05-05-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
Lady Dream Cinemas நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பைஜா டாம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சச்சின் மணி என்னும் புதுமுகம் ஹீரோவாக நடித்திருக்கிறார். நந்திதா ஸ்வேதா ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும், அருள்தாஸ், மனோபாலா, சித்ரா லட்சுமணன், ‘பாவா’ லட்சுமணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சென்றாயன், அப்புக்குட்டி, அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – சான் ரோல்டன், கலை இயக்கம் – லால்குடி என். இளையராஜா, படத் தொகுப்பு – ரூபன், ஒலி வடிவமைப்பு – அருண் சீனு, நடனம் – ஷோபி, நோபல், சண்டை பயிற்சி – எம்.கணேஷ், புகைப்படம் – ராஜ், பாடல்கள் – யுகபாரதி, அருண்ராஜா காமராஜ், ஜி.கே.பி, தயாரிப்பு நிறுவனம் – லேடி ட்ரீம் சினிமாஸ், தயாரிப்பாளர் – பைஜா டாம், எழுத்து, இயக்கம் – பாலையா டி.ராஜசேகர்.
அருள்தாஸ் ரயில்வே பாதுகாப்புப் படையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். தான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தும் லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்குக் கிடைக்கும் மரியாதைகூட தனக்குக் கிடைக்கவில்லையே என்கிற கோபமும், ஆதங்கமும் அருள்தாஸுக்கு உண்டு.
இதன் காரணமாய் தினமும் ரயில்வே ஸ்டேஷனில் யாராவது சிலரை பிடித்து வந்து அடைத்து வைத்துவிட்டு மதியம் ரயில்வே கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று அபராதம் கட்ட வைத்து அவர்களை விடுவிப்பது இவரது வழக்கம்.
அப்படித்தான் அன்றைக்கும் சென்றாயன், அருண்ராஜா காமராஜ், அப்புக்குட்டி, மனோபாலா என்று பலரையும் இழுத்து வந்து ரயில்வே போலீஸ் ஸ்டேஷனின் லாக்கப்பில் அடைத்து வைக்கிறார்.
கடைசியாக ஹீரோ சச்சினும் அருள்தாஸிடம் வந்து சிக்குகிறார். அவரோ தான் அவசரமாக பாண்டிச்சேரி போயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் கெஞ்சி பார்க்கிறார். ஆனால் போலீஸ் விட மறுக்கிறார்கள்.
தான் எதற்காக பாண்டிச்சேரிக்கு அவசரமாகப் போக வேண்டும் என்கிற உண்மையான காரணத்தை அந்த அறையில் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார் சச்சின்.
சச்சின் காதலிக்கும் மேகலா என்னும் நந்திதா ஸ்வேதாவுக்கு அன்றைக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதால் அதனை தடுத்து நிறுத்தி அவளை தான் திருமணம் செய்ய விரும்பியே பாண்டிச்சேரிக்கு உடனேயே போயாக வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் சச்சின்.
இவரது காதல் கதையைக் கேட்ட மற்ற அனைவரும் எப்படியாவது சச்சினை போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க வைத்துவிட திட்டம் தீட்டுகிறார்கள். அதே நேரம் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைத்திருப்பதாகச் செய்தி வர.. பாம் ஸ்குவாடுகள் வந்து ரயில்வே ஸ்டேஷனே பரபரப்பாகிறது. இன்றைக்கு பிடிபட்டவர்களை கோர்ட்டுக்கு கொண்டு போக வேண்டாம் என்று முடிவெடுக்கிறார் அருள்தாஸ்.
இந்தச் சூழலில் அங்கேயிருந்த நண்பர்கள் சச்சினை தப்பிக்க வைத்தார்களா.. அல்லது அருள்தாஸிடம் மாட்டிக் கொண்டாரா என்பதுதான் மீதமான கதை.
நடிப்பென்று பார்த்தால் ஹீரோ புதுமுகமாக இல்லாமல் அழகாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இயல்பாகவே நடித்திருக்கிறார். அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு பங்கமில்லாத வகையில் இவருடைய நடிப்பு அமைந்திருக்கிறது.
நந்திதா ஸ்வேதாவின் பல குளோஸப் காட்சிகள் இவருக்கு ஏன் தமிழ்ச் சினிமாவில் ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை என்று யோசிக்க வைத்திருக்கிறது. பிரேமில் இவர் இருக்கின்ற காட்சிகளிலெல்லாம் அவ்வளவு அழகு. அத்தனை அழகுடன் அழகுறவும் நடித்திருக்கிறார்.
சென்றாயனும், அப்புக்குட்டியும் பாதிக்குப் பாதி வசனங்களை கைப்பற்றி தங்களால் முடிந்த அளவுக்கு படத்தின் கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்கள். மரியாதை கிடைக்காத ராமண்ணாவாக நடித்திருக்கும் அருள்தாஸ் இன்னொரு பக்கம் தனது கோபமான நடிப்பால் ஒரு சராசரி இன்ஸ்பெக்டரை நேரில் கொண்டு வந்திருக்கிறார்.
தன்னை மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆட்களை பிடித்து வருவதும், பின்பு அவர்களிடத்தில் தனது கெத்து குறையாமல் பேசுவதும், தன்னை ஒருத்தனாச்சும் மதிங்கடா என்று கெஞ்சுவதுபோல நடிப்பதுமாய் ஒரு வித்தியாசமான இன்ஸ்பெக்டரை திரையில் காண்பித்திருக்கிறார் அருள்தாஸ். நன்று.
சித்ரா லட்சுமணனுக்கு ரொம்ப நாட்கள் கழித்து பேசப்படுவது போன்ற கேரக்டர். 5 கோடி கமிஷனுக்கு ஆசைப்பட்டு வேலை போட்டுக் கொடுக்கும் அப்பாவி ஆபீஸர். இதே ஆபீஸர் வீட்டில் உண்மை தெரிந்தவுடன் ஹீரோவை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கும் கண்டிப்பானவராக தோன்றியிருக்கிறார். சித்ரா ஸாருக்கு இந்தப் படம் பெயர் சொல்லும் திரைப்படம்.
சில காட்சிகளே ஆனாலும் டபுள் மீனிங் டயலாக்குடன் புகுந்து விளையாடியிருக்கிறார் மனோபாலா. இந்தக் காட்சி அவசியம் தேவைதானா இயக்குநரே..? வர வர காமெடி வசனத்திற்கும், திரைக்கதைக்கும் பஞ்சமாகிவிட்டது தமிழ்த் திரையுலகில்..!
துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு அழகாக இருக்கிறது. ஹீரோயின் நந்திதா ஸ்வேதாவின் அழகை வெளிப்படுத்தியதில் முக்கால் பங்கு ஒளிப்பதிவாளருடையதுதான். பாண்டிச்சேரி மற்றும் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனின் அழகை அழகாகவே படம் பிடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. ஆனால் கேட்கும் ரகம். ஒரு முறை கேட்டுவிட்டு தொலைந்த லிஸ்ட்டில் இந்தப் படத்தின் பாடல்களும் இடம் பெற்றுவிட்டன.
படத்தின் பெரும் பகுதி தாம்பரம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனின் லாக்கப் ரூமில் நடைபெற்றாலும் அதையும் சுவாரஸ்யமாகவே திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஹீரோவின் காதல் உருவாகும் கதையும் ஒரு வித்தியாசமான வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காதலன் என்ன வேலை பார்க்கிறான் என்பதுகூட தெரியாமலேயே காதலிக்கத் துவங்குகிறாள் என்று திரைக்கதை அமைத்திருப்பதுதான் காமெடி. அதேபோல் தானே வேலையில்லாமல் நண்பனின் அறையில் அவனது கெஸ்ட்டாக இருக்கும் சூழலில் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் காதலிக்க நினைக்கும் ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை என்னவென்று சொல்வது..?
அதுவும் ஹீரோவை பொதுவாக நல்லவனாகத்தான் காட்டுவார்கள். ஆனால் இதில் டீஸண்ட்டான கெட்டவனாக காட்டியிருக்கிறார்கள். மாமனாரின் சொத்து மதிப்பு 50 கோடி என்றவுடன் அந்தச் சொத்தை அடையும் பொருட்டு காதலியின் 4 நாள் கால அவகாச இடைவேளையில் கல்யாணத்திற்காக வேண்டியே வேலை தேடுவதெல்லாம் காமெடியான திரைக்கதையாகிவிட்டது. நிஜமாக யோசித்துப் பார்த்தால் முகமூடி போடாத கொள்ளையனாக இந்த மாப்பிள்ளை அந்தப் பெண்ணுக்கு வந்து சேர்கிறார் என்றுதான் அர்த்தம். இது பொருந்தக் கூடிய காதலா இயக்குநரே..?
அதிலும் யாரென்று தெரியாமலேயே தனது வருங்கால மாமனாரிடமே போய் இந்தக் கதையைச் சொல்லி அவருக்குக் கமிஷன் தருவதாகச் சொல்லி கூட்டணி சேர்ப்பதால் உண்மை தெரிந்தவுடன் உண்மையில் காதலர்கள் மீது வர வேண்டிய பரிதாப சிம்பதி இதனாலேயே காணாமல் போனது இயக்குநருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
கடைசியில் ஹீரோவும், ஹீரோயினும் செய்திருக்கும் டிராமா செட்டப்பும், உடன் இருக்கும் நண்பர்கள் செய்யும் நாடகமும்.. ஒரு அம்சமான டிவிஸ்ட்டு..!
சிற்சில இடங்களில் வாய் விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறார். பல இடங்களில் புன்னகைக்க வைத்திருக்கிறார். புன்னகைத்த இடங்களில் இன்னமும் பலமாக சிரிக்க வைத்திருந்தால் படம் பற்றிய மெளத் டாக்கும் எகிறியிருக்கும் என்பது உண்மை.
ஒரு முறை பார்க்கலாம் என்கிற கேட்டகிரியில் இந்தப் படமும் இணைந்திருக்கிறது..!
|
Tweet |
0 comments:
Post a Comment