11-05-2018
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான இந்த ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் வழங்கும் ஸ்வப்னா மூவிஸ் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தில் ‘நடிகையர் திலகம்’ சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
மேலும், சாவித்திரியின் தந்தையாக ராஜேந்திரபிரசாத்தும், ‘எஸ்.வி.ரங்காராவாக’ மோகன் பாபுவும், ஜெமினி கணேசனின் மனைவி ‘அலமேலு’வாக மாளவிகா நாயரும், ‘எல்.வி.பிரசாத்’தாக சீனிவாஸ் அவசரலாவும், ‘இயக்குநர் கே.வி.ரெட்டி’யாக கிரிஷ் ஜெகர்லமுடியும், ‘அல்லூரி சக்ரபாணி’யாக பிரகாஷ் ராஜூம் நடித்துள்ளனர்.
இவர்களது கதையைச் சொல்லும் பத்திரிகையாளர் ‘மதுரவாணி’யாக சமந்தாவும், இவரது காதலரும் புகைப்படக் கலைஞருமான ‘விஜய் ஆண்டனி’ கேரக்டரில் விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – நாக் அஸ்வின், ஒளிப்பதிவு – டேனி சா லோ, பாடல்கள், வசனம் – மதன் கார்க்கி, இசை – மிக்கி ஜெ.மேயர், படத் தொகுப்பு – கோடகிரி வெங்கடேஷ்வர் ராவ், உடை வடிவமைப்பு – கெளரங், அர்ச்சனா ராவ், உடை ஸ்டைல் – இந்திராக்சி பட்நாயக், கலை இயக்க ஆலோசனை – தோட்டா தரணி, தயாரிப்பு வடிவமைப்பு – சிவம் ராவ், கலை இயக்கம் – அவினாஷ் கொல்லா, ஒலி வடிவமைப்பு – ரகு காமிஷெட்டி, விளம்பர டிஸைன் – ராம் பெட்டிட்டி, கிராபிக்ஸ் சூப்பர்வைஸர் – ஜெமினி, Firefly, எழுத்து ஆலோசனை – ருத்தம் சமர், புகைப்படங்கள் – அபினவ் கோடம் குமார், நடனம் – அனி, விஸ்வாகிரண் நம்பி, மனிதா பிரவிணா, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், வெளியீடு – டிரைடெண்ட் ஆர்ட்ஸ், ரவீந்திரன்.
1936-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதியன்று இன்றைய ஆந்திராவில் இருக்கும் குண்டூர் மாவட்டத்தின் சிராவுரு என்னும் கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து 1981-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதியன்று தேசிய விருது பெற்ற தமிழ், தெலுங்கு மக்களின் அபிமானத்துக்குரிய ‘நடிகையர் திலகம்’ என்கிற பெயரோடு மரித்துப் போன சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மூன்று மணி நேரத்தில் சொல்லிவிட முடியாதுதான்.
ஆனாலும், ஆந்திராவில் இன்றைக்கும் அனைத்து மாவட்டங்களிலும் சாவித்திரிக்கு சிலை வைக்கும் அளவுக்கு பாசமாக இருக்கும் தெலுங்கு மக்களுக்காகவே, தெலுங்கை அதிகம் பிரதானப்படுத்தி இந்தப் படத்தை முடிந்த அளவுக்கு நேர்மையாக உருவாக்கியிருக்கிறார்கள்.
தான் பிறந்த ஆறு மாதத்திலேயே அப்பாவை இழந்துவிட்ட சாவித்திரியின் அம்மா, அடைக்கலம் தேடி அவருடைய அக்கா வீட்டிற்கு வருகிறார். அக்காவின் கணவர் வேண்டாவெறுப்பாக அவர்களை அரவணைக்கிறார்.
இளம் வயதிலேயே சாவித்திரியிடம் இருந்த பேச்சுத் திறமை, நடிப்புத் திறமையைக் கண்டுணர்ந்த அவரது பெரியப்பா சாவித்திரியை நாடகங்களில் நடிக்க வைக்கிறார். ஒரு சமயம் இவர்களுடைய நாடகத்தைப் பார்க்க வந்த அன்றைய பாலிவுட்டின் மிகப் பெரிய ஹீரோவான பிருத்விராஜ் கபூர் சாவித்திரியை பாராட்டியிருக்கிறார்.
தொடர்ந்து நாடகத்தில் நடித்தாலும் அதில் பெரிய அளவுக்கு சம்பாதிக்க முடியாத நிலைமை. இதனால் சொந்த நாடகக் கம்பெனியை துவக்குகிறார் பெரியப்பா. அதிலும் நினைத்ததுபோல் நடக்காததால் சாவித்திரியை சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்றெண்ணி சென்னைக்கு அழைத்து வருகிறார் பெரியப்பா.
