கள்ளப்படம் - சினிமா விமர்சனம்

21-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இயக்குநர் மிஷ்கினின் பிரதம சீடரான வடிவேல் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம் இது. இதில் இயக்குநர் வடிவேல், லட்சுமி பிரியா, ஸ்ரீராம் சந்தோஷ், காகின், சிங்கம்புலி, கவிதாபாரதி, ஆடுகளம் நரேன், ஜிஷ்னு, ‘வின்னர்’ ராமச்சந்திரன், செஃப் தாமு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.  ஸ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். காஜின் படத் தொகுப்பு செய்திருக்கிறார். கே இசையமைத்திருக்கிறார். இறைவன் பிலிம்ஸ் சார்பாக ஆனந்த் பொன்னிறைவன் தயாரித்திருக்கிறார்.
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்கிற கனவோடு இன்றைக்கும் வடபழனி, சாலிகிராம பகுதி டீக்கடைகளில் நான்கைந்து பேராக நின்றபடியே, ‘இன்றைக்கு எந்தத் தயாரிப்பாளரை பார்க்க போக வேண்டும்..?’, ‘நேற்று பார்த்தவர் என்ன சொன்னார்..?’ ‘லேட்டஸ்ட்டாக ஜெயித்திருக்கும் தயாரிப்பாளரை சுலபமாக சந்திக்கும் வழிமுறைகள் என்ன..?’ என்றெல்லாம் சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்தும் உதவி இயக்குநர்களைப் பார்க்கலாம்..!
அவர்களைப் போன்ற எண்ணற்ற சினிமா கனவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு இளைஞர்கள், எப்படி சினிமாவில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்தக் ‘கள்ளப்பட’த்தின் கதை.

துணை இயக்குநர் வடிவேல், இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம சந்தோஷ், எடிட்டர் காகின் நால்வரும் உற்ற நண்பர்கள். அறை தோழர்கள். சினிமாவில் தலையெடுக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள். யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அனைவரும் அதில் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள். இதனை செயல்படுத்த இயக்குநர் கனவில் இருக்கும் வடிவேலுவால் மட்டுமே முடியும் என்பதால் அவரை நம்பியும் இருக்கிறார்கள்.
பாரதிராஜா, பாக்யராஜ், பாலா… இவர்களிடத்தில் சென்று வாய்ப்பு கேட்டு கிடைக்காமல்.. தனது பல வருட அனுபவத்தை முதலீடாகக் கொண்டு, ‘இவ்விடம் திரைக்கதைகளுக்கு பழுது பார்க்கப்படும்’ என்கிற போர்டுடன் ஒரு டீக்கடையை நடத்தி வருகிறார் சிங்கம்புலி. இவரது டீக்கடைதான் இவர்களது அன்னதானக் கோயில். இவர்களை அடிக்கடி சந்தித்து ஆறுதல் சொல்லி தானும் ஆறுதல்பட்டுக் கொள்கிறார் இன்னமும் படம் இயக்க வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடும் மூத்த துணை இயக்குநரான நடிகர் செந்தில்.
வடிவேலு கூத்துப் பரம்பரையில் இருந்து வந்தவர். அவரது தந்தை தன் கண் முன்னேயே தனது குடும்ப்ப் பாரம்பரியத் தொழிலான கூத்துக் கட்டும் தொழில் அழிந்து போகிறதே என்கிற விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறார். கூத்துக் கலைஞனாக பிரமிப்பு காட்டிய தனது தந்தை, உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த சிறுவன் வடிவேலுவால் அந்த நிகழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
தானும் சினிமாவில் ஒரு நல்ல படைப்பாளியாக வேண்டும் என்கிற ஆக்ரோஷத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர்களைச் சந்திக்கிறார். கதை சொல்கிறார். அவரிடமிருப்பது ஒரேயொரு கதைதான். அது கூத்து சம்பந்தப்பட்ட அவரது சொந்த வாழ்க்கைக் கதைதான்.
தயாரிப்பாளர்கள் குத்துப் பாடல், டாஸ்மாக் சரக்கு, சின்னப் பையன்களின் காதல், அடிதடி, கரம் மசாலா இவற்றோடு கமர்ஷியல் கம்மர்கட் திரைக்கதையில் உருவான கதைகளை எதிர்பார்க்க.. நம்பிக்கை மனம் தளராமல் அடுத்தடுத்து தயாரிப்பாளர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் வடிவேல்.
அப்படித்தான் ஒரு நாளில் ‘ஆடுகளம்’ நரேனுக்கு கதை சொல்லப் போகிறார் வடிவேலு. அதே கூத்துக் கதையைச் சொல்கிறார். வேறு, வேறு வேலைகளைச் செய்து கொண்டே கிடைத்த ‘கேப்’பில் கதையைக் கேட்கும் நரேன், வேறு கதை சொல்லும்படி கேட்கிறார். வடிவேலு ‘இல்லை’ என்று சொல்ல, கோபப்படும் நரேன் ‘இந்நேரம் 4 கதைகளை தயாரா வைச்சிருக்க வேண்டாமா..?’ என்கிறார். ‘இந்தக் கதைக்கு என்ன குறைச்சல்?’ என்கிறார் வடிவேலு. ‘படத்தை எடுத்து நீ மட்டும் பார்க்குறதுக்கு நானா கிடைச்சேன்..? ஒரு படத்தை எடுத்து ஹிட் பண்ணிட்டு வா. அப்போ நீ சொல்ற எந்தக் கதையை வைச்சும் நான் படமெடுக்கிறேன்..’ என்று சொல்லி வடிவேலுவை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார் நரேன்.
இதே நரேனிடம் இப்போது வைப்பாட்டியாக இருந்து வருகிறார்  முன்னாள் ஹீரோயினான லட்சுமி பிரியா. இருவருக்கும் வாழ்க்கை கசந்து போயிருக்க.. அவரவர் வழியில் பிரிந்து போய்விட தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.
முதல்நாள் இரவில் வடிவேலு அண்ட்கோ-வை சந்தித்து தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டிய செந்தில், மறுநாள் காலையில் இறந்து கிடக்கிறார். அவருடைய கனவு கலைந்தும், இப்படியொருவர் சினிமாவுக்குள் வந்ததே தெரியாமல் அவரது வாழ்க்கைக் கதை கோடம்பாக்கத்தில் பதிவானதை காணும் வடிவேலுவுக்கு, தங்களைப் பற்றிய பயவுணர்வு எழுகிறது. இந்த நேரத்தில் அவரது வைராக்கியம் வேறு மாதிரி திசை திரும்புகிறது.
“இந்த சினிமால ஒருத்தன் ஜெயிச்சான்னா, அவன் எப்படி ஜெயிச்சான்னு யாரும் பார்க்குறதில்ல. ஜெயிச்சிட்டானான்னுதான் பார்க்குறாங்க. அதுனால நாமளும் ஜெயிப்போம். எப்படியாவது ஜெயிப்போம்..” என்கிறார் வடிவேலு. “எப்படி.. கொள்ளையடிச்சா..?” என்று நண்பன் காகின் கேட்க.. அதை நூலாகப் பிடித்துக் கொள்ளும் வடிவேலு “ஆமாம்.. கொள்ளையடிப்போம்..” என்கிறார் தீர்மானமாக..
குடியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் நரேனிடமிருந்து விலகிப் போக நினைக்கும் லட்சுமி பிரியா தனக்காக புதிய காதலனைப் பிடித்துவிட்டார். அவனுடன் போக நினைக்கும் தருணத்திலும், நரேனிடம் இருக்கும் கோடிக்கணக்கான கருப்புப் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு போக திட்டமிடுகிறார்.
இங்கே அதே நேரம் வடிவேலுவும் நரேனின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்..! அதுவும் அதே நாளில்.. அதே நேரத்தில்..  இருவரும் கொள்ளைத் திட்டத்தை செய்து முடித்தார்களா..? இல்லையா..? யார் வெற்றி கண்டது..? என்பதுதான் இந்தக் ‘கள்ளப்படம்’.
தனது முதல் படத்திலேயே சந்தேகமேயில்லாமல் சிக்ஸர் அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெ.வடிவேல். படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் செல்போனை மேயவிடவேயில்லை அவரது இனிமையான இயக்கம். மெல்லிய நகைச்சுவைகள்.. இயல்பான சோகங்கள்.. பட்டென்று சோகத்தைக் கடந்து செல்லும் காட்சிகள்.. யார் இவர் என்று ஒருவரை யோசிக்க வைக்கும் தருணங்கள்.. தனது குரு மிஷ்கினுக்கே உரித்தான வைட் ஆங்கிள் ஷாட்டுகள்.. ஒரு முறை வந்த காட்சியின் கோணங்கள் மறுமுறை வராதது. குத்தீட்டியாக இல்லையென்றாலும், குறிப்பாக மனதை திசை திருப்பிய வசனங்கள்.. ஈர்ப்பான இயக்கம்.. இப்படி பலவற்றையும் சொல்லிக் கொண்டே போகலாம்..!
அவரே நடித்திருக்கிறார் துணை இயக்குநராக.. பார்க்க பரதேசிபோலவும், பட்டென்று வசீகரம் செய்ய முடியாதவராகவும் இருப்பதுதான் துணை இயக்குநர்களின் முகவெட்டு. அதற்கு வடிவேலே பொருத்தமாகத்தான் இருக்கிறார்.
நரேனிடம் பேசும்போது கோபத்தை அடக்கிக் கொண்டு.. நரேன் செய்யும் கோமாளித்தனங்களை சகித்துக் கொண்டு மனப்பாடமாக கதையை சொல்லிக் கொண்டே போய் கடைசியில் வாக்குவாதத்தில் கெஞ்சவும் செய்யாமல், மிஞ்சவும் செய்யாமல் அடக்கத்துடன் பேசிவிட்டு திரும்புவதெல்லாம் நிஜ வாழ்க்கையில் அனைத்து உதவி இயக்குநர்களும் சந்திக்கும் ஒரு நிகழ்வுதான்..!
படத்தில் வடிவேலுவின் கேரக்டர் மிகக் கவனமாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பாடல் காட்சியில் மற்ற மூவரும் ஆடிப் பாட.. கையில் நோட் பேடை வைத்துக் கொண்டு இங்கிட்டும், அங்கிட்டுமாக நடந்தே செல்கிறார் வடிவேலு. அவர் ஆட முடியாததுதான். அதற்கான காரணம் அவரது சொந்த வாழ்க்கைக் கதையாக பிளாஷ்பேக்கில் விரிகிறது.
அந்த பிளாஷ்பேக் கதை சில நிமிடங்களே வந்தாலும் மனதில் பாரத்தைக் கொடுக்கிறது. எத்தனை, எத்தனை கலைகளை இழந்து, எத்தனை எத்தனை அல்லவைகளை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை அந்த சில நிமிடங்களிலேயே நமக்கு உணர்த்துகிறார் இயக்குநர்.
நண்பர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் ரொம்ப நல்லவன் டைப்பில் இல்லாமல்.. இவர்களிலும் இப்படி ஆட்கள் உண்டு என்பதாகவே வைத்திருப்பது பாராட்டுக்குரியது. இசையமைப்பாளர் கே, எங்காவது தனக்கு வேண்டியதை பார்த்தால் ஆட்டய போட்டுவிடுவார்.  அப்படி இவர் ‘சுடும்’ ஒரு பென் டிரைவை வைத்துதான் படத்தின் பிற்பாதியில் டெம்போவை ஏற்றியிருக்கிறார்கள்.
ஸ்ரீராம சந்தோஷின் நடிப்பைவிடவும் ஒளிப்பதிவுதான் கண்ணைக் கட்டுகிறது. பாடல் காட்சிகளில் குறிப்பாக ‘வெள்ளைக்கார ராணி’ பாடலில் அதகளம் செய்திருப்பது ஒளிப்பதிவாளரும், நடன இயக்குநரும்தான். இந்தாண்டு படங்களில் மிகச் சிறந்த நடனம் என்று இந்தப் பாடலின் நடனமே இப்போதுவரையிலும் பேசப்படும். ஒரு காட்சியில் லட்சுமி பிரியா திட்டம் தீட்டும்போது திடீரென்று லைட்டிங்ஸ் மாறி கருப்பு வெள்ளையாகவும், கலராகவும் மாறி, மாறி வருவது ஒளிப்பதிவில் ரசிக்க வைத்த காட்சி.
அறிமுகக் காட்சியிலேயே அசத்தலாக தோன்றுகிறார் லட்சுமி பிரியா. இதுவரையிலும் எந்தப் படத்திலும் கேட்காத ஒரு வசனம்.. ‘பணம் எடுத்துட்டு எவ்ளோ எடுத்தேன்னு குறிச்சு கையெழுத்து போட்டுட்டு போ’ என்று குளித்தபடியே நரேன் சொல்வதை பார்க்கும்போதே படத்தின் வித்தியாசம் உணரத் தொடங்கிவிட்டது.
தனது வாழ்க்கைக் கதையை நொந்தபடியே தனது புதிய காதலனிடம் சொல்லி ‘எனக்கு பணம்தான் முக்கியம்’ என்று சொல்லும் அந்தத் தருணத்தில்  அவரது கொள்ளைத் திட்டம்கூட சரியென்றே மனதுக்கு உணர்த்துகிறார். மாட்டிக் கொண்ட தனது ஆட்களை நினைத்து வருந்துவதைத் தவிர அந்த நேரத்தில் எதையும் சொல்ல முடியாமல் தவித்துவிட்டு.. பின்பு இன்ஸ்பெக்டர் கவிதாபாரதியிடம் பேரம் பேச வந்து ‘டீலிங்’கை முடிப்பதெல்லாம் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு இடையூறு இல்லாத விஷயம்..!
எடிட்டர் காகின், இசையமைப்பாளர் ‘கே’ இருவரும் இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால் குற்றம் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
‘ஆடுகளம்’ நரேன் படத்திற்குப் படம் தனது நடிப்பினால் கேரக்டராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அலட்சியமாக காது குடைந்து கொண்டே கதை கேட்பது.. பணம் பறிபோன பின்பு பணத்துக்காக அவர் படுகின்ற பதட்டம்.. லட்சுமி பிரியாவை தொலைத்துவிட தான் நினைத்திருப்பதை பட்டென்று சொல்லி தனக்குப் பணம்தான் முக்கியம்.. என்று சொல்லி கவிதாபாரதியை விரட்டுவதும், கடைசியாக பணத்தை பார்த்ததும் வாழ்க்கைக் கிடைத்ததுபோல குற்றவாளி யாரென்று தெரிவது தனக்கு முக்கியமில்லை என்று நினைத்து ஆபரேஷனை ஹால்ட் செய்யச் சொல்வதும்.. நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்.
இவருடைய அல்லக்கைகள் நால்வரும் ஆளுக்கொரு மொக்கை யோசனையைச் சொல்லும்போதெல்லாம் அதற்கொரு ரியாக்ஷன்களை வரிசையாகக் காட்டுகிறார் பாருங்கள்..  சிம்ப்ளி சூப்பர்ப்..!
இன்னொரு புதிய வரவான கவிதா பாரதியை இரு கரம் கூப்பி வரவேற்கலாம். இவரது அறிமுகப் படலம் இரண்டு காட்சிகளில் மெளனமாகவே நடக்கிறது. எதற்காக இதைக் காட்டுகிறார்கள் என்கிற மெல்லிய சந்தேகத்தை அடுத்த நொடியில் போட்டுடைத்தாலும் கவிதா பாரதியின் லின்க்கை அப்படியே விட்டுவைத்துவிட்டு பின்னால் உடைப்பது நல்லதொரு சஸ்பென்ஸ்தான்.
லட்சுமி பிரியாவிடம் இன்ஸ்பெக்டர் கெத்து குறையாமல் பேசியபடியே வந்து டீலிங்கில் வந்து நின்று அதையும் தனது கண் பார்வையிலேயே குறிப்பால் உணர்த்துவதெல்லாம் படு ஜோர்.. ‘எல்லாம் முடிந்த’ பிறகான ஓய்வில் கேமிராவின் கண் பார்வையில் கவிதாபாரதி கீழே அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் பலகையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி அவரை நோக்கி காலாட்டியபடியே லட்சுமி பிரியா பேசுவதை படம் பிடித்திருக்கும் கேமிராவின் கோணம் காட்டுவது என்ன என்பதெல்லாம் பெண்ணியவாதிகளும், ஆணியவாதிகளும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்..!
சிங்கம்புலி. சிங்கம்புலியாகவே வருகிறார். சின்னச் சின்ன ஷாட்டுகள் என்றாலும் பாரதிராஜா, பாக்யராஜ், பாலாவிடம் இவர் வாய்ப்பு கேட்கும் காட்சிகள் ரசனையானது. மேலும் இவருக்கும், நண்பர்களுக்கும் இடையில் நடக்கும் வாதப் போர்களும், கொள்ளைத் திட்டத்தில் இவருக்கே தெரியாமல், இவரையும் இணைத்து வைத்து நடத்தியிருக்கும் திரில்லிங்கான திரைக்கதையும் சூப்பர்தான்.
கஷ்டப்பட்டு வாய்ப்பு கிடைத்த பின்பு இணை, துணை இயக்குநர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டும் கெத்தையும், திமிரையும் சிங்கம்புலியை வைத்தே காட்டியிருக்கிறார் இயக்குநர்.
பரபரப்புடன் துவங்கும் அந்தக் கொள்ளையடிக்கும் எபிஸோடும் முடிவுற்ற பின்பு தொடர்ந்து நடக்கும் சேஸிங்கும் மிஷ்கின் படங்களுக்கே உரித்தான திரைக்கதை. ‘ஆகஸ்ட்-15’ என்கிற சின்னக் குறிப்பை வைத்துக் கொண்டு கடைசியில் கண்டுபிடிப்பதுவரையிலும் போன பின்பு கிளைமாக்ஸில் நரேன் செய்யும் டிவிஸ்ட் செமத்தியான திரைக்கதை.
கூத்துக் கலை பற்றிய அந்தப் பாடல் காட்சியை படமாக்கியிருக்கும்விதமே வித்தியாசம்தான்.. இடையிடையே நடப்பு காட்சிகளையும் காட்டவிட்டு படப்பிடிப்பு விட்டுவிட்டு எடுப்பது போலவும் திரைக்கதையே வேகப்படுத்தியிருப்பதில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார். மிக யதார்த்தமான நம் மண் சார்ந்த அந்தக் கூத்துக் கலை இப்போது மருகிப் போய் அருகிவிட்டது என்பது நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்.
வசனங்களினாலும் வடிவேல் நிச்சயம் கவரப்படுகிறார். கமல், ரஜினி, நமீதா வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்று இவர்கள் போடும் திட்டமும், பாலுமகேந்திரா பற்றிய வசனமும் குறிப்பிடத்தக்கவை.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்லி பாராட்ட வேண்டிய இன்னொரு விஷயம். கலை இயக்கம். இவர்கள் நால்வர் வசிக்கும் மொட்டை மாடி வீட்டை அப்படியொரு டிஸைனாக அமைத்துக் கொடுத்த கலை இயக்குநர் பாலாவுக்கு நமது பாராட்டுக்கள். அதேபோல் கூத்துக் கலையின் மேக்கப்பும், அது தொடர்பான கலை இயக்கப் பொருட்களும் தேடி கண்டெடுக்கப்பட்டவையாகவே இருக்கின்றன.
‘வின்னர்’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராமச்சந்திரன் ஹோட்டலில் சர்வர் வேலை பார்ப்பதாக வந்த செய்தியைக் கண்டு தமிழகமே திகைத்தது. அதே தயாரிப்பாளரை இந்தப் படத்தில் அவ்வப்போது வந்து செல்லும் ஒரு கேரக்டராகக் காட்டி தங்களுடைய படத்தினால் கிடைக்கும் பலனில் கொஞ்சத்தை அவருக்கு கொடுப்பதும் டச்சிங்கான விஷயம். இந்த கேரக்டரில் நடிக்க முன் வந்த அந்த்த் தயாரிப்பாளருக்கு நமது நன்றிகள்..!
என்ன இருந்தாலும் கொள்ளையடித்த பணத்தில் படத்தை தயாரிப்பதும், பின்பு படம் வெளியாகி வெற்றி பெற்றவுடன் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க எண்ணுவதும் சினிமாத்தனம்தான் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். தவறுதான் என்றாலும் இதற்காக இயக்குநர் வடிவேலு திரையில் சொல்லும் சில நியாயங்கள் சட்டத்தின் முன்பும், சமூகத்தின் முன்பும் நியாயமில்லை என்றாலும், இதனை நியாயப்படுத்தும்வகையில் ஜெயித்த பின்பு நடந்து கொள்வதுதான் வடிவேலுவின் வெற்றியாக தெரிகிறது..!
படத்தின் கதைப்படி இது ‘கள்ளப்படம்’தான் என்பதால் தலைப்பையும் பொருத்தமாக வைத்தமைக்கு இயக்குநர் வடிவேலுவுக்கு இன்னுமொரு ஷொட்டு..! 2 மணி 13 நிமிடங்களே என்றாலும் ஒரு சுவையான, திரில்லிங்கான படத்தை பார்த்த அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது இந்தக் ‘கள்ளப்படம்’.
‘கள்ளப்படம்’ என்றாலும் இதுவொரு நல்ல படமே..! அவசியம் பாருங்கள்..!

0 comments: