வடகறி - சினிமா விமர்சனம்

23-06-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு சாதாரணமானவனுக்கு ஒரு நாளில் ஒரு சோதனை ஏற்பட்டால் அதிலிருந்துவிடுபட அவன் என்ன பாடுபடுகிறான் என்பதுதான் கதை.. இதனை மையமாக வைத்து சமீப ஆண்டுகளில் பல படங்கள் வந்துவிட்டன. அதிலும் இதுவும் ஒன்று..!

ஜெய் ஒரு சாதாரணமான மெடிக்கல் ரெப். இந்த அளவுக்குப் படித்திருந்தும் கதைப்படி கொஞ்சமும் காமன்சென்ஸ் இல்லாதவர். பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுகூட தெரியாத தத்தி.. செல்போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுகூட தெரியாத அறிவிலி.. இப்படித்தான் கேரக்டர் ஸ்கெட்ச் செய்திருக்கிறார்கள்.
ஒரு பழைய காலத்து செல்போனை வைத்து அதனை எப்படி மியூட் செய்வது என்றுகூட தெரியாமல் இருக்கிறார்.. இவருக்கு வடகறி என்ற பெயரில் ஒரு பிரெண்ட். அவரால்தான் ரூட் மாறுகிறார் ஜெய். இப்படியே இந்த ஓட்டலுக்கு போனை வைச்சிருந்தீன்னா ஒரு பிகர்கூட திரும்பிப் பார்க்காது என்று சொல்லிச் சொல்லியே உசுப்பேத்தி விடுகிறான் நண்பன் வடகறி..!
சம்பாதிக்கும் பணம் தன்னை வளர்த்த அண்ணன் குடும்பத்தின் செலவுக்கும் தேவைப்படுவதால் அந்த மாதம் கொரிய மாடல் போனை வாங்கித் தொலைக்கிறார் ஜெய். அதன் ஒலி, அபாய சங்கு, ஆலயமணியைப் போல ஒலிப்பதும் பெரும் பிரச்சினையாகி சிக்கலாகிறது ஜெய்க்கு. இந்த நேரத்தில்தான் டீக்கடையில் டீ குடிக்கப் போயிருக்கும்போது ஒரு ஐ போன் ஜெய்யின் கண்ணில் படுகிறது. மனசாட்சி பெண்டுலம் போல இரண்டு பக்கமும் ஆடினாலும், சைத்தானின் பங்களிப்பு பெரிதாக இருந்த்தால் அந்த ஐ போனை லவட்டிவிடுகிறார் ஜெய். இதிலிருந்துதான் கிரகம் பிடிக்கிறது நம்ம ஹீரோவுக்கு..
இந்த ஐ போனை வைத்து காதலுக்கும் அடி போடுகிறார். காதலியும் சிக்குகிறார். இந்த நேரத்தில் மனசாட்சி உறுத்திக் கொண்டேயிருக்க.. மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை மானசீக தெய்வமாக்க் கொண்டிருக்கும் ஜெய்யின் அண்ணன் திருடுவது பாவத் தொழில் என்று போதிக்க.. மனம் திருந்தி அந்த ஐ போனை திருப்பிக் கொடுக்க முடிவெடுக்கிறார்.
அந்த ஐ போனை வைத்திருந்த ரவிபிரகாஷ் ஒரு மாபெரும் திருடன். போலி மருந்துகளின் தயாரிப்பாளர். உண்மையான மருந்துகளை ரவிபிரகாஷுக்கு சப்ளை செய்தவன் ரவி பிரகாஷை தேடோ தேடென்று தேடிக் கொண்டிருக்க.. இவனிடமே வந்து சிக்குகிறார் ஜெய்.
அடித்து, உதைத்து, மிதித்து சரக்கு எங்கே என்று ஜெய்யிடம் கேட்க.. தான் ரவிஷங்கர் இல்லை.. சதீஷ் என்கிறார் ஹீரோ. நம்ப மறுக்கும் டீம், சரக்குகளை எடுத்து வர அப்போதைக்கு ஹீரோவை ரிலீஸ் செய்கிறது..
ஹீரோ சரக்குகளை எடுத்துக் கொடுத்தாரா..? இல்லை.. போலீஸில் போய் சொல்லித் தப்பித்தாரா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
ஜெய் இன்னொரு விமலாக உருவாகிவிட்டார். இன்னும் எத்தனை நாளைக்கு இதே தோற்றம்..? இதே கேரக்டர் ஸ்கெட்ச்..?  குரலில்கூட கொஞ்சமும் மாற்றமில்லை.. சந்தோஷத்திற்கும் அதே வாய்ஸ்தான்.. சோகத்திற்கும் அதே வாய்ஸ்தான்..!
ஹீரோயினான ஸ்வாதிக்கு படபட கேரக்டர்.. காதலிக்கும்வரைக்கும் விட்டுவிட்டுப் பேசுபவர், அதற்குப் பிறகு நேரெதிராக பொரிந்து தள்ளுகிறார். ஜெய் ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க அந்த நேரத்திலும் காதலைப் பற்றியும், தன்னைச் சந்திக்காத்து பற்றியுமே பேசி டென்ஷனை கூட்டுகிறார். அடி வாங்கி சிவந்து போயிருக்கும் கன்னத்தைப் பார்த்து “அது யாரோட லிப்ஸ்டிக்..? எவ கொடுத்தா..?” என்று ஸ்வாதி கேட்கும் அந்தக் காட்சியில் சீரியஸை மறந்து சிரிக்க வைத்துவிட்டது இயக்கம்..
வடகறி என்ற கேரக்டரில் எஃப்.எம். பாலாஜி.. அவர் இருக்கும் காட்சிகளிலெல்லாம் பேசிக் கொண்டேயிருக்கிறார். அதில் ஒரு சிலவை புன்னகைக்க மட்டுமே வைக்கிறது. நகைச்சுவைக்கு வசனத்தையும் தாண்டி ஒன்று வேண்டுமாம்..
கனடாவின் தேசிய அழகி சன்னி லியோனுக்குக் கொடுத்த காசுக்கு இங்கேயிருக்கும் நாகுவையோ, ரகசியாவையோ புக் செய்து ஆட வைத்திருக்கலாம்.. அப்படி இப்படி நடந்து போனதெல்லாம் நடனமாம்.. இதெல்லாம் வெட்டிச் செலவு இல்லையா..? இந்தப் படத்தின் மூலம் தோல்வி கிடைத்தால் தயாரிப்பாளர் வருத்தப்படவே கூடாது.. ரசிகர்களையும் திட்டவே கூடாது.. எல்லாம் இவர்களே இழுத்துக் கொண்டதுதான்..!
முதற் பாதியைவிடவும், பிற்பாதியில் விறுவிறுப்பு கூடியிருந்தாலும் ஜெய் மாதிரியான எப்போதும் ஒரே மாதிரியான முகபாவத்துடன் இருப்பவர்களை வைத்து என்னதான் செய்வது..? அந்த ரவிபிரகாஷ் யார் என்கிற சஸ்பென்ஸ் உடையும் இடத்தில் ‘அட’ போட வைத்திருக்கிறார் இயக்குநர். நல்லதொரு இயக்கம். சிற்சில காட்சிகளை பார்க்கும்போது இயக்குநரை வெகுவாகப் பாராட்ட வேண்டும் போல தோன்றுகிறது.
ஜெய்யின் அண்ணனாக நடித்திருக்கும் அருள்தாஸின் நடிப்பும், கேரக்டரும் ரசிக்க வைக்கிறது.. 100 ரூபாயை ஜெய்யிடம் கொடுத்துவிட்டு போகும்போது, மனைவி காய்கறி வாங்க காசு கேட்டவுடன் தம்பிகிட்ட கேட்டிருக்கேன்.. கொடுடா என்று சொல்லிவிட்டு எஸ்கேப்பாவது அல்டிமேட் ஹஸ்பெண்ட்ஸ் லைப்.. சம்பளம் வாங்கியவுடன் அதில் பாதிக்குப் பாதியை வாங்கி தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு அப்பாவியாய்.. இனிமே சம்பளத்தை வாங்கிட்டு அண்ணிகிட்டயே கொடுத்திரு என்று பாசத்துடன் சொல்லிவிட்டுப் போகும்போது அண்ணனா வில்லனா என்று கேட்கத் தோன்றுகிறது.
கஸ்தூரியின் அந்த ஒரு நிமிட பொறுமல் நடிப்பை ஒத்துக் கொள்ளலாம்.. படத்தில் இருந்த ஒரேயொரு நடிப்பு காட்சியும் இதுதான் என்று..! எம்.ஜி.ஆர். போட்டோவை வைத்துக் கொண்டு மக்களை ஏமாத்துறது எப்படி என்று கேட்டு ஜெய்யை மூளைச் சலவை செய்யும் அந்தக் காட்சிதான் படத்தோட டர்னிங் பாயிண்ட்.. அருள்தாஸுக்கு பேர் சொல்லும் படம் இது..!
விவேக் ஷிவா-மெர்வின் சாலமன் என்ற இரண்டு இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். சன்னி லியோன் ஆடும் அந்த ஒத்தைப் பாடலைத் தவிர வேறு பாடல்கள் சகிக்க முடியவில்லை. ரசிக்கவும் முடியவில்லை..! இயக்குநருக்கு மிகப் பெரிய உதவிக்கரம் எடிட்டர் பிரவீன்தான்.. பாராட்டுக்கள்..!
ஜெய் உடனடியாக போலீஸுக்கு போயிருந்தால் இந்தப் பிரச்சினை அன்றைக்கே, அப்போதே முடிந்திருக்கும்.. அதைவிடுத்து தானே திடீரென்று சூப்பர் மேன் ஹீரோவாக அவதாரமெடுப்பது போல மருந்துகளை திருடி குப்பை மேட்டில் போட்டு.. பத்திரிகைகளுக்கு தகவல்களைக் கொடுத்து.. பத்திரிகைகளில் பப்ளிஷ் ஆக வைத்து..  கடைசியில் ரவிபிரகாஷை வெளிக்கொணர ஒரு டிராமாவை போட்டு.. ஆவ்.. என்று கொட்டாவிவிட வைக்கிறது இந்தத் திரைக்கதை..
எழுதி, இயக்கிய புதுமுக இயக்குநர் சரவணராஜன் பாதிக் கிணறைத் தாண்டியிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

0 comments: