Showing posts with label முரசொலி மாறன். Show all posts
Showing posts with label முரசொலி மாறன். Show all posts

இவர்தான் பத்திரிகையாளர்..!

24-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டிருக்கிறது..! கனிமொழியின் கைதைத் தொடர்ந்து கலைஞருக்கு கிடைத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி அவருடைய உற்றத் தோழர் இரா.தியாகராஜன் என்ற சின்னக்குத்தூசியாரின் மரணம்தான்..!

பத்திரிகையுலகில் எத்தனை, எத்தனையோ பேர் இன்றைக்கு பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ந்திருந்தாலும், அத்தனை பேரும் தங்களது வாழ்க்கையில் ஒரு முறையாவது தவறாமல் கால் வைத்திருக்கும் இடம், சின்னக்குத்தூசியார் தங்கியிருந்த ஸ்டார் தியேட்டர் அருகில் இருந்த அவருடைய மேன்ஷன் அறைதான்..!

அவருடைய அபாரமான நினைவாற்றல் அவருடைய இறுதிக் காலம்வரையிலும் அவருக்கு உற்ற துணையாய் இருந்து அவரை எழுத வைத்திருக்கிறது எனில், இந்த நாத்திகனின் நாவில் சரஸ்வதி ஏன் குடியிருந்தாள் என்று நாமே யோசிக்கத்தான் வேண்டும்..!!!

அவருடைய வாழ்க்கை வரலாற்றை நக்கீரன் இணையத்தளத்தில் படித்தேன். அது  இங்கே உங்களுக்காக :

சின்னக்குத்தூசி என்றழைக்கப்படும் இரா.தியாகராஜன் அவர்கள் 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தார். தந்தை ராமநாதன். தாயார் கமலா அம்மையார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற சின்னக்குத்தூசி, பள்ளியில் படிக்கும்போதே திருவாரூர் நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், 'தண்டவாளம்' ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் திராவிட இயக்க கொள்கைகளின்பால் கவரப்பட்டார்.

பள்ளிப் படிப்பு முடிந்த பின், பயிற்சி பெறாத ஆசிரியராக பணியாற்றிய சின்னகுத்தூசி(எ)இரா.தியாகராஜன், ஆகிரியர் பயிற்சி பெறுவதற்காக, திருவாரூர் நகர மன்றத் தலைவராக இருந்த சாம்பசிவம் அவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று தந்தை பெரியாரை சந்தித்தார். பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதன் பின், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளியில் பணியாற்றும்போது, குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்று, அவரிடம் நெருக்கமாக செயலாற்றினார்.

குன்றக்குடியில் பணியாற்றிய காலத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.வி.கி.சம்பத் அவர்களின் அழைப்பை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்று  சிறை சென்றார்.

திருவாரூரிலிருந்து வெளியான ‘மாதவி’ வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய சின்னக்குத்தூசி, பின்னர் தமிழ்த் தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘தமிழ்ச் செய்தி’ வார இதழ், நாளிதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.  தமிழ்த் தேசியக் கட்சி, காங்கிரசில் இணைந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நடத்திய 'நவசக்தி'யில் தலையங்க ஆசிரியராக சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார்.

‘நாத்திகம்’, ‘அலைஓசை’, ‘எதிரொலி’, ‘முரசொலி’ உள்ளிட்ட நாளேடுகளிலும் ‘நக்கீரன்’, ‘ஜூனியர் விகடன்’ உள்ளிட்ட வாரமிருமுறை இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார்.
வலுவான வாதங்கள், அசைக்க முடியாத ஆதாரங்கள், மறுக்க இயலாத புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இவரது கட்டுரைகள் தமிழக அரசியல் களத்தில் பலரது கவனிப்பையும் பெற்று வருகின்றன.

இவரது கட்டுரைகள் 'புதையல்', 'கருவூலம்', 'களஞ்சியம்', 'சுரங்கம்', 'பெட்டகம்', 'எத்தனை மனிதர்கள்', 'சங்கொலி', 'முத்தாரம்' 'வைரமாலை' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அமரர் ஜீவாவின் பொறுப்பில் வெளியான 'தாமரை' இதழிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. நாராண துரைக்கண்ணன் அவர்கள் நடத்திய ‘பிரசண்ட விகடன்’ இதழில் தொடர்கதை எழுதியுள்ளார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்ற சின்னக்குத்தூசி அவர்கள் ‘முரசொலி’யில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.

‘சின்னக்குத்தூசி’ என்ற புனைபெயரில் இவர் பரவலாக அறியப்பட்டாலும் ‘கொக்கிரகுளம் சுல்தான் முகமது’, ‘காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம்’, ‘தெரிந்தார்க்கினியன்’, ‘ஆர்.ஓ.மஜாட்டோ’, ‘திட்டக்குடி அனீஃப்’ ஆகிய புனைப் பெயரிகளிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டு கால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சின்னக்குத்தூசி அவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ஆழ்ந்த அறிவனுபவம்மிக்கவர். பொது வாழ்க்கை - எழுத்துப் பணி இவற்றிற்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி எண்.13 வல்லப அக்கிரஹாரம் தெருவில் தங்கியிருந்த சிறிய அறை, இன்றைய பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக அமைந்திருந்தது. மனிதநேயம், பகத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு திராவிட இயக்க நெறிகளின்படி வாழ்ந்து வந்தவர் திரு.சின்னக்குத்தூசி (எ) இரா.தியாகராஜன் அவர்கள்.

- 'முரசொலி'யில் அவர் பெயரில் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வாசித்து வந்திருக்கிறேன்.. புள்ளி விவரங்களை அவர் அடுக்கி வைக்கும் லாவகமே தனி..! தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் எழுதினாலும் அந்த சாய்வுத் தன்மையை இந்த புள்ளி விவரங்களையும், அவருடைய வார்த்தை ஜாலங்களையும் வைத்தே பூசி மெழுகிவிடுவார்..!

நான் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் பணியாற்றியபோதுதான் ‘முரசொலி’யை ஒரு நாள்கூட விடாமல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘முரசொலி’யில் வரும் ஐயாவின் எழுத்துக்கு, மறுநாள் ‘நமது எம்.ஜி.ஆரி.ல்' பதில் வரும்.. அதற்கு அடுத்த பதில் ‘முரசொலி’யில் மறுநாளே வரும்.. இதையெல்லாம் தொடர்ந்து படித்து வந்தால் நமக்கு நிச்சயம் தலை சுற்றும். இரண்டு பக்கம் எழுதுபவர்களும் தங்களுக்குச் சாதகமான அரசியல் நிகழ்வுகளை தேதி, வருடம், மாதம், இடத்தையும் சொல்லி அசரடிப்பார்கள்..!

அதென்ன ‘சின்னக்குத்தூசி’ என்று இவரது பெயருக்கான விளக்கத்தைக் கேட்கப் போய், ‘பெரிய குத்தூசி’யாக இருந்த மறைந்த பெரியவர் ‘குத்தூசி குருசாமி’யின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் மூலமாகவே அறிந்து கொண்டேன்..!

என்னுடன் ‘தமிழன் எக்ஸ்பிரஸில்’ பணியாற்றி வந்த வேதராஜன் என்னும் தலைமை ஆர்ட்டிஸ்ட்டும், திருவாரூர் பாபு(‘கந்தா’ படத்தின் இயக்குநர்) என்னும் ரிப்போர்ட்டரும் திருவாரூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் சின்னக்குத்தூசியாரை நேரில் சென்று பார்த்து வருவார்கள்.. இவர்கள் அவரைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு ஒரு நாளாவது அவரை நேரில் சந்தித்துவிடலாம் என்ற ஆசையோடு இருந்தேன்.

‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் அப்போது கேள்வி-பதில் வெளியாகிக் கொண்டிருந்தது. அதில் அந்த வாரத்திய ‘முரசொலி’ இதழில் சின்னக்குத்தூசியார் எழுதியிருந்த ஒரு கட்டுரையைப் பாராட்டி சில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. எங்களது பத்திரிகையின் வழக்கப்படி இது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த வார இதழை நேரடியாகவோ, அஞ்சலிலோ அனுப்பி வைப்பது எங்களது வழக்கம்..! அதன்படி ஒரு சனிக்கிழமையன்று என்னை சின்னக்குத்தூசியாரிடம் நேரில் சென்று அந்த வார 'தமிழன் எக்ஸ்பிரஸ்' இதழைக் கொடுத்துவிட்டு வரும்படி கூறினார் எனது உதவி ஆசிரியர் ஆர்.சிவகுமார்.

நானும் மிகுந்த ஆர்வத்துடன் சின்னக்குத்தூசியாரை நேரில் சென்று சந்தித்தேன்.. பெயர், ஊர், படிப்பு, குடும்பம் என்று எல்லாவற்றையும் கேட்டார்.  என்னுடைய பல நாள் ஆச்சரியமான அவருடைய நினைவாற்றல் பற்றி அவரிடத்திலேயே அப்போது கேட்டேன். மெல்ல சிரித்துக் கொண்டார்.

“அது தானா அமைஞ்சதுதான்.. நீங்களும் படிக்கும்போது உன்னிப்பா, கருத்தோட, ஆர்வத்தோட படிக்கணும்.. நிச்சயமா அது மனசுல நிக்கும்.. அத்தோட இங்க பாருங்க... (அருகில் குவிந்திருந்த காக்கி அட்டை போட்ட கவர்களைக் காட்டினார்) இதுல பல அரசியல் விஷயங்களை பிரிச்சுப் பிரிச்சு வைச்சிருக்கேன். ஏதாவது சந்தேகம்ன்னா அதுல இருந்து எடுத்துப் பார்த்துக்குவேன்.. அதுனால நான் என்னவோ ஸ்பெஷல்லாம் இல்லை.. அப்படி நினைச்சுக்காதீங்க..!” என்றார் தன்மையாக..!

அப்போது ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை கொஞ்சம் தி.மு.க. எதிர்ப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் வாராவாரம் தி.மு.க. அமைச்சர்களின் பேட்டியையும் எடுத்துப் போட்டு ‘பேலன்ஸ்’ செய்து கொண்டிருந்தோம்.. இதையெல்லாம் குறிப்பி்ட்டுக் காட்டியவர், “என்னதான் நீங்க நடுநிலைமையா இருக்குற மாதிரி எழுதினாலும், அட்டைல போடுல நியூஸெல்லாம் எங்களுக்கு எதிராத்தான் இருக்கு..” என்று சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தார்.

“தி.மு.க.வின் வரலாறு பற்றி முழுமையாக நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதாவது புத்தகம் இருக்காங்களா ஐயா..?” என்றேன்..! அப்போது திருநாவுக்கரசு எழுதிய புத்தகம் வெளியாகவில்லை. கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' மட்டுமே இருந்தது என்று நினைக்கிறேன்..!

“அதை யாரும் முழுசா அப்டேட்டா இதுவரைக்கும் எழுதலை.. கலைஞரோட 'நெஞ்சுக்கு நீதி' இருக்கே. அதைப் படிங்களேன்..” என்றார்.. நான் அதற்கு காட்டிய முக பாவனையை வைத்தே எனது எண்ணவோட்டத்தைக் கண்டறிந்தவர், பட்டென்று சிரித்தார்.. “ஓ.. நம்ப மாட்டீங்களா..? அப்போ பி.சி.கணேசன் ஒண்ணு எழுதியிருந்தார்..! ஆனா அதுவும் ஒரு பக்கச் சார்பாத்தான் இருக்கு. அவர் கொஞ்சம் காமராஜர் ஆளு. அதுனால அதுவும் முழுசா இருக்காது..!” என்றார்..! “அப்புறம் இன்னும் சின்னச் சின்னப் புத்தகங்களா நிறைய இருக்கு. நான் சில, சில சம்பவங்களைத் தொகுத்துதான் எழுதியிருக்கேன்..” என்றார்..!

