Showing posts with label புனிதப்போர். Show all posts
Showing posts with label புனிதப்போர். Show all posts

சென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை..!

19-10-2010            

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரொம்ப நாட்களாகவே இந்தக் கதையை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தபடியேதான் இருந்தேன். ஆனால் நிறைய சோம்பேறித்தனத்திற்கு அடிமைப்பட்டுவிட்டதால் பாதி எழுதி, மீதியை விட்டு வைத்திருந்தேன். இப்போதுதான் நேரம் வந்தது. எழுதுகிறேன்.

2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்தான் எனது 'புனிதப்போர்' என்னும் குறும்படத்தை எடுத்து முடித்திருந்தேன். அதற்கடுத்த மாதம் எடிட்டிங் செய்து முதல் காப்பி எடுத்து நான் மட்டுமே பார்த்து திருப்திபட்டிருந்த நிலையில், சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் இதை தள்ளிவிட்டு அவர்களையும் கொடுமையில் ஆழ்த்தலாமே என்ற நல்லெண்ணம் எனக்குள் பிறந்தது.

அப்படி என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான 'நிழல்' பத்திரிகையின் ஆசிரியர் திருநாவுக்கரசிடம் இதனை கொடுத்து பார்த்து அனுபவிக்கும்படி சொல்லியிருந்தேன். அவரும் பார்த்துவிட்டு “முதல் முயற்சிதானே.. நல்லாத்தான் இருக்கு. எல்லாருக்குமே இதே மாதிரியொரு எண்ணம் இருக்கும். ஏன்னா அவங்கவங்களுக்கு முதல் முதல்லா மனதுக்குள் எழுந்த கதை அவ்வளவு சீக்கிரம்  அவங்களை விட்டு வெளில போகாது. ஆனால் அது காலம் கடந்ததாகவும் இருக்கும். எடுக்கவும் முடியாது. இது போன்ற பிரச்சினைகள் எல்லா படைப்பாளிகளுக்கும் உண்டு. மனதைத் தளர விடாதீங்க. அடுத்தப் படைப்பை உருவாக்குற வழியைப் பாருங்க..” என்று உற்சாகமூட்டினார்.

அப்படியே கூடவே, தமிழ்நாட்டில் எங்கெங்கு ஆவணப் பட, குறும்பட விழாக்கள் நடைபெறுகின்றன என்பதைச் சொல்லி அங்கேயெல்லாம் எனது படத்தை போட்டிக்கு அனுப்பச் சொன்னார். நானும் திருப்பூர், மதுரை, டெல்லி, மும்பை என்றெல்லாம் எனது 'புனிதப்போர்' படத்தினை போட்டிக்கு அனுப்பி வைத்தேன். பரிசை பத்தி கேட்டு என் வயித்தெரிச்சலை கொட்டிக்காதீங்க. அதனால இதோட விட்ருங்க..!

இப்போதுதான் ஒரு நப்பாசை. ஏதோ 'தேசிய விருது' , 'தேசிய விருது'ன்னு சொல்றாங்களே.. அதுக்கு இதை அனுப்பி பார்க்கலாமே என்று ஒரு ஆசை தோன்றியது. லோக்கல் விருதுகள் கிடைக்காமல் போனாலும் போகலாம். ஆனால் எனது 'புனிதப்போரு'க்கு தேசிய விருது கண்டிப்பாக கிடைக்கும் என்ற எனது அசைக்க முடியாத நம்பிக்கையை தினமும் உரம் ஊற்றி வளர்த்தான் என் அப்பன் முருகன்.

தேசிய விருதுக்கு படங்களை அனுப்ப விரும்பினால் அது முதலில் சென்சார் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்ததால் சென்சார் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டேன். சாஸ்திரி பவனில் நான் கால் வைத்தபோது, கூடவே சனீஸ்வர பகவானும் என்னுடன் தொற்றிக் கொண்டது எனக்கு அப்போது தெரியவில்லை.

டிடி எடுத்துத் தரச் சொன்னார்கள். அதைக் கொடுத்தவுடன் அப்ளிகேஷனை கொடுத்தார்கள். டிவிடிக்கள்-2, எடிட்டிங் செய்த இடத்தில் இருந்து சர்டிபிகேட், தயாரிப்பாளரிடம் இருந்து சான்றிதழ் என்று நிபந்தனைகள் பல இருந்தன. இதில் கொடுமையானது முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதித் தர வேண்டும் என்பதுதான்.

ஸ்கிரிப்ட் என்றால் வசனம் மட்டுமல்ல.. கதாபாத்திரங்களின் அசைவுகளையும் சேர்த்து, கேமிரா கோணங்களின் இருப்பு, எந்த வகையான ஷாட்டுகளை வைத்திருக்கிறோம்.. காட்சியில் இருக்கும் மற்றவர்களின் ரியாக்ஷன் என்ன என்பது முதற்கொண்டு அத்தனையும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதுபோல் சென்சார் ஸ்கிரிப்ட் எழுதுவதற்காகவே ஸ்பெஷலான எழுத்தாளர்கள் சென்சார் அலுவலகத்தின் வாசலில் நின்றிருப்பார்கள். இதற்குத் தனியாக புரோக்கர்களும் இருக்கிறார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகம் போலவே.. சென்சார் போர்டு அலுவலகத்திலும் இந்த புரோக்கர்கள் சகல துறைகளிலும் புகுந்து வருவார்கள். நாம் வரவேற்பறையோடு நிற்க வேண்டியதுதான்.

“இவர்களைப் பிடித்தால் உடனே காரியம் முடிந்துவிடும்” என்று என்னிடம் சென்சார் அலுவலக அதிகாரி ஒருவர் நான் அப்ளிகேஷனை வாங்கிக் கொண்டு வெளியில் வரும்போதே சொன்னார். வெளியில் என்னை வரவேற்ற அந்த புரோக்கரிடம் எனது குறும்படம் பற்றிச் சொல்லி “படம் மொத்தமே 12 நிமிடங்கள்தான்.. எவ்வளவு ஆகும்..?” என்று கேட்டேன். வாய் நிறைய பான்பராக்கை குதப்பியபடியே, “12 நிமிஷம்னா கொஞ்சம் குறைச்சுக்கலாம். ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க. போதும்.. நான் சொல்லும்போது வந்தால் போதும். ஸ்கிரீனிங்கப்போகூட நீங்க வர வேண்டாம். சர்டிபிகேட்டை கைல வாங்கி வைச்சுக்கிட்டுத்தான் நான் உங்களைக் கூப்பிடுவேன்” என்று உறுதிமொழியளித்தார்.

ஆனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கே இரண்டாயிரம் ரூபாய்தான் சென்சார் ஸ்கிரிப்ட்டுக்கு கொடுக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியும் என்பதால் “சரி.. யோசிக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அன்றைய என்னுடைய வாழ்க்கை நிலைமையே பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தது. எதுக்கு வீணா 2000 ரூபாயை வேஸ்ட் செய்யணும் என்று நினைத்து நானே ஸ்கிரிப்ட்டை எழுதிவிட்டேன்.

டி.வி.டி. மற்றும் அனைத்து ஆவணங்களுடனும் நேரில் சென்று எனது விண்ணப்பத்தினை சமர்ப்பித்தேன். வாங்கிக் கொண்ட ஒரு பெண்மணி.. “என்ன நீங்களே ரெடி பண்ணிட்டீங்களாக்கும்..?” என்று அலுத்தபடியே கேட்டார். “ஆமாம்.. ஏன் மேடம்..?” என்றேன். “அதான் வாசல்ல எழுதறவங்க இருந்தாங்களே..? அவங்ககிட்ட சொல்லியிருக்கலாமே?” என்றார். “எனக்கே எழுதத் தெரியுங்க.. அதான் நானே எழுதிட்டேன்” என்றேன். பட்டென்று சுட்டெரித்துவிடுவதைப் போல் முறைத்தார் அவர். “என்ன மேடம் அப்படி பார்க்குறீங்க..?” என்றேன் கூலாக.. “உங்களுக்குத் தெரியாதுங்க.. உங்க ஸ்கிரிப்ட்டுல ஏதாச்சும் ஒரு சின்ன தப்புன்னாலும் 'இங்க சர்டிபிகேட் தர முடியாது'ன்னு சொல்லிருவாங்க.. அப்புறம் நீங்க கட்டின பணம்கூட வேஸ்ட்டுதான்.. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்” என்று சொல்லிவிட்டு ஏதோ வேண்டா வெறுப்பாக வாங்கி உள்ளே வைத்துக் கொண்டார்.

நாம பார்க்காத கவர்ன்மெண்ட் ஆபீஸா..? என்ற நினைப்பில் வீடு வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து சென்சார் ஆபீஸில் இருந்து என்னை போனில் அழைத்தார்கள். “இன்னிக்கு சாயந்தரம் 5 மணிக்கு ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர்ல இருக்குற எங்க பிராஞ்ச் ஆபீஸ்ல உங்க படத்தை பார்க்கப் போறாங்க. நேரா அங்க 5 மணிக்கு போயிருங்க..” என்றார்கள்.

நானும் மிகச் சரியாக ஐந்து மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தேன். திரைப்படங்களை சென்சார் செய்யும்போது அதிகாரிகள் சொல்லும் நாளில், அவர்கள் சொல்லும் பிரிவியூ தியேட்டர்களில் தயாரிப்பாளர்கள் சகல வசதிகளுடன் படத்தைத் திரையிட்டுக் காட்டுவார்கள்.

ஆனால் ஆவணப்படங்கள், குறும்படங்களை மட்டும் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரின் உள்புறம் இருந்த ஒரு அலுவலகத்தில்தான் பார்த்து வந்தார்கள். இப்போதும் இது தொடர்கிறதா என்று தெரியவில்லை. அங்கு சென்றவுடன் ரிசப்ஷன் பெண்ணிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கேட்டபோது உள் அறைக்குள் போகச் சொன்னார். அறையில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தார்கள். என் பெயர், எனது தொழில், என்னைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டு “சரி.. நீங்க கிளம்புங்க. நாங்க படம் பார்த்துட்டு நாளைக்குச் சொல்லியனுப்புறோம்..” என்றனர். கிளம்பி வந்துவிட்டேன்.

மறுநாள் காலை 12 மணியிருக்கும். சென்சார் அலுவலகத்தில் இருந்து போன் செய்த ஒரு அம்மணி, “ஸார் உங்க ‘புனிதப்போர்' படத்துக்கு ‘சர்டிபிகேட் தர மாட்டேன்'னு சொல்லிட்டாங்க. நீங்க நேர்ல வந்து பேசுங்க..” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்..

“ஏன்.. ஏன்..?” என்று நான் கேட்டதற்கு, “எனக்கே தெரியாது ஸார்.. அதை நீங்க பெரிய ஆபீஸர்கிட்டதான் கேக்கணும்.. நேர்ல வாங்க..” என்றார் மறுபடியும். விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன். மறுபடியும் அதே அம்மணி.

இம்முறை என்னைப் பார்த்தவுடன் தலையில் அடித்துக் கொண்டவர், “நான்தான் முன்னாடியே சொன்னேன்லங்க.. ‘புரோக்கரை வைச்சு ரெடி பண்ணுங்க'ன்னு.. பாருங்க இப்போ ‘உங்களுக்குக் கொடுக்கவே கூடாது'ன்னு எழுதி வைச்சிருக்காங்க..” என்று சொல்லி சர்டிபிகேட் மறுக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்கும் அந்த நோட்டைக் காட்டினார்.

அதில் ஆங்கிலத்தில், “வசனங்கள் முழுவதும் பெண்களை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதப்பட்டிருக்கிறது. எந்தவிதத்திலும் சர்டிபிகேட் கொடுக்கத் தகுதியில்லாதது இந்தப் படம்..” என்று எழுதப்பட்டிருந்தது. படம் பார்த்தது மூன்று பேர். இரண்டு ஆண்கள். ஒரு பெண். அதில் இரண்டு ஆண்கள் எதுவும் சொல்லாமல் போக.. இந்தப் பெண்மணி ஏதோ அதிசயத்தைக் கண்டுபிடித்ததுபோல் இதை எழுதி வைத்திருக்கிறார். அவர் பெயர் நிகிலா அசோக்குமார்.

“இப்ப நான் என்னங்க செய்யணும்?” என்றேன் அந்தம்மாவிடம். “பாபு ஸாரை பார்க்கணும்.. வெயிட் பண்ணுங்க. அவர் இன்னொரு படம் பார்த்துக்கிட்டிருக்காரு..” என்று சொல்லி அமர வைத்தார்கள்.

வேறொரு லேடி வந்தாங்க. “பாருங்க ஸார்.. அந்தம்மா ரொம்ப ஸ்டிரிக்ட். பிடிக்கலைன்னா அவங்க உறுதியா இருப்பாங்க. நீங்க அந்தம்மாகிட்ட போன்ல பேசிப் பாருங்க.. ‘ஏதாவது டயலாக்கை கட் செய்யணும்னா சொல்லுங்கம்மா கட் செஞ்சிடறேன்'னு சொல்லுங்க. அவங்க சொல்றதையெல்லாம் கட் செஞ்சிருங்க.. உடனே சர்டிபிகேட் கைக்கு வந்திரும். வீணா பிரச்சினையை பெரிசாக்காதீங்க..” என்று அட்வைஸ் மழை பொழிந்தார்.

“எடுத்ததே 12 நிமிஷ படம். அதுல ஒரு பொம்பளைகூட கிடையாது. எல்லாரும் ஆம்பளைங்கதான். அதுலேயும் அவங்க முகத்தைக்கூட காட்டாம கட் பண்ணியாச்சு. மிச்சம் இருக்கிறது வசனம்தான். அதுவும் இருக்கக் கூடாதுன்னு அப்புறம் அதுல என்னதாங்க இருக்கும்..?” என்றேன். “அந்த வசனத்துலதான பிரச்சினை.. பேசாம அந்தம்மா சொன்ன மாதிரியே செய்யுங்க.. இல்லைன்னா உங்களோட 1500 ரூபாய் வேஸ்ட்டாயிரும். அதுக்காகச் சொல்றேன்.. உங்களையும் பார்த்தா பாவமா இருக்கு..” என்று என்னை ஏதோ பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு கற்பனை செய்து பார்த்துவிட்டுச் சொன்னார் அந்தப் பெண்.

நானும் ஆஹா.. அரசு அலுவலகத்தில் நம்மளையும் மனுஷனா மதிக்கிறதுக்கு ஒரு ஜீவன் இருக்கேன்னு சந்தோஷத்துல இருந்தேன். ரெண்டே நிமிஷத்துல இடி விழுந்துச்சு. என்னை உள்ளே அழைத்தார்கள். அங்கே நான்கைந்து ஊழியர்கள் நின்றிருந்தார்கள். “உக்காருங்க ஸார்..” என்றார்கள். உட்கார்ந்தேன். “இங்க பாருங்க ஸார்.. உங்களுக்கா எவ்ளோ கஷ்டப்பட்டாவது, அந்தம்மாகிட்ட பேசி நாங்க சர்டிபிகேட் வாங்கித் தர்றோம்.. கவலையை விடுங்க..” என்றார் அட்வைஸ் செய்த அதே அம்மணி. பிட்டு படம் பார்க்கத் தியேட்டருக்கு போய், ஷகிலாவே நேரில் வந்து பக்கத்தில் அமர்ந்தது போல் சிலிர்ப்பாக இருந்தது எனக்கு..

பட்டென்று என் முன்னால் ஒரு ரசீது புத்தகத்தை வைத்த அந்தப் பெண், “இது எங்க குவார்ட்டர்ஸ் பக்கத்துல இருக்குற கோவில்.. அதை கொஞ்சம் பெரிசா கட்டலாம்ன்னு இருக்கோம். நீங்க உங்களால முடிஞ்சதை கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும். எவ்ளோ ஸார் எழுத? 500, ஆயிரம்..” என்று அவராகவே முடிவெடுத்ததைப் போல பேச.. பொசுக்கென்று போனது எனக்கு..

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, “இல்ல.. இப்ப பணம் எதுவும் கொண்டு வரலையே..?” என்று இழுத்தேன். “சரி.. பரவாயில்லை ஸார்.. நாளைக்கு வந்து பணத்தைக் கொடுத்திட்டு சர்டிபிகேட்டை  வாங்கிட்டு போங்க..” என்றார். கோடு எங்கே இழுத்து எங்கே போடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். “சரி.. நாளைக்கு பார்ப்போம்ங்க..” என்று கொஞ்சம் கடுப்போடு சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்து அமர்ந்தேன்.

அவர்களுடைய ஏமாற்றமோ என்னமோ.. கிட்டத்தட்ட 2 மணி நேரமாகியும் அழைக்கப்படாமலேயே இருந்தேன். எனக்குப் பின்னால் வந்தமர்ந்த தயாரிப்பாளர் வி.சேகர், தேனப்பன் ஆகியோர் தங்களது வேலையை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.

சாவகாசமாக சென்சார் அதிகாரி பாபுராமசாமியின் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அவரும் என்னை மரியாதையுடன் அமர வைத்து என்னைப் பற்றிய முழுத் தகவலையும் தெரிந்து கொண்டவர், “உங்க படத்தை இப்பத்தான் பார்த்தேன். எனக்குப் புரியுது. (அருகில் இருந்த அலுவலர்களைக் காட்டி) இவங்க எல்லாருக்கும் புரிஞ்சது. அந்தம்மாவுக்கு மட்டும் புரியலை. விடுங்க. நான் அவங்களோட போன்ல பேசி புரிய வைச்சிட்டேன். சர்டிபிகேட் கொடுக்கச் சொல்லிட்டேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. குட் வொர்க்.. நல்லாத்தான் இருக்கு. வித்தியாசமான முயற்சி.. இது மாதிரி நிறைய பண்ணுங்க.. எட்டு பேரு நல்லாயில்லைம்பாங்க.. நாலு பேரு நல்லாயிருக்கும்பாங்க.. உங்க மனசுக்கு படம் பிடிச்சிருக்கா.. அது போதும். வெளில கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. இப்பவே சர்டிபிகேட் தரச் சொல்றேன்..” என்று சொன்னவர் இண்டர்காமில் யாரிடமோ எனக்கு சர்டிபிகேட் தரச் சொல்லி உத்தரவிட்டார்.

நானும் நிம்மதிப் பெருமூச்சுடன் வந்து அமர்ந்தேன். மறுபடியும் அதே ரசீது புக் அம்மணிகள் வேகமாக என்னிடத்தில் வந்து, “என்ன ஸார்.. உங்களுக்காக ஸார்கிட்ட எவ்ளோ ஸ்டிராங்கா பேசியிருக்கோம்.. நீங்க கவனிக்க மாட்டேன்றீங்க..?” என்றார்கள். நானும் பணிவாக, “நிஜமா என்னிடம் இப்ப பணம் எதுவும் இல்லீங்க... அதோட இந்த மாதிரி கோவிலுக்கு நன்கொடை கொடுக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம்..” என்று முகத்திலடித்தாற்போல் சொன்னேன். ஏதோ நாத்தனாரிடம் முறைத்துக் கொண்டு போவதைப் போல் பதிலே சொல்லாமல் முகத்தை மட்டும் வெட்டிக் காட்டிவிட்டுப் போனார்கள் அந்தப் பெண்மணிகள்.

