05-05-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இது நடந்தது 1990களுக்கு பின்பாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். எம்.ஜி.ஆரின் மரணத்திற்குப் பின்புதான் நடந்தது. இது மட்டும் உறுதி.
சென்னையின் வேலு நாயக்கராக திகழ்ந்தவர் சாராய சாம்ராஜ்யத்தின் அதிபர் என்.வி.பி.ராமசாமி உடையார். எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமான நண்பர். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதிலும் கள்ளுக் கடைகள் மற்றும் சாராயக் கடைகளை ஏலம் எடுத்து நடத்தியவர். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆருக்கு ரிசர்வ் வங்கியே இவர்தான். தேர்தல் காலங்களில் அதிமுகவின் தேர்தல் செலவுகளுக்கு பணம் கொடுத்து உதவியவர். மிகப் பெரும் பணக்காரர். அதிகார வர்க்கத்தில் சர்வ வல்லமை படைத்தவர். இவர் வீட்டுக்குச் சென்று ‘அன்பளிப்பு’ வாங்காத போலீஸ் அதிகாரிகளே அப்போது இல்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் இவருக்கும் போலீஸ் சல்யூட் கிடைத்தது. அப்படியொரு எமகாதக மனுஷன்.
இவரது கடைசி மகள், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். உடையாரின் நெருங்கிய நண்பரான முதலியாரின் மகளும், இவரது மகளும் மிக நெருங்கிய நண்பிகள். ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள்.
தேர்வு துவங்க இருப்பதால் கல்லூரி விடுதிலேயே தங்கிப் படித்துக் கொள்ள தீர்மானித்து ஒரு ஞாயிறன்று மாலை 5 மணிக்கு, உடையாரின் ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து காண்டஸா கிளாஸிக் காரில் இரண்டு தோழிகளும் கல்லூரிக்குக் கிளம்பினார்கள்.
மிஞ்சிப் போனால் அரை மணி நேரத்தில் கல்லூரிக்கு போய்ச் சேர்ந்திருக்கலாம். ஆனால் போகவில்லை. போன காரும் திரும்பி வரவில்லை. இரவு 8 மணிவரையில் பொறுத்திருந்து பார்த்துவிட்டு உடையாரின் வீட்டில் இருந்து கல்லூரிக்கு போன் செய்து விசாரித்தார்கள். கல்லூரிக்கு வரவில்லை என்று திட்டவட்டமாக தெரிந்தது.. உடையாரின் வீடும், அலுவலகமும் பரபரத்தது. உடையாரின் ஆட்கள் காரை தேடி அலைய ஆரம்பித்தார்கள். முடியவில்லை.
நள்ளிரவில் போலீஸுக்கு தகவல் சென்றது. போலீஸ் உயரதிகாரிகள் உடையாரின் வீட்டுக்கே ஓடி வந்தார்கள். தகவலைச் சொன்னார் டான். டிரைவரின் பெயர், முகவரியோடு ஒரு டீம் அவரது வீட்டுக்கு ஓடியது. காஞ்சிபுரத்தில் இருந்த அந்த டிரைவரின் வீடு பூட்டப்பட்டிருந்தது..
கடத்தல் என்பது தெரிந்த பின்பு தூங்காத வீடாக இருந்தது உடையாரின் வீடு. நள்ளிரவில் போன் அழைப்பு. "நாங்கள்தான் இருவரையும் கடத்தி வைத்திருக்கிறோம். 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவிக்கிறோம்.. பணத்தை எங்கே கொடுக்க வேண்டும் என்பதை நாளை காலை சொல்கிறோம். போலீஸுக்கு போனா அவ்ளோதான்..." என்று பக்கா லோக்கல் பாஷையில் சொல்லி போனை வைத்தார் கடத்தல்காரர்.
பொழுது புலர்ந்தது. போனுக்காக ஒட்டு மொத்த சென்னை மாநகர காவல்துறையும் காத்திருந்தது. போனும் வந்தது. செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் டெலிபோன் பூத் அருகே பணத்தை வைத்துவிட்டுச் செல்லும்படி சொன்னது.
போலீஸ் பரபரக்க.. ச்சும்மா டம்மி பேப்பர்களை வைத்துக் கொண்டு ஒரு சூட்கேஸை ரெடி செய்து செங்கல்பட்டுக்கு விரைந்தது போலீஸ். ம்ஹூம்.. ஆள் வரவேயில்லை. அந்த டெலிபோன் பூத்காரரை கட்டி வைத்து மேய்ந்ததுதான் மிச்சம். "எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை சாமி. அவன் யாருன்னே எனக்குத் தெரியாது..." என்று தன் முன் பற்கள் இரண்டும் உடைந்து போய் ரத்தம் கொட்டிய நிலையில் பரிதாபமாய் சொன்னார்.
இடையில் டிரைவரின் வீட்டை உடைத்து சோதனையிட்டதில் ஆந்திராவில் சித்தூர் நகரத்தின் ஒரு லாட்ஜின் முகவரி அடங்கிய சீட்டு கிடைத்தது.. உடனேயே ஒரு போலீஸ் டீம் சித்தூர் நோக்கி விரைந்தது.. இங்கே மறுபடியும் போன்.. “அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்த்து. அதனால் நான் வர முடியலை. நீங்க காஞ்சிபுரம் வந்திருங்க..” என்று அழைப்பு விடுத்தது.
காஞ்சிபுரத்தில் மூலைக்கு முலை போலீஸை நிறுத்தி வைத்து காத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குள்ளாக சித்தூரில் இருந்து ஒரு டிவிஸ்ட்டு.. சித்தூரில் இருக்கும் அந்தக் குறிப்பிட்ட லாட்ஜுக்குள் நுழைந்த தமிழ்நாடு போலீஸ், "தமிழர்கள் யாராவது புதுசா வந்திருக்காங்களா..?" என்று விசாரிக்க அன்று காலைதான் ஒரு இளைஞன் வந்து தங்கியிருக்கிறான் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அலாக்காக அவனைத் தூக்கினார்கள். அங்கேயே மாட்டடி அடித்ததில் உண்மையைச் சொல்லிவிட்டான். டிரைவரின் கூட்டாளியான இவன் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் ஏற்கெனவே கைதானவனாம். அந்த முன் அனுபவத்தில் டிரைவரிடம் சொல்லி இந்தக் கடத்தல் வேலையைச் செய்யச் சொல்லிவிட்டு, “பணம் கைக்கு வந்தவுடன், அதை எடுத்துக்கிட்டு ஆந்திரா வந்திரு.. கொஞ்ச நாள் இங்க பத்திரமா இருந்திட்டு அப்புறமா உன்க்கு ஒரு வழி சொல்றேன்..” என்று சொன்னானாம்..!
பாவம்.. தமிழக போலீஸ் வரும் வழியிலேயே வேனில் வைத்து இவனை புரட்டி எடுத்ததில், தமிழ்நாடு எல்லைக்குள் நுழையும்போதே ஆள் அவுட்.. தமிழக போலீஸாச்சே..? கொஞ்சமும் வருத்தப்படவில்லை..! "சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தின் அருகில் வந்தபோது ஜீப்பில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்யும்போது, தலையில் அடிபட்டு இறந்துவிட்டான்..." என்று ஒரே போடாக போட்டு பிணத்தை ராயப்பேட்டைக்கு அனுப்பி வைத்தார்கள்.
கூட்டாளியான டிரைவர், அந்தப் பெண்களை எங்கே கடத்தி வைத்திருக்கிறான் என்கிற தகவல் இவனுக்கும் தெரியவில்லை. ஆனாலும் ஒரு சின்ன க்ளூ கிடைத்தது. காஞ்சிபுரம் அருகே டிரைவருக்கு தோட்டத்துடன் கூடிய ஒரு சின்ன வீடு இருக்கிறது என்று..! மொத்த போலீஸும் அந்தத் தோட்டத்தையும், வீட்டையும் முற்றுகையிட்டது.
ஒரேயொரு அறை கொண்ட அந்த வீட்டில் பெண்களைக் கட்டிப் போட்டுவிட்டு அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் காவல் காத்துக் கொண்டிருந்தார் டிரைவர் தம்பி. கதவை உடைத்து உள்ளே நுழைந்தது போலீஸ்.