அப்போது நான் தேடிக் கொண்டிருந்த வேறொரு புத்தகம் பற்றி அவரிடம் கேட்டேன்.. “கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனி்ன் வாழ்க்கை வரலாறு பற்றி வேலூரைச் சேர்ந்த ஒருத்தர் எழுதுன புத்தகத்தை மதுரை லைப்ரரில படிச்சேங்க ஐயா.. நல்லா இருந்தது.. பெரிய சைஸ் புத்தகம். அதை காசு கொடுத்து வாங்கலாம்னு பார்க்குறேன். கிடைக்க மாட்டேங்குது...” என்றேன்..!

“ஓ.. இருக்கு.. இருக்கு..” என்றவர் சின்னக் குழந்தைபோல் சந்தோஷத்துடன் தனது புத்தகப் புதையலைத் தேடித் துழாவி அந்தப் புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அவருடைய முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷத்தை இப்போதும் நான் உணர்கிறேன்..! ஆனால் எந்த வார்த்தைகளில் அதைச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. தேடிக் கொண்டிருந்த ஒரு புத்தகம் தன்னிடம் இருக்கிறது என்பதைச் சொல்லும்போது அந்த புத்தகப் பிரியனுக்குத்தான் எத்தனை சந்தோஷம்..!

நான் அதை ஆசையாக வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு ஏக்கத்துடன் அவரைப் பார்த்தேன்.. என் கண்ணை வைத்தே கண்டுபிடித்தவர், “அது ஒரு காப்பிதாம்பா என்கிட்ட இருக்கு. நீயொரு ரெண்டு வாரம் கழிச்சு வா. நான் அது இப்ப எங்க கிடைக்குதுன்னு கேட்டு வைக்குறேன்..என்ன சரியா..?” என்றார்..!

நான் ஆசையோடு படிக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்தப் புத்தகத்தை பார்த்துவிட்ட திருப்தியோடு மட்டுமே அங்கிருந்து கிளம்பினேன்..! அதே சூட்டோடு 'தமிழன் எக்ஸ்பிரஸின்' அந்த வாரத்திய புத்தகத்தை தி.நகரில் துணை ஆசிரியர் சிவக்குமாரின் வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டு அவரிடத்தில் நடந்ததைச் சொல்லி சந்தோஷப்பட்டது இப்போதும் நினைவுக்கு வந்து தொலைகிறது..!

இதோ இன்றைக்கு அந்த இருவருமே.. சின்னக்குத்தூசியாரும், அண்ணன் சிவக்குமாரும் ஒரே நாளில் மரணமடைந்திருக்கிறார்கள்.. இது என்னளவில் ஏதோவொரு ஒற்றுமை..! என்னவென்று சொல்வது..!?

இடையில் சின்னக்குத்தூசியார் கலைஞரோடு பிணக்குக் கொண்டு வெளியேறியபோது துக்கம் விசாரிப்பதுபோல் சாரை, சாரையாக அவரது அறைக்கு நண்பர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்படியொரு சூழலில் இரண்டாவது முறையாகவும் ஒரு மாலை வேளையில்  அவரைச் சந்தித்தேன். ஆனால் அதிகமாக பேச முடியவில்லை..! அப்படியொரு கூட்டம். சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டுதான் வேடிக்கை பார்த்தேன்..!

1996-ல் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு, ஒரு பகல் பொழுதில் கலைஞர் ஆலிவர் ரோடு வீட்டில் இருந்து முரசொலி அலுவலகத்திற்கு போன் செய்து சின்னக்குத்தூசியாரிடம் பேசியிருக்கிறார். காங்கிரஸுக்கு ஆதரவாக சில கட்டுரைகளை முரசொலியில் எழுதும்படி கேட்டிருக்கிறார். குத்தூசியார் அதை மறுத்திருக்கிறார். கலைஞர் வற்புறுத்த.. குத்தூசியார் அதை மறுத்துப் பேச.. இப்படியே வாக்குவாதங்கள் தொடர்ந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் “எனக்கும் எழுதத் தெரியும்.. தெரியும்ல..” என்று கலைஞர் சற்றுக் கோபமாகக் கேட்டுவிட.. குத்தூசியார் பதில் ஏதும் சொல்லாமல் போனை வைத்துவிட்டு “ரூமுக்கு போயிட்டு வர்றேன்..” என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறிப் போயே போய்விட்டார்..! இதுதான் அப்போது நடந்த கதை என்று பத்திரிகையுலகில் சொல்கிறார்கள்..!

அவர் வெளியேறிவிட்டார் என்பதையறிந்து மறுநாள் முரசொலி அலுவலகம் வந்த கலைஞர் குத்தூசியாரின் ஜாதியைச் சொல்லி முதல் முறையாக ஒரு கமெண்ட் அடித்தாராம். அதுவும் குத்தூசியாரின் காதுக்கு வந்துவிட.. நோ சமரசம் என்று சொல்லி விடாப்பிடியாக நின்றுவிட்டார்..!

இடையில் ‘முரசொலி’ விருதுகள் வழங்கும் விழாவிலும், சில திருமண நிகழ்ச்சிகளிலும் சின்னக்குத்தூசியின் பெயரைச் சொல்லாமலேயே அவரைப் பற்றிப் பேசினார் கலைஞர்..! இந்தக் காலக்கட்டத்தில் சின்னக்குத்தூசியார் ‘நக்கீரனில்’ கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.. இந்தக் கட்டுரையில்கூட தி.மு.க.வைத் தாக்கியோ, கலைஞரைத் தாக்கியோ அவர் எழுதவில்லை.. தி.மு.க.வுக்கு அட்வைஸும், கலைஞருக்கு ஆதரவாகவும்தான் தொடர்ந்து எழுதிவந்தார்.

2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு கலைஞரை நட்ட நடு இரவில் கைது செய்தபோது அதைத் தொலைக்காட்சியில் பார்த்து பதறிப் போனவர், உடனேயே 'முரசொலி' செல்வத்திற்கு போன் செய்து தான் மீண்டும் 'முரசொலி'யில் எழுத விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். இப்படித்தான் திரும்பவும் 'முரசொலி' காம்பவுண்ட்டுக்குள் ஐயா திரும்பி வந்திருக்கிறார்..!

மூன்றாவது முறையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அதே மேன்ஷன் அறையில் அவரைச் சந்தித்தேன். அப்போது பதிப்பகம் ஒன்றுக்காக தமிழக முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதலாம் என்று ஒரு ஐடியா தோன்றியிருந்தது.

அது தொடர்பாகத்தான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். வாசலில் சேர் போட்டு உட்கார்ந்திருந்தார். அவரைத்தான் பார்க்க வந்தேன் என்றவுடன், என் கையைப் பிடித்தபடியே எழுந்து அறைக்குள் வந்தார். விஷயத்தைச் சொல்லி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன்  “உங்க மெஷினை பார்த்தவுடனேயே எனக்கு ஞாபகம் வந்திருச்சு.. இப்ப எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க..?” என்றெல்லாம் விசாரித்தார்..! விஷயத்தைச் சொன்னேன்..!

“பக்தவச்சலம் பற்றி அதிகமாக யாரும் எழுதவில்லை. அவருடைய மகள் மட்டுமே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது அவர்களுடைய பார்வையில்தான் இருக்கும். நீங்கள் நடுநிலைமையோடு எழுதுவதாக இருந்தால் நிறைய உழைக்கணும். பெரியார் திடல் நூலகத்துக்கும், அண்ணா அறிவாலய நூலகத்துக்கும் டெய்லி போங்க.. அறிவாலயத்துல நான் அனுப்பினேன்னு சொல்லுங்க. உள்ள விடுவாங்க..! 30 வருட பேப்பர்களைப் புரட்டினால்தான் உங்களால ஒரு லெவலுக்கு வர முடியும். அதைவிட்டுட்டு தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு, கிடைச்ச புத்தகத்தை மட்டும் படிச்சு எழுதினீங்கன்னா அது சரியா வராது.. இது என்னோட கருத்து..” என்றார்..!

அவரிடத்தில் இருந்த புத்தகங்களை நூலகங்களுக்குக் கொடுத்துவிட்டதாகச் சொன்னார். கொஞ்சம் புத்தகங்களையும், தகவல்களையும் மட்டுமே தான் வைத்திருப்பதாகவும் சொன்னார். ஆனால் பக்தவச்சலம் பற்றி நிறையவே பேசினார். தி.மு.க.வின் எதிர்ப்புணர்வுக்கு தினமும் உரம் போட்டு ஊட்டி வளர்த்தது தி.மு.க. தலைமையினரின் பேச்சுத் திறமை மட்டும்தான் என்றில்லை. பக்தவச்சலமும் ஒரு காரணம். அவர்தான் தினம்தோறும் ஒரு பிரச்சினையைக் கிளப்பி, தி.மு.க. போராடுவதற்கு பிளாட்பார்ம் அமைத்துக் கொடுத்தார்..! அவர் மட்டும் காமராஜரை போல நடந்து கொண்டிருந்தால், தி.மு.க. இன்னும் கொஞ்சம் தாமதமாகத்தான் ஆட்சியைப் பிடித்திருக்கும்.. தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று பக்தவச்சலம் கடைசி காலத்தில்தான் உணர்ந்து கொண்டார்..” என்றார் குத்தூசியார்..!

பக்தவச்சலம் தனது இறுதிக் காலங்களில் கண் பார்வையை இழந்து மிகவும் கஷ்டப்பட்டதை ‘அச்சச்சோ’ உணர்வோடு சொன்னார் குத்தூசியார். “அப்படியிருந்தும் தன்னைப் பார்க்க வர்றவங்க.. உதவி கேட்டு வர்றவங்களுக்கு லெட்டர் கொடுத்துவிடுவார் தம்பி. பேப்பர்ல தடவித் தடவி எழுதுவாராம்.. கையெழுத்து போடும்போது மட்டும் ஒரு ஆள் கையைப் பிடிச்சுக்கிட்டு, ஒரு மாதிரி நீட்ட வாக்குல கையெழுத்துப் போட்டு அனுப்பி வைப்பாரு.. பாவம்...” என்றார்..!

இதைச் சின்னக்குத்தூசியார் சொல்லிவிட்டு சற்று நேரம் அமைதியாகிவிட்டார். அந்தச் சூழலை நானும் உடைக்க விரும்பாமல் அவரிடமிருந்து விடைபெற்றேன்..! இதுதான் அவருடனான எனது கடைசி சந்திப்பு..!

77 வயதான சின்னக்குத்தூசியார் இடையில் சில ஆண்டுகள் தவிர்த்து தனது இறுதி மூச்சுவரையிலும் கலைஞரின் புகழ் பாடியும், திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பாகவும் வாழ்ந்து, மிக எளிமையான மனிதராக, இப்படியும் ஒரு மனிதர் பத்திரிகையாளராக இருந்திருக்கிறார் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்பதுதான் மிகப் பெரிய பெருமை..!

இத்தனைக்கும் அவரது பத்திரிகைத் தொழிலுக்கு ஆரம்பப் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்திருப்பது கலைஞரின் பரம எதிரியான ஈ.வி.கே.சம்பத்துதான். காங்கிரஸின் ‘நவசக்தி’ நாளிதழில் ஆசிரியராக இருந்தவர், அதன் பின்பு சுமார் 25 வருடங்கள் அதற்கு எதிரணியான ‘முரசொலி’யில் எழுதியிருக்கிறார் என்றால் நம்பத்தான் முடியவில்லை..!

கடைசியாக கடந்த ஒரு வருட காலமாக 'நக்கீரன்' ஆசிரியர் கோபாலின் அரவணைப்பில் பில்ராத் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்..! அவரைச் சந்திக்கப் போகிறவர்களிடத்தில் எல்லாம் தன்னால் சரியாக எழுத முடியவில்லை என்பதை மட்டுமே வருத்தத்துடன் சொல்லி வந்திருக்கிறார்..! இந்த இறுதியான பத்தாண்டுகளில் 'நக்கீரன்' கோபால்தான் சின்னக்குத்தூசியாருக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து வந்திருக்கிறார்..! இறுதிக் காரியத்திலும் ஒரு மகனைப் போல அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அந்த மூத்தப் பத்திரிகையாளருக்கு, கோபால் அண்ணன் செய்த மரியாதைக்காக அவருக்கு எனது நன்றிகள்..!

சின்னக்குத்தூசியாரின் எழுத்தில் இருக்கும் ஒரு கவர்ச்சி.. முதல் வரியில் இருந்து இறுதிவரையில் அப்படியே விடாமல் தொடர்ந்து படிக்க வைக்கும் ஒரு ஈர்ப்புத் தன்மையுடையது. ஒரு சார்பானது என்று நினைத்துப் படிக்கத் துவங்கினாலும் தனது எழுத்தாற்றலால் அவரது பக்கமே நியாயம் இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்திவிடும் அவரது எழுத்து..! தன்னால் முடிந்தவரையிலும் எழுதுகோலை தனது உற்றத் துணைவனாக வைத்திருந்த அந்தப் பெரியவரின் மரணத்திற்குப் பின்பும், அவரது சட்டைப் பையில் அவரது பேனாவை சொருகி வைத்திருந்தது சாலப் பொருத்தம்..!

ஒரு சாதாரண கட்சி அபிமானியும், வட்டச் செயலாளருமே மிகக் குறுகியக் காலத்தில் கட்சியை வைத்து எப்படி, எப்படியோ வாழ்ந்துவிட்டபோதிலும் தான் வருந்தி, வருந்தி எழுதி, ஆதரவு சேர்த்த கட்சி ஆட்சிக்கு வந்தபோதும், கடைசிவரையில் தனக்காக எதையும் கேட்காமல், தன்னுடைய சொத்துக்களாக பல ஆயிரம் புத்தகங்களை ம்டடுமே விட்டுச் சென்றிருக்கும் சின்னக்குத்தூசியாரின் வாழ்க்கை பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..!

அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!
 

கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!

11-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் பதிவைப் படிக்கும் முன்னர் கருணாநிதியின் வீராணம் ஊழல்-1 : சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!
  என்ற இதன் முதல் பாகத்தைக் கொஞ்சம் சோம்பேறித்தனப்படாமல் படித்துவிடுங்கள். ஏற்கெனவே படித்துவிட்டவர்கள் நேரடியாகக் களத்தில் குதிக்கலாம்..!

வீராணம் ஊழலில் சத்தியநாராயணா நிறுவனத்திற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியும், பொதுப்பணித் துறை அமைச்சரும் எப்படியெல்லாம் ஆதரவாக இருந்தார்கள் என்பதை கடந்த இதழில் பார்த்தோம். இவர்கள் இருவரும் இவ்வளவு தீவிரமாக ஆதரிக்கக் காரணமென்ன..?

முரசொலி மாறனுக்கு சென்னை பச்சையப்பன் கல்லூரியை நடத்தும், பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராக வேண்டுமென விருப்பம் இருந்தது. அதனால் பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்த சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியநாராயணாவின் மருமகன் புருஷோத்தம் என்பவரோடு மாறன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.


முரசொலி மாறன், முதலமைச்சரி்ன் மருமகன் என்பதால், புருஷோத்தமும் அவருடன் நெருங்கிப் பழகுகிறார். 1970 ஜனவரி மாதம் பச்சையப்பன் டிரஸ்ட் அறங்காவலராக இருந்த எம்.ஏ.எம்.முத்தையா செட்டியார் இறக்கிறார். அந்தக் காலியிடம் தனக்கு வேண்டும் என்று புருஷோத்தமிடம் மாறன் தெரிவிக்கிறார். முதலமைச்சரின் மருமகனை எதிர்த்து வேறு யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட முடியுமா என்ன..? மாறனின் பெயரை புருஷோத்தம் முன் மொழிய மாறன் ஆசைப்படி அவர் பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராகிறார். சில நாட்களிலேயே அந்த அறக்கட்டளையின் தலைவர் பதவியையும் மாறன் கைப்பற்றுகிறார்.

தலைவர் பதவியை மாறனுக்கு விட்டுக் கொடுத்த புருஷோத்தம் பதிலுக்கு வீராணம் குழாய்கள் அமைக்கும் பணியை தனக்கு பெற்றுத் தருமாறு கேட்கிறார். "நான் கான்ட்ராக்ட் வாங்கித் தருகிறேன். எனக்கு இரண்டரை சதவிகிதத்தை கமிஷனாகத் தர வேண்டும்.." என்று மாறன் கேட்கிறார். உடனே கணக்குப் போட்டு வீராணம் திட்டத்தின் மொத்தத் திட்டச் செலவான 16 கோடியில் இரண்டரை சதவிகிதமான 40 லட்சம் ரூபாயை தனக்குக் கொடுத்து விடுமாறு கேட்கிறார். புருஷோத்தமும் அதற்கு ஒப்புக் கொள்கிறார்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பூர்வாங்கமாக ஒப்பந்தம் வழங்கி ஒரு உத்தரவு வேண்டுமென்று கேட்கிறார்கள். மாறன் மட்டும் சளைத்தவரா என்ன..? "உங்களுக்கு அதுபோல உத்தரவு வழங்கப்படும். அதற்கு முன்னால் பேசிய தொகை 40 லட்சம் ரூபாய் வேண்டும்" என்கிறார்.

புருஷோத்தம் தன் மாமனார் சத்தியநாராயணா ரெட்டியிடம் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறார். அவர், “இவ்வளவு பெரிய தொகையை மொத்தமாகத் தர முடியாது. அதனால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளச் சொல்லிப் பேசு” என்கிறார்.

மாறனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. "மொத்தமாகத் தர முடியாது. முதலில் 10 அல்லது 15 லட்சம் ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்" என்று புருஷோத்தம் கேட்கிறார். மாறனோ, “நான் ஒன்றும் பெரிய தொகையைக் கேட்கவில்லை. 40 லட்சத்தைத்தான் கேட்டுள்ளேன். தராவிட்டால், வேறு யாருக்காவது ஒப்பந்தத்தைக் கொடுத்துவிடுவேன் என்று கூறுகிறார். (இந்தச் சமயத்தில்தான் சென்னை அண்ணா சாலையில், வீட்டோடு சேர்த்து 1240 சதுர அடி இடத்தை மாறன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார் என்பதில் இருந்து அப்போதைய பண மதிப்பைப் புரிந்து கொள்ளலாம்)

ஒரு வழியாக மீதித் தொகையை பின்னால் தருவது என்றும் முதல் தவணையாக ஒரு தொகை தரப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்படுகிறது. ஒப்பந்தப் புள்ளிகள் முடிவடைவதற்கு முன்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, புருஷோத்தமும், அவர் மாமனார் சத்தியநாராயணா ரெட்டியும் மாறனோடு சேர்ந்து கருணாநிதியின் வீட்டிற்குச் சென்று 5 லட்சம் ரூபாயை அவரிடம் வழங்குகிறார்கள்.


இதையடுத்து, குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அரசிடமிருந்து சத்தியநாராயணா பிரதர்ஸுக்கு 39 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. பதிலுக்கு புருஷோத்தம் 32 லட்சம் ரூபாயை நேரடியாகவும், மாறன் மூலமாகவும் கருணாநிதியிடம் கொடுக்கிறார்.

சர்க்காரியா கமிஷன் இந்த வழக்கை விசாரித்தபோது, 32 லட்சம் ரூபாய் கறுப்புப் பணத்தில் இருந்து கருணாநிதிக்கு வழங்கப்பட்டது என்பதால், கருணாநிதியும் இக்குற்றத்திற்கு உடந்தையானவர் என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றெல்லாம் கருணாநிதி தரப்பில் வாதாடப்பட்டது.

ஆனால் புருஷோத்தம் தேதிவாரியாக எந்தெந்த நாட்களில் வங்கியிலிருந்து எவ்வளவு தொகை எடுக்கப்பட்டு கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை கமிஷன் முன் தாக்கல் செய்தார்.

ஒரு முறை கருணாநிதியிடம் நேரடியாக பணத்தை எடுத்துச் சென்று கொடுத்ததை கமிஷனிடம், “கரன்ஸி நோட்டுக்களாக 6 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு மாறன் வீட்டுக்குச் சென்றோம். மாறன் கருணாநிதி வீட்டுக்கு எங்களைக் கூட்டிச் சென்றார். பணம் அடங்கிய தோல் பெட்டியை கருணாநிதி முன்னிலையில் மேசை மீது வைத்தேன். கருணாநிதி பெட்டியை எடுத்துக் கொண்டு காலி பெட்டியை திருப்பிக் கொடுத்தார்..” என்று புருஷோத்தம் விரிவாக சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது சிவராமன் என்ற பொதுப்பணித்துறை அதிகாரி, தாராப்பூர் மற்றும் சத்தியநாராயணா பிரதர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.

குழாய்கள் அமைக்கும்போது அவற்றை சோதனை செய்து பார்க்க.. 12 கோடி காலன் தண்ணீர் தேவைப்படும் என்றும், அந்தத் தண்ணீருக்கு ஆகும் செலவாக அரசு தங்களுக்கு 96 லட்சம் ரூபாய் தர வேண்டுமென்றும் சத்தியநாராயணா பிரதர்ஸ் கேட்டிருந்தனர். ஆனால் தாராப்பூர் நிறுவனமோ, இது போன்ற ஏற்பாட்டிற்கு ஆகும் செலவை தாங்களே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தனர் என்பதுதான் அந்தச் செய்தி..

இந்த எதிர்ப்புகளையும், கருத்துக்களையும் மீறித்தான் சத்தியநாராயணா நிறுவனத்துக்கு வேலை ஆணை வழங்கப்பட்டது. பணத்தைத் தண்ணீராக செலவு செய்வது என்பது இதுதானா..?

வீராணம் திட்டத்தில் எவ்வளவு பணம் வீணாக செலவழிக்கப்பட்டது என மாநில கணக்காயர் குழு ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி கூடுதல் நிதிச் சலுகைகள், தவிர்க்கத்தக்க செலவு, தரக்குறைவான குழாய்கள் ஏற்பட்ட நஷ்டம், தரக்குறைவான சிமெண்ட், மேற்பார்வை பணிக்கான கூடுதல் செலவு என்று மொத்தத்தில் 7 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கருணாநிதிக்கு மட்டும்தான் லாபமா.. இல்லையென்றால் மாறனுக்குமா என்ற கேள்வி வருகிறதே..? பதில் இதோ..! முரசொலி கட்டிடம் கட்டும் பணி சத்தியநாராயணா பிரதர்ஸின் துணை நிறுவனமான மஹாலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. வேலையையும், கட்டுமானப் பொருட்களையும் இலவசமாகவே மாறன் பெற்றார்.

இது குறித்து கமிஷனிடம் பதிலளித்த மாறன், "மஹாலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், சத்தியநாராயணா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற விவரம் தனக்குத் தெரியாது.." என்று பல்டியடித்தார். தன்னிடம் சிக்கியவர்களை தி.மு.க.வினர் எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.


லஞ்சம் கொடுத்து வாங்கிய வேலையை சத்தியநாராயணா நிறுவனம் சரியாகச் செய்யவில்லை. அரைகுறையாகச் செய்யப்பட்ட பணிகளால் சாலையெங்கும் குழாய்கள் கிடந்தன. இது குறித்து, கருணாநிதியின் முதன்மைச் செயலாளராக இருந்த ஆர்.நாகராஜன் கமிஷன் முன்பு அளித்த சாட்சியத்தில், “என்னைத் தனியாகச் சந்தித்த புருஷோத்தமிடம் வேலைகளை முடிக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி எப்படி ஏற்பட்டது என்று கேட்டேன். வீராணம் திட்டத்தை எங்கள் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதிக்கு 29 லட்சம் என பெருந்தொகையை லஞ்சமாகக் கொடுத்ததால் எங்கள் தொழில் புழக்கத்துக்கான பணம் தீர்ந்துபோய்விட்டது” என்று அவர் சொன்னார்..” என்று சாட்சியமளித்துள்ளார்.

ஆக்கவும், அழிக்கவும் வல்லதுதானே அரசு..?

போட்ட திட்டம் நிறைவேறவில்லை. சத்தியநாராயணா நிறுவனம் ஏறக்குறைய நொடித்துப் போய்விட்டது. ஒரு நபர் இறந்துவிட்டால், பிரேதப் பரிசோதனை செய்து, இரங்கல் கூட்டம் போட வேண்டாமா..?

5.6.1974 அன்று சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்றும் பணியில் ஆற்றிய சாதனைகள் குறித்து கருணாநிதி தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. அக்கூட்டத்தில் சத்தியநாராயணா நிறுவனம் குறித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

“சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்குத் தேவைப்படுகின்ற நிர்வாகம் மற்றும் வல்லுநர் அமைப்பு இல்லை. கால அட்டவணைப்படி தொழிற்சாலையை நடத்துவதற்கு போதுமான நிதி வசதிகளும் இல்லை. இப்படிப்பட்ட மாபெரும் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய திறமை சத்தியநாராயணா நிறுவனத்திடம் இல்லை. அவர்கள் திறமை மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்து இந்தத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது..”

பிரேதப் பரிசோதனை அறிக்கை நன்றாக இருக்கிறதா..?

நிறைவேறாத திட்டத்துக்காக எப்படி ஒரு நிறுவனம் காலியானது. பார்த்தீர்களா..? இதுதான் விஞ்ஞானப்பூர்வமான மோசடி..!



நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்-10-04-2011

முரசொலி மாறனின் தலையீடு - கருணாநிதியின் ஒப்புதல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!

30-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தி.மு.க. அரசு பத்திரிகையாளர்களை மிரட்டுவதும், வேண்டாத செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களை வழக்குப் போட்டு மிரட்டுவதும், பிறகு சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்கள் அரசிடம் பணிந்ததும் அந்த வழக்குகளை குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதும் நாம் பார்த்து பழகிப் போன ஒரு விஷயம். ஆனால், இது போன்ற நடவடிக்கைகளெயெல்லாம் 1969-ம் ஆண்டிலேயே கருணாநிதி நடத்தியிருக்கிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

வர்கீஸ் என்ற ஐ.சி.எஸ். அதிகாரி தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகும் அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆலோசகராகவும், விஜிலென்ஸ் பிரிவின் ஆணையராகவும் பணியாற்றி வந்தார்.

அவரின் மகன் ஓபல் காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ததில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பிராட்வே டைம்ஸ் என்ற நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தியை அடுத்து வர்கீஸ், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அந்தக் கடிதத்தில் தனது மகன் கார் இறக்குமதி செய்ததில் சரியான நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டன என்றும், அதில் எவ்விதமான முறைகேடுகளும் இல்லை என்றும், பிராட்வே டைம்ஸ் பத்திரிகை, அதிகாரிகளை மிரட்டுவதற்காகவே இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், அதனால் அந்தப் பத்திரிகை மீது அரசு அவதூறு வழக்குத் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தன் மீது இந்தப் பத்திரிகை இப்படியொரு செய்தியை வெளியிடுவதற்கும் தனிப்பட்ட காரணம் ஒன்று உண்டு என்றார் வர்கீஸ். அது என்னவெனில், இந்த பிராட்வே டைம்ஸ் பத்திரிகையின் உரிமையாளர் மேத்யூ செரியன் தி.மு.க. கட்சியினருக்குத் தெரிந்தவர்தான். அதிலும் முரசொலி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். முரசொலி மாறன் தேர்தலில் நிற்கும் காலங்களில் அவரது பிரச்சார உபயோகத்திற்காக தனது கம்பெனி கார்களை வழங்கி உதவிடும் அளவுக்கு நண்பர்தான் மேத்யூ செரியன்.

ஆனால் வர்கீஸ் மீது இந்த செரியனுக்கு என்ன கோபம் எனில், பிராட்வே டைம்ஸ் பத்திரிகையை அச்சிடும் நிறுவனம் தாம்ஸன் அண்ட் சன்ஸ். இதுவும் செரியனுக்குச் சொந்தமானதுதான். இந்த அச்சகத்தில் சில காலங்கள் தமிழக அரசின் பாட நூல் வெளியீட்டுக் கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் தமிழக அரசின் பள்ளிப் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்தன.

ஒரு கட்டத்தில் தாம்ஸன் நிறுவனம் செய்த குளறுபடியால் புத்தகங்கள் அச்சிடுவதில் தாமதமும், முறைகேடுகளும் நடந்திருக்கின்றன. இதனால் அப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த வர்கீஸ், இந்த தாம்ஸன் அண்ட் சன்ஸ்  நிறுவனத்திற்கான பாட நூல் அச்சிடும் கான்டிராக்ட்டை ரத்து செய்துவிட்டு இந்நிறுவனத்தையும் கறுப்புப் பட்டியலில் வைத்துவிட்டார். இதனால் லம்பமாக அரசிடம் இருந்து வரும் பணத்தினை இழந்துவிட்டார் செரியன். இந்தக் கோபத்தில்தான் இப்படியொரு அபாண்டமான புகாரை செரியன் தன் மீது எழுப்பியிருப்பதாக வர்கீஸ், அரசிடம் கடிதம் மூலம் புகார் கூறினார்.

இந்தக் கடிதம் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் பார்வைக்கு வைக்கப்பட்டது. செரியன் மீதும், அந்தப் பத்திரிகை மீதும் வழக்குத் தொடர கருணாநிதியால் உடனுக்குடன் அனுமதியும் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு செரியனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க உதவப் போகிறது என்று அப்போது வர்கீஸுக்குத் தெரியவில்லை.

வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றம் பிராட்வே டைம்ஸ் பத்திரிகைக்கு சம்மன் அனுப்பிய பின்புதான், இந்த விஷயத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியுள்ளன.

அந்தப் பத்திரிகையின் அதிபரை முதலமைச்சரான கருணாநிதியின் செயலாளர் தொடர்பு கொண்டு, முதலமைச்சரிடம் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி ஆசிரியரின் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதனையேற்று செரியனும் அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் வர்கீஸ் மற்றும் அவரது மகன் பற்றி ஏற்கெனவே வெளியிட்ட செய்திக்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் “பிராட்வே டைம்ஸ் பத்திரிகை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இப்போது எனது பத்திரிகைக்கும், முன்னேற்ற நோக்கங்கள் கொண்ட உங்கள் அரசுக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலவுவதாலும் எங்கள் மீதான வழக்கை அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்..” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்படுகிறது. இக்கடிதத்தைப் படித்த கருணாநிதி அக்கடிதத்திலேயே “அரசுத் தரப்பு வழக்கை வாபஸ் பெறலாம்” என்று எழுதி உத்தரவிடுகிறார்.

ஆனால் பிராட்வே டைம்ஸ் பத்திரிகையின் அதிபரான செரியன் எழுதிய அக்கடிதத்தில் மன்னிப்புக் கேட்பது போன்ற எந்தத் தொனியும் இல்லை. மாறாக, தான் வெளியிட்ட கட்டுரைக்கு நியாயம் கற்பிப்பதாகவே இருந்தது.

மேலும் பிராட்வே டைம்ஸ் பத்திரிகை மீது வழக்குத் தொடர்வதற்கு முன்பு அரசுத் தரப்பில் விரிவாக நடந்த ஆலோசனை.. சட்டத் துறை அமைச்சருடனான ஆலோசனை என்று எதுவுமே வாபஸ் பெறும்போது பின்பற்றப்படவில்லை. அவசர கதியில், அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்டது முதல் மாங்காய் என்றால் இரண்டாவது மாங்காயாக, அதே வேகத்திலேயே, அந்நிறுவனம் பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்களை அச்சிடும் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் கறுப்புப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டது. இந்த நீக்கத்திற்கு அடிப்படையாகக் கருதப்பட்டது மேத்யூ செரியனின் அக்கடிதம்தான்.

இந்த விவகாரத்தில் மொத்தமாகப் பார்த்தால், எதற்காக கருணாநிதி இவ்வளவு முனைப்பாக வழக்கை வாபஸ் பெறுவதிலும், அந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும் முனைப்புக் காட்டினார் என்ற கேள்வி எழும். இங்கேதான் முரசொலி மாறன் வருகிறார்.

“மாறன்தான் அரசு இந்த வழக்கை வாபஸ் பெற்று, கறுப்புப் பட்டியலில் இருந்து அந்த நிறுவனத்தை நீக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புக் காட்டி தன்னிடம் வலியுறுத்தினார்..” என்பதை கருணாநிதியே சர்க்காரியா கமிஷனில் அளித்த தனது வாக்குமூலத்தில் ஒத்துக் கொண்டார்.

இவ்வாறு மாறன் கருணாநிதிக்கு நெருக்கடி கொடு்த்தது வெறும் நட்பினால்தானா என்றால் இல்லை. பிராட்வே டைம்ஸ் நிறுவனம் தேர்தல் சமயங்களில் மாறனுக்கு தன்னுடைய கார்களை இலவசமாக வழங்கி உதவி செய்திருக்கிறது என்பதும் சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தெரிய வந்தது.

இவ்வழக்கில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு தனியார் நிறுவனம் அரசின் கான்ட்ராக்டைப் பெற்று பாட நூல் தயாரிக்கும்போது முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது.

அவ்வாறு நஷ்டம் ஏற்படுத்திய நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்க ஒரு நேர்மையான அதிகாரி அரசுக்குப் பரிந்துரை செய்து அவ்வாறே அந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்கிறார்.

அந்த அதிகாரியைப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அந்தப் பத்திரிகை அவரைப் பற்றிய அவதூறான செய்தியை வெளியிடுகிறது. அப்பத்திரிகை மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று, அதனால் பாதிக்கப்பட்ட அதிகாரி அரசுக்குப் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் வழக்கும் தொடுக்கப்படுகிறது.

வழக்குத் தொடுக்கப்பட்ட பின்னர் முதலமைச்சரின் மருமகனான முரசொலி மாறன், முதல்வர் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்த வழக்கை வாபஸ் பெற வைத்ததோடு ஊழலில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும் உதவுகிறார்.

கருணாநிதியின் இந்த நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப்பிடும் நீதிபதி சர்க்காரியா, “இவ்வழக்கில் வரக் கூடிய நியாயமான முடிவு என்னவெனில், சரியான நடைமுறையைப் பின்பற்றாமல் குறுக்கு வழியில் செல்லவும், தம்முடைய சட்டத் துறை அமைச்சரின் கருத்தை முரட்டுத்தனமாக ஒதுக்கிவிட்டுச் செல்லவும், தொடர்புடைய மற்ற இரண்டு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பைத் தர மறுக்கவும், மாறனின் அலுவல் சார்பற்ற தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக கருணாநிதி, செரியனுக்கு உதவும் நோக்கத்திற்கு தூண்டப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்..!

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் : 31-03-2011