழல் துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷுக்கு ஒரு கடிதம் எழுதினார். இதனை பல விலங்குரிமை பிரபலங்களும் ஆதரித்தார்கள்.

2011 - ஜூலை 11 - நடிகை ஹேமமாலினியின் கடிதத்தைத் தொடர்ந்து மிருக வதைச் சட்டம் 1960-ன் கீழ் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு போன்ற விலங்குகளோடு ஆறாவதாக காளையையும் காட்சிப் பொருளாக வைத்து, வித்தை காட்டுவதை மத்திய அரசு தடை செய்து அரசாணை பிறப்பித்தது.

(இதே ஆண்டுதான் நடிகை ஹேமமாலினிக்கு PETA PERSON OF THE YEAR விருதும் அளிக்கப்பட்டது. சென்ற ஆண்டு நடிகை சன்னி லியோனிக்கு இந்த விருது அளிக்கப்பட்டது என்பது உப தகவல்.)

2012 - ஜனவரி - ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

2012 - ஜனவரி - மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி வழங்கியது. 

2013 - ஜனவரி - ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை என்றும், போட்டிகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை உத்தரவிட்டது.

2013 -ஜனவரி - இந்த உத்தரவை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது. 

2014 பிப்ரவரி - ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை கோரி விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த இந்த ஜல்லிக்கட்டு வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றும்படி உச்சநீதிமன்றமே உத்தரவிட்டது.

2014 மே 7-ல் - சிவில் வழக்கு எண் 5387 2014, SLP எண் 11686 2007 ரிட் மனு 145, மற்றும் 2011 மனுதாரர்கள் விலங்கு நல வாரியம், மற்றும் நாகராஜா மற்றும் சிலர் மீதான வழக்கில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பினாகி சந்திரகோஸ் அடங்கிய உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தி.மு.க. அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்து, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தடையும் விதித்து 102 பக்க தீர்ப்பினை வழங்கியது.

(அந்தாண்டு இறுதியில் நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கு பீட்டா அமைப்பு 2014-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற விருதினை  வழங்கியது என்பது வேறு விஷயம்.) 

அதில், 2011-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி  மத்திய சுற்று சூழல் துறை அமைச்சரான ஜெயராம் ரமேஷ் பீட்டா மற்றும் விலங்கு நல வாரிய அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து காளையை வன விலங்கு காட்சி பட்டியலில் சேர்த்து வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு, மேலும் 2013-ல் விலங்கு நல வாரிய அமைப்பை சேர்ந்த மணிலால், மற்றும் அபிஷேக், மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டு காளைகளை துன்புறுத்திய புகைப்படம், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்பது உறுதியாகிறது. 

இதனை நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுகள் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாகத அறிவித்தது. அது குற்றமாகவும் கருதப்பட்டு தீர்ப்பு வழங்கியது.

மேலும் இந்தக் காட்சிப்படுத்தும் பட்டியலில் மாற்றமோ, திருத்தமோ செய்ய விரும்பினால் மத்திய அரசும், விலங்குகள் நல வாரியமும் பீட்டா அமைப்பை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2014 - மே 19 - ஜல்லிக்கட்டு மீதான இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசு மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

2016 - ஜனவரி 7 - தமிழக அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலால் தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு, காளையை காட்சிப்படுத்தப்பட்ட வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்கியதாக அறிவித்ததோடு, ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்றும் அறிவித்தது. மேலும், ஜல்லிக்கட்டு, மற்றும் காளை தொடர்புடைய விளையாட்டுகள் அனைத்தும் மாநில அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

2016 - ஜனவரி 12 - மத்திய அரசின் இந்த ஆணைக்கு, உடனடியாக பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் தலைவரான என்.ஜி.ஜெயசிம்மா ஆகியோர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடைக்கால தடை வாங்கினார்கள். 

மத்திய அரசு இந்த விஷயத்தில் விலங்குகள் நல வாரியத்தை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பதால் இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல், “மத்திய அரசு காளையை நீக்க விரும்பினால் விலங்குகள் நல வாரியத்தோடு கலந்து பேசி அனுமதி பெற்ற பின்னர் அதனை நீக்கம் செய்யலாம்...” என்று தனது இடைக்காலத் தீர்ப்பில் கூறியது.

இந்த வழக்கு விசாரணைக்காக மத்திய அரசிடம் அனுமதி கோராமல், தன்னிச்சையாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதற்காக விலங்கு நல வாரியத்தின் தலைவர் ராம் மெஹர் கார்ப்பிற்கு 2016 மார்ச் 28-ம் தேதியன்று மத்திய அமைச்சரவையில் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் சென்ற 2016 டிசம்பர் மாதம் பதவி விலகிவிட்டார்.  ஆனாலும் மத்திய அரசு விளக்கம் கேட்ட கடிதத்தையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டுத்தான் ஓடியிருக்கிறார்.

இந்த நீதிமன்றத் தடைக்கு சில நாட்களுக்கு முன்பாக 2015 டிசம்பர் 15-ம் தேதி  ஜல்லிக்கட்டை தடை செய்த விலங்குகள் வாரியத்தின் தலைவரான என்.ஜி.ஜெயசிம்மாவுக்கு தனது ஆதரவுக் கடிதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியனுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2016 - நவம்பர் 16 - தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

2017 - ஜனவரி 12 - விரைவில் தீர்ப்பு வழங்குமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

2017 - ஜனவரி 18 - இளைஞர்களின் போராட்டத்தைச் சுட்டிக் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு குறிப்பிட்டபோது, இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் நாங்கள் தலையிட முடியாது என்று கை விரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

2017 - ஜனவரி - 19 -தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் குறித்து வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ராஜா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தபோது, “சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுங்கள்...” என்று கை காட்டியது உச்சநீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஜல்லிக்கட்டு என்பது இயல்பிலேயே “மிருக வதையுடன் கூடிய ஒரு விளையாட்டுதான்...” என்று தீர்ப்பளித்து விட்டது. ‘மிருக வதை’ என்கிற பெயரில்தான் முன்பு நீதிபதி பானுமதியும் இதைத் தடை செய்தார். 

எனவே இப்போது இதை எதிர்கொள்ள வேண்டுமென்றால் அவசர சட்டத்தின் வழியாகத்தான் செய்ய வேண்டும். 

சரி.., அதை யார் பிறப்பிக்க வேண்டும்..? 

மிருகவதை தடுப்பு சட்டம் மத்திய சட்டம் என்பதால் மத்திய அரசுதான் பிறப்பிக்க வேண்டும். அதுதான் உடனடியானதும் எளிதானதும்கூட. ஆனால், அது தனியாக ஒரு சட்டமாக அல்லாமல் (தமிழக அரசு இயற்றிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் போல அல்லாமல் ) மிருக வதை தடுப்பு சட்டத்தையே திருத்த வேண்டும். 
எப்படி செய்வது..? 

எது எல்லாம் வதை (Cruelty) என்று சொல்லும் மிருகவதை தடுப்புச் சட்டம், அதற்கு விதிவிலக்குகளும் கொடுத்துள்ளது.

11. (3) Nothing in this section shall apply to -
(a) the dehorning of cattle, or the castration or branding or nose roping of any animal in the prescribed manner, or
(b) the destruction of stray dogs in lethal chambers 20 [by such other methods as may be prescribed] or
(c) the extermination or destruction of any animal under the authority of any law for the time being in force; or
(d) any matter dealt with in Chapter I V ; or
(e) the commission or omission of any act in the course of the destruction or the preparation for destruction of any animal as food for mankind unless such destruction or preparation was accompanied by the infliction of unnecessary pain or suffering.
-----

28. Saving as respects manner of killing prescribed by religion : Nothing contained in this Act shall render it an offence to kill any animal in a manner required by the
religion of any community.

அதாவது காளைகளின் கொம்பை நீக்குவது, நாய்களைப் பிடித்து அவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வது, தெரு நாய்களை கொல்வது, உணவிற்காக கொல்வது, மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவது அல்லது மத நம்பிக்கைகளுக்காக பலியிடுவது இவையெல்லாம் மிருக வதையில் வராது. எனவே இந்த விதிவிலக்கு பட்டியலில் ஜல்லிக்கட்டையும் சேர்க்க வேண்டும். இதைத்தான் மத்திய அரசு போன வருடம் செய்திருக்க வேண்டும். 

ஆனால், அதை விட்டுவிட்டு தூக்கி எறியக் கூடிய ஒரு சொதப்பலான அறிவிக்கையை பா.ஜ.க. வெளியிட்டுவிட்டு, நாங்கள் நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று சொல்லி தப்பித்தது. 

2014-ம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் operative portion இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

....77 (1) We declare that the rights guaranteed to the Bulls under Sections 3 and 11 of PCA Act read with Articles 51A(g) & (h) are cannot be taken away or curtailed, except
under Sections 11(3) and 28 of PCA Act...

அதாவது மிருகங்களுக்கான உரிமைகள், சட்டப் பிரிவுகள் 11(3) மற்றும் 28-ஐ தவிர வேறு எந்த விதத்திலும் பறிக்கப்பட முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டது. எனவே ஜல்லிக்கட்டை இந்த பிரிவுகளில் சேர்ப்பதுதான் உடனடியாக நாம் செய்ய வேண்டிய செயல். 

சரி, அப்படியே சேர்த்தாலும் அது இந்த மிருகவதை சட்டத்தின் நோக்கத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது என்று விலங்கு நல ஆர்வலர்கள் நிதிமன்றதை அணுகலாம். ஆனால், இவ்வளவு பெரிய மக்கள் போராட்டத்திற்கு பிறகு நீதிமன்றம் அவ்வாறு சொல்லாது என்பதே நிதர்சனம்.

மத்திய அரசுக்கு இதைவிட எளிதான வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியவில்லை. 

கடைசியாக நடந்த விசாரணையில் தமிழக அரசு காளைகளை விலங்குகள் நலப் பட்டியலில் சேர்த்தது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது.

ஆனால் விலங்குகள் நல வாரியமும், பீட்டா அமைப்பும் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளன. “ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் காளைகளை இவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள். அதனால் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக் கூடாது...” என்று இந்த இரண்டு அமைப்பினரும் சொல்லியிருக்கிறார்கள்.

மத்திய அரசோ “காட்சிப்படுத்தப்பட வேண்டிய பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்களித்தது சரிதான். ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியமான, கலாச்சாரத் தொடர்புடைய விளையாட்டு. அது தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்...” என்றே சொல்லியிருக்கிறது..!

ஜல்லிக்கட்டை தடை செய்த பெருமை காங்கிரஸ் அரசையே சாரும். அதில் அங்கம் வகித்த கட்சிகள் தி.மு.க மற்றும் பா.ம.க , ஆதரவளித்தது விடுதலை சிறுத்தைகள்.

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட முதல் காரணம், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்தான். அவர் அந்தப் பட்டியலில் காளையை சேர்க்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்த நிலைமை வந்திருக்காது.

அதே சமயம் 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டை தடை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என்கிற தமிழரும் ஒருவர் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதிசயத்திலும் அதிசயமாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சாமி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி இந்த வழக்கில் தானும் ஒரு மனுதாரராகச் சேர்ந்துள்ளார்.  

அவரது 72 பக்க மனுவில் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் காலம், காலமாக நடந்ததற்கான தகுந்த ஆதாரங்கள், இலக்கிய ஆதாரங்கள், புராண ஆதாரங்கள், சரித்திர ஆதாரங்கள், மற்றும் கால்நடைகளுக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள கலாச்சார தொடர்பு, நாட்டு விலங்கின தொடர்பு போன்றவைகளை மிக கவனமாக தொகுத்து கொடுத்துள்ளார் என்று பீட்டா அமைப்பை சேந்த ஒருவர் தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்டார்.

இந்த ஜல்லிக்கட்டு விழா, சமயம் சார்ந்த விழா என்ற அடிப்படைவாதத்தை உச்சநீதிமன்றத்தில் இதுவரையிலும் யாரும் முன் வைக்கவில்லை என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள். இந்த வாதம் சட்டத்தின் முன் பலமான வாதம் என்று தெரிந்தும், இதை மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் செய்யாததுதான் தீர்ப்பை தமிழகத்திற்கு எதிராக கொண்டு வந்திருக்கிறது என்கிறார்கள் சிலர்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம், பீட்டா மற்றும் சில விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்திருந்தனர். இதில் சிலரது சார்பாக அன்றைய காலகட்டத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர்தான் தற்போதைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி. 

அதாவது தற்போதய மோடி அரசின் தலைமை வழக்கறிஞர். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜல்லிக்கட்டு கூடாது.. அதற்கு தடை வேண்டும்’ என்று கேட்டு உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆகவே அந்த முகுல் ரோத்தகி, எப்படி தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசின் சார்பாக ஆஜராகி வாதிட்டார் என்று தெரியவில்லை..

மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து நிச்சயம் பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்துக்குப் போகும். அப்போது மத்திய அரசும் நீதிமன்றத்தில் வந்து நிற்கும். அந்த கட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை ஆதரித்துதான் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாட வேண்டியிருக்கும்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்த ஒரு வழக்கறிஞர், பின்னர் அதற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து வாதாட முடியாது. அப்படியென்றால் வேறு மூத்த வழக்கறிஞர்களை வைத்து மத்திய அரசு, தற்போது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும்  அவசர சட்டத்தைக் காப்பாற்ற வாதாட வேண்டியிருக்கும். 

'கடந்த இரண்டு நாட்களாக ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கே அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என்று திரும்ப, திரும்ப முகுல் ரோத்தகி கூறுவதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள் சில வழக்கறிஞர்கள்.

இப்போது தீர்ப்பு தயாராக இருக்கிறது. ஒரு வாரம் கழித்து சொல்லப் போகிறார்கள். அதற்குள்ளாக இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு முடிந்துவிடும்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நமக்குச் சாதகமாக வந்தால் ‘வெற்றி நமதே’ என்று சொல்லி பெருமைப்படலாம்.

தீர்ப்பு நமக்கு பாதகமாக வந்தால், மறுபடியும் இதேபோல் தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை..!

அதற்குள்ளாக மாநில அரசு அறிவிக்கவுள்ள சட்டத்தை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியும், வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டினை சேர்த்தும் நடைமுறைப்படுத்தினால் உச்சநீதிமன்றம் இதனை கேள்வி கேட்கவே முடியாது..!

இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கப் போகும், இந்த இரண்டு விஷயங்களும்தான் இந்தப் பிரச்சினையை நிரந்தரமான ஒரு முடிவுக்குக் கொண்டு வரும். 

காத்திருப்போம்..!

குறிப்பு : பல்வேறு தளங்களில் இருந்து தொகுத்து வழங்கப்பட்டது.


2 comments:

Unknown said...

JJ Patri oru news varama nadakkura Aatchi Patri oru Karuthu illa Jallikattu yellam mudivuku varum tharuvaail yenna nadagam podurir. Cinema vimarchanathoda niruthikunga

vic said...

இப்பிடி படம் வந்து இருக்கா சொல்லவேயில்ல