நேற்று இன்று - சினிமா விமர்சனம்

23-06-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு சில இயக்குநர்களின் பேச்சை நம்பி அவர்களை பெரியவர்களாக நினைத்துவிடக் கூடாது என்பதை இந்த இயக்குநரும் நிரூபித்திருக்கிறார்.
சாமி, எஸ்.ஜே.சூர்யா வரிசையில் இந்தப் படத்தின் இயக்குநர் பத்மாமகனும் தீவிரமாகச் செயல்பட்டு தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்..!

கற்பனைக் கதை என்று சொல்லப்பட்டாலும் நிஜத்தில் வீரப்பனின் வனவேட்டையில் இருந்துதான் கதை துவங்குகிறது.. வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு, வேறொருவரை வேட்டையாட ஒரு அதிரடிப் படையை காட்டுக்குள் அனுப்புகிறது போலீஸ் தலைமை. டேவிட் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், வீரப்பனைத் தேடி காட்டுக்குள் போனவர், வீரப்பனுக்கே இன்பார்மராக தன்னை மாற்றிக் கொண்டு 20 போலீஸ்காரர்களின் சாவுக்குக் காரணமாகிவிட்டார். அவரை உயிருடனோ, அல்லது பிணமாகவோ கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த 5 பேர் கொண்ட அதிரடிப் படையினருக்குக் கொடுக்கப்பட்ட அஸைன்மெண்ட்..
இவர்கள் காட்டுக்குள் நுழைந்ததும் நடந்த கதையும் நேற்றைக்கு நடந்தவைகள்.. இன்றைக்கு தாமினி என்னும் பெண் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தனித்து காரில் பயணம் செய்கிறாள். வழியில் கார் மக்கர் செய்துவிட அருகில் ஒர்க் ஷாப் வைத்திருக்கும்  விமலிடம் கபினி அணைவரையிலும் தன்னை டிராப் செய்யும்படி சொல்கிறாள். முதலில் மறுக்கும் விமல், பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னவுடன் ஒத்துக் கொண்டு கிளம்புகிறார்.
இந்த இரண்டு டிராவல்களையும் அவ்வப்போது இணைத்து ‘நேற்று, இன்று’, ‘நேற்று இன்று’ சப் டைட்டில்ஸ் போட்டு படத்தை சதையும், கூத்துமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
வீரப்பன் வேட்டை என்கிற விஷயத்தில் அடிப்படை புரிதல்கூட இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம் இது..! போலீஸ் கடைசியாக வீரப்பனை சுட்டுக் கொன்றவுடன் மீடியாக்களிடம் என்ன சொன்னார்களோ அதை வைத்துதான் வீரப்பன் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். வீரப்பனின் வதத்தையும் படமாக்கியிருக்கிறார்கள்.
அதே போலீஸ் சொன்னதுபோலவே வீரப்பன் லட்சணக்கணக்கில் பணம் சம்பாதித்து சில குறிப்பிட்ட இடங்களில் புதைத்து வைத்திருந்தார் என்பதையும் கதையில் பயன்படுத்தியிருக்கிறார்.. வீரப்பன் கூடவே ஒரு போலீஸாக இருந்து டேவிட் துப்பறிந்து தகவல் சொல்லி கடைசியில் அது சொதப்பலாகி, வீரப்பனிடமிருந்து தப்பிவிட்டதாகக் கற்பனை கதையைக் காட்டியிருக்கிறார்கள். அதையும் கொஞ்சமாச்சும் நம்புற மாதிரியிருக்க வேண்டாமா..? வீரப்பன் வரலாற்றை படிக்காமலேயே, தெரிந்து கொள்ளாமலேயே, ச்சும்மா மேலோட்டமாக தெரிந்து அதையே படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இதில்தான் எத்தனை எத்தனை சரசங்கள்.. சல்லாபங்கள்.. ஏன் இந்த செக்ஸுவல் எக்ஸ்ப்ரிமெண்ட்..? காட்டுக்குள்ளேயே இருக்கும் அருந்ததி ஒரு விபச்சாரப் பெண்ணாம். “நான் விபச்சாரின்னு எப்படி கண்டு பிடித்தீர்கள்?” என்று அருந்ததி கேட்டதற்கு “கால் விரல்களில் கடைசி விரல்கள் இரண்டும் ஒன்றோடென்று உரசிக் கொண்டிருந்தால் அவர்கள் இந்த வேலையைத்தான் செய்வார்கள் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுவதாக” பதில் சொல்கிறார்கள் படத்தில். நாட்டு மக்களுக்கு அவசியமான பொது அறிவுதான்..!
வந்த வேலையை விட்டுவிட்டு இந்தப் பெண்ணை போகின்ற இடங்களுக்கெல்லாம் கூடவே அழைத்துச் சென்று சல்லாபிக்கிறதாம் தமிழக போலீஸின் சிறப்பு அதிரடிப் படை.  அதிலும் சல்லாபத்திற்கு காண்டம் வேண்டுமே என்பதை அந்தப் பெண்ணே ஒரு கதை சொல்லி ஞாபகப்படுத்துகிறாள்.. நல்லாயிருக்குய்யா கதை..!
ஒரு பாக்கெட் இல்லை.. கை நிறைய பாக்கெட்டுகளை அள்ளி நீட்டி “படுக்க வாடி” என்கிறார் தமிழக போலீஸின் சிறப்பு அதிரடிப் படையின் கேப்டனான அந்த வயதானவர். ஆஹா.. அபாரமான திரைக்கதை.. அடுத்தடுத்து அந்த 5 பேரில் 4 பேர் அந்தப் பெண்ணுடன் சுகிக்கிறார்கள். ஒரு முறை அல்ல.. பல முறை.. தொடர்ந்து கூடவே அழைத்துப் போகிறார்களாம்..
இந்தக் கதையில் இத்தனை காம நெடி என்றால் அடுத்த விமல்-தாமினி கதையிலும் இதேதான்.. விமல் எப்போதுமே வுமனைசராம்.. தண்ணி பார்ட்டியாம்.. வண்டியை எடுக்கும்போதே சரக்கடித்துவிட்டுத்தான் கிளம்புகிறார்.  தாமினி காரில் உட்காரப் போகும்போது பின் சீட்டில் இருந்து ஒரு பெண் எழுந்து “நேத்து ராத்திரி கம்பெனி கொடுத்ததுக்கு காசு கொடுய்யா..” என்கிறார் விமலிடம். தாமினியை காட்டி, “இந்த கிராக்கியை எங்க பிடிச்ச..?” என்கிறாள் அந்தப் பெண். இத்தனைக்கு பிறகும் தாமினி இவரோடு கபினிக்கு புறப்படுகிறாராம்..!
இதோட விட்டுச்சா சனியன்..? தாமினியின் கார் ஒரு பக்கம் நிக்குது. அங்க போய் அதை ரிப்பேர் பண்ணாமல்.. கபினி நோக்கி கார் செல்கிறதாம்.. வழியில் ஒரு இரவில் ஹோட்டலில் தங்கப் போகிறார்கள்.. கபினி அணைக்கட்டுப் பகுதி எங்கே இருக்கு..? யாராச்சும் பொது அறிவு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா..!
கர்நாடகா பகுதியில் இருக்கும் அந்த ஹோட்டலில் கேரளத்து பெண்ணொருவர் வெறும் ஜாக்கெட், பாவாடை அணிந்து ரிசப்ஷனில் உட்கார்ந்து மலையாளம் பேசுகிறாராம்..! என்னவொரு யோசனை பாருங்க இயக்குநருக்கு..?
இப்போ விமல் தாமினியை மடக்கணும்னு அந்த ரிசப்ஷனிஸ்ட்கிட்ட சொல்லியே ரூம் கேக்குறார். தாமினி தான் மட்டுமே அந்த ரூம்ல இருக்க வேண்டும் என்று சொல்ல விமல் மீண்டும் மீண்டும் டிரை செய்கிறார். அத்தனையும் பக்கா ‘டிரிபுள் ஏ’ ரகம். கடைசியில் தாமினி மடியாமல்.. ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் மடிந்துவிடுகிறாள். ‘நேத்து ராத்திரி யெம்மா’ பாட்டை போட்டுவிட்டு ஆடுகிறார்கள்.. சரசமாடுகிறார்கள்.. சல்லாபம் செய்கிறார்கள்..
தாமினியிடம் காசு இல்லாமல் தவிக்கும் சூழல் வர விமல் வெளிப்படையாகவே கேட்கிறார். “கபினியில் கொண்டு போய் இறக்கி விடுகிறேன். ஆனால் அதற்குப் பரிகாரமாக என்னுடன் மூன்று தடவை படுக்க வேண்டும்…” என்கிறார். ஆஹா.. நெத்தியடியான வசனம். இதெல்லாம் உலக சினிமால காட்ட வேண்டிய படம். தாமினி இதுக்கும் ஒத்துக்குறாராம்..! வழில மனசு வெறுப்பாகி தாமினியும் குடித்துவிட்டு விமலுடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போடுகிறார்..!
இங்கே அருந்ததிக்கு ஒரேயொரு கருப்பு பனியன்தான் கடைசிவரையிலும் காஸ்ட்யூம்.. கடைசிவரையிலும் உடன் வரும் ஒரு பெண்ணுக்கு தங்களுடைய பேண்ட் சட்டையை அணியக் கொடுப்போம் என்ற எண்ணமே இல்லை.. சரி. இயக்குநரிடம்தானே இதனைக் கேட்க வேண்டும்..?
வீரப்பன் பதுக்கி வைத்த பணம் இந்த அதிரடிப் படையிடனரிடம் சிக்க தாங்களே பங்கு போட்டுக் கொள்ள நினைக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் ராபர்ட் மட்டும் சேர மறுக்கிறார். இவரே ஒரு சூழலில் கன்னிவெடியில் சிக்கி அபாயத்தில் இருக்கும்போது அதிரடிப் படை தோழர்களே இவரை கைவிட்டுவிட்டுச் செல்கிறார்கள்.. அந்தச் சமயத்தில் டேவிட் வந்து ராபர்ட்டை காப்பாற்றுகிறான்.
டேவிட் நடந்த கதைகளைச் சொல்ல இவர் மீது தவறில்லை என்பதை உணர்ந்த ராபர்ட் டேவிட்டை தங்களது டீமிடம் அழைத்துச் செல்ல அங்கே நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் டேவிட் கொல்லப்படுகிறான். மொத்த டீமும் டேவிட் உடலை அங்கேயே புதைத்துவிட்டு கேம்ப்புக்கு கிளம்புகிறது.. வழியிலேயே தன்னுடைய பங்கு பணம் களவாடப்பட்டதை அறிந்து பரணி டீம் மேட்டுகளுடன் சண்டையிட.. இவர்களது சொத்துப் பிரச்சினை,  உயரதிகாரியின் பார்வைக்குச் செல்கிறது.
இங்கேதான் திடீர் திருப்பம்.. இதுவரையில் இவர்களுடன் செக்ஸ் சல்லாபம் செய்து.. கூத்தடித்த பெண்ணான அருந்ததி, ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாம்.. இவர்களை வேவு பார்க்க போலீஸ் தலைமையே அனுப்பி வைத்த பெண்ணாம்.. அப்படி போடு அருவாளை..!! தமிழக காவல்துறையினர் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இந்த ‘நேற்று இன்று’ என்பதற்கு இதைவிட பெரிய காரணம் ஏதும் சொல்லமுடியாது..!
இன்னொரு பக்கம் விமலுடன் வந்த தாமினிதான் டேவிட்டின் தங்கச்சியாம்.. இந்த டேவிட்டின் தங்கச்சிக்காக பரணியின் பங்காக கிடைத்த பணத்தை எடுத்து டேவிட்டின் கல்லறை அருகிலேயே மறைத்து வைத்திருப்பதை கடிதமாக எழுதியனுப்பியிருக்கிறார் ராபர்ட். அதைத்தான் தாமினி எடுக்க வந்திருக்கிறாராம்..
பணத்தை எடுத்துவிட்டு விமலுக்கு தேங்க்ஸ் சொல்லும் தாமினியிடம் மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்துகிறார் விமல். “3 முறை படுக்கணும்..” என்று..! “அது இப்போ எனக்குத் தேவையில்லை..” என்று சொல்லி பணத்தையும் கொடுத்துவிட்டு முன் சீட்டில் இடத்தையும் பிடிக்கிறார் தாமினி.. அதாவது விமலை காதலிக்கிறாராம் தாமினி.. இது எப்படி இருக்கு..?
விமல் இது போன்று இன்னும் ஒரு படத்தில் நடித்தால் போதும்.. டோட்டல் இமேஜ் காலிதான்..! ஏதோ வித்தியாசம் தேவைதான்.. ஆனால் ஒரிஜினல் கேரக்டரே காணாமல் போகுமளவுக்கு இந்த அளவு ரிஸ்க் இவருக்குத் தேவைதானா..?
உருப்படியாய் நடித்திருப்பது அருந்ததியும், தாமினியும்தான்.. அந்தச் சின்ன கருப்பு பனியனில் எந்த அளவுக்கு கவர்ச்சியைக் கொட்ட வேண்டுமோ அத்தனையையும் காட்டியிருக்கிறார் அருந்ததி.. பெரிய நடிகைகளை பேச பயப்படும் வசனங்களை பயப்படாமல் பேசி நடித்திருக்கிறார். இதனாலேயே தான் கவனிக்கப்படலாம் என்று நினைத்துவிட்டார் போலும்..!
தாமினியாக நடித்திருக்கும் மனோசித்ராவுக்கும் ரொம்பவும் தைரியம்தான்.. அவரையே செக்ஸ் அப்பீலாக பார்க்க வைத்திருப்பதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.. இந்தப் புயலில் சிக்கினால் மீள்வது கடினம் என்பதை புரிந்து கொண்டால் சரி..
டேவிட்டாக சில நிமிடங்களே வந்தாலும் கச்சிதமான கேரக்டர் பிரசன்னாவுக்கு. இவர் மட்டுமே இந்த செக்ஸ் அப்பீல் கேஸில் தப்பிவிட்டார்… ஹரீஷுக்கும், ரிச்சர்டுக்கும் இடையில் இருக்கும் பனிப்போருக்கும் ஒரு சல்லாபமே காரணமா இருக்கிறது என்பதை பார்க்கும்போது இயக்குநரின் செக்ஸ் பற்றுதல் நம்மை புல்லரிக்க வைக்கிறது..!
மலையாள சினிமாக்களில் தமிழர்களை ‘பாண்டி’ என்று சொல்லி கேவலப்படுத்துவதாக பலரும் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். சம்பந்தமேயில்லாத கர்நாடக பகுதியில், கேரளத்து பொண்ணு இப்படி அரைகுறை டிரெஸ்ஸில் தண்ணியடித்துவிட்டு. ரூம் போட வந்தவுடன் சல்லாபிக்கும் அளவுக்கு இருக்கிறாள் என்று காட்டுவது கேரளத்து மக்களை கேவலப்படுத்துவது போலாகாதா..? என்னவோ போடா மாதவா..?
நேரடியாக செக்ஸ் படங்கள் எடுப்பது ஒரு வகை.. ஆனால் மறைமுகமாக அதையே மையக் கருவாக வைத்து படம் பார்க்கும் விடலைகளை தியேட்டருக்கு இழுப்பதும், காமத்தை போதிப்பதுமே திரைப்படம் அல்ல.. இதில் திணிக்கப்பட்டிருக்கும் செக்ஸ் காட்சிகளுக்காக இந்தப் படத்துக்கு 4 ஏ சர்டிபிகேட்டுகள் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டப்படி ஒன்றுதான் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்பதால் அதுதான் கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் பத்மாமகன் ஏற்கெனவே இயக்கிய ‘அம்முவாகிய நான்’ திரைப்படத்திலும் செக்ஸ்தான் படத்தின் அடிப்படை கருவாக இருக்கும். இதுவும் இப்படியே..! “இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள்.. நான் எதையும் கட் செய்ய மறுத்துவிட்டேன்.. பரவாயில்லை கொடுங்க என்று சொல்லி வாங்கிக் கொண்டேன்..” என்றெல்லாம் பெருமையாகவே பேசினார் இயக்குநர் பத்மாமகன். இதைக்கூட போனால் போகிறதென்று விட்டுவிடலாம்.. ஆனால், “இந்தப் படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை…” என்பதை ஏதோ தேசியக் குற்றம்போல புலம்பியதைத்தான் ஏற்க முடியவில்லை..!
இது மாதிரியான திரைப்படங்களுக்கு எதற்காக தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்..? ஏன் இது மாதிரியான திரைப்படங்களை ரசிகர்களின் பார்வைக்குக் கொண்டு போக வேண்டும்..?
இதனை பார்க்காமல் இருப்பதும் நல்லதுதான்..!

1 comments:

ம.தி.சுதா said...

பாவம் சமுத்திரியா லட்சணத்தால் இயற்கையாக அமைந்த எத்தனை அப்பாவிப் பெண்களின் வாழ்க்கை நாசமாகப் பொகுதோ தெரியல..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM