ஆட்டோ சங்கரின் கடைசி நிமிடங்கள்..!

16-06-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 18: 3.5.95

சரியாக, 19 வருடங்களுக்குப் பிறகு... ஒரு கொலைக் குற்றவாளி தூக்கிலிடப்படும் சம்பவத்தை சந்தித்தது சேலம் மத்திய சிறைச் சாலை. ஏப்ரல் 27-ம் தேதி ஆட்டோ சங்கருக்குத் தூக்கு!

விடியற்காலை 3 மணி இருக்கும். அந்த செல்லின் மூலையில் உட்கார்ந்தபடியே அசந்து கிடந்த ஆட்டோ சங்கரை எழுப்பினர். உடனேயே எழுந்துவிட்ட சங்கர். ''போன் வரலியா இன்னும்?'' என்று கேட்டான். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் தூக்கு மேடையில் நிற்கப் போகிற மரண தண்டனைக் கைதியான சங்கர், எப்படியும் தான் காப்பாற்றப்படுவோம் என்று அந்த நிமிடத்திலும் திடமாக நம்பியதுதான் ஆச்சர்யம்!

''என் பேர் கௌரிசங்கர். ஆனா, அப்படி என் பேர் சொல்லிக் கேட்டா, யாருக்கும் தெரியாது...'' ஏழு ஆண்டுகளுக்கு முன் கைதான போது, முதன் முதலாக ஜூ.வி. நிருபரிடம் அப்படித்தான் அவன் பேச ஆரம்பித்தான். 


ஆறு பேரைக் கொலை செய்ததாக இவனும் இவன் கூட்டாளிகளும் சென்னை திருவான்மியூரில் கைதானபோது(ஜூலை 1988) நாடே நடுங்கியது!

இப்படிச் சொன்னால் போதும் வேறு எந்த அறிமுகமும் தேவைப்படாது. '80-களின் கிரைம் ஹீரோ’ இவன்தான்!

''படிக்கிறப்பவே கஞ்சா, சாராயம் பழக்கமாயிடுச்சு வேலை தேடுனப்போ, வெள்ளையடிக்கற வேலை கிடைச்சது. எனக்குச் சின்ன வயசிலேயே பணக்காரனா ஆகணும்னு ஆசை உண்டு. சொந்தமா ஒரு வீடு, கார் இப்படி..! வெள்ளையடிக்கிற வருமானத்துல இதெல்லாம் கிடைக்குமா என்ன?'' என்று வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கிய சங்கருக்கு, வில்சன் என்ற சாராய வியாபாரி பழக்கமானான். அதே வியாபாரமும் பழக்கமாயிற்று. பணம் புரண்டது. பெண் சுகம், கேட்டது, நினைத்தது எல்லாம் கிடைத்தன.

போட்டி வியாபாரம் தொடங்கினான் சங்கர். பிரச்னைகளைச் சரிக்கட்ட அதிகாரிகளுக்கு பெண்களை 'அனுப்பி’ வைத்தான். பிறகு, அதுவே தொழில் ஆயிற்று. ஒரு பக்கம் சாராயம்; இன்னொரு பக்கம் விபசாரம் என்று சங்கர் பிரபலமாக... பிரபலங்களுக்கோ சங்கர்தான் எல்லாமே.
 
சென்னைக்குள் வழி தவறி வலையில் சிக்குகிற இளம் பெண்களுக்குச் 'சரணாலயமே’ சங்கர்தான். தொழில் ஆரம்பித்த முதல் வருடத்தில் மட்டுமே சம்பாதித்தது 30 லட்ச ரூபாய். சங்கர் வீட்டுக் கிரகப்பிரவேசத்துக்குப் பெருமளவு விருந்தாளிகள் போலீஸ் அதிகாரிகளே!  சங்கரின் மற்ற வாடிக்கையாளர்கள்... தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்துக்கொண்டு இருந்த அரசியல் பெருந்தலைகளும் அதிகாரிகளும்தான்!

சங்கர் 'எதற்கும் உபயோகமாக இருக்கட்டுமே...’ என்று அவ்வப்போது செய்துவந்த 'அந்தக் காரியம்’தான் பலரது தூக்கத்தைக் கெடுத்தது. எந்த வி.ஐ.பி-க்குப் பெண்களை அனுப்பினாலும், நடக்கிற 'விஷயங்களை’ அப்படியே மறைவாக இருந்து புகைப்படம் எடுப்பது, முடிந்தால் முழு நீள வீடியோ எடுப்பது சங்கரின் பொழுதுபோக்காக இருந்தது.

சாவகாசமாக அந்த ஆதாரங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் நாசூக்காகத் தெரிவித்து, நடுநடுங்கிப் போகிறவர்களிடம் நிறைய சாதித்துக் கொண்டான். இடைப்பட்ட நேரங்களில் ஆறு கொலைகள். அப்படிக் கொலையான சம்பத் என்பவரின் மனைவி விஜயா, 'தன் கணவனைக் காணவில்லை’ என்று போலீஸிடம் புகார் கொடுத்ததும், ஜூ.வி. அலுவலகம் வந்து கதறி அழுததும்... நாம் விசாரணையை ஆரம்பிக்க, தோண்டத் தோண்ட பிணங்கள் வந்ததும்... பிறகு பிரபலங்களைப் பற்றிய நாறடிக்கும் உண்மைகள் வந்ததும் நாடறியும்!

ஆட்டோ சங்கர் அளவுக்குப் பரபரப்பாகப் பேசப்பட்ட பெருமை வேறு எந்த கிரிமினலுக்கும் இல்லை. இவனை அடிப்படையாக வைத்து ஒரு சினிமா கூட வந்தது.

இந்த வழக்கில் மேலும் ஐந்து பேர் கைதாக... தொடர்ந்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்தது வழக்கு. அரசியல், அதிகார வர்க்கம் புகுந்து விளையாடியதன் விளைவு... சங்கர் நிராதரவாக நின்றான்.

ஒட்டு மொத்தக் குற்றவாளிகளில் ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி மூவருக்குத் தூக்குத் தண்டனையும் மற்ற ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பானது.

உயர் நீதிமன்ற அப்பீலில் ஆயுள் தண்டனையில் இருந்து இரண்டு பேர் மட்டும் விடுதலை ஆனார்கள். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆட்டோ சங்கர், எல்டின் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்ததை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்.

இதற்கிடையில், சென்னை சிறைச்சாலையில் இருந்த ஆட்டோ சங்கர் தன் சகாக்களுடன் ஒரு நாள் தப்பித்துப் போனான். மறுபடியும் போலீஸாரிடம் சிக்கினான். ஆனால், இந்த எஸ்கேப் ஒரு திட்டமிட்ட நாடகம் என்றும்... சங்கர் வசம் இருந்த சில வி.ஐ.பி. ஆதாரங்களைக் கைப்பற்றி அழிப்பதற்காக நடந்தேறிய முயற்சி அது என்றும் சொல்லப்படுவது உண்டு.

பின்னர், சேலம் சிறையில் அடைக்கப்பட்டான் சங்கர். கிறிஸ்துவ மதத்துக்கு மாறினான். அவனது குடும்பம் உதவுவதற்கு யாருமின்றிக் கெட்டு அழிந்தது. சங்கரும் எல்டினும் அனுப்பிய கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சங்கரின் மனைவியும் எல்டினின் மனைவியும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் தடை விதிக்கும்படி உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தார்கள். அது நிராகரிக்கப்பட, அப்பீலுக்குப் போனார்கள். பலன் இல்லை.

ஏப்ரல் 27-ம் தேதி சங்கருக்குத் தூக்கு தண்டனை என்று உறுதி செய்யப்பட்டது. முதல் நாள் நள்ளிரவுவரைக்கும் அதை ரத்து செய்யப் பல விதமான முயற்சிகள் நடந்தன.

மரண நாள் பற்றிய செய்தி வந்ததுமே சங்கர் நிறைய மாறினான் என்கிறார்கள். ஒழுங்காகச் சாப்பாடுகூட எடுத்துக்கொள்ளாமல், பால் மட்டுமே எடுத்துக் கொண்டானாம். சவரம் செய்யாமல் தாடி மண்டிய முகத்துடன் திரிந்த சங்கரின் கவலை எல்லாம் அவனது மூத்த மகள் பற்றியதுதான்!

கீதாலட்சுமி என்ற அந்தப் பெண்ணுக்கு ஒரு பையனுடன் இருந்த காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிய வர, ஏக ரகளை நடந்திருக்கிறது. அது 'மைனர் பெண்’ என்று காரணம் சொல்லி போலீஸ் வரை புகார் போக, இப்போது அந்தப் பெண் சென்னையில் 'சிறுவர் சீர்திருத்தப் பள்ளி’யில் இருக்கிறாள். அந்தப் பெண்ணின் எதிர்காலம் பற்றித்தான் சங்கர் கவலையோடு இருந்தான்.

''ஆனது ஆச்சு... அது என்னன்னு பார்த்து நல்லபடியா முடிச்சிடறதுதான் எல்லோருக்கும் நல்லது...'' என்று தன்னைச் சிறையில் சந்திக்க வருகிற உறவினர்களிடம் சொன்னானாம் சங்கர்.

ஏப்ரல் 27, வியாழக்கிழமை. அதிகாலை 4 மணி...

சேலம் மத்திய சிறைச்சாலைப் பகுதி முழுக்க அந்த உச்சகட்ட க்ளைமாக்ஸ் காட்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு இருந்தது. சுற்று வட்டார மக்கள், பத்திரிகை நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் எனப் பெரும் பட்டாளம் மத்திய சிறைச்சாலையின் வாசலில் கூட... பரபரப்பு.

இதனிடையே, ஜெயிலுக்கு உள்ளே அந்த வேளையிலும் தன் மகளுக்கும் மனைவிக்கும் நீண்டதொரு கடிதத்தை மிக சீரியஸாக எழுதி முடித்தான் சங்கர். கடைசி நிமிடங்களில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்களில் பதற்றம் துளியும் இல்லாமல் தெளிவான கையெழுத்தில் சங்கர் எழுதி இருந்தது அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது.

அந்தக் கடிதங்களில் தனது சொத்துகள் குறித்த சில முக்கிய யோசனைகளைத் தன் குடும்பத்தினருக்குத் தெளிவாக விளக்கி இருந்தானாம். தனது மரணத்துக்குப் பிறகு தனது சொத்துகள் கையாளப்பட வேண்டிய வழி முறைகளே அவை.

சற்று நேரத்தில், 'காஷூவலாக’ மரண மேடையை நோக்கி நடந்தான் சங்கர். அப்போது, அங்கே இருந்த சிறை ஊழியர்கள் மளமளவென ஆக வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.

கறுப்புத் துணியால் சங்கரின் சலனமற்ற முகம் மூடப்பட்டபோது, மணி காலை 5.30. சற்று நேரத்தில் ஆட்டோ சங்கர் கழுத்தைத் தூக்குக் கயிறு சுற்றி வளைத்தது. அடுத்த சில நிமிடங்கள்வரை தூக்குக் கயிற்றுடன் நடந்த மரணப் போராட்டத்தில் தோல்வியடைந்த சங்கரின் உடலைப் பரிசோதித்த டாக்டர்கள், 'முடிஞ்சு போச்சு’ என்று கூறியவுடன், அந்தக் கண நேரங்களுக்கு 'சம்பிரதாய’ சாட்சிகளாக நின்ற தாசில்தார், ஜெயில் சூபரின்டெண்டென்ட் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சிலரின் கண்கள் பனித்தன.


ஜெயிலுக்கு வெளியே உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆட்டோ சங்கரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறித் துடித்த காட்சி பரிதாபமானது.

ஆட்டோ சங்கரின் சகோதரிகள் இருவரும், மகன்களான டெல்லி சுந்தரமும் சீனிவாசனும், கலங்கிய கண்களுடன் நின்று கொண்டிருந்தனர்.
 

நேரம் ஆக ஆக, பதற்றம் அதிகரித்தது. தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் உடலை அவனது உறவினர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் குழப்பம் நிலவியது. காரணம், ஆட்டோ சங்கரின் மனைவி ஜெகதீஸ்வரி அங்கு வந்து சேரவில்லை. 6.25 மணிக்குத் தன் இளைய மகளுடன் ஆட்டோவில் வந்து இறங்கினார் ஜெகதீஸ்வரி. அதுவரை சற்று அமைதியாக இருந்த சங்கரின் தாயார், மீண்டும் புலம்பலை ஆரம்பித்தார்.

''எட்டு கொலை, பத்து கொலை செய்தவங்களையெல்லாம் வெளியே விட்ட பாவிகளா... என் பையனை இப்படி அநியாயமா சதி பண்ணிக் கொன்னுட்டீங்களே... நீங்க உருப்படுவீங்களா?'' என போலீஸாரைப் பார்த்து அர்ச்சிக்க ஆரம்பித்தார்.

கடந்த திங்கட்கிழமை ஆட்டோ சங்கரின் 39-வது பிறந்த நாளாம். அன்று அவனைச் சிறையில் பார்க்கச் சென்றிருந்தாராம். ''தைரியமா இருங்க... கடவுள் நம்மைக் கைவிட மாட்டார். இனிமே கடவுள்தான் நமக்கு எல்லாமே... எனக்காக எல்லா கடவுள்கிட்டேயும் வேண்டிக்குங்க!'' எனக் கூறிய சங்கர்... தாயார் கொண்டு வந்த காபியைக் குடித்து, அவரிடம் ஆசி பெற்றதை நினைவுபடுத்திப்  புலம்பிக் கொண்டேயிருந்தார் அந்தத் தாய்.

''நேற்றிரவு முழுக்கத் தூங்காமல், தூக்கலிடப்படும் அந்த மரண விநாடிகளில் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடாமல் சங்கர் மன தைரியத்துடன் இருந்தது கண்டு நாங்களே ஆச்சர்யப்பட்டுப் போனோம்!'' என்றார்கள் அதிகாரிகள் சிலர்.

'கடைசி நிமிடம்வரை தூக்குத் தண்டனையில் இருந்து தப்பி விடுவோம்’ என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இருந்தான் சங்கர். தன்னைக் காப்பாற்ற வெளியே நடக்கிற முயற்சிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தான். 26-ம் தேதி இரவு உறக்கம் இல்லாமல் விழித்து இருந்தான். ''எனக்கு ஒண்ணும் ஆவாது சார்... போன் வரும், பாருங்க...'' என்றே சொல்லிக் கொண்டிருந்தான்.


அதிகாலை 3 மணிக்குக் குளியலுக்கு சங்கரை போலீஸார் அழைத்துச் சென்றபோது, ''என்ன சார், சுடுதண்ணி...! பச்சைத் தண்ணிதான் நல்லா இருக்கும்...'' என்றபடி குளித்து முடித்துவிட்டு வந்தான். ஆடைகளை அணிந்து கொண்டு வரும்போதும் ''போன் வரும் சார்...'' என்று சொன்னான்.

கடைசியில் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்கிற வழியில், ''எதுனா சொல்லணுமா சங்கர்..?'' என்று அதிகாரிகள் கேட்க, ''ஒண்ணுமில்லே சார்...'' என்ற சங்கர் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டபடி, ''எனக்கு எந்த வருத்தமும் இல்லே...'' என்றானாம்.  தூக்கு மேடைக்கு அருகே பைபிள் படிக்கச் சொல்லி மௌனமாகக் கேட்டுவிட்டு, அங்கே இருந்த அதிகாரிகளிடம் 'நான் வரட்டுமா..?’ என்பது மாதிரி தலையை அசைத்துவிட்டுத் தூக்கு மேடையில் ஏறி நின்றான்.

சங்கரின் முகத்தில் கறுப்புத் துணி மாட்டப் பட்டது. கரங்கள் இரண்டும் பின்புறமாக இழுத்துக் கட்டப்பட்டன. எல்லாம் முடிந்து சிக்னலுக்காகக் காத்திருந்த நேரத்தில் திடீரென, ''சார், ஒரு நிமிஷம் சார்... ஒரு நிமிஷம் சார்...'' என்று கத்தினானாம் சங்கர். ஆனால், சட்ட விதிமுறைகள் ஒரு நிமிடம்கூடத் தாமதிக்க இடம் கொடுக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் சங்கர் இறந்து போயிருந்தான்.

அந்தக் கடைசி நிமிடத்தில் சங்கர் என்ன சொல்ல நினைத்தானோ? சொல்லப் போனால்... இந்த வழக்கில் பல குரூரமான - உறைய வைக்கிற உண்மைகளும் கூடச் சொல்லப்படாமலேதானே போய்விட்டன!

- நமது நிருபர்கள்

நன்றி : ஜூனியர்விகடன்-19-06-2011

12 comments:

Anonymous said...

Thanks for taking trouble and posting. is this the end? wonder what happened to his family.

உண்மைத்தமிழன் said...

[[[AC said...

Thanks for taking trouble and posting. is this the end? wonder what happened to his family.]]]

ஆட்டோ சங்கரின் மனைவி சிறிது காலம் ஜாக்கெட் பிட்டுக்களை மொத்தமாக தைத்துத் தரும் வேலையைச் செய்து கொண்டிருந்தார். அதன் பின்பு கிறிஸ்துவ மதப் பிரச்சார இயக்கத்தில் சேர்ந்து பிரச்சாரப் பணியைச் செய்து கொண்டிருந்தார். இப்போது அவரைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை..!

Gopi said...

It could have been a ploy of Auto Sankar to scream at the last moment, trying to take advantage of Law. He must have thought creating a slight confusion at the last moment might delay his hanging and there could be someone who will object to hanging after the stipulated time.

உண்மைத்தமிழன் said...

[[[Gopi said...

It could have been a ploy of Auto Sankar to scream at the last moment, trying to take advantage of Law. He must have thought creating a slight confusion at the last moment might delay his hanging and there could be someone who will object to hanging after the stipulated time.]]]

நிஜத்தில் நடந்தது என்ன என்பதை அங்கேயிருந்த அதிகாரிகள்தான் சொல்ல வேண்டும்..!

Anonymous said...

குற்றவாளிகள் உருவாவதில்லை, ஆனால் உருவாக்கப்படுகின்றார்கள் .. அவ்ளோ தான் எனக்கு சொல்லத் தெரியுமுங்க .... !!! குறிப்பாக ஆட்டோ சங்கருக்கும் அதிமுக அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருந்ததாகப் பேசுகின்றார்களே. அதுக் குறித்து எதுவும் தகவல் இருக்கா? வெளிவராத மர்மங்கள் எதுவும் ?

******************************'

குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்

உண்மைத்தமிழன் said...

[[[இக்பால் செல்வன் said...

குற்றவாளிகள் உருவாவதில்லை, ஆனால் உருவாக்கப்படுகின்றார்கள் .. அவ்ளோதான் எனக்கு சொல்லத் தெரியுமுங்க.! குறிப்பாக ஆட்டோ சங்கருக்கும் அதிமுக அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருந்ததாகப் பேசுகின்றார்களே. அது குறித்து எதுவும் தகவல் இருக்கா? வெளி வராத மர்மங்கள் எதுவும் ?]]]

நிறையவே இருக்கின்றன. அவனிடத்தில் மாமூல் வாங்கிக் கொண்டு விபச்சாரத் தொழிலுக்கு ஒத்தாசையாக இருந்தது லோக்கல் போலீஸ்தான்.

அவனிடத்தில் நன்கொடை பெற்றுக் கொண்டு அவன் மீது ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க விடாமல் போலீஸாரைத் தடுத்தது லோக்கல் கட்சிக்காரர்கள்தான்..

இவர்களில் யாருமே இதற்காக தண்டிக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்..!

abeer ahmed said...

See who owns leisiba.com or any other website:
http://whois.domaintasks.com/leisiba.com

abeer ahmed said...

See who owns ateneo.edu or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...

See who owns blogspot.com 1877926797 or any other website.

Beni.D said...

இந்த அரசியல் வாதிகள் தான் மிக பெரிய காரணம் குற்றம் செய்யும் போது சப்போட் பண்ணி அவர்களுக்காக பயன்படுத்திகொள்வது.அவனுக்கு அரசியல் செல்வாக்கும் அரசியல் வாதிகள் மேலும் கடைசி மூச்சு வரை நம்பிக்கையும் இருந்தது.அதானால் தான் சங்கர் கடைசிவரை போன் வரும் என்று எதிர்பார்த்தான்.வராததால் இது பற்றிய உண்மைகளை சொல்ல முன் வந்தான்...அதற்குள்.............

உண்மைத்தமிழன் said...

[[[Beni.D said...

இந்த அரசியல்வாதிகள்தான் மிக பெரிய காரணம் குற்றம் செய்யும்போது சப்போட் பண்ணி அவர்களுக்காக பயன்படுத்தி கொள்வது. அவனுக்கு அரசியல் செல்வாக்கும் அரசியல்வாதிகள் மேலும் கடைசி மூச்சுவரை நம்பிக்கையும் இருந்தது. அதானால்தான் சங்கர் கடைசிவரை போன் வரும் என்று எதிர்பார்த்தான். வராததால் இது பற்றிய உண்மைகளை சொல்ல முன் வந்தான். அதற்குள்..]]]

சங்கரை வளர்த்தெடுத்த அரசியல்வியாதிகளில் முக்கியமானவர்கள் இப்போது உயிருடன் இல்லை. சிலருக்கு சங்கரை போன்று வேறு சிலர் வெள்ளுடையில் கிடைத்துவிட்டதால் அவனை மறந்துவிட்டார்கள்..!

ஒரு சங்கர் போனா, வேறொரு சங்கர். அவ்வளவுதான்..!