எனக்குள் ஒருவன் - சினிமா விமர்சனம்

07-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தமிழ்ச் சினிமாவுலகம் இதுவரையில் பார்த்திராத ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது இந்தப் படம்.


2013-ம் ஆண்டு பவன்குமார் என்கிற கன்னட இயக்குநர் தன்னிடம் புதுமையான ஒரு கதை இருப்பதாக்க் கூறி தயாரிப்பாளர்களிடத்தில் வாய்ப்பு கேட்டார். கதை புரியவில்லை என்று சொல்லியே தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. பார்த்தார் பவன்குமார். ஏன் நாமளே சொந்தமாக இந்தப் படத்தைத் தயாரித்துவிடக் கூடாது என்று நினைத்து கிரவுட் பண்டிங் என்கிற முறையைப் பற்றி யோசித்தார்.
சினிமாவில் ஆர்வமுள்ள.. பணம் முதலீடு செய்யக் கூடியவர்கள் பலரிடம் தன்னுடைய சொந்தப் படத்திற்கு நிதி திரட்டி இதன் மூலம் கிடைத்த 75 லட்சம் ரூபாயில்தான் ‘லூசியா’ என்ற அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிட்டார்.
இந்தப் படத்தின் அமோக வெற்றி கன்னடத் திரையுலகத்தை மட்டுமல்ல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. காரணம் படத்தின் கதையும், திரைக்கதையும், இயக்கமும் அப்படி..! ஒரு காட்சி பிசகினாலும் மொத்தப் படமும் கவிழ்ந்துவிடும் என்பது போன்ற திருகுவலி கதை. ஆனால் அதைக் காட்சிப்படுத்தியவிதத்தில்தான் அசர வைத்தார் பவன்குமார்.
அதே ‘லூசியா’வை இப்போது தமிழுக்காக ‘எனக்குள் ஒருவன்’ என்று தமிழாக்கம் செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜின் மாணவர் பிரசாத் ராமர். திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் இதனைத் தயாரித்திருக்கிறார்.
பொதுவாக இது போன்ற உள்ளே, வெளியே ஆட்டம் ஆடும் கதையென்றால் முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் செய்வார்கள். ஆனால் இதில் அது மாதிரியில்லாமல் கிளைமாக்ஸில்தான் எது நிஜம்? எது பொய்? என்று தெரிய வருகிறது. இது போன்ற தைரியத்துடன் திரைக்கதை அமைத்திருக்கும் யுக்திக்காக கதாசிரியர் பவன்குமார் பாராட்டுக்குரியவர்.
ஹீரோ சித்தார்த் இரட்டை வேடங்களில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஒன்று தியேட்டரில் வேலை செய்யும் சாதாரணமானவர். இன்னொருவர் விக்கி என்னும் டாப் மோஸ்ட் நடிகர்.

அரதப் பழசான துரை டாக்கீஸில் வேலை செய்யும் விக்னேஷுக்கு தூக்கமே வராத வியாதி. இதைப் போக்குவதற்காக ‘லூசியா’ என்ற மாத்திரை அவருக்குக் கிடைக்கிறது. இந்த லூசியா மாத்திரை தூக்கத்தோடு கனவையும் சேர்த்தே கொடுக்கும். அந்தக் கனவில் அந்த நபர் எதை நினைத்து ஏங்குகிறாரோ, அது நடப்பது போன்ற உணர்வை கொடுக்கும்.
இந்த ‘லூசியா’ மாத்திரையை தினமும் சாப்பிடுவதால் தியேட்டர்கார விக்னேஷ் தூக்கத்தில் தான் காணும் கனவில் வேறொரு விக்கியாக இருக்கிறார். அந்த விக்கி மிகப் பெரிய நடிகராக வலம் வருகிறார். மிகுந்த தன்மானம் மிகுந்தவராக, சுயநலம் சார்ந்தவராக இருக்கிறார்.
தானே வலிய வந்து விழுகும் நடிகையை ஏற்காமல், தானே தேடிப் பிடிக்கும் திவ்யா என்ற மாடலை காதலிக்கிறார். இவர்களின் காதல் ஒரு பக்கம்..
தியேட்டர் விக்னேஷும் பீட்சா கடையில் வேலை செய்யும் திவ்யாவை பார்த்தவுடன் காதல் கொண்டு அப்பாவியாய் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நினைத்து வீடுவரைக்கும் சென்று பெண் கேட்கிறார். முதலில் கிடைக்காத காதல் பின்பு மெல்ல, மெல்ல ஓகேவாகிறது.
இந்த நேரத்தில் துரை டாக்கீஸின் ஓனர் நரேன், விக்னேஷை தனது சொந்தத் தம்பி போல பாவித்து அவரை அன்போடு நடத்தி வருகிறார்.
ஏற்கெனவே சொந்தப் பணத்தில் படமெடுத்து அது நஷ்டமாகி அதற்காக வாங்கிய கடன் இப்போது வட்டி மேல் வட்டி போட்டு தியேட்டரை விழுங்கக் காத்திருக்கிறது. கடன் கொடுத்த மகாதேவன் கடனுக்கு ஈடாக தியேட்டரை கேட்க தர முடியாது என்று நரேனிடம் சண்டையிட்டு வருகிறார்.
ஸ்டார் விக்கிக்கு எங்கிருந்தோ மறைமுகமாக போன் மிரட்டல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. பணம் வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். போலீஸில் புகார் கொடுத்து அது விசாரிப்பிலேயே இருக்கிறது.
தியேட்டர் விக்னேஷின் காதல் கை கூடுவதற்காக திவ்யா தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. ஸ்டார் விக்கி தனது காதல் கை கூடுவதற்காக தன்னாலான முயற்சிகளை கையாண்டு வருகிறார். இதில் யாருடைய வாழ்க்கை உண்மையானது..? எந்தக் கதை சாசுவதம்..? எந்தக் காதல் ஜெயிக்கிறது..? என்பதுதான் இந்த சுவாரஸ்யமான திரைக்கதையுடன் கூடிய படத்தின் கதை..!
அவசியம் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
திரைக்கதையில் இரண்டு கதைகளிலுமே சம்பந்தப்பட்ட அனைவருமே பவனி வருகிறார்கள். நரேன், மகாதேவன், இன்ஸ்பெக்டர், திவ்யா என்று முக்கியப் புள்ளிகள் நால்வருமே இரண்டு கதைகளிலும் வேறு, வேறு கேரக்டர்களில் வந்து வந்து செல்வதால் முடிவு என்னவாகத்தான் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை கடைசிவரையிலும் சுவாரஸ்யத்துடன் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.
நாயகன் சித்தார்த் இரண்டு வேடங்களுக்கும் மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். விக்னேஷ் வேடத்தைவிடவும் விக்கி வேடத்தில் அவருடைய அலட்டல் நிஜமாகவே ரசிக்க வைக்கிறது.. மீடியாக்களுடன் பிரஸ்மீட்டில் அவர் பேசுகின்ற பேச்சு நிஜமான ஒரு உணர்வையே தந்துவிட்டிருக்கிறது.. இந்த ஒரு காட்சியில் தன்னுடைய சொந்த வாழ்க்கையை நினைத்தோ, என்னவோ மிக அதிக உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார் சித்தார்த்.
கருமை நிறத்தில் அப்பாவி கேரக்டரில் திவ்யாவை காதலிக்க நினைப்பது.. பின்பு வரும் ஏமாற்றத்தை பட்டென்று ஏற்றுக் கொள்வது.. வீடு தேடிச் சென்று மன்னிப்பு கேட்பது.. நரேன் மீது அளவு கடந்த பாசத்துடன் இருப்பது.. காதலுக்காக காதலியின் அனைத்துவித சங்கடங்களையும் தாங்குவது என்று அந்தக் கேரக்டருக்கு ஏற்றாற்போன்று நடித்திருக்கிறார். பிரேம் பை பிரேம் இவரே வருகிறார் என்றாலும் ஒரு காட்சியிலும் சோர்வைக் கொடுக்கவில்லை.
நாயகி தீபா சன்னதிக்கு நிஜத்தைவிட கனவுலக வாழ்க்கையில்தான் நடிப்புக்கான ஸ்கோப் அதிகமாக இருக்கிறது.  உணர்ந்து நடித்திருக்கிறார். சிறந்த இயக்கம் என்பதால் அளவான அலட்டலுடன், அகங்காரம் இல்லாத, திமிர்த்தனம் காட்டாத.. தனது திருமண மறுப்பை வெளியிடும் காட்சியில் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
இன்னொரு நாயகி சிருஷ்டி டாங்கே கருப்பு வெள்ளையில் ஜம்மென்று வந்து சென்றிருக்கிறார். நரேன் வழக்கம்போலத்தான். ஆனால் இரட்டை வேடம்.. தனது தந்தையின் பெயரைக் காப்பாற்றும் தியேட்டரை தான் காப்பாற்ற போராடும் அந்த வேடமும், இன்னொரு பக்கம் விக்கியின் பெயரைக் காப்பாற்ற போராடும் இன்னொரு வேடமுமாக இவருக்குப் பொருந்தியிருக்கிறது. சில காட்சிகளே வந்தாலும் ஜான் விஜய் பெரிதும் கவர்ந்திழுக்கிறார்.
சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்கத்தினால் படத்தின் பல காட்சிகள் ரசிக்க வைத்திருக்கின்றன. உண்மையில் எது கனவு, எது நிஜம் என்பதையே நாம் நினைத்தற்கு மாறாக கொண்டு சென்று கடைசியில் உண்மையை உணர்த்தும் காட்சியில் அசர வைத்திருக்கிறார்.
துவக்கக் காட்சியில் மருத்துவமனையில் இருக்கும் சித்தார்த் விக்கியா? விக்னேஷா? என்கிற சஸ்பென்ஸை கடைசிவரையிலும் காப்பாற்றி வைத்திருந்து வெளியிட்டது திரைக்கதையின் வெற்றி.  
பிளாக் அண்ட் வொயிட் காட்சிகளை கனவுலகமாக அனைவருமே பொதுவாக நினைத்துக் கொண்டிருக்க இயக்குநர் பவன்குமாரின் திரைக்கதை அமைப்பு அதைச் சுக்கலாக்கி காட்டியிருப்பதில்தான் இவருடைய திறமையே தெரிகிறது..!
படத்தில் கேரக்டர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமையும் ஒன்றையொன்று கடைசிவரையிலும் நம்ப வைக்கிறது. தியேட்டர் விக்னேஷும் தானே வலியப் போய் காதலைத் தேடுகிறார்.  அதேபோல் நடிகர் விக்கியும் தானே காதலியைக் கண்டெடுத்து காதலைச் சொல்கிறார். தியேட்டர் நடத்தும் நரேன் விக்னேஷ் மீது அன்பைக் கொட்டுகிறார். இங்கே நடிகர் விக்கியின் மேனேஜர் நரேனும் அப்படியே..!
இதுவுமில்லாமல் முதலில் மறுதலித்துவிட்டுப் போகும் விக்னேஷின் காதலியே மீண்டும் விக்னேஷை தேடி வருகிறார். நடிகர் விக்கியின் காதலியும் அது போலவே அவரைத் தேடி வருகிறார்.
உண்மையாகவே தியேட்டர் விக்னேஷை அப்படியே அச்சு அசலான கேரக்டராகவே நம்ப வைத்திருக்கிறார் இயக்குநர். டிவிஸ்ட்டுகளை மிக எளிமையாக வசனத்தின் மூலமாகவே தெளிவுபடுத்துகிறார் இயக்குநர். ஆனால் இதற்காக கிளைமாக்ஸ்வரையிலும் காத்திருக்க வேண்டும்..!
‘லூசியா’ மாத்திரையை மிகப் பெரிய வில்லங்கம் என்பது போல் காட்டியிருப்பதுகூட சஸ்பென்ஸை கூட்டத்தான் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதனால் திரைக்கதைக்குள் எந்த பலனும் கிடைக்கவில்லைதான்.
சந்தோஷ் நாராயணின் அமர்க்களமான இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால் பாடியவர்களின் குரல்தான் கொடூரமாக இருக்கிறது. மேடை நாடகத்தில் பாடும் குரல் வளம் கொண்டவர்களை சினிமாவிலும் பாட வைத்தால் எப்படி..? கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு வழக்கம்போல..! கலரைவிடவும், பிளாக் அண்ட் வொயிட்டில் ரசிக்க வைத்திருக்கிறது. பாடல் காட்சிகளை காட்டியிருக்கும்விதம் ரசிக்கத்தக்கது..!
இது போன்ற உள்ளே வெளியே மங்காத்தா ஆட்டம் போடும் திரைப்படங்களுக்கு எடிட்டிங் மிகப் பெரிய துணையாக இருக்க வேண்டும். இதில் லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு குறிப்பிடத்தக்கது. ஒரு காலம் முடிந்து மறுகாலம் வந்திருப்பதை சில காட்சிகளில் உணர முடியாத அளவுக்கு படத்தொகுப்பாளர் தன் வேலையைக் காட்டியிருக்கிறார்.
கலை இயக்குநரும், சவுண்ட் டிஸைனரும் குறிப்பிடத்தக்க அளவுக்கு சொல்லப்பட வேண்டியவர்கள்.. ஜான் விஜய்யை முதலில் காண்பிக்கும் காட்சி மற்றும் அவரது இரண்டாவது காட்சிகளில் கலை இயக்கம் ஒளிப்பதிவைவிடவும் அதிகமாகவே கவர்ந்திழுத்தது.
கன்னட ‘லூசியா’வை பார்த்த கோடம்பாக்கத்துக்காரர்கள் ஒரு விஷயத்தை மட்டும் இதில் நிச்சயம் உறுதியாகச் சொல்வார்கள். அது கன்னட ‘லூசியா’வைவிடவும் இந்த தமிழ் ‘லூசியா’ மிகச் சிறப்பானதுதான் என்று..!
இதைத்தான் நாமும் சொல்கிறோம்..!
அவசியம் பார்க்க வேண்டிய படம்.. மிஸ் பண்ணிராதீங்க..!

4 comments:

Unknown said...

Annachi,
I am regularly reading your reviews, for the first time you haven't revealed the story. Thanks.

JJ said...

@ Basheer Ahamed - அண்ணன் படத்தோட முக்கியமான சஸ்பென்சையே இங்க சொல்லிட்டாரு. கதையை சொல்லலன்னு சந்தோசப்படறிங்க...!!!!

Muza said...

Avar sonnaranu therila but neenga hint kuduthitinga bro J J....

Unknown said...உத்தம வில்லன் விமர்ச்சனம்

http://vriddhachalamonline.blogspot.in/2015/02/blog-post_26.html