வந்த இடத்தில் அப்போதைய ஜெமினி ஸ்டூடியோவில் நட்சத்திரங்களை புகைப்படம் எடுத்து இண்டர்வியூ செய்யும் வேலையில் இருந்த ஜெமினி கணேசனை பார்க்கிறார் சாவித்திரி. ஜெமினி, சாவித்திரியை அழகாக புகைப்படம் எடுத்து வைக்கிறார்.
அப்போது சின்ன வயது என்பதால் சாவித்திரிக்கு நடிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ஆனாலும் தெலுங்கு படங்களில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘சம்சாரம்’ என்ற தமிழ்ப் படத்தில் ஒரு வேடமும், ‘பாதாள பைரவி’ படத்தில் ஒரு பாடலில் நடனமாடும் வேடமும் கிடைக்கிறது.
இருந்தாலும் அடுத்த இரண்டாண்டுகளில் மீண்டும் நாயகி வேடத்துக்கு முயற்சி செய்யும்போது ஜெமினி எடுத்த புகைப்படத்தின் மூலமாய் சாவித்திரிக்கு அந்த வாய்ப்பு தானாய் வருகிறது. ‘மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் ஜெமினியுடன் இணைகிறார் சாவித்திரி.
ஏதுமறியாத அப்பாவியாய் சென்னைக்கு வந்திருக்கும் சாவித்திரிக்கு ஸ்டூடியோக்களின் பளபள தோற்றமும், இயக்குநர்களின் கண்டிப்பான பார்வையும், உத்தரவும், நடிகர்களின் பழக்க வழக்கமும் வேறாக இருந்தாலும் இதையெல்லாம் ஜெமினி கணேசனின் உதவியுடன் கற்றுக் கொள்கிறார்.
தனது திரைப்பட வாழ்க்கையில் உயர, உயர ஒரு படிக்கல்லாய் தனது நடிப்பை வைத்துக் கொண்டாலும், கைப்பிடியாய் ஜெமினியைக் கையோடு பிடித்துக் கொண்டே உயர்கிறார் சாவித்திரி.
ஏற்கெனவே அலமேலு என்பவருடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உண்டு. அதற்குப் பிறகு புஷ்பவள்ளி என்னும் நடிகையுடன் தொடர்பாகி அவருக்கும் ஒரு பெண் குழந்தை உண்டு. இந்த நிலையில் சாவித்திரி, ஜெமினி கணேசனுடன் காதலாகி 1954-ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொள்கிறார். அப்போது சாவித்திரிக்கு வயது 18.
தனக்குத் திருமணமானதையே தனது குடும்பத்தாரிடம் மறைத்து வைத்து தப்பித்தே வந்தவர் சில ஆண்டுகளில் வெளிப்படையாக சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். உற்றார், உறவினர், குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி ஜெமினியின் கரம் பிடித்து அவருடன் தனிக்குடித்தனம் செல்கிறார்.
குழந்தைகள் பிறந்து வளர, வளர இன்னொரு பக்கம் ஜெமினியும், சாவித்திரியும் தொடர்ந்து இணைந்தும், தனித்தனியாகவும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் 1965-க்கு பிறகு சாவித்திரி தனது தனித்த நடிப்பாற்றலால் தெலுங்கு பேசும் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அதேபோல் தமிழிலும் சிவாஜிக்கு போட்டியாக ‘நடிகையர் திலக’மாகவும் மாறிவிட்டார்.
இது ஜெமினி கணேசனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை தோற்றுவித்து தம்பதிகளுக்குள் பிரச்சினையை உண்டு செய்கிறது. ஆனாலும் குடும்பம் முக்கியம் என்பதால் அதையெல்லாம் சாவித்திரி தவிர்த்தபடியே வந்தாலும், ஜெமினியின் பெண் சபலம் அதற்கும் ஒரு முடிவு கட்டுகிறது.
ஜெமினியை இன்னொரு பெண்ணுடன் பார்த்த நேரத்தில் சாவித்திரி ஜெமினியைவிட்டுப் பிரிய முடிவெடுக்கிறார். அவசர கோலத்தில் எடுக்கும் எந்த முடிவும் ஆபத்தில்தான் போய் முடியும் என்பதை சாவித்திரியின் வாழ்க்கையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
கணவருடன் கோபப்பட்டவர்.. கணவர் என்ன சொன்னாலும் கேட்கப் போவதில்லை என்கிற விபரீத முடிவை எடுக்கிறார். இதன் தொடர்ச்சியாய் கணவர் இருக்கும்போது இல்லாத தனது குடும்பத்தினரை அழைத்து அருகில் வைத்துக் கொள்கிறார்.தன்னிடமிருந்த பணம், பொருள், நகையையெல்லாம் உற்றார், உறவினர்களுக்கும் வாரி வழங்குகிறார்.
இன்னொரு பக்கம் பானுமதி, செளகார் ஜானகியெல்லாம் திரைப்படம் இயக்குவதை பார்த்துவிட்டு தானும் இயக்குநராக வேண்டும் என்கிற வெறியோடு தனது திரையுலகப் பணியை மாற்றுகிறார்.
இவருடைய வற்புறுத்தலால் சாவித்திரியின் இயக்கத்தில் ஜெமினி கணேசனே ‘குழந்தை உள்ளம்’ படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து தெலுங்கில் வெளிவந்த ஒரு படத்தை தமிழில் ‘பிராப்தம்’ என்ற பெயரில் தானே தயாரித்து இயக்கினார் சாவித்திரி.
1969-ல் துவக்கப்பட்டு பைனான்ஸ் பிரச்சினையால் இரண்டாண்டுகள் கழித்து 1971-ல் படம் வெளியாகி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. இந்தப் படத்தின் தோல்வியினால் தான் பட்ட கடனுக்காக அரண்மனை போன்ற வீட்டை விற்றுவிட்டு அண்ணா நகரில் சாதாரண ஒரு வீட்டுக்குக் குடி போனார் சாவித்திரி.
வருமான வரித்துறைக்காரர்களும் தங்களது பங்குக்கு வீட்டுக்கு வந்து சோதனை போட்டு இருந்த பணம், நகையையெல்லாம் எடுத்துக் கொண்டு போய்விட.. இந்தப் பிரச்சினையும் அவரைச் சுற்றியடித்தது.
பிரச்சினைகளை சமாளிக்கவும், தோள் கொடுக்கவும், தட்டிக் கொடுக்கவும், ஆறுதல் சொல்லவும் ஆட்கள் இல்லாமல் குடியை நாடினார் சாவித்திரி. ‘பிராப்தம்’ படத்தின் தோல்விக்கு பிறகு அவருக்குள் ஏற்பட்ட அதீத குடிப் பழக்கமே இந்த நடிகையர் திலகத்தை 45-வது வயதிலேயே அதுவும் 16 மாதங்கள் கோமாவில் படுத்த படுக்கையில் இருக்க வைத்து, அதன் பிறகு மரணத்தைத் தழுவ வைத்தது..!
இந்தக் கதையை அப்படியே வெளிப்படுத்தினால் சுவாரஸ்யம் இருக்காது என்று நினைத்து அப்போதைய 1981 காலக்கட்டத்தில் சாவித்திரியின் கோமா நிலைமையை ரிப்போர்ட் செய்ய வந்த மதுரவாணி என்னும் பெண் ரிப்போர்ட்டர் மூலமாக அவருடைய வாழ்க்கைக் கதையை அவிழ்க்கும்விதமாக படத்தின் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்கள்.
கொஞ்சம் திக்குவாயோடு இருக்கும் மதுரவாணி என்னும் சமந்தா வேண்டாவெறுப்பாக இந்த வேலையை கையில் எடுத்தாலும் பின்பு மகாராணி போல வாழ்ந்த சாவித்திரி கடைசியில் ஏன் இந்த நிலைமைக்கு ஆளானார் என்பதை கண்டறியும் பொருட்டு தீவிரமாய் ஆர்வம் காட்ட இதன் விளைவாய் அவருக்கும் ஒரு காதல் ஏற்பட்டு, அதுவும் மதம் தாண்டிய காதலாய் மாறி, அது வெற்றி பெறும் அளவுக்குச் செல்வது இன்னொரு பக்கக் கதையாய் படத்தில் வருகிறது.
உண்மையில் சமந்தா கேரக்டரே இந்தக் கதைக்குத் தேவையில்லை. அவருக்குக் கொடுத்திருந்த நேரத்தில் சாவித்திரி கதையில் கூடுதலாக சில காட்சிகளை சேர்த்திருக்கலாம். ஆனாலும் கொடுத்த கதாபாத்திரத்தை சமந்தா செவ்வனே செய்திருக்கிறார்.
அந்தத் திக்குவாய் என்ற கேரக்டர் ஸ்கெட்ச் பிரமாதம். அதை அவர் வெளிப்படுத்தும் விதமும் அருமை. பெண்ணால் முடியாது என்று சொல்வதை போல அவருடைய அப்பா “ஒரே கிக்கில் ஸ்டார்ட் செய்ய முடிந்தால் லூனாவை எடு்த்துச் செல்…” என்று சொல்வதும், முயற்சி செய்து தோல்வியடையும் சமந்தா, அவருக்கான கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே உதையில் ஸ்டார்ட் செய்துவிட்டு ஓட்டிச் செல்வது சாவித்திரியையும் தாண்டி ரசிக்க வைத்திருக்கிறது.
சமந்தாவின் காதலராக விஜய் ஆண்டனி கேரக்டரில் நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா நிஜமாகவே 1980 கால ஹீரோ போலவே காட்சியளிக்கிறார். ஒரு பெரிய ஹிட்டை கொடுத்தவர் என்கிற நினைப்பெல்லாம் இல்லாமல் இந்தப் படத்தில் இந்தச் சின்ன கேரக்டரில் நடித்தமைக்காக அவருக்கு நமது பாராட்டுக்கள். ஜெமினியை போலவே இவரும் ஒரு காரின் மீதேறி நின்று கொண்டு சமந்தாவிடம் காதலை சொல்கின்ற காட்சி ரசிக்கத்தக்கது.
முற்றிலும் தெலுங்கு ரசிகர்களுக்காக வேண்டியே படத்தை உருவாக்கியிருப்பது ஒன்றுதான் படத்தின் மீதான ஒரு குறை. தமிழில் அவருடைய நடிப்புக்கு பெயர் போன படங்களில் ‘பாசமலர்’ மற்றும் ‘நவராத்திரி’ காட்சிகளை சில நொடிகளே வந்து செல்வதை போல காட்டியிருக்கிறார்கள். இது தமிழ் ரசிகர்களை மிகப் பெரிய துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் விஷயம்.
அவர் தெலுங்கில் ‘மகாநதி’யாக இருந்தாலும் தமிழில் ‘நடிகையர் திலக’மாகவே வாழ்ந்திருப்பவர். இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். ‘பாசமலர்’ மட்டுமல்ல.. ‘மிஸ்ஸியம்மா’, ‘கற்பகம்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘நவராத்திரி’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருவிளையாடல்’ போன்ற படங்களிலெல்லாம் அவருடைய நடிப்பு இன்றளவும் நடிப்புப் பயிற்சிக் கல்லூரிகளில் பாடமாக வைக்கும் அளவுக்கு இருக்கின்றன. இவைகளையும் இந்தப் படத்தில் அதிகமாகக் காட்டியிருக்க வேண்டும்.
பாடல்களையும், பாடல் காட்சிகளையும்கூட தெலுங்குலேயே பாட வைத்ததும், ஆட வைத்ததும் ஏன் என்று தெரியவில்லை. அதுவும் ‘மாயாபஜாரில்’ வரும் ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலின் தெலுங்கு பாடல் வெர்ஷன்தான் திரையில் ஒலிக்கிறது.
‘மாயாபஜாரில்’ சசிரேகாவாக வந்து அலப்பறை செய்யும் சாவித்திரியின் அந்த நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது. அதையும் தெலுங்கு மக்களுக்காகவே ஒதுக்கிவிட்டார்கள்.
தமிழகத்து மக்களால் மறக்க முடியாத ‘பாசமலர்’ கிளைமாக்ஸ் காட்சியையும், ‘நவராத்திரி’யின் மருத்துவமனை காட்சிகளையாவது சற்று விளக்கமாக காட்டியிருக்கலாம். ஏமாற்றிவிட்டார் இயக்குநர்.
மற்றபடி அந்தக் காலத்திய செட்டுக்களை இப்போது போட்டால் எத்தனை செலவாகும் என்பதைக் கணக்கில் கொண்டு, அதற்காக மெனக்கெட்டு கடுமையாக உழைத்துப் படமாக்கியிருக்கிறார்கள்.
தோற்றத்தில் சாவித்திரிக்கு மிக நெருக்கமாகவே தோன்றியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தன்னைப் பற்றி வந்திருக்கும் மீம்ஸ்களையெல்லாம் உடைத்தெறிவதை போல அவருடைய நடிப்பு, இந்தப் படத்தில் உச்சத்தில் இருக்கிறது. இன்னும் சாவித்திரியின் உணர்ச்சிகரமான காட்சிகளை படமாக்கியிருந்தால் கீர்த்தி படத்தினை மேலும் தரமாக்கியிருப்பார்.
சிற்சில சாயல்களிலும், காட்சிக் கோணங்களிலும் கீர்த்தி சுரேஷ் அப்பட்டமாய் சாவித்திரியை நகல் எடுத்ததுபோல தெரிகிறார். யானை மேல் சவாரி செய்யும் காட்சியிலும், காரின் பின் சீ்ட்டில் அமர்ந்தபடியே ரசிகர்களை பார்த்து கை அசைக்கும் காட்சியிலும், ‘மாயா பஜார்’ காட்சியிலும் கீர்த்தியை மறந்து சாவித்திரியையே தரிசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். கீர்த்தியை இந்தக் கேரக்டருக்கு தேர்வு செய்த இயக்குநர் அஸ்வின் நாக்கிற்கு நமது பாராட்டுக்கள்.
தேவதாஸில் முதன்முதலாக நடிக்கப் போகும்போதே நாகேஸ்வரராவ் காரு வருவாரா.. வந்துட்டாரா.. என்று அப்பாவியாய் கேட்டபடியே வரும் கீர்த்தியை கொஞ்சத்தான் தோன்றுகிறது. இத்தனை வெகுளியாய், அப்பாவியாய் இருந்த சாவித்திரியா கடைசிவரையிலும் ஜெமினி மீதான கோபத்தில் மட்டும் வைராக்கியமாய் இருந்தார்..? ஆச்சரியமாய் இருக்கிறது.
சாவித்திரிக்குள் இருக்கும் இரக்கக் குணம், பாசத்தையெல்லாம் இதிலும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். கார் டிரைவரின் மகள் திருமணத்திற்காக வீட்டில் இருந்த பட்டுப் புடவைகளை விற்றுப் பணமாக்கி அதனை டிரைவரிடம் கொடு்த்தனுப்பும் சாவித்திரியின் பரந்த உள்ளம் அவருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
படம் நெடுகிலும் வெள்ளை, கருப்பு காலத்து திரைப்படங்களின் காட்சிகளையும், சில வண்ண மயமான காட்சிகளையும் சேர்த்து தொகுத்தளித்திருக்கிறார்கள். கருப்பு வெள்ளையில் கீர்த்தியின் அழகு ஜொலிக்கிறது. சாவித்திரியாய் புடம் போட்ட தங்கமாய் அவர் ஆடும் ஆட்டமும், ‘மாயா பஜாரின்’ எஸ்.வி.ரங்காராவை இமிடேட் செய்து அவர் செய்யும் மேனரிசமும் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரை இவரறின்று வேறு யாரை பார்த்துச் சொல்வது என்று கேட்க வைக்கிறது.
சில காட்சிகளுக்காக உடல் பருமனாகியும், பல காட்சிகளுக்கு மெலிந்தும், உடல் நலக் குறைவால் இருப்பது போலவும் கீர்த்தியின் சாவித்திரி வேடம் கனக் கச்சிதம். அம்மாடி என்கிற வார்த்தையைக் கேட்டதும் பேசவும் முடியாமல், போனை வைக்கவும் மனமில்லாமல் அவர் தவிக்கும் தவிப்பு சிறந்த இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு. இதேபோல் கடைசியான மது அருந்துதலில் அவருடைய தோற்றப் பொலிவும், காட்சிக் கோணமும் சாவித்திரியின் கம்பீரத்தையும், கேரக்டர் ஸ்கெட்ச்சையும் எடுத்துக் காட்டுகிறது.
கெஸ்ட் ஹவுஸில் ஜெமினியுடன் இருந்த பெண்ணை கோபத்தில் வெளுத்துக் கட்டிவிட்டு திரும்பும் காட்சியில் சாவித்திரியின் இயல்புத் தன்மையை அப்படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
“நான்தான் பெண்கள் விஷயத்துல ரொம்ப வீக்குன்னு உனக்கே தெரியுமே.. இருந்தாலும் உன் மேல இருக்குறது காதல். அதுல இப்போவரைக்கும் துளியும் குறையல சாவித்திரி…” என்று ஜெமினி சொல்வதற்கு, “அப்போ நான் சாவித்திரி. இப்போ நான் சாவித்திரி கணேசன்…” என்றும் சொல்லும் அந்த ஒரு காட்சிதான் இந்தப் படத்தின் அடிநாதம்.
துல்கர் சல்மான் ஜெமினி கணேசன் கேரக்டருக்கு மிகப் பொருத்தமாகத்தான் இருக்கிறார். இனிப்பு தடவிய வார்த்தைகளை அலுப்புத் தட்டாத பேச்சில் வளைத்து வளைத்து வீசி சாவித்திரியை காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறார் ஜெமினி. அந்தக் காட்சிகளை மதன் கார்க்கியின் மிக குதர்க்கமான வசனத்தின் மூலம் நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.
வெளிப்படையாக அலமேலு, புஷ்பவள்ளி கதைகளைச் சொல்லி “எனக்கு நீயும் வேண்டும்…” என்று சொல்லும் ஜெமினியின் பேச்சைக் கேட்டால் நிச்சயம் கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் ரசிகர்களுக்கு வரவில்லை. ஏனெனில் அது காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதப்பட்ட வசனங்கள். வலை விரித்தார் ஜெமினி. வசமாக மாட்டிக் கொண்டார் சாவித்திரி. இப்படி சொல்ல வைத்திருக்கிறது துல்கர் சல்மானின் நடிப்பு.
உனக்கு நடிப்பு சுட்டுப் போட்டாலும் வராது. பேசவே வரலை. நீயெல்லாம் எப்படி நடிக்கப் போற என்று திட்டி அனுப்பும் நாகி ரெட்டி.. சக்ரபாணியின் தீவிர சிபாரிசில் மீண்டும் நடிக்கத் துவங்கும்போது, “எல்லா நடிகைகளுக்கும் உடம்புதான் அழகு. ஆனால் சாவித்திரிக்கு முகம்தான் அழகு..” என்று அவரிடத்தில் முதல் சர்டிபிகேட் வாங்கும் காட்சி அபாரம்.
இதேபோல் கிளிசரினே போடாமல் இடது கண்ணில் மட்டும் இரண்டு சொட்டு கண்ணீர் மட்டுமே வர வேண்டும் என்ற இயக்குநர் கே.வி.ரெட்டியின் நிபந்தனையை நிறைவேற்றும் அந்தக் கணப் பொழுதில் “இன்னும் பல வருடங்களுக்கு உன்னை அசைச்சுக்க முடியாது…” என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்திருப்பதெல்லாம் சாவித்திரிக்கே உரித்தான பெருமை.
நிஜத்தில் நடந்த பல சம்பவங்களை பல விஷயங்களை அதே நேரங்களிலேயே படமாக்கியிருக்கிறார்கள் என்பதால் சாவித்திரியின் கதை அறிந்தவர்களுக்கு படம் மிகப் பெரிய திருப்தியைக் கொடுத்திருக்கிறது.
உதாரணமாக தன் வீட்டில் தனக்குத் திருமணமானதை தெரிந்து கொண்டுவிட்டார்கள் என்பதையடுத்து ஜெமினி வீட்டிற்கு ஓடி வந்து சரணடையும் காட்சியில் அலமேலுவின் ஒரேயொரு பார்வையிலேயே அவர்களது குடும்பப் போராட்டத்தையும், ஜெமினியின் குணத்தையும் சுட்டிக் காட்டிவிட்டார் இயக்குநர்.
ஒளிப்பதிவாளர் டேனி சே லோவின் ஒளிப்பதிவு நேர்த்தி படம் நெடுகிலும் பரவியிருக்கிறது. ஒரு சிறிய காட்சியில்கூட ஒளிப்பதிவு குறையவில்லை. கீர்த்தியின் சிறு வயது கதையைச் சொல்லும் அந்தக் கிராமத்தைக்கூட அழகுற பதிவாக்கியிருக்கிறார்கள்.
ஜெமினி-சாவித்திரி காதல் போர்ஷனை போரடிக்காமல் கொண்டு சென்றிருப்பதில் ஒளிப்பதிவாளருக்கும் பெரும் பங்குண்டு. பழைய படங்களின் பாடல் காட்சிகளை மீண்டும் அதேபோல் படமாக்கியிருப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அதனை அனுபவித்து ரசிக்கிறார்கள் ரசிகர்கள்.
கீர்த்திக்கு உடை வடிவமைப்பு செய்த கெளரங், அர்ச்சனா ராவா இருவரும் பாராட்டுக்குரியவர்கள். காட்சிக்கு காட்சி கீர்த்தியை எந்தளவுக்கு அழகு ராணியாகக் காட்ட முடியுமோ அந்த அளவுக்குக் காட்டியிருக்கிறார்கள். கார் போட்டியில் ஈடுபடும் காட்சியில் கீர்த்தியின் உடையலங்காரம் வாவ் என்று சொல்ல வைக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சிகளிலெல்லாம் உடைகள் ஏனோதானெவென்று ஏதோ ஒரு கலரில் இருப்பதும், அவருடைய வறுமையை அவரது உடைகளே எடுத்துச் சொல்வது போலவும் மாற்றியிருப்பது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது.
இத்தனை நீள படத்தை கச்சிதமாக மூன்று மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டுமே என்பதற்காக படத் தொகுப்பாளர் கத்திரியை கச்சிதமாக போட்டுக் கொடுத்திருக்கிறார்.
மிக்கி ஜே.மேயரின் இசையமைப்பில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இல்லாதது போல் காட்டிவிட்டு இசையிலும் அதிகம் அலட்டிக் கொள்ளாத பாடல்களையே கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் இருக்கும் மிகப் பெரிய குறை பாடல்கள்தான். எத்தனையோ காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் பதிவாகியிருக்கும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் ஒரு பாடல்கூட திரும்பவும் கேட்கும் அளவுக்கு இல்லை என்னும்போது அந்தக் காலத்திய இசை மேதைகளை நினைத்து பெருமிதம் கொள்ளலாம்.
‘மகாநதி’ பாடலும், ‘மெளன மழையிலே’ பாடலும் கொஞ்சம் கேட்க வைத்தன. ‘இறுதியில் என்ன எஞ்சும்’ பாடலும், ‘குட்டி ராணி’ பாடலும் மின்னல் வேகத்தில் காட்சிகளை வைத்து ஓடி மறைந்தன.
ஜெமினி ஒரு அழகான ஆண் மகன், திரையுலக நாயகன், காதல் மன்னன், ஆனால் சிறு வயது திருமணம் அவரது வாலிபக் கனவை முறித்துவிட்டது. அப்படியிருந்தும் இரண்டு கூடுதல் திருமணங்களை செய்த போதும் முதல் மனைவி மூலமாக குழந்தைகளை பெற்றெடு்த்தலையும் தொடர்ந்த ஜெமினியின் உண்மையான குணாதிசயத்தை யூகிப்பது என்பது கடினம்தான்.
தன்னுடைய பலவீனத்தை உணர்ந்தவர் ஜெமினி. அதனால்தான் தான் செய்த தவறுகளை ஒத்துக் கொண்டாலும் சாவித்திரி விஷயத்தில் தான் ஏதும் தவறு செய்யவில்லை என்று கடைசிவரையிலும் சாதித்தார். ஆனால் படத்தில் இதுநாள்வரையிலும் சொல்லாத ஒரு உண்மையைச் சொல்லிவிட்டார்கள்.
சாவித்திரி இயக்கிய படத்தின் பிரிவியூ காட்சிக்குக்கூட வராமல் ஒரு பெண்ணுடன் கெஸ்ட் ஹவுஸில் ஜெமினி கணேசன் கூத்தடித்ததுதான் அவர்களது பிரிவுக்கான முதல் காரணம் என்று இந்தப் படத்தில் அட்சரசுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். இதை அனுமதித்த ஜெமினியின் வாரிசுகளுக்கு இதற்காக நமது நன்றிகள்..!
ஜெமினியின் துரோகம் மட்டுமே சாவித்திரியின் வாழ்க்கையைத் தடம் புரள வைத்தது என்றால் அது முட்டாள்தனம். இதனை வாழ்க்கையின் பேரிடியாக நினைத்த சாவித்திரியின் முட்டாள்தனம்தான் அவருடைய அழிவுக்குக் காரணம் என்பதை கொஞ்சம், கொஞ்சமாக படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
குடும்ப பிரிவை நினைத்து குடி.. பின்பு படங்களின் தோல்வியை நினைத்து குடி.. பின்பு உற்றார் உறவுகளின் துரோகத்தை நினைத்து குடி.. கடைசியாக சொத்துக்கள் கைவிட்டுப் போனது பற்றிக் கவலைப்பட்டு குடி… என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முடியாமல் குடியில் வீழ்ந்தது சாவித்திரியின் தவறேயன்றி அது ஜெமினியின் தவறல்ல. ஆனால் ஜெமினிதான் சாவித்திரிக்கு முதன்முதலாய் குடியைக் கற்றுக் கொடுத்தவர் என்பதால் இனிமேல் ஜென்ம, ஜென்மத்திற்கும் ஜெமினி கணேசன் இந்தப் பழி பாவத்தைச் சுமந்தேயாக வேண்டும். வேறு வழியில்லை.
சாவித்திரியின் நிலையறிந்து இடையிடையே சமயம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் வந்து அறிவுரை சொல்லி அவமானப்பட்டுப் போன ஜெமினியையும் இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதேபோல் ஜெமினி பல நடிகர்களிடத்தில் சொல்லி சாவித்திரிக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தும் அதை அவர் ஏற்க மறுத்து தான் விரும்பிய படங்களில் மட்டுமே நடித்த கோப வைராக்கியத்தையும் காட்டியிருக்கலாம்.
ஜெமினி மட்டுமல்ல.. சாவித்திரியின் வாழ்க்கையில் இடையூறாய் நுழைந்த பல ஆண்களையும் படத்தில் காட்டியிருக்கலாம்தான். ஜெமினியே சொன்னதுபோல பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவரும், நடிகர் சந்திரபாபு ஆகிய இருவருமே சாவித்திரியை குடி என்னும் போதையில் இருந்து மீளாத வண்ணம் கொண்டு போய் தள்ளினார்கள் என்றார் ஜெமினி.
இதையே அப்போதைய பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் அழுத்தமாய் பதிவும் செய்திருக்கிறார்கள். நடிகையர் திலகமாய் ஜொலிக்கும் சாவித்திரி மீதி வேறு முலாம்களை பூச முடியாததால் இயக்குநர் அதையெல்லாம் விட்டுவிட்டார் போலிருக்கிறது.
அப்போதைய ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ஜெய்சங்கர் சாவித்திரியின் கடைசிக் காலத்தில் அவருக்கு மிகப் பெரிய பக்க பலமாக இருந்தார். சாவித்திரிக்கு அதிகக் காலம் பண உதவி செய்தவர் ஜெய்சங்கர். தான் நடிக்கும் படங்களில் சாவித்திரிக்கு பொருத்தமான வேடங்களையும் வாங்கிக் கொடுத்தார் ஜெய். ஜெய்க்கு தாயாக சில படங்களில் நடித்திருந்தார் சாவித்திரி.
இதே காலக்கட்டத்தில் சாவித்திரிக்கு நிதி திரட்டும் பொருட்டு சென்னை கடற்கரையில் உள்ள சீரணி அரங்கத்தில் மிகப் பெரிய நட்சத்திர கலை விழாவை நடத்தி அதில் லட்சங்களில் கிடைத்த பணத்தை சாவித்திரிக்கு நன்கொடையாக வழங்கினார் ஜெய்சங்கர். இந்த வரலாற்றுச் சம்பவத்தையாவது படத்தில் பதிவு செய்திருக்கலாம்.
நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்புதான் ஸ்கிரிப்ட்டை எழுதியிருந்தாலும் மிக முக்கியமான கதையாடல் ஒன்றில் பிழை செய்திருக்கிறார் இயக்குநர். 1979-ல் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் எஸ்.வி.ரெங்காராவ் சாவித்தியிடம் “சாப்பிட்டியாம்மா…?” என்று கேட்டு சாவித்திரியை அழைத்து தன் அருகில் அமர வைத்து சாப்பிட வைப்பதுபோல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் எஸ்.வி.ரெங்காராவ் 1974-லேயே காலமாகிவிட்டார் என்பது வரலாறு. பின்பு எப்படி இங்கே..?
இப்படியாக கணவர் ஜெமினி கணேசனின் துரோகம், நம்பிய உற்றார் உறவுகளின் துரோகம், தன்னுடைய இயல்பான கட் அண்ட் ரைட் பேச்சு காரணமாய் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.. ஒரு பெண்ணாய் இதுவரையிலும் சந்திக்காத பிரச்சினைகளை அனுபவமில்லாமையால் சரிவர செய்யாதது.. வீண் கவுரவுத்துக்காகவே சொத்துக்களை விற்றது என்று பல வழிகளிலும் சாவித்திரி தன்னையே தண்டித்துக் கொண்டார்.
கழிவிரக்கமான செயல்களால் ஒருவருக்கு நேர்ந்த கொடுமைகளை அவரால் நியாயப்படுத்தவே முடியாது. எதிர்த்து நின்று போராடினால்தான் அது மக்களுக்கும், மற்றவர்களுக்கும் போராட்டமாய் புரியும். தன்னை பரிதாபமாய் பலரும் பார்க்க விரும்பி செய்யும் செயல்கள் நிச்சயமாக பரிகாசமாகத்தான் போய் முடியும். சாவித்திரியின் கடைசி கால முடிவும் அப்படித்தான் போய் முடிந்தது.
எப்படி ஒரு பெண் தன் துறையில் சிறந்து விளங்கி புகழ் பெற வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் சாவித்திரிதான். அதேபோல் எப்படி ஒரு பெண் வாழ்க்கையில் அவசரத்தனமாக முடிவெடுத்து தன்னையே நிந்தித்துக் கொண்டு அழிவது என்பதற்கும் சாவித்திரிதான் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.
இந்த முரண்பாடுகளை புரிந்து கொள்ளும்விதமாகத்தான் இத்திரைப்படத்தை கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். இப்படியொரு காலத்தால் அழிக்க முடியாத படைப்பை கொடுத்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.
சாவித்திரியாக வாழ்ந்து காட்டியிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
நடிகையர் திலகம் ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் நமது பாராட்டுக்கள்..!
நடிகையர் திலகம் – அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்…!
|
Tweet |
0 comments:
Post a Comment