Showing posts with label திஹார் ஜெயில். Show all posts
Showing posts with label திஹார் ஜெயில். Show all posts

தவித்த கனிமொழி... தழுதழுத்த கருணாநிதி...!

25-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜூனியர்விகடனில் எப்போதும் தனியாக எழுதப்படும் கனிமொழியின் ஜெயில் வாசம் பற்றிய கட்டுரை, இந்த முறை அதிசயமாக கழுகாரின் வாயில் இருந்து வருவதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரத்திற்காகவா.. அல்லது வித்தியாசத்திற்காகவா என்று தெரியவில்லை..! ஆனாலும் இதுவும் நன்றாகத்தான் எழுதப்பட்டுள்ளது..

இனி படியுங்கள்..!
கழுகார் உள்ளே நுழையும்போது, அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்-கள் அடுத்​தடுத்து வந்துகொண்டே இருந்தன. ''எல்லாம் டெல்லியில் இருந்து!'' என்றார் சுருக்கமாக!
 
 

''காங்கிரஸ் மேலிடம் தி.மு.க-வை நெட்டி வெளியே தள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டது. அதற்கான காரியங்களை மறைமுகமாகத் தொடங்கி​விட்டார்கள். இதைத் தி.மு.க-வும் தெளிவாகவே தெரிந்துகொண்டுவிட்டது!'' என்று ஆரம்பித்த கழுகாரிடம்,

''அதனால்தான் டெல்லி சென்ற கருணாநிதியை காங்கிரஸ் ஆட்கள் யாருமே சந்திக்கவில்லை​யா?'' என்​றோம்.

''கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை காலை​யில் சென்னையில் இருந்து டெல்லிக்குச்சென்றார். அன்று மாலை திகார் சிறைக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். இரவு டெல்லியில் தங்கிவிட்டு, புதன்கிழமை மாலைதான் சென்னை திரும்பினார். இந்த ஒன்றரை நாள் பயணத்தில் அவரை டெல்லியில் சந்தித்த ஒரே காங்கிரஸ் வி.ஐ.பி., மத்திய அமைச்சர் வயலார் ரவி மட்டும்தான். அவரும் ரொம்ப கேஷூவலாக வந்து கருணாநிதியைச் சந்தித்தாராம். மற்றபடி, காங்கிரஸ்​காரர்கள் யாரும் கருணாநிதியை சந்திக்க வரவும் இல்லை... இவர் முயற்சிக்கவும் இல்லை.''

''சொல்லும்!''

''ஆனால், தன்னுடைய கோபம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டிய இடத்தில் தி.மு.க. காட்டிவிட்டது என்பதுதான் உண்மை. கருணாநிதி டெல்லியில் இருந்தபோது, மத்தியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அவர் பேசப் பேச, அங்கே இருந்த தலைவர்களுக்கு குப்பென்று வேர்த்துவிட்டது. 'லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும்’ என்று அண்ணா ஹஜாரே போன்றவர்கள் சொல்ல... அதை ஏற்காமல் மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், 'பிரதமரையும் உறுதியாகச் சேர்க்கவேண்டும்’ என்று டி.ஆர்.பாலு சொன்னால் எப்படி இருக்கும்? 'காங்கிரஸ் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு முன்னதாக, தானே போய்விட ஒரு காரணத்தை தி.மு.க. தேடியது. அதுதான் லோக்பால்!’ என்கிறார்கள். மன்மோகன் சிங்கையும் சோனியா​வையும் சுரீர் எனத் தைக்கிறது, தி.மு.க-வின் கோரிக்கை. யார் முந்திக் கொள்கிறார்கள் என்று பார்ப்​போம்!''

''அடுத்து திகார் காட்சிகளுக்கு வாரும்!''

''துன்பமும் துயரமும் வேதனையும் கலந்த காட்சி அது! 'இந்த வயதான மனிதர் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார், பார்த்தீர்களா?’ என்று கருணாநிதியை டெல்லி விமான நிலையத்தில் பார்த்த இந்திப் பத்திரிக்கையாளர் ஒருவர் வருத்தப்​பட்டாராம். அந்த அளவுக்கு கருணாநிதி டெல்லியில் கஷ்டப்பட்டார். அவரது வழக்கமான வீல் சேரை டெல்லிக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. அதை எடுத்துச் சென்றாலும், ஸ்லோப் உள்ள இடங்களில்தான் அதைப் பயன்படுத்த முடியும் என்பதால், அங்கேயே இருக்கும் வீல் சேரைப் பயன்படுத்திக்கொள்கிறார். திகாருக்கு அவர் சென்றபோது, ராஜாத்தி அம்மாளும் உடன் இருந்தார். கனிமொழியைப் பார்த்ததும் கதறிக் கதறி அழுதிருக்கிறார். கனிமொழியும் கண்ணீர் மல்க அப்பாவைத் தொட்டுச் சமாதானப்படுத்தினார். ஆற்றாமை மிகுதியால் தான் உட்கார்ந்து இருந்த வீல் சேரை இறுக்கமாக கருணாநிதி பிடிக்க... 'அவ்வளவு அழுத்திப் பிடிக்காதீங்கப்பா. கை வலிக்கப்போகுது’ என்று கனிமொழி சொல்லி இருக்கிறார். 'உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலை... இங்கயே ரெண்டு வாரத்துக்குத் தங்கிடலாம்னு இருக்கேன்’ என்று கருணாநிதி சொல்ல... 'வேண்டாம்பா. நீங்க சென்னையிலயே இருங்க’ என்று கனிமொழி மறுத்தாராம். 'தயாளுவும் உன்னைப் பார்க்கணும்னு சொல்றா! அடுத்த தடவை வரும்போது அழைச்சுட்டு வர்றேன்’ என்ற கருணாநிதி, 'பேரன் ஆதியைப் பார்க்கறப்பதான் எனக்கு வருத்தம் அதிகமாயிடுது. அதனால, காலையில ஒரு தடவையும் ராத்திரி ஒரு தடவையும் அவன்ட்ட பேசுறேன்’ என்று சொன்னாராம். இவை அனைத்தையும் கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தாராம் ராஜாத்தி!''

''ம்!''

''அப்போது, கனிமொழி சில கோரிக்கைகளை வைத்துள்ளார். 'சரத் ரொம்ப வருத்தமா இருக்கார். அவரை நீங்க பார்த்து ஆறுதல் சொல்லணும். அதே மாதிரி, ராசாவோட மனைவி பரமேஸ்வரியிடமும் நீங்க பேசணும்’ என்று சொன்னாராம். 'நான் பேசுறேன்மா’ என்று கருணாநிதி சொல்லிவிட்டு வந்தார். கனிமொழியைச் சந்தித்துவிட்டு ஹோட்​டலுக்கு வந்த கருணாநிதி, யாரிடமும் பேசாமல் அமைதியாகவே  இருந்தாராம். அழகிரி வந்த பிறகுதான் கொஞ்சம் சமாதானம் ஆகி, சில வார்த்தைகள் பேசினாராம். தன்னுடைய உடல் நிலை, மனநிலை பற்றி அதிகம் பேசிய கருணாநிதி, 'மக்கள் என்னை சரியாப் புரிஞ்சுக்கலை. அதனால, இப்போ என் மக்களைக் காப்பாத்த முடியலை’ என்று அந்தச் சூழ்நிலையிலும் நயத்துடன் பேசி இருக்கிறார்.''

''சரத், பரமேஸ்வரியைப் பற்றி ஏன் கனிமொழி பேசினார்?''

''மிக மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கலைஞர் டி.வி. சரத்குமாரால் திகாருக்குள் பொழுதைக் கழிக்கவே முடியவில்லை. ஆ.ராசா மூன்று வேளையும் சிறை உணவு சாப்பிடப் பழகிவிட்டார். கனிமொழி ஒருவேளை மட்டும் சிறை உணவு சாப்பிடுகிறார். ஆனால், சரத்குமாருக்கு சிறை உணவு ஒப்புக்கொள்ளவே இல்லை. டெல்லியில் 42 டிகிரிக்கு மேல் அடிக்கும் அனலும் திகாருக்குள் வெம்மையை உண்டாக்கி இருக்கிறதாம். வேனல் கட்டிகள் உருவாக, அதன் எரிச்சல் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் சரத்.

டெல்லியின் மத்தியப் பகுதியில் வசிக்கும் சரத்குமாரின் சகோதரிதான் தினமும் தன் வீட்டுச் சாப்பாட்டை திகாருக்குக் கொண்டுவருகிறார். சமீபத்தில் அவர் சாப்பாடு கொண்டுவந்தபோது, தி.மு.க-வின் எம்.பி ஒருவர் திகாருக்கு வந்தாராம். 'சரத்துக்கும் கலைஞர் டி.வி-க்குக் கைமாறிய 200 கோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணம் கைமாறிய தேதியில் சரத் அதிகாரப்பூர்வமாக கலைஞர் டி.வி-யில் அங்கம் வகிக்கவே இல்லை. இதை எல்லாம் சொன்னால், கலைஞர் குடும்பத்துக்கு சிக்கலாகிவிடும் என்பதால்தான் சரத் அமைதியாக இருக்கிறார். ஆனால், உணவு, உடல் உபாதைகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செலவுக்குக்கூடப் பணம் இல்லாத அளவுக்குத் தவிக்கும் எங்களை, உங்கள் கட்சியும் கைவிட்டுவிட்டது. இனியும் சரத் அமைதியாக இருக்க மாட்டார்!’ என ஆவேசமாக வெடித்தாராம்.''

''அப்புறம்..?''

''சரத்தை எப்படியாவது அப்ரூவர் ஆக்கிவிட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. '200 கோடி கைமாறியதில் உங்களின் பங்களிப்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதே நேரம் உங்களை நிர்ப்பந்தித்த ஆட்களைப்பற்றி நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும்!’ என வற்புறுத்தும் சி.பி.ஐ., அதற்கு கைம்மாறாக சரத்தின் ஜாமீன் கோரிக்கைக்கு உதவுவதாகச் சொல்கிறதாம். சிறையின் சூழ்நிலை பிடிக்காமல் தவிக்கும் சரத், எந்த நேரத்திலும் அப்ரூவர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அவர் வாய் திறந்தால், தி.மு.க-வின் மிக முக்கியத் தலையே  திகாரை நோக்கி வரக்கூடிய இக்கட்டு உருவாகுமாம்!''

''சரத்தை சமாதானப்படுத்தும் படலம் தொடங்கி இருக்குமே?''

''யாருடைய சமாதானத்தையும் ஏற்கிற நிலையில் சரத் இல்லை. தயாநிதி மாறனையே 'பார்க்க மாட்டேன்’ எனச் சொல்லி திருப்பி அனுப்பிய சரத், கருணாநிதியின் சந்திப்பின்போதும் பெரிதாக ஏதும் பேசவில்லையாம். 'எனக்கும் 200 கோடிக்கும் என்ன சம்பந்தம்?’ என சரத் கேட்க, 'இதே கேள்வியைத்தான் என் மகளும் கேட்கிறார். உங்களுக்கே தெரியும்... சினியுக் கம்பெனியில் கடன் வாங்கிய விஷயமே கனிக்கு தெரியாது. அதனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் ஆலோசனை நடத்தியபோதுதான், கனிமொழிக்கு விஷயம் தெரியும். உங்க இரண்டு பேருடைய சூழ்நிலையும் ஒன்றுதான்!’ என உருகினாராம் கருணாநிதி. சிறையில் கனிமொழியுடன் மட்டுமே சரத் பேசுகிறாராம். ஆ.ராசாவின் முகத்தை அவர் திரும்பிக்கூட பார்ப்பது இல்லை. கனிமொழிக்குத் தேவையான உடைகள்கூட சரத்குமாரின் சகோதரி வீட்டில் இருந்துதான் வருகிறது. கனிமொழியின் சமாதானத்துக்கு மட்டுமே சரத் கட்டுப்படுகிறாராம். சரத் உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் நிலையை கருணாநிதியிடம் சொன்ன கனிமொழி, 'அவரை சமாதானப்படுத்துவது சிரமம்’ எனச் சொன்னாராம்.''

''பரமேஸ்வரி விஷயம்?''

''ஆ.ராசாவின் மனைவியான பரமேஸ்வரி அதிகப் பயத்தில் இருக்கிறார். 'தன்னுடைய கணவர் சிக்க​வைக்கப்​பட்டுள்ளார்’ என்ற சந்தேகம் பலமாக இருக்கிறது. அதைத்தான் பேசி சமாதானப்படுத்தச் சொல்லி இருக்கிறாராம் கனிமொழி!'' என்ற கழுகார், அருகில் இருந்த ஐஸ் வாட்டரில் ஒரு 'சிப்’ பருகிவிட்டுத் தொடர்ந்தார்.

''கேபிள் டி.வி-க்களை மொத்தமாக அரசாங்கமே கையில் எடுக்கப்போகிறது என்று நான் உமக்குச் சொல்லி இருந்தேன். 'குறைந்தபட்சம் 30 ரூபாய்வரைக்கும் கொடுத்தால்கூட எனக்கு சந்தோஷம்தான்’ என்று ஜெயலலிதா சொன்னதையும் நான் உமக்கு சொன்னேன். அதன் தொடர்ச்சியாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை கோட்டைக்கு அழைத்துப் பேசினார் முதல்வர். இதில் கோவை யுவராஜ் தலைமையிலான சங்கத்தினரும் கரூர் ஆறுமுகம் தலைமையிலான சங்கத்தினரும் கலந்துகொண்டனர். ஆபரேட்டர்கள் தரப்பில், 'சென்னையில் இருப்பதுபோலவே எல்லா ஊர்களிலும் தமிழ் சேனல்கள் அனைத்தும் இலவசமாகத் தர ஏற்பாடு செய்யவேண்டும். கடந்த ஆட்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கேபிள் தொழிலைவிட்டே போகும் அளவுக்குத் தொல்லைகள் தரப்பட்டன. ஆளும் கட்சியால் தொழில் பாதுகாப்பு இல்லாமல் போனது. எங்களுக்குத் தொழில் பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அரசு கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு மையங்களை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.


எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஜெ., 'அரசின் தொழில்நுட்பப் பிரிவினருடன் கலந்து பேசி, கேபிள் தொழிலுக்கு நல்லது செய்கிறேன்’ என்று உறுதி சொன்னாராம். அதற்கு முந்தைய நாள், தலைமைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், சட்டத் துறை செயலாளர் மூவரும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இரண்டு மணி நேரம் பேசினர். விரைவில் இதற்கான தனிச் சட்டம் வரப் போகிறது. ஆனால், இதில் ஒரு கூத்து நடந்துள்ளதாக இன்னொரு தரப்பினர்  சொல்கிறார்கள்.''

''என்னவாம்?''

''தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநிலத் தலைவரான சகிலன்தான் இதுவரை இந்தப் பிரச்னையை வைத்துப் புயல் கிளப்பி வந்தவராம். எஸ்.சி.வி-க்கு எதிரானவர்களை ஒன்று திரட்டுவார் இவர். ஜெயலலிதா புதிய குரூப் ஒன்றை சந்தித்து இருப்பதைப் பார்த்து, சகிலன் தரப்புக்கு அதிர்ச்சி. 'முதல்வரை சந்திக்கும் தகவல் எங்களுக்குச் சொல்லப்படவே இல்லை. அவர் சந்தித்தது எல்லாமே, புதிதாக உருவான  சங்கங்கள். 'அரசு கேபிளைக் கொண்டு வரக் கூடாது’ என்பதற்காக செயல்படும் சிலர் இது போன்ற சங்கங்களைத் திடீரெனத் தொடங்கி, பின்னால் இருந்து இயக்குகிறார்கள். நாங்கள் முதல்வரை சந்தித்தால் இந்த உண்மை வெளிவந்துவிடும் என்பதால்தான் எங்களைத் தவிர்த்துவிட்டனர். கூடிய சீக்கிரமே முதல்வரை சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்வோம்’ என்று சொல்லி வருகிறாராம்.''

''கேபிள் ஒயர்களைப் போலவே இவர்களும் செம சிக்கலில் இருப்பார்கள்போல!'' என்றோம். சிரிப்புச் சத்தம் வானத்தில் கேட்டது!

நன்றி : ஜூனியர்விகடன்-ஜூன்-29, 2011

டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கோபாலபுரம்..!

30-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கைது செய்யப்படும்வரையிலும் கைதாவாரா என்றெல்லாம் எழுதிக் கொண்டிருந்த ஜூனியர்விகடன், தற்போது டெல்லியில் நடக்கும் குடும்பச் சந்திப்புகளை உருக்கமாக விவரித்து வருகிறது. அது அவர்களுக்குத் தேவைதான் என்று நாம் நினைக்கலாம். சொல்லலாம். ஆனால் பரம்பரை பத்திரிகைகள் அப்படி வெளிப்படையாக எழுத மாட்டார்கள். அது பத்திரிகா தர்மத்திற்கு எதிரானதாம்..!

வழக்கம்போல ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் பதிவு செய்து வைப்பதற்காக மட்டுமே இந்த பாச, அழுகை காவியமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது..! தோழர்கள் பொறுத்தருள்வீராக..!

அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும். திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது.

அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந்தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே...

 சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு 23-ம் தேதி வந்த கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 'மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் சந்திக்கக் கூடாது’ என்பதால், தன் மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி ஆகியோரை அங்கே அனுப்பி வைத்தார் அழகிரி.

கனிமொழி மீது மிகுந்த அன்பு பாராட்டுபவர் கயல்விழி. அதனாலோ என்னவோ... கனிமொழியைக் கண்டதும் 'அத்தே...’ எனக் கதறத் தொடங்கிவிட்டார் கயல். கனிமொழியைத் தோளோடு சாய்த்து காந்தி ஆறுதல் சொல்ல, ராஜாத்தி அம்மாளுக்கும் கண் கலங்கிவிட்டது. மதுரையில் துரை தயாநிதியின் திருமணத்துக்குப் பிறகு, காந்தியும் ராஜாத்தியும் அன்றுதான் சந்தித்தனர். நடுவில் கனிமொழி, இடப்புறம் காந்தி, வலப்புறம் கயல்விழி என அமர்ந்து நிறைய நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.


''இந்த விவகாரத்தில் என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியவே இல்லை அண்ணி. கலைஞர் டி.வி-யில் நான் பங்கு கேட்கலை. கையெழுத்துப் போடச் சொன்னாங்க, போட்டேன்...!'' என காந்தியிடம் கனிமொழி உருக்கமாகச் சொல்ல, ''எல்லாத்தையும் அண்ணன் பார்த்துப்பார். நீ தைரியமா இரு!'' என்றார் அவர் ஆறுதலாக!

கயல்விழியிடம் நெடுநேரம் பேசிய கனிமொழி, சகஜ நிலைக்கு வந்தார். சரத்குமாரின் உறவினர்களிடம், 'தைரியமாக இருங்கள்!’ என கனிமொழியே ஆறுதல் வார்த்தார். ''கோர்ட்டில் விசாரணை தொடங்க இன்னும் நேரம் ஆகுமா?'' என காந்தி அப்பாவியாகக் கேட்க, ''தாமதம் ஆகுறது நல்லதுதான் அண்ணி. உங்களோட இன்னும் கொஞ்ச நேரம் இங்கே பேசிக்கிட்டு இருக்கலாம். இல்லேன்னா, சீக்கிரமே ஜெயில்ல போய்த் தனி ஆளா உட்கார்ந்து இருக்கணும்!'' எனச் சொல்லி கனி சிரிக்க, எல்லோருக்குமே கண்ணில் நீர் கோத்துக்கொண்டது.
 
நீதிமன்ற நிகழ்வுகள் முடிந்து சிறைக்குச் செல்லும் நேரம் வந்ததும், ''ஆதியைப் பத்திரமா பார்த்துக்கோங்க!'' என்றபடியே கையசைத்துக் கிளம்பினார் கனி.

அன்று மாலை திகார் சிறைக்கு கருணாநிதி வர, அங்கே பெரிய பாசப் போராட்டமே நடந்தது. கனிமொழிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, 'நான் டெல்லியிலேயே தங்கிடவாம்மா?’ எனக் கருணாநிதி தழுதழுக்க, 'எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்பா... நீங்க தைரியமாப் போங்க!’ என நம்பிக்கை ஊட்டினார்.

சிறை சந்திப்பு முடிந்தும் கருணாநிதிக்கு சென்னை திரும்ப மனம் இல்லை. ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரிடம், 'சட்ட ரீதியா மேற்கொண்டு என்ன செய்ய முடியும்?’ என்பது குறித்து விசாரித்தார். இதற்கிடையில், அடுத்த நாள் ஸ்டாலின் டெல்லிக்கு வந்தார். சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழியிடம் இந்தத் தகவல் சொல்லப்பட, அவருக்கு நம்ப முடியாத ஆச்சர்யம்.


ஸ்டாலினை சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார் கனி. ''என்னால் அப்பா ரொம்ப சங்கடப்படுறார். அதான் வருத்தமா இருக்கு!'' என்பது மட்டுமே கனி காட்டிய ஆதங்கம். கனி, ஸ்டாலின், ஆதித்யன் மூவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, அதனை ஒருவர் செல்போனில் படம் எடுத்தார். இதில் கடுப்பான ஸ்டாலின், 'அவனைப் பிடிங்கய்யா...’ என்றார் ஆவேசமாக. தி.மு.க. புள்ளிகள் அந்த நபரைத் துரத்திப் பிடித்து அந்தப் படத்தை அழித்தனர்.

அடுத்த கட்ட சட்டரீதியான முன்னேற்பாடுகள் குறித்து சொல்லி, ஸ்டாலின் கனிமொழியைத் தேற்ற, ''அவ்ளோ சீக்கிரம் பெயில் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். சிறையில் இருப்பதை ஒரு புது அனுபவமா நினைச்சு என்னை நானே தேத்திக்கிறேன்!'' என்றார் கனி. ராஜாத்தி அம்மாளும் ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் பேசினார்.

அன்று மாலை... டெல்லி மீடியாக்களுக்கே தெரியாதபடி முக்கியமான ஒரு சந்திப்பு திகார் சிறைச்சாலையில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரியும் தயாநிதி மாறனும் சிறையில் கனியை சந்திக்க அனுமதி கேட்டனர். தயாநிதி மாறன் வந்திருப்பதை, கனியால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை!

ஸ்பெக்ட்ரம் பிரச்னைக்குப் பிறகு தயாநிதியை,  கனிமொழி சந்திப்பதே இப்போதுதான். அழகிரியிடம் மனம்விட்டுப் பேசிய கனிமொழி, தயாநிதியிடம் நலம் விசாரித்தார். அப்போது ஆறுதலாக தயாநிதி சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். இருவரையும் சமாதானப்படுத்தும்விதமாக அழகிரி, குடும்ப விவகாரங்களை உரக்கப் பேசி இருக்கிறார்.

இறுதியில் கனிமொழியைத் தட்டிக் கொடுத்து, ''நானும் சிறைவாசம் அனுபவிச்சவன்தான். ஆனா, அப்போகூட இந்த அளவுக்கு சங்கடப்பட்டது இல்லை. நீ தைரியமாப் பேசினாலும் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா. சீக்கிரமே உன்னை வெளியே எடுத்திடுவோம். குடும்ப ரீதியான அத்தனை கசப்புகளும் நிச்சயம் முடிவுக்கு வந்திடும்!'' எனச் சொன்னாராம். தயாநிதி அதிகம் பேசவில்லை என்றாலும், குடும்ப சமாதானத்துக்கான முதல் முயற்சி அங்கே நிகழ்ந்ததாக அடித்துச் சொல்கிறார்கள் டெல்லிவாலாக்கள்.

அடுத்து நிகழ்ந்த சந்திப்புதான் நம்ப முடியாத ஆச்சர்யம். ஆ.ராசா உடனான சந்திப்புதான் அது. ஆ.ராசா சகஜமாகப் பேசவில்லை என்றாலும், அழகிரியின் ஆறுதல் அவரைத் தெம்பாக்கி இருக்கிறது. தயாநிதி மாறனும் ராசாவுடன் கை குலுக்கி நிறையப் பேசி இருக்கிறார். 'சரத்குமாரை வரச் சொல்லுங்கள். நாங்கள் பார்க்க வேண்டும்!’ என ஆ.ராசாவிடம் சொல்லி அனுப்பினர் இருவரும். 'தயாநிதி மாறனை சந்திக்கும் நிலையில் நான் இல்லை!’ எனச் சரத்குமார் சொல்லிவிட்டதாக டெல்லி நிருபர்கள் வட்டாரம் சொல்கிறது. 

சரத்குமாரின் சகோதரியின் வீடு டெல்லியில்தான் இருக்கிறது. அங்கே இருந்தும்  கனிமொழிக்கும், சரத்துக்கும் சாப்பாடு வருகிறது. துணிமணிகள் பரிமாற்றமும் சரத் மூலமே நடக்கிறது. மூன்று வேளையும் வீட்டு சாப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தும், மதியம் தவிர்த்து இரு வேளைகளும் சிறை உணவைத்தான் கனிமொழியும் சரத்தும் சாப்பிடுகிறார்கள்.

25-ம் தேதி, சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழியை, மு.க.தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின், மோகனா என பெரிய உறவு வட்டாரமே சந்தித்தது.

குடும்ப ரீதியான பிரச்னையில் பெரிய பனிப் போர் நிகழ்ந்தது, செல்விக்கும் கனிமொழிக்கும் இடையேதான். ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு அத்தனை பேர் மத்தியிலும், ''உனக்கு இப்படி ஆயிடுச்சேம்மா'' என செல்வி தழுதழுத்தார். கனிமொழிக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்தது செல்வியின் வார்த்தைகள்தான். செல்வியின் கைகளைப் பற்றியபடியே துர்காவிடம் சிறை வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்  கனிமொழி. அடுத்த சில நிமிடங்களில் முரசொலி மாறனின் மனைவி மல்லிகாவும் அங்கே ஆஜர். ''என்னைப் பார்க்க நீங்க எல்லாம் வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. கெட்டதிலும் ஒரு நல்லதுன்னு சொல்வாங்களே... அதை நினைச்சே மனசைத் தேத்திக்கிறேன்!'' என அவரைப் பார்த்து கலங்கிவிட்டார் கனி.

ஆனால், ராஜாத்தி என்ன நினைத்தாரோ... செல்வி, துர்கா உள்ளிட்ட உறவுகள் வந்த உடனேயே அவர் பட்டும்படாமல் ஒதுங்கிக்கொண்டார்.

உறவுகளின் சந்திப்புகள் குறித்துப் பேசும் தி.மு.க-வின் டெல்லிப் புள்ளிகள், ''கனிமொழிக்கு இந்த அளவுக்கு சிக்கல் வராது என்ற நம்பிக்கையில்தான் ஆரம்பத்தில் உறவினர்கள் பலரும் அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள். கனிமொழியின் பிறந்த நாளுக்குக்கூட வாழ்த்து சொல்லாத அழகிரி, இப்படித் தேடி வந்து சந்தித்ததில், கனி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். குறிப்பாக தயாநிதி மாறனும், செல்வியும்  நேரில் வந்து சந்தித்ததை எங்களால்  இன்னமும் நம்ப முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் இருந்து வெளியே வர, முதலில் குடும்ப மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என தலைவர் நினைக்கிறார். அதற்குத் தக்கபடி குடும்ப உறவுகள் கைகோத்து இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரம், சிறைக்குள் தயாநிதி மாறனை சந்திக்க சரத்குமார் மறுத்ததும், செல்வி, துர்கா ஆகியோருடன் ராஜாத்தி அம்மாள் சரிவரப் பேசாமல் முறுக்கிக் கொண்டு நின்றதும்... குடும்ப மோதல்களை இன்னமும் பெரிதாக்கிவிடும் என்றே தோன்றுகிறது.

'எனக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என சிறைக்குள் புலம்பித் தவிக்கிறார் சரத். இவற்றை எல்லாம் தாண்டி, சட்ட ரீதியாகவும் இன்னும் சில திருப்பங்கள் இருக்கும்....'' என்கிறார்கள் டெல்லி சிறைத் துறை வட்டாரத்தில்!

நன்றி : ஜூனியர்விகடன்-01-06-2011

டெல்லியிலேயே தங்கிடவா…? - மகளிடம் தழுதழுத்த அப்பா..!

27-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு, சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!

தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... என்ற சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது.

கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத்துக்கு அணை போட்டார்கள்.

“கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிறபாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.

'பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியை வாதாட வைத்தால், நிச்சயம் கனிமொழிக்கு பெயில் கிடைக்கும்’ என நம்பினார் கருணாநிதி. ஆனால், ஜெத்மலானியின் வாதமும் கனிமொழியைக் காப்பாற்றாமல் கைவிட்டதுதான் கருணாநிதியின் பெரும் துயரம்.

20-ம் தேதி காலையில் கணவர் அரவிந்தனுடன் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. எம்.பி-க்களுடன் மகளிர் அணியினரும் குழுமி இருந்தார்கள். 'பெயில் மனு நிராகரிக்கப்பட்டால், அடுத்த கணமே கைதாக வேண்டி இருக்கும்!’ என்பதால், மகன் ஆதித்யனை கனிமொழி கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை.

மீடியா வெளிச்சம்படாமல் பையனை வளர்ப்பதில் ஒரு காலத்தில் உறுதியாக இருந்தவர் கனிமொழி. ஆதித்யனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஒரு முன்னாள் அமைச்சரைக் கையெடுத்துக் கும்பிட்டு, 'அவனைப் பெரிய ஆளா ஆக்கிடாதீங்க!’ என வேண்டியவர். ஆனால், கோர்ட்டுக்கு அனுதினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வந்தபோது, மகனோடு வர வேண்டிய இக்கட்டு கனிமொழிக்கு.

20-ம் தேதி மதியம் தீர்ப்பை வாசித்த நீதிபதி சைனி, 'குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. சாட்சி களைக் கலைக்கும் வாய்ப்பும் அதிகம். அதனால், முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது!’ என அறிவிக்க, அரவிந்தனின் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் கனிமொழி.

மகளுக்கு எப்படியும் பெயில் கிடைத்துவிடும் என நம்பி இருந்த ராஜாத்தி அம்மாள் பதறி அடித்து டெல்லிக்குக் கிளம்பினார். ஆனால், அவர் வருவதற்கு முன்னரே, திஹார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி.

சிறைக்குள் போகும் முன்னர் கனிமொழி, அரவிந்தனைக் கூப்பிட, அவர் பதறியடித்து ஓடி வந்தார். 'நான் ஆதித்யனிடம் பேசணுமே...’எனக் குரல் உடைந்து சொல்லியிருக்கிறார் கனிமொழி. அதற்கு போலீஸ் அனுமதி மறுக்க, 'என்னைப் பிரிஞ்சு ஒரு நாள்கூட இருக்க மாட்டான். ஆதிகிட்ட நான் ஸாரி கேட்டதா சொல்லிடுங்க!’ என்றபடியே சிறை வளாகத்துக்குள் போனார் கனிமொழி.

சிறை விதிகளின்படி, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கழற்றிவிட வேண்டும். 'கைப் பையை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், மூக்குத்தியைக் கழற்றிக் கொடுங்கள்!’ என சிறை அதிகாரி சொல்ல, கனிமொழி எதிர்பாரா அதிர்ச்சியில் நிலை குலைந்தது அங்கேதான்.

'அஞ்சாவது படிக்கிற காலத்தில் இருந்து மூக்குத்தி போடுறேன். அவசியம் கழற்றித்தான் ஆகணுமா?’ எனக் கலங்கினார் கனி. மூக்குத்தியை அவ்வளவு சுலபமாகக் கழற்ற முடியவில்லை. தி.மு.க-வின் எம்.பி-க்களான வசந்தி ஸ்டான்லியும், ஹெலன் டேவிட்சனும் போலீஸ் அனுமதி பெற்று உள்ளே போக, அங்கே கனி அமர்த்தப்பட்டு இருந்த கோலம் அவர்களைக் கதற வைத்துவிட்டதாம். சிறை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, கண்ணீர் முட்ட உள்ளே போன கனிமொழி திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகள்... 'ஆதித்யனைப் பத்திரமாப் பார்த்துக்கங்க!’


''திஹார் சிறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன் சி.ஐ.டி. நகருக்கு அழைத்து வரப்பட்டார். சிறை எப்படி இருக்கும், என்னென்ன சாப்பாடு, உள்ளே யாருக்கு அதிகாரம் அதிகம் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
 
அதனால், 6-ம் எண் அறையைப் பார்த்து கனிக்கு பெரிதாக அதிர்ச்சி இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு கூடுதலாக இரண்டு தலையணைகள் கேட்டு வாங்கிக் கொண்டார். இரவு அவர் சரியாகத் தூங்கவில்லை. பெண் அதிகாரி ஒருவர் மூலம் மகனுடைய செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னார். இந்த வருடம் ஆதித்யன் ஆறாம் வகுப்பு சேர வேண்டும். அவனைப் பற்றிய கவலைதான் கனிமொழியை வாட்டுகிறது!'' என்கிறார்கள் டெல்லி தி.மு.க. புள்ளிகள்.

அடுத்த நாள் பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. அதற்கு முன்னதாகவே கோர்ட்டுக்கு வந்து வராண்டாவில் காத்திருந்த ராஜாத்தி அம்மாள் மகளைக் கட்டிப் பிடித்துக் கலங்கினார். ''என்னால்தானே இத்தனையும்...'' என ராஜாத்தி சொல்லி அழ, அவரை அமைதியாக்கி, ரகசியமாக ஏதோ சொன்னார் கனிமொழி. உடனே சரத் ரெட்டியையும் ஆ.ராசாவையும் சந்தித்து ஏதோ பேசினார் ராஜாத்தி அம்மாள். அப்போது, கண்ணீர் மறைந்து... கோபமும் ஆவேசமுமாக இருந்தது அவருடைய முகம்.

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆதித்யனை அழைத்து வர, கனிமொழிக்கு மீண்டும் கண்ணீர் கோத்துக்கொண்டது. ''அம்மா, எப்போ வெளியே வரப் போறேன்னு தெரியலை. பத்திரமா இரு. அம்மாவைப் பார்க்கணும்னு அடம் பிடிக்காதே...'' எனத் தளும்பிய கண்களுடன் கனிமொழி சொல்ல, ''நான் பத்திரமா பார்த்துக்கிறேன். நீங்க தைரியமா இருங்க!'' என ஆறுதல் சொன்னார் பரமேஸ்வரி. டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் அவருடைய மனைவி பரமேஸ்வரியின் பராமரிப்பில்தான் இருக்கிறார் ஆதித்யன்.

காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் கோர்ட்டில் கனிமொழியைச் சந்தித்தனர். 'அண்ணி...’ என அடக்க மாட்டாமல் கனிமொழி விசும்ப, அவரைத் தோளில் சாய்த்துத் தேற்றினார் காந்தி அழகிரி. இதற்கிடையில், ஸ்டாலின் சொல்லி அனுப்பிய ஆறுதலும் கனிமொழிக்கு ஆறுதல் வார்த்து இருக்கிறது.

23-ம் தேதி காலையிலேயே டெல்லி கிளம்பிய கருணாநிதி, திஹாருக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். அங்கே கனிமொழி சில விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கலங்க, 'நான் இங்கேயே தங்கிடவாம்மா?’ என தழுதழுத்திருக்கிறார் கருணாநிதி. விழிகள் துடைத்து தன்னைத்தானே தேற்றிக் கொண்ட கனிமொழி, 'நீங்க கிளம்புங்கப்பா... நான் பார்த்துக்கிறேன். ஆதித்யனை கவனிச்சுக்கங்க!’ எனச் சொல்லி இருக்கிறார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லியில் தற்போது 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக அனல் அடிக்கிறது. மகள் படும் துயரம் பொறுக்காமல் கருணாநிதி எத்தகைய முடிவையும் எடுப்பார் என்கிற நிலையில், டெல்லியின் அனல் இன்னும் அதிகமாகலாம்!

நன்றி : ஆனந்தவிகடன்

கனிமொழி கைது உறுதிதானா..?

05-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை வரும் மே-31 அன்று கோர்ட்டில் தாக்கல் செய்ய இருக்கிறது சி.பி.ஐ. இந்த ஊழல் வழக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு, சட்டப்படி கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், ஆயுள் முழுக்கவும்கூட சிறையில் கழிக்க வேண்டி இருக்குமாம். அதனால், இந்தக் கோணத்திலும் தனியாக வழக்குப் போட ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரிக்கிறது.

யார் இந்த அமிர்தராஜ்?

ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த, மறைந்த சாதிக் பாட்சாவிடம் பி.ஏ-வாக இருந்தவர் அமிர்தராஜ். சாதிக் சம்பந்தப்​பட்ட அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் முழுமையாக விசாரணை செய்ததாக அறிந்து, டெல்லி அதிகாரிகளிடம் பேசினோம்.

''ஷாகித் பால்வாவின் டி.பி. ரியாலிட்டி நிறுவனமும், சாதிக்கின் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனமும் கிட்டத்தட்ட ஒரே நிர்வாகத்தின் கீழ்தான் இயங்கி வந்ததாக அமிர்தராஜ் சி.பி.ஐ-யிடம் சொல்லி இருக்கிறார்.

உலகத் தரத்தில் ஊழியர்கள் வேண்டும் என்பதற்காகவே, நேர்முகத் தேர்வு நடத்தி ஆட்களைத் தேர்வு செய்து கொடுத்து க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு பால்வாவின் மும்பை நிறுவன அதிகாரிகள் உதவி செய்தார்களாம். சாதிக்கின் நிறுவனத்துக்கு பால்வாவின் நிறுவனங்களில் இருந்து பல கோடிகளில் பணப் பரிவர்த்தனையும் நடந்திருக்கிறது.

மும்பைத் தொழிலதிபர்கள் ஷாகித் பால்வாவும், வினோத் கோயங்காவும், தொழில் முறை நண்பர்கள். இருவரும் இப்போது திகார் சிறையில் இருக்கிறார்கள். வினோத்தின் தந்தை கிருஷ்ணன் முராரி, அவரது இளைய சகோதரர் பிரமோத் கோயங்கா ஆகியோரி பின்னணி​களையும் சி.பி.ஐ. தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறது. இவர்களுடன் சாதிக் பாட்சா நெருக்கமான தொடர்பு வைத்திருந்த ஆதாரங்கள் சி.பி.ஐ. வசம் வந்துவிட்டன...'' என்கிறார்கள்.

தாவூத் ஆல்பத்தில் பிரமோத் கோயங்கா

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பலத்த பாதுகாப்புடன் இருந்து​கொண்டு, இந்தியாவில் பயங்கரவாதத்தை ரிமோட்டில் இயக்கி வருகிறார் தாவூத் இப்ராஹிம். அப்படிப்பட்ட தாவூத்தின் இளைய சகோதரன் ஹுமாயுனின் திருமண நிகழ்ச்சியில் முக்கிய விருந்தாளியாக பிரமோத் கலந்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையை மிரட்டிவிட்டு, போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்று பதுங்கிய அபுசலீமை, அந்த நாட்டு போலீஸ் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைத்தது. அபுசலீம் தன் வாக்குமூலத்தில், ஹூமாயூன் திருமணத்தில் பிரமோத் கலந்து கொண்டதைச் சொல்லி இருக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த பில்டர் ராஜேஷ் என்பவரை, கடந்த 2003-ம் ஆண்டு நிழல் உலக தாதாக்கள் சுட்டுக் கொன்றனர். அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், தனது மரணத்தின் பின்னணியில் கிருஷ்ண முராரி இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தாரிக் பாய் என்று அழைக்கப்படும் கராச்சியைப் பூர்வீகமாகக்​கொண்ட தொழிலதிபர் ஒருவர், இந்திய போலீஸாரிடம் பிடிபட்டபோது, 'கிருஷ்ணன் முராரி, வினோத் கோயங்கா, பிரமோத் கோயங்கா ஆகிய மூவருக்கும் தாவூத்தின் 'டி' கம்பெனிக்கும் தொடர்பு உண்டு.  இவர்களின் ரியல் எஸ்டேட் தொழிலில் தாவூத்தின் பணம் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது’ என்றும் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது. அதனால், சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் பிரமோத்தையும் தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வர இருக்கிறார்களாம்.

தயார் நிலையில் 6-ம் எண் சிறை?

 


மே 6-ம் தேதி கனிமொழியும், கலைஞர் டி.வி-யின் நிர்வாகி சரத்குமாரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜ​ராகிறார்கள். அன்றைய தினமே, அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படலாம் என்று டெல்லியில் திடுக்கிடும் வகையில் பேச்சு வலம் வருகிறது.

திஹார் சிறையில் பெண்களுக்கென்று தனியாக 6-ம் எண் சிறை இருக்கிறது. இங்கே 1,200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் இருக்கிறார்கள். 'கனிமொழி கைது செய்யப்பட்டால் இங்கேதான் அடைக்கப்படுவார்’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். இந்த சிறையில் தமிழக போலீஸின் ஆயுதப் படையைச் சேர்ந்த 30 பெண் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கே இரண்டு ஃபைல்கள்?

“ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய ஃபைல்கள் காணவில்லை. அதற்குக் காரணமானவர்களை முதலில் பிடித்து திகார் சிறையில் தள்ளினால்தான், மற்றவர்கள் திருந்துவார்கள்போல் தெரிகிறது...'' என்று டென்ஷன் ஆகிறார் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர்.

'ஊழல் செய்த உயர் அதிகாரிகள் சிலரைக் காப்பாற்றும் நோக்கில் அந்த இரண்டு ஃபைல்கள் எங்காவது ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறதா... அல்லது, ஒரேயடியாக எரித்துவிட்டார்களா?’ என்று சி.பி.ஐ. தேடுகிறது.

அதில் ஒரு ஃபைல், ஆ.ராசா மந்திரியாக இருந்தபோது, தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் தினசரி அலுவலகப் பணிகளைப் பதிவு செய்த விவரங்களை உள்ளடக்கியது. மற்றொரு ஃபைல், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி அரசுக்கு விண்ணப்பித்தது தொடர்பானது. இந்த இரண்டு ஃபைல்களுடன் தொடர்புடைய வேறு சில விவரங்கள் சி.பி.ஐ-க்குக் கிடைத்துவிட்டது. என்றாலும், ஒரிஜினல் ஃபைல்களைத் தேடும் பணி மும்முரமாக நடக்கிறது.

இந்த ஃபைல்களை வைத்திருந்த அதிகாரிகளிடம் சி.பி.ஐ. வாக்குமூலம் பதிவு செய்துவிட்டது. ஒருவேளை, காணாமல்போன ஃபைல்கள் கிடைக்கவில்லை என்றால், இந்த வாக்குமூலத்தை ஆதாரமாகப் பயன்படுத்தவும் சி.பி.ஐ.யிடம் திட்டம் இருக்கிறது!

நன்றி : ஜூனியர்விகடன், மே-8, 2011

தன் அரசியல் வாழ்வின் மிகக் கடினமான காலகட்டத்தை தி.மு.க., கடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க., என்றால், கருணாநிதி. கருணாநிதி என்றால் கனிமொழி. அந்த வகையில், கனிமொழி என்றாலே கழகம்தான். கட்சிக்கு வந்த களங்கம் என்று மட்டுமில்லாமல், தன் அருமை மகள் கனிமொழி என்பதால், தனிப்பட்ட முறையில் முதல்வருக்கும் இது நெருக்கடிதான்.

உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் இது பற்றி விலாவாரியாகவே விளக்கினார் கருணாநிதி. "சில நாட்களாகவே சி.ஐ.டி., காலனி இல்லத்துக்குப் போகவில்லை. தாயும், மகளும், மற்றுமுள்ளவர்களும் படும் வேதனையைக் காணச் சகிக்கவில்லை' என்பதாக அவர் கவலைப்பட்டிருந்தார்.

கனிமொழி கைதாவாரா? கருணை காட்டப்படுமா? சட்டம் கைகொடுக்குமா? மத்திய அரசு கைவிடுமா? என, ஏராளமான கேள்விக்குறிகள் அறிவாலயத்தைச் சுற்றி எழுந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் முடிவைப் போலவே, ஆளாளுக்கு, தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். எனக்கு கிடைத்த தகவலின்படி, கனிமொழியின் கைது, எந்த வகையிலும் தவிர்க்கப்பட முடியாது என்பதுதான் உண்மை. இது குறித்து, சட்டவல்லுனர்களிடமும், சி.பி.ஐ., அதிகாரிகளிடமும் விசாரித்த வகையில் கிடைத்த தகவல்கள் :

"2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்தவரை, இதுவரை யார் யாரெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனரோ, அவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  கனிமொழி ஒருவரைத் தவிர, குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவருமே வெளியில் இல்லை.

இவர்களில், முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள ராஜா ஒருவர்தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்பே கைது செய்யப்பட்டவர்கள். மற்றனைவரும் குற்றப்பத்திரிகைக்குப் பிறகு கைதானவர்களே. அந்த வகையில், கனிமொழி கைதாவதற்கும் அதிகளவு வாய்ப்புகள் உள்ளன.

"குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே, விசாரணை அதிகாரியின் வேலையில் பாதி முடிந்துவிடுகிறது. அதன் பிறகும் கைதின் அவசியம் என்ன?' என்ற வினா எழுப்பப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு, இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. ஒன்று, விசாரணை. இன்னொன்று சாட்சிகள். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதன் மூலம், விசாரணை வேண்டுமானால் பெருமளவு முடிந்திருக்கலாமே தவிர, சாட்சிகள் கலைக்கப்படும் அபாயம் தொடரவே செய்யும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் கைது நடவடிக்கை மற்றும் சிறைவாசம் கொண்ட வழக்குகள், ஏராளமான முன்னுதாரணங்களாக உள்ளன.

சாதாரண வழக்குகளில் மட்டும்தான், குற்றப்பத்திரிகை தாக்கலும், கைதி விடுவிப்பும் தொடர்புபடுத்தப்படுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட கடும் குற்றங்களில் அவ்வாறு செய்யப்படுவதில்லை.  ஒருவர் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், அவர் ஜாமீன் பெறுவதற்கு இயல்பாகவே தகுதியாகிறார் என்பது சாதாரண நடைமுறைதானே தவிர, எல்லா வழக்குகளுக்கும் பொருந்துவதல்ல.

ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்தவரை, குற்றம்சாட்டப்பட்ட எல்லாருமே, சமூகத்தில் பெரும் செல்வாக்கு உடையவர்கள். இவர்கள், சாட்சியைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர் என்றால், நீதிமன்றம் இதை மிகச் சுலபமாக ஏற்றுக்கொள்ளும். இவர்கள் வெளியில் நடமாடுவதன் மூலம், சாட்சிகள் கலைக்கப்படலாம்; மிரட்டப்படலாம்; வழக்கில் தலையீடு அதிகரிக்கலாம் என்பன போன்றவை, சி.பி.ஐ.,யின் வாதமாக இருக்கும்.

சரணடையச் சொல்லியோ, கைதாகும்படியோ நீதிமன்றம் உத்தரவிடும்போது, ஜாமீன் கேட்டு கனிமொழி தரப்பு மனுத் தாக்கல் செய்யலாம். இதிலும், ராஜா ஒருவரைத் தவிர, மற்ற அனைவருமே ஜாமீன் கேட்டு, மனு தள்ளுபடி செய்யப்பட்டு, சிறையில் இருப்பவர்கள்தான். ராஜா மட்டுமே, இதுவரை ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, கனிமொழியின் ஜாமீன் மனுவும் ஏற்றுக் கொள்ளப்படும் வாய்ப்பு குறைவு.

"இவர் வெளியில் நடமாடுவதால் வழக்குக்கு குந்தகம் இல்லை' என சி.பி.ஐ., உத்தரவாதம் தந்தால், ஜாமீன் தருவது பற்றி நீதிமன்றம் பரிசீலிக்கலாம். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரின் ஜாமீனுக்கும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, கனிமொழிக்கு மட்டும் சி.பி.ஐ.,யால் கருணை காட்ட முடியாது.

மிகப் பெரிய உடல்நலக் குறைவோ, சிறைவாசம் அனுபவிக்க முடியாத, தள்ளாத வயதோ கூட கனிமொழிக்கு இல்லை. எனவே, உடல்நிலையைக் காரணம் காட்டியும் அவர் ஜாமீன் கோர முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டும், சுப்பிரமணியசாமியும், இந்தியாவில் உள்ள அத்தனை ஊடகங்களும் நேரடியாகக் கண்காணிக்கின்றன. விசாரணை நீதிமன்றத்திலோ, விசாரணை அதிகாரிகளிடத்திலோ ஏதேனும் சின்னச் சலனம் தென்பட்டால்கூட, மிகப் பெரிய கூச்சல் கிளம்பிவிடும்; சுப்ரீம் கோர்ட் விளாசிவிடும். அந்த வகையிலும், கனிமொழி விட்டுவைக்கப்படுவது சிரமமே.

இப்படி எல்லா அம்சங்களும் விரல் நீட்டுவது, திஹார் சிறைச்சாலையே நோக்கியே!

இருந்தாலும், "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்' என்ற பொது விதி இருப்பதால்தான், திட்டவட்டமான இந்த விஷயம்கூட,  இப்போதுவரையிலும் சஸ்பென்சாகவே நீடிக்கிறது!

[[இந்த விஷயத்தில் நான் என்ன நினைத்தேனோ, அதனையே இன்றைய ‘தினமலரும்’ இப்படி எழுதியிருக்கிறது. இதனை நான் எழுதியதாகவே நினைத்துக் கொள்ளுங்கள்]]