களம் - சினிமா விமர்சனம்

01-05-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேய்ப் படம் என்ற ரீதியில் எடுக்கப்பட்டிருக்கும் பேயில்லாத படம் இது.
அடுத்தவர் சொத்துக்களை அபகரிப்பதையே தொழிலாக கொண்டிருக்கும் பெரும் பணக்காரர் மதுசூதனன். இவருடைய ஒரே மகனான அம்ஜத் தனது அப்பா, அம்மாவின் எதிர்ப்பையும் மீறி லட்சுமி பிரியாவை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்கும் தந்தையாகிறார். இப்போது இவர்கள் அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்ப முடிவெடுத்து வருகிறார்கள்.

மகன் வாழ்வதற்காக புதிய வீடு ஒன்றைத் தேடிக் கண்டுபிடிக்கிறார் மதுசூதன்ன். பாழடைந்த பங்களா போன்றிருக்கும் அந்த வீடு ராஜேந்திர பூபதி என்ற பழைய ஜமீன்தார் ஒருவருக்குச் சொந்தமானது. தனது பாணியில் அந்த வீட்டுக்கு புதிய வாரிசுதாரரை தானே நியமித்து அவரிடமிருந்து தான் பணம் கொடுத்து இந்த வீட்டை விலைக்கு வாங்கியதாக பத்திரப் பதிவு செய்து கச்சிதமாக வீட்டைக் கைப்பற்றுகிறார் மதுசூதனன்.
மகனும், மருமகளும், பேத்தியும் அந்த வீட்டுக்குக் குடி வருகிறார்கள். இனிமேலும் வேறொருவரிடத்தில் போய் கை கட்டி வேலை செய்ய வேண்டாம். தன்னுடைய பிஸினஸில் தனக்கு துணையாக இருக்கும்படி மதுசூதனன் மகனைக் கேட்க மகனோ அதை ஏற்க மறுக்கிறார். அப்பா, மகனுக்கு இடையே சமரசம் செய்ய முனைந்து தோல்வியடைகிறார் அம்மா ரேகா சுரேஷ்.
இடையில் தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக டெல்லி அருகில் இருக்கும் நொய்டாவுக்கு கிளம்புகிறார் மது. வீட்டில் இப்போது அம்ஜத், லட்சுமி பிரியா, மற்றும் மகள் மூவர் மட்டுமே இருக்க.. முதல் நாளில் இருந்தே அந்த வீட்டில் வேறு யாரோ ஒருவர் இருப்பது போன்ற பீலிங்காகிறது லட்சுமிக்கு.. அது போன்ற பல சந்தர்ப்பங்கள்.. விஷயங்கள் தொடர்ந்து நடக்கிறது. ஏதோ ஒருவித குழப்பத்திற்கு ஆளாகிறார் லட்சுமி.
இந்த நேரத்தில் அந்த வீட்டுக்கு வரும் ஓவியரான பூஜா அந்த வீட்டில் கெட்ட ஆவி ஒன்று சுற்றுவதாகச் சொல்லிவிட்டுப் போகிறார். இந்த நேரத்தில் கனி என்ற பெண் அந்த வீட்டில் வேலை கேட்டு வர அவளையும் சேர்த்துக் கொள்கிறார் லட்சுமி.
நொய்டாவில் இருந்து ஊர் திரும்பும் மதுசூதனன் நடந்ததையெல்லாம் கேட்டுவிட்டு “ஒரு நாள் இரவு நான் இங்கே தங்கி பேயை விரட்டுகிறேன்..” என்கிறார். ஆனால் அந்த இரவில் ஒரு பேயைப் பார்த்து பயந்து போன மதுசூதனன் மாடியில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
அந்தப் பேயை விரட்டுவதற்காக நகுலன் என்னும் மாந்தரீகன் அம்ஜத்தின் துணையோடு வீட்டுக்குள் வருகிறான். அவன் ஒரு கயிற்றால் இவர்களது படுக்கை அறை கதவை மூடிக் கட்டிவிட்டு “நாளை காலைவரையிலும் இதனை அவிழ்க்காதீர்கள். அவிழ்த்தால் இதன் சக்தி போய்விடும்…” என்று சொல்லிவிட்டுப் போகிறான்.
ஆனால் மறுநாள் காலைப் பொழுதில் வேலைக்காரி கனி வந்து கதவைத் திறந்துவிட வாளால் வெட்டுப்பட்டு இவர்கள் கண் முன்னேயே சாகிறாள். இதைப் பார்க்கும் அம்ஜத் இந்த வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார். ஆனால் “இந்தப் பேய் உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் உன்னைவிடாது.. அதற்கான பரிகாரமாக ராஜவம்சத்தை பின்னணியில் கொண்ட இப்போது ஏழையாக இருக்கும் ஒருவனுக்கு இந்த பங்களாவை பரிசாகக் கொடுத்துவிட்டால் பேய் அடங்கிவிடும்…” என்று நகுலன் தீர்மானமாகச் சொல்ல அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை..!