'யு' சர்டிபிகேட்டுடன் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதியன்று பிற்பகலில் எனது முதல் கன்னி முயற்சிக்கான அரசு அங்கீகாரத்தை நான் வாங்கிய கதை இதுதான்.

எனது அந்தக் குறும்படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே 'பக்கம், பக்கமான வசனங்கள்' என்றார்களே தவிர.. 'நீக்கப்பட வேண்டிய வசனங்கள்' என்று சொல்லவில்லை. இது இயல்பாக தினம்தோறும் பெண்கள் மீது ஊடகங்களின் மூலம் சுமத்தப்படும் வார்த்தைகள்தான். இத்தனைக்கும், இன்றைக்கும் டிவி சீரியல்களில் வரும் வசனங்களில் கால்வாசிகூட நான் எழுதியதில் இல்லை.  ஆனாலும் இதை குரூரம் என்கிறார் அந்த அம்மையார்.

இதன் பின்பு நான் எந்தத் திரைப்படத்திற்குச் சென்றாலும் சென்சார் சர்டிபிகேட்டில் இந்த அம்மையார் பெயர் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பேன். இருந்தது நிறைய படங்களில்..

அத்தனைப் படங்களிலும் ஆபாச வசனங்களும், குலுக்கல் காட்சிகளும், அங்கங்களை குளோஸப்பில் அசைக்கும் காட்சிகளை வைத்திருந்து அந்தப் படத்திற்கு 'யு' சர்டிபிகேட்டும் கொடுத்து கையொப்பமிட்டிருக்கும் கொடுமையையும் கண்டு கொண்டே வருகிறேன்.

என்னால் பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்..? 

இவ்வளவு நேரம் இதனை பொறுமையாகப் படித்து முடித்திருக்கும் தோழர்களுக்கு எனது 'புனிதப்போர்' குறும்படத்தைக் காணும் வாய்ப்பை கொடுக்கவில்லையெனில் நான் நன்றி மறந்தவனாகி விடுவேன்..

இந்த மூன்றாண்டுகளில் நிறைய புதிய பதிவர்கள் வலையுலகில் நுழைந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இதைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதைப் போல அவர்களும் இதனைப் பார்த்து பரவசமடைய வேண்டும் என்று எண்ணுகிறேன்.

புதிய பதிவர்களே.. என் இனிய தோழர்களே.. என் மீது பொறாமைத் தீயில் வெந்து உருகும் ஒரு சில பழைய பதிவர்கள், “பார்க்காதீங்க.. பேய் அடிச்சிரும்.. பிசாசு கடிச்சிரும்.. பூதம் தூக்கிட்டுப் போயிரும்..” என்றெல்லாம் உங்களை பயமுறுத்தக் கூடும். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், காதில் வாங்கிக் கொள்ளாமல் தைரியமாக இங்கே போய் எனது அந்த தேசிய விருதுக்குரிய, ஆஸ்கார் விருதை மயிரிழையில் தவறவிட்ட குறும்படத்தைப் பார்த்து பரவசமடையுங்கள்...

உங்களுடைய விலை மதிப்பில்லாத விமர்சனங்களை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

அன்புடன்

உண்மைத்தமிழன்

தைரியம் இருந்தா போட்டிக்கு வாங்க பதிவர்களே..!

16-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குறும்படம் எடுத்தது பெரிசில்லை.. வீட்ல வைச்சு நானே ஆயிரம் வாட்டி பார்த்ததும் பெரிசில்லை. ஏதோ தெரியாத்தனமா பிரெண்டானவங்களையெல்லாம் பார்க்க வைச்சு கதறடிச்சதும் பெரிசில்ல.. ஊர்க்காரங்க பட்ட இம்சையை உலகம் பூரா பரப்பி அவுகளையும் நோகாம நொங்கெடுக்கணும்ன்றதுதான் இப்ப நம்மளோட கொள்கை.. லட்சியம்..

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு நான் எடுத்த புனிதப்போர் குறும்படத்தைப் பத்தி நானே பெருமையா சொல்லிக்கக் கூடாது.

இருந்தாலும், "இவனெல்லாம் ஒரு படம் எடுத்திட்டானே.. அதுலேயும் முப்பதாயிரம் ரூபா செலவுல.. டைரக்டர்ன்னு வேற பேர் போட்டுக்கிட்டானானே"ன்ற வயித்தெரிச்சல்ல நிறைய பேர் 'பொங்கித் தீர்த்த கதை'யையெல்லாம் அப்பவே நான் என் அப்பன் முருகன்கிட்ட 'பாஸ்' பண்ணிட்டு 'லூஸ்'ல விட்டுட்டேன்.

ஆனாலும் நீங்க பட்ட அந்த இம்சையை ஸ்டேட் முழுக்க கொண்டு போகணும்னு நினைச்சுத்தான், தமிழ்நாட்டுல நடந்த அத்தனை குறும்படப் போட்டிகளுக்கும் அனுப்பி, போஸ்ட்லேயே எல்லாருக்கும் 'தூக்குத் தண்டனை' கொடுத்திட்டிருக்கேன்.

அந்த வகைல என்னுடைய.. இல்ல.. இல்ல.. தப்பு.. தப்பு.. நம்முடைய 'புனிதப்போர்' குறும்படம், இதுவரைக்கும் தமிழ்நாட்டுல இது மாதிரி போட்டி நடத்துற அத்தனை ஊர்களுக்கும் பயணப்பட்டு, தன்னோட கொடுமையை நிறைவேத்தியிருக்கு..

இப்போ இன்னொரு முயற்சியா டெல்டா மாவட்டத்தில் இருந்து டால்டா செய்ய ஒரு நல்ல ஆஃபர் வந்திருக்கு.. விட்டுற முடியுமா? களத்துல குதிக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

நம்ம திருவாரூர் மாவட்டத்துல இருக்குற பன்னாட்டு லயன்ஸ் சங்கம்(324-A2 மாவட்டம்) படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி 2009-2010 என்கிற தலைப்பில் ஒரு போட்டியை நடத்துது. கூடவே குறும்படப் போட்டியும் நடத்துதாம்.

இந்த மாசம் வெளிவந்த 'கிழக்கு வாசல் உதயம்' அப்படீன்ற புத்தகத்துல இந்த நியூஸ் வெளியாகியிருக்கு.

இந்தப் போட்டிக்காக சிறுகதை எழுத்தாளர்களும், குறும்படத் தயாரிப்பாளர்களும் அவங்கவங்க எழுதின சிறுகதைகளையும், குறும்படங்களையும் அனுப்பி வைக்கச் சொல்லியிருக்காங்க..

சிறுகதைப் போட்டிக்காக சில விதிமுறைகளைக் கொடுத்திருக்காங்க.. அது என்னன்னா..?

1. போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கதைகள் A4 அளவில் 7 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதே அளவில் ஈ-மெயிலிலும் அனுப்பலாம்.

2. இதுவரை பிரசுரமாகாத கதையாக இருத்தல் வேண்டும். போட்டி முடிவுகள் அறிவிக்கும்வரை வேறு எந்த இதழுக்கும் அனுப்புதல் கூடாது.

3. தழுவல் அல்லது மொழி பெயர்ப்புக் கதையாக இருக்கக் கூடாது. சொந்தக் கற்பனை என்ற உறுதி தேவை.

4. பரிசுக்குரிய கதைகள், அதற்கென அமைக்கப்படும் தேர்வுக் குழுவால், தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். அந்த முடிவே இறுதியானது.

5. அனுப்பும் கதைகளுக்கு நகல் எடுத்துக் கொண்ட பின், கதைகளை அனுப்பவும். தேர்வு பெறாத கதைகளை திருப்பியனுப்ப இயலாது.

சிறந்த சிறுகதைகளுக்கு முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம். இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம்.. மூன்றாம் பரிசு ரூபாய் மூவாயிரம்.

இவை தவிர சில கதைகள் ஆறுதல் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்படுமாம்.

குறும்படப் போட்டிக்கான விதிமுறைகள்

1. கடந்த 2000ம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்பட்ட குறும்படங்களாக இருத்தல் வேண்டும். ஆவணப் படங்கள் போட்டிக்கு ஏற்புடையதல்ல.

2. 30 நிமிடங்களுக்கு மேற்படாத கால அளவு கொண்டிருத்தல் வேண்டும்.

3. குறும்படத்தின் இரண்டு CDக்களை அல்லது DVDக்களை அனுப்ப வேண்டும்.

4. போட்டிக்கென குறும்படத்தை அனுப்புபவர் எந்த உரிமையின் அடிப்படையில் அதை அனுப்புகிறார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

போட்டிக்கு வரும் குறும்படங்களில் சிறந்த 5 படங்கள் பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

ஒவ்வொரு படத்துக்கும் தலா ரூபாய் ஐந்தாயிரம் பரிசாகத் தரப்படும்.

தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

சிறுகதைகளும், குறும்படங்களும் அனுப்ப வேண்டிய முகவரி

லயன் உத்தமச்சோழன்
மாவட்டத் தலைவர் - கலை, இலக்கியம்
525, சத்யா இல்லம்
மடப்புறம்-614 715
திருத்துறைப்பூண்டி
தொலைபேசி எண் : 04369-223292
அலைபேசி எண் : 94433-43292
மின்னஞ்சல் முகவரிகள் : kizhakkuvaasal@gmail.com / kizhakku_vaasal@yahoo.co.in

படைப்புகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி தேதி 31-10-2009

என்ன பதிவர்களே.. முழுவதுமாக படித்து விட்டீர்களா..?

சிறுகதைப் போட்டியாம்.. ஆனால் '7 பக்கந்தான்' அப்படீன்னு கண்டிஷன் போட்டிருக்கிறது எனக்கு ஒத்து வரலை. அதுனால வேற யாராச்சும் எனக்குப் பதிலா பரிசை வாங்கிக்கட்டும்னு ஒதுங்கிட்டேன்.

ஆனா அந்தக் குறும்படப் போட்டியை விடுறதா இல்லை..

கண்டிப்பா என்னோட 'புனிதப்போர்' காவியத்தை இந்தப் போட்டிக்கு அனுப்பப் போறேன்.. நிச்சயம் ஜெயிப்பேன் என்று இதுவரையில் அனுப்பிய அத்தனை போட்டிகளிலும் நம்பினதைப் போல இந்தத் தடவையும் உறுதியா நம்புறேன்..

நெஞ்சுல 'தில்' இருந்தா.. மனசுல 'மாஞ்சா' இருந்தா.. உடம்புல 'வலு' இருந்தா.. மைண்ட்ல 'தைரியமிருந்தா'.. அவங்கவங்க எடுத்த குறும்படத்தை அனுப்பி என்னோட 'புனிதப்போரோட' போட்டி போடுங்க பார்ப்போம்..

ஒரு கை பார்த்திருவோம் மக்களே..!

வாங்க.. வாங்க.. தயாராயிருக்கேன்..!!!

மறந்திராதீங்க.. வர்ற அக்டோபர் 31, கடைசி நாளு..

அதுக்குள்ள உங்களோட படைப்புகளை அனுப்பிருங்க..

நன்றி..!!!

சரவணன்-நமீதா-கெளபாய்

27.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

பயப்பட வேண்டாம்..!

இன்று மாலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் நான் பார்த்த மூன்று குறும்படங்கள் பற்றி(கொஞ்சமாகத்தான்) உங்களிடம் பேசப் போகிறேன்.. அவ்வளவுதான்..

"பெண் புத்தி பின் புத்தி!"


படத்தின் பெயர் தெரியாது. ஆனால் திரைப்படம் போலவே எடுத்திருக்கிறார்கள்.

இரவு நேரத்தில் கொட்டுகின்ற மழையில் ஒரு பெண் பேருந்திற்காக காத்திருக்கிறாள். ஏதோ நிறைய நடந்து செல்லும் வேலை செய்திருக்கிறாள் போலிருக்கிறது. அலுப்பாய் இருக்கிறாள். கால் பாதத்தைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது நமது பருத்திவீரன் ஸ்டைலில் ஒரு இளைஞன் வாயில் பற்ற வைக்காத சிகரெட்டுடன் வருகிறான். அவனைப் பார்த்ததும் கையது, வாயது பொத்தி அடக்க ஒடுக்கமாக பயந்தவள் போலாகிறாள் பெண்.

பேருந்து வருகிறது. அந்த இளைஞனும், அவளும் கை காட்ட பேருந்து நிற்கிறது. பேருந்தில் ஏறும் இளைஞனிடம் “உள்ளே சிகரெட் பிடிக்கக் கூடாது..” என்று ஓட்டுநர் எச்சரிக்கிறார். பயல் கேட்காமல் அலட்சியமாக பார்க்கிறான். அவன் அருகில் நிற்கும் பதட்டத்தில் அந்தப் பெண் தனது பர்ஸை துழாவி, துழாவி நாணயத்தை எடுத்து உண்டியலில் போட்டுவிட்டு உள்ளே செல்கிறாள்.

டிரைவர் போட்ட பிரேக்கில் அவள் கையில் இருந்த பை நழுவி விழுக.. அதில் இருந்தவைகள் அனைத்தும் பேருந்தின் உள்ளே சிதற.. அவளும் கீழே விழுகிறாள். ஆபாத்பாந்தனாக இளைஞன் அவளுக்குக் கை கொடுத்துத் தூக்க முயல.. அவனது கையைத் தட்டிவிட்டுவிட்டு கீழே விழுந்தவைகளை பொறுக்கியெடுத்துக் கொண்டு பேருந்தின் ஒரு மூலைக்குச் சென்று அமர்கிறாள்.

இளைஞன் ஸ்டைலாக அவளைப் பார்த்தபடியே வர தன்னை நோக்கித்தான் வருகிறானோ என்று நினைத்து ஒரு நொடி பயப்படுகிறாள். ஆனால் இளைஞனோ சும்மா, அவளருகில் வருவதைப்போல் பாவ்லா காட்டிவிட்டு வேறொரு இடத்தில் சென்று அமர்கிறான். பெண் பெருமூச்சுவிடுகிறாள்.

அப்படியே தனது கைகளைப் பார்ப்பவள் திடுக்கிறாள். கையில் வாட்ச் இல்லை. எங்கே என்று சீட்டுகளுக்கு அடியில் குனிந்து தேடுகிறாள். அக்கம், பக்கம் தேடுகிறாள். அப்போது அந்த சண்டியர், தனது கையைப் பிடித்தது அவளது நினைவுக்கு வர அவன்தான் திருடியிருக்கிறான் என்று நினைக்கிறாள். அதற்கேற்றாற்போல் அந்த இளைஞனும் அவளுடைய படபடப்பையும், பயத்தையும் பார்த்து நக்கலாகச் சிரிக்க கோபாவேசம் ஏற்படுகிறது அவளுக்குள்.

தன் பையில் வைத்திருந்த ஸ்வெட்டர் பின்னும் ஊசியை எடுத்துக் கொண்டு பட்டென்று இளைஞனின் அருகில் வந்து அமர்கிறாள். ஊசியால் ஒரே குத்து.. “மரியாதையா வாட்ச்சை எடுத்து பேக்ல வை.. கமான்.. க்விக்..” என்று வெறி வந்தவள் போல் அவன் காதோரம் சொல்லியபடியே ஊசியால் குத்தத் துவங்க..

எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன இளைஞன் தனது பையில் இருந்த வாட்ச்சை கழட்டி அவள் பேக்கில் போடுகிறான். விருட்டென்று எழும் அந்தப் பெண் பேருந்தை நிறுத்தும் சுவிட்ச்சை அழுத்திக் கொண்டேயிருக்கிறாள் டிரைவர் பிரேக் போடும்வரை.

கதவு திறந்தவுடன் மின்னல் வேகத்தில் தாவிக் குதித்து செல்கிறாள். சோர்வுடன் கதவைத் திறந்து வீட்டுக்குள் வருபவள் வந்த வேகத்தில் தனது பேகை அப்படியே கவிழ்க்கிறாள். ஒவ்வொன்றாக கீழே விழுகின்றன. அதில் அந்த இளைஞன் போட்ட வாட்ச்சும் விழுகிறது. அது அவளுடைய வாட்ச் இல்லை. அவனுடைய வாட்ச்.

அப்படியே அவளுடைய பார்வை அங்கேயிருக்கும் டேபிள் நோக்கிப் பாய.. அங்கே சமர்த்துப் பிள்ளையாக இருக்கிறது அவளுடைய வாட்ச்.

“ஐயோ” என்ற உணர்வோடு அவள் பார்க்க..

படம் முடிவடைகிறது.


இரண்டாவது குறும்படம்

சரவணன்-நமீதா-கெளபாய்


இது ஒரு அனிமேஷன் திரைப்படம்.

ஒரு குடியிருப்பில் குடியிருக்கும் நாய் ஒன்று எதிர் பிளாட்டில் குடியிருக்கும் நாய் போன்ற நிலையில் இருக்கும் ஒரு சரவணனைப் பார்த்து தினமும் குறைக்கிறது.. சரவணன் தாங்க முடியாத மனக்குடைச்சலில் இருக்கிறான். அக்கம்பக்கம் அனைவருமே தினமும் நடக்கும் கூத்து என்பதாகவே இதனைப் பார்க்கிறார்கள். வாழ்க்கை வெறுக்கிறது சரவணனுக்கு.

மொட்டை மாடிக்கு வருகிறான் சரவணன். அந்தக் கட்டிடத்தின் மேலே மாட்டப்பட்டிருக்கும் ஒரு வினைல் போர்டில் குதிரை ஓட்டியபடி கெளபாய் தோற்றத்தில் ஒருவன் காட்சியளிக்கிறான். அவன் நிற்கும் கட்டிடத்திற்கு நேர் எதிரே பிரம்மாண்டமான போர்டு. அதில் ஒரு நமீதா தனது முன்னழகை மட்டும் காட்டியபடியே இருக்கிறாள்.

இரண்டையும் மாறி, மாறி பார்த்த சரவணன் “நமக்கில்லை.. நமக்கில்லை.. இந்த ஜென்மத்தில் இல்லை.. முருகன்கிட்ட போய் சேருவோம்..” என்று நினைத்து ‘தொபுக்கடீர்' என்று கீழே குதிக்கிறான். அவன் குதிப்பை பார்த்தவுடன் பக்கத்து வீடு, எதிர் வீடு, என்று மனிதர்கள் அலற.. குரைத்த நாய் மேலும் கூடுதலாக குரைக்கத் துவங்குகிறது.

அதுவரையில் போர்டில் சிற்பமாக இருந்த நமீதா படாரென்று போர்டை உடைத்துக் கொண்டு உண்மையான நமீதாவாக வந்து சரவணனை பரிதாபமாக பார்க்கிறாள். நமீதாவே உண்மையாக வந்த பின்பு எதிர்த் திசையில் இருக்கும் கெளபாய் மட்டும் சும்மா இருப்பானா..? அவனும் உயிருடன் வந்தவன் வழக்கமான நம்மூர் சினிமா போல் நமீதாவிடம் சைட் டிராக் ஓட்ட வேண்டியிருப்பதால் தனது வீரத்தைக் காட்டுவதைப் போல் குதிரையில் கழுத்தில் வைத்திருந்த கயிற்றை கீழே போய்க்கொண்டேயிருக்கும் சரவணன் மீது வீசுகிறான்.

பாவிப் பய கெளபாய்.. சொர்க்கத்துல எண்ட்ரியாகி ரம்பா, மேனகா, ஊர்வசியைப் பார்க்க ஆசையாப் போன சரவணன் கழுத்துல கயிறு மாட்டி, அவனை ‘அம்போ'ன்னு அப்படியே தொட்டில் கட்டி ஆட்டுற மாதிரி ஆட்ட வைக்குது.

மேலே நமீதாவைப் பார்த்து கெளபாய், “எப்படி காப்பாத்திட்டேன் பாத்தியா..? வர்றியா கண்ணே.. ‘முக்காபுலா'ன்னு பாடிக்கிட்டே ஆடலாம்..” என்று கண் சிமிட்டி அழைக்கிறான். ஆனால் முருகனின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கு.. வைச்சான் பாருங்க ஆப்பு..

தன் கழுத்தில் இறுகிக் கொண்டிருந்த கயிற்றை சரவணன் பிடித்திழுக்க.. அது இன்னொரு முனையைக் கையில் பிடித்திருந்த அந்த கெளபாயின் கையில் சுறுக்காக விழுந்து அவனை கீழே இழுத்து விடுகிறது.

ஒரு நொடியில் கெளபாய் முருகனனின் திருவடியைச் சேர.. தூக்கிவீசப்படும் அப்பாவி சரவணனோ நமீதாவின்............................................. “மார்புக்கு மத்தியிலே செத்துவிடத் தோணுதடி காதலியே” என்பதை நிஜமாகவே உணர்கிறான் அந்த அப்பாவி சரவணன்.

கெளபாயின் சடலத்தை போலீஸார் தூக்கிச் செல்ல..

இங்கே நமீதா உங்களது ‘செல்லத்தைத்' தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ள..

படமும் முடிந்துவிட்டது.


மூன்றாவது குறும்படம்

இரண்டு முட்டாள்கள்!



இதுவும் அனிமேஷன் திரைப்படம்தான்..

ஒரு மைதானம் போன்ற நிலப்பரப்பு. வேகாத வெயிலில் ‘வெக்கு', ‘வெக்கு' என்று நடந்து வருகிறான் ஒரு சொட்டைத் தலை மனிதன். அவன் நடையைப் பார்த்தால் எதையோ ஒன்றைத் தேடி அலைகிறான் என்பது மட்டும் புரிகிறது.

வருபவனை வழி மறிக்கிறது ஒரு தடுப்புச் சுவர். வெறியில் வருபவன் திகைக்கிறான். கோபப்படுகிறான். ஆத்திரப்படுகிறான்.

என்ன செய்துவிடும் இந்த சுவர் என்று நினைத்து தனது உடல் வலுவால் அதன் மீது மோதி விழுகிறான். உடல் வலிக்கிறது. தலையால் முட்டுகிறான். தலை வலிக்கிறது. கை முஷ்டியால் குத்துகிறான். வலி தாங்காமல் கையைப் பிடித்துக் கொள்கிறான். காலால் எட்டி உதைக்கிறான். பாதத்தைப் பிடித்துக் கொண்டு அனத்துகிறான். ஓடி வந்து உதைக்கிறான். உதைத்த வேகத்தில் பின்புறமாகப் போய் விழுகிறான்.

எவன் கட்டியது இந்தச் சுவர்..? இதென்ன பெர்லின் சுவரா..? இடிபடாமல் போவதற்கு என்றவன் எவ்வளவோ முயன்றும் பயனளிக்காமல் சோர்ந்து போய் அப்படியே சுவரில் சாய்ந்து அமர்கிறான்.

கேமிரா மெல்ல, மெல்ல முழு மைதானத்தையும் காட்ட.. இப்போது அந்தச் சுவர் அந்த மைதானத்தின் பாதி அளவு நீளத்திற்குத்தான் உள்ளது. இரண்டு புற ஓரங்களிலும் செல்வதற்கு பாதை இருப்பது தெரிகிறது. பின் எதற்கு சுவரை உடைக்க முயலும் முட்டாள்தனம்..?

கேமிரா மேலே எழும்பி இந்தப் பக்கம் வர இங்கே கன்னியொருவள் அதே போன்று இந்தப் பக்கமிருந்து சுவற்றை இடிக்க முயற்சித்து முடியாமல் போய், அதே சுவரின் மறுபக்கத்தில் குறுகிப் போய் அமர்ந்திருக்கிறாள்.

இருவரையும் திரையில் ஒன்று சேர காண்பிப்பதோடு படம் நிறைவடைகிறது.

அவ்வளவுதான் மக்களே..

மெக்ஸிகன் நாட்டுத் திரைப்படம் என்று ஆசையோடு போனேன்.. அந்தத் திரைப்படத்திற்குப் பதிலாக முதலில் காட்டிய இந்த மூன்று குறும்படங்களே அருமையாக இருந்ததால் அவற்றையே எழுதிவிட்டேன்.

நன்றி..

எனது ‘புனிதப்போர்' படத்தையும் நான் எங்கிட்டு போய் யார்கிட்ட.. இது மாதிரி போட்டுக் காட்டுறது..? நாலு பேராவது பார்த்தாத்தானே எனக்கு மருவாதை.. முருகன் ஒண்ணும் கண்டுக்க மாட்டேங்குறான்பா..

எனது 'புனிதப்போர்' குறும்படம்-உங்களுக்காக இணையத்தில்..!

11-07-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நான் இயக்கிய 'புனிதப்போர்' என்னும் குறும்படத்தை 'மக்கள் தொலைக்காட்சி'யில் ஒளிபரப்பியது பற்றி எனது இந்த http://truetamilans.blogspot.com/2008/05/blog-post_21.html பதிவில் சொல்லியிருந்தேன்

அப்போது படத்தினை பார்க்க முடியாதவர்களுக்காகவும், கடல் கடந்த தேசத்தில் இருக்கும் சக கொலைவெறியுடன் காத்திருக்கும் வலைப்பதிவர்களுக்காகவும் 'புனிதப்போர்' குறும்படத்தை இப்போது இணையத்தில் ஏற்றியிருக்கிறேன்.

கால தாமதத்திற்கு நானே முழுப் பொறுப்பேற்று கொள்கிறேன்.. என் அப்பன் முருகப் பெருமானின் திருவிளையாடல்களையெல்லாம் ஒரு வழியாகச் சமாளித்து, இப்போது அதே கோவணாண்டியின் பேருதவியால் இதனை வலையில் ஏற்றியுள்ளேன்.

ஆக இப்படித்தான் நடக்க வேண்டும் என்று 'அவன்' சொல்லும்போது நாம் என்ன செய்ய முடியும்..?

மக்களே.. கால நேரம் 10 நிமிடங்களுக்கு மேல் உள்ளதால் இரண்டு பைல்களாக மாற்றப்பட்டுள்ளன.

உங்களுடைய கருத்துக்களை சொல்ல வேண்டுமெனில் இதிலேயே கேட்கலாம்.. அல்லது உங்களது தளத்திலேயே தனிப்பதிவாகவும் போடலாம். அது அவரவர் வசதி.

ஆனால் தயவு செய்து எனது பதிலை உடனேயே எதிர்பார்க்காதீர்கள்.. முடியாத சூழலில் மாட்டிக் கொண்டுள்ளேன்.. தினமும் இரவு 8 மணிக்கு மேல்தான் நான் முழுச் சுதந்திரத்துடன் இணையத்தில் மேய முடியும்.

ஆக எப்படியும் உங்களுக்கு பதிலைத் தந்துவிடுவேன்..

நன்றி
பாகம்-1

பாகம்-2

மக்கள் தொலைக்காட்சியில் எனது குறும்படம்!

23-05-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எழுதியே தீர வேண்டுமென முனைந்தால் சுமாராக 40 பக்கங்களுக்கு குறையாமல் எழுதக்கூடிய அளவுக்கு, பல பாடங்களை எனக்குக் கற்றுக் கொடுத்த நிகழ்வு ஒன்று கடந்த ஓராண்டுக்கு முன்பாக நிகழ்ந்தது.

பல வருடங்களாக என் மனதில் இருந்த ஒரு கருவை எழுத்தாக்கி, அதனை விரிவுபடுத்தி, செம்மையாக்கி ஒரு குறும்படமாக என் மனதிலேயே தேக்கி வைத்திருந்தேன்.

மனதில் நிறுத்தி வைத்திருந்த அக்குறும்படத்தைத்தான் 1 வருட காலத்திற்கு முன்பு, மிகுந்த போராட்டத்திற்குப் பின்னால் படச்சுருளில் படம் பிடித்தேன்.

வழி தெரியாதவன் விசாரிக்க பல வழிகள் இருக்கும் என்பதைப் போல, குறும்பட போட்டிகளுக்கு மட்டும் எனது படத்தினை அனுப்பிவிட்டு அமைதியாகி விட்டேன்.

என்ன காரணமோ தெரியவில்லை... அதனை எனது வலைப்பதிவில் போடுவதற்கு எண்ணமே வரவில்லை.

வலைப்பதிவர்களில் சிலருக்கு மட்டுமே நான் எடுத்திருந்த இந்த குறும்படம் பற்றித் தெரிந்திருந்தாலும், இதுவரையிலும் அந்தச் சிலரில் 4 பேருக்கு மட்டுமே இதனைப் பார்க்கும் கொடுமையை நான் கொடுத்திருந்தேன்.

வலையுலக வசிஷ்ட மாமுனி திரு.மா.சிவக்குமார், 'தடாலடி புண்ணியவான்' திரு.ஜி.கெளதம், 'இனமானப் பேராசிரியர்' திரு.தருமி, திருமிகு.ஓசை செல்லா ஆகிய நான்கு பேர் மட்டுமே இதுவரையில் கஷ்டப்பட்டு இக்குறும்படத்தைப் பார்த்த புண்ணியவான்கள்.. வாழ்க வளமுடன்..

இதனை வலைப்பதிவில் ஏற்றுவதற்குத் தேவையானதைப் போல மாற்றம் செய்து கொடுக்கும்படி திருமிகு.ஓசை செல்லாவிடம் 6 மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன். பின்பு நானே அதனை மறந்துவிட்ட காரணத்தால், திருமிகு.ஓசை செல்லாவிடம் இப்போது நான் இதுபற்றி கேள்வி ஏதும் கேட்க முடியாது..

வலைப்பதிவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்..

இந்த மன்னிப்புக்கு காரணம் வேறு விஷயம்..

இதுவரையிலும் தப்பித்துக் கொண்ட வலைப்பதிவர்கள் தற்போது எனது குறும்படத்தை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள் என்பதால் அவர்களிடம் எனது மன்னிப்பை முன்பே கேட்டு விடுகிறேன்.

வருகின்ற 25-05-08, ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8.30 மணியளவில் மக்கள் தொலைக்காட்சியில் நான் எழுதி, இயக்கிய 'புனிதப்போர்' என்னும் குறும்படம் ஒளிபரப்பாக உள்ளது என்பதனை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று எனது குறும்படத்தை நீங்கள் பார்க்க முடியாமல் போனாலும் எனது கிரகமோ, அல்லது எனக்கு நடந்து கொண்டிருக்கும் காலத் திசையோ உங்களை விடப் போவதில்லை..

அடுத்த வெள்ளிக்கிழமை அதாவது வருகின்ற 30-05-2008 அன்று பகல் 12.30 மணியளவில் மீண்டும் 'அந்தக் கொடுமை' மக்கள் தொலைக்காட்சியில் அரங்கேற உள்ளதால்..
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடியாதவர்கள் அதற்கடுத்த வெள்ளிக்கிழமையன்றாவது பார்த்துத் தொலைக்குமாறு அன்போடும், பண்போடும், பணிவன்போடும் கேட்டுக் கொள்கிறேன்..

பார்க்க விரும்பும் அன்பு வலையுலக உள்ளங்கள் முடிந்தால் பாருங்கள்..

பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை நேரமிருந்தால், தங்களுக்கு ஓய்வு கிடைத்தால், தங்கள் மனதுக்கு ஏதாவது தோன்றினால் உள்ளதை உள்ளபடியே எனக்கு எழுதியனுப்புங்கள்..

அல்லது வலைப்பதிவு செய்யுங்கள்.. அல்லது இனிமேல் டிவி நிகழ்ச்சியையே பார்க்க மாட்டேன் என்றோ, அல்லது இனிமேல் என் வாழ்க்கையில் குறும்படம் பக்கமே போக மாட்டேன் என்றோ சபதமெடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படியிருப்பினும் என் அப்பன் முருகப்பெருமான் உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளை வழங்கி இன்னும் இது போன்ற நிறைய குறும்படங்களை பார்க்கும் வாய்ப்பையும் வழங்குவான் என்பதனை அவன் சார்பாகச் சொல்லி விடைபெறுகிறேன்.
டிஸ்கி : இந்த நிகழ்ச்சி நிரல் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என்பதனையும் மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தார் குறிப்பிடுகின்றனர்.

எனவே, ஒருவேளை அந்த மாறுதலினால் எனது குறும்படம் அந்த நேரத்தில் திரையிடப்படவில்லையெனில், பதிவர்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்.. தப்பித்ததாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்..