Showing posts with label சுப்ரீம் கோர்ட். Show all posts
Showing posts with label சுப்ரீம் கோர்ட். Show all posts

கொள்ளையடித்தது 30,983 கோடிகள்தானா...? மீதம் எங்கே..?

13-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்             பத்திரி​​கையில் ஐந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. முதல் இரண்டு குற்றச்சாட்டுகள்  பற்றி, மார்ச் 13, 2011 ஜூ.வி-யில் விரிவாக எழுதி இருந்தோம். அடுத்த மூன்று குற்றச்சாட்டுகள் இங்கே...!

மாற்றுத் தொழில்  நுட்பத்துக்கு இரட்டை ஸ்பெக்ட்ரம் ஒதுக்​கீடு!
ஏற்கெனவே உள்ள மொபைல் ஆபரேட்டர்களுக்கு மாற்றுத் தொழில்நுட்பத்தின்படி, இரட்டை முறையில் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்​தும் உரிமங்கள்   கொடுக்க   டிராய்   அமைப்பு,   ஆகஸ்ட்   2007-ல்             அனுமதி   கொடுத்தது.

இரண்டு டாடா டெலி சர்வீஸஸ் நிறுவனங்கள் இதற்கு விண்​ணப்​பித்தன. இவர்கள் ஏற்கெனவே சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தின்படி மொ​பைல் கனெக்ஷன் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்று இருந்தனர். ஆனால், டிராய் செய்த சிபாரிசு தொலைத் தொடர்புத் துறைக்கு வருவதற்கு முன்பே ரிலையன்ஸ் நிறுவனம் (18 சர்க்கிள்கள்), ஷியாம் டெலி லிங்க்ஸ், ஹெச்.எஃப்.சி.எல். இன்ஃபோடெல் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்தது. டாடா நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை. 'டாடா நிறுவனத்தைப் படாதபாடுபடுத்தினர்’ என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டுகிறது.


'தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் அவரது கூட்டாளி சந்தோலியாவும்... ஸ்வான் டெலிகாமையும், யுனிடெக் டெலிகாமையும் முன்னுக்குக் கொண்டு  வரவே, டாடா டெலி சர்வீஸைப் பின்னுக்குத் தள்ளினார்கள்’ என்கிறது சி.பி.ஐ.

டாடா கொடுத்த விண்ணப்பப் படிவங்கள்​கூட தொலைத் தொடர்புத் துறையில் காணாமல் போய்​விட்டதாக சி.பி.ஐ. தெரிவித்து இருக்கிறது. 'டாடாவுக்கு உரிமங்கள் கொடுக்கப்பட்டால், டெல்லி, மும்பையில் ஷாகித் பால்வாவின் ஸ்வான் டெலிகாமும், சஞ்சய் சந்திராவின் யுனிடெக் நிறுவனமும் பயன் அடைய முடியாமல் போகும் என்று ஆ.ராசா கருதினார். அதனால், டாடா​வின் விண்ணப்பங்கள் மூடி              மறைக்கப்​பட்டுவிட்டன.

அவர்கள் 10.1.2008 அன்று கட்டணம் செலுத்தி, அதற்கான ரசீது கொடுக்கப்பட்டு, சீனியாரிட்டி பட்டியலில் பெயர் இருந்தாலும், டாடா கொடுத்த விண்ணப்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மாயமாக மறைந்துவிட்டது’ என்று சி.பி.ஐ. சொல்கிறது. ஆ.ராசா இந்த அளவுக்கு டாடாவை இழுத்தடித்த பிறகும், அவரை சீராட்டி, பாராட்டி கருணாநிதிக்கு டாடா கடிதம் எழுதியது ஏன் என்ற மர்மம் பற்றி சி.பி.ஐ. ஏனோ குறிப்பிடவில்லை.

ஸ்வான் நிறுவனத்துக்குச் சொந்த​மான டி.பி. ரியாலிட்டியின் சகோதர நிறுவனத்துக்கு ஆர்.கே. சந்தோலியா, அவரது வீட்டை வாடகைக்குக் கொடுத்து இருக்கிறார். அதன் மூலம், மாதம்தோறும் 63,000 ரூபாயை சந்தோலியாவுக்கு ரியாலிட்டி கொடுக்கிறது. 2008 டிசம்பரில் ஸ்வானின் பங்குகள் வாங்கப்பட்டது குறித்து நீளமான பட்டியலை குற்றப் பத்திரிகையில் வைத்துள்ளது சி.பி.ஐ.

ஐக்கிய அரேபிய நிறுவனமான எடிஸாலட் நிறுவனம், ஸ்வான் டெலிகாமின் பங்குகளை 3,200 கோடிக்கு வாங்கியது. சென்னையைச் சேர்ந்த ஜினெக்ஸ் எக்ஸ்ம் வென்சர் நிறுவனம் 380 கோடிக்கு ஸ்வானின் பங்குகளை வாங்கியது. இந்த பணம் வந்த வழியையும் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் வைத்து இருக்கிறது.

தகுதியில்லாத நிறுவனங்கள்!

ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, இதன் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற அரசியல் செல்வாக்கோடு ரிலையன்ஸ் இறங்கியது. இதற்கு ரிலையன்ஸின் மற்ற நிறுவனங்கள் பணம் முதலீடு செய்துள்ளன.

இந்த விவரங்களை முழுமையாக சி.பி.ஐ. பட்டியல் போட்டு, 45 பக்கங்களுக்குப் படம் போட்டு விளக்கி இருக்கிறது. இதில், ரிலையன்ஸின் நிர்வாகிகள் கௌதம் டோஸி, சுரேந்திர பைப்பாரா, ஹரி நாராயணன் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அதனால், இவர்கள் மூன்று பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அனில் அம்பானியை விசாரித்த சி.பி.ஐ., அவரிடம் பணி புரிபவர்களை மட்டுமே குற்றவாளிகளாகச் சிக்க வைத்துள்ளது.

இதேபோல், ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருந்த யுனிடெக் நிறு​வனத்தின் சில துணை நிறுவனங்கள், டெலிகாம் உரிமத்துக்கான தகுதியைப் பெறுவதற்காக, சில மோசடியான தகவல்​களைக் கொடுத்து இருப்பதாகவும் சி.பி.ஐ. கண்டுபிடித்து உள்ளது.

அந்தத் தகவல்களை ஆராயாமல், தொலைத் தொடர்புத் துறை அனுமதி கொடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கான விண்ணப்பம் செய்த​போது, ஸ்வானுக்கும் யுனிடெக் நிறுவனத்துக்கும் முறையான தகுதிகள் இல்லை. இவர்களது விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கு உரிமங்கள் கொடுக்கவே கட்-ஆஃப் தேதி முதல் ஸ்பெக்ட்ரம் விலை மதிப்புவரை அனைத்திலும் தில்லுமுல்லுகள் நடந்து உள்ளதாக சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடுகிறது.

நுழைவுக் கட்டணத்தில் தில்லுமுல்லு!

அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு குறித்து சி.பி.ஐ. ஒரு கணக்கைச் சொல்கிறது!

செல்லுலார் சேவை நிறுவனங்களிடம் இருந்து ஒரு மெகா ஹெட் வீதம் ஆண்டுதோறும் வசூல் செய்யப்படும் வருவாய்ப் பங்குத் தொகை 2002-03 முதல் 2007 வரை கணக்கிடும்போது, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. இதை  வைத்துக் கணக்கிடும்போது, 2008-ம் ஆண்டு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டதில், 22,535 கோடி நுழைவுக் கட்டணத்தில் நஷ்டம்.

இதே மாதிரி, இரட்டைத் தொழில் நுட்பத்துக்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்தாத காரணத்தால், 8,448 கோடி அரசுக்கு இழப்பு. ஒட்டு  மொத்தமாக, அரசுக்கு 30,983 கோடி நஷ்டம் என்கிறது சி.பி.ஐ.

தொலைத் தொடர்புத் துறை, ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான நுழைவுக் கட்டணத்தை 1,650 கோடி என நிர்ணயித்தது. இது 2001-ல் நான்காவது செல்லுலார் மொபைல் டெலிபோன் சர்வீஸுக்கு(சி.எம்.டி.எஸ்.) விடப்பட்ட ஏலத் தொகை. இந்த ஏலத் தொகையை உயர்த்தாமல், 2008-ல் கொடுக்கப்பட்ட உரிமங்களுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயித்தது தவறு என்கிறது சி.பி.ஐ..

'தொலைத் தொடர்புத் துறை எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதனால், 2001-க்குப் பிறகு ஏற்பட்டுள்ள தொலைபேசிகளின் அடர்த்தி, வளர்ச்சி, ஆண்டுதோறும் வசூல் செய்யப்படும் வருவாய்ப் பங்குத் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டு, இந்த ஏலத் தொகையை அரசு உயர்த்தி இருக்க வேண்டும்.

2003-ல் பீகார், ஒரிஸ்ஸா, வட கிழக்கு மாநிலங்களில் யாருமே ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால், 2001-ம் ஆண்டு முறையே பின்பற்றப்பட்டது. ஆனால், கடுமையான போட்டி உருவான பிறகும் அதையே எப்படிப் பின்பற்ற முடியும்?’ என்று சி.பி.ஐ. கேள்வி எழுப்புகிறது.

'நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம், அதற்கும் மேலாக பிரதமர் கூறிய ஆலோசனைகளையெல்லாம் ஆ.ராசா புறக்கணித்தார். எல்லோருடைய கருத்துகளையும் மீறி தன்னிச்சையாக ஆ.ராசா முடிவு எடுத்தார். தனக்கு வேண்டியவர்களான ஸ்வான் டெலிகாம் ஷாகித் பால்வா, வினோத் கோயங்காவோடு, யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திராவும் பயனடையவே, அரசுக்கு ஆ.ராசா நஷ்டம் ஏற்படுத்தினார்!’ என்கிறது  சி.பி.ஐ.

இந்த விவகாரத்தில் கட்டுக்கட்டான ஆவணங்களை மட்டுமின்றி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் தவிர, குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் சாட்சிகளாக நிறுத்துகிறது.

தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், டிராய் தலைவர்கள், சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதி, முன்னாள் தொலைத் தொடர்புச் செயலாளர் மாத்தூர், சட்டத் துறை செயலாளராக இருந்த டி.கே. விஸ்வநாதன், முன்னாள் நிதிச் செயலாளர் டி.சுப்பா ராவ் என்று பெரிய படையே சிறப்பு நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது.

இதில் முக்கியமான ஏழு பேர் ஆ.ராசாவுக்கு எதிராக மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலங்களும் கொடுத்து இருக்கிறார்கள். இதில் சி.பி.ஐ. ரெய்டுக்கு உள்ளான ஏ.கே.ஸ்ரீவத்சவா மற்றும் சுமார் ஒன்பது வருடங்களாக, கூடுதல் பிரைவேட் செக்ரெட்டரி அந்தஸ்தில் ஆ.ராசாவுடன் பணியாற்றிய ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவரும் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். (இதில் ஆசிர்வாதம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. அல்லது காங்கிரஸ் சார்பில் போட்டியிடவும் முயற்சி செய்தவர் என்பது தனி விவகாரம்)

இந்த இருவரது வாக்குமூலங்களை  வைத்து ஆ.ராசாவுக்கு எதிராக வழக்கை சி.பி.ஐ. வலிமைப்படுத்தி உள்ளது. மோசடி, கூட்டுச் சதி, தில்லுமுல்லு, திட்டமிட்டு ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் கொடுத்தது, லஞ்ச ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடத்தில் இருந்து அதிகபட்சம் ஏழு வருடங்கள்வரை தண்டனை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், சாட்சிகளில் எத்தனை பேர் பல்டி அடிப்பார்கள், யார் பிறழ் சாட்சிகளாக மாறுவார்கள் என்பதைப் பொறுத்தும்... இனி தாக்கல் செய்யப்பட இருக்கும் கூடுதல் குற்றப் பத்திரிகையைப் பொறுத்தும், 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதித் தீர்ப்பு அமையும். இதுவரை கலைஞர் டி.வி. பெற்ற 200 கோடியைத் தவிர, வேறு எந்த ஆதாயங்களையும் சி.பி.ஐ. இந்தக் குற்றப் பத்திரிகையில் முன் வைக்கவில்லை.

இந்த வழக்கைப் புலன் விசாரணை செய்த விவேக் ப்ரியதர்சினியிடம் இது குறித்துக் கேட்டபோது, ''பொறுத்திருங்கள்... அடுத்தடுத்த குற்றப் பத்திரிகைகளில் ஒவ்வொன்றாக வெளிவரும்!'' என்கிறார்.

காத்திருப்போம்!

 சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை!

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை சி.பி.ஐ-யும், பணப் பரிமாற்றம் தொடர்பான மோசடிகளை அமலாக்கப் பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.

சி.பி.ஐ. கடந்த 2-ம் தேதி முதல் கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், வெளிநாட்டு நிதி மேலாண்மை சட்டத்தின் கீழ் 4,300 கோடி முதலீடு பற்றிய மோசடிகள் பற்றி குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

'2ஜி முறைகேடு பற்றி சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அடுத்த நாள், அதாவது கடந்த 9-4-11 அன்று அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குற்றப் பத்திரிகையில் ஸ்வான் டெலிகாம், லூப் மொபைல், லூப் டெலிகாம் மற்றும் எஸ்.டெல் பற்றி கூறப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஆ.ராசா அண்ட் கோவுக்கு அமலாக்கத் துறையில் இருந்து சம்மன்கள் வழங்கப்பட்டனவாம். மேலும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள யுனிடெக், ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டன.

இதில் ஆ.ராசா, சித்தார்த் பெஹுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் சிறையில் உள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்படும். மற்றவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை தொடங்குமாம்!

நன்றி : ஜூனியர்விகடன்-17-04-2011

திருத்தம் செய்தது ஆ.ராசாவா? சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி!

23-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சுப்ரீம் கோர்ட்டில் சென்ற வாரம் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை சம்பந்தமாக இன்றைய ஜூனியர்விகடனில் வெளிவந்திருக்கும் கட்டுரை இது :

வரும் மார்ச் 31-ம் தேதி, சி.பி.ஐ. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகை தாக்கலாக இருக்கிறது. இது தேர்தல் காலம் என்பதால், தேர்தல் அறிக்கை மாதிரி, இந்தக் குற்றப் பத்திரிகை அறிக்கையையும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 'இந்த ஊழலில் 22 ஆயிரம் கோடிகள்தான் அரசுக்கு இழப்பு!’ என்று சி.பி.ஐ. சொன்னாலும், ஊழலில் கை மாறிய பணம் எவ்வளவு என்பதுதான் முக்கியக் கேள்வி!
 

2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலவரத்தை சி.பி.ஐ-யும், இதே ஊழலில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமலாக்கப் பிரிவும், தகவல்களை உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பு​களுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் பாலமாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை மத்திய அரசு நியமித்து உள்ளது.

கடந்த 15, 16 தேதிகளில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர, அங்கு ஆஜரானார் கே.கே.வேணுகோபால். விசாரணை அறிக்கையை சீல் வைத்த கவரில் வழங்கியதோடு, அதில் உள்ள விவரங்களை இலைமறைவு காயாகப் படித்து... ஒவ்வொன்றாக நீதிபதிகளுக்கு விளக்கினார்.

தெஹல்கா பத்திரிகை, 'ஆ.ராசா மற்றும் அவர் சம்பந்தப்பட்ட கம்பெனி​களைப் பட்டியலிட்டு, இவர்கள் மீதான விசார​ணையை அமலாக்கப்பிரிவு தாமதப்​படுத்தி வருகிறது’ என்றும், 'நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம், அமலாக்கப் பிரிவு இயக்குநர் மாத்தூர் மூலமாக வழக்கின் விசாரணையைத் தாமதப்​படுத்துவதாக’வும் தங்களுக்கு வந்த ஒரு கடிதத்தை ஆதாரமாக வைத்து ஒரு கட்டுரை வெளியிட்டது. இதனை, வேணுகோபால் நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

மேலும், 'இந்த வழக்கில் தொடர்புள்ள மகேஷ் ஜெயின், ராஜேஷ் ஜெயின், தௌலத் ஜெயின் போன்றவர்களிடம் விசாரணை நடத்தவில்லை’ என்று எழுதி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அப்போது, 'ஜெயின் சகோ​தரர்களுக்கு எந்தெந்த தேதிகளில் சம்மன் அனுப்பப்பட்டன, அவர்களிடம் எந்தெந்த நாட்கள் விசாரணைகள் நடத்தப்பட்டன?’ என்ற தகவல்களையும் தாக்கல் செய்தார். அதன் பிறகு, ''இப்படிப் பொய் பிரசாரம் செய்யும் பத்திரிகைகள் மீதும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புலனாய்வுத் துறைகளுக்கு மட்டுமல்ல, பிரணாப் முகர்ஜியின் படத்தைப் போட்டு, அவருடைய இமேஜுக்கும் இது பாதிப்பை         ஏற்படுத்​துகிறது...'' என்றும் கூறினார்.

இந்த சமயத்தில் பிரசாந்த் பூஷண், ''எனக்கு இதே மாதிரியான கடிதம் வந்தது!'' என்றார். உடன் நீதிபதி சிங்வி, ''சுப்ரீம் கோர்ட்டுக்கும் இந்தக் கடிதம் வந்துள்ளது. இது தெற்கே இருந்து எழுதப்பட்ட கடிதம் மாதிரியாக இருக்கிறது. இதில் ஸ்ரீ என்கிற வார்த்தையில், 'ஹெச்’ எழுத்து இல்லை. தெற்கேதான் 'ஹெச்’ சேர்க்க மாட்டார்கள். இது போன்ற கடிதத்தை வைத்து, அந்தப் பத்திரிகை கட்டுரை எழுதியது தவறு. இது அவமதிப்புதான். ஆனால், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை. அதே சமயம், புலனாய்வு அமைப்பு​களின் நலனைக் கருத்​தில்​கொள்வோம். இப்​போது உடனடியாக இதில் கருத்து சொல்ல முடியாது. முதலில் உங்கள் விசாரணையை முடித்து, குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யுங்கள். அதன் பின்னர்தான், நீங்கள் எந்த அளவுக்கு விசாரணையை சரியாக மேற்கொண்டீர்கள் என்று சொல்ல முடியும்!'' என்​றார்.

பின்னர் அமலாக்கப் பிரிவும், சி.பி.ஐ-யும் விசாரணையில் மேற்கொண்​டுள்ள விவரங்களை கே.கே.வேணுகோபால் எடுத்துவைத்தார்.

''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற 31 நிறுவனங்களில் 26 நிறுவனங்களிடம் விசாரணை முடிந்துள்ளது. மற்றவர்களுக்கும் சம்​மன் சென்றுள்ளது...'' என்று கூறிவிட்டு இந்த கம்பெனிகளுக்கு வந்த முதலீடுகள் மற்றும் வெளிநாடுகளில் மேற்கொண்ட பணப் பரிமாற்றம் குறித்த விவரங்களையும் சுட்டிக்​காட்டினார்.

அப்போது, நிறுவனங்களின் பெயரைச் சொல்லாமல், ஒரு சில புள்ளி விவரங்களை நீதிபதிகளிடம் ஒப்படைக்க​ப்பட்ட ரகசிய ஆவணங்​களில் உள்ள பக்கத்தின் எண்களை மட்டும் சொல்லி கோடிட்டுக் காட்டினார். இதில் ஒரு நிறுவனம், 100 கோடியை இடைத்​தரகர் ஒருவருக்குக் கையூட்டாகக் கொடுத்திருப்பதை      நீதிபதி​களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

மேலும், ''ஆ.ராசாதான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் மையம். அவர் மீதும் மற்ற இரு அதிகாரிகள் மீதுமான விஷயங்களுடன் குற்றப் பத்திரிகை வருகிற 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும். அடுத்தடுத்து ஆதாயம் அடைந்த ஒவ்வொரு நிறுவனம் மீதும் தனித் தனியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்...'' என்றார். அநேக​மாக ஆ.ராசாவுடன் சேர்த்து ஷாகித் பால்வாவின் ஸ்வான் டெலிகாம் மற்றும் சினியுக் போன்ற நிறுவனங்கள் மீது குற்றப்​பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்றே தெரிகிறது.

இந்தக் குற்றப் பத்திரிகையின் முக்கிய சாட்சியாக இருக்கப் போகிறவர், அப்போ​தைய சொலிசிட்டர் ஜெனரலும் தற்போ​தைய அட்டர்னி ஜெனரலுமான ஜி.இ.வாஹன்வதி. ஸ்வான் டெலிகாமுக்கு உரிமங்கள் கொடுக்கப்பட்ட விவகாரமும் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது.


''டெலிகாமில் உரிமம் பெற்ற ஒரு நிறுவனம், மீண்டும் ஒரே வட்டாரத்தில் ஒருங்கிணைந்த உரிமங்களைப் பெற அனுமதி இல்லை. ஏற்கெனவே, உரிமங்களைப் பெற்றிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் (10 சதவிகிதத்துக்கும் மேலாக) ஸ்வான் டெலிகாமின் பங்குகளையும் பெற்றுள்ளது. இது தொலைத் தொடர்பு விதிமுறைகளுக்கு விரோத​மானது. இந்தப் பங்குகளில் முந்தைய நிலையில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்வானும் ரிலை​யன்ஸும் கூறியுள்ளது.

இது பிரதமர் அலுவலகத்துக்கு வர, நிறுவனத் துறை அமைச்சகத்திடம் அனுப்பி உண்மையைக் கண்டறிய ஆலோசனை கூறியுள்ளது. ஆனால், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், சொலிசிட்டர் ஜெனரலுக்கு ஃபைலை அனுப்பினார். சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ.வாஹன்வதி, 'எல்லாம் சரிதான்...’ என்று சொல்லாமல், ஸ்வான் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அனுமதிக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால், ஆ.ராசா தரப்பு இதைக் கருத்தில் கொள்ளவில்லை.

டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்ட தேதிகள்(கட் ஆஃப் டேட்), சம்பந்தப்பட்ட பத்திரிகை செய்தி அறிவிப்பு(பிரஸ் ரிலீஸ்) போன்றவை வெளியிடுவதற்காக, சொலிசிட்டர் ஜெனரலின் சட்ட ஆலோசனைக்குப் போயிருக்கிறது. இதில் சொலிசிட்டர் ஜெனரல் 'அப்ரூவ்ட்’ என்று எழுதி கையெழுத்திட்டதில், 'திருத்தம்’ என்று மாற்றி அதில் கடைசி 'பாரா’ ஒன்றும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது...''  என்றார்.

இந்தத் திருத்தங்கள் சம்பந்தப்பட்ட எழுத்தும் ஒன்றாக இருந்துள்ளது. இத்​தோடு, சொலிசிட்டர் ஜெனரல் பேனாவின் மையும், திருத்தம் செய்து எழுதியவரின் மையும் வேறுபட்டு உள்ளன. இது​போன்ற விவரங்கள், ஹைதராபாத் தடயவியல் மையத்தில் சோதனைகளுக்கு அனுப்​பப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில்  ஆ.ராசாவின் பங்கு என்ன       என்ப​தையும் விசாரித்து வருவதாக சி.பி.ஐ. அறிந்துள்​ளது.

இதன்படி விண்ணப்பங்கள் கோரும் கடைசி நாள் தேதியை... அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 25-ம் தேதியாக மாற்றியது, தகுதியற்ற நிறுவ​னங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு உடந்தையாக இருந்து பணம் செலுத்த வேண்டிய தேதியை முன்கூட்டியே சொல்லித் தயாராக​  வைத்தது போன்றவை அடங்கும். இப்படிப்பட்ட வில்லங்கங்கள் எல்லாம் குற்றப் பத்திரிகையில் பதிவாகும் எனத் தெரிகிறது.

பொது நல வழக்கின் மனுதாரரான பிரசாந்த் பூஷண், ''2-ஜி விசாரணையை மேற்கொள்ளும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு விசார​ணையை மேற்​பார்வையிட முன்னாள் அதிகாரிகள் அடங்கிய கமிட்டி ஒன்றை ஏற்படுத்த வேண்டும்!'' என்று கோரினார். இதனை கே.கே.வேணுகோபால் கடுமையாக     எதிர்க்​கவே, உச்ச நீதிமன்றமும் கைவிட்டது.

''சி.பி.ஐ. அதிகாரிகள் வார விடுமுறைகூட எடுத்துக் ​கொள்ளாமல் 20, 22 மணி நேரங்கள் விசாரணையிலும், ரெய்டுகளிலும் பணியாற்றி வருகின்றனர். அப்படிப்​பட்டவர்களை நம்பாதது போல, இது போன்ற கமிட்டி​யை திடீரென்று ஏற்படுத்தினால், சி.பி.ஐ. டீமின் மனதை இது புண்படுத்தும்...'' என்றார் கே.கே.வேணுகோபால்.

எப்படியோ, எத்தனையோ கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நாள் நெருங்கி வருகிறது!

நன்றி : ஜூனியர்விகடன்-மார்ச் 27, 2011

வீணாப் போனாலும் பரவாயில்லை. மக்கள் பட்டினி கிடப்பதே மேல்..!

18-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சிறந்த பொருளாதார மேதைதான் நமது நாட்டின் பிரதமராக இருக்கிறார் என்று இந்தியர்களுக்கு இருந்த இறுமாப்பையும், பெருமையையும் மன்மோகன்சிங் தானே தன் வாயால் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

ஜனநாயக நாட்டில் எல்லாம் மக்களுக்கே என்ற எண்ணம் நமக்கு இருந்தாலும், அதனை அரசியல்வாதிகளாக நாங்கள் பார்த்து கொடுத்தால்தான் உங்களுக்குத் தருவோம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் நமது பிரதமர்.

மத்திய அரசுத் துறையான இந்திய உணவுக் கழகத்தின் உணவுக் கிடங்குகளில் முறையாக சேமித்து வைக்காமல் பாழாகும் உணவு‌ப் பொரு‌ட்களை, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகளுக்கு இலவசமாக விநியோகிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் மனிதாபிமானத்துடன் பிறப்பித்த உத்தரவை, செயல்படுத்த முடியாது என்று மிக, மிக சாமர்த்தியமாக மறுத்துள்ளார் மன்மோகன் சிங்.


இதற்காக இவர் சொல்லியிருக்கும் விளக்கம்தான் இந்தியா முழுவதையும் கொஞ்சமல்ல நிறையவே பதற வைத்திருக்கிறது.

 “உச்ச நீதிமன்றத்தின் உணர்வை நான் மதிக்கிறேன், ஆனால் அது தெரிவித்துள்ள கருத்து நடைமுறையில் சாத்தியமற்றது. நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் 37 சதவிகிதத்தினர் உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவுப் பொருட்களை அளிப்பது எப்படி..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கூடவே அரசின் கொள்கை முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என்று அட்வைஸ் வேறு..!

உண்மையில் நடந்தது என்ன..? இந்தியா முழுவதும் உள்ள உணவுப் பொருள் கிடங்குகளில் உணவுப் பொருட்கள் வீணாகிப் போய்க் கிடப்பதாகவும், அவற்றைத் தகுந்த முறையில் பரமாரிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மக்கள் சமூக உரிமைக் கழகம் என்ற தனி அமைப்பொன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

கடந்த மாதம் 12-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,  “இந்திய  உணவுத் தானியக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு, வீணாகிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களை நாட்டில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு ஏன் இலவசமாக  விநியோகம்  செய்யக்  கூடாது..?” என்று கேட்டது.

இதனைக் கேட்டவுடன் மத்திய அரசு பதறியடித்துக் கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கும் என்று நினைத்தால் நடந்தது என்னவோ மிகக் கேவலமானது. அமைச்சுப் பணியையே ஒரு சுமையாகக் கருதி வேலை செய்யும் மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவார், உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.


“உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து உத்தரவு அல்ல.. வெறும்  ஆலோசனை மட்டுமே...” என்று கூறி தனது தரப்பு விளக்கத்தை முடித்துக் கொண்டார் சரத் பவார்.

அமைச்சர் சரத்பவாரின் இந்தக் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சமூக உரிமைக் கழகம் (பியுசிஎல்) இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பார்வைக்கு கொண்டு சென்றது.

உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடந்த அடுத்தக் கட்ட விசாரணையில் இதற்கு விளக்கமளித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர், தாங்கள் கூறியது ஆலோசனை அல்ல.. உத்தரவுதான் என்றும், இதனை மத்திய உணவுத் துறை அமைச்சரிடம் தெரிவிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரலிடம் கேட்டுக்  கொண்டது.

கூடவே, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ இந்த உணவுப் பொருட்களை அரசு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு  ஆலோசனை கூறியது.

இதுதான் இப்போது நமது பிரதமருக்கு கோபத்தைக் கிளப்பியிருக்கிறது. நாட்டுப் பிரச்சினையைச் சமாளிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம்.. உச்சநீதிமன்றத்திற்கு இதில் என்ன வேலை என்று நினைத்தாரோ என்னவோ? “மத்திய அரசின் கொள்கைப் பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது” என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.

எது கொள்கை பிரச்சினை..? நாட்டு மக்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்பதை மறைத்து வைத்து, ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் இங்கே மக்கள் அல்லாட்டத்தில் இருப்பதை மறைத்து, நாடே சுபிட்சமாக இருப்பதாக செங்கோட்டையில் கொடி ஏற்றி வருடத்திற்கு ஒரு முறை கூவுவதுதான் அரசின் கொள்கையா..?


வீணாகிப் போய், மண்ணாகிப் போய், மண்ணில் புதைக்கப்படவிருக்கும் உணவுப் பண்டங்களை பசியால் வாடிப் போயிருக்கும் மக்களுக்கு வழங்க முன் வராத அரசுகளெல்லாம் இருந்தென்ன? இல்லாமல் இருந்தால்தான் என்ன..?

உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிடுவதற்கு முன்பேயே மத்திய அரசு தானே முன் வந்து இதனைச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இவர்கள்தான் உண்மையான மக்களாட்சியைப் பின்பற்றும் அரசியல்வாதிகள் என்று சொல்லலாம்.

ஆனால் நாங்கள் உணவு கொடுக்கிறோமோ இல்லையோ.. அது எங்கள் வேலை.. நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு ச்சும்மாயிருங்கள் என்று உச்சநீதிமன்றத்தைப் பார்த்து சொல்கின்றவர்களைப் பார்த்தால் இப்படிப்பட்ட அரசியலும், அரசியல்வாதிகளும் நமக்குத் தேவையா என்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அதிலும் இன்னுமொரு பெரிய கூத்துக்களும் இந்த விவகாரத்தில் எழுந்திருக்கின்றன.

வழக்குத் தொடர்ந்த அமைப்பு நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில் 50 ஆயிரம் டன்னிற்கு மேலாக உணவுப் பொருட்கள் வீணாகிக் கிடக்கின்றன  என்று கூறியுள்ளார்கள்..

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 1-ம் தேதி தீர்ப்பிற்குப் பிறகு பேசிய  மத்திய உணவுத் துறையின் துணை அமைச்சர் கே.வி.தாமஸ், “வீணாகிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களின் அளவு ஒரு இலட்சம் டன்னிற்கும்  குறைவானது”  என்று  கூறியுள்ளார்.

ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை வெறும் ஆலோசனைதான் எ‌ன்று கூறிய மத்திய அமைச்சர் சரத் பவார், “வெறும் 11,700 டன் உணவுப் பொருட்கள்தான் வீணாகியுள்ளது. அதன் மதிப்பு வெறும் ஆறே முக்கால் கோடி ரூபாய்தான். ஊடகங்கள்தான் இதனைப் பெரிதுபடுத்துகின்றன”  என்று பெரிய மனதுடன்  கூறுகிறார்.

இதில் யாருடைய கூற்று உண்மையாக இருக்கும்..? கேபினட் அமைச்சர் சொல்வதா..? அல்லது துணை அமைச்சர் சொல்வதா..? ஒரு அமைச்சரவையில் இருப்பவர்களிடத்திலேயே முழுமையான, உண்மையான தகவல்கள் இல்லையெனில் இந்த அரசின் லட்சணம்தான் என்ன..?

பிரதமர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக நிராகரித்ததற்கு காரணம் பயனாளிகள் அதிகம் இருந்து, உணவுப் பண்டங்களின் அளவு குறைவாக இருப்பதும்தான் என்று அதிகாரிகள் தரப்பில் இப்போது சொல்லப்படுகிறது.

அப்படியிருந்தாலும் மாநிலங்களில் சர்வே எடுத்து மிகக் குறைவான வருவாய் உள்ளவர்களுக்கு இருக்கின்றவரையில் கொடுத்துவிடலாமே..? உணவுப் பண்டங்கள் நாள்தோறும் கெடும் சூழல் இருப்பதால் எவ்வளவு விரைவில் வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் கொடுப்பதுதானே சாலச் சிறந்தது.. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கொடுக்க முடியாது என்று ஒற்றை வரியில் சொல்வது ஜனநாயகத்தில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் சொல்லக் கூடியதல்ல..!

பிரதமரின் கருத்துக்கு விளக்கம் சொல்லும்விதமாக இன்னொன்றையும் அரசுத் தரப்புச் சொல்கிறது..! உணவுப் பண்டங்கள் சேமிப்பில் வைத்திருப்பதால்தான் நாட்டில் விலைவாசியை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிகிறது. இல்லையெனில் வியாபாரிகள் விலையை உயர்த்தத் தொடங்கிவிடுவார்கள். அது இன்னமும் ஆபத்தில் போய் முடியும் என்று..!

உச்சநீதிமன்றம் சொன்னது அழுகிப் போகும் நிலையில் இருக்கும் உணவுப் பொருட்களை மட்டும்தான். கிடங்குகளில் பாதுகாப்பாக இருக்கும் உணவுப் பொருட்களை அல்ல. கிடங்குகளில் வைக்க இடமில்லாமல் வெளியிடங்களிலும், திறந்த வெளியிடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களைத்தான் உச்சநீதிமன்றம் மக்களுக்கு வழங்கச் சொன்னது.. அதன் அளவைச் சொல்லாமல் அரசு ரகசியமாகக்கூட இதனை வழங்கலாமே.. மக்களுக்கு சேவை செய்ய மனமிருந்தால் எதனையும், எப்படியும் செய்யலாமே..? மத்திய அரசுக்கு ஏன் மனமில்லை..?

உச்சநீதிமன்றம் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறது. உணவுக் கிடங்குகளில் பாதுகாக்கப்பட்ட கொள்ளளவு வசதி எவ்வளவு உள்ளதோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப் பண்டங்களை சேமித்து வைக்கும்படியும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உதவிகளை வழங்கச் சொல்லிய உத்தரவையே தூக்கி வீசும் மத்திய அரசு, இந்த அறிவுரையை எப்படிக் காதில் வாங்கிக் கொள்ளப் போகிறது..?

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று வாயார பாட மட்டுமே இந்த ஜெகத்தினில் கவிஞனுக்கு உரிமையுண்டு..! அதனை கற்பனை செய்து பார்க்க மட்டுமே நாட்டு மக்களுக்கு உரிமையுண்டு..! ஆனால் நிஜத்தில் இதனைச் செய்து முடிக்க அரசியல்வாதிகள் மனம் வைத்தால்தான் முடியும் என்பது மிஸ்டர் மன்மோகன்சிங் மூலமாக இப்போது நாட்டு மக்களுக்குத் தெரிந்துவிட்டது..!

இனி எல்லாமே அவர்கள் கையில்தான்..!

- சூரியக்கதிர் - செப்டம்பர் 1-15 - இதழ்
 

குஷ்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூ..!

30-04-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று முன்தினம் நடிகை குஷ்புவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, “திருமணத்துக்கு முந்தைய `செக்ஸ்' உறவு சட்டபூர்வக் குற்றம் அல்ல” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.




திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான `செக்ஸ்' உறவு கொள்வது தவறு இல்லை என்று, பிரபல நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் வெளியான குஷ்புவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவருக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. அந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து குஷ்புவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன் தினம் தீர்ப்பு கூறியது. குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"பேட்டி ஒன்றில் குஷ்பு தெரிவித்த சொந்த கருத்துக்கு எதிராக கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. இந்த வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை'' என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.

3 நீதிபதிகள் கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்'சுக்காக நீதிபதி சவுகான் தீர்ப்பை எழுதி இருந்தார். தீர்ப்பின் முழு விவரம் இது..

"திருமணத்துக்கு பிறகே `செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

சாதாரணமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஒருவரை தண்டிப்பது குற்றவியல் சட்டத்தின் பணி அல்ல. அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். சட்டபூர்வமான குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு தொடர்வதற்கான நடைமுறைகளை மாஜிஸ்திரேட்டுகள் தொடங்க வேண்டும்.

தவறான, சாரமற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுமை இழைப்பதாகிவிடும். நடிகை குஷ்புவுக்கு எதிரான புகார்கள், உள்நோக்கத்துடன் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டு இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

ஆங்கில பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆபாசமானவையோ நற்பண்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார், அவ்வளவுதான்.

எந்த ஒரு தனி மனிதருக்கோ, கூட்டாக பலருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ அந்த கருத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நோக்கில் அதை அவர் தெரிவிக்கவில்லை. அவதூறு வழக்கு சட்ட பிரிவின் கீழும் அவருடைய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

அதே நேரத்தில் குஷ்புவின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மைதான். திருமணத்துக்கு முந்தைய உறவு, சேர்ந்து வாழ்வது போன்ற சர்ச்சைகள் எழும்போது அதுபற்றி வெளிப்படையாக விவாதிக்கும் கலாசாரம் வேண்டும்.

திருமண பந்தம் என்பது இந்தியாவில் முக்கியமான சமூக சம்பிரதாயம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதேபோல் சில தனி நபர்கள் மற்றும் அமைப்பினர் அதற்கு எதிரான கருத்துக்களையும் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரத்தில் குற்றவியல் சட்டத்தை அவசியமின்றி பயன்படுத்த முடியாது.

குஷ்புவின் கருத்தில் புகார்தாரர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அதே வழியில் அவர்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் தங்கள் பதில் கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம். அதற்காக கிரிமினல் வழக்கு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இல்லை. குஷ்புவின் கருத்து இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டிவிடும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

"திருமணத்துக்கு முந்தைய உறவுகள் அதிகரித்து வருவதால், இருவருடைய சம்மதத்துடன் நடைபெறும் அத்தகைய உறவுகளை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் குஷ்புவின் கருத்தே தவிர, எல்லா வகையான `செக்ஸ்' தொடர்புகளுக்கும் அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம் அல்ல.

குஷ்புவின் கருத்தை அப்படி தவறாக கருத வேண்டும் என்றால், `செக்ஸ்' தொடர்பாக வெளியிடப்படும் பல்வேறு செய்தி, கட்டுரைகளுக்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையெல்லாம் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.

ஒரு வாதத்திற்காக, குஷ்புவின் கருத்து, திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ள சில இளைஞர்களை தூண்டுவதாக கருதினாலும், அந்த செயல் கிரிமினல் குற்றம் அல்ல என்பதால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது''.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது குறித்து நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அந்த கருத்துக்களை நீதிபதிகளின் உத்தரவு என்று கருதி, அதற்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதங்களை அனுப்பினார்கள். சிலர் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி இருந்தனர். சில கடிதங்களில், “பாரதத்தின் புராண இலக்கியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?” என்றும் நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தனவாம்.

தீர்ப்பில் இந்தத் தகவலையும் வெளியிட்ட நீதிபதிகள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்களில் திரித்து வெளியான செய்திகளை பார்த்து இந்தக் கடிதங்களை பொதுமக்கள் எழுதி இருப்பதாக தெரிவித்தனர். எனவே, “இது போன்ற செய்திகளை வெளியிடும்போது பத்திரிகை மற்றும் ஊடகங்கள், மேலும் கவனமாகவும், பொறுப்பு - எச்சரிக்கை உணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தன் மனதுக்கு சரியென்று பட்டதை வெளிப்படையாகச் சொன்ன குஷ்புவின் கருத்து, தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று சொல்லி அவரை எதிர்த்து உள் நோக்கத்துடன் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு விடுதலைச்சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்திய அராஜகங்களை சுலபத்தில் மறந்துவிட முடியாது..!

இவர்கள்தான் தமிழ்நாட்டின் கலாச்சாரக் காவலர்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டை நாங்கள்தான் காப்பாற்றப் போகிறோம் என்று மேடைக்கு மேடை வாய் கிழிய பேசிவிட்டு ஒண்டியாய் இருந்த ஒரு பெண்ணிடம் தங்களது எதிர்ப்பைக் காட்டுவதற்கு தங்களிடம் இருந்த பெண்கள் படையினரையே அனுப்பி வைத்தார்கள்.

பண்பாடு, கலாச்சாரம் என்று கூவிய இவர்கள் எதிர்க்கக் கிளம்பிய தங்களது அமைப்பின் பெண்களிடம் விளக்குமாற்றையும், செருப்பையும் கொடுத்து குஷ்பு வீட்டின் எதிரே போராட்டம் நடத்த தூண்டினார்கள்.

“எதிர்க் கருத்தைத் தெரிவிக்க செருப்பையும், விளக்குமாற்றையும் காண்பிப்பதுதான் தமிழ்ப் பண்பாடா? தமிழ்க் கலாச்சாரமா?” என்று நடுநிலையாளர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும், இன்றுவரையிலும் இந்தக் கலாச்சாரக் காவலர்களும், பண்பாளர்களும் பதிலே சொல்லவில்லை. வாழ்க இவர்களது ஜனநாயகம்..!

ஆனாலும் தனி ஒரு மனுஷியாய், தான் எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாய் நின்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தோல்வியடைந்தாலும் மனதைரியத்துடன் உச்சநீதிமன்றம் வரையிலும் சென்று தனது கருத்துரிமையை நிலைநாட்டி, பேச்சுரிமை, எழுத்துரிமை, தனி மனித உரிமைகளுக்காக  இனி வரும் காலங்களில் மேற்கோள் காட்ட உச்சநீதிமன்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்கத் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்தமைக்காக குஷ்புவிற்கு எனது சல்யூட்..!