01-05-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கேரளாவின் பத்தினாம்பட்டு தொகுதிதான் இப்போதைய கேரள சட்டமன்றத் தேர்தலில் ‘ஸ்டார்ஸ் வார்’ என்றழைக்கப்படும் தொகுதியாகியிருக்கிறது.
ஒன்றல்ல.. இரண்டல்ல.. மூன்று பெரிய நடிகர்கள் இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் பத்தினாம்பட்டு தாலுகாவின் தலைநகரம் பத்தினாம்பட்டு சட்டமன்றத் தொகுதி. இந்தத் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் நடிகருமான கே.பி.கணேஷ் குமார் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இப்போதும் அவர்தான் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
இவர்தான் இப்போது இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கூட்டணியின் சார்பில் 4-வது முறையாக போட்டியிடுகிறார். காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் நகைச்சுவை நடிகர் ஜெகதீஷ் போட்டியிடுகிறார். அதேபோல் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரபல வில்லன் நடிகர் பீமன் ரகுவும் களமிறங்கியிருப்பதால் இத்தொகுதி பரபரப்பாகியிருக்கிறது.
தற்போதைய எம்.எல்.ஏ.வான கே.பி.கணேஷ்குமார் கேரள பி காங்கிரஸ் கட்சியின் தலைவரான பாலகிருஷ்ணபிள்ளையின் மகன். 2001-ம் ஆண்டு முதல் முறையாக இதே பத்தினாம்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏ.கே.அந்தோணியின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை மந்திரியானார்.
2006 தேர்தலில் இதே தொகுதியில் கணேஷ்குமார் வென்றாலும், அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்த்து. 2011-ம் ஆண்டு மூன்றாவது முறையாக இதே தொகுதியில் நின்று ஜெயித்த கணேஷ்குமார், இப்போதைய முதலமைச்சர் உம்மன்சாண்டியின் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
ஆனால் 2013-ம் ஆண்டு தனது மனைவி யாமினியை துன்புறுத்தியதாக எழுந்த புகார் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியதால் அமைச்சரவையில் இருந்து விலகினார் கணேஷ்குமார்.
அதோடு இந்தத் தேர்தலிலும் இவரது கட்சி காங்கிரஸுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது. இப்போது நான்காவது முறையாக இதே தொகுதியில் நிற்கிறார் கே.பி.கணேஷ் குமார்.
கடந்த 15 வருடங்களாக தான் தொகுதிக்கு செய்திருக்கும் சேவைகள் நிச்சயம் தன்னைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்கிறார் கே.பி.கணேஷ்குமார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் நடிகர் ஜெகதீஷ் தன்னுடனான தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இங்கே போட்டியிடுவதாக கணேஷ் குமார் சொல்கிறார்.
ஆனால் நடிகர் ஜெகதீஷோ.. “அது சுத்தப் பொய். எனக்கும் அவருக்கும் எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் இல்லை. அரசியலில் அவர் ஒரு பொய்யர். சோலார் பேனல் வழக்கில் சரிதாவின் பின்னணியில் இருப்பது நிச்சயமாக கணேஷ்குமார்தான். சரிதாவை ஆட்டி வைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பது கணேஷ்குமார்தான். இந்தத் தேர்தலில் இவரைத் தோற்கடித்தே தீருவேன்…” என்கிறார்.
இன்னொரு பக்கம் கையில் தாமரையோடு வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல வில்லன் நடிகரான பீமன் ரகுவோ.. “காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. இப்போது நாடே மோடியின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. அவரது சிறப்பான ஆட்சித் திறமை எனக்குப் பிடித்திருந்ததால் இந்தக் கட்சியில் சேர்ந்திருக்கிறேன். மக்கள் இந்த முறை புதியவனான என்னைத் தேர்ந்தெடுப்பார்கள்..” என்கிறார் உறுதியாக..!
கணேஷ்குமாருக்காக நடிகர் மனோஜ் கே.ஜெயனும் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார். இப்போது மூவருமே வீடு வீடாகச் சென்று தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.
தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் ஜாதிய ரீதியிலான ஓட்டுக்களே இந்தத் தொகுதியில் ஜெயிப்பவரை தேர்வு செய்யும் என்கிறார்கள்.
ஈழவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று பலரும் இருந்தாலும் மெஜாரிட்டியாக இருக்கும் நாயர் இனப் பிரிவிரின் ஓட்டுக்கள்தான் இந்த்த் தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறதாம். அவர்களை யார் கவர்கிறார்களோ அவர்களே இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஒரு குணச்சித்திர நடிகர்.. ஒரு நகைச்சுவை நடிகர்.. ஒரு வில்லன் நடிகர்.. இந்த மூவரில் யார் வெல்லப் போவது என்பது மே 19-ல் தெரிய வரும்..!
|
Tweet |
1 comments:
// பத்தினாம்பட்டு//
இதென்ன பட்டு?
இந்த இடம் பத்தனாம்திட்டா இல்லையோ!!!!!!
Post a Comment