திருத்தம் செய்தது ஆ.ராசாவா? சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி!

23-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சுப்ரீம் கோர்ட்டில் சென்ற வாரம் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை சம்பந்தமாக இன்றைய ஜூனியர்விகடனில் வெளிவந்திருக்கும் கட்டுரை இது :

வரும் மார்ச் 31-ம் தேதி, சி.பி.ஐ. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகை தாக்கலாக இருக்கிறது. இது தேர்தல் காலம் என்பதால், தேர்தல் அறிக்கை மாதிரி, இந்தக் குற்றப் பத்திரிகை அறிக்கையையும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 'இந்த ஊழலில் 22 ஆயிரம் கோடிகள்தான் அரசுக்கு இழப்பு!’ என்று சி.பி.ஐ. சொன்னாலும், ஊழலில் கை மாறிய பணம் எவ்வளவு என்பதுதான் முக்கியக் கேள்வி!
 

2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலவரத்தை சி.பி.ஐ-யும், இதே ஊழலில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமலாக்கப் பிரிவும், தகவல்களை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பு​களுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் பாலமாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை மத்திய அரசு நியமித்து உள்ளது.

கடந்த 15, 16 தேதிகளில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர, அங்கு ஆஜரானார் கே.கே.வேணுகோபால். விசாரணை அறிக்கையை சீல் வைத்த கவரில் வழங்கியதோடு, அதில் உள்ள விவரங்களை இலைமறைவு காயாகப் படித்து... ஒவ்வொன்றாக நீதிபதிகளுக்கு விளக்கினார்.

தெஹல்கா பத்திரிகை, 'ஆ.ராசா மற்றும் அவர் சம்பந்தப்பட்ட கம்பெனி​களைப் பட்டியலிட்டு, இவர்கள் மீதான விசார​ணையை அமலாக்கப்பிரிவு தாமதப்​படுத்தி வருகிறது’ என்றும், 'நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம், அமலாக்கப் பிரிவு இயக்குநர் மாத்தூர் மூலமாக வழக்கின் விசாரணையைத் தாமதப்​படுத்துவதாக’வும் தங்களுக்கு வந்த ஒரு கடிதத்தை ஆதாரமாக வைத்து ஒரு கட்டுரை வெளியிட்டது. இதனை, வேணுகோபால் நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

மேலும், 'இந்த வழக்கில் தொடர்புள்ள மகேஷ் ஜெயின், ராஜேஷ் ஜெயின், தௌலத் ஜெயின் போன்றவர்களிடம் விசாரணை நடத்தவில்லை’ என்று எழுதி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அப்போது, 'ஜெயின் சகோ​தரர்களுக்கு எந்தெந்த தேதிகளில் சம்மன் அனுப்பப்பட்டன, அவர்களிடம் எந்தெந்த நாட்கள் விசாரணைகள் நடத்தப்பட்டன?’ என்ற தகவல்களையும் தாக்கல் செய்தார். அதன் பிறகு, ''இப்படிப் பொய் பிரசாரம் செய்யும் பத்திரிகைகள் மீதும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புலனாய்வுத் துறைகளுக்கு மட்டுமல்ல, பிரணாப் முகர்ஜியின் படத்தைப் போட்டு, அவருடைய இமேஜுக்கும் இது பாதிப்பை         ஏற்படுத்​துகிறது...'' என்றும் கூறினார்.

இந்த சமயத்தில் பிரசாந்த் பூஷண், ''எனக்கு இதே மாதிரியான கடிதம் வந்தது!'' என்றார். உடன் நீதிபதி சிங்வி, ''சுப்ரீம் கோர்ட்டுக்கும் இந்தக் கடிதம் வந்துள்ளது. இது தெற்கே இருந்து எழுதப்பட்ட கடிதம் மாதிரியாக இருக்கிறது. இதில் ஸ்ரீ என்கிற வார்த்தையில், 'ஹெச்’ எழுத்து இல்லை. தெற்கேதான் 'ஹெச்’ சேர்க்க மாட்டார்கள். இது போன்ற கடிதத்தை வைத்து, அந்தப் பத்திரிகை கட்டுரை எழுதியது தவறு. இது அவமதிப்புதான். ஆனால், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை. அதே சமயம், புலனாய்வு அமைப்பு​களின் நலனைக் கருத்​தில்​கொள்வோம். இப்​போது உடனடியாக இதில் கருத்து சொல்ல முடியாது. முதலில் உங்கள் விசாரணையை முடித்து, குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யுங்கள். அதன் பின்னர்தான், நீங்கள் எந்த அளவுக்கு விசாரணையை சரியாக மேற்கொண்டீர்கள் என்று சொல்ல முடியும்!'' என்​றார்.

பின்னர் அமலாக்கப் பிரிவும், சி.பி.ஐ-யும் விசாரணையில் மேற்கொண்​டுள்ள விவரங்களை கே.கே.வேணுகோபால் எடுத்துவைத்தார்.

''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற 31 நிறுவனங்களில் 26 நிறுவனங்களிடம் விசாரணை முடிந்துள்ளது. மற்றவர்களுக்கும் சம்​மன் சென்றுள்ளது...'' என்று கூறிவிட்டு இந்த கம்பெனிகளுக்கு வந்த முதலீடுகள் மற்றும் வெளிநாடுகளில் மேற்கொண்ட பணப் பரிமாற்றம் குறித்த விவரங்களையும் சுட்டிக்​காட்டினார்.

அப்போது, நிறுவனங்களின் பெயரைச் சொல்லாமல், ஒரு சில புள்ளி விவரங்களை நீதிபதிகளிடம் ஒப்படைக்க​ப்பட்ட ரகசிய ஆவணங்​களில் உள்ள பக்கத்தின் எண்களை மட்டும் சொல்லி கோடிட்டுக் காட்டினார். இதில் ஒரு நிறுவனம், 100 கோடியை இடைத்​தரகர் ஒருவருக்குக் கையூட்டாகக் கொடுத்திருப்பதை      நீதிபதி​களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

மேலும், ''ஆ.ராசாதான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் மையம். அவர் மீதும் மற்ற இரு அதிகாரிகள் மீதுமான விஷயங்களுடன் குற்றப் பத்திரிகை வருகிற 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும். அடுத்தடுத்து ஆதாயம் அடைந்த ஒவ்வொரு நிறுவனம் மீதும் தனித் தனியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்...'' என்றார். அநேக​மாக ஆ.ராசாவுடன் சேர்த்து ஷாகித் பால்வாவின் ஸ்வான் டெலிகாம் மற்றும் சினியுக் போன்ற நிறுவனங்கள் மீது குற்றப்​பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்றே தெரிகிறது.

இந்தக் குற்றப் பத்திரிகையின் முக்கிய சாட்சியாக இருக்கப் போகிறவர், அப்போ​தைய சொலிசிட்டர் ஜெனரலும் தற்போ​தைய அட்டர்னி ஜெனரலுமான ஜி.இ.வாஹன்வதி. ஸ்வான் டெலிகாமுக்கு உரிமங்கள் கொடுக்கப்பட்ட விவகாரமும் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது.


''டெலிகாமில் உரிமம் பெற்ற ஒரு நிறுவனம், மீண்டும் ஒரே வட்டாரத்தில் ஒருங்கிணைந்த உரிமங்களைப் பெற அனுமதி இல்லை. ஏற்கெனவே, உரிமங்களைப் பெற்றிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் (10 சதவிகிதத்துக்கும் மேலாக) ஸ்வான் டெலிகாமின் பங்குகளையும் பெற்றுள்ளது. இது தொலைத் தொடர்பு விதிமுறைகளுக்கு விரோத​மானது. இந்தப் பங்குகளில் முந்தைய நிலையில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்வானும் ரிலை​யன்ஸும் கூறியுள்ளது.

இது பிரதமர் அலுவலகத்துக்கு வர, நிறுவனத் துறை அமைச்சகத்திடம் அனுப்பி உண்மையைக் கண்டறிய ஆலோசனை கூறியுள்ளது. ஆனால், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், சொலிசிட்டர் ஜெனரலுக்கு ஃபைலை அனுப்பினார். சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ.வாஹன்வதி, 'எல்லாம் சரிதான்...’ என்று சொல்லாமல், ஸ்வான் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அனுமதிக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால், ஆ.ராசா தரப்பு இதைக் கருத்தில் கொள்ளவில்லை.

டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்ட தேதிகள்(கட் ஆஃப் டேட்), சம்பந்தப்பட்ட பத்திரிகை செய்தி அறிவிப்பு(பிரஸ் ரிலீஸ்) போன்றவை வெளியிடுவதற்காக, சொலிசிட்டர் ஜெனரலின் சட்ட ஆலோசனைக்குப் போயிருக்கிறது. இதில் சொலிசிட்டர் ஜெனரல் 'அப்ரூவ்ட்’ என்று எழுதி கையெழுத்திட்டதில், 'திருத்தம்’ என்று மாற்றி அதில் கடைசி 'பாரா’ ஒன்றும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது...''  என்றார்.

இந்தத் திருத்தங்கள் சம்பந்தப்பட்ட எழுத்தும் ஒன்றாக இருந்துள்ளது. இத்​தோடு, சொலிசிட்டர் ஜெனரல் பேனாவின் மையும், திருத்தம் செய்து எழுதியவரின் மையும் வேறுபட்டு உள்ளன. இது​போன்ற விவரங்கள், ஹைதராபாத் தடயவியல் மையத்தில் சோதனைகளுக்கு அனுப்​பப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில்  ஆ.ராசாவின் பங்கு என்ன       என்ப​தையும் விசாரித்து வருவதாக சி.பி.ஐ. அறிந்துள்​ளது.

இதன்படி விண்ணப்பங்கள் கோரும் கடைசி நாள் தேதியை... அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 25-ம் தேதியாக மாற்றியது, தகுதியற்ற நிறுவ​னங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு உடந்தையாக இருந்து பணம் செலுத்த வேண்டிய தேதியை முன்கூட்டியே சொல்லித் தயாராக​  வைத்தது போன்றவை அடங்கும். இப்படிப்பட்ட வில்லங்கங்கள் எல்லாம் குற்றப் பத்திரிகையில் பதிவாகும் எனத் தெரிகிறது.

பொது நல வழக்கின் மனுதாரரான பிரசாந்த் பூஷண், ''2-ஜி விசாரணையை மேற்கொள்ளும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு விசார​ணையை மேற்​பார்வையிட முன்னாள் அதிகாரிகள் அடங்கிய கமிட்டி ஒன்றை ஏற்படுத்த வேண்டும்!'' என்று கோரினார். இதனை கே.கே.வேணுகோபால் கடுமையாக     எதிர்க்​கவே, உச்ச நீதிமன்றமும் கைவிட்டது.

''சி.பி.ஐ. அதிகாரிகள் வார விடுமுறைகூட எடுத்துக் ​கொள்ளாமல் 20, 22 மணி நேரங்கள் விசாரணையிலும், ரெய்டுகளிலும் பணியாற்றி வருகின்றனர். அப்படிப்​பட்டவர்களை நம்பாதது போல, இது போன்ற கமிட்டி​யை திடீரென்று ஏற்படுத்தினால், சி.பி.ஐ. டீமின் மனதை இது புண்படுத்தும்...'' என்றார் கே.கே.வேணுகோபால்.

எப்படியோ, எத்தனையோ கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நாள் நெருங்கி வருகிறது!

நன்றி : ஜூனியர்விகடன்-மார்ச் 27, 2011

10 comments:

PARAYAN said...

VADAI...

ராஜ நடராஜன் said...

எவன் திருடினால் எனக்கென்ன?

தற்போதைய நிலையில் ஸ்பெக்ட்ரத்தை இலவசம் முந்திக்கொண்டதா?

உண்மைத்தமிழன் said...

[[[PARAYAN said...

VADAI...]]]

இதுனாலதான் இன்னிக்கு கடை போணியாகலை..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
எவன் திருடினால் எனக்கென்ன? தற்போதைய நிலையில் ஸ்பெக்ட்ரத்தை இலவசம் முந்திக் கொண்டதா?]]]

மக்கள் எவ்வழியே அவ்வழியிலேயே அரசன்..!

இந்த நாடு வெளங்காது..!

R.Gopi said...

தலைவா....

”தல” நேத்து, வைகைப்புயலை வச்சு கேப்டன சாத்து சாத்துனு சாத்திட்டாராமே...

அதை பத்தி ஏதாவது எழுதுங்களேன்...

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...
தலைவா. ”தல” நேத்து, வைகைப்புயலை வச்சு கேப்டன சாத்து சாத்துனு சாத்திட்டாராமே.
அதை பத்தி ஏதாவது எழுதுங்களேன்...]]]

எனக்கொண்ணும் தகவல் வரலியே கோபி.. கிடைத்தால் எழுதுகிறேன்..!

vasan said...

சிபிஐ யின் நிலைப்பாடு ஒவ்வொரு வ‌ழக்கிலிலும் ஒவ்வொரு நிலையில் இருந்திருக்கிற‌து என்ப‌த‌ற்கு ப‌ல முன்னுதார‌ண‌ங்க‌ள் உள்ள‌ன. போப‌ர்ஸில் முக்கிய‌ குற்ற‌வாளிக‌ளை த‌ப்பிக்க‌ விட்டு, வ‌ழக்கை முடிக்கிற‌து. ஹ‌ச‌ன் அலி வ‌ழக்கில், நீதி ம‌ன்றம் "என்ன‌ தான் ந‌ட‌க்கிற‌து" என கோப‌மாய் கேட்ட‌ பின்பு தான் என்போஃர்ஸ்மெண்ட் டைட்ர‌கரேட் ந‌ட‌வ‌டிக்கை எடுக்கிற‌து எந்த‌ பொருத்தாமான ஆவ‌ணங்களும் சேக‌ரிக்காம‌ல். நிதி அமைச்ச‌ரே அலியின் 8 பில்லிய‌ன் ப‌ண‌ம் ப‌ற்றிய‌ உரையில் முதல் நாள் போட்ட‌ ப‌ண‌ம் ம‌றுநாள் வேறு எங்கோ போய்விட்ட‌து என நக்க‌லாய்ச் சிரித்துக் கொண்டே அறிக்கை விடுகிறார்.
http://www.timesnow.tv/Mystery-over-Hassan-Alis-billions/videoshow/4363622.cms

உண்மைத்தமிழன் said...

[[[vasan said...

சி.பி.ஐ.யின் நிலைப்பாடு ஒவ்வொரு வ‌ழக்கிலும் ஒவ்வொரு நிலையில் இருந்திருக்கிற‌து என்ப‌த‌ற்கு ப‌ல முன்னுதார‌ண‌ங்க‌ள் உள்ள‌ன. போப‌ர்ஸில் முக்கிய‌ குற்ற‌வாளிக‌ளை த‌ப்பிக்க‌விட்டு, வ‌ழக்கை முடிக்கிற‌து. ஹ‌ச‌ன்அலி வ‌ழக்கில், நீதி ம‌ன்றம் "என்ன‌தான் ந‌ட‌க்கிற‌து" என கோப‌மாய் கேட்ட‌ பின்புதான் என்போஃர்ஸ்மெண்ட் டைட்ர‌கரேட் ந‌ட‌வ‌டிக்கை எடுக்கிற‌து எந்த‌ பொருத்தாமான ஆவ‌ணங்களும் சேக‌ரிக்காம‌ல். நிதி அமைச்ச‌ரே அலியின் 8 பில்லிய‌ன் ப‌ண‌ம் ப‌ற்றிய‌ உரையில் முதல் நாள் போட்ட‌ ப‌ண‌ம் ம‌றுநாள் வேறு எங்கோ போய்விட்ட‌து என நக்க‌லாய்ச் சிரித்துக் கொண்டே அறிக்கை விடுகிறார்.
http://www.timesnow.tv/Mystery-over-Hassan-Alis-billions/videoshow/4363622.cms]]]

அசன் அலியின் பின்னணியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே உள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்.. அதனால்தான் இத்தனை சுணக்கம்..!

abeer ahmed said...

See who owns colossuscorporation.com or any other website:
http://whois.domaintasks.com/colossuscorporation.com

abeer ahmed said...

See who owns musicweb-international.com or any other website.