உறியடி - சினிமா விமர்சனம்

29-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவில் எங்கெங்கும் காணாதபடி அனைத்திலும் ஊடுறுவியிருக்கும் சாதிய வேர்களை எத்துனை முயன்றும் இன்றைக்கும் அகற்ற முடியவில்லை. அது இந்தியர்களின் கூடவே பிறந்தது என்று சொல்லும் அளவுக்கு பரவியதற்கு, இந்தியாவின் அரசியல் சூழலும் ஒரு காரணம்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளே அனைத்து தொகுதிகளிலும் மெஜாரிட்டியான சாதியைச் சேர்ந்த தங்களது கட்சி உறுப்பினர்களையே சட்டசபை வேட்பாளராகவும், பாராளுமன்ற வேட்பாளராகவும் நிறுத்துகின்றன. இதன் பின்பு சாதி, சமய வேறுபாடுகளை களைய பாடுபடுவோம் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.
இந்தச் சாதி எப்படியெல்லாம் நம் கண்ணை ஏமாற்றி நாம் அறியும் முன்னரே நம்மை ஆக்கிரமிக்கிறது என்பதை இந்தப் படத்தின் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இளம் வயது இயக்குநரான விஜயகுமார்.

திருச்சி அருகில் இருக்கும் ஒரு சிறிய நகரம். அதில் 15000 பேர் இருக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள் ஒரு சங்கத்தை நடத்தி வருகிறார்கள். அதன் தற்போதைய தலைவர் உலகப்பன். இவர் தன்னுடைய தங்கை மகனான மைம் கோபியை வளர்ப்பு மகனாக வளர்த்து வருகிறார்.
கோபிக்கு தங்களுடைய சாதி சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்று ஓர் ஆசை. இதற்கு உலகப்பன் உடன்படவில்லை. மிகக் குறைந்த நபர்களை வைத்துக் கொண்டு கட்சியைத் துவக்கி என்ன செய்வது என்று கூறி தடுக்கிறார்.
கோபி நெடுஞ்சாலையில் தாபா டைப் ஹோட்டலை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு அருகில் ஒரு பொறியியல் கல்லூரி இருக்கிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் விஜய்குமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் நால்வரும் மிக நெருங்கிய நண்பர்கள்.
கல்லூரியில் படிக்கிறார்களோ இல்லையோ.. இந்த தாபாவுக்கு வந்து தினமும் குடிக்கிறார்கள். குடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு நாள் அந்த ஹோட்டலுக்குள் வரும் கீழ் சாதியைச் சேர்ந்த ஒரு பெரியவரை வெளியேறும்படி சொல்கிறான் ஹோட்டல் மேனேஜர். இதனை இந்த நான்கு பேரும் தட்டிக் கேட்கிறார்கள். இது அங்கே பெரிய ரகளையாகிறது. தங்களைத் தாக்க வந்தவர்களுடன் மல்லுக் கட்டுகிறார்கள் நால்வரும். அதற்குள் கோபி அங்கே வந்து அவர்களை விலக்கிவிடுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலுக்குள்ளாகவாவது சங்கத்தை அரசியல் கட்சியாக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் கோபி. இந்த நேரத்தில் உலகப்பன் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவனையில் படுத்துவிடுகிறார்.
கோபியின் ஹோட்டலுக்கு போலி மதுபானங்களை சப்ளை செய்பவரின் மகனான ராமநாதன் பேருந்தில் பயணம் செய்கையில் கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொள்கிறார். இதைப் பார்க்கும் நால்வரில் ஒருவன் ராமநாதனை அடித்துவிடுகிறான். மேலும் அதே பேருந்தில் பயணிக்கும் திருநங்கையும் ராமநாதனை அவமானப்படுத்த இது ராமநாதனின் தூக்கத்தைப் போக்கிவிடுகிறது. அவமானத்தில் குன்றிப் போய் இருக்கிறான்.
இந்த மாணவர்களை அடிக்க தாபாவுக்கு அடியாட்களை அனுப்பி வைக்கிறான். ஆனால் அங்கே இதை எதிர்பார்த்துக் காத்திருந்த மாணவர்கள் வந்த ரவுடிகளை சுளுக்கெடுத்து அனுப்பி வைக்கின்றனர். இந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து வேறு வழியை யோசிக்கிறான் ராமநாதன்.
மாணவர்கள் ராமநாதனுடன் மோதுவதை அறியும் கோபி, இதை அரசியல், சாதிய பிரச்சினையாக்கி இதன் மூலமாக ஒரு பெரிய சர்ச்சையைக் கிளப்பி சாதி அரசியல் செய்ய நினைக்கிறான். இந்தச் சூழ்ச்சி தெரியாமல் மாணவர்களும் கோபியின் நட்பான பேச்சால் கவிழ்ந்து அவர் போக்கில் செல்கிறார்கள். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை.
கோகுலாஷ்டமி கொண்டாட்டங்களில் முக்கியமான நிகழ்வு ‘உறியடி திருவிழா’தான். கண்ணைக் கட்டிக் கொண்டு தூரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பானையை கையில் இருக்கும் கம்பால் அடித்து உடைக்க வேண்டும்.  இதுதான் அந்தத் திருவிழா. இந்த ‘உறியடி’யைத்தான் படத்தின் தலைப்பாக மிக மிக பொருத்தமாக வைத்திருக்கிறார்கள்.
‘நம்முடைய கண்ணைக் கட்டிக் கொண்டு எதிராளியை அடிக்கச் சொன்னால் எப்படி?’ என்கிறார் இயக்குநர். இந்தச் சாதிய பிரச்சினையும் இப்படித்தான் இருக்கிறது. சாதி எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறது. அதனை கண்டுபிடித்து தீர்வு காண்பதென்பது மிகவும் கடினம் என்பதுதான் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் நமக்குச் சொல்லும் கருத்து.
படத்தின் மிக முக்கிய விஷயமே இயக்கம்தான். இயக்கம் என்றால் என்ன என்று கேட்பவர்களும், தெரியாமல் புலம்புவர்களும் தயவு செய்து இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவு அழகான இயக்கம். ரத்தச் சகதியில் துவைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இமை கொட்டாமல் கடைசிவரையிலும் பார்க்க வைத்திருப்பது இயக்குநர் விஜயகுமாரின் சிறப்பான இயக்கத்தினால்தான்.
இயக்கம் மட்டுமல்ல.. கலை இயக்கம்.. குறிப்பாக அந்த தாபா ஹோட்டலின் உட்புறம்.. அருமையான தயாரிப்பு.
இப்படியொரு சண்டையை வேறெந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு தத்ரூபமான சண்டை காட்சிகள்.. இடைவேளை பிளாக்கில் நடக்கும் சண்டையைப் பார்க்கும்போது குரூரம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் இதைவிட பயங்கரத்தை வேறு எங்கும் பார்க்கவே முடியாது. அப்படியொரு கொலை வெறியோடு அந்த சண்டைக் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள்.  
வசனங்கள் அனைத்துமே மிக எளிமையாக எழுதப்பட்டு அதிக அழுத்தமில்லாமல் கதையோட்டத்துடன் பேசப்பட்டிருக்கிறது. இதுவே கை தேர்ந்த இயக்குநரின் படமாக இருந்தால், ஒவ்வொரு வசனத்தையும் பிளக்ஸ் போர்டில் எழுதி வைப்பதுபோல பேசியிருப்பார்கள்.
ஆனால் இந்த இயக்குநர் மிக கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார். எந்த ஜாதி என்று தெரியாத வண்ணம் கதையை நகர்த்தியிருக்கிறார். அப்பா, மகன் என்றால் லேசுபாசாகத் தெரிந்துவிடும் என்பதால் மாமா, மருமகன் என்று மாற்றியிருக்கிறார். அதேபோல் கட்சியே வேண்டாம் என்கிற முடிவில் இருக்கும் சங்கத்தின் தலைவரை மெல்ல, மெல்ல தன்வசப்படுத்துவதுபோல மருமகன் செய்யும் உள்ளடி வேலைகளும், அதை அவர் கண்டு கொண்டும் காணாததுபோல இருப்பதுமான காட்சிகள் ரசனையானவை. “இதுல விஷம் கலக்கலியே..?” என்று தன் மருமகனிடமே கேட்கும் காட்சியில், அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் மனப்போராட்டத்தை தெளிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஆட்சி, அதிகாரம், பதவி  இதை அடைய ஒரு வழி அரசியல்தான். அந்த அரசியலில் வெளிச்சம் கிடைக்க உதவுவது ஜாதிப் பாசம்.. வெறும் 15000 வாக்குகள் மட்டுமே தொகுதியில் வைத்திருந்தாலும் அது எப்படி தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை கோபி கணக்குப் போட்டுச் சொல்லும்விதத்தைப் பார்க்கும்போது.. இயக்குநரின் அரசியல் அறிவை வியப்புடன் பாராட்டத் தோன்றுகிறது.
கீழ்ச்சாதிக்காரன் என்பதாலேயே ஹோட்டலுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று மேனேஜர் மறுக்கும் காட்சியில் சில வசனங்களை கட் செய்திருந்தாலும் அவைகள் புரிகிறது. தெரிகிறது.. இதேபோல் பேருந்தில் ஒரு திருநங்கையின் அருகில் இடம் இருந்தும் அமர மறுக்கும் பெண்மணியின் செயலை முன் வைத்தும் ஒரு கருத்தினை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு அவமானச் செயல் எப்படியெல்லாம் ஒருவனை அலைக்கழிக்கிறது என்பதை இந்த ராமநாதன் கேரக்டர் மூலமாக பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.  ராமநாதன் ஹோட்டலில் தங்கியிருந்தபடியே ஸ்கெட்ச் போட்டுத் தூக்குவதும், திருநங்கையை கொலை செய்ய முயற்சிக்கும்வேளையில் நண்பர்கள் குழாம் ஹோட்டல் அறையை துவம்சம் செய்யும் காட்சியும் அபாரம்.. அதீத வன்முறை என்றாலும் கொஞ்சமும் நம் மனதை பாதிக்காதவண்ணம் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். கல்லூரி ஹாஸ்டலில் நடிக்கும் இறுதிக் காட்சி பயமுறுத்துகிறது. இருந்தாலும் ஜாதி வெறி என்னும் அரக்கன் அவரவர் மனங்களில் இருந்து இறங்கும்வரையிலும் இது போன்ற கொடூரங்கள் தொடரத்தான் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தக் கல்லூரி மாணவர்களுக்கு வேறு வேலையே இல்லையா..? எப்போதும் குடியும், கும்மாளமும்தானா என்கிற கேள்வியும் பார்வையாளர்களுக்குள் எழுகிறது. இதனால்தான் அவரவர் வகுப்புகளில் செய்யும் சேட்டைகள்.. படிப்பில் ஆர்வமில்லாமல் இருப்பது.. அவர்களே இந்தக் கேள்வியை தங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்வது என்று பலவற்றையும் நம் முன் வைத்திருக்கிறார் இயக்குநர்.
நண்பர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் அனைவருமே நடிப்புக்கே புதியவர்கள். அனைவருமே வேறு வேறு தொழில் செய்து வருபவர்கள். கல்லூரி என்றால் ஒரு காதல் இருக்காதா..? அதற்காகவே ஒரு காதலை திணித்திருக்கிறார்கள். அந்தக் காதல் காட்சிகளும், பாடல் காட்சியும் ரம்மியமானவை. அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதற்கும் ஒரு பாராட்டு..!
பைத்தியக்காரனாக நடித்திருக்கும் நபரின் செயல் முதலில் பைத்தியமாகத் தெரிந்தாலும் பின்பு அரைகுறை மனிதராக காட்டி அவரை வைத்து ஸ்கெட்ச் போடும் பலே திட்டத்தை கடைசியான காட்சியாக காட்டி சஸ்பென்ஸில் வைத்து மிரட்டியிருக்கிறார் இயக்குநர்.
தரமான ஒளிப்பதிவு. தாபா காட்சிகள் மட்டுமன்றி பெரும்பாலான இரவுக் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளரின் பணி பாராட்டத்தக்கது. பின்னணி இசை சில இடங்களில் ஏனோதானோவென்றாலும், பல இடங்களில் காட்சிகளை மேம்படுத்தியிருக்கிறது.
படம் நெடுகிலும் காட்சியமைப்புகளில் ஒரு வித்தியாசத்தை உணர வைத்திருப்பதன் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் விஜயகுமார் தமிழ்ச் சினிமாவில் புதிய சிறந்த இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் என்பது உண்மை.
படத்தின் இறுதியில் சாலப் பொருத்தமாக மகாகவி பாரதியின், ‘அக்னிக் குஞ்சொன்று கண்டேன்’ பாடலை ஒலிக்க வைத்திருக்கிறார்கள். இது ஜாதி வெறியர்களுக்காக அப்பாவி இளைஞர்கள் எழுப்பும் கோபக் குரலாக இந்தப் படத்தில் பதிவாகியிருக்கிறது.
தலைவர்களின் சிலை உடைப்பு.. சிலைகளில் அசிங்கத்தை வீசுவது என்பதெல்லாம் இப்போதும் தமிழகத்தில் பல ஊர்களில் தொடர்ந்து நடந்து வருவதுதான். தற்செயலாக நடந்துவிடும் விஷயத்திற்கெல்லாம் பேருந்து எரிப்பு, கலவரம், துப்பாக்கிச் சூடுவரையிலும் கொண்டு போய் முடிக்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.
இந்தத் தீ எந்தப் பொறியில் இருந்து கிளம்புகிறது என்பதுதான் நாம் தேட வேண்டிய விஷயம். இதைத்தான் இந்தப் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அந்தப் பொறி அரசியல்தான். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் படத்தை முடித்திருக்கிறார்.
ஆனால் இது அனைவராலும் புரிந்து கொள்ளப்படுமா என்பதுதான் கேள்விக்குறி.

1 comments:

S Rajan said...

படம் மிக அருமையாக இருந்த்து. தாங்கள் கூறியது போல் இதே பாடத்தை பெரிய இயங்குனார்கள், நடிகர்கள் அல்லது தயாரிப்பளர்கள் செய்து இருந்தால் பெரிய அளவில் பேசப்படுயிருக்கும்.

மேலும் படக்குழவும்/தயாரிப்பளரும் என்னை மன்னிக்க வேண்டும் ஏன் எனில் இப்படத்தை இணையா வழியாகதான் பார்க்க முடிந்த்து.

ஒரு சிறிய குறையை தவறி படம் அழகாக எதார்த்தமாக இருந்தது.
படத்தில் பாரதியார் பாடல் அக்னி குஞ்சு .. பாடலை பயண் படுத்தியுள்ளனர், அருமையான இசை கோர்ப்பு.
அவருக்கு ஒரு நன்றி (Sincere Thanks to ... ) கூறியிருக்கலாம்..

அன்புடன்
குரு