08-01-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இது இந்தாண்டின் முதல் இட்லி-வடை பதிவு..!
தாத்தாவின் அறிவிப்பு
தாத்தாவின் நேற்றைய பேட்டி தி.மு.க.வுக்குள் மீண்டும் ஒரு சகோதர யுத்தத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் பெயரில் மன்றம் ஆரம்பித்திருப்பதை மெளனமாக கவனித்து வந்திருக்கும் மதுரையின் பட்டத்து இளவரசர் தனது மகனையும் களத்தில் குதிக்க வைக்க அப்பாவை போலவே வார்த்தைகளால் ஆழம் விட்டுப் பார்க்கிறார்..! 3-வது தலைமுறையும் இப்போது அதிகாரப் போரில் குதித்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.. அப்படியாவது இந்தத் திமுக சிதைந்து போகாதா என்ற நல்ல எண்ணம்தான்..! (அதிமுக, ஆத்தாவுக்கு பின்பு தானாகவே காணாமல் போகும்.. ஆகவே அது பற்றி பெரிய கவலையில்லை..) ஏற்கெனவே இவர்களுக்குள் நடந்த சகோதர சண்டையில் மதுரையில் பேருந்துகள் எரிக்கப்பட்டு 3 அப்பாவிகளும் உயிரிழந்தார்கள். இனி வரவிருக்கும் சண்டையில் எத்தனை தாலிகளை அறுக்கப் போகிறார்களோ தெரியவில்லை..! இந்த லட்சணத்தில் இவர்கள்தான் மனுநீதிச் சோழனின் பரம்பரையாம்..!
பத்திரிகைகளின் பரபரப்பு..!
டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை நிகழ்வுக்கு பிறகு பத்திரிகைகள் அது போன்ற செய்திகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு வருவது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. ஆனால் தூங்கி எழுந்தவுடன் அந்தச் செய்திகளைத்தான் படித்தாக வேண்டும் என்ற சூழலுக்கு பத்திரிகைகள் நம்மை தள்ளுவது கொடுமையாக உள்ளது. பாலியல் வன்முறை பக்கங்கள் என்றே தனி பக்கம் வைத்து செய்திகளை வெளியிடலாம் போல..! தினத்துக்கு இது போன்ற செய்திகள் வந்தவண்ணம்தான் இருக்கின்றன..! அதுக்காக கள்ளக்காதல் செய்திகளோடு இதனையும் பெரிதாக குறிப்பிட்டு வெளியிடுவது எரிச்சலைத்தான் தருகிறது..! டெல்லியில் மீண்டும் ஒரு நிகழ்வு நடந்திருப்பதாகச் செய்திகள்.. இதனையும் ஊடகங்கள் அணுகுண்டு வெடித்தாற்போன்று பரபரப்பாக்கி பீதியை கிளப்புகின்றன..! ம்ஹூம்.. இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை..?
ராமதாஸின் சாதி வெறி
இரண்டு திராவிடக் கட்சிகளும் “வேண்டாமே இந்த எக்ஸ்ட்ரா கேரேஜ்..” என்று கை கழுவிவிட்ட பின்புதான் திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தைக் கெடுத்தன என்பது மருத்துவர் ராமதாஸுக்கு தெரிந்ததாம்.. தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளையெல்லாம் இந்த இரு கட்சிகளும் கையில் எடுத்திருப்பதால் வேறு எப்படியாவது மக்கள் மனதில் இடம் பிடிக்க முயல்கிறார்..! சாதியை அவர் கையில் எடுப்பதை இப்போதுதான் முதல்முறையாக பார்ப்பது போல கடந்த ஒரு மாதமாகவே மருத்துவரை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தில். அவர்தான் முதலில் இருந்தே சொல்லி வருகிறாரே.. “வன்னியர் உதவியில்லாமல் இங்கே யாரும் முதல்வராக முடியாது..” என்று.. நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்..!
சென்ற தேர்தலின்போது கட்சி சாராத அனைவருக்குமே தேர்தல் முடிவுகளில் கிடைத்த ஒரேயொரு திருப்தி இவரது தோல்விதான்.. இதுவே நம் ஆயுட்காலம் உள்ளவரையில் நீடிக்குமானால் மருத்துவர் நம் எல்லார் மனதிலும் நீங்காத தனி இடத்தைப் பிடித்துவிடுவார்.. அதற்கான முயற்சிகளின் முதல் படியாகத்தான் ஜாதிகளின் கூட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார். செய்யட்டும்..!
தேவயானியின் கல்யாண கதை
வராதுவந்த மாமணியாய் தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும் பவர் ஸ்டாருக்கு போட்டியாய் களத்தில் குதித்திருக்கும் இயக்குநர் ராஜகுமாரனை நாம் வரவேற்றே ஆக வேண்டும்..! “நீங்களே ஏன் நடிக்க முடிவெடுத்தீர்கள்..” என்று கேட்டால், “தேவயானியின் கால்ஷீட் டைரி இப்போ ஹவுஸ்புல்.. அவங்களுக்கு பிரேக் கிடைக்கும்போதுதான் இந்த ஷூட்டிங்கை வைக்க முடியும்.. இதுக்கேத்தாப்புல எந்த ஹீரோ வந்து நடிப்பாரு..? யாரும் ஒத்துக்க மாட்டாங்களேன்னு, யோசிச்சுதான் நானே நடிச்சிட்டேன்..” என்றார்.. புல்லரித்தது நிருபர்களுக்கு..!
ஆடியோ ரிலீஸ் விழாவில் பேசிய நடிகர் சிங்கமுத்து, நள்ளிரவில் தேவயானி வீட்டு வாசலில் காத்திருந்தது. தேவயானி சுவர் ஏறிக் குதித்து வந்து ராஜகுமாரன் கைப்பிடித்து திருத்தணிக்கு ஓடிப் போய் கல்யாணம் செய்த அந்த நாளை, அப்படியே சினிமா கதை போல் சொன்னது செம சுவராஸ்யமாக இருந்தது..! இதையே ஏதாவது ஒரு படத்தில் காட்சிகளாக பயன்படுத்திக் கொள்ளலாம்..! படத்தின் பாடல் காட்சிகளையும், டிரெயிலரையும் பார்த்துவிட்டு அதற்கு மேல் கேள்வி கேட்கவே மனசில்லாமல் எழுந்து ஓடினார்கள் பிரஸ்காரர்கள்..!
ஒரேயொரு விஷயத்துக்காக ராஜகுமாரனுக்கு எனது பாராட்டுக்கள்.. படத்தின் பாடல்கள் முழுவதிலும் தமிழ் வார்த்தைகள் முத்துக்களாக சிதறியிருக்கின்றன. அதிலும் தமிழின் அனைத்து வகைகளையும் குறிப்பிட்டு ஒரு பாடலை அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் நிச்சயம் இது மட்டுமே பேசப்படும்..!
சினிமா காலண்டர்
ராணி முத்து காலண்டரில் இருக்கும் இன்றைய ராசிபலன் தமிழகத்தில் மிகவும் பேமஸானது..! அதைப் பார்த்துவிட்டே அன்றைய பொழைப்பை பார்ப்பவர்களும் இங்கே அதிகம்.. இப்போது அதே பாணியில் தமிழ்ச் சினிமாவுலகத்துக்காக தனி காலண்டரை வடிவமைத்திருக்கிறார்கள். இதில் ராசி பலனுக்கு பதிலாக சினிமா நட்சத்திரங்களின் பிறந்த நாட்கள், அவர்களுடைய போன் நம்பர்களை போட்டு வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையான பிறந்த நாளை சொல்லிவிட்டு போன் நம்பருக்கு மட்டும் லேண்ட்லைன் நம்பரை அளித்திருக்கிறார்கள் முக்கால்வாசி நட்சத்திரங்கள்..! காலண்டரின் விலை 75 ரூபாய். வேண்டும் என்பவர்கள் 9094786565 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்கலாம்..!
கலைஞர் டிவி விவகாரம்
காலை அலுவலகம் வந்த சிறிது நேரத்தில் டிஸ்மிஸ் ஆர்டர் கையில் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் ரமேஷ்பிரபா என்று கலைஞர் டிவியின் உள் விவகாரம் வெளிப்பிரகாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு பின்பு பகிரங்கானது. அதற்கடுத்த 2 நாட்களும் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு வந்து கணக்கு வழக்குகளை செட்டில் செய்தாராம் ரமேஷ்பிரபா..! உண்மையில் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..! பணம் கையாடல் என்பது மற்ற டிவிக்களில் ஓகே.. கலைஞர் டிவியில்..? நம்ப முடியவில்லை..!
ஏற்கெனவே சமீபத்தில் 2-ஜி ஊழல் வழக்கில் சிக்கிய நிறுவனங்களிடமிருந்து கடனாகக் கலைஞர் டிவிக்கு கிடைத்த தொகையை, திரும்பவும் செட்டில் செய்யப்பட்டபோதும் சில வில்லங்கங்கள்.. மெட்ராஸ் சிமெண்ட் சீனிவாசன். செட்டி நாட்டு குடும்பத்தினர்.. அப்போலோ குழுமம் என்று பலரிடமும் பணம் பெறப்பட்டு கூடுதலாக கொல்கத்தா நிறுவனங்களின் மூலமாக 100 கோடிக்கும் மேலாக கடன் பெறப்பட்டு இந்தக் கடனும் செட்டில் செய்யப்பட்டதாம். அந்தக் கொல்கத்தா கம்பெனிகள் எவை.. அவைகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்..? அவைகள் எதற்காக உங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை கடனாகத் தர வேண்டும் என்று டெல்லி பத்திரிகைகள் எழுப்பிய கேள்வியை வழக்கம்போல தாத்தா சாய்ஸில் தொலைத்துவிட்டார். பதிலளிக்க கடமைப்பட்டுள்ள கைப்புள்ள ஸ்டாலினும் கிட்டிப்புள் விளையாட போய்விட்டார்..! ஆனாலும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாம்.. விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றே நினைக்கிறேன்..!
பேஸ்புக் நண்பி
ஊரெல்லாம் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வை அரசுகளும், தனியார் அமைப்புகளும், பெண்ணுரிமை கழகத்தினரும் பரப்பிக் கொண்டிருக்க பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் சில பெண்கள் இதைப் பற்றியே கண்டு கொள்ளாமல் தங்களைப் பற்றிய செய்திகளை பரப்பி வருவது வேடிக்கையாக இருக்கிறது..! அதிலும் குறிப்பாக ஒருவர், தான் எந்த ஊருக்கு போனாலும் தங்கப் போகும் ஹோட்டலின் பெயரைச் சொல்லியும், எத்தனை நாட்கள் இருப்பேன் என்பதையும், வருபவர்கள் வரலாம்.. சந்திக்கலாம்.. பேசலாம்.. 'மேலே' எனக்கு விருப்பமிருந்தால்.. என்ற ரீதியில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டு வருகிறார்..!
அவர் போடுகின்ற அவரது அரைகுறை படங்களுக்கு வருகின்ற கமெண்ட்டுகளை படித்தாலே போதும்.. நாட்டில் எவ்வளவு பாலியல் வறட்சி நிலவுகிறது என்பது புரியும்..! பாலியல் வன்முறையின் வெளிப்பாடு எங்கேயிருந்து துவங்குகிறது என்பதை இவருக்கு யாராச்சும் புரிய வைத்தால் நல்லது..!
விஸ்வரூபம்-முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு
7 பேர் சேர்ந்து சங்கம் வைச்சு, ஆபீஸ் போட்டுட்டு, கொடி, சின்னமெல்லாம் வரைஞ்சுட்டு அடு்த்து முதல் போராட்டத்துக்கு யோசிக்கும்போது இனிமே தைரியமா சினிமாக்காரங்களை எதிர்த்தே கச்சேரியை துவக்கலாம்..! ஒரு படத்தை சென்சார் போர்டுல சர்டிபிகேட்டை வாங்கிட்டு தியேட்டருக்கு கொண்டு போனாலும், ஆங்காங்கே இருக்கிறவங்களுக்கு பதில் சொல்லியே தாவூ தீர்ந்திரும் போலிருக்கு..! இப்போ விஸ்வரூபம் படம் முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருக்கும் என்று நினைத்து முதல்ல படத்தை எங்களுக்கு போட்டுக் காண்பிக்க வேண்டும்ன்னு 2, 3 முஸ்லீம் அமைப்புகள் கோரிக்கை வைச்சிருக்காங்க.. ஒரு பெரிய முஸ்லீம் அமைப்புகிட்ட கஷ்டப்பட்டு நோ அப்ஜெக்ஷன் சர்பிடிகேட் வாங்கி அதையும் விளம்பரப்படுத்தியிருக்காங்க.
ஒரு படத்தை ரிலீஸ் செய்றதுக்கு எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்கு..? இப்படி ஆளாளுக்கு இந்தப் படம் எனக்குப் பிடிக்கலை.. எங்க கொள்கைகளுக்கு எதிரானது.. தடை செய்யணும்.. ஓட விட மாட்டோம்ன்னு சொன்னா எப்படி..? படம் பற்றிய உங்களது கருத்துக்களை படம் ரிலீஸுக்கு அப்புறமா வெளிப்படை சொல்லுங்க.. பேசுங்க.. எழுதுங்க.. அதை விட்டுட்டு எங்களுக்குக் காட்டிட்டுத்தான் படத்தை வெளியிடணும்னு சொல்றது அராஜகம்..! கூட்டம் கூட்டும் வலிமை இருக்கேன்ற தைரியம்..! ஒரு கலைஞனுக்கு தன்னுடைய கருத்தை அவனது தளத்திலேயே வெளியிட முழு உரிமை உண்டு.. கருத்துக்களை எதிர்ப்பவர்கள் இதே தளத்தில் தாங்களும் முயன்று வெளியிடலாம்.. அதைவிட்டுட்டு அதிகார பலத்துடன் எளிய கலைஞர்களை மிரட்டுவதும், தடுப்பதும் கொடுமையானது.. ஏற்கெனவே தியேட்டர்காரங்க கொடுக்குற குடைச்சல் போதாதுதுன்னு, இப்போ புதுசா இதையும் சமாளிச்சுக்கிட்டிருக்காரு..! பாவம் கமல் அண்ணே..!
லட்சுமி ராமகிருஷ்ணனின் செலக்டிவ் அம்னீஷியா..!
வருடா வருடம் நடக்கும் எடிசன் சினிமா விருதுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் பேச வந்த இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை பற்றி ரொம்பவே கொதிப்பான நிலைமையில் பேசினார்..! பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருது.... இதற்கு உதாரணமா உகாண்டா, சூடான், தென் ஆப்ரிக்கா என்றெல்லாம் சொன்னவர் இலங்கை, ஈழம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லவே இல்லை..!
நம்மில் பலரும் மனம் புழங்கியதை போலவே ஈழம், தமிழர் என்றாலே பலருக்கும் இரண்டாம்பட்சம்தான் போலிருக்கிறது..! டெல்லிக்காக பொங்கிய டெல்லிக்காரர்களின் உணர்வுகளை நாம் உணர்ந்து கொண்டோம். ஆனால் அது இந்திய தேசத்தின் அவமானம் என்று இப்போது கூப்பாடு போட்டவர்களெல்லாம், ஈழத்தில் நடந்த படுகொலைகளின்போதெல்லாம் கப்சிப்பென்று கள்ள மெளனம் சாதித்து வந்ததையும் நாம் உணர வேண்டும்..! ரொம்பவே சுயநலவாதிகளாகவே இருக்கிறோம் என்ற குற்றவுணர்வுகூட இல்லாதவர்கள்தான் நமது இந்தியச் சொந்தங்கள்..!
சிக்கலில் அண்ணாமலை பல்கலைக்கழகம்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் நண்பரொருவரை சந்திக்க நேர்ந்தது..!
பல்கலைக்கழகம் பற்றி விசாரித்தபோது அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமானவை. இவரே பணம் கொடுத்துதான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாராம்.. பணம் கொடுக்காமல் யாரும் அங்கே வேலைக்கு சேர முடியாதாம்..! கிட்டத்தட்ட 14000 மாணவர்கள் படித்து வரும் பல்கலையில் அதே 14000 அளவுக்கு ஊழியர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.. “இத்தனை பேருக்கு வேலை இருக்கிறதா..?” என்றால் சிரிக்கிறார்.. ஒரு வேலையை செய்ய 4 பேர் இருக்கிறார்கள்.. அதிலேயும் அவர்களுக்குள்ளேயே டூட்டியிலேயே ஷிப்டிங் போட்டு வேலை செய்வார்களாம்.. மற்றவர்கள் ச்சும்மாதான் இருப்பார்களாம்..! பாதிக்கு பாதி பேராசிரியர்களுக்கு வேலையே இல்லை. பேப்பர் திருத்தும்போதுகூட 10, 10 பேப்பர்களாகப் பிரித்தெடுத்து போய் வேலையை ஷேர் செய்து கொள்கிறார்களாம்..
“மாதந்தோறும் சம்பளமாகவே 80 கோடிக்கு செலவாகிறது என்கிறார்கள்.. இதனால்தான் ஆள்குறைப்பு செய்யணும்னு மேலிடத்துல குதிச்சாங்க.. நாங்க போராட்டத்தை அறிவிச்சவுடனேயே வாபஸ் வாங்கிக்கிட்டாங்க.. இப்போ ஆள் சேர்ப்புப் பணியை மட்டும் கொஞ்சம் நிறுத்தி வைச்சிருக்காங்க..” என்றவர் கூடுதலாக சொன்ன ஒரு தகவல்தான் எனக்கு வியப்பை அளித்தது..!
“செட்டி நாட்டு பரம்பரையில் நேரடி வாரிசாக பிறந்தவர்தான் பல்கலையின் இணைவேந்தராக இருக்க வேண்டும் என்று பல்கலையைத் தோற்றுவித்தவரின் உயில் கூறுகிறதாம்..! இப்போதைய நிலையில் அந்த உயிலின்படி இணைவேந்தர் பதவி அடுத்ததாக செட்டி நாட்டு குடும்பத்தில் எம்.ஏ.சிதம்பரத்தின் பேரனுக்குத்தான் போய்ச் சேருமாம்.. அதற்காகவே இப்போதைய ஆளுபவர்கள் பல்கலையில் முடிந்த அளவுக்கு ஆட்களைச் சேர்த்து வைத்து, இதன் மூலம் பங்காளிகளுக்கு பிரச்சினையை உருவாக்கி வைத்துவிட்டு, நாமும் நாலு காசு பார்த்துவிட்டு விலகிச் சென்றுவிடலாம் என்று நினைத்ததினால் வந்த விளைவுதான் இத்தனையும்..” என்றார்..! என்னால் நம்பத்தான் முடியவில்லை..!
சேவை வரி விதிப்பு
சினிமாக்காரர்கள் போராட்டம் என்றாலே எடக்கு, மடக்காக யோசிப்பவர்களுக்கு இன்றைக்கு ஒரு லட்டான விஷயம்..! சேவை வரி விதிப்பு விவகாரம்..! 1994-ல் கொண்டு வரப்பட்டு பின்பு நீக்கப்பட்டு, மீண்டும் 2004-ல் கொண்டு வரப்பட்டு அப்போது திரைப்படத் துறைக்கு விலக்களிக்கப்பட்டு மீண்டும் சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்டது.. அப்போது பிரணாப் முகர்ஜியிடம் திரைப்படத் துறையினர் கேட்டுக் கொண்டதையடுத்து அவரும் அதை ஏற்றுக் கொண்டு விலக்களித்தார். இப்போது மீண்டும் நிதியமைச்சர் போஸ்ட்டை பிடித்திருக்கும் சின்னப் பயல் சிதம்பரம், தான் கொண்டு வந்தே தீருவேன் என்று சபதமெடுத்து உத்தரவிட்டிருக்கிறார். அதிலும் சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்த சேவை வரி அமல்படுத்தப்படும் என்று சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது. சிதம்பரத்துக்கு சினிமாக்காரர்கள் மேல் என்ன கோபமோ தெரியவில்லை..! ஒருவேளை இவர்களும் தனக்காக பாராட்டு விழா நடத்தணும்னு எதிர்பார்க்கிறோ என்னவோ.. அதை வெளிப்படையாகக் கேட்டுவிட்டாலும் சந்தோஷமா நடத்திக் கொடுப்பாங்க..! யார், யாருக்கோ செஞ்சவங்க இவருக்காக செய்ய மாட்டாங்களா..?
12.36 சதவிகிதம் என்றால் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கிறார்ன்னு வைச்சுக்குங்க. ஒரு ஆக்டருக்கு சம்பளமா 1 கோடி கொடுக்குறார்ன்னா இதுல 12 லட்சத்து 36000 ரூபா வரியா போயிரும்.. இது மாதிரியே ஹீரோயின், மெயின் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் கொடுத்துட்டே போனா என்னாகும்..? இந்த வரியையும் தயாரிப்பாளரே ஆக்டர்கள் சார்பா சேர்த்து கட்ட வேண்டி வரும்..! அப்போ அவங்க சம்பளம் ஒரு கோடியோ 12 லட்சத்து 36000 ரூபாயாகும். இது மாதிரி எல்லாருக்கும் கட்டினா அந்தப் படத்தோட பட்ஜெட் என்ன ஆகும்..? இந்தச் செலவை அவர் யார் மேல திணிப்பாரு..? படத்தின் தயாரிப்புச் செலவு இவ்வளவு ஆகும்போது தியேட்டருக்கு அந்தப் படம் வரும்போது தியேட்டரில் கொள்ளை லாபத்தில் கட்டணத்தை வைத்தால்தான் போட்ட காசை அவரால் எடுக்க முடியும்..! இது மேலும், மேலும் பல தவறுகளுக்கு வழிவகுக்கும்னு சினிமாக்காரங்க சொல்றாங்க..! சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரியே கறுப்புப் பணத்துக்கு இந்தச் சட்டம் வழி வகுக்கும்போலத்தான் தெரிகிறது.. இன்றைய கூட்டத்தில் பேசியவர்களில் சிலரே குறிப்பா அண்ணன் ஆர்.கே.செல்வமணி ரொம்ப தைரியமா, வெளிப்படையா “எங்களைத் தப்பு செய்ய வைக்காதீங்க.. வேற வழியில்லாமல் தயாரிப்பாளர்கள் அவ்வாறு செய்தால், அரசுக்கு நியாயமாக வர வேண்டிய வரியும் வராமல் போய்விடும்..” என்றார்..!
10 லட்சம் ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்குறவங்களுக்குத்தான் இந்த சேவை வரின்னாலும், தயாரிப்பாளர், இயக்குநர்கள், நடிகர்களுக்கு மட்டுமே இதனை புகுத்தியிருக்கும் மத்திய அரசு தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்துள்ளதாம்..! மேலும் ஒரு ஆண்டு ஒருவர் சேவை வரி செலுத்தியிருந்தால், தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதே அளவு சேவை வரியைச் செலுத்த வேண்டும் என்பதும் விதியாம்.. முதல் வருஷம் படம் கிடைச்சு கட்டினாலும், அடுத்த வருஷம் சும்மா இருக்கும்போதும் கட்டணும்னா எப்படிங்க என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். நியாயமான கேள்விதானே..?
கூட்டத்தில் தியேட்டர்கள் சங்கத்தின் துணை செயலாளர் ஸ்ரீதர் பேசும்போது ஒரு விஷயத்தைச் சொன்னார். “2005-ம் வருடம் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை என்ற 4 சிட்டிகளிலும் உள்ள மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களுக்கு அவர்களுடைய வருமான வரியில் முதல் 5 ஆண்டுகளுக்கு 50 சதவிகிதம் விலக்களிப்பதாக ஒரு ஆணை பிறப்பித்தார்களாம். அப்போது சிதம்பரம்தான் நிதியமைச்சர்..! இந்த ஆணைப்படி டெல்லி, கொல்கத்தா, மும்பையில் உள்ள மல்டிபிளெக்ஸ்களுக்கு 50 சதவிகித வரி விலக்கு என்ற செய்திகள் அந்தந்த மாநிலத்தின் வருமான வரித்துறைக்கு சென்றடைந்துவிட்டதாம்.. ஆனால் சென்னைக்கு வரவேயில்லை.. அதனால் அமல்படுத்த உத்தரவும் கிடைக்கவில்லையாம்.. சென்னையில் இருக்கும் மல்டிபிலெக்ஸ் உரிமையாளர்கள், திரையுலகப் புள்ளி ஒருவரையும் அழைத்துக் கொண்டு சிதம்பரத்தை நேரில் சென்று சந்தித்து நிலைமையை விளக்கினார்களாம்.. “சென்னைக்கும் இந்த அரசு ஆணையை கொண்டு வந்துட்டீங்கன்னா நல்லாயிருக்கும்”னு சொன்னவுடனேயே சிதம்பரம், “ஓ.. அதுக்கென்ன செஞ்சிட்டா போச்சு..” என்று புன்சிரிப்புடன் சொல்லி அனுப்பி வைத்தாராம்..! அவர்களும் சந்தோஷமா திரும்பி வந்தார்களாம். ஆனால் ஒரே வாரத்தில் அந்த அரசு ஆணை, 4 சிட்டிகளுக்கும் சேர்த்தே அறவே நீக்கப்பட்டுவிட்டதாக புது ஆணை பிறப்பிக்கப்பட்டதாம்..! அப்பேர்ப்பட்ட சிதம்பரத்தை பத்தி தெரியாமலேயே இங்க நிறைய பேர் பேசிக்கிட்டிருக்காங்க..” என்று சொல்லி வருத்தப்பட்டார் ஸ்ரீதர்..
அதானே 'சின்னப் பயல்' சிதம்பரம்ன்னா கொக்கா என்ன..?
பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்
நம்ம மதிப்பிற்குரிய ஆத்தா தான்தான் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதை நினைவில் வைத்திருந்து பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை கடுமையான சட்டம் கொண்டு தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பதோடு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கமும் செய்யப்பட வேண்டும் என்றும் மிக அற்புதமான ஒரு யோசனையைச் சொல்லியிருக்கிறார்..!
என்னைப் பொறுத்தளவில் இந்த நாட்டில் மிகப் பெரிய வன்முறையே அரசியல்வியாதிகள் செய்யும் ஊழல்களும், அராஜகங்களும்தான் என்பேன்.. அந்த வகையில் ஊழல் செய்யும் அரசியல்வியாதிகளுக்குத்தான் இது போன்ற அதிகப்பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன்.. அதிலும் மாதந்தோறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, 5 ஆண்டு முடிவில் 65 கோடி ரூபாய் வருமானம் என்று காந்தி கணக்குக் காட்டிய பொம்பளை அரசியல்வியாதிகளுக்கு, ரசாயன முறையில் என்ன மாதிரியான தண்டனை தரப்பட வேண்டும் என்பதையும் ஆத்தாவே சொல்லிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும்..!
படித்ததில் பிடித்தது
ரஜினி நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. நான் அந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பில் ரஜினியுடன் பேசிக் கொண்டிருந்தபோது தேங்காய் சீனிவாசன் பற்றி பேச்சு வந்தது.
“அவருக்கு நான் ஒரு படம் செய்து தரலாம்னு இருக்கிறேன். இது பற்றி சென்னை சென்றதும் பேசலாம்..” என்று சொன்னார் ரஜினி. படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரும் சென்னை திரும்பினோம். ரஜினி ஒரு பிளைட்டில் ஏறி முன்பே சென்றுவிட்டார். நான் மறு பிளைட்டில் ஏறுவதற்காக படக் குழுவினருடன் ஐதராபாத் ஏர்போர்ட்டுக்கு சென்றேன். அப்போது தேங்காய் சீனிவாசனும் அவருடைய மனைவியும் சென்னையில் இருந்து வந்திறங்கினர்.
அவரைப் பார்த்ததுமே, “ஒரு சந்தோஷமான செய்தியை சொல்லப் போறேன்..” என்று சொன்னேன். உடனே அவர், “நான் ஒரு துக்கச் செய்தியைச் சொல்லப் போறனே..?” என்று சொல்லிவிட்டு, “சரி முதல்ல நீயே சந்தோஷமான செய்தியைச் சொல்லு..” என்றார். ரஜினி சொன்ன விஷயத்தைச் சொன்னதும் மகிழ்ந்தார். உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அதனால்தான் துக்கத்திற்கு வந்திருக்கிறோம். மெட்ராஸ் வந்ததும் இது பற்றி பேசலாம் என்று சந்தோஷமாய் சொல்லிவிட்டுச் சென்றார்.
நான் சென்னைக்கு வந்து இரண்டு நாட்கள் கழித்து தேங்காய் சீனிவாசனின் சகோதரி எனக்கு போன் செய்து, ஐதராபாத்தில் அண்ணன் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று சொல்லி அழுதார். நான் அவர் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு நின்றேன். சிவாஜி ஸார் உட்பட பல நடிகர், நடிகைகள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். சிவாஜி ஸார் உட்பட பலரும் வாசலிலேயே உட்கார்ந்திருந்தார்கள்.
அப்போது ராமாவரம் தோட்டத்தில் இருந்து போன் வந்தது. மக்கள் திலகம் அப்போதும் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அதே நேரத்தில் முதல்வராகவும் இருந்தார். “சி.எம்.முக்கு உடம்புக்கு ரொம்ப முடியலை. அதனால் ஜானகியம்மா வர்றாங்க. பாடியை எடுத்திராதீங்க..” என்று போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சில நிமிடங்களில் ராமாவரம் தோட்டத்தில் இருந்து மீண்டும் போன். சி.எம். வர்றார் என்று சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் மக்கள் திலகத்தின் கார் வந்தது. அவர் காரில் வந்து இறங்கியதுமே சிவாஜி ஸார் உட்பட அனைவரும் எழுந்து நின்றார்கள். காரைவிட்டு இறங்கியதுமே மக்கள் திலகம் கொஞ்ச நேரம் தூரத்திலேயே நின்று தேங்காய் சீனிவாசன் உடலை பார்த்துக் கொண்டிருந்தார். உடல் நிலை மோசமாக இருந்ததால் அவரால் ரொம்ப நேரம் நிற்கவும் முடியவில்லை.
மெல்ல தேங்காய் சீனிவாசன் அருகில் சென்று மாலை அணிவித்தார். அந்த மாலையைத் தூக்கி போடுவதற்கே ரொம்ப சிரமப்பட்டார். உடல் நிலை அந்த அளவுக்கு மோசமாக இருந்தும் தேங்காயின் மீதிருந்த பாசத்தால் வந்திருக்கிறார் என்று எல்லோரும் முணுமுணுத்தார்கள். தேங்காய் சீனிவாசன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. பின்பு மெல்ல திரும்பி நடந்து காரில் ஏறினார். காரில் ஏறும்போது தேங்காய் சீனிவாசன் மகனை சைகையால் அழைத்தார். சரியாகப் பேசக் கூட முடியாத நிலையில் இருந்ததால்தான் சைகையால் அழைத்தார். அவரையும் காரில் ஏற்றிக் கொண்டார்.
தேங்காய் சீனிவாசனின் உடலை எடுப்பதற்கு நேரமாகிவிட்டது. இந்த நேரத்தில் எதற்கு அவரை காரில் ஏற்றிக் கொண்டு போகிறார் என்று எல்லோருக்கும் புரியவில்லை. எல்லோரும் குழப்பத்தில் இருக்கும்போது கார் கொஞ்ச தூரம் சென்றதும் நிற்கும் சப்தம் கேட்டது. காரில் இருந்து தேங்காய் சீனிவாசனின் மகன் இறங்கி வந்தார். அவரின் கையில் ஒரு பேப்பர் கட்டு இருந்தது. நெருங்கும்போதுதான் தெரிந்தது அது பெரும் பணக்கட்டு என்று..!
நன்றி : எ.சங்கர்ராவ்
நூல் : தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.
நக்கீரன் வெளியீடு
விலை : ரூபாய் 150.
பார்த்ததும் பதறியது
|
|
Tweet |




















