கருணாநிதி... ஜெயலலிதா... ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

11-05-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘கருணாநிதி’ என்ற பெயரைக் கேட்கும்போது ஜெயலலிதாவும், ‘ஜெயலலிதா’ என்ற பெயரை உச்சரிக்கும்போது கருணாநிதியும் தமிழர்களின் நினைவுக்கு வருவது தற்செயல் நிகழ்வல்ல. 

கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழகத்தின் தலையெழுத்தை, அரசியலைத் தீர்மானிக்கும் இவர்கள், அரசியல் செய்வது, அறிவிப்பு வெளியிடுவது என எதிரெதிர் துருவங்களாகக் காட்சியளிக்கின்றனர். 

ஆனால், ஊழல், தனி மனிதத் துதி, குடும்ப அரசியல், சர்வாதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தால் இருவரும் ஒருவரே.



சர்க்காரியாவும் மைக்கேல் டி.குன்ஹாவும்..!

தமிழகத்தில் ஊழல் என்ற வார்த்தை கருணாநிதியின் காலத்தில் பிரபலம் அடைந்தது. காமராஜரின் காலத்தில்... அண்ணாவின் ஆட்சியில்... அந்த வார்த்தைகள் அவ்வளவு பிரபலம் இல்லை. கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்கு கருணாநிதி கொண்டு வந்த பிறகே, ஊழல் என்ற சொல் பிரபலமானது. 

1969-ல் முதன்முதலாக முதலமைச்சரான கருணாநிதி, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தது; சென்னை மவுன்ட் ரோட்டில் இருந்த குளோப் தியேட்டருக்காக சட்டத் திருத்தம் கொண்டு வந்தது; ‘பிராட்வே டைம்ஸ்’ பத்திரிகையுடன் ஒப்பந்தம் போட்டது; சென்னையில் அண்ணா மேம்பாலம் கட்டியது; ஏ.எல்.சீனிவாசன் என்பவருக்கு பீர் தொழிற்சாலை அமைக்க உரிமம் வழங்கியது; வீராணம் ஏரித் திட்டத்துக்குக் குழாய் பதித்தது என்று ஊழல் பட்டியலை நீளமாக்கிக்கொண்டே போனார். 

அதைப் பட்டியல் போட்டு, அன்றைய ஜனாதிபதியிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அதன்பேரில் அமைக்கப்பட்டதுதான் சர்க்காரியா கமிஷன். இன்றைக்கும் சர்க்காரியா என்ற பெயரைக் கேட்டால் கருணாநிதிக்கு மட்டுமல்ல... தி.மு.க-வில் பலருக்கும் கிலி பிடிக்கும்.

கருணாநிதி மீதான அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த சர்க்காரியா, மிரண்டு போனார். “விஞ்ஞானப்பூர்வமாக இந்த ஊழல்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்பட்டமாகத் தவறுகள் நடந்துள்ளன. பல லட்சம் (அன்றைய மதிப்பு) பணம் கைமாறி உள்ளது. அந்தப் பணத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர், சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். ஆனால், அதை நிரூபிக்கப் போதுமான ஆவணங்கள் இல்லை. அதிகாரிகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு, நிர்வாகரீதியில் இந்த ஊழல்கள் செய்யப்பட்டுள்ளன” என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். 

அன்று ஊழல்களுக்குப் பழகிய கருணாநிதியின், ஒவ்வோர் ஆட்சியிலும் ஊழல் தொடர்கதையாகிக்கொண்டே வருகிறது. கருணாநிதியிடம் பாடம் கற்றுக் கொண்ட அவரது உடன்பிறப்புகள், மத்தியில் வாய்ப்புக் கிடைத்ததும் அங்கும் தங்களின் ஊழல் கொடியை வெற்றிகரமாகப் பறக்க விட்டனர். 2ஜி அதற்குச் சாட்சி. 

கருணாநிதிக்கு ஏட்டிக்குப் போட்டியாகவே இருக்க விரும்பும் ஜெயலலிதா, இந்த விஷயத்தில் கருணாநிதியாகவே இருக்க விரும்பினார் போல. 

1991-ம் ஆண்டு முதன்முதலில் முதலமைச்சரானதும், தமிழகத்தை ஊழலில் மூழ்கடித்தார். ஊராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கி, புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த அத்தனை துறைகளிலும் ஊழல் ஊற்றெடுத்து ஓடியது. பஞ்சாயத்து யூனியன்களுக்கு கலர் டி.வி வாங்கியது; சுடுகாடுகளுக்குக் கூரை போட்டது; டான்சி நிலம் வாங்கியது; நிலக்கரி இறக்குமதி செய்தது; பிறந்த நாள் பரிசு வாங்கியது என்று எல்லாவற்றிலும் ஊழலை அரங்கேற்றினார். இவற்றில் சம்பாதித்த பணத்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்தார். 

மாதம் ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, 1991-96 காலகட்டத்தில் மட்டும் ரூ.66 கோடியாக உயர்ந்தது. பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை பெற்று பதவியையே இழந்தார். பிறகு, நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்குள்ளாகி விடுதலை பெற்றார். அதன் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டிக்கப்பட்டு மீண்டும் பதவியை இழந்தார். அந்த வழக்கில், நீதிபதி குமாரசாமியின் வரலாற்றுப் புகழ்வாய்ந்த தீர்ப்பின் மூலம் விடுதலை வாங்கிவிட்டாலும், இன்றுவரை அந்த வழக்கு ஜெயலலிதாவின் தூக்கத்தைத் தொலைக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. 

கருணாநிதிக்கு சர்க்காரியா என்றால், ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க-வினருக்கும் குன்ஹா என்ற பெயரைக் கேட்டால் தூக்கம் தொலையும். 

ராஜராஜ சோழனும்... அம்மாவும்..! 




திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த கருணாநிதி, ஜெயலலிதாவை மாலைகளும், மரியாதைகளும், புகழுரைகளும் தேடிச் சூடிக்கொள்ளும் தருணங்கள் ஏராளமாக வாய்த்து இருந்தன. ஆனால், அவை கிடைக்காத தருணங்களில், விலை கொடுத்து வாங்குவதற்கும், அதைக் கொடுப்பதற்காகவே ஒரு  கூட்டத்தைத் தங்களைச் சுற்றிவைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தினர். 

2006-11 வரை நடைபெற்ற தி.மு.க ஆட்சியில் அரங்கேறிய பாராட்டு விழாக்கள் கருணாநிதியின் புகழ் மாலைகளுக்கு உதாரணங்கள். அது பாராட்டு விழா நடத்தி காரியம் சாதிக்கும் அளவுக்குப் போனது. கவிஞர்கள் கருணாநிதியைப் பாராட்டு மழையில் நனைத்தனர். ஒருகட்டத்தில் கருணாநிதியைத் தவிர, மற்றவர்களுக்கு அலுத்துப்போயின அந்த விழாக்கள். 

ஒரு பாராட்டு விழாவில், நடிகர் அஜித், “எங்களை மிரட்டி கூப்பிடுறாங்கய்யா” என்று போட்டு உடைத்தார். அதைச் சொல்ல முடியாமல், புழுங்கிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், அஜித்தின் அந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார். அதன் பிறகு ரஜினியும் அஜித்தும் கோபாலபுரம் சென்று கருணாநிதியிடம் தங்கள் பேச்சுக்கு புது விளக்கங்கள் கொடுத்து வந்தனர்.  

அதே ஆட்சியில்தான் செம்மொழி மாநாடு, ராஜராஜ சோழன் பட்டாபிஷேகம் போன்ற விழாக்களின் நாயகன் ஆனார் கருணாநிதி. கருணாநிதியின் புகழ் பலவீனத்தைப் புரிந்து கொண்டவர்கள், புதுப்புது வார்த்தைகளைத் தேடித் தேடி கருணாநிதியைப் புகழ்ந்தனர். அவர்களுக்குக் கைமாறாகப் புதுப்புதுப் பதவிகளை உருவாக்கிப் பரிசாகக் கொடுத்தார் கருணாநிதி.

கருணாநிதிக்குப் பாராட்டு விழாக்கள் என்றால், ஜெயலலிதாவுக்கு சட்டமன்றக் கூட்டத் தொடரே ஜால்ரா மன்றமாக அமைந்தது. மக்களின் குறைகளை மன்றத்தில் உறுப்பினர்கள் தெரிவிப்பதற்காக நடக்கும் கூட்டத் தொடரை, தன்னுடைய புகழ்பாடும் மன்றமாக மாற்றினார் ஜெயலலிதா. 

துணிச்சலோடு ஒரு சில கேள்விகளையாவது கேட்கும் எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்றிவிட்டு, தனது அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களை வைத்து தனக்குத் தானே நாள்தோறும் பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டார். அவரைப் புகழும் அளவுக்குக் கருணாநிதியைத் திட்ட வேண்டும் என்பது அந்த அவையில் எழுதப்படாத விதியாக இருந்தது. அதைத் திறம்படச் செய்தவர்களுக்கு அமைச்சர் பதவியை அள்ளிக் கொடுத்தார். 

அதன் உச்சகட்டமாக, சிறைக்குள் இருந்த ஜெயலலிதாவை விடுவிப்பதற்கு நடத்தப்பட்ட யாகங்கள், பூஜைகளில் தெய்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஜெயலலிதாவே முன்னிறுத்தப்பட்டார்.

குடும்ப ஆதிக்கமும்... குறுநில மன்னர்களும்...!

அண்ணா வளர்த்த கட்சியை ஓயாத சுறுசுறுப்பு, பேச்சாற்றாலுடன் கருணாநிதி சேர்த்துவைத்த கோஷ்டியும் அவரைத் தலைவராக்கியது. அப்போது அவரைத் தலைவராக ஏற்காத பேராசிரியர் அன்பழகன்கூட பின்னாளில் ‘கலைஞர் என் தலைவர்’ என்று ஏற்றுக் கொண்டார். ஆனால், கருணாநிதியின் வாரிசுகள் என்ற ஒரே தகுதி உடைய பலரையும் தலைவர்களாக ஏற்க வேண்டிய நிலை, இன்றைய தி.மு.க தொண்டனுக்கு வந்திருக்கிறது.



ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு, செல்வி, தயாநிதி மாறன் ஆகியோரின் ஆதிக்கம் கட்சிக்குள் எப்படி இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

2006-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, ஸ்டாலின் நாடு, அழகிரி நாடு என்று தமிழ்நாடு பிரிந்து கிடந்தது.  இப்போது அந்தத் தலைமுறையையும் தாண்டி சபரீசன், உதயநிதி, தயாநிதி, கலாநிதி, கயல்விழி, அஞ்சுகச் செல்வி என்று அடுத்த தலைமுறையின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. 

தேர்தலுக்கு சீட் கொடுப்பதில் இருந்து, யாருக்கு எங்கே பொறுப்பைக் கொடுக்க  வேண்டும் என்பதுவரை இவர்கள் தீர்மானிக்கின்றனர். தி.மு.க ஆட்சி மீண்டும் அமைந்தால் இவர்கள்தான் மிகப் பெரிய அதிகார மையங்களாக இருப்பார்கள்.


ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் குடும்பத்துக்குப் பதில் அங்கு சசிகலாவின் குடும்பம் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் அ.தி.மு.க-வில் நிரந்தரமாகிவிட்டது. சசிகலா, இளவரசி, நடராஜன், சுதாகரன், ராவணன், தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியையும் கட்சியையும் மன்னார்குடி குடும்பம் கட்டுப்படுத்துகிறது.  



ஒருவர் போனால், அந்த இடத்துக்கு வரும் மற்றொருவரும் மன்னார்குடி குடும்பத்தில் இருந்தே வருகிறார். அந்தவகையில் இன்றைய புது வரவு விவேக் ஜெயராமன். அடுத்து அ.தி.மு.க ஆட்சி அமைந்தால் விவேக் ஜெயராமனின் ஆதிக்கமே நிலவும். 



கருணாநிதி ஆட்சியில் குறுநில மன்னர்களாக, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, நேரு, பெரியசாமிகள் இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், வைத்திலிங்கம் வகையறாக்கள் வருகிறார்கள். நில அபகரிப்பு, மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுப்பது, கல்லூரிகள் கட்டுவது, காசு பார்ப்பது என்று இருக்கும் இவர்கள், தலைமையின், கட்சியின் நிதி ஆதாரங்களாக இருக்கிறார்கள்.

வேட்டி கட்டிய ஜெயலலிதாவும்... சேலை உடுத்திய கருணாநிதியும்..!

ஆட்சியை நடத்துவதிலும் கட்சியைக் கட்டுப்படுத்துவதிலும் கருணாநிதி ஒரு வேட்டி கட்டிய ஜெயலலிதாவாக இருப்பார். ஜெயலலிதா சேலை உடுத்திய கருணாநிதியாகக் காட்சி தருவார். 

கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, சட்டமன்ற நடவடிக்கைகள் என்று அனைத்திலும் ஒரே போக்கு. கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் எதிர்ப்பவர்களைக் கட்டம் கட்டுவது, ஓரம் கட்டுவது, பொய்வழக்குப் போடுவது, அவர் போட்டத் திட்டத்தை இவர் உடைப்பது, இவர் கொண்டு வந்த திட்டத்தை அவர் முடக்குவது என்று சர்வாதிகாரமாகச் செயல் படுவதிலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான். 

தன்னைப் பற்றியும் தன் அரசாங்கம் பற்றியும் பத்திரிகைகளில் எது வந்தாலும், ஜெயலலிதா நேரடியாக அவதூறு வழக்குத் தொடர்வார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் வழி இன்னும் விநோதமானது. கருணாநிதியைப் பற்றியோ, அவரது குடும்ப ஆதிக்கம் பற்றியோ, அவரது ஆட்சியைப் பற்றியோ ஏதேனும் விமர்சனம் செய்து, பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டால், `முரசொலி’யில் கட்டுரை எழுதுவார். `பார்ப்பன ஏடுகள்’ என்பார்; அவதூறு வழக்குப் போடுவார். இருவரும் பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் விளம்பரங்களை வெட்டுவார்கள்.

புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா தேர்வு செய்த இடத்தில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தார் கருணாநிதி. கருணாநிதி கட்டிய தலைமைச் செயலகத்தை பொதுநோக்கு மருத்துவமனை ஆக்கினார் ஜெயலலிதா. இப்படி இவர்களின் ஒவ்வோர் அசைவும் எதிரும் புதிருமாக இருந்தாலும், அடிப்படையில் இருவரும் ஒருவரே. அவர் செய்ததைத்தான் இவர் செய்வார். இவர் செய்ததைத்தான் அவர் செய்வார்.

நன்றி : ஜூனியர் விகடன் - 15, மே, 2016

- ஜோ.ஸ்டாலின்

1 comments:

vasan said...

ஒரு உண்மையை எல்லோரும் அறிந்தோ அறியாமலோ மறைக்கிறார்கள்.
அந்த உண்மைதான் அதிமுக, திமுகவை இணைத்து, அரசை ஒரு வியாபரா தளமாக மாற்றி, சாராயம், மணல், கிரனைட், பால் வினியோகம், ஒப்பந்ததாரர்ஜள், காப்பீட்டு நிறுவனம், தனியார் கல்லுரி, மருத்துவமணி பிரிவு என அரசாங்கம், ஒரு வியாபார ஸ்தலமாக (இரு கழகங்க்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பொது விதி மாறது) ஆக்கிய அந்த பாலம் அல்லது ஆணி வேர் சாட்சாத். ம. நடராஜன் அவர்கள்..

ஆச்சரியமாக இருக்கிரதூ? அதுதான் அவர்களது விஞ்ஞான .பூர்வமான ஊழலிலின் மையம்.
அறிஞ்சர் அண்ணாவுக்குப்பின் கலைஞ்சர் முடிசூட்ட அவரது குறுக்கு புத்தியும், எம்ஜியாரும், துணிவும் துணை வந்தாலும், மோடி டிகிரி பிரசனை போல, கலைஞருக்கு போட்டியாளர்கள் எல்லாம், பேராசிரியர்கள், இரட்டை பட்டதாரிகள். இவரோ எட்டாம் வகுப்பு போகாத ஆள். மற்றவர்கள் வீக் பாயிண்ட் தெரிந்து ஆய்தம் எடுக்கும் கருணாநிதியின் வீக் பாயிண்ட் பார்த்து 1971-ல் அவரையே வீழ்த்திய ஆள் சாட்சாத் இந்த சாமானிய ம. நடராஜன்.தான். அண்ணாமலை பலகலை கழகம் கலைஞருக்கு "டாக்டர் பட்டம்" வழங்க காரணகர்த்தா அப்போது மானவபேரவையில் இருந்த இவர் தான். (எதித்த்த உதயகுமார் இறந்த சம்பவம் அறிவீர்கள்) அதற்கு கலைஞர் நடராஜனுக்கு கொடுத்த பரிசு தான் PRO பதவி. அவரது திருமணத்தையும் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.. இப்போ இரு கட்சிகளின் லிங்க் கிடைத்தி விட்டதா? இவர் தான் அப்போதைய சைதை கிட்டு இப்போதைய கு.க.செல்வம் போன்ற அவரது இனத்தவர்களை இரு கட்சியிலும் பரவலால விரவி, இரு கட்சிகளும் நாட்டை "நீ பாதி- நான் பாதி" என ஆள வழி வகை செய்து, எந்த அடசியல் குற்றவாளியும் அகப்பட்டுக் கொள்ளாமல், வழக்குகளே பதவிஆகமால், சும்மா பேருக்கு ஒரு கபட நாடகம் ஆடி,என்ன்வோ இவர்கள் பரம எதிரிகள் போல மேடையில் பேசி, நடித்து வீரம் காடி நீட்டி முசங்கி விட்டு ஒன்றாய் முடங்கி விடுவார்கள். இப்போ மூன்றாவது அணி, எங்கே ஊடே வந்து ஆட்சியை பிடித்து விட்டால். கேட்டிய கோட்டை நொறுங்கி விடுமோ என அஞ்சியே..ஊடகங்களை விட்டு, திமுகவும், அதிமுகவும் தான் போட்டியாளர் போலவும், மூன்றாம் அணி கோமாளி அணி என்றும் ஒரு இம்ப்மேஜை ஊடகங்களை வைத்து உருவாக்கு கிறார்கள். (கூட்டணியிலேயே அவரது உள் ஆட்கள் இருக்கலாம் என்பது யூகம்) விஜயகாந்தும் அவ்ர்களின் வலையில் சரியாய் மாட்டுகிறார் பாவம். ஆகட்டும் பார்க்கலாம். விதி வலியது.