07-06-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு சில படங்களை படம் பார்க்கும்போதே கண்டிப்பாக விமர்சனம் எழுதியே ஆக வேண்டும் என்றே தோன்றும். ஒரு சிலவற்றை கடமைக்காக எழுதணுமேன்னு தோணும்.. ஏதாவது அரிதான படங்களை மட்டுமே இதையும் எழுதணுமான்னு திக்கென்ற பயம் வரும். அப்படியொரு பயத்தைக் காட்டிவிட்ட படம் இது. காரணம், படத்தின் கதை என்ற ஒரு விஷயமே இல்லை..! லாஜிக் பார்க்காம காமெடியை மட்டும் பாருங்கன்னு துவக்கத்துலேயே சொன்னாலும் காமெடியும் இல்லாமல் போய்விட்டதால் என்ன செய்வது என்கிற குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது இப்படம்.
‘பாட்சா’ ரஜினியை போல், ‘நாயகன்’ கமலை போல் மிகப் பெரிய தாதாவாக வேண்டும் என்ற லட்சியத்துடன் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு படையெடுத்து வருகிறார் படத்தின் ஹீரோ வர்ஷன். வருபவருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுப்பது அரைலூஸாக இருக்கும் கான்ஸ்டபிள் இமான் அண்ணாச்சி. கூடவே கமல், ரஜினியிடமே டெய்லி பேசிக்கிட்டிருக்கேனாக்கும் என்று ஊரில் பில்டப்பு கொடுத்துவிட்டு இங்கே வந்து ஹோட்டலில் தோசை சுட்டுக் கொண்டிருக்கும் மாஸ்டரான கஞ்சா கருப்புவும் சேர்ந்து கொள்கிறார்.
இடையில் அவ்வப்போது சந்திக்க நேரும் ஹீரோயின் சானியாதாராவுக்கு வர்ஷனை பார்த்தவுடன் லவ்வு. இவரின் தந்தை சிங்கமுத்து ஒரு மொக்கை அரசியல்வாதி. ஹீரோ வர்ஷன் சிங்கமுத்துவின் கட்சியில் தொண்டனாகவே சேருகிறான். இது ஹீரோயினுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் சிங்கமுத்து கட்சித் தலைவரைச் சந்திக்கும்போது, உடனிருக்கும் வர்ஷன் சிங்கமுத்துவை “அடுத்த முதல்வர் வாழ்க” என்று வாழ்த்தி கோஷம்போட.. இதைப் பார்த்த கட்சித் தலைவர், சிங்கமுத்துவை சுட்டெரிக்க.. சிங்கமுத்து ஹீரோவை தன்னிடமிருந்தும், கட்சியிலிருந்தும் விலக்குகிறார். இதனைப் பார்த்து ஹீரோயினுக்கு ஹீரோ மீது பாசம் அதிகமாக.. லவ் ஒரு பக்கம் மேலும் வளர்கிறது…
இமான் அண்ணாச்சிக்கு தான் எப்படியாவது இன்ஸ்பெக்டராகிவிட வேண்டும் என்று தணியாத ஆசை. இதற்காக எதையாவது செய்து டிபார்ட்மெண்ட்டில் நல்ல பெயர் எடுத்து அதன் மூலம் பிரமோஷனை எட்டிப் பிடிக்க நினைக்கிறார். ஏற்கெனவே அதே ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கும் தியாகுவுக்கு டி.எஸ்.பி.பியாக ஆசை. இந்த இருவரின் ஆசைத் தீயில் எண்ணெய்யை ஊற்றி வார்க்கிறார் ஹீரோ.
தான் ஒரு தாதாவாக வளர வேண்டியிருப்பதால் ஏதாவது ஒரு கொலை வழக்கில் தன்னைச் சிக்க வைத்து அதன் மூலம் அவர்கள் பதவி உயர்வை பெற்று விட்டு பின்பு தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி டீலிங் போட்டு ஒரு பைனான்ஸ் கம்பெனி ஓனர் கொலை வழக்கில் வாலண்டியராக சிக்கி சிறைக்குச் செல்கிறார்.
