பட்ற - சினிமா விமர்சனம்

29-03-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அரசியல் களம் சார்ந்த கதை. அப்பாவி இளைஞர்களின் படிப்பறிவற்ற தன்மையையும், ஏழ்மையையும் பயன்படுத்திக் கொண்டு அவர்களது வாழ்க்கையையும், உயிரையும் பலிகடாவாக்கும் அரசியல்வியாதிகள் சம்பந்தமான படங்கள் பல வந்திருக்கின்றன. அவற்றில் இருந்து மேக்கிங் என்னும் உருவாக்கத்தில் மிக வித்தியாசப்படுத்தி யதார்த்தத்தின் மிக அருகில் வரும்படியான சிறப்பான இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது  இந்த ‘பட்ற’ திரைப்படம்.

படத்தின் கதை நடக்குமிடம் பாண்டிச்சேரி. ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரேணுகுண்டா கணேஷின் நட்புக்குப் பாத்திரப்பட்டவர்கள் புலிப்பாண்டியும், தனாவும். ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் கடும் பகை. ஒருவரையொருவர் போட்டுத் தள்ள நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
புலிப்பாண்டியின் மகன் கல்லூரி மாணவன். அவனைக் கொல்ல தனா ஆட்களை அனுப்புகிறான். அந்த முயற்சி தோல்வியடைய.. கோபமடையும் புலிப்பாண்டி கல்லூரிக்கு வந்து மாணவர்களையும், பிரின்ஸிபாலையும் மிரட்டிவிட்டுச் செல்கிறான்.
இதே கல்லூரியில் படித்து வருகிறார் ஹீரோ மிதுன்தேவ். கல்லூரி பிரச்சினையொன்றில் புலிப்பாண்டியின் மகனை கண்டிக்கிறார் ஹீரோ. சில நாட்கள் கழித்து புலிப்பாண்டியின் மகனை ஒரு குரூப் தாக்கிவிட்டுப் போக பழி ஹீரோ மீது விழுகிறது.
ஹீரோவை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்து அடித்து, உதைக்கிறார் புலிப்பாண்டியின் உறவினரான இன்ஸ்பெக்டர். மிதுனின் அப்பாவும், மாமாவும் வந்து கேட்டும் ஹீரோவை விட மறுக்கிறார் இன்ஸ்பெக்டர். இந்த நேரத்தில் இவர்களது வீட்டிற்கு அருகிலேயே குடியிருந்து வரும் விலைமாதுவான உமா, தனாவுடன் தனக்கிருக்கும் நெருக்கம் காரணமாய் பத்தாயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு தனா மூலமாக ஹீரோவை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
தனா-புலிப்பாண்டியின் மோதல் மாவட்டச் செயலாளர் கணேஷுக்கு தெரிய வர அவர் அவர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். அப்போதும் அவர்களுக்குள் மோதல் நின்றபாடில்லை. புலிப்பாண்டி சுதாரிப்பதற்குள்ளாக அவரை போட்டுத் தள்ள விரும்பும் தனா, தனது அடியாட்களை ஏவிவிட.. இத்தாக்குதலில் புலிப்பாண்டியின் தம்பி மரணமடைகிறார்.
இப்போது தடாலடியாக களத்தில் இறங்கும் மாவட்டச் செயலாளர் கணேஷ், இருவரையும் மீண்டும் சமாதானப்படுத்தி வைக்கிறார். இதற்கிடையில் சட்டமன்ற தேர்தலில் நிற்க புலிப்பாண்டி சீட் வாங்கிக் கொடுக்கிறார் கணேஷ். இதனால் புலிப்பாண்டியை அட்ஜஸ்ட் செய்து போக வேண்டிய நிலைமை தனாவுக்கு. தனாவும் இறங்கி வந்து நட்பு பாராட்டுகிறார்.
