ரொம்ப நல்லவன்டா நீ - சினிமா விமர்சனம்

10-03-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இயக்குநர் ஏ.வெங்கடேஷின் அனைத்து படங்களுமே நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படங்கள்தான். லாஜிக்கையெல்லாம் பார்க்கவே மாட்டார். அதையெல்லம் பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு காட்சியைக்கூட ஷூட் செய்ய முடியாது என்பது அவருக்குத் தெரியும்.
இதனாலேயே அவர் எதைப் பற்றியும் கவலைப்படுவதுமில்லை. தனக்கு எது நன்கு வருகிறதோ அதனை சரியாகச் செய்வோம் என்கிற கொள்கையுடையவர். இந்தப் படமும் அந்த வரிசைதான். படமாக்கலைவிடவும் கதையில் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

வித்தியாசமான கதைதான்.. மின்சார வாரியத்தில் கிளார்க் வேலை பார்த்து வருகிறார் நாயகன் செந்தில். கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர். அப்பா, அம்மா இல்லை. தனது மாமா சுவாமிநாதனின் பெண்ணான ஹீரோயின் சுருதிபாலாவை காதலித்து வருகிறார். ஹீரோயினும்தான்..!
அலுவலகத்தில் ஹெட்கிளார்க்கின் தொல்லை ஜாஸ்தியாக இருக்கிறது. அவமானப்படுத்தும்விதத்தில் பேசுகிறார். பொறுத்துக் கொள்கிறார் செந்தில். கொடுமைக்கார கந்துவட்டி பிஸினஸ் செய்யும் ஜான் விஜய்யிடம் எதற்கோ கடனை வாங்கிவிட்டு திருப்பிக் கட்ட முடியாமல் தவிக்கிறார் செந்தில். ஜான் விஜய் இவரது அலுவலகத்திற்கே தேடி வந்து சட்டையைப் பிடித்திழுத்து அவமானப்படுத்திவிட்டுப் போகிறார்.
அதே தினம் தனது தந்தையின் எதிர்ப்பு காரணமாய் மறுநாள் நமக்கு திருத்தணியில் திருமணம் என்று ஹீரோயின் செந்திலிடம் சொல்கிறார். செந்திலும் தலையாட்டுகிறார். இரவில் இருவரும் வீடு திரும்பும்போது கனல் கண்ணன் தலைமையிலான ஒரு ரவுடிக் கும்பல் இருவரையும் துரத்துகிறது.
அவர்களிடத்தில் சண்டையிட்டுத் தப்பித்த செந்தில் ஹீரோயினை தனது நண்பர் ரோபா சங்கருடன் அனுப்பி வைத்துவிட்டு தான் மட்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். அங்கேயும் அதே ரவுடி கும்பல் வருகிறது. போலீஸ் அந்தக் கும்பலுக்கு துணை போக.. ஏமாற்றமாகிறார் செந்தில்.
ஒரு பூனையை புயலாக்கிய கதையாக.. அன்றைய நாளில் அடுத்தடுத்து ஏற்படும் சோதனைகள் அவருக்குள் வெறியேற்ற.. போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இமான் அண்ணாச்சியுடன் சட்டம் பேசுகிறார். ரவுடி கும்பலை காப்பாற்ற லோக்கல் கவுன்சிலர் சோனா தனது படை, பரிவாரங்களுடன் ஸ்டேஷனுக்கு வருகிறார். அவரையும் தன் செல்போனில் பதிவு செய்துவிட்டு, புகார் மனுவில் சோனாவின் பெயரையும் சேர்க்கிறார் செந்தில்.
சோனா போன் அடிக்க லோக்கல் அரசியல் புள்ளி ஏ.வெங்கடேஷ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அவரும் செந்திலின் கண்டனத்திற்குள்ளாகி புகார் மனுவில் இடம் பெறுகிறார்.
இது வேலைக்கு ஆகாது என்று நினைத்த ஏ.வெங்கடேஷ் இன்ஸ்பெக்டர் அண்ணாச்சிக்கு கண் ஜாடை காட்ட.. புகார் மனு கிழிக்கப்பட்டு.. செல்போன் உடைக்கப்பட்டு.. லாக்கப்பில் அடைக்கப்படுகிறார் செந்தில்..
காலையில் மிரட்டலுடன் வீட்டுக்கு அனுப்பப்படும் செந்திலுக்கு அன்று காலையில் தன்னுடைய கல்யாணம் திருத்தணியில் நடக்கவிருக்கிறது என்பதும், தனக்காக காதலி அங்கே காத்திருக்கிறாள் என்பதும் மறந்து போகிறது. செல்போன் உடைக்கப்பட்டதால் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் காதலியும், அவள் அம்மாவும் தவியாய் தவித்து திரும்பவும் தங்களது வீட்டுக்கு போக விருப்பமில்லாமல் லேடீஸ் ஹாஸ்டலுக்கு செல்கிறார்கள்.
தற்கொலை செய்ய நினைத்து அதற்கான பல வழிகளில் முயல்கிறார் செந்தில். முடியவில்லை. கடைசியாக கடலில் குதித்து சாக நினைத்து பீச்சுக்கு செல்லும்போது ஒருவனை சந்திக்கிறார் செந்தில். அவனுடன் மதுவருந்துகிறார். அதுவரையில் தன்னுடைய உள்ளத்தில் இருந்ததையெல்லாம் அவனுடன் கொட்டுகிறார் செந்தில். “அவங்களை கொல்லணும்.. கொன்னாத்தான் என் மனசு சாந்தியாகும்..” என்கிறார் செந்தில். எதிரில் இருப்பவன் புரொபஷனல் கில்லர்.. வாடகை கொலையாளி..
“பணம் கொடுத்தால் நான் அதைச் செய்கிறேன்..” என்கிறான். ஆறு பேருக்கும் 60000 ரூபாய் என்று பேசி அப்போதைக்கு கையில் இருந்த 12 ரூபாய் சில்லரை காசுகளை கொடுக்கிறார் செந்தில். பெற்றுக் கொள்கிறான் கொலையாளி.
இந்த ஆறு பேரில் வரிசைப்படி யாரை முதலில் கொல்ல வேண்டும் என்று செந்திலிடம் கேட்டு குறித்துக் கொள்கிறான் கொலையாளி. அதன்படி முதலில் அலுவலக உயரதிகாரி, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, கனல் கண்ணன், சோனா, கடைசியாக ஏ.வெங்கடேஷ் என்று பட்டியலிடுகின்றனர். “இவர்களை நாளை திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை இரவு 12 மணிக்குள் கொலை செய்கிறேன்..” என்று கொலையாளியான சர்வஜித் சாதாரணமாக சொல்லிவிட்டுப் போகிறார்.
மறுநாள் காலையில் செந்திலின் உயரதிகாரியை யாரோ கொலை செய்துவிட்டதாகத் தகவல் வருகிறது. ஓடி வந்து பார்த்தால் அங்கே அந்த கொலையாளியும் தென்படுகிறான். செந்தில் பயந்துபோய் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிப் போய் இமான் அண்ணாச்சியை சுதாரிப்பாக இருக்கச் சொல்கிறான். ஆனால் அது பலனில்லாமல் இமான் அண்ணாச்சியும் கொல்லப்பட.. திடுக்கென்று செல்கிறது திரைக்கதை..
மிச்சம் இருப்பவர்களைக் காப்பாற்ற நினைக்கிறார் செந்தில். அது முடிந்ததா? இல்லையா..? என்பதுதான் மிச்சம் மீதிக் கதை.
சைக்காலஜிக்கல் கதை.. ஆனால் விறுவிறுப்பான திரைக்கதை. முடிவு யாருமே எதிர்பார்க்காதது.. சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கே உரித்தான வேகமும், இயக்கமும் இருந்தும் பின்னணி இசை அதற்கு ஒத்துழைக்காததால் பல இடங்களில் திரில்லிங் அனுபவம் நமக்குக் கிடைக்கவில்லை..
படத்தில் நாயகனான செந்தில், முந்தைய படங்களைவிடவும் இதில் நன்றாகவே நடித்திருக்கிறார். அப்பாவியாய்.. தனது ஒவ்வொரு நேர்மையான செயலும் முறியடிக்கப்படுவதை பார்த்து பொறுமுவதும்.. எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் அந்தத் தவிப்பும்.. கொலையாளியைப் பிடிக்க வேண்டும்.. கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று அலை பாய்வதுமாக படம் முழுக்க தவிப்போடு திரிந்து கொண்டேயிருக்கிறார்.
ஹீரோயின் ஸ்ருதி பாலா.. புதுமுக வரவு. நல்வரவு.. அழகாக இருக்கிறார். சிறப்பாகவே நடித்திருக்கிறார். திருவல்லா என்ற நயன்தாரா உதித்த ஊரில் இருந்து கிளம்பி வந்திருக்கும் இந்தத் தாரகையும் இன்னும் 4, 5 படங்களில் நடித்த பின்பு இவரது ஸ்கோர் பற்றி பேசுவோம்.
ரோபோ சங்கரின் சிறப்பான நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் பேசப்படும். நகைச்சுவையில் அதிகமாகவே கலக்கியிருக்கிறார். இமான் அண்ணாச்சி வழக்கம்போல.. வசன உச்சரிப்பில் புதிய புதிய ஸ்டைலை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார். சோனா.. கவர்ச்சியில்லை என்றாலும் வசனத்தில் படு கவர்ச்சி.. இவரை வைத்து வெண்ணிற ஆடை மூர்த்தி பேசும் வசனங்கள் பகீர் ரகம்..
ரேகா போலீஸ் உயரதிகாரியாக நடித்திருக்கிறார். கண்ணில் அணிந்திருந்த கான்டாக்ட் லென்ஸ்தான் பொருத்தமில்லாமல் இருந்தது. “உண்மையைச் சொல்லலைன்னா சினிமால காட்டுறதைவிட அதிக டெர்ரரை காட்டிருவோம்..” என்ற போலீஸ் திமிர் பேச்சுக்கு ஒரு ஷொட்டு..!
ராம் சுரேந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. ‘ரஜினி எனக்கு பிடிக்கும்’ பாடலும், பாடல் காட்சியும், நடனமும் சூப்பர்ப்.. பின்னணி இசைதான் சப்பென்று இருந்தது.  இப்போதைய தமிழ்ச் சினிமாவுலகில் சின்ன பட்ஜெட் படங்களிலெல்லாம் ஒளிப்பதிவு சிறப்பாகவே இருக்கிறது. இதிலும் அப்படியே..!
விறுவிறுப்பான திரைக்கதையில் ஒரு படுவேகமான கதையை நகர்த்திச் செல்லும் விதமாக தன்னால் முடிந்த அளவுக்கான இயக்கத்தில் படத்தை நல்லவிதமாகவே கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ். அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட் யாரும் எதிர்பார்க்காதது. நிச்சயம் இதற்காக இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும்..!
100 சதவிகிதம் கமர்ஷியல் எண்ட்டெர்டெயின்மெண்ட்டுக்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்..!

1 comments:

Unknown said...

http://www.imdb.com/title/tt1575694/

இதை பாருங்க சார்!