Showing posts with label ஈழப் போராட்டம். Show all posts
Showing posts with label ஈழப் போராட்டம். Show all posts

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-04-08-2011

04-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இப்பவாச்சும் போனாரே..!

வீட்டுக்குப் போகவே மாட்டாரா என்று எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, சொந்தக் கட்சிக்காரர்களையே ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தவர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா..!

குமாரசாமியின் ஆட்சியைக் கவிழ்க்கும்போது எடியூரப்பா நடத்திய ஓரங்க நாடகத்தை இந்திய அரசியல் வட்டாரமே புருவத்தை உயர்த்திக் கவனித்த்து. அதற்காகவே முதல்வர் பதவிக்கு இவரைவிட்டால் வேறு யாரும் லாயக்கில்லை என்று நினைத்து அகமகிழ்ந்திருந்தார்கள் பாஜக தலைவர்கள்.

அனைத்தையும் மிகச் சுலபமாக தானே கெடுத்துக் கொண்டார் எடியூரப்பா. காரணம் கருணாநிதியை போலவே பதவி பாசம், பணப் பாசம், பிள்ளைகள் மீதிருந்த பாசம். பதவியை வைத்து பணம் செய்யும் வித்தையைக் கற்று, அதனை மிகச் சரியாக தனது பிள்ளைகளுக்கே கிடைக்கும்படியாக செய்த மோடி மஸ்தான் வித்தை, சரியான சமயத்தில் அவருக்கே வினை வைத்துவிட்டது.


ஊழல்கள் அம்பலமானவுடன் இனிமேலும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸை நாம் எதிர்க்க முடியும் என்ற சங்கடத்துடன் எடியூரப்பாவை ராஜினாமா செய்யும்படி முனங்கியுள்ளனர் பா.ஜ.க. தலைவர்கள். இதற்காகவே மானாவரியாக திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர் அவர்கள்.

கோபத்தில் வெங்கையா நாயுடுவின் லேப்டாப்பை பிடுங்கி எறிந்து உடைத்தேவிட்டாராம் எடியூரப்பா. உடன் தடுக்கப் பாய்ந்த ஒரு அமைச்சரை அடித்திருக்கிறார்.. “நான் நினைச்சா ஒருத்தன்கூட உசிரோட டெல்லி போய்ச் சேர மாட்டீங்க..” என்று உயர்மட்டத் தலைவர்களையே அன்பாக மிரட்டியிருக்கிறார். ஆனாலும் அத்தனையையும் பொறுத்துக் கொண்டு புதிய முதல்வரை தேர்வு செய்திருக்கும் ராஜ்நாத் சிங் மற்றும் அருண் ஜெட்லியை மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்.

ஜனநாயக முறையில் எம்.எல்.ஏ.க்களிடையே ஓட்டெடுப்பு நடத்திதான் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அடுத்து வந்திருப்பவர் சதானந்தா கவுடா. மொத்தமுள்ள 121 எம்.எல்.ஏ.க்களில் இவருக்கு ஆதரவளித்தவர்கள் 62 பேர். 56 பேர் ஆனந்த்குமாரின் ஆதரவாளர் ஜெகதீஷ் ஷெட்டரை ஆதரித்திருக்கிறார்கள். இதற்கே கூட்டத்தில் பெரும் அடிதடியே நடந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சரி.. சண்டைல கிழியாத சட்டை எங்கேயிருக்கு..? 6 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கும் சதானந்த கெளடாவின் தேர்வு அரசியல் சட்டப்படி சரிதான் என்றாலும், உண்மையான ஜனநாயகத்திற்கு விரோதமானது.

சதானந்த கெளடா இப்போது சிக்மளூர் தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். அவர் முதல்வர் பதவியேற்றவுடன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போகிறார். உடனேயே அந்த்த் தொகுதிக்கு மறுபடியும் தேர்தல் நடத்த வேண்டும்.. யார் வீட்டுக் காசு..? ரொம்ப பீல் பண்ணாதீங்க மக்களே..! இந்தக் கொடுமையைச் செய்யாத அரசியல் கட்சிகளே இந்தியாவில் இல்லை..! ஸோ.. இன்னொரு அல்வான்னு நினைச்சுக்குங்க..!


இயக்குநர்கள் சங்கத்தின் தடாலடி முடிவு..!

புலிக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பார்கள். இத்தனை நாட்களாக இயக்குநர்கள் சங்கத்தில், இயக்குநர்கள் சொல்வதைத்தான் இணை, துணை, உதவி இயக்குநர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டதால் முதல் செயற்குழுக் கூட்டத்திலேயே தாங்கள் நினைத்த்தை சாதித்துவிட்டார்கள் உதவி இயக்குநர்கள்.

இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கான நுழைவுக் கட்டணம் 5,000 ரூபாயாக 25,000 ரூபாயாக உயர்த்தியிருந்தனர் முந்தைய சங்க நிர்வாகிகள். தற்போது புதிய நிர்வாக அமைப்பில் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவருமே உதவி இயக்குநர்கள் அணியினர்தான் என்பதால் அவர்களே ஒரு தீர்மானம் கொண்டு வந்து தங்களுக்கான நுழைவுக் கட்டணம் திரும்பவும் 5,000 ரூபாய்தான் என்று நிறைவேற்றிவிட்டார்கள்.

இயக்குநர்கள் சங்கத்தில் இன்னொரு சுவாரசியம்.. சென்ற ஆண்டு நடந்த சங்கத்தின் பொதுக்குழுவில் பாரதிராஜாவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டதற்காக 'நேசம் புதுசு' படத்தின் இயக்குநர் வேல்முருகனை இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கினார்கள். இதற்காக வேல்முருகன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, பல பேச்சு வார்த்தைகளுக்குப் பின்பும், போராட்டத்திற்குப் பின்பும் சங்க விஷயங்கள் அம்பலத்திற்கு வர வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வோடு வழக்கு வாபஸ் பெறப்பட்டு வேல்முருகன் மீதான நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது.

அதே வேல்முருகன்தான் தற்போது சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவர்.. சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.  பதவியேற்பு விழாவில் இவருக்குத்தான் அதிக கை தட்டல்..! இப்போது தினமும் சங்க அலுவலகத்திற்கு வந்து பொறுப்பாகப் பணியாற்றுகிறாராம்..! இனி 2 ஆண்டுகளுக்கு சங்கத்தை வழி நடத்தப் போவது இவராகத்தான் இருக்கும் என்கிறார்கள் சங்கத்தின் நிலவரம் தெரிந்தவர்கள்..!


சக்சேனாவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவு..!

15 நாட்களாக அமைதியாக இருந்த தாத்தா இன்று வாய் திறந்து சக்சேனாவுக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
 
சக்சேனாவின் கைது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என்கிறார் கருணாநிதி. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டவுடன் அவசரம், அவசரமாக மிச்சம் மீதியிருந்த தொகையைக் கொடுத்து கேஸ் பைசல் செய்யப்பட்டதை மட்டும் கவனமாக மறைத்தோ அல்லது மறந்தோவிட்ட தாத்தா, சக்சேனாவின் கைதை மட்டும் வன்மையாக கண்டித்திருக்கிறார்.


இதை மட்டும்தானே இவரால் செய்ய முடியும்..! சென்ற ஆட்சிக் காலத்திலும் இது ஒன்றைத்தான் இவர் செய்து கொண்டிருந்தார். ஆனால் “நான் காலையில் இருந்து ராத்திரிவரைக்கும் நாட்டு மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருந்தேன்..” என்று வாய் கிழிய புழுகிக் கொண்டிருந்தார். செக்கர்ஸ் ஹோட்டல் தாக்கப்பட்டபோது நிருபர்கள் கேட்டதற்கு பதிலே சொல்லாமல் மெளனம் காத்த உத்தமத் தலைவராச்சே..!

சக்சேனாவை அவ்வளவு சுலபத்தில் ஆத்தா விட மாட்டார் என்றே நினைக்கிறேன். ஆத்தாவின் குறி கலாநிதி மாறன்தான். சக்சேனாவை வைத்துதான் அவரை இழுக்க வேண்டும் என்பதால் எப்படியும் வழக்குகள் வந்து குவிய, குவிய உடனடி கைதுகள் நிச்சயம் நடக்கும்.

இதுதான் சமயம் என்று மிகக் கச்சிதமாக நேமிக்சந்த் ஐபக்கூட புகார் மனுவைக் கொடுத்து மீதிப் பணத்தை வசூல் செய்துவிட்டார். அடுத்து புகார் தர வேண்டிய அபிராமி தியேட்டர் உரிமையாளர் ராமநாதனை போலீஸ் தரப்பிலும், ஜெயலலிதா ஆதரவு திரை பிரபலங்கள் தரப்பிலும் நெருக்கிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.  என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் ராமநாதன்.  அவர் தைரியமாக வந்து புகார் கொடுத்தால், நிச்சயம் கலாநிதி மாறன் புரசைவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தே தீர வேண்டும்..!

சக்சேனா மீது குவிந்த வழக்குகள் எதைப் பற்றியும் குறிப்பிடாத தினகரன் பத்திரிகை, கடைசியாக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுடன் சிக்கியிருக்கும் விஷயத்தைப் பற்றி மட்டும் விலாவாரியாக குறிப்பிட்டிருப்பது ஏன் என்றும் புரியவில்லை.


9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா

வருடாவருடம் சென்னையில் ICAF அமைப்பு நடத்தும் சர்வதேசத் திரைப்பட விழா இந்த வருமும் 9-வது ஆண்டாக நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை திரைப்பட விழா நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் உட்லண்ட்ஸ் தியேட்டரிலும், கூடுதலாக ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரிலும் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாம். ஃபிலிம் சேம்பர் தியேட்டர் மூடப்பட்டுள்ளதால் அதற்குப் பதிலாக ரஷ்யன் கல்ச்சுரல் சென்டருக்கு டிரான்ஸ்பராம்.

சென்ற ஆண்டு நடந்த துவக்க விழா மற்றும் இறுதி நாள் விழாக்களில் தமிழ்ச் சினிமாக்களின் முன்னாள் ஹீரோயின்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த்தாக சமீபத்தில் நடந்த அந்த அமைப்பின் செயற்குழுவில் பல பெரிசுகளும் பொங்கித் தீர்த்துவிட்டார்கள்..! இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு பழைய நடிகைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று நரைத்த முடியுடனும், தள்ளாடி நடந்து வரும் நிலையில் இருக்கும் சினிமா ரசிகர்களுமாக சேர்ந்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்களாம்..!

ஆகவே.. இந்த ஆண்டு நிகழ்ச்சி அந்த அளவுக்கு கலர்புல்லாக இருக்காது என்றே நினைக்கிறேன். எஸ்.வி.சேகர் இந்த முறையும் மறைமுகமாக துணைத் தலைவராகப் பணியாற்றுவார். அவர் நேரடியாக சம்பந்தப்பட்டால் விழா நல்லபடியாக நடக்குமா என்று தெரியாது..
 
அதேபோல் சென்ற ஆண்டு தமிழக அரசிடம் 25 லட்சம் ரூபாய் டொனேஷன் கேட்டு கிடைக்காமல் வருந்தினார்கள் நிகழ்ச்சியை நடத்தியவர்கள். இந்த முறையும் கேட்க இருக்கிறார்களாம். சென்ற ஆண்டாவது கேட்க முடிந்தது. இப்போது அப்படி கேட்பதற்கு அனுமதியாவது கிடைக்குமா என்பது சந்தேகமே..!

 
இம்மார்ட்டல்ஸ்(Immortals) டிரெயிலர்

வரவிருக்கும் ஆங்கிலப் படங்களின் டிரெயிலர்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே வந்தபோது இந்தத் திரைப்படம் கண்ணில்பட்டது. 300 திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களின் அடுத்தப் படைப்பு இதுவாம்.

டிரெயிலரே 300 படம் போலவேதான் உள்ளது. கதையும் அப்படித்தான் இருக்கிறது. இந்தப் படம் பற்றிய விக்கிபீடியாவின் தளத்தில் படித்துப் பாருங்கள். 


கொசுறு நியூஸ் : இந்தப் படத்தின் ஹீரோயின் நம்ம ப்ரீடா பிண்டோ..!



 
காதல் படுத்திய பாடு..!

காதல், காதல் என்கிறார்களே.. அந்த வார்த்தை இங்கே என்ன பாடுபடுகிறது என்று பாருங்கள்..!

அந்த அம்மாவுக்கு இள வயதில் ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் நடிக்க வந்த புதிதில் உடன் துணைக்கு தாயாரும் ஷூட்டிங்கிற்கு வந்து கொண்டிருந்தார். படத்தில் துணை இயக்குநராக, டயலாக் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பணியில் இருந்தவர் ஒரு துடிப்பான இளைஞர்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் முடியும்போது அந்தப் பெண்ணின் அம்மாவுக்கும், துணை இயக்குநரான அந்த இளைஞருக்குமிடையில் காதல் தீயாய் பற்றிக் கொண்டது. விஷயம் அந்தப் பெண்ணின் அப்பாவுக்குத் தெரிய வர, “நீ மகளைப் பார்த்துக்கிட்ட லட்சணம் போதும். இடத்தைக் காலி பண்ணு..” என்று சொல்லி அன்பாக, மனைவியை அன்பான காதலருடனேயே அனுப்பி வைத்துவிட்டார்.

துணை இயக்குநரும், நடிகையின் அம்மாவும் ஈருடல், ஓருடலானார்கள். துணை இயக்குநர் தனது வீட்டாரை மறந்து, உற்ற நண்பர்களைத் துறந்து அட்வைஸ் செய்த இயக்குநரையும் பகைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனாலும் இளைஞர் தொழிலில் கெட்டி.. குடும்பமும் களை கட்டிச் சென்று கொண்டிருந்த்து. மனைவி வந்த நேரத்தில்தான் தனக்கு வாய்ப்புகள் வருகிறது என்றெண்ணி தொழிலில் தீவிரமாகி வெற்றி பெற்றார்.

இப்போதுதான் அவருக்கு இடியாப்பச் சிக்கல் துவங்கியது. மீடியாக்கள் அவரை பேட்டியெடுக்கத் துவங்க, தனது மனைவியாக தன்னைவிட வயதில் மூத்த இவரை அடையாளம் காட்ட முடியாத சூழல்.. அதே சமயம் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாமல் தத்தளித்தார்.

இந்தச் சங்கடத்துடனேயே சில வருடங்களை சில வெற்றிகளுடன் தாண்டியவர், ஒரு கட்டத்தில் நின்று நிதானமாக யோசிக்க ஆரம்பித்தார்.
 
தனது குடும்பத்தினரின் வற்புறுத்தல், மீடியாக்களின் எதிர்பார்ப்பு, நண்பர்களின் கிண்டல்கள்.. இதனால் தனது எதிர்கால வாழ்க்கைக்காக மனைவியைப் பிரிய முடிவெடுத்தார். முதலில் ஒரு நாள்விட்டு ஒரு நாள் வீட்டுக்குச் சென்றார். பின்பு 3 நாட்களுக்கு ஒரு முறை. அடுத்து வாரத்துக்கு ஒரு முறை, கடைசியாக மாத்த்திற்கு ஒரு நாளாகச் சென்று.. இறுதியில் “இனி இந்தப் பக்கமே வர மாட்டேன். எவ்வளவு வேணுமோ வாங்கிக்க.. இந்தா ஆளை விடு..” என்று ஆம்பளைத்தனமாகச் சொல்லி எஸ்கேப்பாகிவிட்டார்.

தனது முட்டாள்தனமான காதலால் குடும்பம், உறவுகளே இல்லாமல் போன   வேதனையில் அந்தப் பெண்மணி தற்போது பரிதாபத்தில்...! கல்யாணமாகி குழந்தை பெற்றுவிட்ட மகளே, தனது தாய் என்று சொல்லாமல், தெரிந்தவர் என்று சொல்லி உதவும் நிலையில் வாழ்க்கையின் விரக்தியில் உள்ளார்.

வெற்றி பெற்ற ஆண் மகனோ அமர்க்களமாக மணமுடித்து சந்தோஷமாக வாழ்கிறார். இதில் யார் மீது தவறு..?


நியூயார்க் மாகாணத்தில் ஒரு சந்தோஷம்..!

கடந்த ஜூன் 24-ம் தேதி இரவு 11.15 மணிக்கு நியூயார்க் மாகாண கவர்னர் கியூமோ கையெழுத்திட்ட அந்த பிரகடனத்திற்குப் பிறகு அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதியளிக்கும் 6-வது மாநிலமாக நியூயார்க் மாகாணம் உருவெடுத்துள்ளது.

இதற்காகவே காத்திருந்தாற்போல் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் சென்ற மாதத்தில் நியூயார்க் மாகாணத்தில் நடந்தேறியுள்ளது. பல்வேறு எதிர்ப்புகள், ஆதரவுகள் என்று பலத்த சர்ச்சைகளுக்கிடையில்தான் இந்த அனுமதி கிடைத்திருக்கிறது.


மாநில செனட்டில் 33 பேர் ஆதரவளித்தும் 29 பேர் எதிர்த்து ஓட்டளித்து மயிரிழையில்தான் தப்பியுள்ளது இந்தச் சட்டம். ஆனாலும் தங்களது திருமணத்திற்காக இத்தனை ஆண்டுகளாக காத்திருந்த காதலர்கள்தான் கண்ணீர்க் கடலில் மிதந்துள்ளார்கள்.

கனெக்டிக்கட், மசாசூட்ஸ், வெர்மான்ட், நியூ ஹாம்ஸையர், அயோவா ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு 6-வது மாநிலம் நியூயார்க் மாகாணம்தானாம். 2 வருடத்திற்கு முன்பு நடந்த ஓட்டெடுப்பில்  சுதந்திர கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்களித்ததால் தோற்றுப் போயிருந்தது இந்தச் சட்டம்.  தற்போது  4 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மனம் மாறி குடியரசுக் கட்சியினருடன் இணைந்து வாக்களிக்க மசோதா நிறைவேறியுள்ளது.

 

ஜூன் 24-ல் சட்டம் அறிவிக்கப்பட்டாலும் 30 நாட்கள் கழித்து ஜூலை 25-ல்தான் அமலுக்கு வந்துள்ளது. அன்றைக்கே பல திருமணங்கள் வெகு விமரிசையாக நடந்துள்ளன. ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு சட்டம் அனுமதியளித்தாலும், மற்ற சாதாரண தம்பதிகளுக்கான சில சலுகைகள், சட்டத் திட்டங்கள் தற்போதைக்கு இவர்களுக்கு வழங்கப்படாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நாகரிகத்தில், தனி மனித உரிமையில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் வெறும் 6 மாநிலங்களில் மட்டுமே அமலில் இருக்கும் இச்சட்டம் இந்தியாவிற்கு எப்போது வருமோ..?

 
சன் டிவியின் புதிய சேனல்கள் லிஸ்ட்

ஆட்சி மாற்றம் நடந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் ராஜ்ஜியத்தில் நாங்கள்தான் ராஜா என்பதைப் போல தொழிலில் தொலைக்காட்சி உலகத்தில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்கிறார்கள் மாறன்கள்.

ஏற்கெனவே இருக்கின்ற சேனல்களையே பார்ப்பதற்கு முடியாமல் இருக்கும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதியன்று கூடுதலாக 13 சேனல்களுக்கு அனுமதி பெற்றுள்ளார்கள் மாறன்கள்.

அந்த 13 சேனல்களுக்கும் அப்லிங், டவுன்லிங் உடன் அனுமதி பெற ஒரே நாளில் மட்டும் 50 கோடி ரூபாயை செலவழித்துள்ளார்கள்.

வரவிருக்கும் புதிய சேனல்களின் பெயர்கள் இது :

1.ஜெமினி ஆக்சன்

2.ஜெமினி லைஃப்

3.ஜெமினி டிவி ஹெச்டி

4.கே டிவி ஹெச்டி

5.கொச்சு டிவி

6.சன் ஆக்சன்

7.சன் லைஃப்

8.சன் மியூஸிக் ஹெச்டி

9.சன் நியூஸ் ஆங்கிலம்

10.சன் டிவி ஹெச்டி

11. சன் டிவி ஆர்-1

12 சூரியன் டிவி நியூஸ்

13. சூரியன் ஆக்சன்

கூந்தல் உள்ள மாமி அள்ளியும் முடிவாள். கொண்டையும் போடுவாள். இல்லாதவள் எதுக்காக வயிறு எரிய வேண்டும்..!?

உண்மைதான். இருந்தாலும் சுமங்கலி கேபிளில் கேட்காமலேயே அனைத்து மொழி சன் குரூப் சேனல்களையும் நம்மிடம் தள்ளிவிடும் சன் நிர்வாகம், இந்த 13 சேனல்களையும் சேர்த்துக் கொடுத்தால் சுமங்கலியில் இடம் பெற்றிருக்கும் மற்ற சேனல்களெல்லாம் எங்கே போகும்..?

 
தற்போதைய தேவை விடுதலை மட்டுமே..!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களில் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு தமிழக அரசின் அனைத்துவித உதவிகளும் வழங்கப்படும் என்றும், கூடுதலாக மாதந்தோறும் ஓய்வூதியமாக 1000 ரூபாயும் தரப்படும் என்றும் ஜெயல்லிதா அறிவித்திருக்கிறார்.

இதையெல்லாம்விட அடிப்படையாகவும், முதலாவதாகவும் அவர் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது. அது என்னவெனில், அந்த மக்களை முகாம்களை விட்டு வெளியேற்றி தமிழகத்து மக்களோடு, மக்களாக கலந்திருக்கச் செய்ய வேண்டும்..! வெளிநாடுகளுக்கு உறவினர்களிடத்தில் செல்ல விரும்பும் தமிழ் ஈழத்து மக்களுக்கு தமிழக அரசே விமான டிக்கெட் எடுத்து அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்..! பல்வேறு முகாம்களில் இருக்கும் அவர்களது ஆண் சொந்தங்களை விடுதலை செய்து குடும்பத்தினருடன் தங்க வைக்க வேண்டும்.. !

முகாமில் இருக்கும் குடும்பங்களுக்கு 1000 ரூபாயெல்லாம் எந்த மூலைக்கு..? ஒரு குடும்பத்திற்கு மாதந்தோறும் 7500 ரூபாய் நிதியுதவியாகத் தரப்பட வேண்டும்..! அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும் ப்ரீ சீட் தரப்பட வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் இவர்களுக்கும் 1 சதவிகிதமாவது ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.. இப்படிச் செய்தால்தான் ஈழத் தமிழன், தமிழகத்து தமிழன் என்ற மனப்பான்மையும் இல்லாமல் போய் நாமெல்லோரும் தமிழர்கள் என்ற மனப்பான்மை வளரும்..!

 
தொண்டை புற்றுநோயை வெற்றி கொண்டவர்..!

இந்தச் செய்தியைப் படித்தவுடன் ஒரு கணம் அதிர்ச்சியாகித்தான் போனேன். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ், தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறாராம்..!

சென்ற ஆண்டு ஜீலை மாதம்தான் அவருக்கு தொண்டை புற்று நோய் பாதிப்பு இருப்பதாக வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ ரெக்கார்டுபடி 4-வது ஸ்டேஜில் டக்ளஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு கடுமையான சிகிச்சை முறைகள், மருத்து சிகிச்சைக்குப் பின்பு தற்போது தான் முற்றிலும் குணமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்தாலும், அவர் எப்போதும் மருத்துவர் கண்காணிப்பில்தான் இருந்தாக வேண்டும் என்று பத்திரிகைகளில் பல்வேறு மருத்துவர்களும் எச்சரித்திருக்கிறார்கள்..!

மனுஷனுக்கு 65 வயசாமே.. நம்ப முடியலை. அவருடைய காதல் மனைவியும், நடிகையுமான கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸுக்கு வயது 40.  இத்தம்பதிகளுக்கு இரு குழந்தைகளும் உண்டு. எனக்கு விவரம் தெரிந்து டக்ளஸின் நடிப்பில் பேஸிக் இன்ஸ்டிக்ட்டை பார்த்து அசந்ததுவிட்டேன். அதற்கு முன்பேயே டிஸ்குளோயரை பார்த்திருந்தாலும் அது மறந்துவிட்டது.. அதற்குப் பிறகு பார்த்த டிராபிக் படம்தான் அவருடைய நடிப்பில் நான் பார்த்து, எனக்கு மிகவும் பிடித்த படம்.

அதில் போதை மருந்துக்கு ஆட்பட்டு லாட்ஜில் இருக்கும் தனது மகளைத் தேடி தெருத்தெருவாக அலையும் காட்சியில் அவர் முகம் காட்டும் எக்ஸ்பிரஷன்.. இப்போதும் மறக்க முடியவில்லை..! ஒரிஜினல் அப்பாவாக தன்னை அந்தப் படத்தில் நிறுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்..!

மனைவியின் அன்பு, பிள்ளைகளின் பாசம், ரசிகர்களின் வேண்டுதல்கள் என்று எல்லாமே தன்னை மீட்டெடுத்த்ததாக தொலைக்காட்சி பேட்டியொன்றில் உருகியிருக்கிறார் டக்ளஸ்..! அவர் நீண்ட ஆயுளைப் பெறட்டும்..! 

“ஐயோ” என்ற உணர்வு எனக்குள்ளும் ஏற்பட்டதற்குக் காரணம், என் தந்தை இதே தொண்டை புற்று நோயால்தான் மரணமடைந்தார்.


விடுதலையின் பராக்கிரமங்கள்..!

சமீபத்தில் நடந்த சின்னத்திரை இயக்குநர்கள் சங்கக் கூட்டத்தில் சங்கத் தலைவர் விடுதலையின் பராக்கிரமங்களைக் கேள்விப்பட்டு கதி கலங்கி போய்விட்டார்கள் உறுப்பினர்கள்.

“என்னை அடிக்க வந்தார்.. ஆளை காட்டி என்னை அடிச்சு துரத்தச் சொன்னாரு.. வாடா.. போடான்னு அவமரியாதையா பேசினாரு. அதுனாலதான் போன தடவை நான் சங்கத்தின் செயலாளராக ஜெயித்தவுடன் அந்தப் பதவியை ராஜினாமா செய்தேன்..” என்றார் இயக்குநர் கவிதாபாரதி.

“என்னை குடும்பத்தோட கோவில்ல போய் பிச்சையெடுக்கச் சொன்னாரு விடுதலை.. இத்தனைக்கும் விடுதலை என்னோட 15 வருட குடும்ப நண்பர்..” என்று வருத்தப்பட்டார் இயக்குநரும், கதாசிரியருமான ராஜ்பிரபு.

“நீ இனிமே சீரியல் டைரக்ட் பண்ணக் கூடாது.. ஏன்.. தமிழ்நாட்டுலேயே இருக்கக் கூடாது.. நாளைக்கே நீ ஊரைவிட்டு ஓடணும். இல்லை அடிச்சுத் துரத்துவேன்னு மிரட்டினாரு. இவர் யார் ஸார் என்னை ஊரை விட்டுப் போகச் சொல்ல..? நான் டைரக்ஷன் செய்யக் கூடாதுன்னு சொல்றதுக்கு இவருக்கு என்ன அதிகாரம் இருக்கு..?” என்று பொங்கித் தீர்த்தார் இயக்குநர் சி.ஜெ.பாஸ்கர்.

“பல நடிகர்களை, துணை இயக்குநர்களை சங்க அலுவலகத்திற்கு அழைத்து ஆள் வைத்து அடித்தார் விடுதலை. அவரே அடிக்கவும் செய்திருக்கிறார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு பின்பு அது தீர்க்கப்பட்டது..” என்று குற்றம்சாட்டினார் கவிதாபாரதி.

“எல்லாவற்றுக்கும் மேலாக சங்கப் பணத்தில் ஊழல் செய்தார் விடுதலை..” என்று நேருக்கு நேராகவே குற்றம் சுமத்தினார் கவிதாபாரதி. “பையனூர் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திரை ஊரில் சின்னத்திரையினருக்காக கட்டப்படவிருக்கும் குடியிருப்பை கட்டப் போகும் மலேசிய நிறுவனத்தினருக்கு சங்க நிர்வாகிகளின் அனுமதி இல்லாமல் 49 லட்சம் ரூபாயை தூக்கிக் கொடுத்துவிட்டார். இப்போது நாங்கள் அது பற்றி கேட்டதற்கு 12 லட்சத்தை திருப்பி வாங்கித் தருகிறேன் என்றவர், மீதி 37 லட்சம் திரும்பி வராது என்கிறார். அது அந்தப் பகுதியை செப்பனிட்ட வேலைக்கு சரியாகிவிட்டதாக அந்த நிறுவனம் சொல்வதாகச் சொல்கிறார்.

இதில் ஒரு காமெடி என்னவெனில், பெப்ஸி அமைப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்த மரம், செடி, கொடி, மண்ணை அகற்ற வெளியில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாயை பெப்ஸி பெற்றுக் கொண்டு அனைத்தையும் அள்ளிக் கொள்ளும்படி அனுமதி கொடுத்த்து. அவர்களும் அதனை செய்துவிட்டார்கள். ஆனால் சின்னத்திரை சங்கத்தில், விடுதலைதான் அப்படியே உல்டாவாக அதையெல்லாம் எடுத்திட்டுப் போறதுக்காக 39 லட்சம் ரூபாயை தானமாக அளித்திருக்கிறார். யார் வீட்டுக் காசு இது..?” என்றார் ஆக்ரோஷம் குறையாத கவிதாபாரதி.

“சி.ஜெ.பாஸ்கர் விவகாரத்தில் யாரைக் கேட்டு தன்னிச்சையாக முடிவெடுத்தீர்கள். உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்த்து யார்..?” என்று கோபக்கனலைக் கக்கினார் யார் கண்ணன். “சி.ஜெ.பாஸ்கருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பாமல், அவரிடம் கருத்து கேட்காமல் எப்படி நீங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்..?” என்றார் யார் கண்ணன்.

“என் மீது எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கையைவிட விடுதலையை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு நடிகை குஷ்பூ என்னைப் பற்றி பேட்டி கொடுக்க வேண்டிய அவசியமென்ன..? யார் அவருக்கு என் மீதான புகார்கள் பற்றி தகவல்களைக் கொடுத்தது..? குஷ்பூவுக்கும் இந்தச் சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்..?” என்று மீண்டும் வந்து பொங்கினார் சி.ஜெ.பாஸ்கர்.

இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டது சங்கத்தின் செயலாளர் எஸ்.வி.சோலைராஜாவின் பேச்சு. “செகரட்டரின்னு நீங்க ஒருத்தர் எதுக்கு ஸார் இருந்தீங்க..? நீங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க.. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டாமா?” என்று துணை இயக்குநர்கள் கோரஸாக எழுந்து கேட்க, “நான் என்னங்க செய்யறது..? எனக்கு என் உயிர் மேல பயம்.. விடுதலைகிட்ட கேட்டால் என்னையும் ஆளை வைச்சு அடிப்பாருன்னு நினைச்சு பயந்துதான் அமைதியா இருந்தேன்..” என்றார்.. இதைக் கேட்டுவிட்டு பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த விடுதலையே சிரித்துவிட்டார்..! மகா காமெடி..!

அரசியல்வியாதிகளின் உடன்பிறப்பான ஊழல், சகல துறைகளிலும் கண்ணை மூடிக் கொண்டு நுழைந்துவிட்டது. சென்ற கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அவரது செல்லப் பிள்ளை போல இருந்த விடுதலையின் செயல்கள் அவருக்கு கொஞ்சமும் மரியாதை அளிப்பதாக இல்லை என்று அனைவருமே அவரைக் கண்டிக்க.. எல்லாவற்றுக்கும் “ஸாரி. மன்னிச்சுக்குங்க..” என்று ஒற்றை வரியில் பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டார்.

ஆனாலும் யார் கண்ணன் விடவில்லை. இந்த மாதம் 14-ம் தேதி நடக்கும் சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல், பணம் கையாடல் செய்த குற்றத்திற்காக இயக்குநர் விடுதலைக்கு தேர்தலில் நிற்க தடை என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிவிட்டார்..!

அரசியல்வியாதிகளை தொழிலாளர்களின் சங்கத்திற்கு தலைவராக்கினால் இதுதான் நடக்கும்..!

பிரிட்டனின் இளம் வயது தாத்தா..!

நிரந்தரமான வேலையில்லாத பிரிட்டனைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவர்தான், அந்த நாட்டில் மிக இளம் வயது தாத்தா என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறாராம்.

இவருடைய 14-வது வயதில் பிறந்த இவரது மகளான தற்போதைய பள்ளி மாணவி, தனது 15-வது வயதில் சக மாணவனுடனான உறவின் மூலம் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருக்கிறாராம்..!


“அவள் ரொம்பச் சின்னப் பொண்ணு. ஆனா குழந்தையை வளர்க்கும் பக்குவம் அவளுக்கு இருக்கு. இந்த விஷயத்துக்காக நான் அவளை வெறுக்கப் போவதில்லை. ஏன்னா நான் செஞ்சதைத்தானே அவளும் செஞ்சிருக்கா..?” என்கிறார் இந்தத் தாத்தா.

தற்போதைக்கு நிரந்தரமான வேலையில்லாத இந்த்த் தாத்தா கிடைக்கின்ற வேலையையெல்லாம் செய்யும் ஆல் இன் ஆல் ராசாவாம். அவருடைய அக்கம்பக்கத்தினர் எல்லோரும் அவரை அரை லூஸு என்பதை போலவே பார்க்கிறார்கள். பேசுகிறார்கள்..!

எப்போதும் பணம், பணம் என்பது பற்றியே பேசும் இந்தத் தாத்தா, தனது மகளின் இந்த பிரசவ செய்தியைக்கூட கார்டியன் பத்திரிகைக்கு சொல்லி ஆயிரக்கணக்கான பவுண்டுகளை பெற்றிருப்பதாக அக்கம்பக்கத்தினர் சொல்கிறார்கள்..!

மகளின் தாயான தனது முன்னாள் காதலியுடனும் இல்லாமல், வேறொரு பெண்ணின் மூலம் மேலும் 2 பிள்ளைகளுக்கு அப்பனாகவும் இருக்கின்ற இந்த்த் தாத்தாவின் அம்மாவும், பாட்டியுமே இன்னும் உயிரோடு இருக்கிறார்களாம். “எப்படியோ எங்க்க் குடும்பத்துக்கு இப்படியொரு பெருமை கிடைச்சிருக்கே. இதுவே போதும்..” என்கிறார் இந்தத் தாத்தா.

நானும்தான் இருக்கேன்..!?


ஹினா ரப்பானி ஹவுரின் இந்திய விஸிட்..!

இந்த அம்மையாரைப் பற்றி எழுதாமல் இட்லி-வடையை முடித்தேன் என்றால் ஊசிப் போன வடையைச் சாப்பிட வரும் எலியார்கூட வர மாட்டார் என்பதனால் எனது தளத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம்..!


2 குழந்தைகளுக்குத் தாய் என்றாலும், அழகான.. போட்டோகிராபி முகம் என்பதால் இந்திய மீடியாக்கள்விட்ட ஜொள்ளு, சிந்து நதியைக் கடந்து அவர்கள் நாட்டு பஞ்சாப்புக்குள்ளேயே நுழைந்திருக்கும். அழகு சாதனக் குறிப்பு எழுதுவதுபோல் தனது அழகு பற்றியே எழுதியிருந்த இந்திய மீடியாக்களை ஹினாவே கடிந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் நமக்கு அதெல்லாம் முக்கியமா என்ன..?

அமெரிக்காவுடனான உறவு பல்லாங்குழி ஆடி, இப்போது சீனாவின் பெருஞ்சுவர் ஓரமாகப் பதுங்கி முதல் வாரம் பிரதமர், அடுத்த வாரம் அமைச்சர், அதற்கடுத்த வாரம் ஐ.எஸ்.ஐ. தலைவர் என்று பீஜிங்கிற்கு படையெடுக்கும் சூழலில் இப்படியொரு அம்மணியை வெளியுறவுத் துறைக்கு நியமிக்க அந்த நாட்டு பிரதமருக்கு எப்படி தைரியம் வந்த்து என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் உலக மகா ஜொள்ளரான ஒரு ஜனாதிபதியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு..! பாக் பிரதமர் கிலானி ரொம்ப தைரியசாலிதான்..!



இந்த நேரத்தில் பேஸ்புக்கில் ஒரு கமெண்ட் படித்தேன்.  காமெடியாக இருந்தது..!

“எஸ்.எம். கிருஷ்ணா மச்சக்கார மனுஷன்யா.. கன்னடத்துக் கிளி சரோஜாதேவியை பொண்ணு பார்க்கப் போனதுல இருந்து, 80 வயசுலேயும்  இந்த ஹனியையும் பார்க்குறாருய்யா மனுஷன்..” என்று யாரோ ஒருவர் எழுதியிருந்தார்.

இந்த உலகத்தில் பொறாமைல நம்மள யாராச்சும் மிஞ்ச முடியுமா..?


படித்ததில் பிடித்தது..!


“நான் உங்களிடத்திலே சொல்ல விரும்புகின்றேன். பல ஆண்டுகளுக்கு முன்னாலே... கலைஞர் என்னை மன்னிப்பார் என்று கருதுகின்றேன். கலைஞரை, ‘கருணாநிதி’ என்றுதான் அப்போதெல்லாம் நான் சொல்லிப் பழக்கம். நான் 1955-56 வரையிலேகூட ‘கருணாநிதி வந்தார்’.. ‘போனார்..’ என்றுதான் சொல்வேன். ‘கலைஞர்’ என்று சொல்ல மாட்டேன். அண்ணா  ‘கருணாநிதி வந்தாரா..?’ என்று கேட்பார். நானும் ‘கருணாநிதி வந்தார்’ என்று சொல்வேன். நானாவது மரியாதையாக ‘கருணாநிதி வந்தார்’ என்று சொல்வேன். எங்களோடு இருந்த சம்பத், ‘கருணாநிதி வந்தான்’ என்பான். அந்த அளவுக்கு ஒரு காலம்.

அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்து கலைஞர் அவர்களை கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது அவர் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது, கட்சியிலே அன்றைக்கு கலைஞரைவிட மூத்தவராக இருந்த நான்கு பேரில் - நெடுஞ்செழியன் அவர்கள் அந்த உரிமை கொண்டாடி, அந்த உரிமை கிடைக்காத காரணத்தால் கட்சித் தோழர்கள், முன்னணியிலே உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், அந்தப் பொறுப்பு கலைஞருக்கு வந்துவிட்டது என்ற காரணத்தினால் மாறுபாடு கொண்டிருந்தார்.

அந்தச் சூழ்நிலையிலே நான் நாவலர் நெடுஞ்செழியனுடைய நண்பர். நானும் அவரும் ஒன்றாக மூன்றாண்டு காலம் படித்தவர்கள். இன்னும் சொல்லப் போனால், எனக்கு ஜாதி புத்தி இருக்குமானால் எனக்கு அவர் சொந்தக்காரர். ஆனால், அந்த ஜாதி புத்தி இல்லாத அளவுக்கு, இளமையிலேயே பயிற்சி பெற்றுவிட்டேன். இருந்தாலும்கூட பழக்கம். அவர்(நெடுஞ்செழியன்) வருத்தப்படுகிறார் என்ற காரணத்தால்தான் நான் பேசுகிறபோது ‘கலைஞரை நான் தலைவராக ஏற்பதில்லை..’ என்றுகூட பேசினேன். ‘தளபதியாக வேண்டுமானால் ஏற்பேனே தவிர, கட்சிக்குக்கூட தலைவராக ஏற்பேனே தவிர, என்னுடைய தலைவராக ஏற்க மாட்டேன்…’ என்று பேசினேன்.

- கோவை தி.மு.க. பொதுக்குழுவில் பேராசிரியர் க.அன்பழகன் பேசியது.

பார்த்ததில் பிடித்தது..!



நடிப்பைச் சொல்லித் தர்றாங்களாம்பா..!

உன்னைத் தேடி வருவேன் படத்திற்காக சுரேஷ், சாதனா

படம் உதவிக்கு நன்றி : திரு.ஸ்டில்ஸ் ரவி

ஈழத்துச் சொந்தங்களுக்காக மெரீனாவில் திரண்ட மக்களின் அஞ்சலி..!

27-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த அளவுக்கு உணர்வாளர்கள் திரண்டு வருவார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்களே நினைக்கவில்லை.. இத்தனை நாட்களாக இவர்களெல்லாம் எங்கேயிருந்தார்கள் என்றும் யோசிக்க வைத்துவிட்டார்கள் நேற்று மெரீனா கடற்கரையில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழர்கள்..!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ம் தேதியை சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. கடைப்பிடித்து வருகிறது.

இந்த ஆண்டு அதே தினத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும்வகையில் தாய்த் தமிழகத்தின் தலைநகரில் நமது தொப்புள்கொடி உறவுகள் ஈழத்தில் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஒரு நிகழ்ச்சியை மே 17 என்ற இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.


தமிழினப் படுகொலைக்கு நினைவேந்தல்-2011 என்ற தலைப்பில் இந்த இயக்கம் வெளியிட்ட படுகொலை புகைப்படங்களுடன் இருந்த செய்தித் தொகுப்பு மனதை உருக வைப்பதாக இருந்தது.

1,40,000 தமிழீழத் தமிழர்கள் என்ன காரணத்திற்காய் படுகொலை செய்யப்பட்டார்கள்? விடுதலை கேட்பது ஒரு பாவமா?

2500 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரமாய் தான் ஆண்டு வந்த தமிழர்களின் நாடான தமிழீழத்தின் விடுதலையைக் கேட்டு கடந்த 60 ஆண்டுகளாக போராடி வந்தது குற்றமா..?

சொந்த நாட்டிற்கு விடுதலை கேட்பதற்கு இதுதான் தண்டனையா..?

கூட்டம், கூட்டமாய் சாவுகள்.. அடுக்கடுக்காய் பாலியல் சித்திரவதைகள்..

தமிழீழத் தமிழர்கள் மட்டுமல்ல.. 543 தமிழக மீனவர்களும் சித்திரவதைச் செய்யப்பட்டு சிங்களவனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு சித்திரவதைச் செய்து படுகொலை செய்யப்பட்டவர்களுக்காய் என்ன செய்தோம்..?

அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அழுதிருக்கிறோம்..!

கதை, கதையாய்ப் பேசி கவலைப்பட்டிருக்கிறோம்..

ஒன்று கூடி ஒரு நாளாவது ஒப்பாரி வைத்திருக்கிறோமா..?

கடந்த 2009-ம் ஆண்டு நம் கண் முன்னே லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள்

இறந்தோரின் நினைவுகளை நெஞ்சில் நிறைக்க நடுக்கல்லாய் குல சாமியாய், காவல் தெய்வமாய் வழிபட்ட மரபில் வந்தவர்கள் நாம்..

பாடப் புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் தம் பெற்றோரின் பாடைகளை சுமந்தன.

தமிழீழக் குழந்தைகள், பால் சுரக்கும் மார்பகத்தை அறுத்து வீசிய பாவிகள், பச்சிளம் குழந்தைகளையும் படுகொலை செய்கின்றனர்.

ஆதரித்து பேசத்தான் அனுமதி கேட்க வேண்டும். அழுவதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்..?

அன்றே நாம் சாலைக்கு வந்திருந்தால் 1,40,000 பேரின் சாவையாவது தடுத்திருக்கலாம்..

தமிழினம் தேய்வது தெளிவாய்த் தெரிகிறது. மிச்சத்தையாவது மீட்போம் வாருங்கள்..

களம் இறங்காமல் கனவு ஜெயிக்காது.. வீதிக்கு வராமல் விடுதலை கிடைக்காது..

இனப் படுகொலைக்கு தீர்வு இன விடுதலையே..!

தமிழீழத்தின் விடுதலையே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு.!!!

இந்தப் படுகொலைகளை, பஞ்சமாபாதகங்களை பார்த்த பிறகும் இவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒரு மணி நேரம் செலவிட மனம் வராதா நமக்கு..

அஞ்சலி செலுத்த அணி திரள்வோம்...

சிந்துவதற்கு கண்ணீரையும், செலவிட கொஞ்சம் நேரத்தையும் கொண்டு வாருங்கள்..

மெழுகுவர்த்திகளும், தீக்குச்சிகளும் கடற்கரையில் காத்திருக்கின்றன.

நீங்கள் தாழ்த்திப் பிடிக்கும் ஒவ்வொரு மெழுகுவர்த்தியும், சித்திரவதைகளால் சிதைக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலி மட்டுமல்ல..

அவர்கள் கேட்ட தமிழீழ விடுதலையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு அகிம்சை ஆயுதமும்கூட..

ஒரு மணி நேரம் மெழுகுவர்த்தியேற்றி நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வாருங்கள்..

இவ்வாறு அரசியல் சார்பற்று, மே 17 அமைப்பு வெளியிட்டிருந்த  அறிவிப்புக்கு எழுந்த பெரும் ஆதரவு, தமிழகத்தின் பிற இயக்கங்கள், கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தது.

இதன் விளைவாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி இன்னும் பிற கட்சிகள், இயக்கங்கள் அனைத்தும் இந்த நிகழ்ச்சிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்க.. வந்த கூட்டம்தான் அனைவரையும் திகைக்க வைத்தது.

முன்பே திட்டமிட்டபடி மெரீனா பீச்சின் புல்வெளியிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்திவிடலாம் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் மக்கள் கூட்டம் சாரை, சாரையாக வந்து குவிந்துவிட கடற்கரை மணல் பகுதிக்குள் நிகழ்ச்சியை நடத்த வேண்டிய கட்டாயமாகிவிட்டது.

அப்போதும் கண்காணிப்புக்கும், பாதுகாப்புக்கும் வந்த காவல்துறையினர் அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும், சட்டத்தையும் எடுத்துக் கூறி, சொன்னது சொன்னபடி நிகழ்ச்சியை நடத்தி முடித்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

மைக் பயன்படுத்தக் கூடாது.. யாரும் பேசக் கூடாது.. மெழுகுவர்த்தியை கொளுத்திவிட்டு பின்பு மவுன அஞ்சலியைச் செலுத்திவிட்டு அதற்கான இடத்தில் மெழுகுவர்த்திகளை வைத்துவிட்டு அனைவரும் மெளனமாகக் கலைய வேண்டும். இதுதான் காவல்துறையின் மென்மையான வேண்டுகோள்.

இதற்கு ஒப்புக் கொண்டுதான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக அமைப்பினர் கூறுகிறார்கள். ஆனால் கூட்டம் குவியத் தொடங்கியதால் அனைவரையும் ஒழுங்குபடுத்த வேண்டி ஒலிபெருக்கியையும், மைக்கையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் வந்தது.

நிகழ்ச்சிக்கு முக்கியப் பிரமுகர்களும் வருவார்கள் என்பது இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு தெரிந்தபோது எதிர்பார்ப்பு கூடியிருந்தது. இதனால்தான் காவல்துறையின் கண்டிப்பான உத்தரவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனால் கொஞ்சம் உஷாரான இயக்கத்தினர் யாரையும் தாக்கிப் பேசவோ, கோஷமிடவோ வேண்டாம் என்பதை பேனரிலேயே எழுதி வைத்து நிகழ்ச்சிக்கு வரும் அனைவரின் பார்வைக்கும் படும்வகையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார்கள்.

கருணாநிதியைத் தாக்கிப் பேசி ஜெயலலிதாவை விட்டுவிட்டால், தி.மு.க.வினர் கோபிப்பார்கள். இருவரையும் சேர்ந்து தாக்கினால் இரண்டு கட்சியினரும் கோபிப்பார்கள். போதாக்குறைக்கு திருமாவும் அழுவார்.. எதற்கு வம்பு..? இந்தப் பிரச்சினையையே எழுப்ப வேண்டாம் என்று இயக்கத்தினர் கேட்டுக் கொண்டதால் தமிழகத்து தலைவர்களை விட்டுவிட்டவர்கள், மஹிந்த ராஜபக்சேவை மட்டும் வறுத்தெடுத்துவிட்டார்கள்..!

காவல்துறையினர் ஆலோசனையும், அறிவுரையும் வழங்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கடற்கரை மணலில் ஸ்தூபியை போன்ற நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு அந்த இடம் அழகுப்படுத்தப்பட்டது..!


அணி, அணியாக வந்த பல்வேறு இயக்கத்தினரும் காந்தி சிலையின் பின்புறமுள்ள சர்வீஸ் ரோட்டில் இருந்து உழைப்பாளர் சிலையின் பின்புறம்வரையிலும் ஊர்வலமாக கோஷமிட்டபடியே வந்து சேர்ந்தனர்.

ஓவியர் வீர.சந்தானம் ஈழப் போர் பற்றிய தனது ஓவியங்களை பார்வைக்கு வைத்திருந்தார். பல்வேறு இயக்கங்களும் ஈழத்து மக்களின் கொடுஞ்சாவுகளுக்கு சாட்சியமான புகைப்படங்களை வைத்து விதம், விதமாக தட்டிகளைத் தயார் செய்து வைத்திருந்தது.. லிபியாவுக்கு ஒரு நீதி..? இலங்கைக்கு ஒரு நீதியா..? என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் கைகளிலும் இருந்தது..!

மணலில் அமைக்கப்பட்டிருந்த ஸ்தூபியின் முன்புறமாக அனைத்து இயக்கத்தினரும் வரிசையாக அமர்ந்தாலும், அவரவர் முறை வைத்து கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். ஒரு இயக்கத்தினர் களைப்பில் முடித்தவுடன், அடுத்த தரப்பினர் கோஷத்தை எழுப்ப.. நேற்றைய கடற்கரை முழுவதிலும் மஹிந்த ராஜபக்சே ஒழிக என்ற வார்த்தை நிச்சயமாக லட்சம் முறை எழுப்பப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்..! இடையிடையே பிரபாகரன் வாழ்க என்ற கோஷங்களும் விண்ணைப் பிளந்தன.

எழுப்ப வேண்டிய கோஷங்களைக்கூட எழுதி, ஜெராக்ஸ் எடுத்து அனைத்துத் தரப்பினருக்கும் கொடுத்திருந்தார்கள்.

மறக்க மாட்டோம், மறக்க மாட்டோம்
    இனப்படுகொலையை மறக்க மாட்டோம்.

சொந்தங்களே, சொந்தங்களே..
    தோள் கொடுப்போம் சொந்தங்களே..!

ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம்..
    இனத்திற்காக ஒன்றுபடுவோம்..

ஓங்கட்டும்.. ஓங்கட்டும்..
    தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்..!

வெல்லட்டும், வெல்லட்டும்..
    தமிழீழம் வெல்லட்டும்..

உறுதியேற்போம்.. உறுதியேற்போம்..
    ஈழ விடுதலைக்கு உறுதியேற்போம்..

சாதி மறப்போம்.. கட்சி மறப்போம்..
    இனத்திற்காக ஒன்றுபடுவோம்..

உரிமை கேட்போம்.. உரிமை கேட்போம்..
    மீனவரின் பாரம்பரியா உரிமை கேட்போம்..

ஓங்கட்டும்.. ஓங்கட்டும்..
    தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்..

வெல்லட்டும்.. வெல்லட்டும்..
    தமிழீழம் வெல்லட்டும்..

ஐ.நா. சபையே.. ஐ.நா. சபையே..
    தடுத்து நிறுத்து.. தடுத்து நிறுத்து..
    சித்திரவதைகளை தடுத்து நிறுத்து..

நீதி வழங்கு.. நீதி வழங்கு..
    ஈழத் தமிழனுக்கு நீதி வழங்கு..

மீட்டெடுப்போம்.. மீட்டெடு்ப்போம்..
    ஈழத்தை மீட்டெடுப்போம்..

ஓங்கட்டும்.. ஓங்கட்டும்..
    தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்..

வெல்லட்டும்.. வெல்லட்டும்..
    தமிழீழலம் வெல்லட்டும்..

இவையல்லாமல்

"வாழ்க வாழ்க
பிரபாகரன்
வாழ்க வாழ்கவே..!"


என்ற கோஷம் மட்டும் தனித்துவம் பெற்று ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தக் கோஷங்களெல்லாம் கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள் அன்றைய மெரீனா கடற்கரையில் ஒலித்தது நிச்சயமாக ஒரு சாதனைதான்..!

பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் என்று சில பிரபலங்களும்  வந்து அமர்ந்திருக்க.. கடற்கரையின் முன் பாதி முழுக்கவும் மனிதத் தலைகள்தான் தென்பட்டன..!

பல்வேறு இயக்கங்கள் வந்தவண்ணம் இருந்தபோது அழைக்காமலேயே வந்தார் வருண பகவான். ஆனாலும் கூட்டம் எழுந்திரிக்காமல் அமைதி காக்க.. வந்த வேகத்தில் 5 நிமிடங்களில் தனது வருகையை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு வெளியேறினார் வருணன்..!

ஆனாலும் கூட்டம் கலையாமல் அதே இடத்தில் அமர்ந்த நிலையில், அந்த மழையிலும் கோஷங்களை எழுப்பியபடியே இருந்ததை நினைவு கூற வேண்டும்..!

அத்தனை பேரையும் கவர் செய்யும் அளவுக்கு மைக் வசதியும் இல்லாததால், பகுதி, பகுதியாக அவரவர்கள் மாலை மங்கியவுடன் தாங்களே மெழுகு திரியை கொளுத்தி கைகளில் வைத்திருந்தனர்.

ஆங்காங்கே பல்வேறு நபர்கள் முறை வைத்து கோஷங்களை எழுப்பியபடியே இருக்க.. அமர்ந்திருந்த கூட்டமும் தங்கள் கைகளில் வைத்திருந்த மெழுகுவர்த்தியை ஒரு சேர உயர்த்திக் காட்டியபோது காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அனைத்துமே நின்று நிதானித்துதான் பயணித்தன.


தலைவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் விளக்கேற்றிய பின்பு மனதார தங்களது அஞ்சலியை செலுத்திய பொதுமக்கள் கடற்கரை மணலில் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்திகளை வட்டமாக நிறுத்தி வைத்து தங்களது அஞ்சலியை முடித்துக் கொண்டனர்..!

ஸ்தூபி அருகே இருந்த மக்களிடையே பழ.நெடுமாறன் மட்டுமே சில நிமிடங்கள் பேசினார். ஈழத்து துயரம் பற்றி நாடகம் ஒன்றும் நடந்ததாகச் சொன்னார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை..!

வந்திருந்த கூட்டத்தில் இந்த இயக்கத்தினர் என்றெல்லாம் அடையாளம் காண முடியாமல் கடற்கரைக்கு அன்றைக்கு வந்தவர்கள், இந்த நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் என்று பொதுமக்கள்தான் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். அவர்களின் முகத்தில் எல்லையில்லா வருத்தமும், கோபமும் தெரித்திருந்தன..

ஈழப் பிரச்சினை தமிழகத்து மக்களைத் தாக்கவே தாக்காது.. எந்த நிலையிலும் அதற்குச் சாதகமான ஒன்றை கட்சியினர் சாராத மக்கள் வெளிக்காட்ட மாட்டார்கள் என்று பல காலமாக சொல்லி வந்தவர்களின் வாக்கு நேற்றைக்கு தோற்றுப் போனதாகவே சொல்ல வேண்டும்..!

மிகச் சமீபத்தில் உலகம் முழுவதும் பார்க்கும்வகையில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட அந்தக் கொடூரங்களை இணையம் மூலமாகப் பார்த்தவர்களின் அதிர்ச்சி நேற்றைய கடற்கரைக் கூட்டத்தில் வெளிப்பட்டுத்தான் இருந்தது.

 
கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்திருந்தவர்களெல்லாம் இந்தச் செய்தித் தொகுப்பை வாங்கிப் புரட்டிவிட்டு ஒரு கணம் அதிர்ச்சியும், திகைப்புமாக சிலையாய் நின்றதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர்கள்தான் தங்களது குழந்தைகளுக்காகவும் ஒரு மெழுகுவர்த்தியை வாங்கி தங்களது அஞ்சலியை செலுத்திக் கொண்டார்கள்..!

இந்த அளவுக்கு அவர்களைத் தாக்கும்வகையிலான அளவு செய்தித் தொகுப்பை வடிவமைத்த தோழர்களுக்கு எனது நன்றி..!


 

மேலும், இந்த நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு மாத காலமாக ஓய்வில்லாமல் உழைத்திருக்கும் ஒப்பற்ற தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், அன்றைக்கு தங்கள் இயக்கத்தினரை அழைத்து வந்து கட்சி மாநாடுபோல் நடத்திக் கொடுத்த பல்வேறு இயக்கத் தோழர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி..!

வெறும் 10,000 பேரின் எழுச்சி யாரை, என்ன செய்துவிட முடியும் என்று நினைக்க வேண்டாம்..! தமிழகம் முழுவதுமே பல்வேறு நகரங்களில் இது போன்ற மெழுகு திரி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. மிக்க மகிழ்ச்சி. இந்தச் சிறு துளி வரும் காலத்தில் பெரும் துளியாக மாறி வரக்கூடிய காலங்களில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் சக்தியா உருவெடுக்கலாம்.. அப்படியொரு சூழலை, இக்கட்டை பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அரசியல்வியாதிகளுக்கு நெருக்கடியை கொடுக்க இந்தச் சிறு பொறியே கூட பின்னாளில் உதவக் கூடும் என்று நான் திடமாக நம்புகிறேன்..!

நம்மால் முடிந்தது நடந்த படுகொலையை பகிரங்கப்படுத்தியிருக்கிறோம். நமது சக தோழர்களிடம், சகோதரர்களிடத்தில் இந்த விஷயத்தைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலை போல அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுக்கு ஒருவராவது யோசித்து வாக்களித்தால் ஒருவேளை நாம் அடைய வேண்டிய இலக்கைத் தொட ஒரு வாய்ப்பாவது கிடைக்கும்..!

இதனை முன் வைத்து இனிமேல் அடிமேல் அடி வைத்து நடப்போம் தோழர்களே..!

உலகில் எந்த சர்வாதிகாரியும் நிம்மதியாக இறந்ததாக சரித்திரம் இல்லை. அதேபோல் சிந்திய ரத்தத்திற்கு பதில் சொல்லாமல் எந்த சரித்திரமும் முடிவுற்றுதும் இல்லை.. காத்திருப்போம்.. அதுவரையில் போராடுவோம்..!

டெயில் பீஸ் :

நேற்றைய நிகழ்ச்சியில் மைக் பயன்படுத்தியது.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மாறாக கடற்கரை மணலில் நிகழ்ச்சி நடத்தியது.. கூட்டத்தில் நிபந்தனையை மீறி பேசியது ஆகிய மூன்று விஷயங்களுக்காக காவல்துறை மே 17 இயக்கத்தின் தலைமையாளர் திரு.திருமுருகன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.

இதனை அவர்களும் எதிர்பார்த்ததுதான். ஏனெனில் நேற்று மாலை கடற்கரை மணலில் தோழர்கள் கால் வைத்தவுடனேயே காவல்துறையினர் இதைத்தான் அவர்களுக்குத் தெரிவித்தார்கள். எங்கள் கடமையை நாங்கள் செய்வோம். நீங்கதான் கோர்ட்ல பார்த்துக்கணும் என்றார்கள்.

இதில் ஒன்றும் தவறில்லையே..! அத்தனை ஜனத்திரளைக் கட்டுப்படுத்த மைக் வசதிகூட இல்லையேல் எப்படி பேசுவது..?

புல் தரையிலேயே பத்தாயிரம் மக்களையும் அமர வைக்க முடியுமா? அப்படி அமர வைத்தால் கூட்டம் பெசண்ட் நகர் சர்ச் வரையிலும் போய் நிற்கும்.. அந்த அளவுக்கெல்லாம் செய்ய முடியாது என்பதால்தான் கடற்கரை மணலில் செய்ய முடிவெடுத்தார்கள்..!

பேசக் கூடாது என்பது இரு தரப்பும் முன்பே செய்து கொண்ட ஒப்பந்தம்தான். ஆனால் ஒரு நிகழ்ச்சியென்றால் வந்திருந்த உணர்ச்சிவசப்பட்ட கூட்டத்தினருக்கு ஆறுதலாக ஒரு சில வார்த்தைகளாவது பேசவில்லையெனில் எப்படி என்று இறுதிக்கட்டத்தில் பலரும் கருதியதால் பழ.நெடுமாறன் மட்டும் பேசலாம் என்று முடிவெடுத்து பேசியதாகச் சொல்கிறார்கள்..!

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் லட்சக்கணக்கான வழக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கப் போகிறது. போகட்டும். வழக்கைச் சந்திக்கும் துணிவும், நியாயமும், நேர்மையும் மே 17 இயக்கத் தோழர்களிடம் இருக்கிறது. அவர்களுக்கு நாம் என்றும் துணை நிற்போம்..

மெல்லிதயம் கொண்டோரே, மெழுகுதிரி ஏந்த மெரினாவிற்கு வாரீர்..!

20-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழீழப் படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை, பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிக வலிமையாக உணர்த்தும். எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.


கடந்த மே 18-ம் தேதி அன்று மெரினாவில் ஈழப் படுகொலைகள் நினைவாக மெழுகு திரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.



ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம்.

*பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.


இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச் செய்யுங்கள்.


இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஈழத்தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம் http://candlelightfortamils.blogspot.com

lightacandlefortam...@gmail.com

lightacandlefortamils@googlegroups.com

http://groups.google.com/group/lightacandlefortamils

வேண்டுகோள் :

அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் அனைவர்க்கும் அன்பு வணக்கம்.. வரும் ஜூன் 26 அன்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் அஞ்சலி நிகழ்விற்கான வலைமனை பட்டை இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கிறது அதனை தங்கள் வலைத்தளத்தில் ஜூன் 26 வரைக்கும் வைத்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்..

மேலும் துண்டுப் பிரசுரத்திற்கான நகல் ஒன்றும் இணைத்துள்ளோம். அதனை தேவைபடுகிற அன்பர்கள் பயண்டுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள் : ஜூன் 26
நேரம் : மாலை 5 மணி
இடம் : மெரினா கண்ணகி சிலை

ஈழத்துச் செய்திகள்..! - 12-11-2010

13-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இறுதிக் கட்டப் போரில் விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்..!

விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுத விபரங்களை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து இதுவரை 21 நீண்டதூர ஆட்லறிப் பீரங்கிகளும், சுமார் 800 பல்வேறு வகையான மோட்டார்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கைப் படைத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக படை வட்டாரங்களில் இருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு "ஐலன்ட்" நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆட்லறிகள் விபரம் வருமாறு :-

152 மி.மீ ரகத்தைச் சேர்ந்த ஆட்லறிப் பீரங்கிகள் ஆறு.
130 மீ.மீ ஆட்லறிகள் ஒன்பது,
122 மி.மீ ஆட்லறிகள்  ஆறு.
85 மி.மீ ஆட்லறிகள் இரண்டு. 

இவையனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார்கள்:-

120 மி.மீ மோட்டார்கள் 57,
82 மி.மீ மோட்டார்கள் 38,
81 மி.மீ மோட்டார்கள் 147,
60 மி.மீ மோட்டார்கள் 487,
கொமாண்டோ மோட்டார்கள் 65

ஆகியனவும் அடங்கியுள்ளன.

அத்துடன், ஆறு குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கிகள் மூன்று, 
பின்னுதைப் பற்ற பீரங்கிகள் 14   ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை சீனத் தயாரிப்பான ஆட்லறிகளும் மோட்டார்களும் என்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போர் முடிவுக்கு வந்து 16 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சிறியளவிலான ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்பட்டு வருகின்றன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும்பாலான கனரக ஆயுதங்கள் போரின் இறுதி ஐந்து மாதங்களில் ஏ-9 வீதிக்கு கிழக்குப் பக்கத்திலேயே மீட்கப்பட்டன.

இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மீட்கப்பட்ட ஆயுதங்களில்

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 21,
தெர்மோபெரிக் ஆயுதங்கள் 55,
40  மி.மீ கிரனேட் செலுத்திகள் 253,
ஏவுகணை செலுத்திகள் 14,
23 மி.மீ பீரங்கிகள் 07,
12.7 மி.மீ கனரகத் துப்பாக்கிகள் 96,
பல நோக்கு இயந்திரத் துப்பாக்கிகள் 273,
ரி 56 துப்பாக்கிகள் 14,232,
ஏ.கே 47 துப்பாக்கிகள் 103,
எம் 16 துப்பாக்கிகள் 63,
குறி பார்த்துச் சுடும் சினப்பர் துப்பாக்கிகள் 34,
9 மி.மீ கைத் துப்பாக்கிகள் 441,
மைக்ரோ கைத்துப்பாக்கிகள் 167,
14.5 மி.மீ இடம் நகர்த்தக் கூடிய விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் 25,
விமான எதிர்ப்பு ஏவுகணை கள் 08,
ரி 55 பிரதான மர் டாங்கி கள் 02,
152 மி.மீ, 130மி.மீ, 122மி.மீ, 120 மி.மீ பீரங்கிக் குண்டுகள் 3964,
விமானக் குண்டுகள் 1143,
கிளைமோர் குண்டுகள் 7069,
கைக்குண்டுகள் 35,315,
வெடிக்க வைக்கும் கருவிகள் 61,788,
புலிகளின் தயாரிப்பு வெடிபொருள்கள் 4517
 

ஆகியனவும் அடங்கியுள்ளன.

இதைவிட புலிகளின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் நடவடிக்கைகளுக்கான மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.  இவற்றில்...

167 மைக்ரோ கைத்துப்பாக்கிகளுடன் கூடிய 377 தற்கொலைத் தாக்குதல் அங்கிகள்,
6265 கிலோ எடையுள்ள சி 4 வெடிமருந்து,
188 கிலோ எடையுள்ள ரி.என்.ரி வெடி மருந்து,
3186 கிலோ ஜெலிக் நைற்,
40 தற்கொலை இடுப்புப் பட்டிகள்

உள்ளிட்ட பல பொருள்களும் அடங்கியுள்ளன.

இரண்டு கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 21 துப்பாக்கிகளில் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்தன.

20 தற்கொலைத் தாக்குதல் படகுகள்,
13 சேதமடைந்த கடற்புலிகளின் படகுகள்,
228 வெளியிணைப்பு இயந்திரங்கள்,
11 இஸ்ரேலிய மினியுசி துப்பாக்கிகள்
உள்ளிட்ட 279 வகையான பொருள்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

சிங்கள ராணுவம் கூட்டிச் சென்ற எங்கள் கணவன்மார்கள் எங்கே..?: யோகி, இரத்தினதுரை மனைவிமார் கதறல்..!

“2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் திகதி வட்டுவாகலில் வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட எங்கள் கணவன்மாரைப் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில்லை. அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதையாவது வெளிப்படுத்துங்கள்..” என விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களான யோகி மற்றும் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னர் சட்சியமளித்துள்ளனர்.

கற்றிந்த பாடங்களுக்கும் நல்லிணக்கணத்திற்குமான ஆணைக் குழுவின் யாழ்.மாவட்டத்திற்கான அமர்வு நேற்று அரியாலை சரஸ்வதி சனசமுக நிலையத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்கையில், “எங்கள் கணவன்மார் மே மாதம் 18-ம் திகதி வட்டுவாகல் பகுதியில் வைத்து ஏற்றிச் செல்லப்பட்டனர். இன்றுவரைக்கும் எந்த முடிவும் கூறப்படவில்லை” என்றனர்.

யோகியின் மனைவி ஜெயவதி சாட்சியமளிக்கையில் “கடந்த மே மாதம் 17-ம் திகதி நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்தோம். 18-ம் திகதி காலை சரணடையுமாறு இராணுவத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எமது கணவர் மற்றும் புதுவை இரத்தினதுரை மற்றும் பேபி சுப்பிரமணியம், லோரன்ஸ் திலகன் ஆகியோர் சென்றிருந்தனர்.


சரணடைந்தவர்கள் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர் இன்றுவரைக்கும் அவர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை..” என்றார்.

தொடர்ந்து புதுவை இரத்தினதுரையின் மனைவி சிறீரஞ்சனி தனது சாட்சியத்தில் “யோகியுடன் எனது கணவரும் ஏற்றிச் செல்லப்பட்டார். அவர் பற்றிய முடிவுகளும் எனக்குக் கிடைக்கவில்லை. அவர் பற்றிய முடிவுகளையும் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டதுடன் தமது கணவன்மாருடன் சுமார் 6 பேருந்துகளில் ஏற்றப்பட்டவர்களில் ஒருவருடைய விபரங்கள்கூட இன்னமும் வெளியிடப்படவில்லை..” எனவும் தெரிவித்தனர்.

மேலும் “தமது கணவன்மாரை ஜோன்சன் என்கிற பாதிரியாரே சரணடையுமாறு வலியுறுத்தியதாகவும் அவர் பற்றிய தகவல்கூட இன்னும் இல்லை” எனக் கூறினர்.

எனினும் இவ்விடயம் பற்றி தாம் ஆராய்வதாக கூறிய ஆணைக் குழுவின் தலைவர் சி.ஆர்.டீசில்வா “உங்களுடைய கணவன்மார் புலிகளுடன் தொடர்புடையவர்களா..?” என குறுக்குக் கேள்விகளை கேட்டனர்.

மகனை இழந்த தாய் ஈ.பி.டி.பி. கட்சிக்கு எதிராக ஆணைக் குழு முன் சாட்சியம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) முகாமுக்குள் 2006.02.02 அன்று சென்ற எனது மகன் இன்னும் திரும்பி வரவேயில்லை. அவரை அங்கு தேடிச் சென்றபோது தன்னை விரட்டியடித்ததாக நேற்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த விதவைத் தாய் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த கால யுத்த சூழலில் பிள்ளைகளை பறி கொடுத்த தாய்மாரில் ஒருவரான ரங்கநாதன் விசாலாட்சி என்கிற விதவைத் தாய் தேசிய நல்லிணக்க ஆணைக் குழு முன் சாட்சியம் வழங்கியபோது மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு :

சம்பவ தினம் யாழ். நகரப் பகுதிக்கு சென்று வருகின்றேன் என்று சொல்லி சைக்கிளில் புறப்பட்டு சென்ற மகன் திரும்பி வரவே இல்லை. அவர் ஈ.பி.டி.பி முகாமுக்குள் கூட்டிச் செல்லப்பட்டமையை கண்டதாகவும், அவர் திரும்பி வெளியில் வரவே இல்லை என்றும் நான் விசாரித்தபோது நேரில் பார்த்தவர்கள் கூறி இருந்தனர்.

நான் உடனடியாக ஈ.பி.டி.பி முகாமுக்கு சென்று மகனை விசாரித்தபோது என்னை அங்கிருந்து கலைத்து விட்டனர். திருப்பி அனுப்பினர். எனது கணவர் புற்று நோயால் இறந்து விட்டார். இரு பிள்ளைகளில்  மற்றவர் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்.

ஈ.பி.டி.பி முகாமுக்கு பின்னரும் பல தடவைகள் சென்று விசாரித்து இருக்கின்றேன். பலரிடமும் முறையிட்டிருக்கின்றேன். எந்த பலனும் இல்லை. எனவே நீங்கள்தான் எனது மகனை மீட்டுத் தர வேண்டும் என்று அந்த விதவைத் தாய் கண்ணீர் மல்க  தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு வாகரையில் உயர் பாதுகாப்பு வலயமும் சிங்கள குடியேற்றமும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே உள்ள கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகரை பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயமும் இதற்குள் பாரிய இராணுவ முகாமும் இதனை அண்டிய பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றவும் முயற்சி இடம் பெறுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

தற்போது இந்த பிரதேசத்தில் அதாவது வாகரைக்கு தெற்கே உள்ள காயாங்கேணி மாங்கேணி பனிச்சங்கேணி போன்ற இடங்களில் பிரதான வீதியின் இருமருங்கிலும் படையினரால் வேலி இடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன சுமார் 15 கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட பிரதேசத்தில் கடற்படையினரும் இராணுவத்தினரும் முகாமிடுவதற்கான முன்னேற்பாடுகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளன.

இந்த பிரதேசத்திற்குள் அடங்குகின்ற மாங்கேணி என்ற இடத்தில் அமைந்துள்ள மரமுந்திரிகை கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்காக கட்டுமானப் பொருட்கள் ஏற்கனவே இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்ததும் அறிவோம்.

இந்த அத்து மீறிய சிங்கள குடியேற்றங்களை உடன் நிறுத்துமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக பலமுறை பாராளுமன்றத்திலும் உரையாற்றி இருந்தார்கள் இதற்கும் மேலாக இந்தியாவிடமும் இந்த அத்துமீறிய குடியேற்றங்களை உடன் தடுத்து நிறுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும்படி கேட்டிருந்தார்கள் ஆனால் இவைகளால் எந்த பயனும் கிடைக்கவில்லை மாறாக சிங்கள அரசு திட்டமிட்டபடி தனது செயற்பாட்டை தொடர்கின்றதைக் காண்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசம் இயற்கை வளம் நிறைந்த தமிழரின் பூர்வீக பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் எதிர்காலத்தில் இந்த பிரதேசத்தில் தமிழர்கள் வாழ்வார்களா? என்பது கேள்விக்குறியாகவேதான் தென்படுகின்றது.

யாழில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்ற முயற்சி : திவயின பத்திரிகை தகவல்..!

யாழ். நாவற்குழி பிரதேசத்தில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

1983-ம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்களக் குடும்பங்கள் தற்போது நாவற்குழி பிரதேசத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு தமிழ்க் குடும்பங்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

50 தமிழ் குடும்பங்கள் குறித்த பிரதேசத்திற்கு வந்து தமது காணிகளை கைப்பற்ற முயற்சித்ததாக யாழ்ப்பாண சிங்கள மக்கள் அமைப்பின் தலைவி எச்.கே.கே. குமாரி சகுந்தலா தெரிவித்துள்ளார்.

88 சிங்களக் குடும்பங்கள் நாவற்குழி பிரதேசத்தில் தங்கியிருப்பதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் இன்னமும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாவற்குழி பிரதேசத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்கள் பலவந்தமாக விகாரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்கள் பலர் கடந்த போயா தினத்தின்போது இரத்மலானையிலுள்ள பௌத்த விகாரையொன்றுக்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இரத்மலானை ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்களே அவ்வாறு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தொழில் வழங்குவதாகக் கூறி பெரும் நாடகத்தையே ஆடி, அதன் மூலம் தமிழ் வர்த்தகர்களை தன் கைக்குள் போட்டுக் கொண்ட ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலை வலையமைப்பின் தலைவர் சுதத் தேவபுரவே அதற்கான சூத்திரதாரி என்று தெரிய வருகின்றது.

ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையே இனத்துவேசத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் என்று பரவலாகத் தெரிந்துள்ள நிலையில், அவரது பலவந்தப்படுத்திய பௌத்த வழிபாடானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு ஒப்பானது என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தமிழ், முஸ்லிம்களின் கையில் இலங்கையின் ஆடை உற்பத்தித்துறை இருப்பதை கையகப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆசியுடன் ஆடைத் தொழிற்சாலைத் துறையில் குதித்தவர்தான் சுதத் தேவபுர.

அதன்பின் அகில இலங்கை பௌத்த சம்மேளனம் மற்றும் பௌத்த மதத்தின் தீவிரப் போக்குக் கொண்ட அமைப்புக்களில் முக்கிய பதவிகளுக்கு தன் குடும்ப அங்கத்தினர்களை அமர்த்தும் அளவுக்கு அவர் செல்வாக்கானவராக மாறினார்.

அதன் காரணமாக பதவிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளுடனும் நல்லுறவைப் பேணிக் கொண்டு தமிழ், சிங்கள மக்களுக்கு எதிரான துவேசப் போக்குகளை வெளிப்படுத்தி வருவதில் முன்னின்ற அவர், இலங்கையில் சந்திக்குச் சந்தி புத்தர் சிலைகளை அமைக்கும் கலாசாரத்தின் முன்னோடியும் ஆவார்.

கிழக்கு விடுவிக்கப்பட்ட கையுடன் அங்குள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்பு என்ற போர்வையில் மில்லியன் கணக்கிலான அரச வங்கிகளின் கடனுதவி மற்றும் அரசாங்கத்தின் சலுகைகள் என்பவற்றைப் பயன்படுத்தி திருமலையின் தம்பலகாமம் பகுதியில் தமிழரின் நிலம் கபளீகரம் செய்யப்பட்டு கிழக்கிலங்கையின் முதலாவது ட்ரை ஸ்டார் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

அதற்கு சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்தின் உயரத்தைவிட உயரமான இடமொன்றில் புத்தர் சிலையொன்றை நிறுவும் யோசனையொன்றையும் அவர் அக்காலத்தில் ஜனாதிபதியிடம் முன் வைத்திருந்தார். ஆயினும் குறித்த திட்டத்திற்கு சில முக்கியஸ்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் அது ஏற்கப்படவில்லை.

முறிகண்டியில் பௌத்த சிலை அமைப்பதற்கான முழு ஒத்தாசையும் வழங்கியவரும் அவர்தான். இப்படியான இனத்துவேச வரலாறு கொண்ட சுதத் தேவபுரவின் ஆடைத் தொழிற்சாலையின் உற்பத்திகளை தமிழர்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும், வெளிநாடுகளில் தனக்கான கூடிய சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் அவர் ஆடிய நாடகம்தான் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலை வேலை வாய்ப்பு நாடகமாகும்.

அதனை வைத்து தற்போதைக்கு பல நாடுகளில் அவரது உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் வட-கிழக்கின் பெரும் பரப்பளவிலான காணிகளும் அவரது கம்பெனிக்கு வெகுமதியாக கிடைக்கவுள்ளன என்றும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளம் காரணமாக பாராளுமன்றத்திற்கு இரண்டு கோடி நஷ்டம்

கொழும்பில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

அதற்கு மேலதிகமாக பாராளுமன்றத்தின் சூழலில் பொருத்தப்பட்டிருந்த பல கருவிகள் பலத்த சேதத்துக்குள்ளாகியிருப்பதுடன், அவற்றைப் பழுது பார்க்கும்  சாத்தியம் குறித்து இன்னும் எதுவும் கூற முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 16-ம் திகதி பாராளுமன்ற அமர்வு கூடுவதற்கு முன்பாக  சேதங்களைப் புனரமைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அத்துடன் சகதி படிந்துள்ள பாராளுமன்றச் சூழலை சுத்தப்படுத்த விசேட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை அரசமைப்பில் உறுதி செய்வதே தீர்வுக்கு வழி : பேராசிரியர் சிற்றம்பலம் சாட்சியம்!

வடக்கு கிழக்குத் தமிழர் தாயகம் என்பதை அரசமைப்பில் உறுதி செய்வதன் மூலமே இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று வாழ்நாள் பேராசிரியரும், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

யாழ். செயலகத்தில் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழு முன் பேராசிரியர் சிற்றம்பலம், பேராசிரியர் ரத்தினஜீவன் கூல், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை  ஆகியோர் நேற்று சாட்சியம் அளித்தனர்.

பேராசிரியர் சிற்றம்பலத்தின் காரசாரமான சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மத்தியில் தேசிய இனத்துடன் அதிகாரப் பரவலாக்கி மாநிலத்தில் சுயாட்சிகொண்ட சமஷ்டி அரசமைப்பை உருவாக்குவதன் மூலமே இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண முடியும்.

கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட அரசமைப்புக்கள் மூலம் எல்லா நன்மைகளையும் சிங்கள மக்கள் மட்டுமே அனுபவித்தனர். ஆனால் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தமது அபிலாஷைகளை எட்டாத நிலையில் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டனர்.

1987-ல் செய்து கொள்ளப்பட்ட இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முக்கிய ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவ்வாறு வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை அரசமைப்பில் உறுதி செய்து கொண்டு வரப்படும் தீர்வு மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றார் அவர்.

பேராசிரியர் ரத்தினஜீவன் கூல் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வாக அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதான நியாயமான தீர்வொன்றை அரசாங்கம் முன் வைக்க வேண்டும் என்பதுடன் அதற்கு காலம் தாழ்த்தவும் கூடாது” என்று பேராசிரியர் ரத்தினஜீவன் கூல் வலியுறுத்தியுள்ளார்.

அங்கு சாட்சியமளித்த பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரும் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க சென்றிருந்த போதும் நேரமின்மை காரணமாக நேற்று அவரது சாட்சியம் பதியப்படவில்லை. அவர் இன்று சாட்சியமளிக்கவுள்ளார்.

பெரும்பாலும் அவர் அரசாங்கம் ஏற்கெனவே தயாரித்துக் கொடுத்த அறிக்கையை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவர் போன்று அரசுக்கு சார்பான முறையில் சாட்சியமளிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் அல்லது ரூபவாஹினியில் செயற்பாட்டுப் பணிப்பாளர் எனப்படும் வேர்க்கிங் டிரெக்டர் பதவிக்கு தற்போது தயா மாஸ்டர் பெயர் அடிபடுகின்றது. மிக விரைவில் அவருக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தவுடன் அவர் அப்பதவியில் நியமிக்கப்படவுள்ளார்.

மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படலாம்: யாழில் சி.வி.கே. சாட்சியம்

யுத்தம் முடிவடைந்துள்ள போதும் தமிழ் மக்கள் அபிலாசைகள் முடிவு பெறவில்லை. சாத்வீக வழியில் அதனை பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையேல் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் வருவதை எவராலும் தடுக்கமுடியாது என நல்லிணக்க ஆணைக் குழு முன் சி.வி.கே.சிவஞானம் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும்; நல்லிணக்க ஆணைக் குழுவின் சாட்சிய பதிவுகள் இன்று மாலை யாழ்ப்பாண செயலகத்தில் இடம் பெற்றன. இதன்போது பலரும் சாட்சியமளித்தனர். அத்துடன்,  அமெரிக்க தூதரக அதிகாரியும் பார்வையாளராக இருந்தார் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜன்கூல், பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் சிற்றம்பலம், முன்னாள் மாநகர ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் போன்றோர் சாட்சியமளித்தனர்.

இதன்போது கருத்துரைத்த ராஜன் கூல், தாம் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக தெரிவு செய்யப்பட்டதும் பின்னர் அதற்கு எதிராக நடந்த விடயங்களையும் எடுத்துரைத்தார்

நோர்வே ஏற்பாட்டிலான பேச்சுவார்த்தையின்போது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பக்கசார்பான விடயங்கள் இடம் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

பாலசுந்தரம்பிள்ளையும், சிற்றம்பலமும் கடந்த கால கசப்பான நிகழ்வுகளை பற்றி பேசினர்

சி.வி.கே.சிவஞானம் கருத்துரைக்கையில் யுத்தம் முடிவடைந்துள்ளபோதும் தமிழ் மக்கள் அபிலாசைகள் முடிவு பெறவில்லை. சாத்வீக வழியில் அதனை பெற்றுக் கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையேல் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வருவதை எவராலும் தடுக்க முடியாது எனக் குறிப்பிட்டார்

அடிப்படையான கட்டுமானப் பணிகளை செய்வதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு முடிவை எட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

உதயன் பத்திரிகையின் ஆசிரியர் கானமயில்நாதன் சாட்சியமளித்தார். அவர் கடந்த காலத்தில் ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை உட்பட்ட ஊடகங்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை ஆணைக் குழுவின் முன்னால் தெரிவித்தார்.

யாழ்ப்பாண செயலகத்தில் இடம் பெற்ற சாட்சிய நிகழ்வை அடுத்து குருநகரில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அங்கு பலர் சாட்சியமளித்தனர்.

அனைவருமே தமது உறவுகள் காணாமல் போனமையும் கைது செய்யப்பட்டமையும் அதன் பின்னர் காணாமல் போனமையும் மற்றும் கடத்தப்பட்டமையும் குறித்த முறைப்பாடுகளை சாட்சியங்களாக தெரிவித்தனர்

இதேவேளை இன்றைய சாட்சிய நிகழ்வின் அமெரிக்க தூதரகத்தின் செயலக மட்ட அதிகாரி ஒருவரும் தூதரகத்தின் தமிழ் அதிகாரியான பத்மினியும் பார்வையாளர்களாக பங்கேற்றமை முக்கிய அம்சமாக இருந்தது.

7 கோடி ரூபா வங்கிக் கொள்ளை - இராணுவத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய்களுக்குத் தொடர்பு

ஏழு கோடி ரூபா வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்களுக்கு தொடர்பு இருப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எச்.எஸ்.பி.சீ வங்கியின் டெலர் இயந்திரங்களுக்கு பணம் போடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஏழு கோடி ரூபா பணம் களனி பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் எனவும், இன்னும் இரண்டு பேரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவினர் கொள்ளை, கொலை மற்றும் கப்பம் பெறல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

விசேட அதிரடிப் படையினரால் ஐந்து பொதுமக்கள் மன்னாரில் கைது

விசேட அதிரடிப் படையினர், மன்னாரில் கடந்த வியாழக்கிழமையன்று பிற்பகல் 3 மணியளவில் ஆசிரியர் ஒருவர் உட்பட 5 பேரை கைதுசெய்துள்ளனர்.

இவர்களில் இருவர் குடும்பஸ்தர்கள். மூவர் இளைஞர்களாவர். இவர்கள் ஐவரும் மன்னார் பேசாலை பிரதேசத்தில் வைத்து தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தியா அருள்சீலன் மிரிந்தா, செபஸ்டியன் சீலன் குரூஸ், செபஸ்டியன் ஜெனிபர் குரூஸ், சேவியர் பெனோ பென்டியோ மற்றும் சந்தியாகோ மாசன்ட் குரூஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இந்த நிலையில் இவர்கள் ஐவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அவர்களின் வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர்.

யாழ். அரச அதிபரின் செயற்பாடுகள், தமிழ் மக்கள் மத்தியில் மதிப்பை குறைத்துள்ளது

யாழ்ப்பாணத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழு மேற்கொண்டு வரும் சாட்சியங்களின்போது யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் பார்வையாளராக சமுகம் அளிப்பது சாட்சியாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

தமது கடமைகளை விட்டுவிட்டு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் நல்லிணக்க சாட்சியங்களில் பங்கேற்று வருகின்றார். அத்துடன் நல்லிணக்க குழுவுக்காக பரிந்து பேசும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

எனவே நல்லிணக்கக் குழு முன்னிலையில் தமது ஆதங்கத்தை தெரிவிக்க வேண்டும் என வருகின்றவர்கள்கூட, சில விடயங்களை தெரிவிக்காமல் விடுவதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக் குழுவின் சாட்சியங்களின் போது அங்குள்ள அரசாங்க அதிபர்கள் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என யாழ்ப்பாண செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

அத்துடன், அண்மையில் இமெல்டா சுகுமார், கொழும்பில் வைத்து நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் அளித்த சாட்சியங்களும் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

யுத்தக் காலத்தில் அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மதிப்பை அந்த சாட்சியம் குறைத்து விட்டதாகவே கருதப்படுகிறது.

ஈழத்துச் செய்திகள் : 01-11-2010

02-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

டென்மார்க்கில் வசித்து வரும் மூன்று புலி ஆதரவாளர்கள் நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய மனோகரன், பொன்னம்பலம், தம்பையா ஆகியோரே இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.  இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்களை மேற்கொண்டதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டென்மார்க் சட்டத்தரணி ஜோன் எல்ம்க்யூட்ஸ் என்பரிவினால் புலி ஆதரவாளர்களின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
வழக்கு விசாரணைகளின்போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் 111 நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், அனைத்துலக நீதிமன்ற பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  வழக்குத் தொடர்ந்த குறித்த புலி ஆதரவாளர்கள் மாதாந்தம் ஒரு லட்சம் யூரோக்களை புலிகளுக்காக திரட்டியுள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாண நூலக அத்துமீறிய செயலுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு தொடர்பில்லை : அரச ஊடகங்கள் பரப்புரை..!

யாழ்ப்பாண பொது நூலகத்துக்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவத்துடன், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுக்கு தொடர்பில்லை என அரசாங்க பத்திரிகைகளான தினகரன் மற்றும் சண்டே ஒப்சேவர் ஆகியவற்றில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் நுழைந்த ஜனாதிபதி செயலத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர், அங்கு முறைகேடாக செயற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.  எனினும் இது தொடர்பில் காவற்துறையினர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இவ்வாறான சம்பவம் ஒன்று அங்கு நடைபெறவில்லை என தெரிவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் திட்டமிட்ட குற்றச்சாட்டு எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மீண்டும் ஒருமுறை பொது நூலகம் மீதான வன்முறையை பிரயோகிக்க அரசாங்கம் துணை போகாது எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் இந்த அறிக்கை உள்நாட்டின் வேறு எந்த பத்திரிகையிலும் வரவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர் விவகாரம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பிளவு

பல்கலைக்கழக மாணவர் பிரச்சினை தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் நடவடிக்கைகளுக்கு ஆளும் கூட்டணி அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் செயற்படும்விதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சருக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணவர் போராட்டங்களில் ஈடுபட்ட பல மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிப்பதன் மூலமோ சிறையில் அடைப்பதன் மூலமோ எவ்வித பலனும் கிட்டப் போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக் காட்டியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களை அரசியலிலிருந்து முழுமையாக வெளியேற்ற முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றுவதனை ஏற்றுக் கொள்ள முடியாதென கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

திருகோணமலையில் முஸ்லிம் குடியிருப்புகள் மீது பாதுகாப்புத் தரப்பினர் தீ வைப்பு

திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்தில் ஏழை மக்கள் குடியிருந்த சுமார் 50 குடிசைகளை இன்று காலை பாதுகாப்புத் தரப்பினர் தீ வைத்து எரித்துள்ளதாக தெரிகிறது.

குறித்த காணிகளில் குடியிருந்தவர்களுக்கு அவற்றின் அனுமதிப் பத்திரம் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், அதன் காரணமாகவே அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த காணிகளில் ஏழை முஸ்லிம்கள் சிலர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதுடன், அப்பிரதேசத்தில் நீண்ட காலமாக பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டிருந்ததை ஆவணங்கள் மூலமாக உறுதிப்படுத்தவும் முடியுமென்று தெரிவிக்கும் கிண்ணியா பிரதேச செயலக அதிகாரியொருவர், திருமலை மாவட்டத்தில் முஸ்லிம் குடியிருப்புகளைச் சுற்றிலும் சிங்களக் கிராமங்களை உருவாக்கும் அரசின் இரகசிய செயற்திட்டத்துக்கு அமைவாகவே பிரஸ்தாப தீ வைப்புச் சம்பவம் இடம்  பெற்றுள்ளதாக கூறுகின்றார்.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களின் காணிகளைப் பறித்தெடுக்கும் சதித்திட்டங்களின் ஓரு அங்கமாகவே பிரஸ்தாப தீ வைப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டும் சமூக சேவையாளர் ஒருவர், தீ வைக்கப்பட்ட குடியிருப்புக்கள் சட்ட விரோத காணிகளில் அமைக்கப்பட்டிருந்தால்கூட அங்கு வாழ்ந்த மக்களை வெளியேற்றுவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

அதற்குப் பதிலாக அப்பாவி ஏழை மக்களின் உடைமைகளையும் சேர்த்து குடிசைகளுக்குத் தீ வைத்திருப்பதன் பின்னணியில் பலமான சதித்திட்டம் ஒன்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடும் அவர், பெரும்பாலும் அந்த இடங்களில் விமானப் படையினருக்கான வீடமைப்புத் திட்டமொன்று மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

ஏனெனில் இன்றைய தீ வைப்புச் சம்பவத்தின் போது வழக்கத்துக்கு மாறாக பொலிசாருடன் விமானப் படையினரும் இணைந்து தீ வைப்பில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றதாகவும் குறித்த சமூக சேவையாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள், இன்று காலை பொலிஸாரால் தாக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்து வெளியேறி அல்-அதான் வித்தியாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்த 213 குடும்பங்களுள் 152 முஸ்லிம் குடும்பங்களும், 61 தமிழ் குடும்பங்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

இன்று காலை நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்த மக்கள் வெளியேறிய பின், சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டது. அரசாங்க அதிபரின் அனுமதியுடன் மீளக்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களே இவ்வாறு பொலிஸாரால் விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மீளக்குடியேறிய மக்களின் 20-ற்கும் மேற்பட்ட குடிசைகள் எரிக்கப்பட்டதோடு பள்ளிவாசல் முற்றுமுழுதாக நாசமாக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வளாகத்தில் நட்சத்திர விடுதி கட்டக்கூடாது - பேராசிரியர் சிற்றம்பலம் கோரிக்கை..!

“தமிழர்களின் இனத்துவ அடையாளங்களைப் பறிக்கும் ஈனச் செயலிற்கு தமிழினத்தைச் சேர்ந்த சில புல்லுருவிகளும் பண முதலைகளும் துணை போகின்றார்கள். இவர்களை வரலாறு மன்னிக்கப் போவதில்லை” என பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் சுட்டிக் காட்டியுள்ளார். நல்லூர் ஆலயச் சுற்றாடலில் நட்சத்திர விடுதி அமைப்பது தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “யாழ் மாவட்டத்தில் நட்சத்திர விடுதியொன்றை அமைப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. ஆனால் அது நல்லூர் ஆலயச் சுற்றாடலில் அமையக்கூடாது. போர்துக்கீசர் இலங்கைக்கு வந்த காலப் பகுதியில் இலங்கையில் இருந்த மூன்று அரசுகளில் யாழ்ப்பாண அரசும் ஒன்று. இதன் ராசதானி நல்லூரிலேயே அமைந்திருந்தது.

தற்போது விடுதி அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் யாழ்ப்பாண அரசின் அரச காரியங்கள் பலவும் நடைபெற்ற ஓரு பகுதி. எனவே இந்த இடம் தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு இடமாகும். இதனாலேயே இந்த இடத்தில் அமைக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

உன்மையில் அரசாங்கம் சிங்கள மன்னர்களினதும் பாரம்பரியங்களினதும் தொல்பொருட்களை எப்படிப் பாதுகாக்கின்றதோ அப்படி எமது சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும்.  ஆனால் மாறாக எங்கள் அடையாளங்களை சிதைக்கின்ற செயற்பாடுகளையே செய்கின்றனர். அதற்கு இங்குள்ள சில புல்லுருவிகளும் துணை போகின்றார்கள். இது வேதனைக்குரியது” என்றார்.

போர் முடிவுற்றாலும் அரசாங்கம் கடன் பெறுவதனை நிறுத்தவில்லை : ஐ.தே.க  குற்றச்சாட்டு!

போர் நிறைவடைந்துள்ளபோதிலும் அரசாங்கம் கடன் பெறுவதனை நிறுத்தவில்லை எனவும், அதிகளவான வட்டிக்கு அரசாங்கம் வெளிநாடுகளிடமிருந்து கடன் பெற்றுக் கொள்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கடன் மீளச் செலுத்தப்படும்போது அதிகளவான சுமையை மக்கள் சுமக்க நேரிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதனை விடவும், அவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் மன்னிப்பு கோர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்ற அமைச்சர்கள், கிழக்கில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) மன்னிப்பு கோர வேண்டுமென பிள்ளையான் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் மௌனம் காத்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரை நகர் கடற்கரைக்கான புதிய வீதி இன்று திறந்து வைக்கப்பட்டது

கசூரினா கடற்கரை என்றழைக்கப்படும் காரை நகர் கடற்கரைக்கான புதிய வீதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரால் குறித்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முற்று முழுதாக கொங்கிறீட்டினாலான பிரஸ்தாப புதிய வீதி அரைக் கிலோ மீற்றரை அண்மித்த தூரமும், சுமார் 30 அடிகள் அகலமும் கொண்டது என்று தெரிய வருகின்றது.

வீதி நிர்மாண வேலைகளுக்கென 20 மில்லியன் செலவிடப்பட்டிருந்ததுடன், நிர்மாணப் பணிகளின்போது பொதுமக்களின் பங்களிப்பும் பெறப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீதியின் நிர்மாணம் தொடர்பான சிந்தனையை முதலில் முன் வைத்தவர் காரை நகர் பிரதேச சபையின் செயலாளராகவிருந்து காலம் சென்ற சிவஞானம் என்பவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா - இந்தோனேசியா பேச்சு

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிள்ளார்ட்கும், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுதோயோனோ ஆகியோர் இன்று காலை பேச்சு நடத்தியுள்ளனர்.

ஆசிய பசுபிக் நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜுலியா கிள்ளர்ட், இன்று இந்தோனேசிய சென்று அவரை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்துவதற்கு பிராந்திய ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது குறித்து பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு திமோரில் அகதிகளை பராமரிக்கும் மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் பேசப்பட்டதாக ஏ.பி.சி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே அவுஸ்திரேலியா பிராந்திய ஒத்துழைப்பு குறித்த பிரேரனை ஒன்றை முன்வைத்துள்ளது.

எனினும் இதற்கு கிழக்கு திமோர் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இதற்கு இந்தோனேசியாவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து வரும் அகதிகளை இந்தோனேசியாவிலேயே தடுத்து நிறுத்தும் வகையிலான முயற்சிகள் இனி வரும் காலங்களில் அவுஸ்திரேலியாவினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பிலான உள்ளடக்கங்களை முழுமையாக அறியாதவரையில் அவுஸ்திரேலியாவின் கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என மலேசியா தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பு விளக்க மறியற் சாலையில் தமிழ் கைதி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்

கொழும்பு விளக்க மறியற் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்தார்.

விசுவமடு முல்லைத்தீவைச் சேர்ந்த 42 வயதுடைய குணரெட்ணம் மனோகரன் என்பவரே தன்னை விடுதலை செய்யக் கோரி இன்று காலை 7 மணி தொடக்கம் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள கைதியின் கோரிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் கடந்த 26.10.2008-ம் திகதி அன்று விசுவமடு முல்லைத்தீவில் வைத்து பயங்கரவாத சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்க மறியற்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தான் பல தடவைகள் தனது விடுதலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்தும் ஆனால் இதுவரை தனது விடுதலை தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து விளக்க மறியற்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்,

அதே நேரம் தனது மூன்று குழந்தைகளும் மனைவியும் விசுவமடு 12-ம் கட்டை புணர்வாழ்வு முகாமில் உள்ளதாகவும் இவர்களைப் பராமரிப்பதற்கும் பிள்ளைகளைப் படிப்பிற்பதற்கும் தனது மனைவியால் முடியாமல் இருப்பதாகவும் இதனால் தன்னை விடுதலை செய்து தனது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைவதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.  தனது இந்த கோரிக்கை நிறைவேறும்வரை தான் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடரப் போவதாகவும் அந்த கோரிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவரின் மனைவி மேரி லூசியா வயது 37, குழந்தைகள் மெரிசலா(பெண்) வயது-10, திரிசலா(பெண்) வயது-8, நிர்மலன்(ஆண்) வயது-2 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலையில்லாப் பட்டதாரிகள், வெய்ட்டர் பணிகளை செய்தாலும் தவறில்லை : அமைச்சர் திஸ்ஸாநாயக்கா பேச்சு.. 

“வேலையில்லாப் பட்டதாரிகள் வெய்ட்டர் பணிகளை செய்தாலும் தவறில்லை. நாட்டுக்கும் வீட்டுக்கும் சுமையாக இருப்பதனை விடவும் ஹோட்டல் ஒன்றில் வெய்ட்டராக கடமையாற்றுவது எவ்வளவோ மேல்..” என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் வேலையில்லாப் பட்டதாரிகள் தொழில் கிடைக்கும்வரையில் ஏதாவது ஓர் தொழிலில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில வேளைகளில் ஹோட்டல்களில் வெய்ட்டர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் வெளிநாடுகளில் பட்டதாரிகள் பணியாற்றுவதாகவும் அதனை அவர்கள் இழிவாக கருதவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தராதரம் பாராது தமக்கு வழங்கப்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பட்டதாரிகள் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக வெளிநாடு சென்று கூலி வேலைகள், பத்திரிகை விநியோகம் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலைவாசி உயர்வை எதிர்த்து ஜே.வி.பி. நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்  நடத்தியது.

விலைவாசி உயர்வு, அரசின் அதிகூடிய வரி விதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக ஜே.வி.பி. நேற்று கொழும்பு மெனிங் மார்க்கட் பகுதியில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இடம்பெற்றது.

நாடு தழுவிய ரீதியில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளன என ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  கொழும்பு மெனிங் மார்க்கட்டில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அந்தத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே ஆட்சியின் கீழ் நாட்டில் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதோடு, வரி விதிப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2005-ம் ஆண்டில் நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அரசு மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியது.
அதாவது, தற்போது யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது. பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக எதுவும் செய்ய முடியாது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் விலை குறைக்கப்பட்டு, மக்களின் வாழ்க்கைச் செலவு, வரி விதிப்புகள் ஆகியவை குறைக்கப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.  ஆனால், ஜனாதிபதி மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

யுத்தம் நடைபெற்றதால் அனைத்துச் சுமைகளையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். தற்போது பொருளாதாரத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட முடியாது என அன்று அரசு வழங்கிய வாக்குறுதிகளை மக்கள் ஏற்றனர்.  ஆனால், யுத்தம் நிறைவடைந்து 17 மாதங்கள் கழிந்தும் மக்களின் வாழ்க்கைச் செலவு இதுவரை குறைவடையவில்லை.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 46.6 வீதமானோரின் நாளாந்த வருமானம் இரண்டு அமெரிக்க டொலர்களுக்கும் குறைவு. அது மட்டுமன்றி, பிறக்கும் குழந்தைகளில் 29.4 சதவீதமானவர்கள் நிறை குறைந்தவர்கள்.

குறைந்த வருமானம் பெறுபவர்களில் 20 சதவீதமானவர்களுள் தேசிய வருமானத்தில் 4.6 சதவீதம் வருமானத்தையே பெறுகின்றனர். இதனால் மூன்று நேர உணவு உண்ண வேண்டியவர்கள் உணவு வேளையை இரண்டு நேரமாகக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

எனவே, நாட்டில் தற்போது காணப்படும் பொருட்களின் விலை உயர்வு, வரி விதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்.

இப்படி அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் குழுவை புறக்கணிக்கும் போராட்டம்

எதிர்வரும் நவம்பர் 03-ம் திகதி முதல் அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான நடைபெறும் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் பங்கெடுக்குமாறு ”தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள்”  எனும் அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த புறக்கணிப்பு போராட்டத்திற்கு அனைவரும் சமூகம் கொடுக்குமாறு தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள் சார்பில் சூ பொல்ட்டன் அவர்கள் ஊடக அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.  இப்போராட்டத்திற்கு பல இடதுசாரி அமைப்புக்களும், தமிழ் அமைப்புக்களும் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.

இம்மின்னஞ்சல் ஊடாக தாங்களும் உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.  இந்நிகழ்வு சம்பநதமான விளம்பரமும், ஊடக அறிக்கையும் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோன்ற ஓர் பகிஷ்கரிப்பு போராட்டம் சிட்னியிலும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி "Voice of Tamils" அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவ்விரண்டு போராட்ட நிகழ்வுகளிற்கும் மெல்பேர்ன், சிட்னி வாழ் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவு ஏற்பாட்டாளர்களினால் எதிர்பார்க்கப்படுகின்றது.