08-06-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பாசமலர் காலத்துக் கதை. இப்போதைய வியாபார நுணுக்கங்களுடன் இணைத்து புதிய திரைக்கதையில் கொடுக்க முனைந்திருக்கிறார் இயக்குநர் ராகவன்.
வேங்கடசாமி என்னும் ராஜ்கிரண்தான் படத்தின் உண்மையான ஹீரோ. பெற்றோரை இழந்த தனது பேரன் தமிழை கண்ணும் கருத்துமாக வளர்த்து சென்னைக்கு வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றும் பேரன் தமிழுக்கு இருக்கும் ஒரேயொரு லட்சியம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதுதான்.
இந்த நேரத்தில் பார்த்தவுடன் காதலாக மருத்துவக் கல்லூரி மாணவி லட்சுமி மேனனுடன் காதல்.. சில, பல திரைக்கதைகளுக்குப் பின்பு.. ஹீரோயிஸ வேலைகளைச் செய்து காட்டிய பின்பு வழக்கமான ஹீரோயினாக லட்சுமிமேனன் சிக்கிக் கொள்ள.. ஒரு டூயட்டுக்கு சீன் கிடைத்துவிட்டது.
இப்போதுதான் தாத்தா ராஜ்கிரண் சென்னையில் கால் வைக்கிறார். தனது பேரனை பார்க்க வந்தவர்.. வந்த இடத்தில் செய்யும் அப்பாவித்தனங்கள்தான் மிச்சக் கதை.. என்னதான் அப்பாவித்தனமாய் இருந்தாலும் வெள்ளந்தியாய் அவர் முகம் காட்டினாலும் இப்போதைய சூழலில் இதெல்லாம் நடக்குமா என்றே யோசிக்க வேண்டியிருக்கிறது.. சீரியல்தனமாய் எப்படி காட்டினாலும் பார்த்துவிடுவார்கள் என்று நம்பி சீரியலையும் தாண்டிய அப்பாவி தாத்தாவாய் காட்டிவிட்டார் இயக்குநர்.
ஒரு உதாரணம், லட்சுமி மேனனின் தங்கையை பஸ்ஸ்டாப்பில் ஒருவன் சைட் அடிக்கிறான். அவனை அடித்துவிரட்டிவிட்டு அந்தப் பெண்ணை கையைப் பிடித்திழுத்து அவளது வீட்டிற்கு அழைத்து வருகிறார் ராஜ்கிரண். “உங்கப்பனை கூப்பிடு…” என்றவுடன் அந்தப் பெண்ணும் “டாடி டாடி..” என்கிறார். அவளது அப்பா போலீஸ் டிரெஸ்ஸுடன் “என்னம்மா..?” என்று கேட்டுக் கொண்டே ஹாலுக்குள் வருகிறார். அவரைப் பார்த்தும் அவரருகில் போய் பளாரென்று அவரது கன்னத்தில் அறைகிறார் ராஜ்கிரண். “ஒரு பொம்பளை பிள்ளையை எப்படி வளர்க்கிறதுன்னு தெரிய வேணாம்.. இப்படியா கண்ட நேரத்துல வெளில அனுப்புறது..?” என்கிறார் கோபத்தோடு.. கன்னத்தைத் தடவியபடியே பரிதாபமாகப் பார்க்கிறார் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.. எங்கே இதை கொஞ்சம் மறுபடியும் படித்துப் பாருங்கள்..! நம்ப முடிகிறதா..? இதுதான் ராஜ்கிரணின் உச்சபட்ச வெள்ளந்தித்தனம்..!
எதிர்த்த வீட்டில் ரசம் கேட்பது ஓகே.. பக்கத்து வீட்டுக் குழந்தையுடன் விளையாடுவது ஓகே.. பிளம்பர் முதற்கொண்டு அங்கே வேலைக்கு வரும் தொழிலாளர்களுடன் சரிசமமாக பேசுவதும் ஓகே.. இவர்களுக்கு புதிய சட்டையை தானமாகக் கொடுப்பதும் ஓகே.
ஆனால் இதையெல்லாம் தாண்டி குடியிருப்பின் மத்தியப் பகுதியில் இருக்கும் நீரூற்றில் குளிப்பது, துவைப்பது.. டிஷ் ஆண்ட்டனாவை கழட்டி அதில் வடாம் பிழிந்து வைப்பது.. அமெரிக்கன் தூதரக வாசலில் இருக்கும் கொடியைப் பார்த்து சுதந்திர உணர்வு பீறிட “வெள்ளையனே வெளியேறு…” என்று கத்துவது.. பீச்சில் வெளிநாட்டுப் பெண்ணின் மீது கை வைக்கும் பசங்களை ‘என் ராசாவின் மனசிலே’ டைப்பில் எத்தி விளையாடுவது.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய் உட்கார்ந்து அப்பாவியாய் ஈசிஆர் ரோட்டுக்கு வழி கேட்பது.. வீட்டிற்கு வந்து விடும் டிரைவர் போலீஸுக்கு இவரே வழி சொல்வது.. பிரெட் ஹீட்டர் என்று நினைத்து லேப்டாப்பை சுட வைத்து வெடிக்க வைப்பது.. எலி மருந்தை சாப்பிட்டுவிட்ட குழந்தைக்கு புளிக் கரைசலை கொடுப்பது.. குழந்தையின் பெற்றோர்கள் ராஜ்கிரணை இதற்காகவே மருத்துவமனையில் கரித்துக் கொட்டுவது.. பின்பு உண்மை தெரிந்து அவரைத் தேடுவது.. இறுதியில் தாத்தாவின் முடிவு.. இதெல்லாம் பகல் நேர டிவி சீரியல்களில் ஏற்கெனவே பார்த்து பார்த்து நொந்து போன காட்சிகளின் தொகுப்பு..
இந்த அலுப்பையெல்லாம் தாண்டி ரசிக்க வைத்திருக்கிறது தாத்தா ராஜ்கிரணின் நடிப்பு. இதனாலேயே தப்பித்தார் இயக்குநர் ராகவன்.
விமல் இன்னமும் தலையாட்டுவதை நிறுத்தவில்லை என்றால் இதனை எதிர்த்து அறப்போராட்டம் நடத்த யாராவது ஒருவர் முன் வர வேண்டும். பரவாயில்லை.. நமக்காக இயக்குநரே தலையிட்டு லட்சுமி மேனனின் வார்த்தைகளிலேயே “யோவ்.. மொதல்ல இந்த மாதிரி தலையை தலைய ஆட்டுறதை நிறுத்து.. அசிங்கமா இருக்கு..” என்று சொல்ல வைத்திருக்கிறார். நன்றி இயக்குநர் ஸார்..
காதல் காட்சிகள் ஓகே.. வீரமான, விவேகமான, காமெடியான, அமைதியான காட்சிகளில் ஓகே.. ஆனால் சோகக் காட்சிகளில் அண்ணன் இன்னமும் கொஞ்சம் முன்னேற வேண்டும் போல தோன்றுகிறது. கிளைமாக்ஸில் எதிர்பார்த்ததைவிடவும் கொஞ்சம் கூடவே நடித்திருக்கிறார் விமல்.
லட்சுமி மேனன் அவரைத் திட்டும்போது அதே ரியாக்சன்தான்.. ஏற்றுக் கொள்ளும்போதும் அதே ரியாக்சன்தான். லட்சியக் கனவான அமெரிக்கா செல்லும் வாய்ப்பை இழந்த லேப்டாப் எரிந்துவிட்டதை பார்த்த பின்பும் கண்களில் ஒரு சின்ன கோபத்தைக்கூட காட்டாத விமல் அண்ணனை என்னவென்று சொல்வது..? இயக்கம் அப்படியோ..? ஆனால் பாடல் காட்சிகளில் அண்ணனின் ஸ்டெப் பை ஸ்டெப் டபுள் ஓகே.. நடனத்தில் நன்கு தேறிவிட்டார் மனிதர்..
லட்சுமி மேனனுக்கு என்னதான் ஆச்சு என்று கேட்க வைத்திருக்கிறது இப்படத்தில் அவரைக் காட்டியிருக்கும் அழகு. ஒளிப்பதிவாளர் ஏதும் தூங்கிவிட்டாரா..? குளோஸப் காட்சிகள் முழுவதிலும் லைட் போகிறது.. வருகிறது.. முகத்தின் அழகை கொஞ்சமும் காட்டவில்லை. மேக்கப் போட்டாரா என்றும் தெரியவில்லை. கேமிராமேனின் கைவண்ணத்தில் அழகில்லாத லட்சுமி மேனன்.
ஆனாலும் என்ன நடிப்பில் கைவிடவில்லையே..? “ஆமடா பார்க்க கிழவி மாதிரியேதான் இருக்கா..!” என்பதற்கு லட்சுமி காட்டும் ரியாக்சன்.. ஹி.. ஹி.. ‘பார்த்து பார்த்து’ பாடல் காட்சிகளில் காட்டியிருக்கும் எக்ஸ்பிரஷன்.. ‘பாண்டிய நாடு’ படத்தின் பாடலுக்கு பின்பு இனி வரும் அனைத்து லட்சுமி மேனன் படங்களிலும் இது போன்ற பாடல்களை நிச்சயம் காணலாம். தனக்குக் கிடைத்த அனைத்துக் காட்சிகளில் நடிப்பில் குறை வைக்கவில்லை லட்சுமி.
இப்படியொரு தாத்தா நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைக்குமளவுக்கு நடிப்பைக் கொட்டியிருக்கிறார் ராஜ்கிரண். அவரது அப்பாவி நடிப்பை பற்றி கேட்கவே வேண்டாம். ஹீரோவாக நடித்தபோதே வெளுத்தவர். இதிலும் அப்படியே.. அவருடைய இயல்பான குணத்தை அப்படியே ஸ்கிரீனில் காட்டியிருக்கிறார். இறுதிக் காட்சியில் ஒரு மனப் பிசைவு ஏற்படுவது என்னவோ உண்மை. அது ராஜ்கிரணால் மட்டுமே முடிந்தது..!
ரகுநந்தனின் இசையில் ‘பார்த்து பார்த்து’ பாடலும், ‘ஐயோ ஐயோ’ பாடலும் தாளம் போட வைக்கின்றன. குழந்தைகளுக்கும் பிடிக்கும்வகையில் படம் பிடித்திருக்கும் ‘ஐயோ ஐயோ’ பாடலுக்காக இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..!
பொதுவாகவே கிராமத்து மனிதர்கள்தான் உண்மையான பாசத்தையும், நேசத்தையும் கொட்டுபவர்கள் என்கிற மனோபாவத்தை தமிழ்ச் சினிமாக்களும், சீரியல்களும் நம்முடைய புத்தியில் ஏற்றிவிட்டன. அதனை கீழேயிறக்குவது என்பது இப்போதைக்கு முடியாத காரியம் என்பதால் இந்தப் படம் அந்த இலக்கணத்தின்படி பார்வையாளர்களால் ரசிக்கப் பெறும் என்றே நம்புகிறேன்.
ஆனால் இந்த இலக்கணத்தின் மிகப் பெரிய பிழை கதையின் அடிநாதத்திலேயே இருக்கிறது. இத்தனை பாசமான தாத்தாவைவிட்டுவிட்டு பேரன் தமிழ் ஏன் அமெரிக்கா போக வேண்டும் என்று துடிக்கிறார்..? தாத்தா செய்யம் அனைத்து திருவிளையாடல்களையும் பொறுத்துக் கொண்டு அவருக்காக நஷ்டஈடெல்லாம் கொடுத்து சமாளிக்கும் இந்த பேராண்டி, அமெரிக்காவில் போய் செட்டிலாகிவிட்டால் ஊர் திரும்பும் தாத்தாவை அடுத்து யார் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்..? தன்னைவிட்டு அமெரிக்கா சென்று செட்டிலாக நினைக்கும் பேரனை தாத்தா எப்படி போக அனுமதிப்பார்..? அனுமதிக்கிறார்..?
என்னவோ போங்க..!
தாத்தா கடைசியாக ‘இப்படி’ ஆகிவிட்டதால் இனி பேரன் தமிழ் அமெரிக்கா போகும் வாய்ப்பே இல்லை என்று நினைத்து நாம் ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..!
நிஜத்தில் பார்க்கவே முடியாது. ஆனால் திரையில் மட்டுமே இது போன்ற தாத்தாக்களை காண முடியும்..! இதுக்காகவே, ஒரு தடவை தியேட்டருக்கு போய் இந்தத் தாத்தாவை பார்த்திட்டு வந்திருங்க..!
|
Tweet |
4 comments:
//நிஜத்தில் பார்க்கவே முடியாது. ஆனால் திரையில் மட்டுமே இது போன்ற தாத்தாக்களை காண முடியும்..! இதுக்காகவே, ஒரு தடவை தியேட்டருக்கு போய் இந்தத் தாத்தாவை பார்த்திட்டு வந்திருங்க..! // அருமையா சொன்னீங்க...
intha padam oru Hindhi padam copy
this is remake movie from Hindi. original version "atithi tum kab jaoge". its nice movie
ராஜ்கீரனுக்காக பார்த்தே ஆக வேண்டும் என்றெ படம் வர முதலெ நான் நினைத்தது சரியாகிவிட்டது
மிக்க நன்றி
Post a Comment