ஒரு கொலைகார ராபின்ஹூட்..!

05-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


''அடப்பாவி... உருப்படுவியா நீ? அந்தப் புள்ளையை அநியாயத்துக்கு மாட்டி​விட்​டிருக்​கியே... போதாத​துக்கு எங்கிட்டேயே வந்து குசலமா விசாரிக்​கற? துடைப்பம் பிஞ்சி போயிடும்!'' என்றபடி ஒரு கிழவி ஆக்ரோஷமாய் அடிக்கவே வந்துவிட்டார்.

 ''ஏம்ப்பா... ரோட்லே போன ஆட்​களை எல்லாம் பிடிச்சாந்து குளோஸ் பண்​ணாப்ல எழுதறியே! தனக்குத் துரோகம் பண்ணினவங்க, தன்னைக் கொல்லப் பாத்தவங்களைத்தானே குளோஸ் பண்ணார் அண்ணன்... இவரைப் போயி..'' என்று ஓர் இளைஞர் வாதம் புரிந்தார்.

மற்றொரு ஆட்டோ டிரைவர், ''ஒரு விஷயத்தை மறந்துடாதீங்க... தலைவர் எப்படியும் வெளியே வந்துடுவார். அவரைப்​ பத்தி உங்களுக்குத் தெரியாது... இப்ப அவ்வளவுதான் சொல்ல முடியும்!'' என்றார்.

''ஏய், ராமண்ணனைக் கூப்பிடுடா... முத்து, மங்களா! ஓடியாங்க சீக்கிரம்... இந்தப் பயதான் பெரிய அதிகாரிங்களைப் பார்த்து விஷயத்தைச் சொல்லி, மச்சானை மாட்டவெச்சிருக்கான்...'' என்று யாரோ கோஷம் போட... நிமிஷத்தில் நம்மைச் சுற்றி 15 பேர்! இரண்டு போலீஸ்காரர்களையும் அழைத்துப் போயிருந்ததால், பிழைத்தோம். இல்லையேல்..?!

- மேற்படி 'டயலாக்’ மற்றும் 'அனுபவங்​கள்’ எல்லாம் ஆட்டோ சங்கர் பற்றி, அவர் இருந்த பகுதியில் நாம் போய் விசாரிக்கும்​போது கேட்டவை!

இந்த அளவுக்கு சங்கருக்கு ஏரியாவில் செல்வாக்கு. ஏரியாவில் யாருக்காவது கல்யாணம் என்றால், முதல் பத்திரிகை சங்கருக்குத்தான். கையில் அழைப்புப் பத்திரிகையை வாங்கியவுடன், 3,000 ரூபாய் கொடுத்துவிடுவார். பின்னர் கல்யாணத்துக்கு முதல் நாளே போய், ''உதவி ஏதாச்சும் வேணுமா..?'' என்று கேட்டு, முடிந்த உதவிகளைச் செய்வார். துக்க காரியத்திலும் சங்கரின் வருகைதான் முதலாவதாக இருக்கும்.

86-ம் ஆண்டு மத்தியில் இவரின் ஏரியாவில் இருந்த ஒரு மூதாட்டி இறந்துவிட்டார். அவருக்கு உறவினர் யாரும் இல்லை. சங்கர் தன் கூட்டாளிகளுடன் போய் மூதாட்டிக்குக் கொள்ளிவைத்து, மொட்டையும் போட்டுக்  கொண்டார்!

ஓர் இரவுப் பள்ளியும் நடத்தி வருகிறார் சங்கர். பள்ளிக்கு ஏரியா குழந்தைகள் எல்லோரும் ஆஜராகி​விடுவார்கள். இதற்குக் காரணம், பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல 'இரவு உணவு’ உண்டு. வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டையும், ஒரு நாள் மீன், ஒரு நாள் சிக்கன் என்று உண்மையான சத்துணவு அங்கே கிடைக்கும். பல  இரவுகளில், சங்கரும் குழந்தைகளுடன் அமர்ந்துதான் சாப்பிடுவாராம்!

சங்கருக்குப் படிப்பில் நிறைய ஆர்வம் உண்டு. இதனாலேயே யாராவது சங்கரிடம், ''ஃபீஸ் கட்டணும்... புக் வாங்கணும்...'' என்று சொன்னால், உடனே ரூபாய் கொடுத்துவிடுவார்.  'நன்றாகப் படிக்கும் எனக்கு, பண வசதி செய்துதர யாராவது முன்வருவார்களா..?’ என்று ஒரு பத்திரிகையில் விளம்பரம் செய்து இருந்த ஓர் இளைஞருக்கு, கடந்த மூன்று வருடங்களாக உதவி புரிகிறார். இப்போது அந்த இளைஞர் சட்டம் (மாலை வகுப்பு) படித்து வருகிறார்.

சங்கர் தன் இரண்டாவது மனைவி சுந்தரியையும் கொலைதான் செய்திருப்பார் என்று போலீஸார் கருது​கிறார்கள். ஆனால் சங்கர், சுந்தரியின் படத்தைத் தன் வீட்டு பூஜை அறையில் வைத்து இருந்தார். படத்தைச் சுற்றிலும் சுந்தரியின் பிறப்பு இறப்பு தகவல், தன்னோடு வாழ்ந்த நாட்கள் போன்ற விவரங்களைக் கைப்பட எழுதி உள்ளார்.

இந்த ஏரியா அரசியல்வாதிகளுக்கு, 'தலைவர்’ என்றாலே சங்கர்தான். எல்லாக் கட்சிகளுக்கும் உதவி புரிபவர். எந்தக் கட்சி கூட்டம் போட்டாலும் 2,000 ரூபாய் பணம், தனக்கு வேண்டிய லாட்ஜில் இரண்டு ரூம் மற்றும் வாகன வசதி செய்து கொடுப்பார். இதனால், அரசியல்வாதிகள் யாரும் சங்கரின் போக்கைத் தட்டிக் கேட்டதே இல்லை!

இப்படிப் பல வகைகளிலும் எல்லா 'நெளிவு சுளிவு’​களையும் புரிந்துகொண்டு பிரபலமாகி வந்த சங்கர், எதிர் வரும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருந்தார்.

''எந்தக் கட்சி சார்பாக, யார் மூலம் ஸீட் கேட்டார்..?'' என்று விசாரித்தபோது, ஒரு வாரியத்தின் முன்னாள் தலைவர் பெயரைச் சொன்னார்கள். அவரையே நேரில் பார்த்து விஷயத்தைக் கேட்டோம். அவர், ''ஆமாம்... இப்ப அதுக்கென்ன? தம்பி, சங்கர் கொலை பண்ணியிருக்கான்னு போலீஸ்தான் சொல்றாங்களே ஒழிய, சட்டம் சொல்லிடுச்சா..?! இப்ப அரசியல்ல இருக்கற எல்லாரும், ஏதாவது ஒரு வகையிலே யாரையாவது கொலை பண்ணினவங்கதான். அப்படி இருக்கறப்ப, சங்கர் புதுசா எதையும் பண்ணிடலியே.  அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... 'சங்கரும், அவனோட கூட்டாளி​களும்தான் எல்லாத்துக்கும் காரணம்’னு எல்லாரும் எழுதுறீங்க... அது தப்பு. சங்கரை ஆட்டி  வெச்ச ஒரு சூத்ரதாரியை விட்டுட்டீங்க... அந்த சூத்ரதாரி தலைமையில் ஏகப்பட்ட சங்கருங்க, மெட்ராஸ்லயும் மெட்ராஸைச் சுத்தியும் இருக்காங்க... அதைக் கண்டு பிடிங்க. அதை விட்டுட்டு 'அழகிகளை அனுபவித்த எம்.எல்.​ஏ-க்கள்’ மாதிரி விஷயங்கள் முக்கியமில்ல...'' என்று நமக்கு  அட்வைஸ் செய்து அனுப்​பினார்.

மீண்டும் திருவான்மியூர் சென்று, பல இடங்கள் அலைந்து விசாரித்தோம். கிடைத்த தகவல்கள்...

சென்னையில் புறநகர்ப் பகுதியாக விளங்கும் ஏரியா திருவான்மியூர். இங்கு அனுசூயா, சசிகலா, ஜெயசீலன் மற்றும் சங்கர் ஆகியோர்தான் 'பலான’ தொழிலதிபர்கள். இதில் அனுசூயா மற்றும் ஜெயசீலன் இருவரும் சீனியர்கள். கிட்டத்தட்ட 27 வருடங்களாக 'மேற்படி’ தொழிலை நிர்வகித்து வருகிறார்கள். இவர்களது கிளை (அலுவலகம்..?) சென்னை நகரம் எங்கும் சுமார் 60 இடங்களில் உண்டு. சுமார் 140 அழகிகளைக் கொண்ட இவர்களது நிறுவனத்தில், இன்றைக்கு(ம்) முன்னணியில் இருக்கும் ஐந்து நடிகைகளும் அடக்கம்!

அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவர், இரண்டு நடிகைகளுடன் ஒரு முறை தங்கியிருந்தார். அப்போது போலீஸ் ரெய்டு நடத்த... அந்த வி.ஐ.பி-யும் நடிகைகளும் மாட்டிக்​கொண்டார்கள். உடனே மூவரும் அப்போதைய டி.ஜி.பி-யிடம் போன் மூலம் விஷயத்தைச் சொல்ல... டி.ஜி.பி., ஓர் போலீஸ் உயர் அதிகாரிக்கு வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு, மூவரையும் விடுதலை செய்யச் சொன்னார். உயர் அதிகாரி நேராக ஸ்தலத்துக்குச் சென்றார். பிரமுகரை மட்டும் உடனே அனுப்பிவிட்டு, நடிகைகளிடம் ஏதோ பேசி(மிரட்டி!) 'பலான விஷயத்தில் மாட்டிக் கொண்டதாக’ எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினார்.

பின்னர், அந்த நடிகைகள் மூலம் முன் கூட்டியே தகவல் பெற்று, சமூகத்தில் அந்தஸ்து பெற்ற சிலரோடு அவர்கள் 'இருக்கும்போது’ ரெய்டுகள் நடத்தி, அந்தப் பிரமுகர்களிடம் மிரட்டிக் கையெழுத்து வாங்கி இருப்பதாகத் தெரிகிறது.

இந்த சூழ்நிலையில்தான், சங்கர் ஒரு கேஸில் மேற்படி அதிகாரியிடம் மாட்டினார். என்ன காரணத்தினலோ, சங்கரை அந்த அதிகாரிக்குப் பிடித்துவிட, அவரை 'வளர்க்க’ ஆரம்பித்தார். சங்கர் 'வளர’ வேண்டும் என்பதற்காகவே, சசிகலா, அனுசூயா, ஜெயசீலன் மூவரையும் திருவான்மியூரில் இருந்து காலி பண்ண வைத்துவிட்டார் அந்தக் காவல் அதிகாரி.

அதன் விளைவு..? சங்கர் கொடி திருவான்மியூரில் உயரப் பறக்க ஆரம்பித்தது. துணிச்சலும் அதிகமானது.

''இப்போ மட்டும் என்ன ஆயிடுச்சுங்கிறீங்க..? சங்கர் மாட்டி இருந்தா என்ன? இன்னும் ஒரு வருஷம் பொறுத்திருங்க... சங்கர் பெரும்புள்ளியா மறுபடியும் இதே சிட்டியிலே உலா வர்றானா... இல்லையானு பாருங்க!'' என்றார், நமக்குப் பல தகவல்கள் கொடுத்த போலீஸ் அதிகாரி!

அவரே, ''சங்கர் கூட்டாளிகளோட மச்சான் ஒருவர் மாஜிஸ்திரேட்... இன்னொருத்தனுடைய அண்ணன் போலீஸ் ஆபீஸர். இந்த மாதிரி ஆட்கள் சங்கரைத் தப்பிக்க வைக்காட்டாலும்,  காவல் உயர் அதிகாரியிடம் மாட்டிக் கொண்ட பெரும் புள்ளிகளின் தயவில் வெளியே வந்துவிடுவான்...'' என்கிறார்.

சங்கர் வெளியே வந்துவிடுவாரா அல்லது சங்கரை உயிரோடு விட்டுவைத்தால் நமக்குத்தான் ஆபத்து என்று பெருந்தலைகள் 'முடிவு’ செய்துவிடுவார்களா? ஏனெனில், பல பெரும்புள்ளிகளின் லீலைகளை, ஒரு குள்ள நரியின் கெட்டிகாரத்தனத்தோடு சங்கர் வீடியோவே எடுத்திருப்பதாக சங்கரின் நண்பர்கள் கூறுகிறார்கள். எல்லா உண்மைகளும் (கோர்ட்டில்) நிரூபிக்கப்பட வேண்டும் எனில், வழக்கு சி.பி.ஐ-க்கும் மாற்றப்பட வேண்டும். மாற்றப்படுமா..?!

- வி.குமார்

''கடவுள் உண்டோ, இல்லையோ... விதின்னு ஒண்ணு உண்டு!''

சங்கரின் தம்பி மோகன், மைத்துனர் எல்டின் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஓர் ஒற்றுமை, இவர்​கள் அனைவருக்கும் ஆட்டோ ஓட்டத் தெரியும். மாதம் இரண்டு 'புது கிராக்கி’களைப் பிடித்து வர வேண்டும். இதுதான், சங்கர் தன் கூட்டாளிகளுக்கு இட்டிருந்த கட்டளை. அதன்படி, கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 500 பெண்களை இந்தக் கும்பல் (கடத்தி) கற்பழித்திருப்பதாகத் தெரிகிறது. இதில் பாபு மட்டும் கொஞ்சம் இரக்க சுபாவம்​  கொண்டவர்.

பள்ளி, கல்லூரியில் படிக்கும் பெண் அகப்​பட்டால், கற்பழிக்க அழைத்துச் செல்லமாட்டார். மாறாக, 'எதற்கும் இருக்கட்டும்’ என்று அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக நின்று போட்டோ எடுத்துக்​கொள்வார். இதில் ஏதோ அவருக்கு ஒரு பெருமை. இப்படி சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், போலீஸாரிடம் தற்போது சிக்கியுள்ளன. சங்கர் கூட்டாளிகளில் ஒருவரான செல்வராஜ் என்பவர் வீடியோ எடுப்பவர். இவர்தான் பல புள்ளிகளைப் பல விதங்களில் படமெடுத்தவர்.

ஜெயவேல், ரவி ஆகியோர் சங்கரின் செக்ரெட்​டரிகள் மாதிரி. பரமசிவம், பழனி இருவரும் அடியாட்கள். சிவாஜி என்பவர் லாரியும் ஜோராக ஓட்டுவார். இவர் லாரியில் சாராயம் கடத்தும்போது யாராலும் துரத்திப் பிடிக்க முடியாது. அவ்வளவு கில்லாடியான டிரைவர்.

இப்படிப் பல்வேறு குணாதிசயங்களைக்கொண்ட இந்தக் குழுவை போலீஸார் முதலில் பல்லாவரத்தில் ஒரு பங்களாவில் அடைத்து வைத்து விசாரித்தார்கள். சாப்பாட்டுக்காக ஒரு சமையல்காரரையே போலீஸார் ஏற்பாடு செய்து தினசரி அசைவ சாப்பாடு போட்டார்கள். சங்கர். போலீஸாருடன்            கேஷூ​வலாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். தான் மாட்டிக் கொண்டது பற்றி, ''கடவுள் உண்டோ, இல்லை​யோ... விதின்னு ஒண்ணு உண்டு... நான் அதை நம்பறேன்!'' என்றாராம்.

எப்போதும் சங்கரைச் சுற்றி நாலைந்து பொடியன்கள் காணப்படுவார்கள் அந்தப் பொடியன்களையும் போலீஸார் பிடித்து வைத்து இருந்தார்கள். அதற்கு சங்கர், ''சார்... அந்தப் பசங்களை விட்ருங்க. பாவம்... அவனுகளுக்கு எதிலேயும் சம்பந்தம் கிடையாது. வீணா அவங்க லைஃபை ஸ்பாயில் பண்ணிடாதீங்க...'' என்று கூற, பொடியன்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

தன் மனைவி ஜெகதீஸ்வரியையும் போலீஸார் பிடித்துவிட்டார்கள் என்று தெரிந்ததும். ''அவளை ஏன் சார் பிடிச்சிருக்கீங்க? குழந்தைங்க, அம்மாவைப் பார்க்காம இருக்காது சார்...'' என்றார். உடனே ஒரு இன்ஸ்பெக்டர், ''ஏண்டா... உன் குழந்தைங்க அம்மாவைப் பிரிஞ்சு கொஞ்ச நாள் இருக்கறதுக்கே இப்படி வருத்தப்படற... நீ கொலை பண்ணினவங்களோட அம்மாக்களை ஒரு நிமிஷம் நினைச்சுப் பாத்தியாடா...'' என்றதும், ''அடப் போ சார்... இதெல்​லாம் பழைய டயலாக்...'' என்றார் சங்கர்.

வழக்கை சி.பி.சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப் போகிறார்கள் என்ற விஷயம் தெரிந்ததும், ''ஏன் சார்... உங்க மேலே நம்பிக்கை இல்லாததால்தானே, கேஸை டிரான்ஸ்ஃபர் பண்றாங்க? நீங்க சரியா விசாரிக்க மாட்டீங்கனு மேலிடம் நினைக்குது. இது தப்பில்லையா சார்? ஒருத்தரை நம்பினா முழுக்க நம்பணும்!'' என்ற சங்கர், தொடர்ந்து, ''நம்பின ஆள் ஏமாத்திட்டா மட்டும் விடக் கூடாது சார்!'' என்று முணுமுணுத்ததாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சங்கரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தற்போது ஐ.ஜி. ஆபீஸில் ஓர் அறையில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சங்கர் இவர்களிடம் 'எதுவும் பேச முடியாது’ என்கிறார். காரணம் கேட்டதற்கு, ''கோர்ட்டுக்குக் கூட்டிப் போகும்போது  மூஞ்சியை ஏன் மூடுறீங்க?... அதுக்குக் காரணம் சொல்லுங்க!'' என்று கேட்க, சி.பி.சி.ஐ.டி. போலீஸார், ''அது எங்க பாலிஸிப்பா...'' என்றதும், ''அதே மாதிரி உங்ககிட்டே எதுவும் பேச முடியாதுங்கிறது என் பாலிஸி...'' என்று சொல்லிவிட்டாராம்!

ஆனால், 'விசாரிக்காமல்’ விட மாட்டார்கள்!

நன்றி : ஜூனியர்விகடன் - 04-06-2011

17 comments:

pichaikaaran said...

படித்ததை பகிர்ந்து கொள்ளும் உங்கள் நல்ல மனதுக்கு நன்றிகள் . முன்பு போல அதிகம் எழுதுங்கள்

சுதா SJ said...

உங்கள் எழுத்துக்கு நான் அடிமை பாஸ்,
அடிக்கடி இப்படி நீங்கள் படித்ததையும் பகிர்ந்து கொள்ளுங்கள்,
அடிக்கடி நிறைய எழுதுங்க பாஸ் ^_^

N.H. Narasimma Prasad said...

இந்த தொடர் பகுதியை முன்னாடியே ஜூனியர் விகடன்ல படிச்சிட்டேன். ஆனா எங்களை போன்ற கடல் கடந்து வாழும் தமிழர்கள் படிப்பதற்காக எழுதி வருகிறீர்கள். அதற்கு ரொம்ப நன்றி அண்ணே.

kanagu said...

இவ்ளோத்தையும் டைப் பண்ணி வெளியிடுறதுக்கு ரொம்ப நன்றி அண்ணா.. :)

Kite said...

ஒரு நல்ல அரசியல்வாதி மற்றும் கல்வித்தந்தையைத் தமிழகம் இழந்துவிட்டது. பகிர்தலுக்கு நன்றி அண்ணே.

Sundar said...

தேவை இல்லாமல் அவனை ஒரு ஹீரோ அளவுக்கு ஏற்றி விட்ட கட்டுரை! ஒரு கொலைகாரன், கொலைகாரந்தான். என்னதான் காரணம் இருந்தாலும் என்னதான் நல்லது செஞ்சிருந்தாலும்!

உ.த., நகல் மட்டும் எடுக்காமல், உங்கள் கருத்தையும் போட்டிருக்கலாமே? 40 பேரை கொன்று, சில பல கோடிகள் சம்பாதிது, ஒரு நாலைந்து பேருக்கு உதவி (சில லட்சங்களில்) செய்துவிட்டால், நல்ல மனிதனா?

உங்கள் கருதுது என்ன, உ.த.?

Amudhavan said...

படித்த இதழ்களிலிருந்து கட்டுரைகள் வெளியிடும்பொழுது அதனை எழுதியவர்களின் பெயர்களையும் வெளியிடலாமே என்று நான் தெரிவித்திருந்த கருத்தை உடனடியாகச் செயல்படுத்தியமைக்கு நன்றி உண்மைத்தமிழன். மற்றவர்களும் இதே பாணியினைக் கடைப்பிடித்தால் நன்றாயிருக்கும்.

Ash said...

தமிழ் மக்களின் நல்ல காலம் ஆட்டோ சங்கர் மாட்டிக் கொண்டான். இல்லாவிட்டால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோயிருக்குமோ? "தெய்வம் நின்று கொல்லும்" என்பது இது தான். எல்லாம் சரி. ஆனால், இதில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பலரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விட்டனரே! இவன் மூலம் கொழித்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னும் உலவிக்கொண்டு தான் இருக்கின்றர். அவர்களை யார் தண்டிப்பது? ஒருவேளை, நின்று கொல்லும் தெய்வம் உட்கார்ந்து கொண்டு விட்டதோ? பாவம், அதுவும் எத்தனை பேரைத்தான் நின்று கொண்டு கொல்லும்?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

படித்ததை பகிர்ந்து கொள்ளும் உங்கள் நல்ல மனதுக்கு நன்றிகள். முன்பு போல அதிகம் எழுதுங்கள்.]]]

ம்.. நன்றி பார்வை..!

உண்மைத்தமிழன் said...

[[[துஷ்யந்தனின் பக்கங்கள் said...

உங்கள் எழுத்துக்கு நான் அடிமை பாஸ், அடிக்கடி இப்படி நீங்கள் படித்ததையும் பகிர்ந்து கொள்ளுங்கள்,
அடிக்கடி நிறைய எழுதுங்க பாஸ்^_^.]]]

கண்டிப்பாக எழுதுகிறேன் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[N.H.பிரசாத் said...

இந்த தொடர் பகுதியை முன்னாடியே ஜூனியர் விகடன்ல படிச்சிட்டேன். ஆனா எங்களை போன்ற கடல் கடந்து வாழும் தமிழர்கள் படிப்பதற்காக எழுதி வருகிறீர்கள். அதற்கு ரொம்ப நன்றி அண்ணே.]]]

அதற்காகத்தான் காப்பி பேஸ்ட் செய்து வருகிறேன்..! நன்றி பிரசாத்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

இவ்ளோத்தையும் டைப் பண்ணி வெளியிடுறதுக்கு ரொம்ப நன்றி அண்ணா.:)]]]

வருகைக்கு நன்றி கனகு..!

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...

ஒரு நல்ல அரசியல்வாதி மற்றும் கல்வித் தந்தையைத் தமிழகம் இழந்துவிட்டது. பகிர்தலுக்கு நன்றி அண்ணே.]]]

ஹா.. ஹா.. ஜெகன்னாத் நக்கல் அருமை..!

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

தேவை இல்லாமல் அவனை ஒரு ஹீரோ அளவுக்கு ஏற்றி விட்ட கட்டுரை! ஒரு கொலைகாரன், கொலைகாரந்தான். என்னதான் காரணம் இருந்தாலும் என்னதான் நல்லது செஞ்சிருந்தாலும்!]]]

என்னதான் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும் அவர் தரப்பு நியாயத்தைச் சொல்வதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்.. இதைத்தான் ஜூ.வி. செய்திருக்கிறது..!

[[[உ.த., நகல் மட்டும் எடுக்காமல், உங்கள் கருத்தையும் போட்டிருக்கலாமே? 40 பேரை கொன்று, சில பல கோடிகள் சம்பாதிது, ஒரு நாலைந்து பேருக்கு உதவி (சில லட்சங்களில்) செய்துவிட்டால், நல்ல மனிதனா?
உங்கள் கருதுது என்ன, உ.த.?]]]

இது அவரவர் அளவுகோலை பொறுத்தது.. கர்ணனின் செயலை உங்களால் நியாயப்படுத்த முடியுமா..? ஆனால் அவனது நிலைமையில் நின்று யோசித்தால் அவன் தரப்பு நியாயம் புரியும். அப்படி்ததான் இந்த பாமர மக்களும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Amudhavan said...

படித்த இதழ்களிலிருந்து கட்டுரைகள் வெளியிடும்பொழுது அதனை எழுதியவர்களின் பெயர்களையும் வெளியிடலாமே என்று நான் தெரிவித்திருந்த கருத்தை உடனடியாகச் செயல்படுத்தியமைக்கு நன்றி உண்மைத்தமிழன். மற்றவர்களும் இதே பாணியினைக் கடைப்பிடித்தால் நன்றாயிருக்கும்.]]]

நன்றி அமுதவன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ash said...

தமிழ் மக்களின் நல்ல காலம் ஆட்டோ சங்கர் மாட்டிக் கொண்டான். இல்லாவிட்டால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோயிருக்குமோ? "தெய்வம் நின்று கொல்லும்" என்பது இதுதான். எல்லாம் சரி. ஆனால், இதில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பலரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விட்டனரே! இவன் மூலம் கொழித்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னும் உலவிக் கொண்டுதான் இருக்கின்றர். அவர்களை யார் தண்டிப்பது? ஒருவேளை, நின்று கொல்லும் தெய்வம் உட்கார்ந்து கொண்டுவிட்டதோ? பாவம், அதுவும் எத்தனை பேரைத்தான் நின்று கொண்டு கொல்லும்?]]]

அவரவர்க்கு தண்டனைத் தக்க விதத்தில் நிச்சயம் கிடைத்திருக்கும் நண்பரே..!

ஆட்டோ சங்கரே மனமுவந்து முன் வந்து தனக்கு உதவியர்கள் பெயர்களை வெளியிட்டிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் அவர் செய்யவில்லை..! அவருடைய குடும்பத்தினர் மீதான பயம்தான் காரணம்..! கடைசியில் அதுவே அந்த திருடர்களைக் கவசம் போல காப்பாற்றிவிட்டது..!

Anonymous said...

பெண்களைப் பற்றி சாணக்கியர்

https://docs.google.com/document/d/1idvKf-KoXUc5OuUpWJ_5olkFQnptteG3aUv6CjJBAZo/edit?hl=en_US