சைவம் - சினிமா விமர்சனம்

28-06-2014

எ்ன் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆர்யா, விஜய், விக்ரம் என்று பெரிய ஸ்டார்களை வைத்து படம் இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் விஜய், "இது எனக்காக நானே தயாரித்து இயக்குகிற படம்..." என்று சொல்லித்தான் ஆரம்பித்தார். "தெய்வத் திருமகள்' படத்தில் நடித்த சாராவை மனதில் வைத்துதான் இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்.." என்றார் விஜய். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது..!
சீரியல் டைப் கதை.. இப்படியொரு அடக்கமான குடும்பம், அகிலத்தில் எங்கே இருக்கிறது என்று தேடித்தான் கண்டறிய வேண்டும். செட்டியார் வம்ச அரண்மனை போன்ற வீடு.. செட்டியார் குலத்தைத்தான் திரையில் காட்டியிருக்கிறார்கள்.

வெளியூர்களில் வாழும் மகள்கள், மகன்கள், மருமகள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் அனைவரும் ஊர்த் திருவிழாவுக்காக வருகிறார்கள். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் ஒரு சின்ன அசம்பாவிதம் நடைபெற்றுவிட.. அதற்குப் பரிகாரம் கேட்கிறார்கள். "நீங்கள் செய்கிறேன் என்று சொன்ன ஒரு கடனை செய்யவில்லை. அதனால்தான் இப்படி நடந்துவிட்டது.. அது என்னவென்று தெரிந்து அதனை நிவர்த்தி செய்யுங்கள்..." என்கிறார் குருக்கள்..
யோசித்துப் பார்த்தவர்களின் நினைவில் அவர்கள் வீட்டிலேயே வளரும் 'பாப்பா' என்கிற சேவல் நினைவுக்கு வருகிறது. அந்தச் சேவல் கருப்பசாமி கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக வாங்கியது. ஆனால் இன்னமும் அதைச் செய்யாமல் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, சேவலை பலி கொடுக்கத் தயாராகிறார்கள்.
அந்த நேரத்தில் அந்த பாப்பா என்ற சேவல் காணாமல் போய்விட.. வீடே அல்ல்லோகப்படுகிறது.. ஆள், ஆளாக்கு தேடுகிறார்கள். வீட்டின் சூழல் மாறுகிறது.. மோதல்கள் நடக்கின்றன.. பரஸ்பரம் பேச்சுக்கள் குறைகின்றன.. எதையோ இழந்தது போல் ஆகின்றனர்.. அந்தச் சேவல் கடைசியில் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதை..!
ஒரு சிறுவன் எப்படி அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறினான் என்பதுத்தான் கதைக் கருவாம்.. இந்தப் படத்தின் முடிவை பார்த்துதான், ஒரு சிறுவன் நிஜ வாழ்க்கையில் சைவத்துக்கு மாறியதாக டைட்டிலில் கார்டு போட்டிருக்கிறார்கள். அந்தச் சிறுவன் இயக்குநர் விஜய்தான்..!
அப்பாவின் பேச்சுக்குக் கட்டுப்படும் மகன்கள்.. குடும்பத்தினர்.. தப்பு செய்தால் தோப்புக் கரணம் போடும் பழக்கமுள்ள வீடு.. சாதாரணமான நாளன்றே மீன் வறுவல்.. ரத்தக் குளியல்.. கெடா குழம்பு என்று அசைவத்தில் அனைத்தையும் ருசிக்கும் வீடு அது. இப்படி எல்லாவற்றையும் செய்துவிட்டு அந்த பாப்பாவுக்காக அத்தனை பேரும் அப்பாவுக்கு எதிராக மாறுகிறார்கள் என்பதை ஒரேயொரு பாடல் காட்சியில் நகர்த்தியிருப்பது படத்தை சீரியல் டைப்புக்கு மாற்றிவிட்டது..!
ஒரு சேவலுக்காக ஊர் முழுக்க சண்டையிழுத்து வைத்து, ரகளை செய்தவர்கள் சாதாரணமாக கிடைத்துவிட்டது என்றவுடன், மனம் மாறுவது ஏன் என்பதற்கான அழுத்தமான காரணம் சொல்லப்படாமல் சப்பென்றாகிவிட்டது..!
சாராவுக்கு அந்தச் சேவல் மீது ஏற்பட்டிருக்கும் இனம் புரியாத பாசம் முக்கியமா..? குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் தீர படைக்க வேண்டிய நேர்த்திக் கடன் முக்கியமா..? குடும்பத்தினர் எதை முக்கியம் என்பார்கள்..? ஒட்டு மொத்தக் குடும்பத்தினருக்காக கடைசியில் நேர்த்திக் கடனை தீர்க்க விடாமல் செய்வதெல்லாம் அக்மார்க் பீம்சிங் காலத்து கதை..!
சாராவைத் தேடி பாப்பா ஸ்கூலுக்கு வருவது.. துபாய் சிறுவனைக் காட்டிக் கொடுக்காமல் சாரா, தன் மேல் பழியைப் போட்டுக் கொள்வது.. பெரிய மனுஷித்தனமாய் பெரியப்பா, பெரியம்மாவிடம் போய் பேசுவது.. தாத்தாவிடம் சண்டையிழுப்பது என்பதெல்லாம் சாராவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு எழுதியிருக்கும் திரைக்கதை போல தெரிகிறது..!
பாஷா-துவாரா இருவருக்குமிடையேயான ஈர்ப்பை சுட்டிக் காட்டியிருக்கும்விதம்.. இதனால் ஏற்படும் மோதல்கள் சட்டென்று அந்தக் குடும்பத்தின் விரிசலை சுட்டிக் காட்டுவது திரைக்கதையின் ஓட்டை போல தெரிகிறது.. இத்தனை பாசமானவர்கள் ஏன் அதற்காக அந்த அளவுக்கு சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்..? சொந்தம்தானே..? பின்னால் பார்த்துக் கொள்வோம் என்று விட்டிருக்கலாமே..?
பாகப்பிரிவினை ரங்கன் மாதிரி ஜார்ஜுக்கும் ஒரு வலுவான சென்டிமெண்ட் காட்சியைக் கொடுத்து பிழிய வைத்திருக்கிறார். இந்தக் காட்சியில் அவரது மனைவி செய்யும் அழுகை நடிப்பு காமெடி பிளஸ் சென்டிமெண்ட் ஆக்சன்..!
துபாய் சிறுவனாக நடித்த ரஹிலின் நடிப்பு பிரமாதம்.. காட்சிக்குக் காட்சி எப்படித்தான் அந்த கோப முகத்தை வைத்திருந்தானோ தெரியவில்லை. "பாப்பா இருக்குமிடம் தெரியும்..." என்று சொல்லி ஒவ்வொருவரிடத்திலும் வாங்கிக் கட்டிக் கொள்ளும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது..
ஊர் கண்மாயை 'பீச்' என்று சொல்லி ஜார்ஜ் டபாய்க்க.. அங்கே ரஹிலின் ஆக்சன்கள் அபாரம்.. அதேபோல் பாப்பாவைத் தேடுவதை போல நடிக்கின்ற காட்சியில் அனைவருமே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
நாசர் டிபிகல் அப்பா.. எப்போதும் நடிப்பில் ஏ ஒன்.. இதில் சோடையில்லை.. ஆனால் அழுத்தமில்லாத திரைக்கதையால், சாதாரணமாகவே நடித்திருக்கிறார். "இது யார் செஞ்சது..?" என்ற அந்தக் கம்பீர குரலுக்கு ஏற்றாற்போன்ற சம்பவங்கள் இல்லாமல் மொக்கையாகிவிட்டதால் அதுவும் வீணான உணர்வே வருகிறது..!
சாராவின் மெழுகு முகமே ரசிக்க வைக்கிறது.. பாப்பாவை கண்டு பிடித்துவிடுவார்களோ என்று ஒவ்வொரு முறையும் பதட்டத்துடன் பார்க்கும் காட்சியும்.. ரஹூலை பார்த்தவுடன் சல்யூட் அடித்தபடியே இறுகிப் போகும் முகமும் ரசிக்கத்தான் வைக்கிறது..
அது யாரு தேன்மொழியாக நடித்திருக்கும் சுசித்ரா..? அழகு முகம்.. எங்கேயிருந்து பிடித்தாரோ தெரியலையே..? ஹீரோயினாக நடித்திருக்க வேண்டியவர்.. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக கொண்டு வந்திருக்கிறார்கள்.. காத்திருப்போம்..!
பல இடங்களில் வாய் விட்டுச் சிரிக்க வைத்தும், சில இடங்களில் லேசாக கண் கலங்க வைக்கவுமாக படம் மெதுவாக நகர்வதுதான் படத்தின் மைனஸ் பாயிண்ட். மிகச் சரியாக இரண்டு மணி நேரத்தில் படத்தை முடித்திருப்பதும் ஒரு நல்ல விஷயம்..
நீரவ்ஷாவின் கேமிராவில் கிராமத்து மண்ணை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள். அந்த யாருமற்ற தெருக்கள்தான் இன்றைய உண்மையான கிராமங்கள்.. அந்த மாட மாளிகைகள் வாழ்ந்து, கெட்டவர்களின் கதைகளைச் சொல்கின்றன..
ஜி.வி.பிரகாஷின் இசையில் நா.முத்துக்குமாரின் வைர வரிகளை கேட்டவர்களும், ரசித்தவர்களும் கொடுத்து வைத்தவர்கள்.. காட்சிப்படுத்தலில்தான் இங்கே அழகிருந்தது.. இசை வரிகளை அமிழ்த்துப் போட.. காட்சிகளே கண்களைக் குளிர வைத்தன..!
ஒரு சின்ன நெருடலான காட்சிகூட இல்லாமல் கச்சிதமான ஒரு குடும்பப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். படத்திற்கு பாராட்டுக்களும், வசூலும் நிறைய குவிய வேண்டும். இது போன்ற படங்களை அதிகம் ஊக்குவித்தால்தான் நமக்கும் கொஞ்சமேனும் நல்ல படங்கள் கிடைக்கும்.
பாசில் படம் பார்த்த திருப்தியை இந்தப் படம் நிச்சயம் உங்களுக்குக் கொடுக்கும்.. நம்பிச் செல்லலாம்..!

1 comments:

Nondavan said...

okee... பார்த்திருலாம்