இந்த நேரத்தில் இந்தக் கொலை விஷயத்தில் சம்பந்தமே இல்லாமல் ஹீரோவை அரெஸ்ட் செய்து சிறையில் அடைக்கிறார் இன்ஸ்பெக்டர். இந்த நேரத்தில் ஹீரோவின் தங்கையை தனாவிடம் அனுப்பி வைத்து தான் காரியம் சாதிக்க நினைக்கும் உமா அவளை அங்கே அழைத்துச் செல்கிறாள். தனாவின் இந்த கில்மா வேலைகளை அறிந்து கொண்ட புலிப்பாண்டு தனக்கும் இதில் பங்கு வேண்டும் என்று கேட்க.. அவரையும் வரச் சொல்கிறான் தனா.
இவர்களின் வேட்டையில் ஹீரோவின் தங்கை பலிகடா ஆக்கப்பட.. இதே நேரம் கோர்ட்டில் உண்மையைக் கூறி ஹீரோ கேஸில் இருந்தே விடுதலையாகி வெளியில் வருகிறார். ஆனால் வீட்டில் தங்கை மனவாட்டத்தில் இருப்பது அறிந்து உண்மையை அறிந்து கொள்கிறார்.
அரசியலும், பண பலமும், அதிகார பலமும் ஒன்று சேர்ந்து தனது அப்பாவிக் குடும்பத்தை இப்படி பலிகடா ஆக்கிவிட்டதை அறிந்து ஹீரோ மனம் கொதிக்கிறார். அவர்களை பழி வாங்கத் துடிக்கிறார். எப்படி செய்கிறார் என்பதுதான் மீதமான திரைப்படம்.
துவக்க்க் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் மிகச் சிறப்பான இயக்கம். துவக்கத்தில் வரும் கிரிக்கெட் ஷாட்டுகள் பிரமிப்பூட்டுகின்றன. ஹீரோவும், ஹீரோயினும் சந்திக்கின்ற முதல் காட்சியும் சுவையானது. இதுவரையில் எந்தவொரு இயக்குநரும் சிந்தித்திராத வினோதமான ஒரு திரைக்கதை. சிந்தித்த திறனுக்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
படத்தில் அனைத்து நடிகர்களுக்குமான கேரக்டர் ஸ்கெட்ச்சிலேயே வித்தியாசப்படுத்தியிருக்கிறார். அனைவரையும் ஓரடி முந்திச் சென்று சபாஷ் வாங்குகிறார் புதுமுக வில்லன் நடிகரான சாம்பால்.
தன்னிடம் இருக்கும் சின்னப் பையன்களை வைத்துக் கொண்டு சோப்பு போடுவதை போல வார்த்தைகளால் குளிப்பாட்டி. அவர்கள் மேல் அக்கறை உள்ளவர்போல நடித்து தன்னுடைய காரியத்தைச் சாதிக்க நினைக்கும் சகுனியாட்டத்திற்கு மிக பொருத்தமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் இவர்.
கோபத்தை மறைத்துக் கொண்டும், விரோத்த்தை வெளியில் காட்டிக் கொள்ளாமலும், மாவட்டச் செயலாளர் கணேஷிற்கு அடக்கமாக இருப்பது போல நடித்தும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சாம்பால்.  ஹீரோவை அடையாளம் காண முடியாமல் கார் ஓட்டிக் கொண்டே தவியாய் தவித்து தலையில் விதவிதமான முறையில் தட்டி, தட்டி உசுப்பேற்றிக் கொண்டு கடைசியில் கண்டறியும் காட்சியெல்லாம் பின்னணி இசையுடன் ஒரு திரில்லிங் அனுபவத்தையே கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டையில் சாம்பால் மற்றும் ஹீரோவின் உழைப்பு பாராட்டத்தக்கது.
ஹீரோ மிதுன்தேவ்.. ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இதில் கொஞ்சம் அழுத்தமான வேடம். சிறப்பான இயக்கம் தெரிந்த இயக்குநரிடத்தில் சிக்கியிருப்பதால் மிக அழகாக நடித்திருக்கிறார். ஹீரோயின் வைதேகிக்கு அதிகம் நடிப்பதற்கு ஸ்கோப் இல்லையென்றாலும், முதல் அறிமுகக் காட்சியை நினைத்துப் பார்த்து  சங்கடப்படுவதும்.. ஹீரோவுடனான காதல் தனக்குள் பளிச்சிடும் காட்சியிலும் முதல்முறையாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்..
