இரும்புத்திரை - சினிமா விமர்சனம்

12-05-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

விஷால் பிலிம் பேக்டரியின் சார்பில் நடிகர் விஷாலே இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனம் வாங்கி வெளியிட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் விஷால், சமந்தா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.  ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் படத்தின் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், சாம் படத் தொகுப்பாளர் – ரூபன், கலை இயக்குநர் – உமேஷ், இசை – யுவன் சங்கர் ராஜா, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், ஒலி வடிமைப்பு – தபஸ் நாயக், தயாரிப்பு – விஷால், எழுத்து, இயக்கம் – பி.எஸ்.மித்ரன்.

இன்றைய நவீன அவசர யுகத்தில் செல்போன் என்பது அனைவரின் அத்தியாவசியமாகிவிட்டது. தொலைத் தொடர்பு மட்டுமன்றி வீட்டில் இருந்தபடியே அனைத்துவகையான வேலைகளையும் செல்போன் மூலமாகவே தற்போது செய்து கொள்ள முடிகிறது.
வங்கிப் பரிவர்த்தணைகள், பேலன்ஸ் விசாரிப்பு, லோன் கேட்பு என்று ஒரு பக்கம் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களையும் இதே செல்போனின் மூலமாகவே தற்போதைய சமூகம் அணுகிக் கொண்டிருக்கிறது.
மற்றொரு பக்கம் ஆபாச படங்கள், குறுந்தகவல்கள், தனிப்பட்ட பேச்சுக்கள், செல்பி புகைப்படங்கள் என்று பலவும் இதே செல்போன் மூலமாகவம் பரவி வருகிறது.
இந்த செல்போன், மக்களுக்கு வரமா சாபமா என்கிற கேள்விக்கு இந்தப் படத்தில் ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார்கள்.
ராணுவத்தில் கேப்டனாக இருக்கும் கதிர் என்னும் விஷால் ரொம்பவே முன் கோபி. வெளிநாட்டிற்குச் சென்று செட்டிலாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர். ஊர் முழுக்க கடன் வாங்கி அலைந்த தனது தந்தை மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இவருக்கு ஒரு தங்கையுண்டு. இவர்கள் கிராமத்தில் இருக்கிறார்கள்.
முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் விஷாலுக்கு மன நல சிகிச்சை தேவைப்படுவதாகச்  சொல்லி அவரை மன நல சிகிச்சை நிபுணரிடம் சென்று சிகிச்சை பெற்று அதன் பிறகு சான்றிதழ் பெற்று வரும்படி ராணுவத்தில் சொல்லியனுப்புகிறார்கள்.
மன நல மருத்துவரான ரதி தேவி என்னும் சமந்தாவிடம் இதற்காக வருகிறார். முதலில் மோதலுடன் ஆரம்பித்தாலும் பின்பு இருவரும் நெருக்கமாகப் பழகுகின்றனர்.
ஒரு வித்தியாசத்திற்கு ஊருக்குச் சென்று தந்தை, தங்கையுடன் சில நாட்கள் இருந்துவரும்படி சொல்கிறார் சமந்தா. இதனையேற்றுக் கொண்டு விஷாலும் ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் தனது தங்கையும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபரும் காதலிப்பது அறிந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார்.
திருமணத்திற்கு 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்று எஸ்டிமேட் போடுகிறார் விஷால். கையில் 4 லட்சம் ரூபாய் இருக்க.. மீதமான 6 லட்சம் ரூபாய்க்கு… கடனே வாங்கக் கூடாது என்கிற கொள்கையில் இருக்கும் விஷாலே வாங்கித் தொலைவோம் என்ற மனநிலைக்கு வருகிறார்.
ஒவ்வொரு வங்கியாக ஏறி, இறங்குகிறார்கள். ராணுவ வீரன் என்பதால் பல வங்கிகளில் கடன் கிடைக்கவில்லை. அதனால் தனது தந்தையின் பெயரில் இருக்கும் நிலத்தை வைத்து கடன் வாங்க முயற்சிக்கிறார். அதுவும் பலனளிக்கவில்லை.
ஆனால் கடன் இல்லை என்று மறுக்கப்பட்ட ஒரு வங்கியின் வாசலில் மொபைல் போன் விற்றுக் கொண்டிருந்த ஒருவர் இதற்குக் குறுக்கு வழியொன்றை காட்டுகிறார்.
அம்பத்தூரில் இருக்கும் ஒரு ஜெராக்ஸ் கடையை விரிவுபடுத்துவதாகச் சொல்லி அதற்குக் கடன் கேட்போம். கடைக்கு ஆள் வந்து பார்ப்பார்கள். பார்த்த பின்பு கடனை நிச்சயமாகக் கொடுத்துவிடுவார்கள். நீங்கள் அதற்காக எனக்கு மொத்தக் கடன் தொகையில் 10 சதவிகிதத்தை கமிஷனாக கொடுத்தால் போதும் என்று ஆசை வார்த்தை காட்டுகிறான்.
தங்கையின் திருமணத்தை நடத்தியாக வேண்டுமே என்பதால் விஷாலும் அவரது அப்பா டெல்லி கணேஷும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். கடனும் கிடைக்கிறது. கமிஷனையும் அவனுக்குத் தருகிறார்கள்.
ஆனால் பணம் டெல்லி கணேஷின் வங்கிக் கணக்கிற்கு வந்த உடனேயே யாரோ ஒருவரால் மொத்தப் பணமும் சுருட்டப்படுகிறது. செய்தியறிந்து வங்கிக்கு ஓடுகிறார் விஷால். வங்கியோ ஸ்டேட்மெண்ட்டை எடுத்துப் போட்டு, “நீங்கள்தான் இணையம் வழியாக டிரான்ஸ்சேக்ஷன் செய்திருக்கிறீர்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது…” என்கிறார்கள்.
இதேபோல் பல நபர்களிடம் அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை லாவகமாக கொள்ளையடிக்கிறது அர்ஜூன் தலைமையிலான ஒரு கொள்ளைக் கும்பல். உடம்பெல்லாம் மூளையாக தொழில் நுட்பத்தின் உச்சம் என்று சொல்லப்படும் அளவுக்கு செயல்படும் ‘வெள்ளை பேய்’ என்றழைக்கப்படும் அர்ஜூனை தேடி புறப்படுகிறார் விஷால்.
விஷால் வில்லன் அர்ஜூனை தேடிப் பிடித்தாரா.. தன்னுடைய பத்து லட்சம் ரூபாய் பணத்தைத் திரும்பப் பெற்றாரா என்பதுதான் இடைவேளைக்கு பின்னான படத்தின் கதை.
முதல் பாராட்டு இயக்குநர் மித்ரனுக்கு..! வெறும் தகவல்களில் என்ன ஆகிவிடப் போகிறது என்றெண்ணி சாதாரண ஜெராக்ஸ் கடையில் நமது ஜெராக்ஸ் பிரதிகளைவிட்டுவிட்டு வருகிறோம். ஆனால் அதிலிருந்துதான் நம்மை வைத்து இன்னொரு மூன்றாவது ஆள் பணம் சம்பாதிக்கும் வித்தையைத் துவக்குகிறான் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
இது மட்டுமில்லாமல்.. நமது வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அலட்சியமாக நாம் பிறருடன் ஷேர் செய்வதும், தெரியாமல் வங்கி ஆள் என்று நினைத்து போனில் தகவலைச் சொல்வதும் எத்தனை ஆபத்தானது என்பதையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
வங்கிகளில் நியாயமான வழிகளில் கடன் கேட்பவர்களை நாயாய் அலையவிடும் அதிகாரிகள் நாட்டைவிட்டு ஓடி விடும் கோடீஸ்வரர்களுக்கு மட்டும் அள்ளிக் கொடுக்கிறார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதிலும் ராணுவ வீரர்களுக்கு வங்கிகளில் கடன் கொடுப்பதில்லை என்கிற உண்மை நிலை இப்போதைய இந்தியாவின் உண்மையான நிலையைக் காட்டுகிறது.
மேஜர் கதிரவனாக விஷால் நடித்திருக்கிறார். ராணுவத்தில் சின்சியராக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் கோபப்படுபவராகவும், வெளிநாட்டில் செட்டிலாக விருப்பம் உள்ளவராகவும் இருக்கிறார். இதே விஷால்தான் கிளைமாக்ஸில் ராணுவ வீரர்களைப் பற்றி உருகி உருகி கேள்விகளை எழுப்புகிறார். இதென்ன முரண்பாடான கேரக்டர் ஸ்கெட்ச் என்று தெரியவில்லை.
முதலில் சாதாரணமான நபராக அறிமுகமாகி பின்பு மேஜராகி தெரிவதில் ஒரு சுவாரஸ்யம் தெரிகிறது. அதனை தனது நடிப்பில் காட்டியிருக்கிறார் விஷால். சமந்தாவுடனான மோதலும், அதைத் தொடர்ந்த நட்பும், இதனால் உருவாகும் காதலும் மிக இயல்பாக காட்டப்படுகிறது.
தனது தந்தை மீதான வெறுப்பை வார்த்தைகளில் கொட்டும் விஷாலும், இதற்கு சமந்தா சொல்லும் ட்ரீட்மெண்ட் வசனங்களும் நச் என்று பொருந்தியிருக்கின்றன. அர்ஜூனுக்கு சமமான கெத்தோடு அவரையே பாஸ் என்று அழைத்து கிண்டலடித்தும் அவருடைய ஸ்டைலிலேயே அவரை மடக்குவதும் திரைக்கதையில் சூட்டை உருவாக்குகிறது.
விஷாலுக்கு இது போன்ற அதிகம் நடிப்புக்கு ஸ்கோப் இல்லாத படங்கள்தான் முற்றிலும் சரி. இனி இதையே அவர் தொடர்வார் என்று நம்புகிறோம்.
ஆக்சன் கிங் அர்ஜூன், white devil என்கிற சத்தியமூர்த்தியாக நடித்திருக்கிறார். தொழில் நுட்பமும், கேமிரா டெக்னாலஜியுமே படத்தில் பிரதானம் என்றாலும் அர்ஜூனின் வசன உச்சரிப்பும், முகம் காட்டும் நடிப்பும், வில்லத்தனமும் சரியான வில்லன்டா என்றுதான் சொல்ல வைத்திருக்கிறது.
கிளைமாக்ஸில் நிமிடத்திற்கு நிமிடம் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக திரைக்கதை பாயும் பாய்ச்சலில் முடிவு என்ன என்பது பற்றியான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் கூடுகிறது. இந்த வித்தையைச் செய்து காட்டியிருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
பிளாஸ்டிக் அழகி என்றழைக்கப்படும் சமந்தாவின் கொள்ளை அழகை ஒளிப்பதிவாளர் ரசித்து, ருசித்து, அனுபவித்து படமாக்கியிருக்கிறார். அத்தனை குளோஸப் ஷாட்டுகளிலும் ரசிகர்களை மனம் குளிர வைத்திருக்கிறார் சமந்தா. தனக்கு சரோஜா தேவி என்ற அக்கா இல்லை என்று அச்சச்சோ உணர்வோடு சமந்தா சொல்லும் காட்சியிலும், கிளைமாக்ஸில் வில்லன்களிடம் மாட்டிக் கொண்டு பதிலே சொல்லாமல் நாக்கை நீட்டி மைக்ரோ சிப்பை காட்டும் காட்சியிலும் ‘வாவ்’.. என்று சொல்ல வைத்திருக்கிறார் தோழர் சமந்தா.
இன்னொரு பக்கம் டெல்லி கணேஷும், ரோபோ சங்கரும் கொஞ்சம், கொஞ்சம் காமெடியை நடத்தியிருக்கிறார்கள். விஷால் தன்னை திட்டியதற்கு பின்பு தனது இன்றைய நிலையை நினைத்து டெல்லி கணேஷ் அழும் காட்சியில் ஒரு நிமிடம் மனதை ‘டச்’ செய்துவிட்டார்.
தனது மனைவியின் சிகிச்சைக்காகவே ஊரெல்லாம் கடன் வாங்கி “கூடுதலாக அவளை 2 வருடம் வாழ வைத்தேன்…” என்று டெல்லி கணேஷ் சொல்லும் காட்சியில் உருக்கம் கூடுதலாகவே இருக்கிறது. ரோபோ சங்கர் இன்னொரு பக்கம் டைமிங்சென்ஸ் காமெடியில் தனது நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜி சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு ரம்மியம். அர்ஜூனின் இடத்தைக் காட்டுமிடத்தில் அத்தனை அழகு. சமந்தாவை காட்டும்போதும் அழகு. கிராமத்து ஊரையும், தெருக்களையும் வித்தியாசமான கோணத்தில் காட்டியிருக்கிறார்.
யுவன்சங்கர்ராஜாவின் இசையில் அதிரடி பாடலிலேயே காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள். கேட்கவும் இனிமைதான்.  காதல் பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைக்கும் என்பதால் படமாக்கிய நிலையிலும் பாடல் காட்சிகளை நீக்கிவிட்டார்கள். இதனாலேயே படம் இடைவேளைக்கு பின்பு இன்னும் வேகமாகவே இருக்கிறது.
படத் தொகுப்பாளர் ரூபனின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. சண்டை காட்சிகளில் சண்டை இயக்குநரின் அதிரடி திறமையை படத் தொகுப்பாளர் தனது கட்டிங் திறமையால் மேலும் அழகுபடுத்தியிருக்கிறார். சுரங்கப் பாதையில் நடைபெறும் சண்டையும், அர்ஜூனுடன் மோதும் காட்சிகளையும் அழகாகப் படப் பதிவு செய்து, அதைவிட அழகாக நறுக்கிக் கொடுத்திருக்கிறார்கள். நன்று.
வங்கிக் கடன் பெற்ற முறையில் எப்படி பணத்தை லவட்ட முடியும் என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில்தான் இயக்குநர் மித்ரன் பிரமிப்பாக பார்க்கப்படுகிறார்.
வங்கிகளில் நேர்மையான முறையில் கடன் வாங்க முயன்று பல்வேறு காரணங்களினால் அது மறுக்கப்படும்போது அந்த நபர்கள் பற்றிய விவரங்களை வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள் மூலமே பெறுவது… பிறகு தங்களின் ஏஜண்டை கடன் கேட்ட நபரிடம் அனுப்புவது.. அவருக்கு கடன் வாங்கித் தருவாதக ஆசை காட்டுவது.. கைவசம் இருக்கும் போலி சொத்துக்களை அடமானம் வைக்க ஏற்பாடு செய்வது.. இதைக் காட்டியே கடன் வாங்கித் தந்து அவர்களது நம்பிக்கையை பெறுவது.. சந்தேகம் வராமல் இருக்க அவர்களிடத்தில் இருந்து தங்களது கட்டணத்திற்கு காசோலையை வாங்கி வைத்துக் கொள்வது..  
பின்பு கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்த பிறகு, அந்த அக்கவுண்ட் நம்பரை தங்களிடமிருக்கும் திருட்டு நிபுணர்கள் மூலமாக ஹேக் செய்து பணத்தை மொத்தமாக டிரான்ஸ்சேக்சன் செய்து தப்பித்து ஓடுவது என்று அனைத்தையும் பக்கவாக செய்து காண்பித்திருக்கிறார் இயக்குநர். 
மேலும் நாம் நமது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும்போது அந்தத் தகவலை நம் செல்போனுக்கு வங்கி உடனடியாக அனுப்பும். ஆனால் இந்தத் தகவலைக்கூட நம் மொபைல் போனுக்கு வராமல் செய்யும் அளவுக்கு திருட்டுத்தனத்தை செய்ய முடியும் என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
வெறுமனே வங்கிக் கணக்கில் கொள்ளை.. ஏடிஎம்மில் ஸ்கிராப்பர் பொருத்தி கொள்ளை என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் எது, எதிலெல்லாம் இப்போது பெரும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது என்பதையும் விலாவாரியாக எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
விமானப் பயணம் முடிந்து இறங்கி விமான நிலையத்தைவிட்டு வெளியில் வந்தவுடன் பயணிகள் அனைவரும் செய்யும் ஒரே காரியம்.. போர்டிங் பாஸை தூக்கியெறிவதுதான். ஆனால் அதைக் கைப்பற்றி அதில் இருக்கும் QRL CODE-ஐ ஸ்கேனர் மூலமாக ஸ்கேன் செய்தால், நாம் எந்தெந்த நாடுகளுக்குச் சென்று வந்தோம்.. எந்த விமானத்தில் வந்தோம்.. என்பது போன்ற தகவல்கள் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்குமாம்.
இதேபோல் நம்முடைய செல்போனில் நாம் பேசுவதை நமக்குத் தெரியாலேயே யாரோ ஒருவர் எங்கயோ ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு பதிவு செய்யலாம். கூடுதலாக நாம் செல்போனை எதுவும் செய்யாமல் வைத்திருக்கும்போது வேறிடத்தில் இருந்தே அதன் கேமிராவை ஆன் செய்து படம் பிடித்து அவர்களுக்கே அனுப்பி வைக்கலாம் என்பதெல்லாம் அதிர்ச்சி தரக் கூடிய உண்மைச் செய்தி.
இதேபோல் பழசாகிப் போய் நாம் தூக்கியெறிந்த ‘ஹார்ட் டிஸ்க்’குகளையும், பயன்படுத்த முடியாமல் போய் விட்டொழித்த ஹார்ட் டிஸ்க்குகளையும் கைப்பற்றி அதனை சரி செய்து அதிலிருக்கும் தகவல்களையெல்லாம் கையாடல் செய்ய முடியும் என்பது தொழில் நுட்பத்தின் வீச்சை நமக்கு உணர்த்துகிறது.
இது மட்டுமா.. முழித்திருக்கும் 18 மணி நேரத்தில் 17 மணி நேரம் நாம் உலா வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்கில் நம்முடைய தகவல்கள்கூட பத்திரமாக இல்லை. இதைக்கூட யார் வேண்டுமானாலும் நம்முடைய அனுமதியின்றியே கைப்பற்றலாம். அதோடு நாம் நட்புப் பட்டியலில் இணைக்கவில்லையென்றாலும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நமது நண்பர்கள் பட்டியலைக்கூட தேடியெடுக்க முடியும் என்பதெல்லாம் நம்மை திகைக்க வைக்கும் செய்திகள்.
இதன் மூலமாக நாம் தற்போது பயன்படுத்தும் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு போன்களில் தரவிரக்கம் செய்து பயன்படுத்தும் ஒவ்வொரு செயலியையும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். அவைகளின் கோரிக்கைகளை நாம் கண்ணை மூடிக் கொண்டு அனுமதித்தால் அது நமது செயல்பாடுகள் அனைத்தையும் நம்மைக் கண்காணிக்கும் யாரோ ஒரு கருப்பு ஆடுக்கு தினம்தோறும் கொடுத்துக் கொண்டேயிருக்கும் என்பது நாம் அறியாது என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
திடீரென்று நமக்கு வரும் அனாமதேய போன் கால்கள்.. பரிசுக் குலுக்கள்.. கடன் வேண்டுமா.. பாலிசி போடுகிறீர்களா என்ற அழைப்பு… இவர்களுக்கெல்லாம் நம்முடைய போன் நம்பர் எப்படி கிடைத்தது.. யார் கொடுத்தது.. எப்படி அவர்களுக்கு நம் பெயர் தெரிகிறது.. இங்கேதான் அதி நவீன தொழில் நுட்பத்தின் இன்னொரு முகத்தை நாம் பார்க்கலாம்.
ஜெராக்ஸ் கடையில் நாம் எடுக்கும் நம்மைப் பற்றிய தகவல்களின் பிரதிகள்.. சேகரிக்கப்பட்டு நமக்குத் தெரியாமலேயே கொத்தாக விலைக்கு விற்கப்படுகின்றன. இவர்களிடத்தில் இருந்துதான் இது போன்ற வங்கிகள், நிறுவனங்களுக்குத் நமது தகவல்கள் பெரும் தொகைக்கு விற்கப்படுகின்றன.
இப்போது அவர்களிடத்தில் நம்முடைய ஒட்டு மொத்தத் தகவல்களும் சிக்கியிருக்கின்றன. நாம்தான் அவர்களிடத்தில் அறிமுகமாகவில்லையே தவிர.. நம்மைப் பற்றிய அனைத்துமே நமது எதிரிகளிடத்தில் சிக்கியிருக்கின்றன.
இது போன்று நாட்டில் இன்றைக்கும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பத் திருட்டுக்களை வெளிப்படையாக்கி சிறப்பான கதையில், விறுவிறுப்பான திரைக்கதையில், நம்மை சுதாரிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் மித்ரன்.
சிற்சில லாஜிக் எல்லை மீறல்கள் இருந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சொல்ல வந்த விஷயத்தை மட்டும் மனதில் கொண்டால் படம் மிகவும் பார்க்கத் தகுந்த திரைப்படமாக இருக்கிறது.
ஆதார் இல்லாமல் இந்தியன் இல்லை என்கிற சூழலுக்கு இந்திய அரசு இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதரையும் தள்ளி வரும் வேளையில், அந்தத் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா.. என்கிற ஒவ்வொரு இந்தியனையும் கேள்வி கேட்கவும் வைத்திருக்கிறது இத்திரைப்படம்.
நமது தகவல்களே இன்னும் சிலருக்கு பணம் சம்பாதிக்கும் திறனாகவும், பணமாகவும், லாபமாகவும் கொட்டப் போகிறது என்கிற அரிய உண்மையை இப்படி இந்தப் படத்தின் மூலமாக விளக்கியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.
அவசியமான இந்த நேரத்தில் இந்த விழிப்புணர்வை உருவாக்கிக் கொடுத்தமைக்காக நடிகர் விஷாலுக்கும், இயக்குநர் மித்ரனுக்கும் நமது பாராட்டுக்கள்..!
அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.

0 comments: