முண்டாசுப்பட்டி - சினிமா விமர்சனம்

16-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குறும்படங்களெல்லாம் முழு நீள சினிமாக்களாக உருப்பெற்று வெற்றி பெற்ற வரிசையில் அடுத்தது இந்தப் படம்தான்..! ஒரு சின்ன விஷயத்தை வைத்து இரண்டரை மணி நேர நகைச்சுவை கதம்பமாக கொடுத்திருப்பதற்கு முதற்கண் இயக்குநருக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..! குறும்படமாக நாம் தொலைக்காட்சியில் பார்த்தபோது இருந்த வீரியத்தைவிட பல மடங்கு பெரிய திரையில் தெரிகிறது.

  

சத்தியமங்கலம் அருகேயுள்ள முண்டாசுப்பட்டி என்ற கிராமத்தில்தான் படம் துவங்குகிறது. சுதந்திர காலக்கட்டத்திற்கு முன்பு அந்த ஊருக்கு வரும் ஒரு பிரிட்டிஷ்காரர் அவ்வூர் மக்களை புகைப்படமெடுக்கிறார். அப்படி புகைப்படமெடுத்த நேரத்தில் ஒரு பெண்மணி இறந்து போகிறார். தொடர்ந்து அந்த ஊரில் கொள்ளை நோய் என்ற அம்மை அசுர வேகத்தில் பரவி பலரும் இறந்து போகிறார்கள். இதெல்லாம் ‘தெய்வக் குற்றம்’ என்று நம்புகிறார்கள் மக்கள்.

அந்த ஊரின் காவலனான சாமி சிலையை ஒரு நாள் நள்ளிரவில் கள்வர்கள் திருடுகிறார்கள். அதனைத் தடுக்க மக்கள் போராடும் நேரத்தில் விண்ணில் இருந்து பறந்து வரும் விண் கல் ஒன்று அந்தக் கொள்ளையர் கூட்டத்தின் தலைவனைத் தாக்க அவன் ஸ்தலத்திலேயே மாண்டு போகிறான். உடனேயே அந்தக் கல்லை பீடத்தில் வைத்து ‘விண் சாமி’ என்று வணங்கத் துவங்குகிறார்கள்.

மீண்டும் ஒரு நாள் அந்த பிரிட்டிஷ்காரர் அவ்வூருக்கு திரும்ப வந்து புகைப்படமெடுக்க.. அவரை கல்லால் அடித்து விரட்டுகிறார்கள் மக்கள். அதிலிருந்து அந்த ஊரில் இருக்கும் யாரும் தங்களை புகைப்படமெடுக்க அனுமதிப்பதில்லை. ஆனால் ஒரு மனிதர் இறந்து பின்பு அவருடைய நியாபகமாக அப்போது மட்டும்... பிணத்தை மட்டும்.. புகைப்படமெடுக்க அனுமதிக்கிறார்கள்.

இந்தச் சூழல் இப்படியே இருக்க.. பக்கத்தில் இருக்கும் சத்தியமங்கலத்தில் ‘ஹாலிவுட் ஸ்டூடியோ’ என்ற பெயரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கிறார் ஹீரோ விஷ்ணு விஷால். துணைக்கு காளி. 

சத்தியமங்கலம் அருகேயுள்ள பள்ளியொன்றில் பிளஸ் டூ படிக்கும் மாணவிகளை புகைப்படம் எடுக்கும் பெரிய ஆர்டர் இவர்களுக்குக் கிடைக்கிறது. ஒழுக்கமாக புகைப்படம் எடுக்க வந்த ஹீரோ, அங்கே படித்துக் கொண்டிருக்கும் கலைவாணி என்கிற ஹீரோயின் நந்திதாவைப் பார்த்த்தும் புத்தி பேதலித்துப் போகிறார். தமிழ்ச் சினிமா கலாச்சாரத்தின்படி பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆனால் ஹீரோயின் புகைப்படம் எடுக்க வராமல் எஸ்கேப் ஆகிறார். 

எடுத்த புகைப்படங்களை அனைத்து மாணவிகளுக்கும் கொடுக்கத் திரும்பவும் பள்ளிக்கு வரும் ஹீரோவுக்கு, அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. “ஹீரோயினுக்கு அடுத்த வாரம் கல்யாணம். அவ இனிமே ஸ்கூலுக்கு வர மாட்டாள்..” என்கிறாள் அவளது தோழி. பேஸ்தடித்துப் போன நிலையில் பிக்காலியாகிறார் ஹீரோ.

இப்படியே விட்டால் கதையை நகர்த்த வேண்டுமே..? முண்டாசுப்பட்டி ஊரில் இருந்து ஒருவர் புகைப்படமெடுக்க அவர்களை வருந்தி, வருந்தி அழைக்கிறார். கிடைக்கிற வேலையை பார்ப்போம் என்ற எண்ணத்தில் அங்கே செல்லும் நமது புகைப்படக் கலைஞர்களுக்கு இரண்டு அதிர்ச்சி காத்திருக்கிறது. 

ஒன்று.. அந்த ஊர் தலைவரின் உயிர் இழுத்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் சாகவில்லை. அவர் சாகும்வரையில் காத்திருந்து, செத்தவுடன் அவரை புகைப்படமெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை. இரண்டாவது அதிர்ச்சி ஹீரோவுக்கு மட்டும் இனிக்கிறது.. ஹீரோயின் அந்த இழுத்துக் கொண்டிருக்கும் தலைவரின் பேத்தி..! ஹீரோயினை பார்த்தவுடன் ஹீரோ அந்த ஊரிலேயே டேரா போடும் மூடுக்கு வந்துவிடுகிறார். 

இன்னொரு பக்கம் பக்கத்து ஊர் ஜமீன்தாரரான ஆனந்த்ராஜ் பழைய காலத்து சிலைகளையும் புராதனப் பொருட்களையும் கடத்தி விற்பனை செய்வதில் விற்பன்னர். அவரிடத்தில் முண்டாசுப்பட்டி மக்களிடம் முன்னொரு காலத்தில் கல்லடி வாங்கி ஓடிய பிரிட்டிஷ்காரரின் மகன் வருகிறார். தன்னுடைய அப்பா அந்த ஊரில் இருந்து வரும்போது அங்கேயிருந்த கோவிலின் சாமி கல்லின் ஒரு பகுதியை கொண்டு வந்தார். அதனை இப்போது சோதனை செய்து பார்த்ததில் அதில் பல அரிய காணக் கிடைக்காத தனிமங்கள் இருப்பது தெரிகிறது. அந்த விண் கல்லை களவாடிக் கொடுத்தால் அதற்காக 80000 பவுண்டுகள் கொடுப்பதாக ஆசை காட்டுகிறார். ஆனந்தராஜும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.

முண்டாசுப்பட்டியில் ஊர்த் தலைவர் ஒரு வழியாக இறந்துபோக புகைப்படமெடுக்கும் படலம் நடக்கிறது. இந்தப் புகைப்படத்தை பிராசஸ் செய்யும்போதுதான் அது தெளிவாக எடுக்கப்படவில்லை என்பது இருவருக்கும் புரிகிறது. என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். கடையில் தீ வைக்கவும் முயல்கிறார்கள். அதுவும் பலனளிக்கவில்லை. கடைசியாக ஆபத்பாந்தனாக வருகிறார் முனீஸ்காந்த் என்கிற ராம்தாஸ்.

கோடம்பாக்கத்தில் மிகப் பெரிய நடிகனாக வலம் வர வேண்டும் என்கிற ஒற்றைக் குறிக்கோளோடு அலைந்து கொண்டிருப்பவர். அவரை சினிமாவுக்காக புகைப்படம் எடுக்கும்போது திடீரென்று ஒரு யோசனை வர.. பாரதிராஜாவிடமிருந்து போன் வருவதுபோல செட்டப் செய்து ஒரு படத்தில் பிண வேடத்தில் நடிக்க ஆள் வேண்டும் என்று பாரதிராஜா கேட்பதாக முனீஸ்காந்திடம் பற்ற வைக்கிறார்கள். அவரும் நான்தான் அந்த வேடத்தில் நடிப்பேன் என்று ஒற்றைக் காலில் நிற்க.. அவரை பிணமாக நடிக்க வைத்து அந்தப் புகைப்படத்தை கொண்டு போய் முண்டாசுப்பட்டிக்காரர்களிடம் கொடுக்கிறார்கள்.

ஹீரோயினின் பார்வை பட வேண்டும் என்பதற்காகவே சாப்பிடும்போது அவரை அடிக்கடி கூப்பிட்டு, கூப்பிட்டு தொல்லைபடுத்திய இவர்களுக்கு ஆப்படிக்க அப்போதுதான் வீட்டுக்குள் வருகிறார் முனீஸ்காந்த். “சித்தப்பா” என்ற கதறலோடு உள்ளே வந்து அவருடைய புகைப்படத்தை பார்த்தே கதறுபவர் அங்கே சாப்பிட்டு கொண்டிருக்கும் ஹீரோவையும், காளியையும் பார்த்ததும் அதிர்ச்சியாகிறார். அடுத்த நொடியே அந்தப் புகைப்படத்தில் இருப்பது தான்தான் என்பதையும் தெரிந்து கொள்ள..

பாதி சாப்பிட்டிலேயே தப்பிக்க நினைத்து பைக்கை பத்துகிறார்கள். அவர்களது பைக் சைக்கிளைவிட மெதுவாகச் செல்ல ஹீரோயினின் தம்பியாலேயே பிடிபடுகிறார்கள். வீட்டு முன்பாக கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கும் இவர்களைப் பார்த்து பரிதாபப்படும் ஹீரோயின், அவர்களின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு பைக் சாவியையும் கொடுத்து தப்பியோடும்படி சொல்கிறாள்.

ஆனால் ஹீரோ முடியாத மனநிலையில் இருக்கிறார். மறுநாள் காலையிலும் அவர்கள் அதே ஊரில் இருக்க.. பஞ்சாயத்து கூடுகிறது.. அவ்வூர் வழக்கப்படி ஏற்கெனவே கோவிலின் விண்ணு சாமியைக் களவாட வந்தவனின் கையை உடைத்து அனுப்பியதுபோல இவர்களுக்கும் நடக்க ஆகம காரியங்கள் நடக்கின்றன. 

ஆனால் உத்தரவு கொடுக்க வேண்டிய கோவில் மணி, காற்றடித்தும் அடிக்காமல் அதற்குள் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு பல்லிகள் ராஜதந்திர முயற்சியாக தடுக்க தெய்வம் இதற்கு உத்தரவு தரவில்லை என்று சொல்லி.. இவர்களுக்கு வேறு மாதிரியான தண்டனையைக் கொடுக்கச் சொல்கிறார்கள்.

“ஊரின் ஒரு இடத்தில் கிணற்றை இருவருமே தோண்ட வேண்டும். தண்ணீர் வந்த பின்புதான் ஊரைவிட்டே போக வேண்டும்...” என்கிறார் ஊர்த் தலைவரான ஹீரோயினின் அப்பா. காளி தப்பிக்க நினைக்க ஹீரோ, ஹீரோயினின் நினைவில் அதற்கு மறுக்கிறார். உடன் இருந்த பாவத்திற்காக காளியும் கிணற்றைத் தோண்டிக் கொண்டேயிருக்க.. இப்போது ஹீரோயினிடம் தன்னுடைய காதலைப் பற்றிச் சொல்லியே விடுகிறார் ஹீரோ. ஹீரோயினுக்கு ஏற்கெனவே படிப்பை பாதியில் நிறுத்தியது பிடிக்கவில்லை.. மாப்பிள்ளையையும் பிடிக்காமல் இருக்கிறது. இந்தச் சூழலில் இந்த லவ் புரோபஸலை ஏற்பதா வேண்டாமா என்கிற குழப்பத்திற்கு ஆளாகிறாள்.  ஹீரோவும் ஹீரோயின் இல்லாமல் ஊரைவிட்டு வெளியேறப் போவதில்லை என்கிற கொள்கையில் இருக்கிறான்.

ஹீரோ எப்படி ஹீரோயினின் கரம் பிடிக்கிறான் என்பதும், அந்தக் கிராமத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதும்தான் மிச்சம் மீதிக் கதை..!

முதல் பாராட்டு இயக்குநருக்கு. முதல் முறையாக பெரிய திரையில் இயக்குநராக அறிமுகமாகுபவர்களுக்கு காட்சியமைப்புகளிலேயே நகைச்சுவையைக் கொண்டு வரும் கலை அத்துப்படி என்றால் நிச்சயம் அவர்கள் கவனிக்கத்தக்கவர்கள். அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநரையும் வெகுவாகப் பாராட்ட வேண்டும். காட்சிகளிலேயே நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஹீரோ விஷ்ணு விஷால் தொடர்ந்து இது போன்ற கதைகளின் நாயகனாக நடித்து வெற்றி பெற வேண்டும்.. வழக்கமான காதலனாக.. காதலிக்கு ஏங்கும் ஆண்மகனாக.. இயல்பைத் தொலைத்துவிடாமல் நடித்திருக்கிறார். டயலாக் டெலிவரியிலும் கச்சிதம்.. இவருக்குத் துணை நின்ற காளியின் மைண்ட்வாய்ஸ் டயலாக்குகள் பல கைதட்டல்களை அள்ளினாலும் சிலவைகள் கொஞ்சம் சலிப்பைத் தந்ததென்னவோ உண்மை.

படத்தில் மெச்சத் தகுந்த கண்டுபிடிப்பு முனீஸ்காந்த்தாக நடித்த ராம்தாஸ்தான்.. மனிதர் இத்தனை நாளாய் எங்கேயிருந்தார் என்று தெரியவில்லை. இவர் வருகின்ற காட்சிகளெல்லாம் காமெடி பட்டாசுகள்தான்.. தன்னுடைய புகைப்படத்தை பார்த்துதான் தான் அழுகிறோம் என்பதை உணர்ந்தவுடன் அவர் காட்டும் முகபாவனையில் துவங்கிய காமெடி கடைசிவரையிலும் இவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் கை தட்ட வைக்கிறது.. 

சாமி கல்லைத் தேடி பழைய பள்ளிக்கூடம் பக்கம் இவரை அனுப்பச் சொல்லி யாரும் சொல்லாமலேயே பார்வையாலேயே புரிந்து கொண்டு தவிக்கிறார் பாருங்கள்.. அவருடைய ஆக்சனிலேயே சிரிப்பினால் நமக்கு பொறை ஏறுகிறது. கிணத்துக்குள் மாட்டிக் கொண்டுகூட இவரால் இப்படியெல்லாம் பேசி சிரிக்க வைக்க முடிகிறதெனில் ஒரு ரவுண்டு வருவதற்குத் தகுதியானவர் என்றே இவரைச் சொல்லலாம்.

நந்திதாவின் குளோஸப் ஷாட்டுகளே அவரது அழகை பறைசாற்றுகிறது. பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லையென்றாலும் கொடுத்ததை நிறைவாகவே செய்திருக்கிறார். ‘அட்டக்கத்தி’போல் இங்கேயும் அல்வா கொடுத்துவிடுவாரோ என்றெல்லாம் நினைக்க வைத்து கொஞ்சம் அலைக்கழித்திருக்கிறது இவரது கேரக்டர் ஸ்கெட்ச்.. பாடல் காட்சிகளில் இவரை இன்னமும் அழகாக்க் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர். படத்தின் துவக்கத்தில் வரும் காட்சிகள் ஒளிப்பதிவில் மெருகேற்றப்பட்டிருந்தாலும் கொள்ளை அழகு.. 

ரொம்ப நாள் கழித்து என்றாலும் ஆனந்த்ராஜின் நடிப்பை அவரே ஸ்கிரீனில் பார்த்தால் சொக்கித்தான் போவார். பழைய கல்லை கொண்டு வந்து கொடுத்து நடிக்கும் ஆளை பரேடு எடுக்கும் ஒரு காட்சியிலேயே மனிதர் சிரிக்க வைத்துக் கொல்கிறார். பூனை சூப் கொடுக்கும் ஆள் அந்தத் துப்பாக்கியை தள்ளிவைத்துவிட்டு கப்பை வைப்பது மிக யதார்த்தமான நகைச்சுவை. 

கிளைமாக்ஸில் ஆனந்த்ராஜின் வீட்டிற்குள் வந்து சிக்குவதும்.. பின்பு தப்பிக்க முயல்வதும், கல்லைக் கடத்துவதும் அக்மார்க் காமெடிகள்.. பூனை சூப் எதற்கு என்று கேள்விப்பட்டு காளி சொல்லும் அந்த டயலாக்குதான் படத்தின் ஒட்டு மொத்த கைதட்டலையும் வாங்கிவிட்டது..!

படம் 1982-களில் நடப்பதால் அதற்கேற்றாற் போன்ற காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதால் அதிகமாக வெளிப்புறக் காட்சிகளை அமைக்காமல் பார்த்துக் கொண்ட இயக்குநருக்கும், முடிந்த அளவுக்கு சிறப்பாக அக்கால கிராமத்தினை கண் முன்னே கொண்டு வந்த கலை இயக்குநருக்கும் பாராட்டுக்கள்..

இவ்வளவு நல்ல படத்தில் திருஷ்டிப் பொட்டாக இருந்தது ஊரில் இருக்கும் பெட்டிக்கடைக்காரரின் மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகளும், அந்த ஊர் சாமியாரின் கதையும்தான்.. இதனைத் தவிர்த்திருக்கலாம். அல்லது திரைக்கதையை மாற்றியிருக்கலாம். ஆனாலும் அந்தச் சாமியாரை வைத்தே படத்தை முடிக்க வைத்திருப்பதும், கிளைமாக்ஸில் ஊர் மக்களை திரும்பி ஓட வைக்க விஷ்ணு செய்யும் செயலும் திரைக்கதையின் வெற்றியைச் சொல்கிறது..

மூட நம்பிக்கைகள்.. சாமி குத்தம்.. விண் கல்லு.. சாமியார்.. தலித் மக்கள் பிரச்சினை என்று பலவும் இருந்தாலும், இது எதனையும் தப்பு என்றும், சரி என்றும் சொல்லாமலேயே படத்தின் மையக்கரு இதுவல்ல என்பதாகச் சொல்லி படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர்.

கிடைத்த ஒரு வாய்ப்பில் சுடுகாட்டில் குடியிருப்பவரின் வழிகாட்டுதலில் விண்ணு சாமி கல்லை ஒளித்து வைப்பதும், பின்பு அது கையில் கிடைத்தவுடன் அதனை அந்த தலித்திடமே கொடுத்து கொண்டு போய்க் கொடுக்கச் சொல்ல.. “நான் இதைத் தொடவே கூடாதுன்னு சொல்வாங்க.. நான் கொண்டு போனா பிரச்சினையாயிருமே...?” என்று அவர் சொல்கிறார். “இது கோவிலுக்குள்ள இருக்கிறவரைக்கும்தான் சாமி.. இப்போ வெறும் கல்லுதான்.. தூக்கிட்டுப் போ..” என்கிறார் விஷ்ணு. இந்த அளவுக்கு சென்சாரில் விட்டதே பெரிய விஷயம்.

ஷீன் ரோல்டனின் பாடல்கள் இசையைவிடவும், பின்னணி இசை சூப்பர்.. காமெடி காட்சிகளுக்கேற்றாற் போன்று மெல்லிய இசையைத் தவழவிட்டு வசனங்களை இறுதிவரையிலும் கேட்க வைத்து கைதட்டல் வாங்க வழிவகை செய்திருக்கிறார். நன்றிகள் ஸார்..!

குறும்பட இயக்குநர்களுக்கு என்ன தெரியும்.. என்ன தெரியும் என்றெல்லாம் கேட்பவர்களுக்கு வரிசையாக பதில் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள் அந்த இயக்குநர்கள். கடைசியாக ரமேஷின் சூப்பரான இயக்கத்தில் ‘தெகிடி’ படமும் ஹிட்டானது. இப்போது இந்தப் படமும் உறுதியான ஹிட்டுதான்.. 

படத்தின் தயாரிப்பாளரான திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமாரின் தன்னம்பிக்கைக்கு நமது வாழ்த்துகள்..! 

முண்டாசுப்பட்டி அவசியம் பார்க்க வேண்டிய படம்.. மிஸ் பண்ணிராதீங்க மக்களே..! 

3 comments:

ம.தி.சுதா said...

அந்தக் குறும்படத்தையே வெறித்தனமாகப் பார்த்துச் சிரிந்த நான் இதை தவற விடுவேனா நன்றி அண்ணா

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM

Unknown said...

"முண்டாசுப்பட்டி அவசியம் பார்க்க வேண்டிய படம்.. மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!"

பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

பார்த்து விடுகிறோம்.....



Unknown said...

Good film