ஹீரோவின் அப்பா, அம்மாவும் நடித்திருக்கிறார்கள். இரண்டாவது முறையாக ஹீரோவை கைது செய்ய வீட்டிற்கு வரும் இன்ஸ்பெக்டரிடம் எதுவுமே பேசாமல் அமைதியாக நின்று அவமானப்படும் அப்பாவின் நடிப்பும், நடிக்க வைத்த இயக்குநரும் பலே.. பலே..
புலிப்பாண்டியாக நடித்தவரின் கோபமும், வெறியும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதும்.. தலைவர் கணேஷிடம் வார்த்தைகளை மாற்றி மாற்றிப் பேசி தனது நிலையை விளக்கும் காட்சியிலும், தம்பி செத்துப் போன நிலையிலும் கட்சிக்காக.. பதவிக்காக.. தனாவிடம் போனில் பேசி கூலாவதெல்லாம் இந்த அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
சிறையில் இருந்து தப்பிக்க வைத்துவிட்டு தந்திரமாக அவர்களைச் சுட்டுக் கொல்லும் போலீஸின் திட்டம் எதிர்பாராத ஒரு டிவிஸ்ட்டுதான்.. அதேபோல கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு அடிபட்டு பிடிபடும் கூலிப்படை ஆள் ஒருவனின் தாயார் பிச்சையெடுத்து தனது மகனைக் காப்பாற்ற நினைப்பதும்.. மகன் இறந்துவிட்ட செய்தியை பணியாளர் சாதாரணமாகச் சொன்னவுடன் எழும் அத்தாயின் கதறலும் படத்தின் இறுக்கமான காட்சிகள்.
சுனோஜ் வேலாயுதனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலம். முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் படத்தை பிரமிக்க வைத்திருப்பவர் அவர்தான். கேமிரா கோணங்களுக்கு இயக்குநரே பொறுப்பு என்றாலும், இதில் பல ஷாட்டுகள் சினிமா விரும்பிகளை நிச்சயமாக கவரும். ஒளிப்பதிவில் இவர் ஒரு தந்திரக்காரராக இருப்பார் போலிருக்கிறது. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
கிருஷ்ணாவின் இசையமைப்பில் பின்னணி இசையை உறுத்தாத வண்ணம் கொண்டு சென்று பாடல் காட்சிகளில் அடக்கி வாசித்து படத்தின் தன்மையை எந்தவிதத்திலும் குறைத்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். புலிப்பாண்டியின் தம்பியை கொலை செய்யும் அந்த டிரிக் ஷாட்டில் பின்னணி இசையும் சேர்ந்தே பயமுறுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இதெல்லாம் நடக்காத கதைகளல்ல.. தமிழகத்தில் தினம்தோறும் பல ஊர்களில் நடக்கின்ற கதைகள்தான். படிக்க வாய்ப்பில்லாத இளைஞர்கள்.. மிக்க் குறுகிய காலத்தில் பணம், காசு பார்க்க நினைக்கும் அப்பாவி இளைஞர்களையெல்லாம் அரசியல்வாதிகளும், பண பலம் படைத்தவர்களும் இப்படித்தான் மூளைச் சலவை செய்து அவர்களது வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது கண்கூடாக நாம் பார்க்கின்ற விஷயம்தான்.
இவர்களை போன்ற அயோக்கியர்களை  இப்படி பழி வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்கிற யதார்த்தமான உண்மையை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மனித நாகரிகத்தின்படி இது தவறென்றாலும், தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையின்படி இது தவறில்லை என்பது இயக்குநரின் கருத்து..!
எந்தவொரு விளைவுக்கும் எதிர் விளைவு உண்டு. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எந்தவொரு மனிதனுக்கும் முழு உரிமையுண்டு என்பதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி. இதில் தவறில்லையே..?
பட்ற – மிகச் சிறப்பான படம். அவசியம் பாருங்கள்.

0 comments: