09-03-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'மதுரை சம்பவம்’, ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் யுரேகாவின் மூன்றாவது படம் இது. நிச்சயம் அவர் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய படம்தான்.
தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் ‘குரங்கணி’ என்ற மலைவாழ் கிராமம்தான் படத்தின் கதைக்களம்.
வாளும், கையுமாக ஓங்கி நிற்கும் முனியாண்டியை வணங்கிவிட்டு மலையில் இருந்து கூட்டமாக இறங்கி ஏதாவது ஒரு ஊரில் கொள்ளையடித்து கொண்டு வரும் பணத்தை ஊரே பங்கிட்டுக் கொள்ளும். அப்படியொரு கொள்ளைக்கார கூட்டத்தினர் வாழும் ஊர் அது.
அந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவர் ஜி.எம்.குமார். இவரது ஒரே மகள்தான் ஹீரோயின் ரக்சா ராஜ். இவரது தங்கை மகன்தான் ஹீரோ முரளி ராம். இவருடைய ஒரே லட்சியம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராவது. இதற்காக தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறார்.
அந்த ஊரின் போலீஸ் ஸ்டேஷனில் தொடர்ச்சியாக இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார்கள். அந்தக் கொலைகளை விசாரிப்பதற்காக இன்னொரு இன்ஸ்பெக்டர் அந்த ஸ்டேஷனுக்கு நியமிக்கப்படுகிறார்.
புதிய இன்ஸ்பெக்டரை வரவேற்கும் பச்சையப்பன் என்கிற கான்ஸ்டபிள் இதுவரையில் நடந்த கதைகளை அவரிடம் விவரிக்கிறார். அப்போது நமக்கும் காட்சிகள் விரிகின்றன. ஆங்காங்கே கதையை நிறுத்தி, நிறுத்தி தற்போதைய காலத்துக்கு அழைத்து வந்து படம் மீண்டும் கடந்த காலத்தை நோக்கிச் செல்கிறது.
புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் அந்த மர்மக் கொலைகளைச் செய்தவர்களைக் கண்டறிந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மெயினான கதை.
மலைவாழ் பழங்குடியின மக்களில் ஒரு சாரார் இன்றைக்கும் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருட்டு என்பது தவறான தொழிலாகப்படவில்லை. தங்களுடைய மூதாதையர் செய்து வந்த அதுதான் தங்களது சாசுவதம்.. நிரந்தரம்.. அதனைத் தொடர்வதுதான் தங்களது முன்னோர்களுக்கு செய்கின்ற மரியாதை என்று இன்றைக்கும் நினைக்கிறார்கள்.
திருட்டுத் தொழிலுக்கு கிளம்பும் முன்பு ஊர் கூடி கோவிலுக்கு கிடா வைத்து கொண்டாடிவிட்டு.. சாமியாடியிடம் குறி கேட்டுவிட்டு.. திருநீறை வாங்கிவிட்டு.. ‘வெற்றி நிச்சயம்’ என்கிற பூசாரியின் வார்த்தையைக் கேட்ட பின்பே போர்க்களத்திற்குக் கிளம்புகிறார்கள்.
இன்றைக்கும் திருச்சி ராம்ஜி நகர் அருகே வசிக்கும் ஒரு குறிப்பிட்ட இன மக்களும், சிவகங்கை, மானாமதுரை ஆகிய இடங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட இனத்தவரும் இதையே குலத் தொழிலாக செய்து வருவதாக தமிழகக் காவல்துறையினர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள்.
இவர்களைத் திருத்துவதற்கு அரசு செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து இப்போது இந்தக் கொள்ளையர்களின் கைவரிசை இந்தியத் தலைநகரையும் தாண்டி சென்றுவிட்டது என்பதுதான் இதில் லேட்டஸ்ட்டான தகவல்.
இவர்களின் திருட்டுத்தனம்.. போலீஸ் மீதான பயமே இல்லாத குணம்.. எதுக்கெடுத்தாலும் துடுக்காக பேசுவது.. பயமறியாதது.. குடும்ப வாழ்க்கை.. எல்லாவற்றையும் தாண்டி அவர்களது கடவுள் பக்தி.. இது எல்லாவற்றையும் படத்தின் பல இடங்களில் திரைக்கதையில் கொண்டு வந்து கொண்டேயிருப்பதால் படம் மிக மிக சுவாரஸ்யமாக செல்கிறது..!
திருடிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வைத்து டீஸண்டாக ஏடிஎம்மில் பணமெடுக்க முயன்று.. அது தோல்வியடைய.. கடைசியில் ஏடிஎம் மிஷினையே மொத்தமாக கழட்டி கொண்டு போவதும்.. போகும்போது அந்த அறைக்குள்ளேயே கக்கா போய்விட்டு சென்று தங்களது அடையாளத்தை தைரியமாகக் காண்பித்துவிட்டுச் செல்வதும் நகைச்சுவையுடன் கலந்த யதார்த்தமான திரைக்கதை.
இவர்களைப் பிடிக்க முயலும் இன்ஸ்பெக்டர் அருள்தாஸின் அலட்டல் இல்லாத அழுத்தமான நடிப்பும் நகைச்சுவையை காமெடி நடிகர்கள் இல்லாமலேயே கொண்டு வந்திருக்கிறது. அருள்தாஸின் கேரக்டர் ஸ்கெட்ச்சும், அவருடைய குடும்பத்தினர் கான்ஸ்டபிள் பச்சையப்பனை வேலைக்காரனை போல வேலை வாங்குவதெல்லாம் படா காமெடி.. வேலையே இல்லாமல் இருக்க நினைத்து வந்திருக்கும் அருள்தாஸுக்கு தொடர்ந்து வேலையைக் கொடுத்து ஏழரையை நீட்டும் காட்சிகள்தான் திரைக்கதையை பெருமளவு நகர்த்தியிருக்கின்றன.
அப்பன் போலீஸ், மகன் திருடன் என்பது இங்கே தலைகீழாகி அப்பன் திருடன், மகன் போலீஸ் என்றாகியிருக்கிறது. அந்த போலீஸ் வேலைக்காக முரளி ராம் படும் அவஸ்தையும், சேருவதற்காக சர்டிபிகேட்டிற்கு வந்து நிற்கும்போது முன் பகையை மனதில் வைத்து அருள்தாஸ் போடும் பிரேக்கும் டென்ஷனை கூட்டுகின்றன. இந்த வேலைக்காகவே போலீஸுக்கு துப்புக் கொடுக்கும் இன்பார்மர் வேலையையும் செய்கிறார் ஹீரோ முரளி.
திருட்டு தொழிலில் ஈடுபடாத ஒருவன் தன் இனத்தைச் சேர்ந்தவனே இல்லை என்று நினைக்கும் ஜி.எம்.குமாரின் எண்ணத்திற்கு ஹீரோ உதாரணமாகியிருக்க.. தன் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு போக விளைவை அருள்தாஸ் தன் பக்கம் இழுப்பதெல்லாம் சுவையான திரைக்கதை..!
படத்தில் இயக்குநர் யுரேகாவின் இயக்கம் சிறந்ததா..? திரைக்கதை சிறந்ததா என்று பட்டிமன்றமே நடத்தலாம். அப்படியொரு சிறப்பு வாய்ந்த திரைக்கதை, இயக்கம் இந்தப் படத்தில் உள்ளது.
ஹீரோ முரளிராம்.. டிவி நடிகர்களெல்லாம் சினிமாவுக்கு வரும் காலமிது. இவரும் இப்போது நுழைந்திருக்கிறார். இந்த ஹீரோ கேரக்டரில் முதலில் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார்தான் நடிக்க வேண்டியது. வேண்டவே வேண்டாம் என்று ஒரேயடியாக மறுத்துவிட்டு தனக்குப் பதிலாக முரளிராமை கை காட்டிவிட்டு தப்பித்திருக்கிறார்.
அவரையும் ஏமாற்றவில்லை முரளிராம். அளவுக்கதிகமான எமோஷனலை காட்டாமல் யதார்த்தமான நடிப்பை ஏறக்கட்டி கொடுத்திருக்கிறார் முரளி. அடுத்தவர்களை அப்படியே நூறு சதவிகிதம் நம்பித் தொலையும் அப்பாவி கிராமத்து இளைஞன் வேடம் இவருக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஸ்கிரின் பிரெஷ்னெஸ் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்துவிட்டால் இவருக்கும் ஒரு பெரிய பிரேக் கிடைக்க வாய்ப்புண்டு.
ஹீரோயின ரக்சா ராஜ்.. கிராமத்து மின்னலை கண்ணில் காட்டும் முகம். நடிக்கும் காட்சிகளில் சோதனைப்படுத்தாமல் நடித்திருக்கிறார். நடிப்பும் வந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார். ‘மைனா’ அமலாபாலை பல கோணங்களில் யோசிக்க வைத்திருக்கிறார்.
ஜி.எம்.குமார்தான் ஹீரோவைவிடவும் இந்தப் படத்தில் பேசப்பட வேண்டியவர். தன்னுடைய உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும் மனிதர் அந்த கேரக்டராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். லாக்கப்பில் அடைக்கப்படுவதற்கு முன்பு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்து செய்வினை வைப்பதையெல்லாம் மிக அலட்சியமாகச் செய்துவிட்டு லாக்கப்பில் போய் விரைப்புடன் அமரும் காட்சியிலெல்லாம் சாதாரணமான நகைச்சுவை தியேட்டரில் பொங்குகிறது..
ஹீரோ மீது போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து புகார் கொடுத்துவிட்டு பின்பு தன் தங்கை காலைப் பிடித்து அழுவது பொறுக்காமல் புகாரை வாபஸ் வாங்கிவிட்டும் வீறாப்பாக இதை சாக்கா வைத்து வீட்டுப் பக்கம் யாரும் வரக் கூடாது என்கிற அவரது பொருமல் மலைக்குக் கீழே இருக்கும் தகப்பன்மார்களும் சொல்லும் வசனம்தான்..! இந்த இடத்தில் திருட்டுத் தொழிலை செய்யாதவன் தன் இனத்தவனே அல்ல என்கிற அர்த்தத்தில் ஜி.எம்.குமார் பேச வேண்டிய வசனத்தை வைக்காமல் தவிர்த்திருக்கிறார் இயக்குநர்..!
அருள்தாஸுக்கு நிச்சயம் இது பெயர் சொல்லும் படம் என்பதில் சந்தேகமில்லை. பொழைக்க தெரியாத.. அதே சமயம் வேலை செய்யவும் விரும்பாத ஒரு இன்ஸ்பெக்டர் வேடம். தன்னுடைய தன்மானத்தைச் சுரண்டி பார்த்துவிட்ட ஹீரோவை தோதான ஒரு இடத்தில் போட்டுக் கொடுத்து வேலையைக் கெடுப்பது.. புகார் மனுவை வாபஸ் வாங்க முடியாது என்று தெனாவெட்டாகச் சொல்லி தனது பவரைக் காட்டுவது.. கான்ஸ்டபிள் பச்சையப்பனிடம் அவ்வப்போது ஏதாவது ஒரு வீட்டு வேலையைச் சொல்லி விரட்டுவது என்று அக்மார்க் தமிழ்நாட்டு போலீஸ் இன்ஸ்பெக்டராகவே காட்சியளிக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவு இன்னொரு பலம். மலைக்கிராமம் என்றாலே ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு அல்வா சாப்பிடுவது போல.. அள்ளிக் கொடுத்திருக்கிறார் அழகை.. மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்துக் கொண்டேயிருக்கலாம் போல.. போலீஸ் ஸ்டேஷன் வாசலை ஒரு டாப் ஆங்கிள் ஷாட்டில் காட்டுவார் பாருங்கள்.. ரம்மியம்.. பேசாமல் அந்த இடத்துக்கு ஓடி விடலாமா என்று ஏங்க வைக்கிறது கேமிரா.. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் சுகுமார் ஸாருக்கு..!
ராம்பிரசாத் சுந்தரின் இசையில் வைரமுத்துவின் வரிகள் ஒலிக்கின்றன. ஆனால் சப்தம் இரைச்சல் மிகுந்ததாக இருந்த்தால் அதிகம் காதில் உட்புகவில்லை. சாமியாடும் பாடல் காதைக் கிழித்தது. ஆனால் ஆட்டம் நம்மையும் ஆட வா என்றழைக்கிறது.
படத்தொகுப்பை சொல்வதற்கு முன்பு படத்தின் முடிவு பற்றி சொல்லியாக வேண்டும். 2 மணி 30 நிமிடங்கள் இருக்கும் இந்தப் படத்தில் படத்தை வெளியிடும் qube fomat-ல் அதிகப் பணம் கட்ட வேண்டி வருகிறதே என்கிற தவிப்பில் தயாரிப்பாளர் 15 நிமிட காட்சிகளை கட் செய்து காக்காய்க்கு தூக்கிப் போட்டதில் கிளைமாக்ஸ் யாருக்குமே புரியாதவகையில் அமைந்துவிட்டது, இந்தப் படத்தின் இயக்குநருக்கு நேர்ந்த துரதிருஷ்டம்தான்..
யார் அந்த கொலையாளி என்பதை கிட்டத்தட்ட ஊகித்தே கண்டறிவது போன்ற காட்சிகளை வைத்திருப்பதால் கடைசியில் ஊகிக்க முடிந்தது. ஆனால் படத்திலோ எதுவுமே சொல்லாமல் சப்பென்று முடித்துவிட்டதால், படம் பார்த்த ரசிகர்களுக்கு புரியவில்லை.. பாவம் இயக்குநர்..
நாம் இயக்குநரிடம் கட் செய்யப்பட்ட காட்சிகளையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டதால் கதை புரிந்தது. ஆனாலும் சொல்ல முடியாத சூழல்..!
கடைசியாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் கால் வைக்கும் ஹீரோவின் உருவத்தை பார்த்து அவரவர் வசதிக்கேற்ப திரைக்கதையை ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்..!
பெரும்பாலும் ஒரு படம் நன்றாக இல்லை என்று மீடியாக்கள் எழுதி கிழித்துவிட்டன என்று புகார் சொல்வார்கள். ஆனால் இந்தத் ‘தொப்பி’ படத்தை அதன் தயாரிப்பாளரே கிழித்தெறிந்துவிட்டார். இயக்குநர் யுரேகாவின் இத்தகைய கடின உழைப்பு, கடைசி நேரத்தில் வீணாகிவிட்டதே என்று நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.
இவருடைய ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ படம் மிகவும் போல்டான படம். இது அடுத்து எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. ஆனால் மேலும், மேலும் தொடர்ச்சியான படங்களைக் கொடுத்தால் இந்த யுரேகா நிச்சயம் தமிழ்ச் சினிமாவில் பிரபு சாலமன் மாதிரி அழுத்தமான படங்களைக் கொடுக்கும் இயக்குநர் என்ற பெயரை நிச்சயமாக எடுப்பார். இதற்காக அவரைத் தனிப்பட்ட முறையிலும் வாழ்த்துகிறோம்.
‘தொப்பி’ படம் பார்க்கும் அனைவரின் தலையையும் மகுடமாக்கும்..!
|
Tweet |
2 comments:
நன்றி சார் விமர்சனத்திற்கு ...
Antha 15 nimida kaatchikalai ippothu sollalaamae sir ???
Post a Comment