Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-11-11-2010


11-11-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீபகாலமாக இட்லி, வடை பதிவுகளை ஏன் எழுதவில்லை என்று தொலைபேசியிலும், இமெயிலிலும், பின்னூட்டங்களிலும் தொடர்ந்து விசாரித்தவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி..!.

இட்லி-வடை பதிவுகளில் போட வேண்டியதையெல்லாம் நான் அவ்வப்போது தனித்தனிப் பதிவுகளாகப் போட்டுவிட்டதால்தான் இட்லி-வடை என்ற தலைப்பில் எதையும் எழுத முடியவில்லை.. மன்னிக்கவும்..!

ஏற்கெனவே நான் எழுதியிருந்த இட்லி-வடை பதிவுகளைப் படித்துப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்... அவைகள் அத்தனையையும் தனிப் பதிவுகளாக போட்டிருக்க வேண்டிய விஷயங்கள்தான் என்று..!

அவ்வப்போது எழும் கடுமையான வேலைப் பணிகளுக்கிடையேயும், என் அப்பன் முருகன் கொடுக்கும் சோதனைகளையும் தாண்டி இட்லிவடைக்காக விஷயங்களைத் தேட வேண்டுமெனில் நிரம்ப நேரம் பிடிக்கிறது. சேர்த்து வைத்து போட மனமும் மறுக்கிறது. சட்டென்று பதிவாய்ப் போட்டு பின்னூட்டங்களைப் பார்க்கவே விரும்புகிறது மனம்.

இந்த ஊசலாட்ட மனதின் விளைவாக இன்றைய இட்லி-வடை குறைவான பத்தியச் சாப்பாடு போலத்தான் இருக்கும்..!

நினைத்துப் பார்க்காத எதிர் ஓட்டுகள்..!

இந்த வலையுலகத்தில் நுழைந்து கிட்டத்தட்ட நான்காண்டை நெருங்கி வந்திருக்கும் சூழலில் முதல் முறையாக நேற்றுத்தான் எனது இந்த உணர்ச்சி வேகத்தில் என்கவுண்ட்டருக்கு சபாஷ் போடும் பரிதாப மக்கள் பதிவுக்கு மிக அதிகமான எதிர்ப்பு ஓட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. கூடவே அர்ச்சனைகளும்தான்..!

மக்கள் மசாலா படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளைப்போல உடனுக்குடன் தீர்வை எதிர்நோக்குவதை இதிலிருந்து அறிய முடிகிறது. நீதிமன்றங்களில் தீர்வுக்கான காலக்கட்டம் தாமதமாகிறது என்பதை அனைத்துப் பதிவர்களும் சுட்டிக் காட்டினாலும் அந்த தாமதத்திற்கு யார் காரணம் என்பதையும், அதனை எப்படி நிவர்த்தி செய்வது என்பதைப் பற்றியும் எதுவும் சொல்லாமல் “உடனே தூக்கில் போடு” என்கிறார்கள்.

மக்களின் கருத்துப்படி இந்தப் படுகொலை நல்ல விஷயம் என்றே வைத்துக் கொண்டாலும், இதையே உதாரணமாகக் காட்டி பல அநியாயமான படுகொலைகளையும் இந்த என்கவுண்ட்டர் மூலமாகவே போலீஸார் இனியும் நடத்துவார்கள். இதற்கு முன்னும் நடத்தியிருக்கிறார்கள். உதாரணம் வீரப்பன் வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள்..!

இனி பலியாகப் போகும் பல அப்பாவிகளுக்காக இந்த மோகனகிருஷ்ணனை எத்தனை ஆண்டுகளானாலும் பரவாயில்லை என்று சிறையில் வைத்து விசாரித்திருக்கக் கூடாதா..? ஒரு உயிர் முக்கியமா? அல்லது பல உயிர்கள் முக்கியமா?

யோசியுங்கள் மக்களே..!

“சேர்ந்து செஞ்ச தப்பெல்லாம் வெளில வரும்..” - விஜயகாந்துக்கு நடிகர் சந்திரசேகர் எச்சரிக்கை..!

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் பேசிய பேச்சு இது..!

“இந்த நாட்டுல ஒருத்தன், நான் ‘கருப்பு எம்.ஜி.ஆர்.’ன்னு சொல்றான். ஒரு நாள் விஜயகாந்த் கலைஞரிடம் வந்து, ‘எனக்கு சரியா தமிழ் உச்சரிப்பு வர மாட்டேங்குது. என்ன செய்யலாம்னு ஒரு யோசனை சொல்லுங்க’ன்னு கேட்டான். அதற்கு கலைஞர் ஒரு வாக்கியத்தை எழுதிக் கொடுத்து, ‘இதைத் தினமும் படித்துப் பயிற்சி செய். தமிழ் உச்சரிப்பு தானாக வந்துவிடும்..’ என்றார். ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்பதுதான் அந்த வாசகம். அப்படி தமிழ் சொல்லிக் கொடுத்த என் தலைவனையே திட்ட இவனுக்கு என்ன தகுதியிருக்கு..?

கலைஞரைத் திட்டினால் பெயர் கிடைக்கும் என்று நினைக்கிறான் இந்த விஜயகாந்த். எழவெடுத்தவனுக்கு என்னத்தைச் சொல்ல..? ஏய் விஜயகாந்த்.. ஒன்று மட்டும் சொல்கிறேன். என் தலைவரைத் திட்டுவதை நிறுத்திக் கொள். இல்லையென்றால்.. நீயும் நடிகன்.. நானும் நடிகன்.. நாம் இருவரும் சேர்ந்து செய்த தவறையெல்லாம், எனக்கு அவமானம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து அனைத்தையும் வெளியில் கொண்டு வரத் தயங்க மாட்டேன்..” என்று பேசியிருக்கிறார்.

என்னய்யா இது அக்கிரமம்..? ஒரே கட்சில இருக்கும்போது கூடமாட விழுந்து எந்திரிக்கிறது.. அப்புறம் வேற கட்சின்னு பிரிஞ்சுட்டா உடனே கூத்தடிச்சதையெல்லாம் வெளில சொல்லிருவேன்னு மிரட்டுறது.. என்ன பிரெண்ட்ஷிப்போ..?

அப்போ இத்தனை நாளா செஞ்ச 'சேட்டை'களையெல்லாம் மறைச்சு வைச்சுக்கிட்டுத்தான் இவரும் யோக்கியம் பேசுறாரா..? இப்படியும் யோசிக்கலாமில்லையா..? உண்மையாக விஜயகாந்தைவிட சந்திரசேகர் மாதிரியான நண்பர்களிடம்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜெர்மனியின் ஹோமோ அமைச்சர்..!

ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சரான கிடோ வெஸ்ட்டர்வில்லி சமீபத்தில் திருமணம் செய்திருக்கிறார். பெண்ணை அல்ல.. ஒரு ஆணை..

48 வயதான கிடோ, தான் ஒரு ஹோமோ என்பதை 2003-ம் ஆண்டு தற்போதைய ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மார்கெல்லின் 50-வது பிறந்த நாள் விழாவின்போது மீடியாக்களிடம் வெளிப்படையாக அறிவித்திருந்தார். அதே ஆண்டில் இருந்து தனக்குப் பழக்கமான மைச்சேல் மிரான்ஸ் என்னும் தனது ஹோமோ நண்பரை, இப்போது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.

இந்த நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி சுபயோக, சுபதினத்தில் தனது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சூழ நடந்தேறியதாம். பான் நகரின் மேயர்தான் இத்திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

ஆனாலும் இதில் இன்னும் ஒரு சுவையான விஷயம்.. ஜெர்மனியில் ஹோமோக்கள் திருமணத்திற்கு இன்னமும் முறைப்படியான அங்கீகாரம் தரப்படவில்லையாம். ஆதலால் இது தற்போதைக்கு பதிவு செய்யப்பட்ட பார்ட்னர்கள் என்றே அழைக்கப்படுமாம்..

கிராஸ் சேர்க்கை திருமணத்தில் இருக்கும் சில உரிமைகள்  மட்டுமே பதிவு செய்யப்பட்ட பார்ட்னர்கள் என்ற இந்த விதிமுறையின் கீழ் ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டவர்களுக்கு தரப்படுகிறதாம்.

ஜனாதிபதி, பிரதமர், மந்திரிகள் போன்ற வி.வி.ஐ.பி.யின் மனைவியாக இருந்தால் வெளிநாட்டிற்குப் போகும்போது ஜோடியாக கைகோர்த்தபடி விமானத்தில் இருந்து இறங்கலாம். இங்கே இவர்கள் எப்படி? அதுவும் மணமகன் வெளியுறவுத் துறை மந்திரியாச்சே. வருடத்தில் பாதி நாட்கள் சுற்றிக் கொண்டுதானே இருக்க வேண்டும்.. சந்தேகம் வருகிறதல்லவா?

ஏன் எங்களுக்கு மட்டும் என்ன குறைஞ்சா போச்சு? நாங்களும் முறையான ஜோடிகள்தான் என்பதைப் போல் கிடோ அரசு முறைப் பயணமாக சமீபத்தில் ஜப்பான், சீனாவுக்குச் சென்றபோது தனது பார்ட்னர் மைச்சேலையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

அத்தோடு சீன அதிபர், பிரதமருக்கு தனது பார்ட்னரையும் அறிமுகப்படுத்தி வைத்து அசத்தியிருக்கிறார். இவரல்லவோ ஹஸ்பெண்ட்..? சரி. இதில் யார் ஹஸ்பெண்ட், யார் வொய்ப் என்பது தெரியாததால் கிடோவுக்கு முதல் மரியாதை அளிப்போம்.(புகைப்படத்தில் கண்ணாடி அணிந்திருப்பவர்தான் கிடோ)

வாழ்க மணமக்கள்..!

மும்பையில் அசத்துகிறார் ஸ்வப்னா கண்ணா..!

'டிக் டிக் டிக்' படத்தில் தனது மின்னலடிக்கும் கண்களால் கைது செய்த ஸ்வப்னாவை ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். அம்மணியைத் தேடியதற்கு காரணம் சமீபத்தில் சூர்யா டிவியில் நான் பார்த்த ஒரு மலையாளப் படம்.

படத்தில் ஸ்வப்னா வருகின்ற காட்சிகளிலெல்லாம் வஞ்சகமில்லாமல் சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தார். அடப்பாவிகளா..! இதெல்லாம் முன்கூட்டியே நம்ம தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்குத் தெரி்ஞ்சிருந்தா ஸ்வப்னாவுக்கு இன்னும் நிறைய சான்ஸ் கிடைச்சிருக்குமேன்னு தோணுச்சு. அப்புறம்தான் ஆளு எங்க இருக்காங்கன்னு பார்க்கலாம்னு தோணி, தேடிப் பார்த்தேன்.

கிடைக்காத சூழலில் முத்து நிவாஸ் ஹரிஹரசுப்ரமணியன் என்னும் பேஸ்புக் நண்பர் ஒருத்தர் தேடிப் பார்த்து கண்டுபிடிச்சு சொல்லிட்டார். அவருக்கு எனது கோடானுகோடி நன்றி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஒரு ரவுண்டு அடித்து முடித்த ஸ்வப்னா பின்னாட்களில் ஹிந்தி படங்களில்தான் அதிகம் நடித்தார். தற்போது ராமன் கண்ணா என்னும் ஹிந்தி நடிகருக்கு வாழ்க்கைப்பட்டு மும்பையில் ஈவண்ட் மேனேஜ்மெண்ட், எடிட்டிங், டப்பிங் தியேட்டர்கள் நடத்தும் Sangini Entertainment என்னும் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறாராம் ஸ்வப்னா. கூடவே தனது கலைத்தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நடனப் பள்ளியொன்றையும் அமைத்து நடனம் சொல்லித் தருகிறாராம்.

இந்தப் பள்ளியின் மூலம் பல்வேறு நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறாராம் ஸ்வப்னா.. இந்தக் காணொளி ஆக்லாந்தில் ஸ்வப்னா நடத்திய ஒரு நடன நிகழ்ச்சி பற்றியது.


நீடுழி வாழட்டும்..!

மல்லு படங்களைக் காப்பியடிக்கும் சிங்களத் திரையுலகம்

ஒரு விஷயத்திற்காக சிங்களத் திரைப்படங்களை கூகிளாண்டவரில் வலைவீசி தேடிக் கொண்டிருந்தபோது இத்திரைப்படம் கண்ணில்பட்டது.

படத்தின் காட்சிகள் எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே என்று யோசித்தால் மண்டையில் பளிச்சென்று பல்பு ஒளிர்ந்தது. அட இது பயர் படமாச்சே என்று..

டோரண்ட்டில் டவுன்லோடிட்டு முழு படத்தையும் பார்த்தேன். ஒரு சீன்கூட மாற்றமில்லாமல் அப்படியே அச்சுப் பிசகாமல் காப்பியடித்து எடுத்து ஜமாய்த்திருக்கிறார்கள். ம்.. இந்த அளவுக்கு இலங்கையில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா என்று யோசித்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது.

இந்த விஷயத்தில் மட்டும் அதீத சுதந்திரத்தில் சிங்கள சினிமாக்கள் இருப்பதை அடுத்தடுத்து பார்த்த சில திரைப்படங்களின் காட்சிகள் சொல்லிக் காட்டின. இதாவது பரவாயில்லை.. நான் ஆதி காலத்தில் பார்த்திருந்த ‘தம்புராட்டி’, ‘ரதி நிர்வேதம்’, ‘வைன் அண்ட் வுமன்’, ‘மழு’ போன்ற பிட்டு படங்களைக்கூட அட்டர்காப்பி செய்திருக்கிறார்கள்.

பாவம் நமது மலையாள சினிமா எழுத்தாளர்கள். சில நூறு ரூபாய்களுக்காகவும், ஆயிரம் ரூபாய்களுக்காகவும் எழுதிக் கொடுத்த அவர்களுடைய கதை, படம் இப்படி நாடு விட்டு நாடு போய் படமாகியதுகூட தெரியாமல் மேலே போய்ச் சேர்ந்திருக்கிறார்களே என்று நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது..!

சிங்களப் படவுலகம் சிறக்கட்டும்..!

சிரஞ்சீவி  ஜென்டில்மேனா..!?

சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு நடிகை(பெயர் வேண்டாமே..!)  சிரஞ்சீவியைப் பற்றிக் குறிப்பிட்டு “சிரு பக்கா ஜென்டில்மேன். அவரை மாதிரியொரு குட் பிரெண்ட் அண்ட் ஆக்டரை நான் பார்த்ததில்லை..” என்று குறிப்பெழுதி வைத்திருந்தார்.

அதற்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் மட்டும் கடுமையாக எதிர்த்து எழுதியிருந்தார்கள். அதில் ஒருவர் எழுதியிருந்த விஷயம் என்னை அதிகம் கவர்ந்தது.

ஒரு படத்தைக் குறிப்பிட்டிருந்த அந்த வாசகர், “இந்தப் படத்தைப் போய் பாருங்க.. இந்தப் படத்தை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் எந்த அளவுக்கு போராட்டம் நடத்துனாங்கன்றதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? அப்புறமா உங்க சிரு ஜென்டில்மேனா, இல்லையான்னு சொல்லுங்க..” என்று காரத்தைக் கொட்டியிருந்தார்.

ஆர்வமிகுதியில் அந்தப் படத்தைப் பற்றி கூகிளாண்டவரிடம் துழாவி, துழாவி கண்டு பிடித்துப் பார்த்தேன். படித்தேன். அந்தப் படத்தின் பெயர் அல்லுடு மஜாகா..!

இ.வி.வி.சத்யநாராயணராவ் இயக்கம் செய்த இத்திரைப்படம் டபுள் மீனிங் டயலாக்குகளாலும், ஆபாசமான காட்சியமைப்புகளாலும் அதிகம் பரபரப்பாகப் பேசப்பட்டதாம். பெண்கள் அமைப்புகளெல்லாம் தெருவில் இறங்கி போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்கள்.

ஆனால் படம் என்னவோ சூப்பர் டூப்பர் ஹிட்..! 75 தியேட்டர்களில் 50 நாளையும், 27 தியேட்டர்களில் 100 நாட்களையும் கடந்து ஓடியதாம்..
படத்தை அப்படியே மேலோட்டமாக ஓட்டிப் பார்த்தபோது இடையில் வந்த இந்த பாடல் காட்சியைப் பார்த்து கொஞ்சம் பேஸ்த்தடித்துப் போனது உண்மைதான்.

கதைப்படி ரம்பாவும், ரம்யா கிருஷ்ணனும் கதையல்ல நிஜம் லட்சுமியின் பெண்கள் இருவருமே சிரஞ்சீவியை விரும்புகிறார்களாம். ஒரு கனவுப் பாடலில் மாமியாரான லட்சுமியும் சிரஞ்சீவியுடன் களத்தில் குதிக்க.. இந்த நால்வருக்குமான கனவுப் பாடலாகிவிட்டது இது..!

லட்சுமியம்மாவா இது..? ஏன் தெலுங்கில் மட்டும் இப்படி நடிக்கிறார். தமிழ் ரசிகர்கள் என்ன பாவம் செய்தார்களோ..?



மூன்று நாட்கள் படுத்தியெடுத்த ஒபாமா..!

ஒபாமா வைரஸ் என்று பெயர்தான் வைக்கவில்லை. ஆனால் அத்தனை டெல்லி தொலைக்காட்சிகளும் ஒபாமாவுக்கு ஓவராக ஜால்ரா போட்டுத் தாளித்துவிட்டன. இன்னும் ஒபாமா எந்த நேரத்தில் கக்கூஸ் போனார்..? எப்போது குளித்தார் என்பதை மட்டும்தான் சொல்லவில்லை. மீதி அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டார்கள்.

ஒபாமாவும் பரவாயில்லை. நல்லதொரு பேச்சாளராகத்தான் இருக்கிறார். மூச்சு வாங்கியபடியே எழுதி வைத்து படித்து உயிரையெடுக்கும் நமது ஜனாதிபதிகளிடம் இவர் நிச்சயம் வித்தியாசம்தான்.

மும்பை செயிண்ட் சேவியர் கல்லூரியில் ஒரு மாணவி பாகிஸ்தான் பற்றிக் கேட்ட கேள்விக்கு “நான் முன்பே எதிர்பார்த்தேன்..” என்றபடியே அவர் பதில் சொன்னவிதம் எனக்குப் பிடித்திருந்தது. என்றாலும் இன்னும் நெருக்கிப் பிடித்து நிறைய அவரிடம் கேட்டிருக்கலாம். அப்படியெல்லாம் சங்கடப்படுத்தக் கூடாது என்று முன்கூட்டியே கேள்விகளையெல்லாம் முடிவு செய்துதான் அமர வைத்திருக்கிறார்கள் என்பது சொல்லாமலேயே புரிந்தது.

சரி நம்ம மன்னமோகனசிங்காவது உருப்படியாக பேச்சுவார்த்தை நடத்தினாரா என்றால் அதுவும் இல்லை. பல ஆண்டுகளுக்காக அமெரிக்காவுக்காக ஒற்றர் வேலை பார்த்து 2004-ம் ஆண்டே  நமது நாட்டை விட்டு ஓடிப் போன ரவீந்திரசிங் என்ற ரா அதிகாரியை ஒப்படைப்பது பற்றி பேசவே இல்லையாம்..

ராஜமரியாதையோடு காங்கிரஸ் அரசே அனுப்பி வைத்த போபால் யூனியன் கார்பைடு ஆலை அதிபர் ஆண்டர்சனை பற்றியும் பேசவில்லையாம்..! அப்புறம் என்ன மயிறுதாண்டா பேசுனீங்கன்னா.. வேலை வாய்ப்பு, நம்ம காசைக் கொட்டி விமானங்களை வாங்கும் விற்பனை இது பற்றித்தான் பேசினார்களாம்.

என்ன கொடுமை இது..? அப்ப நட்பு நாடுகளை இது மாதிரி ஒற்றர் வேலை பார்க்கிறதெல்லாம் தப்பி்ல்லைன்னு பகிரங்கமா ரெண்டு நாட்டு ஜனாதிபதிகளும் ஓப்பனா சொல்லிரலாமே.. எதுக்காக இப்படி பிடிக்கற மாதிரி, தேடுற மாதிரி, துரத்துற மாதிரியெல்லாம் டிராமா போடுறாங்க..? ம்ஹும்.. முடியல.. இவனுகளையெல்லாம் நினைச்சா கோபம் கோபமா வருது..!

தண்ணி படுத்திய பாடு..!

தண்ணியடித்தால் என்ன தப்பு என்றவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ இது..!

மும்பையில் ஆல்பம் ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சரக்கடித்து போதையான தயாரிப்பாளர், மேடையில் ஆடிக் கொண்டிருந்த ஆல்பத்தில் நடித்திருந்த ஒரு நடிகையைப் படுத்திய பாட்டை பாருங்கள்..!

ஏதோ தயாரிப்பாளர் என்பதால் விட்டுத் தொலைத்தார்கள். வேறு ஆளாக இருந்தால் என்னவாயிருக்கும்..?



சுமலதாவின் கதையல்ல நிஜம்..!

ஊர் நாட்டாமைகள், கிராம நாட்டாமைகள், பஞ்சாயத்து நாட்டாமைகள், நீதிமன்ற நாட்டாமைகள், அரசியல் நாட்டாமைகள், வலையுலக நாட்டாமைகள் என்ற வரிசையில் தொலைக்காட்சி நாட்டாமைகளும் பெருகிக் கொண்டே போகிறார்கள்.

அந்த வரிசையில் நடிகை சுமலதாவும் இணைந்திருக்கிறார். 50 வயதைக் கடந்தும் இப்போதும் ‘முரட்டுக்காளை’யில் பார்த்த அதே சுமலதாவைப் போலவே தென்படுகிறார். என்ன காயகல்பம் சாப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இப்போதும் அமிதாப்பச்சன், மோகன்லாலுடன் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் தனது காதல் கணவர் அம்பரீஷுடனேயே ஜோடி சேர்ந்து கல்லா கட்டி வருகிறார்.

தற்போது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ‘கதையல்ல நிஜம்’ பாணியில் ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்று கச்சிதமாகத் தீர்ப்புகளை வாரி வழங்கி வருவதாகச் சொல்கிறார்கள். இவரைப் பார்த்தால் நாட்டாமை மாதிரி தெரியவில்லை என்றாலும், டிவி கிளாமருக்கு இவரைவிட்டால் வேறு ஆளில்லையோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது..!

தெலுங்கு தெரியாததால் பல இடங்களில் புரியவில்லை என்றாலும் சுமலதாவே கண் கலங்கி அழுவதைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு அழுவாச்சி காவியம்தான் ஓடுகிறது என்பது புரிந்து எனக்கும் கண்ணு கலங்கிருச்சு. நீங்களும் பார்த்து, கேட்டு அழுவுங்கள்..!



படித்ததில் பிடித்தது

“...........மூன்றாவது வலைப்பதிவிலேயே சரக்கு காலியாகி, டைரி லெவலுக்கு வந்து, பின் பத்திரிகைகளில் வந்ததை எடுத்துக் காப்பி-பேஸ்ட் செய்பவர்களும் உண்டு........”

“.............முதல் நாள், முதல் காட்சியே ஏதாவது ஒரு மொக்கைப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் படத்தைப் பார்க்காதீங்க’ என்று அதிரடியாகச் சொல்லுவார்கள். படத்தின் டைட்டிலில் தொடங்கி, எண்ட் கார்ட்வரை கதையை அப்படியே ‘விமர்சனமென்ற’ பெயரில் எழுதுவார்கள்.........”

“............பெரும்பாலும் அன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்திகளை வாசித்து டென்ஷனாகி, ‘ஏய் மனிதனே’ டைப்பில் 'பக்கெட்டுக் கவிதைகள்' எழுதுவார்கள் அல்லது வாசித்த செய்தியை அப்படியே டைப் அடித்து வலையில் ஏற்றுவார்கள்..........”

நன்றி : ‘புதிய தலைமுறை’யில் பதிவுலகத் தம்பி, யுவகிருஷ்ணா

பார்த்ததில் பிடித்தது



கொல்ல முடியாத கணங்கள்..!

27-10-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!





கொல்ல முடியாத கணங்கள்..!

பூனையொன்றை பார்க்க வைத்தே
மீனின் குச்சி எலும்பைக் கூட
விடாத தர்மவான்களை..

ஒட்டிய வயிறோடு
கையை நீட்டும் சிறாரை
எட்டி உதைக்கும் கால்களுக்குச்
சொந்தக்காரர்களை..

வீடுவரையேனும்
விடாமல் துரத்தி
கையூட்டு வாங்கும்
அரசாளர்களை..

மன்னிப்பு கேட்டும்
மண்டியிட வைக்கும்
அதிகார வர்க்கத்தினரை..

அரைசாண் வயிற்றுக்காக
கழிவறைக்குள்
இறங்கியவனிடமே
காசு பார்க்கும் தரகனை..

குடும்பத்திற்காக
பணி தேடி வந்தவளை
படுக்கைவரை இழுத்தவனை..

தோல் சுருங்க
தூக்கி வளர்த்தவர்களை
மேல் கருக்க
மீளவும் உழைக்கனுப்பிய
உத்தம பிள்ளைகளை..
 

இருக்கிறான் ஆண்டவன்
என்றெண்ணி
பக்தன் அளித்ததை
கொள்ளையடிக்கும்
போலி பக்தர்களை..

இன்னும் நிறையவர்களை
கொல்லத்தான் நினைக்கிறேன்
தினம் தினமும்...

ஒவ்வொரு முறையும்
தோல்வியில் முடிகிறது
எனது முயற்சி..

இறுதியில் கண்டு கொண்டேன்..
இவர்களில் எங்கோ நானும்
ஒளிந்திருக்கிறேன் என்று..!


அள்ள முடியாத சொற்கள்..!


26-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!




அள்ள முடியாத சொற்கள்..!!!



மூச்சின்றி கிடந்தது என் வீட்டின்
வாசம்.!



கூடத்தில் சிதறிக் கிடந்தன
நான் வீசிய சொற்கள்.


மேலும் பேச விடாமல் நாவைத்
தடுத்தது மனம்.


அவரவர் மனதில் அவரவர் அம்புகள்
தயார் நிலையில்.
 

இனி யார் வீசுவது என்பதில்தான்
அனைவருக்கும் தயக்கம்.
 

இங்கே துவக்கம் ஒரு போரின்
அடையாளம்தான்..
 

துவங்கிய பின்பு 
செல்லும் திசையை
யார் கணிப்பது..?
 

பேச்சு, மூச்சுமில்லாமல் 
கிடப்பதுகூட
ஒருவகையில் பிராப்தம்தான்..
 

எந்த அம்பையும் எதிர்கொள்ளத்
தேவையில்லை..
 

வீட்டின் மெளனத்தைக் கலைத்தன
சிட்டுக் குருவிகளின் கூச்சல்.
 

கிடைத்த நேரத்தில் இரங்கிப் போக
எத்தனித்தேன்..
 

நான் வீசியிருந்த சொற்களே
என்னைத் தடுத்தன.
 

சிதறிக் கிடந்தவற்றை
முடிந்தவரை ஒழுங்காக்கினேன்.
 

ஆனால் அள்ள முற்பட்டுத்தான்
தோற்றுப் போனேன்..
 

மீண்டும், மீண்டும்
தோல்வியடைந்தேன்.
 

இறுதியில்
வேறொரு அம்பைத்தான்
என்னால் வீச முடிந்தது.

ஆதிசேஷனும், பணியாரக் கிழவியும்

21-10-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


அமரர் ஆதிசேஷன்




அரவம் இல்லாச் சூழலில்
அரவம் தீண்டி வைகுந்தம்
போனான் ஆதிசேஷன்..

 

பணியாரக் கிழவி


 

பள்ளி வயதில்
பணியாரமே காலையுணவு.
தெருமொக்கில் கூரை இல்லாத
சிறு கடை கிழவியுடையது..
எப்போதும் எண்ணெய் வாசம்
கிழவியைச் சுற்றி..
 

அவசரத்திற்காகவேனும்
அரைகுறையாக சுடுவது
கிழவியின் வழக்கமில்லை..
கரண்டியால் குத்தியெடுத்து
அதனை டப்பாவிற்குள்
போடுவதே ஒரு தனி கலை..
ஒரு பணியாரம் அஞ்சு காசு..
எப்பவும் காலையில்
ஆறு பணியாரம்
முப்பது காசு..
சுருக்குப் பை தாங்காத அளவுக்கு
சில்லறைகள் குலுங்கும்..
நிமிடத்தொரு முறை
அவிழ்க்கவும், மறுபடியும் இடுப்பில்
கட்டவுமே கிழவிக்கு நேரம்
சரியாய் இருக்கும்.
ஆனாலும் முடிச்சுப் போட
மறப்பதில்லை..
அந்தப் பணியாரமும்
என்னை மறந்ததில்லை..

காலம் வெகுவேகமாக ஓடிப் போக
மறந்தது பணியாரத்தையும்
கிழவியையும்..
ஊருக்கு வந்திருந்த
நேரத்தில் அக்கா
எங்கோ பார்த்தநோக்கில் சொன்னாள்..
பணியாரக் கிழவி இழுத்துக்கிட்டிருக்கு..

கழுத்தில் இருந்த ஒரு
கறுப்புக் கயிறை
முன்னுக்குள் தள்ளியபடி
தொண்டை நரம்பு
உள்ளே, வெளியே என்று
துடித்துக் கொண்டிருக்க..
கிழவியைச் சுற்றிலும்
எப்போது போகும் என்ற
எதிர்பார்ப்புடன் சொந்தங்கள்..

ஒட்டிப் போன
பாலைவனத்து ரேகை பதிந்த
கன்னங்களையும் தாண்டி
கூர்மையான பார்வை..
அருகில் சென்றவனை
தன் கையால் பிடித்தாள் கிழவி..
பிசுபிசுத்தது கை..
விலக்கிய பின்பு
என் கையைப் பார்த்தேன்..
அதே பிசுபிசுப்பு..

திரும்பிப் பார்க்காமல்
வந்தபோது
மனம் முழுவதும்
நிரம்பியிருந்தது
பணியாரம்..!

சென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை..!

19-10-2010            

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரொம்ப நாட்களாகவே இந்தக் கதையை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தபடியேதான் இருந்தேன். ஆனால் நிறைய சோம்பேறித்தனத்திற்கு அடிமைப்பட்டுவிட்டதால் பாதி எழுதி, மீதியை விட்டு வைத்திருந்தேன். இப்போதுதான் நேரம் வந்தது. எழுதுகிறேன்.

2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்தான் எனது 'புனிதப்போர்' என்னும் குறும்படத்தை எடுத்து முடித்திருந்தேன். அதற்கடுத்த மாதம் எடிட்டிங் செய்து முதல் காப்பி எடுத்து நான் மட்டுமே பார்த்து திருப்திபட்டிருந்த நிலையில், சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் இதை தள்ளிவிட்டு அவர்களையும் கொடுமையில் ஆழ்த்தலாமே என்ற நல்லெண்ணம் எனக்குள் பிறந்தது.

அப்படி என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான 'நிழல்' பத்திரிகையின் ஆசிரியர் திருநாவுக்கரசிடம் இதனை கொடுத்து பார்த்து அனுபவிக்கும்படி சொல்லியிருந்தேன். அவரும் பார்த்துவிட்டு “முதல் முயற்சிதானே.. நல்லாத்தான் இருக்கு. எல்லாருக்குமே இதே மாதிரியொரு எண்ணம் இருக்கும். ஏன்னா அவங்கவங்களுக்கு முதல் முதல்லா மனதுக்குள் எழுந்த கதை அவ்வளவு சீக்கிரம்  அவங்களை விட்டு வெளில போகாது. ஆனால் அது காலம் கடந்ததாகவும் இருக்கும். எடுக்கவும் முடியாது. இது போன்ற பிரச்சினைகள் எல்லா படைப்பாளிகளுக்கும் உண்டு. மனதைத் தளர விடாதீங்க. அடுத்தப் படைப்பை உருவாக்குற வழியைப் பாருங்க..” என்று உற்சாகமூட்டினார்.

அப்படியே கூடவே, தமிழ்நாட்டில் எங்கெங்கு ஆவணப் பட, குறும்பட விழாக்கள் நடைபெறுகின்றன என்பதைச் சொல்லி அங்கேயெல்லாம் எனது படத்தை போட்டிக்கு அனுப்பச் சொன்னார். நானும் திருப்பூர், மதுரை, டெல்லி, மும்பை என்றெல்லாம் எனது 'புனிதப்போர்' படத்தினை போட்டிக்கு அனுப்பி வைத்தேன். பரிசை பத்தி கேட்டு என் வயித்தெரிச்சலை கொட்டிக்காதீங்க. அதனால இதோட விட்ருங்க..!

இப்போதுதான் ஒரு நப்பாசை. ஏதோ 'தேசிய விருது' , 'தேசிய விருது'ன்னு சொல்றாங்களே.. அதுக்கு இதை அனுப்பி பார்க்கலாமே என்று ஒரு ஆசை தோன்றியது. லோக்கல் விருதுகள் கிடைக்காமல் போனாலும் போகலாம். ஆனால் எனது 'புனிதப்போரு'க்கு தேசிய விருது கண்டிப்பாக கிடைக்கும் என்ற எனது அசைக்க முடியாத நம்பிக்கையை தினமும் உரம் ஊற்றி வளர்த்தான் என் அப்பன் முருகன்.

தேசிய விருதுக்கு படங்களை அனுப்ப விரும்பினால் அது முதலில் சென்சார் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்ததால் சென்சார் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டேன். சாஸ்திரி பவனில் நான் கால் வைத்தபோது, கூடவே சனீஸ்வர பகவானும் என்னுடன் தொற்றிக் கொண்டது எனக்கு அப்போது தெரியவில்லை.

டிடி எடுத்துத் தரச் சொன்னார்கள். அதைக் கொடுத்தவுடன் அப்ளிகேஷனை கொடுத்தார்கள். டிவிடிக்கள்-2, எடிட்டிங் செய்த இடத்தில் இருந்து சர்டிபிகேட், தயாரிப்பாளரிடம் இருந்து சான்றிதழ் என்று நிபந்தனைகள் பல இருந்தன. இதில் கொடுமையானது முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதித் தர வேண்டும் என்பதுதான்.

ஸ்கிரிப்ட் என்றால் வசனம் மட்டுமல்ல.. கதாபாத்திரங்களின் அசைவுகளையும் சேர்த்து, கேமிரா கோணங்களின் இருப்பு, எந்த வகையான ஷாட்டுகளை வைத்திருக்கிறோம்.. காட்சியில் இருக்கும் மற்றவர்களின் ரியாக்ஷன் என்ன என்பது முதற்கொண்டு அத்தனையும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதுபோல் சென்சார் ஸ்கிரிப்ட் எழுதுவதற்காகவே ஸ்பெஷலான எழுத்தாளர்கள் சென்சார் அலுவலகத்தின் வாசலில் நின்றிருப்பார்கள். இதற்குத் தனியாக புரோக்கர்களும் இருக்கிறார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகம் போலவே.. சென்சார் போர்டு அலுவலகத்திலும் இந்த புரோக்கர்கள் சகல துறைகளிலும் புகுந்து வருவார்கள். நாம் வரவேற்பறையோடு நிற்க வேண்டியதுதான்.

“இவர்களைப் பிடித்தால் உடனே காரியம் முடிந்துவிடும்” என்று என்னிடம் சென்சார் அலுவலக அதிகாரி ஒருவர் நான் அப்ளிகேஷனை வாங்கிக் கொண்டு வெளியில் வரும்போதே சொன்னார். வெளியில் என்னை வரவேற்ற அந்த புரோக்கரிடம் எனது குறும்படம் பற்றிச் சொல்லி “படம் மொத்தமே 12 நிமிடங்கள்தான்.. எவ்வளவு ஆகும்..?” என்று கேட்டேன். வாய் நிறைய பான்பராக்கை குதப்பியபடியே, “12 நிமிஷம்னா கொஞ்சம் குறைச்சுக்கலாம். ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க. போதும்.. நான் சொல்லும்போது வந்தால் போதும். ஸ்கிரீனிங்கப்போகூட நீங்க வர வேண்டாம். சர்டிபிகேட்டை கைல வாங்கி வைச்சுக்கிட்டுத்தான் நான் உங்களைக் கூப்பிடுவேன்” என்று உறுதிமொழியளித்தார்.

ஆனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கே இரண்டாயிரம் ரூபாய்தான் சென்சார் ஸ்கிரிப்ட்டுக்கு கொடுக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியும் என்பதால் “சரி.. யோசிக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அன்றைய என்னுடைய வாழ்க்கை நிலைமையே பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தது. எதுக்கு வீணா 2000 ரூபாயை வேஸ்ட் செய்யணும் என்று நினைத்து நானே ஸ்கிரிப்ட்டை எழுதிவிட்டேன்.

டி.வி.டி. மற்றும் அனைத்து ஆவணங்களுடனும் நேரில் சென்று எனது விண்ணப்பத்தினை சமர்ப்பித்தேன். வாங்கிக் கொண்ட ஒரு பெண்மணி.. “என்ன நீங்களே ரெடி பண்ணிட்டீங்களாக்கும்..?” என்று அலுத்தபடியே கேட்டார். “ஆமாம்.. ஏன் மேடம்..?” என்றேன். “அதான் வாசல்ல எழுதறவங்க இருந்தாங்களே..? அவங்ககிட்ட சொல்லியிருக்கலாமே?” என்றார். “எனக்கே எழுதத் தெரியுங்க.. அதான் நானே எழுதிட்டேன்” என்றேன். பட்டென்று சுட்டெரித்துவிடுவதைப் போல் முறைத்தார் அவர். “என்ன மேடம் அப்படி பார்க்குறீங்க..?” என்றேன் கூலாக.. “உங்களுக்குத் தெரியாதுங்க.. உங்க ஸ்கிரிப்ட்டுல ஏதாச்சும் ஒரு சின்ன தப்புன்னாலும் 'இங்க சர்டிபிகேட் தர முடியாது'ன்னு சொல்லிருவாங்க.. அப்புறம் நீங்க கட்டின பணம்கூட வேஸ்ட்டுதான்.. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்” என்று சொல்லிவிட்டு ஏதோ வேண்டா வெறுப்பாக வாங்கி உள்ளே வைத்துக் கொண்டார்.

நாம பார்க்காத கவர்ன்மெண்ட் ஆபீஸா..? என்ற நினைப்பில் வீடு வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து சென்சார் ஆபீஸில் இருந்து என்னை போனில் அழைத்தார்கள். “இன்னிக்கு சாயந்தரம் 5 மணிக்கு ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர்ல இருக்குற எங்க பிராஞ்ச் ஆபீஸ்ல உங்க படத்தை பார்க்கப் போறாங்க. நேரா அங்க 5 மணிக்கு போயிருங்க..” என்றார்கள்.

நானும் மிகச் சரியாக ஐந்து மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தேன். திரைப்படங்களை சென்சார் செய்யும்போது அதிகாரிகள் சொல்லும் நாளில், அவர்கள் சொல்லும் பிரிவியூ தியேட்டர்களில் தயாரிப்பாளர்கள் சகல வசதிகளுடன் படத்தைத் திரையிட்டுக் காட்டுவார்கள்.

ஆனால் ஆவணப்படங்கள், குறும்படங்களை மட்டும் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரின் உள்புறம் இருந்த ஒரு அலுவலகத்தில்தான் பார்த்து வந்தார்கள். இப்போதும் இது தொடர்கிறதா என்று தெரியவில்லை. அங்கு சென்றவுடன் ரிசப்ஷன் பெண்ணிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கேட்டபோது உள் அறைக்குள் போகச் சொன்னார். அறையில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தார்கள். என் பெயர், எனது தொழில், என்னைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டு “சரி.. நீங்க கிளம்புங்க. நாங்க படம் பார்த்துட்டு நாளைக்குச் சொல்லியனுப்புறோம்..” என்றனர். கிளம்பி வந்துவிட்டேன்.

மறுநாள் காலை 12 மணியிருக்கும். சென்சார் அலுவலகத்தில் இருந்து போன் செய்த ஒரு அம்மணி, “ஸார் உங்க ‘புனிதப்போர்' படத்துக்கு ‘சர்டிபிகேட் தர மாட்டேன்'னு சொல்லிட்டாங்க. நீங்க நேர்ல வந்து பேசுங்க..” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்..

“ஏன்.. ஏன்..?” என்று நான் கேட்டதற்கு, “எனக்கே தெரியாது ஸார்.. அதை நீங்க பெரிய ஆபீஸர்கிட்டதான் கேக்கணும்.. நேர்ல வாங்க..” என்றார் மறுபடியும். விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன். மறுபடியும் அதே அம்மணி.

இம்முறை என்னைப் பார்த்தவுடன் தலையில் அடித்துக் கொண்டவர், “நான்தான் முன்னாடியே சொன்னேன்லங்க.. ‘புரோக்கரை வைச்சு ரெடி பண்ணுங்க'ன்னு.. பாருங்க இப்போ ‘உங்களுக்குக் கொடுக்கவே கூடாது'ன்னு எழுதி வைச்சிருக்காங்க..” என்று சொல்லி சர்டிபிகேட் மறுக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்கும் அந்த நோட்டைக் காட்டினார்.

அதில் ஆங்கிலத்தில், “வசனங்கள் முழுவதும் பெண்களை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதப்பட்டிருக்கிறது. எந்தவிதத்திலும் சர்டிபிகேட் கொடுக்கத் தகுதியில்லாதது இந்தப் படம்..” என்று எழுதப்பட்டிருந்தது. படம் பார்த்தது மூன்று பேர். இரண்டு ஆண்கள். ஒரு பெண். அதில் இரண்டு ஆண்கள் எதுவும் சொல்லாமல் போக.. இந்தப் பெண்மணி ஏதோ அதிசயத்தைக் கண்டுபிடித்ததுபோல் இதை எழுதி வைத்திருக்கிறார். அவர் பெயர் நிகிலா அசோக்குமார்.

“இப்ப நான் என்னங்க செய்யணும்?” என்றேன் அந்தம்மாவிடம். “பாபு ஸாரை பார்க்கணும்.. வெயிட் பண்ணுங்க. அவர் இன்னொரு படம் பார்த்துக்கிட்டிருக்காரு..” என்று சொல்லி அமர வைத்தார்கள்.

வேறொரு லேடி வந்தாங்க. “பாருங்க ஸார்.. அந்தம்மா ரொம்ப ஸ்டிரிக்ட். பிடிக்கலைன்னா அவங்க உறுதியா இருப்பாங்க. நீங்க அந்தம்மாகிட்ட போன்ல பேசிப் பாருங்க.. ‘ஏதாவது டயலாக்கை கட் செய்யணும்னா சொல்லுங்கம்மா கட் செஞ்சிடறேன்'னு சொல்லுங்க. அவங்க சொல்றதையெல்லாம் கட் செஞ்சிருங்க.. உடனே சர்டிபிகேட் கைக்கு வந்திரும். வீணா பிரச்சினையை பெரிசாக்காதீங்க..” என்று அட்வைஸ் மழை பொழிந்தார்.

“எடுத்ததே 12 நிமிஷ படம். அதுல ஒரு பொம்பளைகூட கிடையாது. எல்லாரும் ஆம்பளைங்கதான். அதுலேயும் அவங்க முகத்தைக்கூட காட்டாம கட் பண்ணியாச்சு. மிச்சம் இருக்கிறது வசனம்தான். அதுவும் இருக்கக் கூடாதுன்னு அப்புறம் அதுல என்னதாங்க இருக்கும்..?” என்றேன். “அந்த வசனத்துலதான பிரச்சினை.. பேசாம அந்தம்மா சொன்ன மாதிரியே செய்யுங்க.. இல்லைன்னா உங்களோட 1500 ரூபாய் வேஸ்ட்டாயிரும். அதுக்காகச் சொல்றேன்.. உங்களையும் பார்த்தா பாவமா இருக்கு..” என்று என்னை ஏதோ பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு கற்பனை செய்து பார்த்துவிட்டுச் சொன்னார் அந்தப் பெண்.

நானும் ஆஹா.. அரசு அலுவலகத்தில் நம்மளையும் மனுஷனா மதிக்கிறதுக்கு ஒரு ஜீவன் இருக்கேன்னு சந்தோஷத்துல இருந்தேன். ரெண்டே நிமிஷத்துல இடி விழுந்துச்சு. என்னை உள்ளே அழைத்தார்கள். அங்கே நான்கைந்து ஊழியர்கள் நின்றிருந்தார்கள். “உக்காருங்க ஸார்..” என்றார்கள். உட்கார்ந்தேன். “இங்க பாருங்க ஸார்.. உங்களுக்கா எவ்ளோ கஷ்டப்பட்டாவது, அந்தம்மாகிட்ட பேசி நாங்க சர்டிபிகேட் வாங்கித் தர்றோம்.. கவலையை விடுங்க..” என்றார் அட்வைஸ் செய்த அதே அம்மணி. பிட்டு படம் பார்க்கத் தியேட்டருக்கு போய், ஷகிலாவே நேரில் வந்து பக்கத்தில் அமர்ந்தது போல் சிலிர்ப்பாக இருந்தது எனக்கு..

பட்டென்று என் முன்னால் ஒரு ரசீது புத்தகத்தை வைத்த அந்தப் பெண், “இது எங்க குவார்ட்டர்ஸ் பக்கத்துல இருக்குற கோவில்.. அதை கொஞ்சம் பெரிசா கட்டலாம்ன்னு இருக்கோம். நீங்க உங்களால முடிஞ்சதை கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும். எவ்ளோ ஸார் எழுத? 500, ஆயிரம்..” என்று அவராகவே முடிவெடுத்ததைப் போல பேச.. பொசுக்கென்று போனது எனக்கு..

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, “இல்ல.. இப்ப பணம் எதுவும் கொண்டு வரலையே..?” என்று இழுத்தேன். “சரி.. பரவாயில்லை ஸார்.. நாளைக்கு வந்து பணத்தைக் கொடுத்திட்டு சர்டிபிகேட்டை  வாங்கிட்டு போங்க..” என்றார். கோடு எங்கே இழுத்து எங்கே போடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். “சரி.. நாளைக்கு பார்ப்போம்ங்க..” என்று கொஞ்சம் கடுப்போடு சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்து அமர்ந்தேன்.

அவர்களுடைய ஏமாற்றமோ என்னமோ.. கிட்டத்தட்ட 2 மணி நேரமாகியும் அழைக்கப்படாமலேயே இருந்தேன். எனக்குப் பின்னால் வந்தமர்ந்த தயாரிப்பாளர் வி.சேகர், தேனப்பன் ஆகியோர் தங்களது வேலையை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.

சாவகாசமாக சென்சார் அதிகாரி பாபுராமசாமியின் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அவரும் என்னை மரியாதையுடன் அமர வைத்து என்னைப் பற்றிய முழுத் தகவலையும் தெரிந்து கொண்டவர், “உங்க படத்தை இப்பத்தான் பார்த்தேன். எனக்குப் புரியுது. (அருகில் இருந்த அலுவலர்களைக் காட்டி) இவங்க எல்லாருக்கும் புரிஞ்சது. அந்தம்மாவுக்கு மட்டும் புரியலை. விடுங்க. நான் அவங்களோட போன்ல பேசி புரிய வைச்சிட்டேன். சர்டிபிகேட் கொடுக்கச் சொல்லிட்டேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. குட் வொர்க்.. நல்லாத்தான் இருக்கு. வித்தியாசமான முயற்சி.. இது மாதிரி நிறைய பண்ணுங்க.. எட்டு பேரு நல்லாயில்லைம்பாங்க.. நாலு பேரு நல்லாயிருக்கும்பாங்க.. உங்க மனசுக்கு படம் பிடிச்சிருக்கா.. அது போதும். வெளில கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. இப்பவே சர்டிபிகேட் தரச் சொல்றேன்..” என்று சொன்னவர் இண்டர்காமில் யாரிடமோ எனக்கு சர்டிபிகேட் தரச் சொல்லி உத்தரவிட்டார்.

நானும் நிம்மதிப் பெருமூச்சுடன் வந்து அமர்ந்தேன். மறுபடியும் அதே ரசீது புக் அம்மணிகள் வேகமாக என்னிடத்தில் வந்து, “என்ன ஸார்.. உங்களுக்காக ஸார்கிட்ட எவ்ளோ ஸ்டிராங்கா பேசியிருக்கோம்.. நீங்க கவனிக்க மாட்டேன்றீங்க..?” என்றார்கள். நானும் பணிவாக, “நிஜமா என்னிடம் இப்ப பணம் எதுவும் இல்லீங்க... அதோட இந்த மாதிரி கோவிலுக்கு நன்கொடை கொடுக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம்..” என்று முகத்திலடித்தாற்போல் சொன்னேன். ஏதோ நாத்தனாரிடம் முறைத்துக் கொண்டு போவதைப் போல் பதிலே சொல்லாமல் முகத்தை மட்டும் வெட்டிக் காட்டிவிட்டுப் போனார்கள் அந்தப் பெண்மணிகள்.

'யு' சர்டிபிகேட்டுடன் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதியன்று பிற்பகலில் எனது முதல் கன்னி முயற்சிக்கான அரசு அங்கீகாரத்தை நான் வாங்கிய கதை இதுதான்.

எனது அந்தக் குறும்படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே 'பக்கம், பக்கமான வசனங்கள்' என்றார்களே தவிர.. 'நீக்கப்பட வேண்டிய வசனங்கள்' என்று சொல்லவில்லை. இது இயல்பாக தினம்தோறும் பெண்கள் மீது ஊடகங்களின் மூலம் சுமத்தப்படும் வார்த்தைகள்தான். இத்தனைக்கும், இன்றைக்கும் டிவி சீரியல்களில் வரும் வசனங்களில் கால்வாசிகூட நான் எழுதியதில் இல்லை.  ஆனாலும் இதை குரூரம் என்கிறார் அந்த அம்மையார்.

இதன் பின்பு நான் எந்தத் திரைப்படத்திற்குச் சென்றாலும் சென்சார் சர்டிபிகேட்டில் இந்த அம்மையார் பெயர் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பேன். இருந்தது நிறைய படங்களில்..

அத்தனைப் படங்களிலும் ஆபாச வசனங்களும், குலுக்கல் காட்சிகளும், அங்கங்களை குளோஸப்பில் அசைக்கும் காட்சிகளை வைத்திருந்து அந்தப் படத்திற்கு 'யு' சர்டிபிகேட்டும் கொடுத்து கையொப்பமிட்டிருக்கும் கொடுமையையும் கண்டு கொண்டே வருகிறேன்.

என்னால் பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்..? 

இவ்வளவு நேரம் இதனை பொறுமையாகப் படித்து முடித்திருக்கும் தோழர்களுக்கு எனது 'புனிதப்போர்' குறும்படத்தைக் காணும் வாய்ப்பை கொடுக்கவில்லையெனில் நான் நன்றி மறந்தவனாகி விடுவேன்..

இந்த மூன்றாண்டுகளில் நிறைய புதிய பதிவர்கள் வலையுலகில் நுழைந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இதைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதைப் போல அவர்களும் இதனைப் பார்த்து பரவசமடைய வேண்டும் என்று எண்ணுகிறேன்.

புதிய பதிவர்களே.. என் இனிய தோழர்களே.. என் மீது பொறாமைத் தீயில் வெந்து உருகும் ஒரு சில பழைய பதிவர்கள், “பார்க்காதீங்க.. பேய் அடிச்சிரும்.. பிசாசு கடிச்சிரும்.. பூதம் தூக்கிட்டுப் போயிரும்..” என்றெல்லாம் உங்களை பயமுறுத்தக் கூடும். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், காதில் வாங்கிக் கொள்ளாமல் தைரியமாக இங்கே போய் எனது அந்த தேசிய விருதுக்குரிய, ஆஸ்கார் விருதை மயிரிழையில் தவறவிட்ட குறும்படத்தைப் பார்த்து பரவசமடையுங்கள்...

உங்களுடைய விலை மதிப்பில்லாத விமர்சனங்களை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

அன்புடன்

உண்மைத்தமிழன்

கவிதையும், கத்திரிக்காயும், பின்னே காதலும்..!

18-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தோழி கேட்டார்
உன் கவிதையா..?
இருக்கவே இருக்காது என்றார்
திடமாக..!

எனக்கேன் கவிதை 
வசப்படவில்லை..!
காதலித்தால் மட்டும்தான் 
கவிதை வருமா..?

நான்தான் காதலிக்கப்பட்டவனில்லையே..!
பின் எப்படி 
கவிதையும் கத்திரிக்காயும் 
பின்னே காதலும்
வரும்..!?

தேடுகிறேன் தேடுகிறேன்
காதலையும், காதலியையும்..!

காதல் கிடைத்தால்
காதலி கிடைப்பதில்லை..
காதலி கிடைத்தால் 
காதல் கிடைப்பதில்லை..

பாசத்திற்கு ஏங்கினேன்..
அது தாயோடு போயிற்று..
அன்புக்கு ஏங்கினேன்
அது தந்தையோடு ஒழிந்தது..
பிரியத்திற்கு ஏங்கினேன்
உடன்பிறந்தாரோடு தொலைந்தது..
நேசத்துக்கு ஏங்கினேன்
நண்பர்களோடு முடிந்தது..

இப்போதுதான்
முதல்முறையாக
காதலுக்காக ஏங்குகிறேன்...

சில காதல்கள் 
பறந்து செல்ல
துணை நின்றேன்.
ஆனால் என் காதலைத்
துவக்கிவிடவே 
ஆள் இல்லை..!

பள்ளிக் காலத்தில்
வந்த காதல்
வருடத்தோடு முடிந்தது..!

இப்போது
திரும்பிப் பார்க்கிறேன்..!
அவளுக்கென்று
ஒரு மனம்..!

எப்போதாவது
தலையில்
ஒற்றைப் புஷ்பத்தோடு
யாரேனும் 
கடந்து போனால்
சட்டென்று 
நினைவுக்கு வருகிறது
அவள் நினைவு..!

காதலுக்கு 
தகுதியுண்டா?
அனுபவித்தவர்களிடம் 
கேட்டேன்..

காதலுக்கு 
முதல் தகுதி 
நீர் 
கவிதை ஆசிரியர் ஆவதுதான்
என்றனர்..

கவிதை எது 
என்றேன்..
காதலை
மறந்துவிடு 
என்றனர் பட்டென்று..

கவிதை இல்லாமல்
காதல் இல்லையா..?
காதல் இல்லாமல் 
கவிதை இல்லையா..?

காதல் எதற்கு?
கவிதை எதற்கு..?
நீண்டன என் 
கேள்விகள்..

காதல் வாழ்க்கைக்கு..
கவிதை காதலுக்கு 
என்றனர்..

கவிதையற்ற
காதலைத் தேடுகிறேன்
என்றேன்..

தேடு.. தேடிக் கொண்டேயிரு
என்றனர்.

அவர்களது சொற்கள்
வாழ்த்தா அல்லது சாபமா
இன்றுவரையில்
தெரியவில்லை..

ஆனாலும் 
இப்போதுவரையிலும்
தேடுகிறேன்..
கவிதையற்ற
என் காதலை..!

டிஸ்கி : சத்தியமா நான்தாம்பா இதை எழுதினேன்.. 100.6 டிகிரி காய்ச்சலாம்.. படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. உக்காந்தா தூங்கணும் போல இருக்கு.. ஏதாவது எழுதலாமேன்னு கீபோர்ட்ல கை வைச்சா இப்படித்தான் வருது.. என்ன செய்வேன்? என்ன செய்வேன்..?

ஒரு நட்பு முறிந்த சோகக் கதையைக் கேளுங்க..!

21-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ரொம்ப நாளாக தொடர்பு கொள்ளாமல் இருந்த தம்பி சக்தி(புனை பெயர்) இன்று காலை திடீரென்று தொடர்பு கொண்டு தடித்த வார்த்தைகளால் கதறினான்.

“அண்ணே.. நம்ம கோபி(புனை பெயர்) இப்படி செய்வான்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலே.. மானம், மரியாதை போச்சுண்ணே.. வீட்ல வொய்ப் திட்டித் தீர்க்குறா.. போன் மேல போன் வருது.. மாமனார் ஊர்ல இருந்து கிளம்பிட்டாராம்.. மாமியாரே நொச்சுப் பிடிச்சாப்புல பேசுறாங்க.. இவனுக்கு ஏண்ணே இந்த வேலை..? ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிட்டு வர வேண்டியதுதாண்ணே..” என்றான்.

இவனது போனை எதிர்பார்த்து நான் காத்திருந்ததால் எனக்கு ஒன்றும் பெரிய அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை. இவனும் இவனது சார்பு கதையை முழுதாகச் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே இவனும் அவனது கதையைச் சொன்னான்.

அதற்கு முன்பாக இருவரின் கடந்த கால வாழ்க்கைக் கதையை சுருக்கமாகப் பார்ப்போம். கோபியும், சக்தியும் நீண்ட கால குடும்பத்து நண்பர்கள். இருவர் வீடும் அடுத்தடுத்தத் தெருக்களில்.. ஒரே பள்ளியில் ஒன்றாகவே படித்து வளர்ந்தவர்கள். பள்ளி நாட்களில் சக்தியின் வீட்டில் சமைக்கவில்லையெனில் அவன் நேராக கோபியின் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு மதியம் சோத்தையும் அங்கேயே கட்டி பார்சல் செய்து எடுத்துச் செல்வான்.

அதேபோலத்தான் கோபியும். தன் வீட்டுக்கு காய்கறி வாங்கப் போகும்போது அவர்கள் அழைக்கிறார்களோ இல்லையோ சக்தியின் வீட்டுக்கும் நேரில் சென்று அவர்களிடமும் லிஸ்ட் வாங்கிக் கொண்டு அவர்களுக்கும் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுப்பான். இருவர் குடும்பமும் இந்த அளவுக்கு அன்னியோண்யம்..

காலம்தான் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி படைத்ததே.. கோபி படிப்பில் பின் தங்கி தனது அப்பாவின் மரக்கடையை பார்த்துக் கொள்ளச் சென்றான். சக்தி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து முடித்து சென்னைக்குச் சென்றுவிட்டான்.

அதன் பின்னர் சக்தியின் குடும்பத்தில் ஒருவனானான் கோபி. அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அவன்தான் செய்வான். சக்தியின் அப்பாவும், அம்மாவும் டூவீலரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருந்தபோது தனது மரக்கடையைக்கூட விட்டுவிட்டு பக்கத்திலேயே இருந்து மகனைப் போல பார்த்துக் கொண்டான் கோபி.

சக்தி ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் இருந்து வந்து பார்த்துவிட்டு செல்வான். சக்திக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை என்பதால் வயதான அவனது தாய், தந்தையர்க்கு செய்ய வேண்டிய அனைத்துவித உதவிகளுக்கும் அப்போதிலிருந்து கோபிதான் கை கொடுத்து வந்தான்.

சக்தி வேளச்சேரியில் சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்க முனைந்தான். பிளாட்டை விற்க வந்தவர் முன்பணமாக எட்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் பிற்பாடு மீதித் தொகையை தவணையில் வாங்கிக் கொள்ளத் தயார் என்றார். உடனேயே விழுந்தடித்து ஊருக்கு ஓடி வந்த சக்தி கோபியிடமும், அவனது தந்தையிடமும் பேசி எட்டு லட்சம் ரூபாயை பைசா வட்டியில்லாமல் வாங்கிச் சென்று வீட்டை பேசி முடித்து குடியேறினான்.

வீடு கிடைத்தவுடன் அவனாகவே பெண் தேடினான் சக்தி. அவனது அலுவலகத்திலேயே வேலை பார்த்த ஒரு பெண்ணை காதலித்தான். திருமணம் செய்ய அவனது அப்பா, அம்மாவிடம் கேட்க அனுமதி மறுத்தார்கள். முடியவே முடியாது என்று சாதித்தார்கள்.

இப்போதும் கோபிதான் கை கொடுத்து அவனுக்கு ஆதரவுக் கரம் கொடுத்து அவனை ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொள்ளச் சொல்லி ஆலோசனை சொன்னான். சக்தியின் பெற்றோரை தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டான். சக்தியும் தனது நண்பர்கள் உதவியோடு சென்னையில் தனது காதலியை மணந்து இல்லற வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டான். இது நடந்து மூன்று மாதங்களாகிவிட்டன.

சக்தியின் பெற்றோரோ அவன் தங்களைப் பார்க்க வரவேகூடாது என்று சொல்லிவிட்டார்கள். அங்கே அவர்களுக்கு கோபியே போதும் என்று அவர்கள் சொல்லிவிட இப்போது சக்திக்கு கோபியின் மீது ஒரு இனம் புரியாத கோபம் முளைத்துவிட்டது. ஆனாலும் இருவரும் அவ்வப்போது போனில் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

சமீபத்தில்.. அதாவது நேற்றைய தினம் காலை கோபி சென்னைக்கு விஜயம் செய்திருக்கிறான். தொழில் விஷயமாக புதுப்பேட்டை பகுதிக்கு வந்தவன், அங்கேயிருந்து கால்டாக்சியில் வேளச்சேரியில் சக்தியின் வீட்டுக்கு வந்திருக்கிறான் கோபி.

அவன் வந்த நேரம் பாருங்க.. சக்தியின் துணைவி வீட்டின் முன் கதவை லேசாகத் திறந்துவைத்துவிட்டு துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக வீட்டின் பின்புறமாகச் சென்றிருக்கிறார். அந்த வீடுதான் என்பதை சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்தின் மூலம் தெரிந்து கொண்ட கோபி விறுவிறுவென்று வீட்டுக்குள் நுழைந்தவன் பெட்டியை வைத்துவிட்டு அவசரமாக பாத்ரூம் போக வேண்டியிருந்த கடமை இருந்ததால் அதற்கு சென்றிருக்கிறான்.

இவன் உள்ளே போன நேரம் சக்தியின் துணைவி வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். பாத்ரூமில் தண்ணி கொட்டுவதை பார்த்து திகைத்திருக்கிறார். லேசாக பயந்து போய் வெளியில் வந்து நின்று பார்க்க நம்ம கோபியண்ணன்.. அலட்சியமாக அறைகளை நோட்டம் விட்டபடியே சமையல்கட்டுக்குள்ளும் நுழைந்திருக்கிறார்.

என்ன.. ஏதுவென்று யோசிக்க முடியாத சக்தியின் துணைவி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்ல.. அவர்கள் ஐடியாபடி கதவை இழுத்து வெளிப்புறமாகச் சாத்தியிருக்கிறார்கள். திருடன் ஒருவன் வந்திருக்கிறான் என்று திடமாக நம்பி போலீஸுக்கும் தகவல் கொடுத்துவிட்டார்கள்.

அதற்குள்ளாக வீட்டின் உள்ளேயிருந்த சிட்அவுட் பக்கம் போய் நின்று கொண்டு கோபி ரிலாக்ஸாக சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க.. ஒட்டு மொத்த பிளாட்டும் அந்த பக்கமாக வந்து அவனை வேடிக்கை பார்த்திருக்கிறது.

அவனுக்குள் ஏதோ ஒன்று சந்தேகப்பட வேகமாக வந்து கதவைத் திறக்க முயன்றிருக்கிறான். முடியவில்லை. ஏதோ சந்தேகப்பட்டவன் சிட்அவுட் பக்கம் வந்து நிற்க.. அவன் தப்பிக்க முயல்வதாக நினைத்து கீழே நின்றிருந்த அப்பாவி பொதுஜனங்கள் கைக்கு கிடைத்ததை எடுத்துக் கொண்டு தயாராக நிற்க.. பயலுக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை.

மக்களின் நண்பனான காவல்துறை மின்னல் வேகத்தில் வந்திருக்கிறது. காவல்துறை வந்து கதவைத் திறந்ததும் உள்ளே நுழைந்த இரண்டு காவலர்களைப் பார்த்து கோபி திகைத்துப் போய் நின்றிருக்கிறான். தான் சக்தியை பார்க்க வந்ததாகவும், தான் அவனது நண்பன் என்றும் ஊரிலிருந்து வந்திருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறான்.

காவல்துறை நம்பாமல் அவனது செல்போனில் இருந்து சக்திக்கு போன் செய்து சொல்லியிருக்கிறது. இடையில் சக்தியின் மனைவியிடம் போலீஸ் கோபியிடம் பேசும்படி சொல்ல “அவர் யாருண்ணே தெரியாது. நான் எப்படி பேசுறது.. என் ஹஸ்பெண்ட் வரட்டும்.. அவரே பேசுவாரு..” என்று சொல்லிவிட கோபிக்கு அவமானத்துடன் கொஞ்சம் வெட்கமும் சேர்ந்துவிட்டது.

ஒட்டு மொத்த பிளாட்டும் உள்ளே வந்து “கதவு திறந்திருந்தா உள்ள வந்தர்றதா..? யார், என்னன்னு கேட்க வேணாமா? என்னய்யா நினைச்சிட்டிருக்க..? என்ன படிச்சிருக்க..” என்றெல்லாம் தாறுமாறான கேள்விகளோடு பயலை எகிறிவிட்டன.

சக்தி அரக்கப் பரக்க ஆட்டோவில் வீடு திரும்பியவன் கோபியை தனது நண்பன் என்று போலீஸிடம் அடையாளம் காட்ட.. போலீஸ் கோபியை லேசாக முறைத்துவிட்டு கடுமையாகத் திட்டித் தீர்த்துவிட்டுப் போனார்கள்.

சக்தியின் மனைவி ஒரு வார்த்தைகூட பேசாமல், ஸாரி என்றுகூட சொல்லாமல் பெட்ரூமிற்கு சென்று கதவை அடைத்துக் கொள்ள.. கோபிக்கு தன்மானம் பொங்கிவிட்டது. சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு அப்படியே தரையிரங்கி கோயம்பேட்டுக்கு ஆட்டோ பிடித்துவிட்டான்.

சக்திக்கு தனது மனைவியை சமாதானப்படுத்துவதா.. அல்லது கோபியை கூல் செய்வதா என்ற கவலையில் மனைவி மீது பாசம் அதிகமாகி வீட்டுக்குள்ளேயே இருந்துவிட.. இதுவும் கோபிக்கு கொஞ்சூண்டு வெறியை ஏற்படுத்திவிட்டது.

“முப்பது வருஷ நட்பு முப்பதே நிமிஷத்துல குழி தோண்டி புதைச்சுட்டாண்டா..” என்று ஒரு புல் ஓல்டு மாங்க் அடித்துவிட்டு என் குறை காதும் கிழிவதைப் போல் அழுதான் கோபி.

அவன் பேசிய பின்புதான் நம்ம சக்தி தம்பியும் என்னுடன் பேசி “கோபியை கோச்சுக்க வேண்டாம்னு சொல்லுங்கண்ணே..” என்கிறான்.

“ஏண்டா வெங்காயம்.. ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகிருக்கீங்களே.. உன் ஆரூயிர் நண்பன்னு அவனைப் பத்தி நல்லவிதமா உன் வொய்ப்கிட்ட சொல்லி வைச்சிருக்கலாம்ல.. லவ் பண்ணும்போதோ, கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாடியோ வொய்ப்கிட்ட போன்ல பேச வைச்சிருக்கலாம்ல..”ன்னு கேட்டேன்.

“நம்ம கோபிய பத்திதான் உனக்கே தெரியுமேண்ணே.. ஏதாவது உளறினாலும் உளறிருவான்னு நினைச்சுத்தான் தவிர்த்துட்டண்ணே..” என்று அராஜகத்தனமாகவே சொல்கிறான் சக்தி.

கோபியோ, “நான் செஞ்சது தப்புதாண்ணே.. தப்பாவே இருக்கட்டும். நான் கீழ இறங்கி வந்துட்டனே.. ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை பின்னாடி வந்து பேசியிருக்கலாம்ல.. அஞ்சு நிமிஷம் நின்னு பார்த்தேண்ணே.. வரலைண்ணே அந்த நாயி.. அதான் நம்ம பொழைப்பை பார்க்கலாம்னு திரும்பி வந்துட்டேன். போதும்ணே அவன் சகவாசம். உணர்த்திட்டாண்ணா படிச்சவனோட பிரெண்ட்ஷிப்புன்னா என்னன்னு..? நான் படிக்காத முட்டாளாவே இருந்துட்டுப் போறேன்..” - நடு மண்டையில் அடிப்பதைப்போல் ஒரு போடு போடுகிறான் கோபி.

இப்போது சக்திக்கு இது வேறு விதமாகத் திசை மாறி எட்டு லட்சம் ரூபாய் மேட்டரில் தனக்கு ஆப்பு வருமா என்பதுதான் பெரும் கவலையாக இருக்கிறது..

எனக்கோ சக்தியின் பெற்றோருக்கு ஏதாவது சிக்கல்கள் கோபியால் வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.

இந்த லட்சணத்தில் இரண்டு பேரும் மாறி, மாறி “நீ பேசு.. நீ பேசுண்ணே..”ன்னு சொல்லி என் உயிரை எடுப்பதில் பொங்கி வந்த கோபத்தில் இதையும் டைப்பு செய்து தொலைத்துவிட்டேன். நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே..

அட்வைஸாவது மண்ணாவது.. !

இரண்டு பேர்கிட்டேயும் “ஒரு தெலுங்கு படத்தோட டிஸ்கஷனுக்கு ஹைதராபாத் போறேன்.. ஒரு வாரத்துல வந்திருவேன்.. வந்தவுடனே நேர்ல வந்து பேசுறேன்.. அதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம இருங்க. வந்து பேசிக்கலாம்...”னு சொல்லி வைத்திருக்கிறேன்.

உண்மையா ரெண்டு பேர்கிட்டேயுமே நான் எதையும் பேசப் போறதில்லை. அப்படியே விஷயத்தை ஊறப் போட்டு, ஆறப் போட்டுட்டு லூஸ்ல விட்டுற வேண்டியதுதான்..

ஏன்னா இந்தக் காலத்துப் பயலுகளை நம்பவே முடியாது.. எந்த நேரத்துல எப்படி கோஷ்டி சேருவாங்க.. எப்ப அத்து விடுவாங்கன்னே தெரியலை.. நமக்கெதுக்கு வம்பு..?

நாளைக்கே ஒரு 'குவார்ட்டராலயோ', 'ஆஃபா'லயோ, 'புல்'லாலயோ பிரச்சினை முடிஞ்சாலும் முடிஞ்சிரும்..!

இடைல போய் நாம அக்கறையாக அவங்களுக்காக பேசி.. கடைசியா அவங்களுக்கே சைடிஷ்ஷா நாம ஆயிறக்கூடாது பாருங்க..


ஏற்கெனவே அனுபவம் பலதும் இருக்கிறதாலதான் இந்த ஐடியா..!!!

என்ன நான் சொல்றது..?

வலையுலக வாத்தியார் சுப்பையா அவர்களின் கதைகள் - விமர்சனம்..!

06-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கல்வி எதற்காக..? உலகம் அறிந்து கொள்வதற்காக.. உலகமெனில் அசையும், அசையாப் பொருட்கள், அவற்றின் மூலதாரம், மனிதர்கள், இவர்தம் படைப்புகள், அந்தப் படைப்புகளின் வரலாறு, உலகத்தின் இயல்பு, நடப்பு, இவை அத்தனையையும் சுருக்கி ஒரு கடுகளவைவிட மிகக் குறைந்த அளவே நம்மால் கற்க முடிகிறது.

இதை வைத்து வாழ்ந்துவிட முடியுமா..? முடியாது.. கல்வி தரும் அங்கீகாரத்தில் கிடைக்கும் வாழ்க்கையை அனுபவிக்கும்போது கிடைக்கின்ற பாடங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நமக்குக் கிடைத்த கல்வி நமக்கு உபயோகமாக இருக்கிறதா அல்லது வீணாகிப் போனதா என்பதே தெரிய வரும்.

“படித்தவன் பாழும் செய்தால் ஐயோவென்று போவான்” என்பார்கள். இதையே படிக்காதவன் செய்துவிட்டால் இந்த “ஐயோ..”வில் கொஞ்சம் இரக்கக் குணமும் சேர்ந்துவரும்.. “பாவம்.. படிக்காதவன்..” என்று..

ஆகக்கூடி வாழ்க்கையில் எது நல்லது.. எது கெட்டது என்று நாம் தெரிந்து கொள்ள கல்வி பயன்படுகிறது என்றாலும், அதனை பரிசோதித்து பார்க்கின்றபோது சில படித்தவர்கள் படிக்காதவர்கள் போலவும், பல படிக்காதவர்கள் படித்தவர்கள் போலவும் மாறிவிடுவது நம் வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் சில நிகழ்வுகள்.

அப்படிப்பட்ட சில நிகழ்ச்சிகளைத்தான் நமது வலையுலக வாத்தியார் திரு.சுப்பையா அவர்கள் தனது செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

ஒன்றல்ல இரண்டல்ல.. இதுவரையில் 52 கதைகளை எழுதியிருக்கும் நமது வாத்தியார் அவற்றில் தேர்ந்தெடுத்த 20 கதைகளை மட்டும் இந்த முதல் தொகுப்பில் வெளியிட்டுள்ளார். அத்தனையும் கற்கண்டுகள். சந்தேகமில்லை.

புத்தகத்தில் பக்கத்திற்கு பக்கம் செட்டி நாட்டு அறுசுவை மணக்கிறது. செட்டி நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள், எழுத்துக்கள், நடை, உடை பாவனைகள் என்று அத்தனையையும் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

ஒருவர் மீதான இனம் காணாத வெறுப்பும், பார்த்த மாத்திரத்திலேயே எழும் கோபம் சுடுகாடுவரையிலும் நீடிக்கும் தன்மையும் இன்றைக்கும் நாட்டு மக்களிடையே புழங்கி வரும் இன்றைய இயந்திரச் சூழலில் இரண்டுக்கும் முடிச்சுப் போடுவது போல அன்பான பேச்சிலும், நடத்தையிலுமே ஒருவர் மனதை ஒருவரால் வெல்ல முடியும் என்பதை தனது கதைகளில் சொல்லியிருக்கிறார் வாத்தியார்.

வார்த்தை ஜாலங்கள் இல்லை. வார்த்தை விளையாட்டுக்களை காணோம். முடிச்சுக்கள் தெரியவில்லை. சொற்றொடர்களின் ஆதிக்கம் உணரவில்லை.. ஆனால் அந்த செட்டி மண்ணின் மனம் மணக்கிறது. இந்த மணத்துடன் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தாற்போல் வாழ்க்கை அனுபவங்களை நம் முன் வைத்திருக்கிறார்.

செட்டி நாட்டு அரண்மனைகளின் வெளிப்புறம் நமக்கு அளிக்கும் தோற்றத்திற்கும் உட்புறமாக இருக்கும் மாந்தர்களின் மனப்போக்கிற்கும் இடையேயுள்ள பெரும் வித்தியாசத்தை வேறொரு கோணத்தில் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் வாத்தியார்.

முதல் கதையான ‘மதிப்பும், மரியாதை'யுமே என்னை அசர வைத்துவிட்டது.. என்னே ஒரு கதைக்கரு..! நிமிடத்தில் ஏற்படும் கோபத்தின் விளைவால் பெற்றெடுத்த பிள்ளைகள் வேண்டாதவர்களாகி விடுவார்களா என்ன..? வேண்டாம் என்கிறார் வாத்தியார். ஆனால் அதற்காக அவர் சொல்கின்ற சமாதானம்தான் அருமை..

ஒவ்வொருவரின் ஊரிலும், ஏதோவொரு தெருவில் மீனி ஆச்சியைப் போல ஒருத்தரை நம்மால் பார்க்க முடியும். எனது சொந்த அனுபவத்திலும் நான் கண்டிருக்கிறேன். “அது, அது கொழுப்பெடுத்து அலையுதுக..” என்று காலம் முழுவதும் பழிச்சொல்லை சுமந்து கொண்டு திரிந்த அந்த ஜீவன்களின் அகத்தையும், புறத்தையும் ஒருசேர கண்டுணர்ந்திருக்கிறார் அந்தக் கதையில்.. மெளனமும் ஒரு மொழி என்பதை அவர் காண்பிக்கும் அந்த இடம் ஒரு ஹைக்கூ கவிதை..

கருப்பஞ்செட்டியாரின் கஞ்சத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற கதையில் வாத்தியார் சொல்கின்ற நீதி, “போகும்போது எதைக் கொண்டு போகப் போகிறாய்..? இருக்கும்போது இருப்பவர்களுக்குக் கொடு.. அந்தப் புண்ணியமே நீ விடைபெறும்போது உடன் வரும்..” என்கிற தத்துவத்தை அழகாக போதிக்கிறது.

சந்தேகம்.. சந்தேகம்.. எல்லாவற்றையும் தானே இழுத்துப் போட்டு செய்துகொண்டு நேரமில்லை நேரமில்லை என்று அலுத்துக் கொள்வதிலும் சிலர் முனைப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் ஒரு நீதிக்கதை உண்டு.. ‘நல்ல துணை'யில்.. உண்மையில் இது மாதிரியான ஒரு பக்கத்தை நாம் இதுவரையில் திரும்பிப் பார்க்காததால்தான் இந்த புலம்பல்கள் அதிகம் உலவுகின்றன என்று நினைக்கிறேன்.

உடன் பிறந்தோரை சந்தேகத்துடன் பார்க்கும் சில உடன்பிறப்புக்கள், பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும், ஒன்று சேர வைக்கத் துடிக்கும் கணவன்மார்கள், விதவையான மாமியாரை தங்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்க ஆசைப்பட்ட மனைவி, ஆசை, ஆசையாக வளர்த்த தனது பாட்டியின் பூர்வீக வீட்டை நிலை நிறுத்த ஆசைப்படும் பேரன்.. அம்மாவையும் அனுசரித்து மனைவி வீட்டாரையும் பெருமிதப்படுத்தும் கணவன், நட்சத்திரம், ஜாதகம் என்று நம்பிக் கொண்டு மகனுக்கு பெண் கிடைக்காமல் அல்லல்படும் ஒரு பெற்றோர் என்று நமது கண் முன்னே அக்கம்பக்கம் வீடுகளையே கொண்டு வந்து காட்டுகிறார் வாத்தியார்.

இவர்களுக்கு சொல்கின்ற தீர்வுதான் நாம் முன்பு யோசித்திராத கோணம். திரைப்படங்களில் இதுவரையில் பார்த்திராத காட்சியமைப்புகள்தான் கைதட்டல் பெறும். அதே போலத்தான் வாத்தியாரின் கதை சொல்லும் நீதி ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.

கோவிலுக்கு சமமான வீட்டையே இடித்துத் தரைமட்டமாக்கும் தொழில் தன்னைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் அவ்வளவுதான் என்று நினைத்த செட்டியாருக்கு, அதற்கான ‘பரிசு' கிடைத்தவுடன் அவர் மூலம் கேட்கின்ற கேள்வியில் இருக்கிறது நமது வாத்தியாரின் பாடம் சொல்லித் தரும் திறமை.

கொஞ்சமும் வாய்ப்பைத் தவறவிடவில்லை. ஒவ்வொரு கதையாடலிலும் ஒரு விஷயத்தைச் சொல்லித் தருகிறார். பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார். பூர்வீக மண்ணைத் துறந்து அயல் மண்ணில் பணம் ஈட்டும் மகனது குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படும் பாட்டிகள் அத்தனை ஊர்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் கவலைப்படுகின்ற விஷயம் அயல் நாட்டில் இருக்கின்ற அந்த இளசுகளுக்குத் தெரியுமா? புரியுமா..? புரிந்தாலும், புரியாவிட்டாலும் பாட்டிகளின் மனநிலை இதுதான் என்பதை புரிய வைக்கிறார் ஒரு கதையில்..

‘மண் கெட்டது மனசால.. பெண் கெட்டது வாயாலே' என்கிற பழமொழிக்கேற்ப பேசியே வம்பை வாங்கும் ஒரு மனைவியை திருத்த கணவன் செய்யும் முயற்சிகளை மிக, மிக வித்தியாசமாக அணுகியிருக்கிறார் வாத்தியார். சாட்சாத் இது மனோதத்துவ ரீதியான அனுபவம். சிறுகதைகளுக்குள் பெரும் உரையாடல் இது..

கதைகளைச் சொல்வதற்கு ரொம்ப மெனக்கெடவில்லை வாத்தியார். மிகச் சுலபமான சொற்றொடர்களைப் பயன்படுத்தி, மிக எளிமையாக, படிக்கத் தூண்டுகின்ற விதத்தில் ‘நச்' என்று முடிவை மட்டும் முடித்து வைத்து அடுத்த கதையை படிக்க வைக்கிறார்.

“பாடம், படிக்காமல் கெட்டது.. பிள்ளை, கண்டிக்காமல் கெட்டது.. கடன், கேட்காமல் கெட்டது.. உறவு, பார்க்காமல் கெட்டது..” என்று நமது வாழ்க்கை ரகசியங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் வாத்தியார்.

துணைக்கு என் அப்பன் முருகனையும், அவரது மற்றும் எனது ஆரூயிர்க் காதல் கவிஞன் கண்ணதாசனையும் அழைத்துக் கொண்டுள்ள வாத்தியார் பக்கத்திற்கு பக்கம் இவர்களை முறைப்படுத்தி பெருமிதப்பட்டுள்ளார்.

வாழ்க்கையை வாழ்வதற்கு யாருக்குத்தான் ஆசையிருக்காது. ஆனால் வாழ விடுகிறதா வாழ்க்கை அனுபவம்..? சோகங்களும், ஆற்றாமைகளும் சேர்ந்து மனிதரை துயரக்கடலில் தள்ளிவிடும்போது துணைக்கு நம்முடன் நிற்பது அந்த இறைவன் மட்டுமே எனும்போது அதுதான் நமது கடைசி நம்பிக்கை.. இந்த 20 கதையிலும் யாரோ ஒருவருக்கு அந்த அப்பன்தான் துணைக்கு இருக்கிறான். இதுவே நெஞ்சுக்கு நிம்மதி என்கிறார் வாத்தியார்.

நூறு சுய முன்னேற்ற நூல்களைப் படித்தாலும் இதில் இருக்கும் கதைகளின் அனுபவத்தினையும், பாடத்தினையும் உங்களால் பெற முடியாது..

இதுவே வாழ்க்கை என்கிறார் வாத்தியார்..!

அதை வாழ்ந்து பார் என்கிறார் வாத்தியார்..!

நன்றியிலும் நன்றி வாத்தியாருக்கு...!

படித்துப் பாருங்கள்..! மனித வாசனை புரியும்..!!!


செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள்
எழுதியவர் : SP.VR. சுப்பையா
பக்கங்கள் : 160
விலை : ரூபாய் 75.

வெளியீடு

உமையாள் பதிப்பகம்
பழைய எண் 94 : புது எண் 14
சொர்ணாம்பிகா லே அவுட்
ராம் நகர்
கோயம்புத்தூர் - 641 009.
அலைபேசி : 94430-56624

சென்னையில் புத்தகம் கிடைக்குமிடங்கள்

உமா பதிப்பகம்
18 / 171, பவளக்காரத் தெரு
மண்ணடி
சென்னை - 600001
தொலைபேசி எண்-25215363

குமரன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தி.நகர்
சென்னை-600017
தொலைபேசி எண் - 24353742

அவன் வருவானா..? - சிறுகதை போட்டியில் நானும்..!

30-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சிறந்த தோழர், நல்லதொரு நண்பர், பிடரியில் அடிக்கும் பின்னவீனத்துவ எழுத்தாளர், பல குருக்களே பொறாமைப்படும் அளவுக்கு பண்பான, அடக்கமான சீடர், அருமையிலும் அருமையான கதை, வசனகர்த்தா, வலையுலகின் தற்போதைய ரத்த பூமியின் தளபதிகளில் ஒருவரான பைத்தியக்காரன் ஆளுக்கு 1500 ரூபாய் என்று 20 பேருக்கு தருவதாக சொன்ன சிறுகதைப் போட்டி ஆரம்பத்தில் எனக்கும் மகிழ்ச்சியையும், உவப்பையும் தந்தது.

ஆனால் கூடவே நெருஞ்சி முள்ளாக அவர் வைத்த ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனைக் கேட்டு எனக்கு உவ்வே வந்துவிட்டது. ஆகவே கதை எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்து வந்த எனக்கு இன்றைக்குத்தான் தற்செயலாக ஞானமுனியின் பதிவைப் படித்தபோது அந்த ஆயிரம் வார்த்தைகள் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட விஷயம் தெரிந்தது.

நண்பர் பைத்தியக்காரனிடம் அது பற்றி தொலைபேசியில் பேசி உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு நானும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

இதோ அந்தச் சிறுகதை..!

அவன் வருவானா..?

கணேசன் வீட்டிலிருந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். சில அடிகள் நடந்துவிட்டு திரும்பிப் பார்த்தார். வாசற்படியில் மகள் செல்வி சீனுவிடம் ஏதோ சொல்லியனுப்பினாள். சீனுவும், கணேசனின் அருகில் வர இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள்.

வீட்டில் கிளம்பியபோதே செல்வி சொன்னதெல்லாம் கணேசனின் நினைவுக்கு வந்தது. "இன்னைக்கு எப்படியும் அண்ணன் வந்திரும்பா.. நீங்க வேணா பாருங்க.. கண்டிப்பா அண்ணன் உங்களுக்கு முன்னாடி கோயில்ல நின்னுக்கிட்டிருக்கும்.."

"வரட்டும் பார்ப்போம்.. வந்துதானே ஆகணும்.." மனதிற்குள் சொல்லிக் கொண்டே நடந்தார் கணேசன்.

ரமணி வருவானா.. என்ற கேள்வி நான்கைந்து நாட்களாக அவரைத் தூங்கவிடாமல் செய்தது. போன வாரமே மகள் செல்வியும், அவரும் தனித்தனியாக ரமணியின் வீட்டுக்குச் சென்று "திங்கள்கிழமை கண்டிப்பா கோவிலுக்குப் போகணும்.. கொஞ்ச நேரந்தான்.. உடனே வந்திரலாம்.. அப்படியே நம்ம வீட்ல சாமி கும்பிட்டுட்டு அங்கேயே சாப்பிடணும்.." என்று ஒரு முறைக்கு, மூன்று முறை சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தார்கள். எந்த பதிலையும் ரமணியிடமிருந்து வாங்க முடியவில்லை.

சீனுவின் கையைப் பிடித்துக் கொண்ட கணேசன் தன் தள்ளாமையை உணர்ந்து கொண்டு "இனிமேல் இவன்தான் நமக்கு எல்லாம்.." என்று எண்ணிக் கொண்டார். "ச்சே.. ரமணி குழந்தையாக இருந்தபோது கவனித்ததைப் போல இவனைக் கவனிக்கவில்லையே" என்று பச்சாபதமும் அவருக்கு ஏற்பட்டது. இத்தனைக்கும் காரணம் லஷ்மிதானே என்ற நினைவும் அவருக்கு வராமல் இல்லை.

---------------------------------

மூத்த மகன் ரமணியை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக முதலில் சென்ட்ரல் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அவனும் ஆரம்பத்தில் நன்றாகப் படித்தவன் போகப் போக படிப்பில் ஆர்வம் குறைந்து போனான். அதற்கு அவன் மட்டும் காரணமில்லை. அவன் அம்மா லஷ்மியும்கூடத்தான்..

காலையில் சீக்கிரம் எழுந்து படிக்க வேண்டும் என்பதற்காக கணேசன் காலையில் 5.30 மணிக்கு ரமணியை எழுப்பி படிக்கச் சொல்வார். எழுந்திரிக்கும்போதே அலுத்துக் கொள்வான்.. லஷ்மியிடம் போய் ஒட்டிக் கொள்வான். "அஞ்சரைதான ஆகுது.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. விடுங்க.." என்பாள் லஷ்மி.

அப்படியும் விடாமல் எழுப்புவார் கணேசன். "போய் முகத்த கழுவிட்டு வா.. லஷ்மி தம்பிக்கு காபி போடு.." என்று சொல்லிவிட்டு அவனின் புத்தகப் பையைத் தூக்கிப் படிப்பதற்கு ஏதுவாக முன்கூடத்தில் கொண்டு போய் வைப்பார். அவரும் வேலைக்குப் போவதாக இருந்தால் முன்கூட்டியே ரெடியாகி முன்னால் போய் உட்கார்வார்.. ஆனாலும் ரமணி வேண்டாவெறுப்பாக வந்து புத்தகத்தைத் தொடுவான்.

அவர் காலை ஷிப்டுக்குப் போய்விட்டால் அவர் தலை தெருக்கோடியில் மறைந்தவுடன் புத்தகங்களை தூரப்போட்டுவிட்டு திரும்பி வந்து படுத்துவிடுவான். லஷ்மிக்கு தன் மகன் படிக்காவிட்டாலும் பரவாயில்லை.. நன்றாக சாப்பிட்டாலே போதும்.. என்ற உணர்வே அதிகம் இருந்தது.

ரமணியை ஆறாவது வகுப்புக்கு கிறிஸ்துவ பள்ளியில் சேர்த்துவிட்டார். பள்ளிக்கும், வீட்டுக்கும் சுமாராக மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும். அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பல மாணவர்கள் அவரின் வீட்டுக்கருகில் இருந்தார்கள். "அவர்களுடன் சேர்ந்து ரமணியும் போய் வரட்டும்.." என்று நினைத்துத்தான் அங்கே சேர்த்துவிட்டார். வந்தது வினை.

அன்று கணேசனுக்கு காலை ஷிப்ட். "புத்தகப் பையைத் தூக்க முடியவில்லை.." என்று அழ ஆரம்பித்தான் ரமணி. இந்த மாதிரி நேரத்தில்தான் அவன் லஷ்மியிடம் அதிகம் கொஞ்சுவான். ரமணியின் நோக்கம் பலித்தது. அன்றிலிருந்து லஷ்மியே அவனுடன் ஸ்கூல் வரைக்கும் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு போக ஆரம்பித்தாள்.

அவன் மாங்காயோ. நெல்லிக்காயோ கடித்துக் கொண்டு கையை வீசிக் கொண்டு லஷ்மியின் பின்னாலேயே செல்வான். விஷயம் தெரிந்த கணேசனுக்கு அவளின் அரைவேக்காட்டுத்தனமான பாசத்தை நினைத்து பரிதாபம்தான்பட முடிந்தது. அவரால் நிறுத்த முடியவில்லை. காலை, மதியம், மாலை என்று மூன்று முறையும் அவன் ஒருவனுக்காகவே ஒன்பது கிலோ மீட்டருக்கும் மேலாக நடக்க ஆரம்பித்தாள் லஷ்மி.

"இப்டி அவனை ஸ்கூல்வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வர்றியே.. நாளைக்கு அவன் முதுகு வளையறதுக்கே சோம்பேறித்தனப்படுவான்.. அவன் பொருள அவன தூக்க வைச்சுப் பழக்குறதுதாம்மா நாளைக்கு அவனுக்கு நல்லது.."

"அவன் சின்னப் பையன்ங்க.. அவன் ஒண்ணும் காலேஜ்ல படிக்கிறவன் இல்ல.."

"சின்னப் பையன்தான். இல்லேங்கல.. இப்பயிருந்தே பழக்கினாத்தான் அவனுக்கு பின்னாடி எதுவும் ஈஸியா இருக்கும்.. படிப்பும் வர மாட்டேங்குது.. காலைல நான் போன பின்னாடி படிக்கிறானா இல்லையான்னு எனக்குத் தெரிய மாட்டேங்குது.. டியூஷன் படிக்கிறான்.. அப்படியும் நாப்பதுலேர்ந்து ஐம்பதுக்குள்ள ரேங்க் எடுக்குறான்.. இப்படிப் படிச்சா இவன் பின்னாடி என்னாகப் போறான்.. எனக்குப் பயமா இருக்கும்மா.."

"நீங்க மட்டும் என்ன படிச்சிருக்கீங்க.. வெறும் எட்டாங்கிளாஸ்தானே..?"

சுரீரென்றது கணேசனுக்கு.

ஒரு ஓரமாக தள்ளி நின்றிருந்த ரமணி களூக்கென்று சிரித்தபடி அப்பாவின் முகத்தைப் பார்த்துவிட்டு, அம்மாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.

லஷ்மி ரமணியின் தலையைக் கலைத்து பேன் பார்ப்பது போல் பிரித்துப் பார்த்தபடியே "அவன் படிக்கலைன்னா பரவாயில்ல.. எங்க அண்ணங்க கடைல போயி தொழில கத்துக்கட்டும்.. பிஸினஸ் பண்ணியாவது அவன் பொழைச்சுக்குவான்.. நீங்க ரொம்ப கஷ்டப்படாதீங்க.. ஏற்கெனவே ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் இப்படி பத்து வருஷமா இந்த ஓட்டு வீட்டுல இருந்து ஒப்பேத்துறீங்க.." என்றாள்.

படிப்புதான் இப்படியென்றால், அவன் குணமும் அல்லவா யாருக்கும் அடங்காதவனாக மாறிவிட்டது..

---------------------------------

ழசை நினைத்தபடி மீனாட்சியம்மன் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார் கணேசன். வெயில் சற்றும் சளைக்காமல் தன் சுயரூபத்தைக் காட்ட இன்னமும் இரண்டு மணி நேரமாவது ஆகும்.. சின்னப் பையனை ஏன் காக்க வைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவராக "ஏதாச்சும் ஜுஸ் சாப்பிடுறியாப்பா..? என்றார். "உம்.." என்றான் சந்தோஷமாக சீனு.

கோவில் அமைதியாக இருந்தது. மணியைப் பார்த்தார் பத்து என்று காட்டியது. அவர் கண்கள் ரமணியைத் தேடியது. "சீனு அண்ணன் எங்கயாவது இருக்கானா பார்..?" என்றார். சீனு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு "இல்லப்பா.." என்றாலும் அண்ணன் வருவான் என்ற நம்பிக்கையில் "உள்ள இருந்தாலும் இருக்கும்.." என்றான்.

கோவிலின் நீண்ட பிரகாரத்திற்கு வந்தவுடன் சீனு ஆர்வமாகத் தேடுகிறான் ரமணியை.. அவன் இன்னமும் வரவில்லை என்பதை தன் உதட்டைப் பிதுக்கி கணேசனிடம் காட்டுகிறான் சீனு.

மீண்டும் நினைவுகளில் மூழ்கினார் கணேசன்.

---------------------------------

மணி 12வது வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்துதான் தேர்வு பெற்றான். ஆனாலும் கல்லூரியில் சேர்த்தார்கள்.

இருந்தும் என்ன செய்ய..?

உலகில் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா..?

"எதுக்கு நான் பி.ஏ. படிச்சேன். உங்க அண்ணன் கடைல உக்காந்து வெங்காயத்தை எடை போடறதுக்கா..? வேற வேலைய பாரும்மா.." என்ற ரமணியின் வார்த்தைகளில் லஷ்மி முதல்முறையாய் அதிர்ந்து போனாள்.

"என்னடா.. இப்படி பேசறே..? அப்பா இதுக்கு மேல உனக்கு என்ன செய்யமுடியும்? நீ சம்பாதிச்சு இனிமே வீட்டுக்கு கொடுக்கணும்.. அப்பா பாவம்ல..

"பாவம்ன்னா நான் என்ன செய்ய முடியும்..?"

"மாமா கடைல போயி தொழில் கத்துக்கிட்டாலும் மாமாவே உனக்கு கடை வைச்சு தருவார்.. உனக்கு ஒரு கஷ்டமும் இல்ல.. தம்பி, தங்கச்சியையும் நல்லா பாத்துக்கலாம்.. செல்விக்கு கல்யாணம் வேற பண்ணனும்.. நல்லா யோசனை பண்ணு கண்ணு.."

"நல்லா யோசனை பண்ணித்தான் சொல்றேன்.. அங்க போக எனக்குப் பிடிக்கல.. நீ எதுக்கு அங்க போகச் சொல்றேன்னு எனக்குத் தெரியும்.. எப்படியாவது மாமா வீட்ல என்னை வீட்டோட மாப்பிள்ளையாக்கிக்கிடலாம்ன்னு ஐடியா பண்ணயிருக்குற.. அது நடக்காது தாயே.. உங்க அண்ணன்கிட்ட போன வாரம் நானே முடியாதுன்னு நேர்ல சொல்லிட்டேன்.. சந்தேகம்ன்னா போயி கேட்டுக்கம்மா.."

ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்தாள் லஷ்மி.

"ஏண்டா இப்படி பண்ணிட்டே..? அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுடா..

"நல்ல பொண்ணுதான்.. நானும் இல்லைன்னு சொல்லலையே.. ஆனா எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன செய்யச் சொல்றே..? என்னால முடியாது தாயே.. ஆள விடு.."

"இப்ப என்னதான் பண்ணச் சொல்றே..?" லஷ்மியின் குரலில் அவசரமும், ஏமாற்றமும் தொனித்தது.

"அப்பா மில்லுல யாராவது வேலையை விட்டுட்டு அந்த இடத்துக்கு அவங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரையாவது சேர்த்துவிடலாம்ன்னு ஒரு திட்டம் இருக்குல்ல.. அதுல உங்க வீட்டுக்காரரை வேலையை விட்டுட்டு என்னை அந்த வேலைக்குச் சேர்த்துவிடச் சொல்லு.. இப்பவே மில்லுல சம்பளம் நாலாயிரம் தர்றான் தெரியுமா..?

மொத்தமாக அதிர்ந்தார்கள் கணேசனும், லஷ்மியும்.

"என்னடா சொல்றே..? எதுக்கு அப்பாவ வேலைய விடச் சொல்றே..? உனக்கு வேற வேலை கிடைக்காதா என்ன..? வேற வேலைக்குப் போடா.. ஒரு சம்பளத்த வைச்சிக்கிட்டு எப்படிடா பொழைக்கிறது..?" லஷ்மியின் கேள்வியில் முதல் முறையாக மகனின் மேல் கோபக்கனல் வீசியது.

"அதெல்லாம் முடியாது.. நான் இப்ப வேற வேலை தேடினாலும் எனக்கு ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல சம்பளம் கொடுக்க மாட்டாங்க.. நானும் என் வாழ்நாள் முழுவதும் இப்படியே இருந்திர வேண்டியதுதான். இப்ப என்ன..? நான் சம்பாதிச்சு என்ன செய்யப் போறேன்..? உங்களுக்குத்தானே செய்யப் போறேன்.. சம்பளம் முழுசையும் உன்கிட்டேயே கொடுத்தர்றேன்.. நீ எவ்வளவு கொடுக்குறியோ.. அதை வாங்கிக்கிறேன்.. செல்வி கல்யாணத்த நான் பாத்துக்கறேன்.. என்ன சொல்றே.? நல்லா யோசிச்சு சொல்லு.." ஒருமையில் அம்மாவிடம் அவனது கேள்வி பதிந்தது.

லஷ்மி அமைதியாக கணேசனைப் பார்த்தாள். "அது முடியாது. அவன வேற வேலை பார்க்கச் சொல்.." என்றார் கணேசன். தன்னுடைய கனவுகள் ஒவ்வொன்றாக சிதைவதைப் பார்த்த லஷ்மி குழம்பிப் போனாள். மகனா, கணவன..? அவளுக்குள் நடந்த பட்டிமன்றத்தில் பார்வையாளர்களாக காட்சியளித்தார்கள் சீனுவும், செல்வியும்.

அடுத்த வாரமே ரமணி யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறினான். கணேசன் பதட்டப்படாமல் இருப்பதாக காட்டிக் கொண்டாலும் லஷ்மி பதறினாள்.. அவளின் கண்ணீர் குடும்பத்தின் மொத்தத்தையும் பட்டினியும் போட்டு வதைக்க அரை மனதுடன் ரமணியைத் தேட ஆரம்பித்தார் கணேசன். ரமணியின் நண்பர்கள் வட்டாரத்தில் மெதுவாக விசாரித்து இரண்டு நாட்கள் கழித்து வண்டியூரில் அவனின் நண்பர்கள் வீட்டில் அவனைப் பிடித்தார்.

"நீங்க உங்க வேலையை விட்டுட்டு எனக்கு வாங்கிக் கொடுத்தாத்தான் நான் அந்த வீட்டுக்கு வருவேன். இல்லேன்னா நான் இங்கேயே இருக்கேன்.." தீர்மானமாகப் பதில் சொன்னான் ரமணி. கணேசன் சுவற்றில் அடித்த பந்தாக லஷ்மியிடம் வந்தார். "நான் என்ன செய்ய..? இப்பொழுது நீயே சொல். நான் ஒரு தப்பும் பண்ணல.. அவன நீதான் வளர்த்த.. இப்படி என்னை வெறுக்கிற அளவுக்கு நான் அவனுக்கு என்ன செய்தேன்..? சொல்லு.." கண் கலங்கியது அவருக்கு.

இப்பொழுதும் தாய் பாசமே வென்றது. "அவன் சொன்ன மாதிரியே செஞ்சிருங்க.. இனிமே நாம என்ன செய்யமுடியும்..?" என்றாள் லஷ்மி.

வேண்டா வெறுப்பாக சக தொழிலாளர்களின் வேண்டுகோளையும் மீறி வேலையை மகனுக்கு விட்டுக் கொடுத்தார் கணேசன். லஷ்மிக்கு எப்படியாவது செல்வியின் திருமணத்தை நடத்துவதற்கு ரமணி உதவுவான் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருந்தது. அப்படியொரு நம்பிக்கை கணேசனின் மனதில் துளிகூட இல்லை. எப்படியும் தான் மட்டுமே கஷ்டப்படப் போவதாக அவர் உள் மனது சொன்னது.. அதுவரையிலாவது கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்றுதான் நினைத்தார்.

ரமணியும் சில மாதங்கள் ஒழுங்காக மாதச் சம்பளத்தை லஷ்மியிடம் கொடுக்க ஆரம்பித்தவன் பிறகு தனக்கென்று எடுத்துக் கொண்டு படியளக்க ஆரம்பித்தான்.

இடையில் செல்வியை லஷ்மியின் தூரத்துச் சொந்தத்திலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். வந்தவர்கள் ரமணியின் வேலையையும், சம்பளத்தையும் பார்த்துவிட்டு "எங்கள் வீட்டிலும் ஒரு பெண் இருக்கு. நீங்க உங்க பொண்ணுக்கு உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க. ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா முடிச்சிருவோம்.." என்றனர்.

மாப்பிள்ளையும் அரசு உத்யோகம் என்பதால் கணேசன் சந்தோஷப்பட்டார். லஷ்மிக்கு பெண் எடுத்து பெண் கொடுத்தால் நம் பெண் அங்கே நிம்மதியாக இருப்பாளே.. என்ற சந்தோஷத்தில் ரமணியிடம் சொன்னாள்..

"நீங்க சொன்னா நான் கல்யாணம் பண்ணிறுவேனா..? அவங்க பெண் எடுக்கறாங்கன்னா எடுக்கட்டும். அதுக்காக நான் எதுக்கு அந்த வீட்ல கல்யாணம் பண்ணணும்..? எனக்கென்ன தலையெழுத்தா..? அந்தப் பட்டிக்காட்டுல போயி எவன் கல்யாணம் பண்ணுவான்..?" என்றான் அலட்சியமும், இளக்காரமும் கலந்த குரலில்.

ரமணி மறுநாள் காலை வேலைக்கு கிளம்பும்போது "டேய்.. செல்வி வாழ்க்கையே உன் கைலதாண்டா இருக்கு.." என்றாள் லஷ்மி.

அன்று சாயந்திரம் கணேசன் மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வீடு திரும்பினார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் தன் வீட்டு வாசலில் நிற்பதையும், வீட்டை நோக்கிய அவர்கள் பார்வையையும் கண்டு பயந்து போய் வேகமாகய் நடை போட்டார்.

செருப்பை ஓரமாய் எறிந்துவிட்டு ஹாலில் நுழைந்தவர் கண்ணில்பட்டது ஒரு புதுப்பெண். விரிக்கப்பட்டிருந்த பாயில் கழுத்தில் மாலையுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து சுதாரிக்க முடியாமல் தடுமாறினார் கணேசன்.

அருகில் வந்த செல்வி அவருடைய தோளில் தன் கையை வைத்து அவரைத் திருப்பி பின்பக்கமாக இழுக்க அந்தப் புது பெண்ணை பார்த்துக் கொண்டே பின்னால் நகர்ந்தார் கணேசன்.

"அப்பா இவங்க அண்ணனோட மில்லுல கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரா இருக்காங்களாம்.. இன்னைக்கு காலைலதான் மீனாட்சியம்மன் கோவில்ல கல்யாணத்த முடிச்சிட்டு வந்திருக்கு அண்ணன்.." செல்வி சொன்ன வார்த்தைகளைக்கூட முழுமையாகக் கேட்க முடியாமல் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த கணேசனின் முகம், அடுத்த கணம் லஷ்மியைத் தேடியது.

கணேசன் ஹாலில் மெதுவாக நடந்து போக உள் அறையிலிருந்து தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றிவிட்டு சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டு சட்டையின் கழுத்துப் பகுதியைத் தன் கையிலிருந்த கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வெளியே வந்தான் ரமணி.

கணேசனைப் பார்த்தவுடன் எதுவும் பேச விரும்பாதவனைப் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் புது மனைவியின் அருகில் சென்றவன் சிநேகமாக அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

சமையல்கட்டில் ஓசைப்படாமல் நுழைந்த கணேசன் தனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஒரு டம்ளரில் பாலை ஆற்றிக் கொண்டிருந்த லஷ்மியைப் பார்த்தார். மெதுவாக நடந்து அவள் அருகில் சென்று மிகச் சன்னமான குரலில் "லஷ்மி" என்றழைக்க திடுக்கிட்டுத் திரும்பிய லஷ்மியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவளைத் தொட்டு ஆறுதல்படுத்த முயல டம்ளரை சமையல் டேபிளின் மேல் வைத்துவிட்டு தன் கையால் வாயைப் பொத்திக் கொண்டு அழ முயன்ற லஷ்மியைப் பார்த்து பயந்து போன கணேசன். "வேணாம்.. வேணாம்.." என்று சைகையால் தடுத்துவிட்டு சமையல் அறையை விட்டு வெளியே வந்தவர் வெளியில் நின்றிருந்தவர்களையும் நிமிர்ந்து பார்க்காமல் வெளியே தெருவில் நடக்கத் தொடங்கினார்.

இரவு பதினொரு மணிக்கு மெதுவாக வந்து கதவைத் தட்ட கதவு திறந்தே கிடந்தது. உள்ளே ஹாலில் ஒரு மூலையில் வெறும் தரையில் தன் கையையே தலையணையாகக் கொண்டு படுத்திருந்த லஷ்மி அவரைப் பார்த்தவுடன் வேகமாக எழுந்தவள். கலைந்திருந்த தன் தலைமுடியை இறுக முடிந்து கொண்டை போட்டுவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.

கை, கால்களைக் கழுவிக் கொண்டு பக்கெட்டை நின்ற இடத்திலிருந்தே எறிந்துவிட்டு திரும்பும் அப்பாவைப் பார்த்த செல்வி, படக்கென்று மறுபுறம் முகத்¨த் திருப்பிக் கொண்டு தூங்குவதைப் போல ஆனாள்.

சுவரோரம் இருந்த பீரோவின் மீது சாய்ந்தபடி உட்கார்ந்தார் கணேசன். லஷ்மி உள்ளிருந்து சாப்பாட்டு அயிட்டங்களை ஒவ்வொன்றாக வெளியில் கொண்டு வந்து வைத்துவிட்டுச் செல்ல அவள் வரும்போதும், போகும்போது அவர் அவளைப் பார்ப்பதும், அவள் அவரைப் பார்க்காமல் தவிர்ப்பதும் அவருக்குத் தெரிய வர இது என்ன வகை தண்டனை என்பதைப் போல் வீட்டின் முற்றத்தையே பார்த்தார் கணேசன்.

தட்டில் சிறிது சாதத்தைக் கொட்டிவிட்டு சாம்பாரை ஊற்றிவிட்டு அருகில் அமர்ந்து தன் முழங்காலை குறுக்கி அதன் மேல் தன் கைகளை வைத்து முழங்காலில் தன் முகத்தைப் பதித்து வேறு பக்கம் பார்வையிருக்க சன்னமான குரலில் பேச ஆரம்பித்தாள் லஷ்மி.

"அவன் தெற்கு வாசல்ல வீடு பிடிச்சிருக்கானாம்.. வாடகை எண்ணூறு ரூபாயாம்.. சும்மா நம்மகிட்ட சொல்லிட்டுப் போக வந்தானாம்.. இனிமே நமக்கு ஆயிரம் ரூபாய்தான் தருவானாம்.. பத்தலைன்னா நீங்களே ஏதாவது பண்ணிக்குங்கன்னான்.. பாலைக் குடிச்சிட்டுப் போயிட்டான்.." - மெதுவாக அழுகை அவளுக்குள் பீரிட்டது.

கணேசன் மெதுவாக சாதத்தைப் பிசைந்து சாப்பிட்டபடியிருக்க அடுத்து என்ன பேசுவது என்பதைப் போல் அவள் சற்று நிறுத்த அத்தோடு போதும் என்பதாக கணேசன் கை கழுவிக் கொண்டு எழுகிறார்.

முன்கூடத்தில் சுவரோடு சுவராக பதுங்கி படுத்திருந்த சீனுவின் பாயில் மெல்ல அமர்ந்தவரின் கை அனிச்சையாக அவனது முதுகை தடவிக் கொடுத்தது. மெல்ல அவனது பாயிலேயே படுத்தவர் லஷ்மி வருவதைப் பார்த்தவுடன் மீண்டும் எழுந்து உட்கார்ந்தார்.

மெல்ல வந்து அவரருகில் அமர்ந்த லஷ்மியின் கை விரல்களின் நடுக்கம் அவரின் தோள்பட்டையில் எதிரொலித்தது. "நான் தப்பு பண்ணிட்டேங்க.." என்று எழுந்த பலமான அவளுடைய அழுகுரல் அவருடைய மனதைப் பிசைந்தது.

லஷ்மியின் வாயைப் தன கையால் பொத்தியவர் அவளை ஆசுவாசப்படுத்தி "விடு என்ன செய்ய..? ஏதோ இப்படி நடக்கணும்ன்னு இருந்திருக்கு.. நடந்திருச்சு.. போய் தூங்கு போ.. போ.. போ.." என்று அவளை கிளப்ப லஷ்மி கண்களை முந்தானையால் துடைத்தபடி மெதுவாக நடந்து சென்று செல்வியின் அருகில் அவளை ஒட்டியும், ஒட்டாமலுமாக படுத்தாள்..

எப்பொழுது தூங்கினாரோ தெரியவில்லை கணேசனுக்கு.. காலையில் செல்வியின் "அம்மா.." என்ற கூக்குரல் அவரை எழுப்பியது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த கணேசன் உள்ளே ஓடினார். லஷ்மியின் உயிரற்ற சடலத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மகள் செல்வி "அப்பா.. அம்மா.." என்ற வார்த்தைகளோடு எழுப்பிக் கொண்டிருந்தாள்..

தலையே சுற்றுவது போல் இருந்தது கணேசனுக்கு. இனி என்ன..? எல்லாமே முடிந்து போய் விட்டது. மில்லுக்குத் தகவல் போய் அங்கிருந்து உடன் வேலை செய்பவர்கள் மூலமாக ரமணியின் புது வீட்டிற்கு கணேசனின் பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று அவனை அழைத்து வந்தார்கள்.

லஷ்மியின் உடல் அடக்கம் வரைக்கும் இருந்தவன், சுடுகாட்டிலேயே தன் வீட்டுக்குப் போவதாக தன் மாமாவிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

மறுநாள் பால் தெளிப்புக்கும், கருமாதிக்கும் ஏதோ மூன்றாம் மனிதரைப் போல வந்து கலந்து கொண்டான். கணேசனும் அவனை கண்டு கொள்ளவில்லை. "அவளே போய்விட்டாள்.. இனிமேல் யாரைக் குற்றம் சொல்ல.. இனிமேல்தான் நான் எனது குழந்தைகளுக்காக வாழப் போகிறேன்.." என்று தன் உறவினர்களிடம் சொல்லி சொல்லி புலம்பத்தான் முடிந்தது கணேசனால்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு மில்லில் தன்னுடைய இருபது வருட சர்வீஸை எடுத்துச் சொல்லி தற்காலிகமாக வேலைக்குச் சேர்ந்தார்.

ரமணி அதற்குப் பிறகு தங்கை, தம்பியைக்கூட வந்து பார்க்கவில்லை. தாங்கள் போய் கேள்வி கேட்கிறோம் என்று கிளம்பிய உறவினர்களைக் கூட கணேசன் தடுத்துவிட்டார். "அவன் வரும்போது வரட்டும். அவன் வந்தால் ஏன் வந்தன்னு நான் கேக்க மாட்டேன்" என்று செல்வியிடம் சொல்வார்..

கணேசன் செல்வியின் கல்யாணக் கவலையில் ஆழ்ந்தார். இந்த வருடமாவது கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் மில்லில் கவுரவம் பார்க்காமல் நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்த்து வந்தார்.

---------------------------------

தோ ஓராண்டாயிற்று..

"வாங்கோ.. இப்படி சட்டையைக் கழட்டிட்டு உக்காருங்கோ.." என்ற குருக்களின் குரல் கணேசனை எழுப்பியது.

அப்போதும் திரும்பித் திரும்பிப் பார்த்தார் கணேசன் ரமணி தட்டுப்படுகிறானா என்று..

இல்லை. ஒரு தீர்க்கமான முடிவுரை கணேசனின் கண்களில் எழுகிறது.

குருக்களின் பார்வையில் தெரிந்த அவசரத்தையும், தனக்குப் பின்னால் இருந்த கூட்டத்தையும் பார்த்த கணேசன், "தம்பி சட்டையைக் கழட்டு.." என்று சீனுவிடம் சொல்லிவிட்டு தன்னுடைய சட்டையைக் கழற்றி பக்கவாட்டுத் தூணின் அருகே வைத்துவிட்டு மஞ்சள் பையை மட்டும் எடுத்துக் கொண்டு சீனுவின் கையைப் பிடித்து குருக்களின் எதிரில் அமர்ந்தார்.

"யாருக்கு..?" என்றார் குருக்கள்.

"என் மனைவிக்கு.."

அருகில் சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணைக் காட்டி "அவாள் கோவில் ஆள்.. அவாள்கிட்ட தர்ப்பணக் கட்டணம் இருபத்தைந்து ரூபாய் கொடுத்திருங்கோ.." என்று சொல்லிவிட்டு அவருடைய அனுமதிக்குகூட காத்திருக்காமல் அந்த மஞ்சள் பையை திறந்து உள்ளிருந்தவைகளை எடுத்தார் குருக்கள்.

கணேசன் தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து இருபத்தைந்து ரூபாயை எடுத்து அந்த அம்மாவிடம் கொடுத்தவிட்டு மீண்டும் குருக்களின் முன் அமரும்போதும் சுற்று முற்றும் ஒரு பார்வை பார்த்தார். தன்னைத் தெரிந்தவர்கள்கூட யாரும் அங்கில்லை என்பது தெரிந்தது. சீனுவின் அருகில் அவனை லேசாக அணைத்ததுபோல் அமர்ந்தார்.

"இப்படிக் கையை நீட்டுங்கோ" என்ற குருக்களுக்கு தன் கையை நீட்ட கை விரல்களைப் பிடித்த குருக்கள் அதில் தர்ப்பணக் குச்சியை மாட்டியபடியே "அம்மா பேர்.." என்று கேட்டுவிட்டு அவரைப் பார்க்க "லஷ்மி" என்றார் மெல்லிய குரலில்.. அவருடைய தோற்றத்தைப் பார்த்து ஏதோ கேட்க வேண்டும் என்பதைப் போன்ற சந்தேகத்துடன், "பையன் பெரியவனா.. சின்னவனா?" என்றார் குருக்கள். கணேசன் சிறிதும் பிசிறில்லாத குரலில் "இல்ல.. ஒரே பையன்தான்" என்று சொல்ல, சீனு நம்ப மாட்டாத அதிர்ச்சியில் அப்பாவைப் பார்க்க.. குருக்கள் மந்திரத்தைத் தொடர..

ஒரே நாளில் இரண்டு திவசங்களை நடத்தும் திருப்தியுடன், மந்திரங்களைச் சொல்லத் துவங்குகிறார் கணேசன்.


*********************************