ஆனால் சிறை வாழ்க்கை வர்ஷனுக்கு உண்மையை உணர்த்த வெளியில் வருவதற்கு மிகவும் போராடுகிறார். வெளியில் வந்தாரா இல்லையா என்பதை பொறுமையிருந்தால் தியேட்டருக்குச் சென்று அமர்ந்து பார்த்துவிட்டு வாருங்கள்..!
ஹீரோயின் வர்ஷன் நடிப்பில் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறார். இன்னமும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு என்பதை அவரிடத்தில் யாராவது சொன்னால் தேவலை. ஹீரோயின் சானியாதாரா நன்கு நடனமாடுகிறார். இயக்கம் அவ்வளவு ஈர்ப்பாக இல்லாததால் இவரையும் ரசிக்க முடியவில்லை. ஆனால் பாடல் காட்சிகளில் வஞ்சமிக்காமல் கவர்ச்சியைக் காட்டியிருக்கிறார்.. வாழ்க..
கேணத்தனமான இன்ஸ்பெக்டராக தியாகு.. இவருக்குப் போட்டியாக கிறுக்குத்தனமான ஜெயிலராக பொன்னம்பலம்.. அரசியல் அரிச்சுவடி பற்றி ஒண்ணும் தெரியாத முட்டாள்களான தனது கைத்தடிகளுக்கு பாடமெடுக்கும் சிங்கமுத்துவின் சில, பல கமெண்ட்டுகள்தான் படத்தில் நகைச்சுவை என்று சொல்லப்படுபவை. அதிலும் தலைவருக்கு மாலை போடும்போது அடுத்த முதல்வர் என்று ஹீரோ சொல்ல அடுத்தடுத்து கோஷங்களை எழுப்பும்போது சிங்கமுத்து படும்பாடு ரசிக்க வைக்கிறது.. மனிதருக்குள் இன்னமும் நிறைய இருக்கிறது.. வெளிக்கொண்டு வரத்தான் ஆளில்லை போலும்..!
மகளிரணி தலைவியாக தங்கத் தலைவி ஷகீலாவும், அவரது அணியினரும் அவ்வப்போது பேசும் கண்ணகி.. கற்புக்கரசி.. மங்கையர்க்கரசி வசனங்கள் கிச்சுகிச்சு மூட்டியிருக்கின்றன.. அதிலும் கிளைமாக்ஸில் ஏதோ பெரிதாகச் செய்யப் போகிறார் என்றாலும் ஓரளவுக்கு சிரிப்பை மூட்டியிருக்கிறார் இயக்குநர். அவ்வளவுதான்..!
அண்ணன் தாஜ்நூரின் இசை கேட்கும் ரகத்தில்தான் எப்போதும் இருக்கும். இந்தப் படத்தில் ஒரேயொரு குத்துப் பாடலுடன் தனது திறமையை நிறுத்திக் கொண்டார் போலும்.. கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கும் எம்.திலகராஜன், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதை எழுதி, கொஞ்சம் திறமையுடன் இயக்கியிருந்தால் சேனல்களில் தொடர்ச்சியாக சிரிப்போ சிரிப்பு பகுதியிலாவது இதைக் காட்டியிருப்பார்கள்.
‘அது வேற இது வேற’ என்று லாஜிக் வித் காமெடி.. லாஜிக் வித்தவுட் காமெடி என்று இரண்டுக்குமே மகா பொருத்தமாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்..! நல்ல சினிமா வேற.. இது வேற.. காமெடி படம் வேற.. இது வேற..! புரிஞ்சுக்குங்கோ மக்களே..!
|
Tweet |
1 comments:
எதையும் தாங்கும் நம் அண்ணணே, இப்படி சொல்றார்னா?? எவ்வளவு கேவலமா எடுத்திருப்பாங்க.. ராஸ்கோல்ஸ்...!!!
மிக்க நன்றி அண்ணே... டவுன்லோடில் இருக்க வர வாய்ப்பு இருக்க கூடாது... காப்பாத்து ஆண்டவா
Post a Comment