15-03-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வி.வி.ஆர். சினி மாஸ்க் நிறுவனம் என்ற புதிய நிறுவனத்தின் மூலம் வி.வெங்கட் ராஜ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் பல டிவி சேனல்களில் காம்பியராகவும், பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றிய தீபக் ஹீரோவாக நடித்திருக்கிறார். நேகா ரத்னாகர் என்னும் மலையாளப் பொண்ணு ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.
இவர்களோடு ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், குமாரவேல் , சென்ட்ராயன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், லொள்ளு சபா சுவாமிநாதன், பாண்டியராஜன் ஆகியோரும் இதில் நடித்திருக்கிறார்கள். ஏ-7 band என்ற பெயரில் மூன்று இளொஞர்கள் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். கானா பாலா, யுகபாரதி மற்றும் கண்ணன் பாடல்களை எழுதியுள்ளனர். ஆர்.வெங்கடேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சின்னத்திரையில் பல நகைச்சுவைத் தொடர்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த எஸ்.என்.சக்திவேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
நகைச்சுவை படங்களின் வெற்றிக்கு முதல் காரணம் இயக்குநர்தான் என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்..! மதுவின் தீமையை உணர்த்த மதுவை வைத்துத்தான் திரைக்கதை அமைக்க வேண்டியிருக்கிறது. ஒரு நாள் இரவில் மதுவை நாடியதன் விளைவாக ஹீரோவும், அவனது கூட்டாளிகளும் படும்பாட்டை மிக இயல்பாக, யதார்த்தமாக, நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பதால் சந்தேகமே இல்லாமல் இந்த வாரத்திய ஹிட் படங்களில் இதுவும் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம்.
ஹீரோ தீபக் தூத்துக்குடியில் உள்ளூர் லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். “உள்ளூரிலேயே குப்பை கொட்டினால் எப்படி..? சென்னைக்கு சென்று பெரிய சேனல்களில் பணியாற்றினால் தமிழகம் முழுக்க தெரியலாமே..?” என்று ஊர் பெரிசு ஒன்று தூபம் போட.. சென்னைக்கு படையெடுக்கிறார் தீபக்.
சென்னையில் ‘பிங்க்’ என்ற சேனலில் வேலை கிடைக்கிறது. ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வேலை செய்யும் ஆர்வத்துடன் இருக்கும் தீபக்கிற்கு சேனலின் எம்.டி.க்கு சொந்தக்காரன் என்ற பெயரில் வரும் ஒருவனால் ஆப்பு கிடைக்கிறது. அவன் அந்த நிகழ்ச்சிக்கான தொகுப்பாளர் வேலையைக் கைப்பற்றிக் கொள்ள தீபக்கிற்கு வேறு ஒரு நிகழ்ச்சி கிடைக்கிறது.
வேறு வழியில்லாமல் நள்ளிரவில் பலான கேள்விகளுக்கு பதிலளிக்கும் ‘வெட்கப்படாமல் கேளுங்கள்’ என்ற நிகழ்ச்சியில் கேள்விகளைத் தொகுத்து வழங்குகிறார் தீபக். இதனால் பல இடங்களில் அவமானத்தைச் சந்திக்க நேரிடுகிறது..
இந்த நேரத்தில் அவரது அம்மா 100 கோடி ரூபாய் சொத்துக்களோடு ஒரு பெண்ணை திருமணத்திற்காக தீபக்கிற்கு பார்த்திருப்பதாகவும் கல்யாணத்தை உடனேயே வைத்துக் கொள்ளலாம் என்கிறார். நண்பர்களின் ஆலோசனைப்படி கல்யாணத்தை முடித்துவிட்டு பெண் வீட்டாரின் காசில் புதிய டிவி சேனலை துவக்கலாம் என்கிற திட்டத்துக்கு வருகிறார் தீபக். கல்யாணச் செலவுக்காக அநியாய வட்டி வசூலிக்கும் சூடு பாஸ்கரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு கல்யாணத்திற்காக ஊருக்குச் செல்கிறார்.
ஆனால், கல்யாணத்திற்கு முதல் நாள் மணப்பெண் தன் வீட்டு கார் டிரைவரோடு ஓடிப் போய்விட கல்யாணம் நின்று போய் மேலும் அவமானமாகிறது தீபக்கிற்கு. கெட்ட விஷயத்திலும் ஒரு நல்ல விஷயம் நடக்குமென்பார்களே.. அது போல ஊரில் இருந்து சென்னை திரும்பும் தீபக்கின் பயணத்தில் அவனைச் சந்திக்கிறாள் நாயகி நேஹா. அவளுடன் நட்பை வளர்த்துக் கொண்டே வந்ததில் அது ஒரு கட்டத்தில் காதலாகிறது.
அவளுடைய சிபாரிசில் வேறொரு சேனலின் எம்டியை சந்திக்க ஆயத்தமாகிறான் தீபக். இந்த நேரத்தில் நாயகியையும், எம்.டி.யையும் ஒரு ஹோட்டல் வாசலில் யதார்த்தமாக பார்த்து அவளைப் பற்றி தவறாக நினைத்துக் கொள்கிறான் தீபக்.
இப்போது சூடு பாஸ்கர் வீடு தேடி வந்து வட்டி கேட்டு அசிங்கப்படுத்திவிட்டுப் போகிறான். காதலியும் தன்னிடம் பொய் சொல்கிறாள்.. தன்னுடைய நிகழ்ச்சியினாலும் மானம், மரியாதை போகிறதே என்றெண்ணி எல்லாத்தையும் மறக்க டாஸ்மாக்கிற்குள் செல்கிறார்கள் ஹீரோவும், அவனது நண்பர்களும்.
அங்கே நடக்கும் சில கசமுசாக்களுக்கு பின்பு காலையில் போலீஸ் ஸ்டேஷனில் கண் விழிக்கும் தீபக்கிற்கு அவனது நிகழ்ச்சிக்கு இருக்கும் பெயரினால் விடுதலை கிடைக்கிறது. ஆனால் அடுத்தடுத்து சூடு பாஸ்கரும், அலுவலகத்தில் டார்ச்சர் செய்த சக தொகுப்பாளரும் இறந்து போக ஆச்சரியமாகிறது. அதே சமயம் தீபக்கை போனில் அழைக்கும் ஒரு குரல்.. “என்னப்பா.. இப்போ சந்தோஷமா.. நீ சொன்ன மாதிரியே ஒவ்வொருத்தரையா போட்டுட்டேன்ல்ல..” என்று சொல்ல தீபக்கிற்குக் குழப்பம் கூடுகிறது..
அந்தக் கொலைகளுக்கும் தனக்கும் என்ன தொடர்பு என்று ஹீரோவுக்குத் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள தேடுகிறார்.. கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை.
டாஸ்மாக்கில் படம் துவங்குவதால் படமே அப்படித்தானோ என்று திக்கென்றானது மனது. ஆனால் பின்பு இதனால்தான் பிரச்சினையே என்று சொல்லி மதுவுக்கு எதிர்ப்பு சொன்னதற்காக இயக்குநருக்கு ஒரு சபாஷ்..!
தீபக் நன்றாகவே நடித்திருக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவுக்கான தோற்றமும், பொலிவும் இல்லையென்றாலும் இந்தக் கேரக்டருக்கு பொருத்தமான ஹீரோவாக இருக்கிறார். ஹீரோயினிடம் அவ்வப்போது வாங்கிக் கட்டிக் கொண்டு சொன்ன நேரத்திற்குப் போக முடியாமல் தவிக்கும் இவர் படும்பாடு சிரிப்போடு கொஞ்சம் அனுதாபத்தையும் சேர்த்தே தருகிறது. சிவகார்த்திகேயன் போல இவரும் காமெடியை பிரதானமாக வைத்து முன்னேறினால் நிச்சயம் இடம் கிடைக்க வாய்ப்புண்டு..!
ஹீரோயின் நேகா ரத்னாகர். புது வரவு. இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால் இவரது நடிப்பும் பார்க்கும்படியுள்ளது. ஹீரோயினின் அண்ணனாக வரும் சுவாமிநாதன் குடும்பத்தினரின் கேரக்டர் ஸ்கெட்ச் படு சுவாரஸ்யம். இவர்களை வைத்துத்தான் கிளைமாக்ஸே நடக்கிறது. சுவாமிநாதன் தீபக்கிடம், ‘மலடியாக இருந்த என் மனைவியை குழந்தையுடன் மெலடி பாட்டு கேட்க வைத்தது நீங்கதான் பாஸ்’ என்று சொல்லும்போது தியேட்டரே அதிர்கிறது. சிறிது நேரமே வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கரும் காமெடிக்கு கை கொடுத்திருக்கிறார்.
சந்தேகமே இல்லாமல் படத்தில் ஹீரோ லெவலுக்கு ஸ்கோர் செய்திருப்பது ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்தான். படத்தின் இடைவேளைக்கு பின்பு அவரது ராஜ்ஜியம்தான். தியேட்டரில் தனக்காக மட்டும் ‘பாட்ஷா’ படத்தை சவுண்டு இல்லாமல் ஓடவிட்டு.. வசனத்தை தான் சொல்லிப் பார்த்து தனது இமேஜை தனக்குத்தானே கூட்டிக் கொள்வதில் துவங்குகிறது இவரது நடிப்பு. “டேய் நான் எண்ட்ரீயானதே டெர்ரராதாண்ட.. இடையிலதான் காமெடியனா ஆயிட்டேன்.. இப்போ மறுபடியும் களத்தில இறங்குறேன்”னு மிரட்டியே சிரிக்க வைத்திருக்கிறார்.
இதன் பின்பு வேட்டைக்கு கிளம்பும் இவரது காஸ்ட்யூம்ஸ்.. போகின்ற இடங்களிலெல்லாம் இவருக்கு எதிர்பாராமல் கிடைக்கின்ற வசதி, வாய்ப்புகள்.. துப்பாக்கியால் குறி வைக்கும்போது ஒரு பெண் குளிப்பதை பார்த்து ‘அடச்சே’ என்று வருத்தப்பட்டு ‘அந்தப் பக்கம்’.. ‘இந்தப் பக்கம்’ என்று அட்வைஸ் செய்து சோப்பை எடுக்க உதவுவது.. ஹீரோயினின் குடும்பச் சண்டை தெரியாமல் தனது கடமையில் கண்ணாக இருப்பது.. ஹீரோ கேட்டும் தனது கொலை முயற்சியை கைவிட முடியாது என்று பேசுவதாக மனிதர் பல இடங்களில் பொளந்து கட்டியிருக்கிறார். கடைசி அரைமணி நேரம் சிரித்து, சிரித்து புண்ணாகிவிட்டது வயிறு. வெல்டன் ராஜேந்திரன் ஸார்..!
ஏ-7 என்று 3 இளைஞர்கள் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். ‘லவ் வந்தா’ பாடல் இந்தாண்டு அனைத்து சேனல்களிலும் சூப்பர்ஹிட்டாக திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் ‘யாருடா’ பாடலும் காதல் மெலடி லிஸ்ட்டில் இடம் பெறுகிறது.. வாழ்த்துகளும், பாராட்டுக்களும் இசையமைப்பாளர்களுக்கு..!
சென்ற வாரம் வெளிவந்த ‘ரொம்ப நல்லவன்டா நீ’ திரைப்படத்தின் கதையின் பேஸ்மெண்ட்டும் இந்தப் படத்தின் பேஸ்மெண்ட்டும் ஒன்றுபோலவேதான் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இந்த இரண்டு படங்களுமே நல்ல மேக்கிங்தான். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நகைச்சுவையை எப்படி கலந்து கட்டி கொடுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பதுதான்..!
முதல் பாதியில் விறுவிறுப்புடன் அவ்வப்போது சிரிக்க வைத்தாலும், இரண்டாம் பாதி செம ஓட்டத்தில் முழுக்க முழுக்க சிரிப்பலைதான்..!
சிறந்த பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருகிறது இந்தப் படம்..! மிஸ் பண்ணிராதீங்க..!
|
Tweet |
1 comments:
That two films are copied by THE HIT LIST 2005 hollywood film
Post a Comment