காக்கிசட்டை - சினிமா விமர்சனம்

28-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தொடர்ச்சியாக 6 படங்களை அடுத்தடுத்து கொடுத்து, அதில் 5 படங்களை சூப்பர் ஹிட்டாக்கி தமிழ்ச் சினிமாவுலகில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது தனித்தன்மையால் முன்னுக்கு வந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் 7-வது படம் இது.
‘என்னை அறிந்தால்’ படத்தின் அதே கதைதான் இங்கேயும். மனிதர்களின் மாற்று உறுப்புகளை திருடும் சர்வதேசக் கும்பலை தேடிப் பிடிப்பதுதான் திரைக்கதை. ஆனால் இதை சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு பிடித்தாற்போல் சிவாவை முன்னிறுத்தியே படத்தை கொண்டு சென்றிருப்பதால், தலைவலியே வராத போலீஸ் படமாகவும் இதனைச் சொல்லலாம்.

விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனின் குற்றப் பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் சிவாவுக்கு போலீஸ் டிரெஸ்ஸோடு அலைய வேண்டும் என்றொரு ஆசை. ஆனால் குற்றப் பிரிவில் இருப்பதால் அது முடியாமல் போகிறது. கூடவே காவல்துறையின் உள்ளேயே நடக்கும் அட்டூழியங்களையும், அநியாயங்களையும் பார்த்து கொதித்துப் போகிறார்.
திருடு போன நகைகளை பறிமுதல் செய்து அவற்றில் சிலவற்றை மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துவிட்டு மீதத்தை போலீஸ் உயரதிகாரிகளின் உத்தரவிற்கிணங்க அவர் கொடுக்கச் சொன்னவரிடம் கொடுத்துவிட்டு சல்யூட் செய்வது.. அடாவடி அரசியல்வாதிகளுக்கு ஸ்டேஷனே வளைந்து கொடுப்பது என்று பலவற்றையும் பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் பொங்கித் தீர்க்கிறார் சிவா.
யதார்த்தமாக, இப்போதைய நடைமுறைச் சிக்கல்களையெல்லாம் எடுத்துச் சொல்லியும் தனது வயதின் காரணமாக சிவா அதனை ஏற்க மறுக்க.. “நீ ஒரு பெரிய கேஸை பிடிச்சிட்டு வா.. அப்புறமா அதுல நேர்மையா நாம விசாரணை செய்யலாம்..” என்று பிரபு வாக்குறுதியளிக்க.. பெரிய கேஸ் சிக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
ஆனால் நர்ஸான ஹீரோயின் வித்யா சிக்குகிறார். அவரை விரட்டிப் பிடித்து காதலுக்கு ஓகே வாங்குவதற்குள் முதல் முக்கால்மணி நேரம் ஓடிவிடுகிறது. இதற்குள்ளாக 3 பாடல்கள்..
வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைத்து வரும் கும்பல் ஒன்று முகவரியற்ற.. அனாதை இளைஞர்களை திட்டமிட்டு கொலை செய்து அவர்களது உடல் உறுப்புக்களை மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றின் மூலம் திருடுகிறது.
இதனை தற்செயலாக தெரிந்து கொள்ளும் சிவா, அந்தக் கும்பலைப் பிடிக்க பிரபுவிடம் சொல்கிறார். பிரபுவும் ஆக்சன் எடுத்து முக்கியப் புள்ளியைக் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைக்க போகும் முன்பே கொல்லப்படுகிறார். இதன் பின்னணியில் பல பெரிய தலைகள் இருக்கின்றன என்பதை அறிந்த சிவா அவர்களை எப்படி தன்னுடைய கான்ஸ்டபிள் பதவியை வைத்துக் கொண்டே பிடிக்கிறார் என்பதுதான் படமே..!
படத்தின் திரைக்கதைக்காக 8 பேர் கொண்ட டீம் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தலைமையில் அமர்ந்து யோசித்து எழுதியிருக்கிறார்கள். ஹீரோ அறிமுகப் பாடல்.. இப்போதைய சிச்சுவேஷன்.. ஹீரோயின் அறிமுகம்.. ஹீரோ துரத்தல்.. மீண்டும் வேலை.. மீண்டும் காதல் வேலை.. டூயட்.. என்று கச்சிதமாக போரடிக்காமல் ஒரு படத்தின் திரைக்கதையை எப்படி கொண்டு போவது என்பதற்கு இந்தப் படத்தை உதாரணமாக்கியிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்புக்காக மெனக்கெடவில்லை. அவரிடம் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ..? எந்த ஸ்டைல் பிடிக்கிறதோ..? என்ன மாதிரியான டயலாக் டெலிவரி பிடிக்கிறதோ அதையே இதிலும் பாலோ செய்திருக்கிறார். ஸோ.. இவர் பேசும் பன்ச் வரிகளுக்கு தியேட்டரில் கைதட்டல் அள்ளுகிறது. “பசங்க காதலிச்சா கல்யாணம் பண்ணுங்க. ஆனா ஆளையே மாத்தணும்னு நினைக்காதீங்க..” என்ற டயலாக்குதான் கைதட்டலின் உச்சத்தைப் பெற்றது.
ஹீரோயினிடம் போலீஸ் வேலையை மறைத்துவிட்டு உதார்விட்டு நடுரோட்டில் மாட்டிக் கொள்வது.. அக்யூஸ்ட்டை பிடிக்க பிச்சைக்காரர்களுடன் அமர்ந்து பிச்சையெடுப்பது. ஹீரோயினின் வீட்டிற்கே சென்று ஜொள்ளு விடுவது.. தன் அம்மா, தங்கையிடமே மாட்டிக் கொண்டு முழிப்பது என்று பல காட்சிகளில் சிவாவின் நடிப்பு நிச்சயம் குடும்பத்தினருக்கே பிடித்தமானது. இதனால்தான் சிவாவின் படங்களுக்கு தொடர்ச்சியாக குடும்பம், குடும்பமாக வருகிறார்கள்.
இதில் கூடுதலாக சண்டை காட்சிகளிலும் ஆக்சன் காட்டியிருக்கிறார். தொழில் நுட்பம் கை கொடுக்க இதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார் சிவா. பல ஆண்டு டிவி அனுபவம் இவருக்கு சிறப்பாகவே கை கொடுக்கிறது. எந்தெந்த காட்சியில் எப்படியெல்லாம் ஆக்சனை காட்டவேண்டும். குறைக்க வேண்டும் என்பதையெல்லாம் காட்டித்தான் சிவா வெற்றி பெறுகிறார். இதிலும் அப்படியே..! வாழ்த்துகள்.. படத்துக்குப் படம் இவரது ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது..! இதிலும் கூடும்..!
ஹீரோயின் ஸ்ரீதிவ்யா.. முன்னாள் ஹீரோயின் கெளசல்யாவின் முகத்தை ஞாபகப்படுத்துகிறார். குளோஸப்பில் பார்க்க முடியலை.. இப்படியே இழுத்துப் போர்த்திக் கொண்டு இன்னும் எத்தனை படங்களில் நடிக்க முடியுமென்று தெரியவில்லை. நடிப்பில் தனித்துவம் இல்லாததால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால் நடனத்தில் கொஞ்சம் தேறியிருக்கிறார். இந்த ஜோடி நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தைவிடவும் இந்தப் படத்தில் இருவருக்குள்ளும் கொஞ்சம் நெருக்கம் கூடியிருக்கிறது போல தெரிகிறது..!
பிரபுவின் அந்த கம்பீர உச்சரிப்பு இதிலும் தனித்துவத்துடன் ஒலிக்கிறது.. ‘இதுதாண்டா கேஸுன்ற மாதிரி ஒரு கேஸை பிடிச்சிட்டு வா.. அப்புறம் பார்ப்போம்.. எவன் வந்தாலும் எதிர்த்து நின்னு கேஸை நடத்திக் காட்டுவோம்’ என்று ஆக்ரோஷப்படும் பிரபுவும், ஒவ்வொரு வசன டெலிவரிக்கும் ஒவ்வொருவிதமான ஆக்சனை காட்டி ஆச்சரியப்படுத்தும் இமான் அண்ணாச்சியும் சிவாவுக்கு கச்சிதமாகக் கை கொடுத்திருக்கிறார்கள்.
மாமா வேலை பார்க்கும் மனோபாலாவின் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.  ஆனாலும் வழக்கம்போல இவர் வரும் சீன்களிலெல்லாம் கலகலதான். வில்லன் துரையரசனாக நடித்திருப்பவரின் உடல் மொழியும், குரலும், நடிப்பும் வில்லன் கேரக்டருக்கே ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.
பட்டுக்கோட்டை பிரபாகரனின் வசனங்களும் படத்திற்கு மிகப் பெரிய பலம். ரசிக்க வைத்திருக்கின்றன. கமிஷனரிடம் ஒரு சாதா கான்ஸ்டபிள் இப்படியெல்லாம் பேசலாமா என்றெல்லாம் லாஜிக் பார்க்கவில்லையென்றால், அந்த வசனம் இந்தியா முழுவதிலும் இருக்கும் சாதாரண கான்ஸ்டபிள்களின் எண்ணம்தான்..
இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல.. படத்தின் பிற்பாதியில் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள்தான்.. இதையெல்லாம் பார்த்தால் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு போக முடியாது என்பதால் அத்தனையையும் அனுமதித்திருக்கிறார் இயக்குநர்.
மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் வரும் வெளிநாட்டு லொகேஷன்களை அழகாக படம் பிடித்திருக்கிறது. ஹீரோயினைவிடவும் ஹீரோவே அழகாகவே காட்டியிருக்கிறார். அனிருத்தின் இசை இந்தப் படத்தில் தேவையே படாத ஒன்று.. பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை.. கடைசியான அதிரடி பாடலின் நடன அசைவுகள் சூப்பர்ப்.. அதிலும் ஹீரோயினின் ஸ்டெப்ஸ்களினால் இந்தப் பாடல் காட்சி தொடர்ச்சியாக இனிமேல் தொலைக்காட்சிகளில் வலம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
‘காக்கிசட்டை’ என்று பெயர் வைத்திருப்பதினால் ஒரிஜினல் ‘காக்கிசட்டை’யின் பெயர் டேமேஜ் ஆகிவிடுமோ என்று பயந்தவர்களெல்லாம் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள். நல்லவேளை காப்பாற்றப்பட்டுவிட்டது.
அந்த ‘காக்கிசட்டை’யில் கமலின் அப்பாவும் போலீஸ்காரர்தான். இதில் சிவாவின் அப்பாவும் போலீஸ்காரர்தான். அதில் கமல் போலீஸாக செலக்சன் ஆக முடியாமல் போய், கடைசியில் தனிப்பட்ட முறையில் வில்லன் கூடாரத்தில் ஊடுறுவி வெற்றிக் கொடி கட்டுவார். இதில் சிவா போலீஸாகவே இருந்து வில்லன்களை துரத்துகிறார்.  அவ்வளவுதான்..!
‘எதிர்நீச்சலில்’ சிவாவை கரை சேர்த்த இயக்குநர் துரை செந்தில்குமார்.. இதிலும் சிவாவை கரை சேர்த்திருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ஸலாம்..!
100 சதவிகித பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் இந்தப் படம்..!

0 comments: