24 - சினிமா விமர்சனம்

07-05-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தீராத ஆசை இருக்கும். அது அவரவர் வாழ்க்கையில் தாங்கள் செய்த தவறுகளை செய்யாமல் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்பதுதான். காலத்தை திரும்பிப் பார்க்க மட்டுமே முடிந்த நமக்கு, காலத்தைத் திருத்த முடிந்தால் எப்படியிருக்கும்..? இந்த ஏக்கம்தான் டைம் மிஷின் டைப் திரைப்படங்கள் ஹாலிவுட்டிலும் வெற்றி பெற்றதற்கான அடிப்படையாக்கம்..!
சென்ற ஆண்டு வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ இது போன்ற டைம் மெஷின் டைப் கதைதான். முதல் பிள்ளையார் சுழி போட்டு ஒரு எதிர்பார்ப்பை தமிழ் ரசிகனுக்குள் ஏற்படுத்தியது அந்தப் படம். இதோ அடுத்தக் கதையை சூர்யா தனது சொந்தத் தயாரிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்காகக் கொடுத்திருக்கிறார்.

சேதுராமன் என்னும் சூர்யா டைம் மெஷின் என்னும் காலத்தில் பின்னோக்கிச் செல்ல வைக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அன்றைய தினம் அனைத்துமே வெற்றிகரமாக முடிந்து அந்தக் கருவி செயல் நிலைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்திருக்கும் தருணத்தில், அவரது சொந்த அண்ணனான ஆத்ரேயா அங்கே வருகிறார்.
ஏற்கெனவே இப்படியொரு திட்டத்தில் தனது தம்பி ஈடுபட்டிருப்பதை அறிந்திருக்கும் ஆத்ரேயா இப்போது அந்தக் கருவியைக் கைப்பற்ற நினைக்கிறார். அண்ணனுக்கும், தம்பிக்குமான மோதலில் சேதுராமனின் மனைவியான நித்யா மேனனை கொலை செய்கிறார் ஆத்ரேயா. சேதுராமன் தனது கைக்குழந்தையுடனும், தான் கண்டுபிடித்த வாட்ச் போன்ற அந்தக் காலக் கருவியுடனும் அங்கிருந்து தப்பிக்கிறார்.
ஆனாலும் ஆத்ரேயா விடாமல் பின் தொடர.. ஓடும் ரயிலில் ஏறிய சேதுராமன் அதில் பயணிக்கும் சரண்யாவிடம் தனது குழந்தையையும், அந்த காலக் கருவி அடங்கிய பெட்டியையும் ஒப்படைக்கிறார். அதே ரயிலில் சேதுராமனை கண்டுபிடிக்கும் ஆத்ரேயா அவரைச் சுட்டுக் கொல்கிறார். ஆனால் கருவியை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றமாகிறார் ஆத்ரேயா. அந்தக் குழந்தை பெட்டியில் ஒருவேளை வெடிகுண்டு இருக்குமோ என்று நினைத்து பயந்துபோய் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஆத்ரேயா தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு ஆளாகிறார்.
இனி கதை 26 வருடம் கழித்து தொடர்கிறது. இப்போது கைக்குழந்தையான சூர்யா மணிகண்டனாகி வாட்ச் கடை வைத்து நடத்துகிறார். இவரது அம்மாவான சரண்யாவுடன் வசித்து வருகிறார். இவருடனேயே கவசகுண்டலம் போல வந்து சேர்ந்த அந்த காலக் கருவியடங்கிய பெட்டியை சூர்யா தன் அமரும் சேருக்கு முட்டுக் கொடுப்பதற்கும், சரண்யா சமையற்கட்டில் சிலவைகளை உடைப்பதற்குமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் கால மாற்றத்தின் அறிகுறிகள் தென்பட அதனை ஒரு கழுகு முன் நின்று செய்கிறது.
தனது ஒற்றைச் சிறகினால் ஆத்ரேயா தங்கி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் தீ பரவச் செய்கிறது. இந்தத் தீயினால் அதுவரை கோமாவில் இருந்த ஆத்ரேயா கண் முழிக்கிறார். அதே சமயம் அதுவரையிலும் அவரிடத்தில் இருந்த காலக் கருவி பெட்டியின் சாவி, குப்பையோடு குப்பையாக அள்ளப்பட்டு குப்பைக் கிடங்குக்கு வருகிறது. அங்கிருந்து அது பழைய இரும்புச் சாமான்கள் விற்கப்படும் கடைக்கு வருகிறது. அந்தக் கடையில் இருந்தும் அது தப்பித்து சூர்யாவின் டேபிளில் அதுவும் அந்தக் காலக் கருவியின் அருகிலேயே சூர்யாவின் நண்பன் சத்யானால் வைக்கப்படுகிறது..
சாவியின் டிஸைனை பார்த்து அசந்து போன சூர்யா, அதனை தற்செயலாக காலக் கருவியின் பெட்டிக்குள் புகுத்திப் பார்க்க அது திறக்கிறது. உள்ளேயிருக்கும் வாட்ச் போன்ற அந்தக் காலக் கருவியை கையில் கட்டிப் பார்க்கும்போது எதிர்பாராதவிதமாக சூர்யா சுவிட்ச்  போர்டில் கை வைக்க, அதன் மூலமாக மின்சாரம் பாய்ந்த அந்தக் காலக் கருவிக்கு உயிரும் வருகிறது.
வாட்ச் ரிப்பேரிஸ்ட் என்பதால் நோண்டிப் பார்க்கும் எண்ணத்தில் சூர்யா அதை ஆபரேட் செய்து பார்க்க, திடுமென்று 2 நிமிடங்கள் பின்னோக்கிய காலத்திற்குப் போய் வருகிறார் சூர்யா. உண்மையாகவே நம்ப முடியாமல் இரண்டு முறை செய்து பார்த்துவிட்டு இதை நம்பத் துவங்குகிறார் சூர்யா.
இந்த நேரத்தில் அழகு தேவதையாக வந்து நிற்கும் சமந்தாவை பார்த்தவுடனேயே காதலிக்கத் துவங்குகிறார். இதற்கு அந்தக் காலக் கருவியையும் பயன்படுத்துகிறார். இது தெரியாமல் சமந்தா இவரது செயலால் குழப்பமடைந்து போகிறார்.
அதே சமயம் சூர்யாவின் பெரியப்பனான ஆத்ரேயா கோமாவில் இருந்து மீண்டாலும் இனி வாழ்க்கை முழுவதும் படுக்கையில் படுத்தபடியேதான் இருந்தாக வேண்டிய சூழல். தனது அப்போதைய உதவியாளர் மித்ரனின் உதவியோடு மீண்டும் அந்தக் காலக் கருவியைத் தேடச் சொல்கிறார்.
இருவரும் சேதுராமன் இருந்த பழைய இடத்திற்கு ஆட்களுடன் வந்து காலக் கருவியைத் தேடுகிறார்கள். கிடைக்கவில்லை. ஆனால் வழிமுறைகள் கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்தி புதிய கருவியைச் செயலாக்க முனைகிறார்கள். சேதுராமனின் ஆராய்ச்சியின்போது அவருக்கே தெரியாமல் கடைசி நேரத்தில் ஒரு கழுகு செய்த வேலையினால் கிடைத்த ரசாயன கலவை உதவி இப்போது இவர்களுக்குக் கிடைக்காததால் ஆத்ரேயாவின் இந்த புதிய முயற்சி பல முறை தோல்வியடைகிறது.
ஆனால் அந்த காலக் கருவியின் வடிவமைப்பு தெரிந்திருப்பதால் அந்தக் கருவி இப்போது யாரிடத்திலாவது இருந்தால் அதைக் கைப்பற்றலாமே என்று நினைத்து தினசரி பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறார் ஆத்ரேயா. அது போன்ற டிஸைன் உள்ள வாட்ச்சுக்கு தான் ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாகவும் சொல்கிறார்.
இதைப் பார்த்துவிட்டு சத்யன் சூர்யாவை உசுப்பிவிட.. சூர்யாவும் ஒரு சந்தேகத்துடன் இதற்கு ஒத்துக் கொள்கிறார். இருவரும் ஆத்ரேயாவின் அலுவலகத்திற்கு படையெடுக்கிறார்கள். அங்கே நடக்கும் சண்டையில் மணிகண்டன் கொல்லப்பட அவரது கையில் கட்டப்பட்டிருந்த காலக் கருவி ஆத்ரேயாவின் வசம் வருகிறது.
சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் ஆத்ரேயா அந்தக் கருவியை இயக்கிப் பார்க்க அது அவரை 24 மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே கொண்டு செல்கிறது. இதனால் ஏமாற்றமடைகிறார் ஆத்ரேயா. இந்தக் கருவியில் மாற்றம் செய்தால் மட்டுமே முந்தைய காலத்திற்கு போக முடியும் என்பதை உணரும் ஆத்ரேயா.. அதற்கான முழு திறமை மணிகண்டனுக்கு மட்டுமே உண்டு என்பதை புரிந்து கொள்கிறார்.
உடனேயே காலக் கருவியின் உதவியுடன் 24 மணி நேரத்திற்கு முந்தைய காலத்திற்கு வருகிறார் ஆத்ரேயா. இப்போது மணிகண்டன் உயிருடன் இருக்கிறார். அவரை திட்டமிட்டு தனது இல்லத்திற்கு வரவழைக்கும் ஆத்ரேயா ஒரு சென்டிமெண்ட்டல் நாடகமாடுகிறார். ஆத்ரேயா கேரக்டரை ஒழித்துவிட்டு மணிகண்டனின் அப்பாவான சேதுராமனின் வேடத்தை ஏற்கிறார்.
இப்போது இதனைப் பார்க்கும் மணிகண்டன் தனது தந்தை உயிருடன் இருப்பதாக நினைத்து தனது பூர்வீகக் கதையை சரண்யாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். உடனேயே சரண்யா தனது சொந்த ஊருக்கு மணிகண்டனை அழைத்துக் கொண்டு செல்கிறார். அங்கே புதிய டிவிஸ்ட்டாக சமந்தாவும் இருக்கிறார். அவர் சரண்யாவின் அண்ணன் மகள் என்பது தெரிய வர.. இருவருக்குள்ளும் காதல் தீயாய் பரவுகிறது.
இந்த நேரத்தில் தனது தந்தை உயிருடன் இருப்பதை அவர்களிடத்தில் சொல்லி சேதுராமன் உருவத்தில் இருக்கும் ஆத்ரேயாவை அங்கே வரவழைக்கிறார் மணிகண்டன். இந்த நேரத்தில் சேதுராமன், “அந்தக் காலக் கருவியில் கொஞ்சம் மாற்றம் செய்து கொடுத்துவிட்டால் தன்னுடைய இந்தப் பணி நிறைவடையும்.. ஆத்ரேயாவையும் பழி வாங்கலாம்..” என்கிறார். இதனை உண்மை என்று மணிகண்டனும், சரண்யாவும் அவரது குடும்பத்தினரும் நம்புகிறார்கள்.
இதற்குப் பின் என்ன நடந்தது என்பதுதான் மிக, மிக சுவாரஸ்யமான படத்தின் கடைசி 1 மணி நேர திருப்பு முனைகள் அடங்கிய கதை.
இயக்குநர் விக்ரம் கே.குமாருக்கு ஒரு ‘ஜே’ போட வேண்டும்.. ரீமேக் கதையாகவே இருந்தாலும் அதனை தமிழுக்கேற்றாற்போல் திருத்தி, மாற்றம் செய்து.. திரைக்கதை அமைத்து, வசனம் மூலமாக ஒரு முறைக்கு, இரண்டு முறை ரசிகர்களின் மனதில் இது டைம் மெஷின் கதை என்று புரிய வைத்து இதற்கு மேலும் தனது சிறப்பான இயக்கத்தினால் படத்தை ரசித்து பார்க்கும்படி உருவாக்கியிருக்கிறார்.
சத்யன்-சூர்யா இடையிலான சம்பாஷனையை.. அதை 2 நிமிடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை 2 முறை நடத்திக் காட்டுவதில் துவங்கி.. ‘கடைசியாக நான் போய் 26 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த்தை திருத்திக் காட்டுகிறேன்’ என்று சொல்லி சூர்யா திரும்பி வரும்போது அவர் குழந்தையாகவும், அவருடைய கையில் அந்தக் காலக் கருவி இருப்பது போலவும் காட்டி படத்தின் மேக்கிங்கில் ஒரு சிறிய தவறுகூட இல்லாதபடிக்கு திரைக்கதையை கச்சிதமாக அமைத்திருக்கிறார் இயக்குநர்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் படத்தில் இருக்கும் புதிய தொழில் நுட்ப காட்சிகள்தான். கிராபிக்ஸ் வேலைகளாகவே இருந்தாலும் அதையும் பிரமிப்பூட்டும்விதத்தில் செய்திருக்கிறார்கள். சாவி, காலக் கருவியின் செயல்பாடு.. சேதுராமனின் விஞ்ஞானக் கூடம்.. குழந்தையை தூங்க வைக்கும் சிறிய பெட்டியின் செயல்பாடுகள்.. என்று பலவிதங்களிலும் புதிய சினிமா பார்வையாளர்களை உருவாக்கும்விதத்தில் படத்தின் செய்நேர்த்தி பிரமிக்க வைக்கிறது.
‘தெய்வ மகன்’ சிவாஜி போல மூன்று சூர்யாக்களுக்கும் வேறுவேறு கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை கொடுத்திருக்கிறார்கள். மூவரிலும் வில்லனாக வரும் ஆத்ரேயாதான் அசத்தல். சூர்யாவுக்கே அதுதான் பிடித்திருக்குமென்று நம்புகிறோம். விஞ்ஞானி சேதுராமன் முதல் பகுதியில் பரிதாபமாக இறந்து போனாலும், பிற்பாதியில் சக்கர நாற்காயில் அமர்ந்தபடி மாறுவேடத்தில் பேசும்போது இன்னும் அதிகமாகவே நடித்திருக்கிறார்.
இதேபோல் ஆத்ரேயா ‘சிங்கம்’ பாணியில் ‘ஆத்ரேயாடா’ என்று வீல்சேரை உயர்த்திக் கொண்டே குரலையும் உயர்த்திக் கொண்டே பேசும் பாணியில் ஒரு கொடூரத்தை குரலிலேயே உணர்த்தியிருக்கிறார். குரல் கொடுத்தது நடிகர் சிவக்குமாரா என்று தெரியவில்லை. அட்சரச் சுத்தமாக அவரது குரல்தான்.. மிகப் பொருத்தமானது..!
தனது தம்பியாகவே இருந்தாலும் அவனிடமிருந்து காலக் கருவியை மீட்டாக வேண்டும் என்கிற வெறியோடு, இரண்டாவது முறையாக அந்த வீட்டுக்குள் வந்து சண்டையிடும்போது அவரது ஒவ்வொரு ஆக்சனும் மணிகண்டனாக நடித்திருக்கும் சூர்யாவை புலிக்கு முன் எலி என்கிற கதையாக மாற்றிவிட்டது.
மணிகண்டன் சூர்யா எப்போதும்போல தியேட்டருக்கு வரும் ஒரு ரசிகனாக மாறி நடித்திருக்கிறார். டைம் மெஷினை பயன்படுத்தி சமந்தாவை இன்ஸ்பிரேஷன் செய்ய வேண்டி அவர் செய்யும் தகிடுதத்தங்கள் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்துதான். ப்ரீஸ் மோடில் அப்படியே அனைத்தையும் நிறுத்தும்வித்தையில் சமந்தாவின் டூ விலரில் கத்தியால் குத்தும்போது மாட்டிக்கொள்ளும் காட்சியில் யதார்த்தமான நகைச்சுவையைக் கொணர்ந்திருக்கிறார்.  
நீளமான காதல் காட்சிகளில் சமந்தாவை இன்ஸ்பிரேஷன் செய்வதற்காக இவர் ஆடும் டிராமாவும்.. பேசும் வசனங்களும் கச்சிதம்.. அதிலும் கானாடுகாத்தான் அரண்மனை வீட்டில் சமந்தாவும், அவரும் பேசும் ரொமான்ட்டிக்கான சீன் செம. அந்த இரவில் இங்கேயிருப்பது தனது தந்தை அல்ல.. ஆத்ரேயாதான் என்பதை அறியும் மணிகண்டனின் ஆக்சன் காட்சிகள் அடுத்த பொழுதில் இருந்து மாறுவதும்.. இதையே கடைசிவரையிலும் கொண்டு போயிருப்பதும் சூர்யா ரசிகர்களை நிச்சயம் கவரும்.
நித்யா மேனன் சில காட்சிகளே ஆனாலும் மனதில் நிற்கிறார். சமந்தா வழக்கம்போல.. சொக்க வைக்கிறார். குளோஸப் காட்சிகளில் எதிரில் நிற்பவர் யார் என்பதையே மறக்க வைக்கிறார். இந்த அழகுக்கு முன் ஹீரோக்களெல்லாம் எம்மாத்திரம்..? அந்த குளோப்ஜாமூன் முகத்தில் கொஞ்சம் வெட்கச் சிரிப்புடன் சூர்யாவுடனான தனது காதலை ஒத்துக் கொள்ளும் பரவசத்திற்கு பிறகு பாடல் காட்சியே தேவையில்லை எனலாம்.
முதல் பாதியில் கொஞ்சம் கதை, கொஞ்சம் காதல் என்றும் பிற்பாதியில் சென்டிமெண்ட்டல் காட்சிகளையும் வைத்து இரண்டையும் பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குநர். அதிலும் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு குடும்பமே மவுன விரதம் இருப்பதுபோல காட்சியை வைத்து சரண்யாவுக்காக அதனை அவர்களே உடைப்பதும் தியேட்டருக்கு வரும் குடும்பத்தினரை கவரும்தான். ‘மனம்’ கொடுத்த இயக்குநராச்சே..? இதற்கெல்லாம் சொல்லியா தர வேண்டும்..?
படத்தின் மிகப் பெரிய ஸ்பீடு பிரேக்கர் பாடல் காட்சிகள்தான். ஏ.ஆர்.ரகுமான் என்னதான் இசையமைத்திருந்தாலும் பாடல்கள் எடுபடவில்லை. அதே நேரத்தில் பாடல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் புண்ணியத்தால் பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது. பின்னணி இசை படத்தின் ரசிப்புக்கு குறுக்கே வராமல் இருப்பதால் பாராட்டப்பட வேண்டியதாகிறது.
கலை இயக்குநர்கள் அமித்ராய், சுபர்ட்டோ சக்ரபர்த்தியை எத்தனை பாராட்டினாலும் தகும். படத்தின் பிரமாண்டத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் தனது திறமையைக் காட்டியிருக்கிறார்கள். சேதுராமனின் விஞ்ஞானக் கூடத்தின் செட்டப் மிக அருமை. அதிலிருந்து சேதுராமனும், நித்யா மேன்னும் தப்பிக்கும்விதம் எதிர்பாராதது.. அதேபோல் குழந்தை படுக்கும் அந்தப் பெட்டியின் வடிவமைப்பும் ரசிக்கக் கூடியது. வெல்டன் பிரதர்ஸ்.
ஒளிப்பதிவாளர் திரு இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் எந்தக் காட்சியிலும் ஒளிப்பதிவின் தாக்கம் இல்லாமல் இல்லை. பாடல் காட்சிகளில் வெளிநாட்டு லொகேஷன்களை கண்ணுக்குக் குளிர்ச்சியாக சமந்தாவுக்கு போட்டியான அழகைக் காட்டியிருப்பதில் திரு பிரமிக்க வைத்திருக்கிறார். இது போன்ற திரைப்படங்கள்தான் ஒளிப்பதிவாளருக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என்பார்கள். திரு போன்ற திறமைசாலிகளுக்காகவே இது போன்ற கதைகள் இன்னமும் அதிகமாக வெளிக்கொணரப்பட வேண்டும்.
மணிரத்னம் பாணி ஒலிப்பதிவு மட்டுமே படத்திற்கு இருக்கும் மிகப் பெரிய குறை. அனைத்து ஒலிப்பதிவாளர்களும், இயக்குநர்களும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை மட்டுமே குறி வைத்து தமிழகம் முழுவதுமே தியேட்டர்கள் இப்படித்தான் சிறப்பாக ஒலி, ஒளி அமைப்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு இப்படி ஒலிப்பதிவை மேற்கொள்கிறார்கள்.
இந்த ஒலியமைப்பு பாளையங்கோட்டை சினிமா தியேட்டரில் இருக்கவே இருக்காது. வசனங்கள் மெல்லிய வாய்ஸில் அதிகம் கேட்காத வண்ணம் பதிவு செய்திருப்பதால் யாருக்கு என்ன லாபம்..? உரையாடல் புரியாமல் போனால் கதையும் புரியாமல் போய் பார்வையாளனுக்கு சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடுமே..? ‘கடல்’ படத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணமே இதுதான்.. இயக்குநர்களும், ஒலிப்பதிவு இயக்குநர்களும் இதைப் புரிந்து கொண்டால் நல்லது..!
இது போன்ற அறிவியல் ரீதியான திரைப்படங்களில் லாஜிக் பார்க்கவே கூடாதென்றாலும் சில கேள்விகள் நமக்குள் எழாமல் இல்லை. ஆனாலும் அவைகளெல்லாம் படத்தின் நீளம் கருதி சொல்லப்படாமல் போயிருக்கலாம் என்று நினைக்கிறோம்.
சூர்யாவின் ரசிகர்களுக்காக வேண்டி, காதல் காட்சிகளை நீட்டி முழக்கி வைத்திருப்பதால் படத்தின் நீளம் அதிகமாகிவிட்டது என்பது ஒரு குறைதான். இதில் கத்திரியை போட்டு லாஜிக் மீறல்களை நியாயப்படுத்த கூடுதலான சில காட்சிகளை வைத்திருக்கலாம்..!
‘பசங்க-2’ படம் கொடுத்த நல்ல பெயரை இந்த ‘24’ படமும் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு பெற்றுக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை..! நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் சூர்யாகவும் ஜெயித்திருக்கிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான விமர்சனம்! நன்றி!