இரவிலேயே பத்திரமாக பெண்களை அழைத்து வந்து உடையாரிடம் ஒப்படைத்து பெருமைப்பட்டுக் கொண்டது போலீஸ். யாருக்கு எவ்ளோ காசு போச்சோ தெரியாது..!?
ஆனால் கடத்திய அந்த இளைஞன் வாக்குமூலத்தில் சொன்னதுதான் பரிதாபம்.. “தங்கச்சி கல்யாணத்துக்காக 50000 ரூபாய் தேவைப்பட்டுச்சு. அதான் அந்த நண்பன்கிட்ட கேட்டேன். அவன் இப்படி ஒரு ஐடியாவை சொல்லி திசை திருப்பிட்டான். ‘உன் ஐயாகிட்ட 1000 லாரி ஓடுது.. நிறைய கோடீஸ்வரராச்சே.. பொண்ணு மேல பாசக்காரர். அதுனால கொடுத்திருவாரு’ன்னு சொன்னான். அதான் செஞ்சிட்டேன்..” என்றான்..!
பாவம்தான்.. இதன் பின் இவனைப் பற்றியோ.. இந்த வழக்கு பற்றியோ தகவல் ஏதுமில்லை..!
|
Tweet |
5 comments:
Binny மில்லில் அப்போது நான்...!!!
இதை நாடகம்னு நீங்க சொல்றது வேடிக்கை.. தங்கை கல்யாணம் நடத்தணும்னு ரெண்டு அப்பாவிப் பொண்ணுகளை கடத்திப்போயியிருக்காரு..அந்தப் பொண்ணுங்க மனநிலை பத்தி எல்லாம் கவலை இல்லை.. தங்கச்சி நல்லா வாழணும் அதான் அவருக்கு முக்கியம்?
நான் அடிக்கடி வாதிடும் விசயம் இது கோடிஸ்வர நண்பர்கள் இருப்பதும் பிச்சக்கார நண்பர்கள் இருப்பதும் ஒண்ணுதான், சுயமரியாதை உள்ளவனுக்கு.
கோடியிருந்ந்தாலும் யாரும் யாருக்கும் அள்ளிக் கொடுக்கப் போவதில்லை. அப்படி அள்ளிக்கொடுத்தாலும் அந்தப் பிச்சைய வாங்க சுயமரியாதை தடுக்கும்.
கல்யாணம் ஆரம்பம்தான். அப்புறம் தங்கைக்கு குழந்தை பிறக்கும், காது குத்தணும், அதுக்குப் பணம் வேணும், தங்கச்சி பிள்ளைய நல்ல ஸ்கூல்ல சேர்க்கணும். அதுக்குப் பணம் வேணும். அப்போ என்ன பண்னுறது? இப்படியே தொடர்ந்து சின்னச் சின்ன கடத்தலா செய்ய வேண்டியதுதான்..இல்லையா?
ஆமாம், இந்த உடையாரோடு ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சினைக்காகத்தானே சுமனைக் கூட கைது செஞ்சாங்க?
இது நாடகமாக தோன்றவில்லை! தவறான வழிக்காட்டுதலில் ஓரு அப்பாவி குற்றவாளியாகி இருப்பதாக தோன்றுகிறது! பாவம் டிரைவர்!
அண்ணே நீங்கள் கூறிய தகவல் முற்றிலும் தவறு! என்ன அண்ணாச்சி! நீங்க press தானே! வருடம், இடம், பொருள், ஆட்கள் எல்லாம் முற்றிலும் தவறு. நடந்த வருடம் தவறு! சுருங்க சொன்னால், ""உங்கள் தலைவர் உயிருடன் இருந்த காலம்--கட்டாயம் 1987-க்கு முன்பு!" ஒரே ஒரு க்ளூ! காதலை தவறாக உபயோகப் படுத்த நினைத்த நெட்டைக்காலன்! யாரும் மருத்துவக்கல்லூரி மாணவி அல்ல; ஆனால், ஒரு பெண் ஒரு ஆண் தான்! உதவிக்கு ஒரு நண்பன். இதைப்பற்றி மேலும் எழுதுவது நாகரீகம் இல்லை.
Post a Comment