இயக்குநர் நடிகர்களிடத்தில் நடிப்பை மிக எளிதாக வரவழைத்து நடிக்க வைத்திருக்கிறார். உண்மைதான். ஆனால் பேயைக் காட்டுவதிலும், பயமுறுத்துவதிலும்தான் தோல்வியடைந்திருக்கிறார். பேய்ப் படம் என்றால் எப்படி பயமுறுத்துவார்களோ அதே பார்முலாவில் கொஞ்சம்கூட புதிதை காட்டாமலும்.. பயப்படாமலேயே ரசிகனை சீட்டில் அமர வைத்திருப்பதாலும் இயக்குநருக்கு இந்த விஷயத்தில் படு தோல்வி கிடைத்திருக்கிறது.
திரைக்கதை மிக நீட்டாக அடுத்தடுத்த காட்சிகளின் மூலமாக நகர்ந்தாலும் பேயின் நடமாட்டம் உண்டா..? இல்லையா..? என்னதான் உண்மை என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை நமக்குள் தூண்டிவிடாதது இயக்குநரின் தவறுதானே..?!
கடைசியாக அடிக்கும் ஒட்டு மொத்த திரைக்கதையின் டிவிஸ்ட்டும் ஏற்கெனவே பல நாவல்களில் படித்த கதைதான்.. அநேகமான பேய்க் கதைகளில் வந்த சில சில திரைக்கதைகளை, இதில் ஒட்டு மொத்தமாகப் பார்த்துவிட்ட திருப்தி மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது.
நடிப்பில் லட்சுமி பிரியா கவனிக்க வைத்திருக்கிறார். மதுசூதனன் வழக்கமான வில்லனாகவே வந்திருக்கிறார். அம்மா ரேகா சுரேஷ் ஒரு காட்சியில் கோபமாக தனது மகனை கன்னத்தில் அடித்துவிட்டு அப்பாவை சமாதானப்படுத்த இப்படி செய்ததாக சொல்லி 5 நிமிடத்தில் தோசையைத் திருப்பிப் போடுகிறார். சீரியல்தனமான திரைக்கதைதான்..!
இன்னொரு திருப்பமாக சென்னை ஜமீன்தார் ராஜேந்திர பூபதி பற்றி காட்டியிருக்கும் 4 நிமிட  கார்ட்டூன் பிளாஷ்பேக் காட்சி சூப்பர்ப்.. மிக குறைந்த நேரத்தில் படத்தை முடித்திருப்பதாலேயே ரசிகர்கள் படத்தை ரசிப்பார்கள் என்றில்லை. தேவையெனில் படத்தின் நீளத்தை கூட்டிக் கொள்ளலாம்தான். கதையும், திரைக்கதையும் வலுவாக இருந்தால் ரசிகர்களை சீட்டில் அமர வைக்கலாம்.
எல்லாமே செட்டப் என்றாலும் இதையெல்லாம் அந்தக் குடும்பத்தினர் நம்பும் அளவுக்கு இருந்திருக்க வேண்டுமே..? யாரோ ஒரு பெண் வந்து வீட்டில் வேலை கேட்டால் உடனேயே சேர்த்துக் கொள்வார்களா..? அதுவும் அமெரிக்காவில் சில ஆண்டுகள் இருந்துவிட்டு வந்தவர்கள்..!? கனியின் மரணத்திற்குப் பிறகு அவருடைய உடல் என்ன ஆனது..? அவரைப் பற்றி லட்சுமி பிரியா ஏன் எதுவும் பேசவில்லை..? ஒரே வீட்டில் இப்படி 4, 5 பேர் வீட்டாருக்குத் தெரியாமல் இருந்துவிட முடியுமா..?
அப்பா மதுசூதனன் மருத்துவனையில் இருக்கும் நிலையில் இப்படி வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டு போவது எப்படி..? நாளைக்கு அவர் எழுந்து வந்து நாசரை பார்த்துவிட்டால், அடுத்து நடக்கப் போவது என்ன..? ரசிகர்களை ரொம்பவும் முட்டாள்கள் என்று நினைத்துவிடக் கூடாது..!
இந்த வருடம் வெளியான படங்களிலேயே டிரெயிலரில் அசத்திய படம் இதுதான் என்று வாய் பிளந்து சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது படத்தைப் பார்த்த பின்பு டிரெயிலர் மட்டும்தான் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்தப் படத்தின் பிற்பாதி திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விரிவாக்கி காட்சிகளை கொடுத்திருக்கலாம்..! அந்தரத்தில் தொங்கவிட்டுவிட்டுப் போன கதையாக படத்தை இப்படி பாதியிலேயே முடித்திருக்கிறார்கள்.
இந்தக் ‘களம்’ நிச்சயம் களமாடவில்லை..!

0 comments: