11-11-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சமீபகாலமாக இட்லி, வடை பதிவுகளை ஏன் எழுதவில்லை என்று தொலைபேசியிலும், இமெயிலிலும், பின்னூட்டங்களிலும் தொடர்ந்து விசாரித்தவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி..!.
இட்லி-வடை பதிவுகளில் போட வேண்டியதையெல்லாம் நான் அவ்வப்போது தனித்தனிப் பதிவுகளாகப் போட்டுவிட்டதால்தான் இட்லி-வடை என்ற தலைப்பில் எதையும் எழுத முடியவில்லை.. மன்னிக்கவும்..!
ஏற்கெனவே நான் எழுதியிருந்த இட்லி-வடை பதிவுகளைப் படித்துப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்... அவைகள் அத்தனையையும் தனிப் பதிவுகளாக போட்டிருக்க வேண்டிய விஷயங்கள்தான் என்று..!
அவ்வப்போது எழும் கடுமையான வேலைப் பணிகளுக்கிடையேயும், என் அப்பன் முருகன் கொடுக்கும் சோதனைகளையும் தாண்டி இட்லிவடைக்காக விஷயங்களைத் தேட வேண்டுமெனில் நிரம்ப நேரம் பிடிக்கிறது. சேர்த்து வைத்து போட மனமும் மறுக்கிறது. சட்டென்று பதிவாய்ப் போட்டு பின்னூட்டங்களைப் பார்க்கவே விரும்புகிறது மனம்.
இந்த ஊசலாட்ட மனதின் விளைவாக இன்றைய இட்லி-வடை குறைவான பத்தியச் சாப்பாடு போலத்தான் இருக்கும்..!
இந்த வலையுலகத்தில் நுழைந்து கிட்டத்தட்ட நான்காண்டை நெருங்கி வந்திருக்கும் சூழலில் முதல் முறையாக நேற்றுத்தான் எனது இந்த உணர்ச்சி வேகத்தில் என்கவுண்ட்டருக்கு சபாஷ் போடும் பரிதாப மக்கள் பதிவுக்கு மிக அதிகமான எதிர்ப்பு ஓட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. கூடவே அர்ச்சனைகளும்தான்..!
மக்கள் மசாலா படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளைப்போல உடனுக்குடன் தீர்வை எதிர்நோக்குவதை இதிலிருந்து அறிய முடிகிறது. நீதிமன்றங்களில் தீர்வுக்கான காலக்கட்டம் தாமதமாகிறது என்பதை அனைத்துப் பதிவர்களும் சுட்டிக் காட்டினாலும் அந்த தாமதத்திற்கு யார் காரணம் என்பதையும், அதனை எப்படி நிவர்த்தி செய்வது என்பதைப் பற்றியும் எதுவும் சொல்லாமல் “உடனே தூக்கில் போடு” என்கிறார்கள்.
மக்களின் கருத்துப்படி இந்தப் படுகொலை நல்ல விஷயம் என்றே வைத்துக் கொண்டாலும், இதையே உதாரணமாகக் காட்டி பல அநியாயமான படுகொலைகளையும் இந்த என்கவுண்ட்டர் மூலமாகவே போலீஸார் இனியும் நடத்துவார்கள். இதற்கு முன்னும் நடத்தியிருக்கிறார்கள். உதாரணம் வீரப்பன் வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள்..!
இனி பலியாகப் போகும் பல அப்பாவிகளுக்காக இந்த மோகனகிருஷ்ணனை எத்தனை ஆண்டுகளானாலும் பரவாயில்லை என்று சிறையில் வைத்து விசாரித்திருக்கக் கூடாதா..? ஒரு உயிர் முக்கியமா? அல்லது பல உயிர்கள் முக்கியமா?
யோசியுங்கள் மக்களே..!
“சேர்ந்து செஞ்ச தப்பெல்லாம் வெளில வரும்..” - விஜயகாந்துக்கு நடிகர் சந்திரசேகர் எச்சரிக்கை..!
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் பேசிய பேச்சு இது..!
கலைஞரைத் திட்டினால் பெயர் கிடைக்கும் என்று நினைக்கிறான் இந்த விஜயகாந்த். எழவெடுத்தவனுக்கு என்னத்தைச் சொல்ல..? ஏய் விஜயகாந்த்.. ஒன்று மட்டும் சொல்கிறேன். என் தலைவரைத் திட்டுவதை நிறுத்திக் கொள். இல்லையென்றால்.. நீயும் நடிகன்.. நானும் நடிகன்.. நாம் இருவரும் சேர்ந்து செய்த தவறையெல்லாம், எனக்கு அவமானம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து அனைத்தையும் வெளியில் கொண்டு வரத் தயங்க மாட்டேன்..” என்று பேசியிருக்கிறார்.
என்னய்யா இது அக்கிரமம்..? ஒரே கட்சில இருக்கும்போது கூடமாட விழுந்து எந்திரிக்கிறது.. அப்புறம் வேற கட்சின்னு பிரிஞ்சுட்டா உடனே கூத்தடிச்சதையெல்லாம் வெளில சொல்லிருவேன்னு மிரட்டுறது.. என்ன பிரெண்ட்ஷிப்போ..?
அப்போ இத்தனை நாளா செஞ்ச 'சேட்டை'களையெல்லாம் மறைச்சு வைச்சுக்கிட்டுத்தான் இவரும் யோக்கியம் பேசுறாரா..? இப்படியும் யோசிக்கலாமில்லையா..? உண்மையாக விஜயகாந்தைவிட சந்திரசேகர் மாதிரியான நண்பர்களிடம்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சரான கிடோ வெஸ்ட்டர்வில்லி சமீபத்தில் திருமணம் செய்திருக்கிறார். பெண்ணை அல்ல.. ஒரு ஆணை..
இந்த நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி சுபயோக, சுபதினத்தில் தனது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சூழ நடந்தேறியதாம். பான் நகரின் மேயர்தான் இத்திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.
ஆனாலும் இதில் இன்னும் ஒரு சுவையான விஷயம்.. ஜெர்மனியில் ஹோமோக்கள் திருமணத்திற்கு இன்னமும் முறைப்படியான அங்கீகாரம் தரப்படவில்லையாம். ஆதலால் இது தற்போதைக்கு பதிவு செய்யப்பட்ட பார்ட்னர்கள் என்றே அழைக்கப்படுமாம்..
கிராஸ் சேர்க்கை திருமணத்தில் இருக்கும் சில உரிமைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட பார்ட்னர்கள் என்ற இந்த விதிமுறையின் கீழ் ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டவர்களுக்கு தரப்படுகிறதாம்.
ஜனாதிபதி, பிரதமர், மந்திரிகள் போன்ற வி.வி.ஐ.பி.யின் மனைவியாக இருந்தால் வெளிநாட்டிற்குப் போகும்போது ஜோடியாக கைகோர்த்தபடி விமானத்தில் இருந்து இறங்கலாம். இங்கே இவர்கள் எப்படி? அதுவும் மணமகன் வெளியுறவுத் துறை மந்திரியாச்சே. வருடத்தில் பாதி நாட்கள் சுற்றிக் கொண்டுதானே இருக்க வேண்டும்.. சந்தேகம் வருகிறதல்லவா?
அத்தோடு சீன அதிபர், பிரதமருக்கு தனது பார்ட்னரையும் அறிமுகப்படுத்தி வைத்து அசத்தியிருக்கிறார். இவரல்லவோ ஹஸ்பெண்ட்..? சரி. இதில் யார் ஹஸ்பெண்ட், யார் வொய்ப் என்பது தெரியாததால் கிடோவுக்கு முதல் மரியாதை அளிப்போம்.(புகைப்படத்தில் கண்ணாடி அணிந்திருப்பவர்தான் கிடோ)
வாழ்க மணமக்கள்..!
'டிக் டிக் டிக்' படத்தில் தனது மின்னலடிக்கும் கண்களால் கைது செய்த ஸ்வப்னாவை ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். அம்மணியைத் தேடியதற்கு காரணம் சமீபத்தில் சூர்யா டிவியில் நான் பார்த்த ஒரு மலையாளப் படம்.
கிடைக்காத சூழலில் முத்து நிவாஸ் ஹரிஹரசுப்ரமணியன் என்னும் பேஸ்புக் நண்பர் ஒருத்தர் தேடிப் பார்த்து கண்டுபிடிச்சு சொல்லிட்டார். அவருக்கு எனது கோடானுகோடி நன்றி..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஒரு ரவுண்டு அடித்து முடித்த ஸ்வப்னா பின்னாட்களில் ஹிந்தி படங்களில்தான் அதிகம் நடித்தார். தற்போது ராமன் கண்ணா என்னும் ஹிந்தி நடிகருக்கு வாழ்க்கைப்பட்டு மும்பையில் ஈவண்ட் மேனேஜ்மெண்ட், எடிட்டிங், டப்பிங் தியேட்டர்கள் நடத்தும் Sangini Entertainment என்னும் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறாராம் ஸ்வப்னா. கூடவே தனது கலைத்தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நடனப் பள்ளியொன்றையும் அமைத்து நடனம் சொல்லித் தருகிறாராம்.
இந்தப் பள்ளியின் மூலம் பல்வேறு நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறாராம் ஸ்வப்னா.. இந்தக் காணொளி ஆக்லாந்தில் ஸ்வப்னா நடத்திய ஒரு நடன நிகழ்ச்சி பற்றியது.
நீடுழி வாழட்டும்..!
ஒரு விஷயத்திற்காக சிங்களத் திரைப்படங்களை கூகிளாண்டவரில் வலைவீசி தேடிக் கொண்டிருந்தபோது இத்திரைப்படம் கண்ணில்பட்டது.
படத்தின் காட்சிகள் எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே என்று யோசித்தால் மண்டையில் பளிச்சென்று பல்பு ஒளிர்ந்தது. அட இது பயர் படமாச்சே என்று..
டோரண்ட்டில் டவுன்லோடிட்டு முழு படத்தையும் பார்த்தேன். ஒரு சீன்கூட மாற்றமில்லாமல் அப்படியே அச்சுப் பிசகாமல் காப்பியடித்து எடுத்து ஜமாய்த்திருக்கிறார்கள். ம்.. இந்த அளவுக்கு இலங்கையில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா என்று யோசித்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது.
பாவம் நமது மலையாள சினிமா எழுத்தாளர்கள். சில நூறு ரூபாய்களுக்காகவும், ஆயிரம் ரூபாய்களுக்காகவும் எழுதிக் கொடுத்த அவர்களுடைய கதை, படம் இப்படி நாடு விட்டு நாடு போய் படமாகியதுகூட தெரியாமல் மேலே போய்ச் சேர்ந்திருக்கிறார்களே என்று நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது..!
சிங்களப் படவுலகம் சிறக்கட்டும்..!
சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு நடிகை(பெயர் வேண்டாமே..!) சிரஞ்சீவியைப் பற்றிக் குறிப்பிட்டு “சிரு பக்கா ஜென்டில்மேன். அவரை மாதிரியொரு குட் பிரெண்ட் அண்ட் ஆக்டரை நான் பார்த்ததில்லை..” என்று குறிப்பெழுதி வைத்திருந்தார்.
அதற்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் மட்டும் கடுமையாக எதிர்த்து எழுதியிருந்தார்கள். அதில் ஒருவர் எழுதியிருந்த விஷயம் என்னை அதிகம் கவர்ந்தது.
ஒரு படத்தைக் குறிப்பிட்டிருந்த அந்த வாசகர், “இந்தப் படத்தைப் போய் பாருங்க.. இந்தப் படத்தை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் எந்த அளவுக்கு போராட்டம் நடத்துனாங்கன்றதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? அப்புறமா உங்க சிரு ஜென்டில்மேனா, இல்லையான்னு சொல்லுங்க..” என்று காரத்தைக் கொட்டியிருந்தார்.
இ.வி.வி.சத்யநாராயணராவ் இயக்கம் செய்த இத்திரைப்படம் டபுள் மீனிங் டயலாக்குகளாலும், ஆபாசமான காட்சியமைப்புகளாலும் அதிகம் பரபரப்பாகப் பேசப்பட்டதாம். பெண்கள் அமைப்புகளெல்லாம் தெருவில் இறங்கி போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால் படம் என்னவோ சூப்பர் டூப்பர் ஹிட்..! 75 தியேட்டர்களில் 50 நாளையும், 27 தியேட்டர்களில் 100 நாட்களையும் கடந்து ஓடியதாம்..
கதைப்படி ரம்பாவும், ரம்யா கிருஷ்ணனும் கதையல்ல நிஜம் லட்சுமியின் பெண்கள் இருவருமே சிரஞ்சீவியை விரும்புகிறார்களாம். ஒரு கனவுப் பாடலில் மாமியாரான லட்சுமியும் சிரஞ்சீவியுடன் களத்தில் குதிக்க.. இந்த நால்வருக்குமான கனவுப் பாடலாகிவிட்டது இது..!
லட்சுமியம்மாவா இது..? ஏன் தெலுங்கில் மட்டும் இப்படி நடிக்கிறார். தமிழ் ரசிகர்கள் என்ன பாவம் செய்தார்களோ..?
ஒபாமா வைரஸ் என்று பெயர்தான் வைக்கவில்லை. ஆனால் அத்தனை டெல்லி தொலைக்காட்சிகளும் ஒபாமாவுக்கு ஓவராக ஜால்ரா போட்டுத் தாளித்துவிட்டன. இன்னும் ஒபாமா எந்த நேரத்தில் கக்கூஸ் போனார்..? எப்போது குளித்தார் என்பதை மட்டும்தான் சொல்லவில்லை. மீதி அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டார்கள்.
ஒபாமாவும் பரவாயில்லை. நல்லதொரு பேச்சாளராகத்தான் இருக்கிறார். மூச்சு வாங்கியபடியே எழுதி வைத்து படித்து உயிரையெடுக்கும் நமது ஜனாதிபதிகளிடம் இவர் நிச்சயம் வித்தியாசம்தான்.
சரி நம்ம மன்னமோகனசிங்காவது உருப்படியாக பேச்சுவார்த்தை நடத்தினாரா என்றால் அதுவும் இல்லை. பல ஆண்டுகளுக்காக அமெரிக்காவுக்காக ஒற்றர் வேலை பார்த்து 2004-ம் ஆண்டே நமது நாட்டை விட்டு ஓடிப் போன ரவீந்திரசிங் என்ற ரா அதிகாரியை ஒப்படைப்பது பற்றி பேசவே இல்லையாம்..
ராஜமரியாதையோடு காங்கிரஸ் அரசே அனுப்பி வைத்த போபால் யூனியன் கார்பைடு ஆலை அதிபர் ஆண்டர்சனை பற்றியும் பேசவில்லையாம்..! அப்புறம் என்ன மயிறுதாண்டா பேசுனீங்கன்னா.. வேலை வாய்ப்பு, நம்ம காசைக் கொட்டி விமானங்களை வாங்கும் விற்பனை இது பற்றித்தான் பேசினார்களாம்.
என்ன கொடுமை இது..? அப்ப நட்பு நாடுகளை இது மாதிரி ஒற்றர் வேலை பார்க்கிறதெல்லாம் தப்பி்ல்லைன்னு பகிரங்கமா ரெண்டு நாட்டு ஜனாதிபதிகளும் ஓப்பனா சொல்லிரலாமே.. எதுக்காக இப்படி பிடிக்கற மாதிரி, தேடுற மாதிரி, துரத்துற மாதிரியெல்லாம் டிராமா போடுறாங்க..? ம்ஹும்.. முடியல.. இவனுகளையெல்லாம் நினைச்சா கோபம் கோபமா வருது..!
தண்ணியடித்தால் என்ன தப்பு என்றவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ இது..!
மும்பையில் ஆல்பம் ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சரக்கடித்து போதையான தயாரிப்பாளர், மேடையில் ஆடிக் கொண்டிருந்த ஆல்பத்தில் நடித்திருந்த ஒரு நடிகையைப் படுத்திய பாட்டை பாருங்கள்..!
ஏதோ தயாரிப்பாளர் என்பதால் விட்டுத் தொலைத்தார்கள். வேறு ஆளாக இருந்தால் என்னவாயிருக்கும்..?
ஊர் நாட்டாமைகள், கிராம நாட்டாமைகள், பஞ்சாயத்து நாட்டாமைகள், நீதிமன்ற நாட்டாமைகள், அரசியல் நாட்டாமைகள், வலையுலக நாட்டாமைகள் என்ற வரிசையில் தொலைக்காட்சி நாட்டாமைகளும் பெருகிக் கொண்டே போகிறார்கள்.
அந்த வரிசையில் நடிகை சுமலதாவும் இணைந்திருக்கிறார். 50 வயதைக் கடந்தும் இப்போதும் ‘முரட்டுக்காளை’யில் பார்த்த அதே சுமலதாவைப் போலவே தென்படுகிறார். என்ன காயகல்பம் சாப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இப்போதும் அமிதாப்பச்சன், மோகன்லாலுடன் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் தனது காதல் கணவர் அம்பரீஷுடனேயே ஜோடி சேர்ந்து கல்லா கட்டி வருகிறார்.
தெலுங்கு தெரியாததால் பல இடங்களில் புரியவில்லை என்றாலும் சுமலதாவே கண் கலங்கி அழுவதைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு அழுவாச்சி காவியம்தான் ஓடுகிறது என்பது புரிந்து எனக்கும் கண்ணு கலங்கிருச்சு. நீங்களும் பார்த்து, கேட்டு அழுவுங்கள்..!
“...........மூன்றாவது வலைப்பதிவிலேயே சரக்கு காலியாகி, டைரி லெவலுக்கு வந்து, பின் பத்திரிகைகளில் வந்ததை எடுத்துக் காப்பி-பேஸ்ட் செய்பவர்களும் உண்டு........”
“.............முதல் நாள், முதல் காட்சியே ஏதாவது ஒரு மொக்கைப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் படத்தைப் பார்க்காதீங்க’ என்று அதிரடியாகச் சொல்லுவார்கள். படத்தின் டைட்டிலில் தொடங்கி, எண்ட் கார்ட்வரை கதையை அப்படியே ‘விமர்சனமென்ற’ பெயரில் எழுதுவார்கள்.........”
“............பெரும்பாலும் அன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்திகளை வாசித்து டென்ஷனாகி, ‘ஏய் மனிதனே’ டைப்பில் 'பக்கெட்டுக் கவிதைகள்' எழுதுவார்கள் அல்லது வாசித்த செய்தியை அப்படியே டைப் அடித்து வலையில் ஏற்றுவார்கள்..........”
நன்றி : ‘புதிய தலைமுறை’யில் பதிவுலகத் தம்பி, யுவகிருஷ்ணா
|
Tweet |