ஆத்தா ஆட்சியின் லட்சணம் - சூரிய ஒளி மின்சாரத்தில் 25000 கோடி நஷ்டம்..!

04-05-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சந்தையில் ஒரு பொருளை ஒரு ரூபாய்க்கு கூவிக் கூவி விற்றுக்கொண்டிருக்கும்போது, அந்தப் பொருளை 3 ரூபாய்க்கு வாங்கினால் என்ன ஆகும்? இரண்டு ரூபாய் நஷ்டம் ஏற்படும். 

இப்படி இரண்டு ரூபாய் நஷ்டத்தில் கோடிக்கணக்கான பொருட்களை வாங்கினால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். அதைத்தான் செய்துள்ளார்  தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் என்று பதறவைக்கிறார்கள். 

நஷ்டமான தொகை ரூ.25,000 கோடி என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள். மக்களின் பணத்தைக் கோடி கோடியாக அள்ளிக் கொடுத்து, நஷ்டம் ஏற்படுத்தியதற்குப் பிரதிபலனாக அந்தத் தனியார் நிறுவனங்கள், என்ன பிரதிபலன் செய்துள்ளனவோ? இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கலாகி இருக்கிறது. அதன் சாராம்சம் என்னவென்றால்...

சூரிய மின்சக்தி...

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடந்தபோது (2006 - 2011), மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. 15 மணி நேரம் ‘கரன்ட் கட்’ என்றாகி தமிழ்நாடு, இருண்ட காலத்தில் இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். குடிசைத் தொழில் தொடங்கி ராட்சத இயந்திரத் தொழில்கள் வரை பாதிக்கப்பட்டன. அவை ஏற்படுத்திய தாக்கமும் மக்களின் மனதில் கிளம்பிய கோபமும், தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அ.தி.மு.க ஆட்சி அமையக் காரணமாக இருந்தன. 

தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவில் பல மாநிலங்களிலும், இதுபோன்ற மின் தட்டுப்பாடு அந்த நேரத்தில் நிலவியது. அதனால், மின்சார உற்பத்தியில் மாற்றுவழி பற்றிய விவாதங்கள் நாடு முழுவதும் கிளம்பின. அதில் கண்டறியப்பட்ட புதிய தீர்வுதான், சூரிய மின்சக்தி. இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சூரிய மின்சக்தியை ஒரளவுக்கு முயற்சி செய்தன. தமிழகமும் களத்தில் இறங்கியது. 

2012-ம் ஆண்டு அதற்காக ஒரு கொள்கை வகுக்கப்பட்டது. 2012-ல் தொடங்கி 2015 வரை ஒவ்வோர் ஆண்டும் 1,000  மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கான தளவாடங்கள் தமிழக அரசிடம் இல்லை. வழக்கம்போல் தனியாருக்கு டெண்டர்விட முடிவு செய்யப்பட்டது. 

தனியாரிடமும் அதற்கான வசதிகள் இல்லை. அவர்களும் இனிதான் இடம் பார்க்க வேண்டும்; இயந்திரங்களை நிறுவ வேண்டும்; அதன் பிறகுதான், சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனாலும், நாங்கள் அதைச் செய்து கொடுப்போம் என்று பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. 

அவர்களை ஊக்கப்படுத்தும்விதத்தில், ‘புதுப்பிக்கத்தக்க மின்சார ஒழுங்கு முறை ஆணையம் (Reneval energy purchase obligation)’ என ஒரு கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டது. ‘சூரிய மின் சக்திச் சட்டம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து, 12 செப்டம்பர் 2014-ல் ஓர் உத்தரவைப் போட்டது தமிழக அரசு. 

அதன்படி,

1. தமிழ்நாடு மின்சார வாரியம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரம் 7.01 ரூபாய் என்ற விலைக்கு வாங்கி விநியோகம் செய்ய வேண்டும்.

2. மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை, தங்கள் பயன்பாட்டில் 0.5 சதவிகிதம் சூரிய மின்சக்தியைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். (தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் 6 ஆயிரம் கோடி யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. அதில், 0.5 சதவிகிதம் என்பது 3 கோடி யூனிட்.)

3. தனியார் பயன்பாட்டுக்கு எவ்வளவு சூரிய மின்சக்தி தேவைப்படுகிறதோ, அந்த அளவுக்கு மட்டுமே தமிழ்நாடு மின்சார வாரியம், சூரிய மின்சக்தியை உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும். அப்படிப் பார்த்தால், அவர்கள் பயன்படுத்தும் 3 கோடி யூனிட் என்பது 21 மெகாவாட்தான். அவ்வளவு வாங்கினால் போதும் என்று சட்டம் போட்டது.  

இந்தத் திட்டம் போடப்பட்டதும், இதற்காகப் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. அவற்றில் 1,500 நிறுவனங்கள் பதிவு செய்ய அனுமதிக்கப் பட்டன. அவற்றில், 52 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவை சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்து தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஒரு யூனிட் 7.01 ரூபாய்க்கு விற்பனை செய்தன. 25 ஆண்டுகளுக்கு இந்தக் கொள்முதல் நடக்கும். ஆனால், விலை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறுபடும் என்பது சட்டமாக இயற்றப்பட்டது. 

இப்படி போய்க்கொண்டிருந்த நிலையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து 21 மெகாவாட் வாங்கப்பட்டது. முதலில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கான கொள்முதல் காலக்கெடு, 2015 செப்டம்பர் 12-ல் முடிந்தது. அடுத்து விலையைப் புதிதாக நிர்ணயிக்க வேண்டும். 

அந்த நேரத்தில், மத்திய அரசின் ‘புதுப்பிக்கத்தக்க  மரபுசாரா மின்சக்தி ஒழுங்கு முறை ஆணையம்’ தமிழக மின்வாரியத்துக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், ‘இந்த ஆண்டு, சூரிய மின்சக்தியின் விலை 14 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால், நீங்களும் கடந்த ஆண்டு வாங்கிய விலையைவிட குறைவாக வாங்குங்கள். அதாவது, 5 ரூபாய்க்கு வாங்கினால் போதும்’ என்று அறிவுறுத்தியது. 

ஆனால், அப்படி வாங்கினால் தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் கமிஷனை குறைத்துவிடும் என்பதற்காக, நத்தம் விசுவநாதன் அதே 7.01 ரூபாய்க்கு வாங்கவே திட்டம் போடுகிறார். 

அமைச்சர் திட்டப்படியே, அடுத்து ஒரு 6 மாதங்களுக்கு காலக்கெடுவை நீடித்து, தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க மரபுசார மின்சக்தி ஒழுங்கு முறை ஆணையம் இப்போது உத்தரவு போட வேண்டும். அந்த ஆணையத்தில் ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்கள். அவர்களில் தலைவர் அக்‌ஷய்குமாரும் ஓர் உறுப்பினர். ராஜகோபாலும் அமைச்சர் சொல்படி, விலை குறைந்த பொருளை, இரண்டு ரூபாய் கூடுதலாகக் கொடுத்து கோடிக்கணக்கில் வாங்க உத்தரவு போட்டனர். ஆனால், மற்றோர் உறுப்பினரான நாகல்சாமி, அப்படிச் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். 

ஆனால், அதையும் மீறி அந்த உத்தரவு போடப்பட்டு அதே விலையில் மின்சாரம் வாங்கப்பட்டது. எவ்வளவு வாங்கப்பட்டது என்றால், 947 மெகாவாட் வாங்கப்பட்டது. இதில், ஒரு மெகாவாட்டுக்கு 8 கோடி ரூபாய் நஷ்டம் என்கிறார் நாகல்சாமி. அப்படிப் பார்க்கப் போனால், 7 ஆயிரத்து 576 கோடி ரூபாய் நஷ்டம்.

சட்ட விரோதமாகப் புகுத்தப்பட்ட அதானி குழுமம்..

21 மெகாவாட் மின்சாரம் மட்டும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கினால், போதும் என்று சூரிய மின் சக்தி சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இந்த நேரத்தில், அதானி குழுமத்தைக் கொண்டு வந்து ஜெயலலிதா முன்னிலையில் நிறுத்தினார் அமைச்சர் நத்தம் விசுவநாதன். 

அவர்களோடு ஜெயலலிதா முன்னிலையிலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. 648 மெகாவாட் மின்சாரம் வாங்க போடப்பட்ட அந்த ஒப்பந்தம், சட்ட விரோதமானது. அதில் நடைபெற்ற முறைகேட்டை கணக்கிட்டால், 5 ஆயிரத்து 184 கோடி ரூபாய்.

இதுபோக, சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பதிவு செய்வதற்கு ஒவ்வொரு நிறுவனத்திடம் இருந்தும் 50 லட்சம்வரை கை மாறியதாகவும் புகார் கிளம்பி உள்ளது. அந்தக் கணக்குப்படி 1,500 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன. இதில் ரூ.750 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக ஒரு புகார் சொல்லப்பட்டு உள்ளது. 

இந்தப் புகார்கள் அத்தனையையும் தொகுத்து, சீனிவாசன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தார். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார். வழக்கறிஞர் மணிவாசகம் நடத்திய வழக்கில் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இதில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நத்தம் விசுவநாதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றால், அது தமிழக அரசுக்கு நஷ்டம். தமிழக அரசின் நஷ்டம் என்றால், அது ஜெயலலிதாவுக்கு நஷ்டம் அல்ல... தமிழக மக்களுக்கு நஷ்டம்.

நன்றி : ஜூனியர் விகடன் 08-05-2016
- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன்

1 comments:

Sid said...
This comment has been removed by the author.